நூல் அறிமுகம்: வானத்தைப் பிளந்த கதை (ஈழப் போராட்ட நாட்குறிப்புகள்) – கருப்பு அன்பரசன்

நூல் அறிமுகம்: வானத்தைப் பிளந்த கதை (ஈழப் போராட்ட நாட்குறிப்புகள்) – கருப்பு அன்பரசன்



தமிழின உரிமைக்கான போராட்டம் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கைக்குள்..
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்திடும் பகுதி இளைஞர்களின் ரத்த நாளங்களில் இருந்து பெரும் சூட்டோடு கிளம்பிய தீச்சுவாலை.. ஒவ்வொரு வீதிகளிலும் தெருக்களிலும் முச்சந்தி களிலும் கிராமங்களிலும் வீரம் மிகுந்த தமிழ் இளைஞர்கள் குழுக்களை உருவாக்கி அளித்தது.. இப்படி உருவான பலவும் அங்கே வாசம் புரிந்து வரக்கூடிய தமிழர்களின்.. அரசியல் பின்புலம் கொண்ட ஆளுமைகளின் வழிகாட்டுதலின் துணையோடு  ஆயிரக்கணக்கான இளைஞர்களை மாணவர்களை கொண்டு பல இயக்கங்களாக.. அமைப்புகளாக  வளர்ந்தோங்கி நின்றது. இலங்கை அரசுக்கு எதிரான பெரும் சவாலாக இருந்தவர்கள் அங்கே இருந்த பல குழுக்களின் போராளிகள்..
மிகச் சரியானதொரு அரசியல் புரிதலும் தத்துவார்த்த பின்புலமும்  இல்லாததன் விளைவு தவறான வழிகாட்டுதலுக்கு ஆட்பட்டு ஆயுதம் தாங்கிய போராட்டமாக உருப்பெற்று கூடவே அதிகாரத்தை யார் தலைமை தாங்குவது என்ற விரியும் பாம்பு ஒன்று அவரவர் தலைக்குள்  முளைத்துக் கிளம்ப.. துப்பாக்கி வாங்கிட எவர் உதவினார்களா அந்த தமிழ் மக்களை நோக்கியே தோட்டாக்களும் சீரிடத் தொடங்கியது.. முளைத்தெழுந்த அந்த அதிகாரப் பாம்பு எந்தக் குழு ஆதிக்க அதிகாரத் தன்மை கொண்டதென்று  போட்டிதனையும் குழுக்களுக்குள் உருவாக்கியது. இது ஆளும் சிங்கள இனவாத அரசுக்கு பேருதவியாக இருந்தது அரசியல் தளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கு எதிராகவும் தமிழர்களை கூறு தீர்த்துவிடும் ஆயுதமாக்கியது.
சொந்த நாட்டில் உயிர்பிழைக்க வழியில்லாமல் செய்வதென்பது எதிரியாக இருந்தால் நேர்கொண்டு எதிர்கொள்ள முடியும்.. ஆனால் கூடவே இருக்கக்கூடிய போராளிகளே தமக்கு எதிராக நிற்கும்பொழுது வாழ்வதற்கு வழியும், நடக்கும் அநீதிகளுக்கு எதிரான ஒரு சாட்சியமாக பல ஆயிரக்கணக்கான இளைஞர்களும் போராளிகளும் சொந்த மண்ணைவிட்டு எவருக்கும் தெரியாமல் ஓடிப்போய் உலகத்தின் பல தேசங்களில் அடைக்கலம் புகுந்து இன்று தங்களுடைய எழுத்துக்களின் வழியாக சொந்த சகோதரர்கள் போராளிகளின் போர்வையில் தமிழ் மக்களுக்கு எதிராக நின்ற வரலாற்றினை பதிவாக்கி கொண்டிருக்கிறார்கள்.. அப்படியானதொரு பதிவே செழியன் அவர்களால் இங்கே வெளிக்கொணர்ந்து,  ஈழப்போராட்டம்.. போராளிகள் குழுக்கள் என்று தமிழகத்திலிருந்தும் இன்றும் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் பலரின்
தனிஈழ வியாபாரத்திற்கு எதிராக படைக்கப்பட்டிருக்கிறது “வானத்தைப் பிளந்த கதை”யாக.
செழியன் அவர்களின் நினைவுக் குறிப்பில் இருந்து எழுதப்பட்ட பல அத்தியாயங்கள் வெகு ஜாலியாக அதிக நேர்த்தி மிக்கதாக ஆழமான பொருள் பொதிந்த வார்த்தைகளைக் கொண்டதாக எழுதப்பட்டிருக்கிறது.. பதிந்திருக்கும் எழுத்துக்களின் துயரங்களையும் வேதனைகளையும் வலிகளையும் மேம்போக்காக வாசிக்கும் போது நம்மால் உணர முடியாது. அந்த நையாண்டியின் உட்புகுந்து நம்மை நிறுத்திக்கொண்டு யோசிக்கும் வேளையில் எத்தனை வலி மிகுந்தது என்பதை நம்மால் உணர முடிகிறது.
சொந்த மண்ணை விட்டு வெளியே கிளம்பினால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்ற ஒரு முடிவுக்கு வந்த பிறகு.. வாழ்ந்த மண்ணிலிருந்து பலப் போராளிக் குழுக்களிடமிருந்தும் இருந்து தன்னை தப்பித்துக் கொண்டு பொய்யான பெயர் ஒன்றில் அடையாள அட்டையைப் பெற்று பேருந்து பயணத்தில் ஈடுபடும் பொழுது தனது   உயிர் தேடி வெறிகொண்டுத் திரியும் விடுதலைப்புலிகளின் தோட்டாக்களில் இருந்து தப்பித்ததோடு மட்டுமல்லாமல் இன்னுமொரு சோதனைச் சாவடியில் தமிழ்ப் போராளிகளுக்கு எதிராக  துப்பாக்கியோடு காத்திருக்கக்கூடிய இலங்கை ராணுவத்திடம் இருந்தும் பொதுமக்களோடு ஒருவனாக இருந்து தப்பிக்க கூடிய நாட்குறிப்புகள் மிகவும் வேதனை மிகுந்தது..
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் எல்லாமும் வந்துவிட்ட யாழ் குடாவில் இருந்து தப்பித்து கொழும்பு விமான நிலையம் சென்று சேரும் காலம் வரை போராளி  ஒருவன் எப்படியெல்லாம் தன் உயிர் காத்துக்கொள்ளத்  தன்னுடைய அத்தனை பரிமாணங்களையும் மேற்கொண்டு சாட்சியாக வந்திருக்கிறான் என்பதற்கு “வானத்தைப் பிளந்த கதை”
நிஜமாக நம் கண்முன்னே பல மெய்யான துயரங்களை சொல்லிக் கொண்டே இருக்கிறது.


செழியனின் குறிப்புகளை வாசிக்கும் பொழுதினில்..
தமிழர்களின் உரிமைகளுக்காக.. தமிழர்களின் சுய கௌரவத்திற்காக.. தமிழர்களின் நலனுக்காக.. சிங்கள இனவாத கொடூரங்களுக்கு எதிராக.. அணி திரண்ட போராளிக் குழுக்கள் அத்தனையும் தடம்புரண்ட போன வரலாற்றின் ரணம் மிகுந்த பல காயங்களை.. அதில் வழிந்து ஒழுகும் நாற்றமெடுக்கும் சீழ் தனை, காயத்தின் வடுக்களை இங்கே இங்கு நாம் உணர்ந்திட..
போராட்டத்தின் சிதைவு கண்டு இதயத்தில் சுரந்த கண்ணீர் விழியோரம் வழிந்து கொண்டிருக்கிறது வாசிக்கும் பொழுதினில்.
குரல் வளை நரம்பு தெறிக்க ஓங்கி எழும்பிய போராளிகளின் முழக்கங்களும்..
அவர்களின் பேனாவின் நுனியிலிருந்து வார்த்தைகளாக கிளம்பிய
ஆவேசம் விரியும் கவிதைகளும் கட்டுரைகளும்.. கதைகளும்..
தினவெடுத்த தோள்களில் தூக்கிச் சுமந்த துப்பாக்கிகளும்.. இலங்கை சிங்கள இனவாத ராணுவத்திற்கு எதிரான அவர்களின் போராட்டங்களும் சகப் போராளிக் குழுக்களால் அதிகாரத்தின் வெறிகொண்டு அடித்து நொறுக்கப்பட , உயிர் பிழைக்க ஓடிய, இன்றும் ஓடிக் கொண்டே இருக்கும் அந்த சோக வரலாற்றினை, “வானத்தைப் பிளந்த கதை”யில் நீங்கள் முழுவதுமாக உணரலாம்.
ஓடிக்கொண்டே இருப்பவர்களுக்குத்தான் தெரியும்
உயிர்களின் காதலை..
அதன் பிரியத்தை..
வசியம் வாய்ந்த அழகு பொதிந்த
அதன் நேசத்தை..
உயிர்ப்பில்  துடிதுடித்து கிடக்கும் ஈர்ப்பு கொண்ட சக்திதனை…
உயிரின் உயிரான, பிறந்து விளையாடிய தன் மண்ணின் மீது தீராக்காதல் கொண்ட
ஒரு போராளியின் உயிர் காக்கும் போராட்டமாக..
ஈழமண்ணில் இருந்து தான் வெகு தூரம் பிடிங்கி எறியப்பட்டாளும், தம் மக்களின் உரிமைகள் கொண்டு வாழ்ந்திடும் அந்த ஒரு அழகிய பொழுதினில்
தன் பிள்ளைகளும்
தான்  ஓடியாடிய.. தன் காதல் மனைவியோடு கைகோர்த்து நடந்த
வீதிகளிலும்.. மண்ணிலும் நிச்சயம் என்றாவது ஒருநாள் ஏதேனும் ஒரு தூரதேசத்திலிருந்து வந்து இறங்குவார்..
அந்த நாளில் தான் எங்கேயாவது அனாதையாக உயிரோடு வாழ்ந்து இருக்கலாம் அல்லது ஏதோ ஒரு இயந்திர சக்கரங்களுக்கு இடையே தன்னுடைய உயிரும் உடலும் நசுங்கிக் கிடக்கலாம்.. ஏதேனும் பணி மலைகளுக்கிடையே சிக்கிய தன்னுடைய உயிரற்ற உடல் துர்நாற்றமின்றி இயற்கையால் பாதுகாக்கப்பட்டு எவருக்கும் தெரியாமல் இருக்கலாம்.. ஆனாலும்கூட தன்னுடைய சந்ததியரில் எவரேனும் ஒருவர் இந்த ஈழமண்ணில் அவர்களுடைய கால்தடம் பதிப்பார் அவர்களுக்கான உரிமைகளோடு..
என்கிற கனவுகளை சுமந்து செழியன் விமானமேறி நினைத்துப் பார்த்திடும் பொழுதினில், இப்படி எத்தனைப் போராளிகள் விமானம் ஏறி பல நாடுகளில் தஞ்சம் புகுந்து இருக்கிறார்களோ அல்லது கடல் வழியாக தப்பிக்க முனைந்து புலிகளாலோ அல்லது இலங்கை இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டிலோ..
இயற்கையின் பேரழிவில் தங்களின் உயிரை கடல் நீர் குடிக்க கொடுத்து இருக்கலாமோ என்கிற எண்ணம் இருதயம் முழுவதிலும் சூறைக் காற்றாக வீசி அடித்துக் கொண்டிருக்கிறது..
இப்படி எண்ணற்ற போராளிகளும், தமிழ் மக்களும் இலங்கை ராணுவத்திற்கும் அங்கே இருக்கக்கூடிய போராளிக் குழுக்களுக்கும் பயந்தே புலம்பெயர்ந்து வாழக்கூடிய அவலத்தை செழியன் எழுதிய “வானத்தைப் பிளந்த கதை” நாம் வாசிக்கும் பொழுது நமக்குள் பல்வேறு கேள்விகளை தொடர்ந்து எழுப்பிக் கொண்டே இருக்கிறது.. முள்ளிவாய்க்காலுக்குள் முடித்து வைக்கப்பட்ட ஈழத்தமிழ்மக்களின் பெரும் சோகமும் துயரமும், இப்பொழுதும்  தமிழகத்தில் இன்னும் வியாபாரம் ஆகிக்கொண்டிருக்கிறது பல அரசியல் தலைவர்களால்.. பச்சை போராளிகளும் என்கிற பொழுது தமிழ் இன உணர்வு என்பது எப்படி தமிழகத்தில் கண்மூடித்தனமாக நிறுவப் பட்டிருக்கிறது என்பதை நாம் யோசித்து செயல்பட வேண்டியிருக்கிறது.
எதார்த்தமும், பூகோள சூழ்நிலையும் தமது இருப்பிட வாழ்நிலையும் ஆழ்ந்து யோசிக்காமல், எவை எவைகள்  தமது உரிமைகளுக்கான சாத்தியம் என்பதை குறிப்பறிந்து திட்டமிடப்படாமல் உணர்வுகளின் ஊடாக உசுப்பேற்றப்பட்டு முள்ளிவாய்க்காலுக்குள் ஆயுத வியாபாரிகளால் முடித்து வைக்கப்பட்ட பிறகே இப்படிப்பட்ட நிஜம் நிறைந்த நாட்குறிப்புகள்.. கதைகளும்.. கவிதைகளும்.. புதினங்களுமாக வந்து கொண்டே இருக்கிறது..


அதிகாரத்தின் போதை தலைக்கேற..
தங்களாலும் தங்கள் பிள்ளைகளும்
உருவாக்கப்பட்ட அத்தனைப் போராளிக் குழுக்களும் உருவாக்கியவர்களை நோக்கியும்.. சக போராளிக் குழுக்களை எதிர்த்தும் துப்பாக்கி தோட்டாக்கள் சீறிக் கொண்டிருக்கும் பொழுது வீதிகளிலே எளிய தமிழ் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எல்லா போராளிக் குழுக்களும் ஒன்று சேர வேண்டும் என்ற ஒற்றை முழக்கத்தை அறைகூவலாக்கி ஊர்வலம் போன நிஜத்தை தன்னுடைய வானத்தைப் பிளந்த கதையில் செழியன் பதிவு ஆக்கியிருப்பது ஆகப் பெரிய சோகம்… ஆனால் அவைகள் நிஜம்.
தானும் தன் மனைவியும் கொழும்பு விமான நிலையத்தில் தப்பித்துச் செல்லும் அந்த கடைசி நொடிப் பொழுதில் மக்களை நேசிக்கும்.. மனித மாண்புகளை நேசிக்கும் போராளி ஒருவன் சாதாரண எளிய மக்கள் படும் துயரத்தைப் பார்க்க முடியாமல் தன்னிடம் இருக்கக்கூடிய கடைசிப் பணத்தையும் கொடுத்து அவர்களை காப்பாற்றி விட்டு சக போராளி ஒருவனை காப்பாற்ற முடியாமல் நின்ற நிஜத்தை செழியன் இங்கே பதிவாக்கி இருக்கிறார்..
தன் சொந்த மண்ணிலிருந்து தப்பியோட உதவிய பாசம் மிகுந்த அத்தனை தோழர்களையும் மரியாதைக்குரியவர்கள் பெருமைக்குரிய பெண்மணிகளையும் தன்னுடைய பதிவுகளில் அப்படியே பதிவாக்கி அவர்களுக்கு பெருமை சேர்த்திருப்பார் செழியன்.
இப்படி நிறைய நிஜங்களை அதன் வேதனைகளை தான் எழுதிய வானத்தைப் பிளந்த கதையில் பல்வேறு அனுபவங்களை நையாண்டி யோடும் வாசிப்பவர்களின் மனதில் உட்புகும் சோகத்தோடு பதிவாகி இருக்கிறார் செழியன். சிறப்பானதொரு முறையில் வெளிக் கொண்டு வந்திருக்கிறார்கள் வாழும் தமிழ் வெளியீட்டகம்..
“பெருவெள்ளத்தின் இரைச்சலும் கடலின் பேரலைகள் ஆற்றல் மிகுந்தவை. அதையும் விட மக்கள் வலிமை மிகுந்தவர்கள். நெருப்புக் காட்டை எரிப்பது போலவும்  தீக்கனல்கள் மலைகளை சுட்டெரிப்பதுபோலவும் எரிப்பதற்கு எழுவார்கள்” .. செழியன்.
ஈழமண்ணில் இருந்து கிளம்பிய தமிழர்களும்.. போராளிகளில் பலரும் தங்களின் இயலாமையை.. நடைபெற்ற துயரத்தை..  வரலாற்று உண்மைகளை போராளிக் குழுக்களுக்கு இடையே நடைபெற்ற அதிகார வெறி அத்துமீறல்களை தொடர்ந்து பதிவாக்கி வந்திருந்தாலும்.. தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் ஆளுமைகள்.. பச்சைத் தமிழர்கள்(!) இங்கிருந்தே தமிழீழத்தை வாங்கித் தருவோம் என்று கொக்கரித்து அலைவது தமிழகத்தில் இருக்கக்கூடிய தமிழர்களின் உணர்வினை அபகரித்து தன் சுயநலத்தை நிறுத்துவதற்குமே.. தமிழ்நாடு, தமிழ் மக்களும் இதனை உள்வாங்கி நம்முடைய காலத்தை ஈழத்தமிழர்கள் பட்டவழியிலிருந்து நம்மை பாதுகாத்து சரியானதொரு திசை வழியை அறிந்து முன்னேற வேண்டிய கட்டாயத்தில் இப்பொழுது நின்று கொண்டிருக்கிறோம்..
வானத்தைப் பிளந்த கதை
ஈழப் போராட்ட நாட்குறிப்புகள்
செழியன்
வாழும் தமிழ் வெளியீடு
கருப்பு அன்பரசன்.


Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *