நூல் அறிமுகம்: “வனவாசியின் அத்தியாயம்” – அருண்

“உலகில் இனிவரும் நூற்றாண்டில் மக்கள் தலை யாத்திரைக்கு வருவது போல இந்த தனிமையான காட்டு பிரதேசத்திற்கு வரலாம். இனி வரப்போகும் அந்த மக்களுக்காகயேனும் இந்த காடு அழியாமல் அப்படியே நிலை பெற்றிருக்க வேண்டும் என்று கதை முடிகிறது”.
21ம் நூற்றாண்டில் கூட இந்த நிகழ்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது(சுற்றுலா), மக்கள் தங்கள் வாழ்விடத்தையும் நாகரீகத்தையும் எந்த திசையில் கொண்டு சென்றார்கள் என்பது இன்றும் வியப்பாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட நாகரீகத்தின் முன்னோடியாக நிற்கும் காடுகளையும் காட்டிலுள்ள வனங்களையும், வன தேவதைகளையும், வன மக்களையும், அவர்களின் அன்றாட வாழ்க்கை முறைகளையும் இந்த நூல் எடுத்துக் கூறுகிறது.
“வனவாசி”(ஆரண்யக) மிகவும் புகழ்பெற்ற நாவல் பதேர் பாஞ்சாலி என்ற பிரபலமான நாவலின் ஆசிரியரான “விபூதி பூஷன் பந்தோபாத்யாய” எழுதியது. இந்த நூல் காட்டின் உயிர் ஓட்டத்தையும் மனித வாழ்வில் இன்றும் காணத பல வகையான அதிசயங்களையும் வாழ்க்கை முறைகளையும் நமக்கு புரிய வைக்க நினைக்கிறது.
“நாகரிகம்” – வளர்ச்சி அடைந்து அடுத்தகட்ட நிகழ்வை நோக்கி  ஓடிக் கொண்டுதான் இருக்கிறது அதில் நகரம் என்னும் மிகப்பெரிய உலகம் இன்றும் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நகரமான கல்கத்தாவில், நாகரீகம் வளர்ச்சி அடைந்தும் – கல்வி முறைகளை கற்றும் சோற்றுக்காக திண்டாடும் ஒரு மனிதன் சத்திய சரணா. தன் அன்றாட வாழ்க்கையை தேடி அலைந்து கொண்டிருந்தான் அப்பொழுது தனக்கு தெரிந்த நண்பன் ஒருவன் லப்டுலியா காட்டில் ஜமீன் காரியாலயம் இருக்கிறது அதில் வேலை இருக்கிறது என்று கூறினான். நகரத்தை விட்டு காட்டிற்குச் செல்ல வேண்டுமா என்று யோசித்த பிறகு வயிற்றுப் பிழைப்புக்காக போய்தான் ஆகவேண்டும் என்று முடிவிற்கு வந்தான்.
“வனவாசியின் அத்தியாயம்” இவனது தினசரி வேலை ஜமீன் காரியாலத்திற்கு சொந்தமான பிகா நிலத்தை (ஒரு பிகா -1/3) மக்களுக்கு குத்தகை கொடுப்பதும் அதன்மூலம் வருவாய் பெறுவதும் பெற்ற வருவாயை அரசாங்கத்திற்கு ஈட்டவதுமாக இருந்தது. முதலில் ஏன் வந்தோம் எதற்காக இந்த காட்டில் தனியாக இருக்கிறோம் என்று புலம்புவதற்கே நேரம் சரியாக இருந்தது.
நாட்கள் செல்ல ஜமீன் காரியாலத்தில் இருக்கும் வேலையாட்களுடன் பழகுவதும் அங்குள்ள பல அதிசய மனிதர்களையும் காண்பதும் பல வன இடங்களுக்கு செல்வதும் இப்படி இயற்கையின் அத்தியாயத்தை புரிந்துகொண்டான். கடைசியில் “வன தேவதைகளிடம் காட்டை அழித்ததற்கு  மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று இக்காட்டில் இருந்து விடைபெற்றுக் கொண்டான்.
வனவாசி | Buy Tamil & English Books Online | CommonFolks
இதில் வரும் ஒவ்வொரு அத்தியாயமும் இயற்கையின் பேரின்பத்தையும் அதனுடைய அழகியலையும் விவரிக்கிறது. இதில் மொத்தம் பதினெட்டு அத்தியாயங்கள் உள்ளன ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான உணர்ச்சிகளையும் அங்கு வாழும் சூழ்நிலைகயுளையம்
எடுத்துக்கூறுகிறது.
“காடு” – காடு என்ற ஒரு வார்த்தை போதும் அது சொர்க்கத்தின் வாசலாகும். அந்த காட்டில் இனிமையும்,  சத்தமும், உணர்ச்சியும் வெளிப்படுத்துகிறது. இமயமலைத் தொடரின் அடிவாரத்திலிருந்து பல மைல்கள் தூரம் இருக்கின்ற லப்டுலியா – ஃபுல்கியா – மகாலிகாருப காடுகள் அதிசயத்தையும் அதனுடைய தன்மையையும் இப்புத்தகத்தில் நாம் காண முடிகிறது. அக்காட்டில் இவன் ஒவ்வொரு நாளும் குதிரையில் செல்லும் போது அதனுடைய அழகியலை எப்படி உணர்ந்து கொள்கிறான் என்று நமக்கு வியப்பாக இருக்கிறது. இரவில் அவன் ஒவ்வொரு மலையிலும் தங்கும் பொழுது அங்குள்ள பறவைகளின் சத்தமும் நடுஇரவில் அருவியின் ஓசையும் சந்திரனின் ஒளியும் நிலாவின் வெளிச்சம் ஏதோ ஒரு நிலைக்கு கொண்டுசெல்கிறது. தனிமையான மனநிலையில் இருக்கும் பொழுது இயற்கையின் அழகை ரசிப்பது ஒரு வரம்தான் என என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதைப்போல் நமக்கு கண்ணுக்குத் தெரியாத பல விலங்குகளையும் காட்டெருமை களையும் இதில் காணமுடிகிறது. இப்புத்தகத்தை படித்த பிறகுதான் நட்சத்திரங்களையும் மேகங்களையும் நாம் எவ்வளவு மறந்து இருக்கிறோம் அதை தினமும் ரசிக்காமல் இருந்திருக்கிறோம் என்று தோன்றுகிறது.
“வாழ்க்கை” – இக்காட்டில் இருக்கும் மக்கள் வாழ்க்கையில் உணவிற்காக எவ்வளவு போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஒவ்வொரு நாளும் இவர்கள் இக்காட்டில் தனிமையிலும் உணவு இன்றியும் வனவிலங்கு அஞ்சியும் காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்கள் என புரிந்து கொள்ள வைக்கிறது. ஆனால் இவர்களின் வாழ்க்கை மனிதத் தன்மையின் முன்னோடி  நாகரிகம் எனக் கூறலாம் எந்த ஒரு நபரின் மீதும் பொறாமை கொள்வது வஞ்சகம் செய்வது பிறரை இழிவு படுத்துவது என எந்த ஒரு மனித பிறவிகளின் சாயல் இல்லை. இக்காட்டில் பிகா நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் நிலத்தை உழுது தங்கள் அன்றாட தேவையை பூர்த்தி செய்துகொள்கின்றனர். இவர்களின் அன்றாட உணவும் மக்காச்சோள மாவு – வரகு – காட்டில் கிடைக்கும் காய்கறிகளையும் – மாமிச விலங்குகளையும் வைத்து உணவை பரிமாறிக் கொள்கின்றனர். அதிலும் இங்கு காங்கோதா குடியானவர்களின் வாழ்க்கை மிகவும் பரிதாபத்திற்கு உள்ளதாகும்.
“மனிதர்கள்” – இக்காட்டில் பல அதிசய மனிதர்களையும் காணமுடிகிறது. அதில் ஒன்றான “யுகல் பிரசாத்” – என்ற அதிசய மனிதனை என்னால் நினைவுபடுத்திக் கொள்ள முடிகிறது. இவனது அன்றாட வேலை பல காடுகளுக்குச் சென்று அங்குள்ள செடிகளையும் கொடிகளையும் கொண்டுவந்து மற்ற காடுகளில் நட்டு அதை வளர்ப்பதே கடமையாக கொண்டிருந்தான். இவன் வளர்த்த பல மரங்கள் இன்றும் இக்காட்டில் இவன் பெயரை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது. மற்றொரு நபரான “ராஜு”  – காட்டில் எப்பொழுதும் தனிமையாக வாழ்பவன் மேலும் தனக்கு தெரிந்த சித்த வைத்தியத்தை கொண்டு பல காடுகளுக்குச் சென்று பல நோய்களை தீர்த்துக் கொண்டிருப்பவன். எந்த ஒரு வேறுபாடும் யாரிடமும் காட்டாமல் அன்போடும் பரிவோடும் பழகிக் கொள்பவன் தன் உணவைப் பற்றி எண்ணம் கொள்ளாதவன். மற்றொரு நபரான “ராஜா தோப்ரூ  பான்னா” – ராஜாக்களின் கடைசி வம்சம் . எந்த ஊரு அதிகாரமும் இல்லாமல் தன் கூட்டத்தோடு பழகிக்கொண்ட மிகப் பெரிய மனிதர். உலகைப் பற்றி ஏதும் தெரியாமல் தன்னுடைய மக்களின் வாழ்க்கையையும் அதோடு அவர்களின் இன்பங்களையும் பகிர்ந்து கொள்பவன். இந்த ராஜாக்களின் வம்சம் மிகவும் ஏழ்மையில் இருந்தாலும் அவர்கள் அன்பில் மிகப்பெரிய செல்வந்தர்களாக இருந்தனர்.
Amazon.in: Buy Vanavasi Book Online at Low Prices in India ...
“பெண்கள்” – இதில் வரும் ஒவ்வொரு பெண்களும் என்னை காதல் செய்ய வைக்கிறது. எந்த ஒரு கூச்சமும் இன்றி அவர்கள் பழகும் அந்தப் பழக்கங்களும் நம்மை நாமே யாரென்று தேடிச் செல்ல வைக்கிறது. “மஞ்சி – பானுமதி” (ராஜா பேத்தி) இவர்கள் இருவருமே நாகரீகம்  முன்னோடிகளின் முதல் பெண்கள் என தோன்றுகிறது. மஞ்சி எந்த ஒரு பொறாமையும் கொள்ளாமல் கள்ளம் கபடமற்ற ஒரு யதார்த்தவாதி யாக இருக்கிறாள். பானுமதி தான் ராஜாவின் பேத்தி என அக்காலகட்டத்தில் இருந்தும்(ஏழ்மை) அவள் செய்யும் பரிவும் பாசமும் இவளுடன் இங்கேயே தங்கிக் கொள்ள வைக்கிறது. இவள் எருமை மாட்டு தயிருடன் இன்று யாருக்காக காத்துக்கொண்டிருக்கின்றாள் என எண்ண வைக்கிறது. “மஞ்சி” எங்கே போனால் காட்டில் எந்த திசையில் இன்று இருக்கிறாள் எனவும் ஒரு நாள் கண்டிப்பாக வருவாள் என காத்திருக்க வைக்கிறது.
இப்புத்தகத்தை படித்த பிறகுதான் காட்டிற்கும் நமக்கும் எவ்வளவு பெரிய பந்தம் இருக்கிறது அதில் அதிசயம் இருக்கிறது என உணர முடிகிறது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இப்புத்தகத்தை படித்த பிறகுதான் இரவில் என் வீட்டு மொட்டை மாடியில் நட்சத்திரத்தை பார்த்து தினமும் தூங்குகிறேன். இது இன்றும் நகர வாழ்க்கையில் எல்லோருக்கும் கிட்டாத ஒரு அதிசயமாகும்.
இனி காட்டில் நாம் பயணிக்கும் போது எனக்கு “வனவாசி” என்ற புத்தகம் தான் நினைவிற்கு வரும். இதில் வரும் காரோ ஆறு – குசீ ஆறு – டாண்ட்பாரோ (எருமைகளின் தேவதைகள்) பல நினைவுகள் இனி போகும் காட்டில் என்னை சிரிக்க வைக்கும், அழகை வியக்க வைக்கும், பயம் வரும் கடைசியில் பரவசம் கிட்டும்.
பெயர்: AR தமிழ்
நூலின் பெயர்: வனவாசி
ஆசிரியர்: பந்த்யோபாத்யாய
தமிழ் மொழிபெயர்ப்பு:த.நா.சேனாதிபதி
பதிப்பகம் : சாகித்திய அகாதெமி
விலை : 280
பக்கங்கள்: 398