உலகமயமாதலில் சுரண்டப்படும் சாமானியனுக்காக மட்டுமல்ல இவ்வுயிர் கோளத்தின் அங்கமாய் வாழும் ஒவ்வொரு உயிருக்குமான உரிமைக்குரல் தான் முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தியின் வனதாரி.
முதலில் வனதாரியின் பொருள் என்ன?
‘வனம்’ தன்னைத் தானே புனரமைத்துக் கொள்ளும் இயற்யின் குவியல். ‘தாரி’ வன அமைதியை சுவீகரிக்கும் வண்டுகளின் குதூகல ஒலி . ‘வனதாரியை’ வழமை காக்கும் ஆதிகுடி வனச்சியாக எடுத்துக் கொள்ளலாம் என கவிதைத் தொகுப்பின் சாரத்தை தலைப்பின் வழியே அடிக்கோடிட்டு காட்டுகிறார்.
கருத்துகளை நெறிக்கும்
அதிகாரவர்கத்தின் முன்
நேர்பட நின்று
தீர்க்கப் பார்வையொன்றை நிலைகுத்தி
ஆட்காட்டிவிரல் நீட்டி உரத்துப்பேச வேண்டும்
என் வாழ்வை நான் வாழ
என் நிலம் வேண்டும்
அதற்கு விதை நெல்லாக
நிலச்சூடு கொண்ட
கைப்பிடிச் சொற்கள் வேண்டும்.
வனங்களையும் வளங்களையும் மீட்க உறுதியாகப் போராட வேண்டிய அவசியத்தின் அவசியத்தைப் பேசுகிறார்.
யானைகட்டிப் போரடித்த நிலத்தில்
ஆயிரம் பேர் ஒன்றுகூடி
பிளந்துகொண்டிருக்கிறார்கள்
காற்று அசைக்கும் மண் இசைவில்
அதோ ஒற்றை ஆள்
கெயில் குழாயை இலகுவாக
புதைத்துக் கொண்டிருக்கிறார்
விதைக்காகத் தன்னைப் புரட்டிக் கொள்வது
மண்ணின் நீர்மை
இனி எதன்பொருட்டு தன்னையது உழுவிக்கும்
நிலத்தை தாரை வார்த்தவன் துரோகியெனில்
நாளை நம் தாழிகளும்
செயலிகளில் தோண்டப்படும்
வண்டலுக்கான துரோகப்பட்டியலில்
இதுவும் ஒன்றெனக் கடந்துபோகிறோம்
மனித புத்திக்கு மறப்பு சகஜம்.
டெல்டா பகுதிகளில் விளைநிலங்களைக் கூட விட்டுவிடாமல் காசு பார்க்கும் கொடூர லாபப் பிசாசுகளுக்காக மக்களையும் மண்ணையும் பொருட்டென நினைக்காத பணத்திற்கு பிணம் திண்ணிகளாக அரசியல்வாதிகளால் தாரைவார்க்கப்படும் அவலத்தை நேரடியாய்க் கண்டவர் என்பதால் பதறுவதைக் காணமுடிகிறது. மண்ணிற்குள்ளும் கடலுக்குள்ளும் பதியப்படும் பைப்புகள் மட்டுமே அகழாய்வில் கிடைக்குமென்பது எத்துணை உண்மை.
வரட்டி விற்றேன்
சாணம் விற்பவளெனப்
பரிகாசம் செய்தவர்களிடம்
சண்டைட்டாய்
கருவாடு விற்க
சந்தையில் கடைவிரித்தேன்
வீச்சம் குமட்டுகிறது
நண்பர்கள் வருவதில்லையென
அடம்பிடித்தாய்
வேப்பமுத்துக்கள் சேகரித்தேன்
மரத்துக்கு மரம் அலைகிறேன்
பொறுக்கி என தூற்றுவதாக
அழுது ஆர்ப்பாட்டம் செய்தாய்
காய்ந்தவைகளைத் தான் விற்பாயா?
புளிக்கூடையை வீசியெறிந்தாய்
நரம்புத் தளர்ச்சியில்
விரல்கள் நடுங்கியபோதும்
உனக்காக ஈரம் தோய்ந்த பூக்களைத் தொடுக்கக்
கற்றுக்கொண்டேன்
பூக்காரிப்பட்டம் மதிப்பில்லையென்று
குடிசைக் காம்புகளை உருவி வீசினாய் இன்றைக்கு நீ பறை அதிர
பெருங்குரலெடுத்தாலும்
கணவனை இழந்தவளை எப்படியோ கண்டுபிடித்து விடுகிறார்கள் மகனே .
தனி ஒருத்தியாய்ப் போராடி எப்படியாவது மகனை ஆளாக்கிப் பார்க்கும் தாயின் போராட்ட மனநிலையும் வலியையும் ஒரு பெண்ணால்தான் கடத்தமுடியுமென நான் வலுவாக நம்புகிறேன். புரிதலற்ற மகனோடோ மகளோடோ போராட திராணியற்ற தாயின் வலி ஆழப்பொதிந்துள்ளது இவ்வரிகளில்.
ஏன் முழுக்கவிதைகளையும் குறிப்பிடுகிறேன். சிலாகித்த வரிகளை எடுத்துக்காட்டினால் போதாதா என உங்களுக்கு தோன்றுகிறதெனில் இவரின் கவிதைகளெல்லாம் அடுக்கடுக்காக அடிக்கி வைக்கப்பட்டுள்ள சொற்படிகட்டுகளால் ஆனது, அதிலிருந்து ஒன்றை உருவ மனமில்லை எனக்கு.
ஆழ்துளை கிணற்றில் விழுந்து இழந்த குழந்தை சுர்ஜித், ஆதிக்கச் சுவரால் மரணமடைந்த 17 உயிர்களையும், இன்னும் இன்னும் யாரெல்லாம் அநியாயத்தின் கோரப் பசிக்கு பலியான அனிதா, ஸ்னோலின், கோகுல்ராஜ் என பெயர்ப் பட்டியலிட்டு கேள்விக்கணைகளைத் தொடுக்கிறார்.
சக்தியின் வடிவமாக உக்கிரம் கொண்டு கனல்தெறிக்கும் கவிதைகளால் வார்த்தெடுக்கப்பட்டவள் தான் இந்த வனதாரி. அகிலா அக்காவிற்கு புரட்சி முத்தங்கள்.
நான்சிகோமகன்
நூல் : வனதாரி
ஆசிரியர் : முனைவர். அகிலா கிருஷ்ணமூர்த்தி
வெளியீடு: முடிவிலி வெளியீடு

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்

