சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், என்னுடைய பதின்பருவத்திலேயே அரசு வேலைக்கு வந்துவிட்டபோதிலும், என்னை முற்போக்குப் பாதையில் செல்ல வேண்டும் என்ற உந்துதலைத் தந்தவை சோவியத் இலக்கியங்களாகும். மாக்சிம் கார்க்சியின் “தாய்”. நிகோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கியின் “வீரம் விளைந்தது” போன்ற நாவல்கள் மட்டுமல்ல, பரீஸ் பொலேவோயின் “உண்மை மனிதனின் கதை”, இளைஞர் படை, அதிகாலையின் அமைதியில், சாவுக்கே சவால், விடிவெள்ளி, வானவில் போன்ற நாவல்களும் மற்றும் ஏராளமான சோவியத் சிறுகதைகளும் என்னைப் பதப்படுத்தியவைகளில் குறிப்பிடத்தக்கவைகளாகும்.
வானவில் என்னும் நாவல் வாண்டா வாஸிலெவ்ஸ்க்கியா என்னும் வீராங்கனையால் எழுதப்பட்ட நவீனமாகும். இந்த நவீனத்தைப் படித்த எவராக இருந்தாலும், அது எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு என்ற போதிலும், இதில் வரும் ஒலினா என்னும் தாயை மறந்துவிட முடியாது.
ஒலினா. ஒரு கர்ப்பிணிப்பெண். சோவியத் யூனியனில் பாசிஸ்ட்டுகள் பல நகரங்களைக் கைப்பற்றி அட்டூழியங்கள் செய்துகொண்டிருந்த சமயத்தில், காட்டில் கொரில்லாப் படை வீரர்களுடன் தங்கியிருந்து அவர்களுக்கு உதவிகளைச் செய்து வந்தார். இவருக்குத் திருமணம் ஆகி வெகு ஆண்டுகள் கழித்துத்தான் இவர் கர்ப்பிணியானார். கர்ப்பிணியாக இருந்து கொண்டே கொரில்லா தோழர்களுக்கு உதவிகள் செய்து வந்தார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக ஆனபின்னால், இவரைத் தங்களால் கவனித்துக்கொள்ள முடியாது என்று கருதிய கொரில்லா வீரர்கள் இவரை அவரது கிராமத்தில் கொண்டுவந்து விட்டுவிட்டுச் சென்றுவிடுகின்றனர்.
இந்தத்தகவல் அந்தக் கிராமத்தில் ஜெர்மானியர்களின் எடுபிடியாக செயல்படும் கிராமத் தலைவன் மூலமாக ஜெர்மானியர்களுக்குச் சென்றுவிடுகிறது. இவரைக் கைது செய்து, சிறையில் அடைத்து, கொரில்லாக்கள் குறித்து உண்மைகளைக் கூறுமாறு சித்திரவதை செய்கிறார்கள்.
முன்பு கிராம சோவியத்தாக செயல்பட்டு வந்த கட்டிடத்தைத்தான் கையகப்படுத்தி சிறையாக மாற்றி இருப்பார்கள். அங்கே ஒலினாவிற்கு ஏற்படும் கொடுமைகளையெல்லாம், அதே தெருவைச் சேர்ந்த, அவருக்குப் பக்கத்துவீட்டுக்காரி, அவரது வீட்டிலிருந்து பார்த்துக்கொண்டிருப்பார். ஒலினா எதுவுமே கூறாது மயக்கமடைந்துவிடுவார். அதன்பின்னர் அவரை அங்கேயே ஒருவரின் பாதுகாப்பில் விட்டுவிட்டு, ஜெர்மானியர்கள் தங்கள் அதிகாரிகளிடம் தெரிவிப்பதற்காகச் சென்று விடுவார்கள்.
இந்தக் கொடுமைகளை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஒலினாவின் பக்கத்துவீட்டுக்காரி தன் 10 வயது மகனான மீஷ்காவை அழைத்து, “ஒலினா அத்தைக்கு இந்த ரொட்டியைக் கொண்டுபோய் கொடுத்துவிட்டு வா” என்று அனுப்பி வைக்கிறாள்.
அவன் சாக்கடைக்குள் இறங்கி, ரகசியமாக ஒலினா வைத்திருந்த இடத்திற்குச் சென்று,
“அத்தை, அத்தை” என்று கூப்பிடுகிறான். இந்த சத்தம்,
காவல் காத்துக்கொண்டிருந்தவன் காதுகளுக்கு அது கேட்டுவிட்டது. அவன் அந்தச் சிறுவனைப் பார்த்து, தன்கையிலிருந்த துப்பாக்கியில் சுட்டுக்கொல்கிறான். ‘கொரில்லா பெண்ணுக்கு உணவு அளிக்க வந்த ஒரு கொரில்லாவைக் கொன்றுவிட்டோம்’ என்ற சந்தோஷத்தில் அவன் தன் மேலதிகாரிகளுக்குத் தெரிவிப்பதற்காக சென்றுவிடுகிறான். இந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்ட அந்தச் சிறுவனின் தாய், தன் பையனை சாக்கடை வழியாகவே போய் தூக்கி வந்து தன் வீட்டில் புதைத்துவிடுகிறார்.
இதன்பின் ஜெர்மானியர்கள் வந்து பார்த்தபோது, அந்தச் சிறுவனைக் காணாது, அடுத்த நாள் ஊரையே திரட்டி, யார் அந்த செயலைச் செய்தது என்று மிரட்டுகிறார்கள். அப்போது அக்கிராமத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் அதனை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதே இந்தக் கதை.
அதன்பின்னரும் ஒலினாவை சித்திரவதை செய்வார்கள். “நீ தாய் என்பதை மறந்துவிடாதே” என்பார்கள். அவர்கள் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்காகவாவது உண்மையைச் சொல்லிவிடு என்கிற ரீதியில் அவர்கள்
அவ்வாறு சொன்னபோது, காட்டில் கொரில்லா தோழர்கள் அனைவரும் தன்னை
“அம்மா” என்று அழைப்பதை ஒலினா எண்ணிப்பார்ப்பார்.
ஒலினாவிற்குக் கடும் வறட்சி. எப்படியாவது தண்ணீர் குடித்தாக வேண்டும் என்பது போல் இருக்கும். எனினும் தன் இயலாமையை, தன் பலவீனத்தை எந்தக் காரணம் கொண்டும் எதிரிகளிடம் காட்டக்கூடாது என்று தன்னை உருவாக்கிய தோழர் கூறியிருந்த அறிவுரைகள் அவரது நினைவிற்கு வந்து, அதனைக் கட்டுப்படுத்திக்கொள்வார்.
குழந்தை பிறக்கும். குழந்தை பிறந்தபின் அவர் கண்முன்னாலேயே குழந்தையைக் கொல்வார்கள். பின்னர் ஒலினாவையும் உயிருடனேயே அருவியின் ஓட்டைக்குள் முதலில் தலை, பின்பு கைகளை உடைத்தும், இடுப்பைஉடைத்தும் உள்ளே தள்ளிக் கொல்வார்கள்.
புரட்சி என்றால் என்ன? புரட்சிக்காரன் அல்லது புரட்சிக்காரி என்றால் யார்? நம் தமிழ்நாட்டில் இந்தப் பெயர் யார் யாருக்கோ சூட்டுப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மோசமான பெயராக மாறியிருக்கிறது. இந்தக் கதையில் வரும் ஒரேயொரு கழிசடையைத் தவிர, மற்ற அனைத்து வீராங்கனைகளும் புரட்சிக்கு எவ்வாறெல்லாம் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள் என்பதை கதையின் ஆசிரியரும், ஒரு முன்னாள் காவல்துறையைச் சேர்ந்த பெண்மணியுமான வாண்டா வாஸிலெவ்ஸ்கா பெ.நா.சிவம் கூறுவதைப் போல வெறும் வார்த்தைகளால் அல்ல, ரத்தமும் சதையுமாக, ஊணும் உயிருமாக இதில் மிக அற்புதமாக படைத்திருக்கிறார்.
வானவில் நவீனத்தில் வரும் சம்பவங்கள் நடைபெற்ற காலம் 1945 ஆகும். அப்போதே ரஷ்யமொழியில் எழுதப்பட்ட இந் நவீனத்தை தமிழில் 1946இலேயே தோழர்கள் ஆர். ராமநாதன் – ஆர்.எச். நாதன் மிகவும் சரளமான தமிழ்நடையில் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். இப்புதினத்தை அந்தக்காலத்திலேயே அச்சிட்டு வெளியிட்ட பாமா பிரசுரத்தாரையும் மீளவும் வெளியிட்டுள்ள அலைகள் பதிப்பக வெளியீட்டாளர் தோழர் பெ.நா.சிவம் அவர்களையும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
260 பக்கங்களைக் கொண்ட இந்த நாவலைப் படிக்கத் தொடங்கினால் ஓரிரு நாளில் படித்துமுடித்துவிடுவோம். உண்மையான அனைத்துப் புரட்சித் தோழர்களும் அவசியம் படிக்க வேண்டிய நாவல்களில் ஸ்டாலின் பரிசு பெற்ற வானவில்லும் ஒன்று என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.
இந்தக் கதை, திரைப்படமாக்கப்பட்டு, யூ ட்யூப் வலைத்தளத்திலும் கிடைக்கிறது. Mark Donskoi, The Rainbow (1944) என்று கிளிக் செய்து, படத்தைப் பாருங்கள்.
நாவலில் சில வரிகள்:
ஒலினாவுக்கும் ஜெர்மன் அதிகாரி வெர்னருக்கும் இடையே நடைபெறும் விசாரணை:
“சென்றவாரம் பாலத்தைத் தகர்த்தது நீதானா?”
“ஆம்”
“உனக்குத் துணை புரிந்தவர்கள் யார்?”
“யாருமில்லை. நான்மட்டும்தான் அந்த வேலையைச் செய்தேன்.”
“நல்லது. உன் கூட்டாளிகள் எங்கே?”
அவள் பதில் சொல்லவில்லை. … இவ்வாறு “அவள் தன்னைப் பற்றிய சகல தகவல்களையும் சொல்லுவாள். ஆனால் அவளுடைய தோழர்களைப்பற்றி ஒரு வார்த்தைகூடச் சொல்ல மாட்டாள்.”
•• ••• •••
ஒலினாவை வெர்னர் விசாரணைசெய்தபோது “நீ ஒரு தாய் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்,” என்றான்.
“நீ ஒரு தாய்.”
“இதைச் சொன்னது யார்? மேஜைக்கு அருகில் உட்கார்ந்திருக்கும் ஜெர்மன் அதிகாரியா? அல்லது காட்டில் உள்ள கொரில்லாக்களின் தலைவன், இன்பம் கொஞ்சும் அம்மை வடு நிறைந்த வதனமுடைய வாலிபன், கர்லியா?”
தனது ஈரலை மூச்சைத் தடைப்படுத்தும் தன் கருவில் இருக்கும் குழந்தையைப் பற்றி அப்போது ஒலினா சிந்திக்கவே இல்லை. தன்னை “அம்மா” என்று அன்புடன் அழைக்கும் காட்டில் வாழும் அந்த வாலிபர்களைப் பற்றித்தான் அவள் சிந்தித்தாள். மற்ற கொரில்லாக்களைவிட அவள்தான் வயதானவள். ரொம்ப வயதானவள். அவள் அவர்களுக்காக வேவு பார்த்தால் என்றாலும், பாலத்தைத் தகர்த்தாள் என்றாலும், அவற்றையெல்லாம் அவள் தனது உண்மையான வேலைகளாக மதிக்கவில்லை. மாறாக, அவர்கள் துணிகளைத் தோய்ப்பது,அவர்களுக்கு உணவு தயார் செய்வது, நோயாளிகளைக் கவனிப்பது, அவர்கள் காயங்களைக் கட்டுவது, அவர்களுடைய கிழிந்த துணிகளைத் தைப்பது, ஓர் அன்னை தனது குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் செய்வது – இவற்றைத்தான் அவள் தனது உண்மையான வேலைகளாக மதித்தாள். அவர்கள் எல்லோரும் அவளை “அம்மா” என்று அழைத்தார்கள்.
“நீ ஒரு தாய்.”
ஆம் காட்டில் வாழும் பதினாறு வாலிபர்களும், துணிகரமான, அச்சமற்ற பதினாறு வாலிபர்களும் அவள் புதல்வர்கள்தான்.
“அவர்களைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. அவர்கள் போய்விட்டார்கள். எங்கே போனார்கள் என்பது எனக்குத் தெரியாது.”
வெர்னர் மேஜையைக் குத்தினான். நான்கு மணி நேரம் விசாரணை செய்தும்கூட ஒரு வார்த்தையைக் கூட ஒலினாவிடமிருந்து அவனால் பெறமுடியவில்லை.
ஒலினா மட்டுமல்ல இந்தக் கதையில் வரும் அனைத்துப்பெண்களுமே ஒலினா போன்றே புரட்சிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட வீரத்தாய்கள்தான்.