வந்தே மாதரம் (Vande Mataram) எனும் நாடகம்: இந்தியா பற்றி எரியும்போது பாஜக எப்படி வரலாற்றை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது
ஆங்கில மூலம்: ஆனந்த் டெல்டும்டே
தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்
நாடாளுமன்றத்தில் அரங்கேறும் இந்த நாடகத்தின் வாய்ப்புச் செலவு (opportunity cost) மலைக்க வைப்பதாக உள்ளது. 1937 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்வதற்காக பத்து மணி நேரத்திற்கும் மேலாக செலவிடப்பட்ட நிலையில், நாடு எதிர் கொண்டிருக்கும் அவசரமான சமகால நெருக்கடிகளின் மீது மிகக் குறைந்த கவனமே செலுத்தப்பட்டது . இந்த முரண்பாடு இதைவிடத் தெளிவாகவோ அல்லது கண்டிக்கத்தக்கதாகவோ இருக்க முடியாது.
ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு 90.56 ஆகச் சரிந்தபோதும், இண்டிகோ நிறுவனத்தின் நெருக்கடியால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டபோதும், வேலையின்மை 9.2% ஆக உயர்ந்தபோதும், டெல்லிவாசிகள் நச்சுக்காற்றால் மூச்சுத் திணறியபோதும், அவற்றிற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காமல் 150 ஆண்டுகள் பழமையான பாடலின் எந்தப் பத்திகளைப் பாட வேண்டும் என்று விவாதிப்பதில் நாடாளுமன்றம் பத்து மணி நேரம் செலவிட்டது. இந்த கேலிக்கூத்து ஒரு நினைவுகூர்தல் அல்ல, மாறாக ஒரு திட்டமிட்ட திசைதிருப்பல் – இது பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) வியூகப் புத்தகத்தில் உள்ள ஒரு வழக்கமான நகர்வு. அதாவது, ஆட்சி நிர்வாகம் சீர்குலையும்போது, கலாச்சாரப் போரைத் தூண்டிவிடுவது; பொருளாதாரத் தரவுகள் அரசுக்கு எதிராக இருக்கும்போது, அதைத் திட்டமிட்டு உருவாக்கப்படுகிற கோபத்தின் கீழ் புதைப்பது; மேற்கு வங்கத் தேர்தல் நெருங்கும்போது, வங்காளச் சின்னங்களை வங்காளிகளுக்கு எதிராகவே ஆயுதமாக்குவது போன்றவை ஆகும்.
வந்தே மாதரம் சர்ச்சை என்பது தேசியவாதம் போல் வேடமிட்ட ஒரு தேர்தல் நடவடிக்கையாகும்; இது ஆட்சியைத் திறம்பட செய்வதற்குப் பதிலாக பிளவுபடுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட, காவி நிறம் பூசப்பட்ட ஒரு திசைதிருப்பலாகும். இது இன்றைய அரசியலின் மையத்தில் உள்ள சீரழிவைப் படம்பிடித்துக் காட்டுகிறது – கொள்கையை விட பிளவுபடுத்துதல், வரலாற்றை விட பிரச்சாரம், மற்றும் சாதாரண இந்தியர்களை நசுக்கும் உண்மையான நெருக்கடிகள் மீதான அதிர்ச்சியூட்டும் அலட்சியம்.
அபத்தமான நாடகம்
டிசம்பர் 8 அன்று, நரேந்திர மோடி மக்களவையில் வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் உரையாற்றினார் – ஆனால் நினைவுகூருவதற்குப் பதிலாக, அவர் ஒரு வரலாற்றுத் தாக்குதலை நிகழ்த்தினார். அவர் “நமது பெருமையை மீட்டெடுப்பதற்கான ஒரு வாய்ப்பு” என்று கூறிய மறு நிமிடமே அவரது உரை ஜவஹர்லால் நேரு மற்றும் காங்கிரஸின் மீதான தாக்குதலாக மாறியது. 1937 ஆம் ஆண்டில் பாடலை “துண்டாக்கியதாகவும்” “பிரிவினைக்கான விதைகளை விதைத்ததாகவும்” அவர் அவர்கள் மீது குற்றம் சாட்டினார். அவரது கூற்று வெளிப்படையாக இருந்தது: முதல் இரண்டு பத்திகளை மட்டும் பாடப் பரிந்துரைத்த காங்கிரஸ் செயற்குழுவின் (CWC) முடிவு, ஜின்னா மற்றும் முஸ்லிம் லீக்கிற்கு முன்னால் சரணடைந்ததற்குச் சமம் – இது பிரிவினைவாதத்தை ஊக்குவித்த ஒரு செயல் என்று அவர் பேசினார். அது கோபத்தைத் தூண்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட, உண்மைக்குப் புறம்பான ஒரு நேர்த்தியான கதை ஆகும். காங்கிரஸ் இந்து கலாச்சார மேலாதிக்கத்தை நிலைநாட்டியிருந்தால் பிரிவினையைத் தவிர்த்திருக்கலாம் என்ற கருத்து வரலாறு அல்ல – அது தேர்தல் அணிதிரட்டலுக்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் ஆகும். .
இந்தத் திட்டமிடல் (அ) `நாடக வடிவமைப்பு’, நோக்கத்தை சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவாக்கியது. ஜே.பி. நட்டா ராஜ்ய சபாவில் இந்தக் குற்றச்சாட்டை எதிரொலித்தார். அமித்ஷா அனைத்து விமர்சனங்களையும் தேச விரோதமானது என்று புறக்கணித்தார். சமூக ஊடகங்களில் இவை பெருமளவில் பரப்பப்பட்டது. இது ஒரு தேசியக் குறியீடு (அ) அடையாளம் குறித்த தன்னிச்சையான பிரதிபலிப்பு அல்ல; ஆனால், ஒரு திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை.
மத்திய அமைச்சர்கள் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயவை மீண்டும் மீண்டும் “பங்கிம் தாஸ்” என்று அழைத்தது போன்ற கவனக்குறைவான தவறுகள் கூட – திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கோபத்தைத் தூண்டியதோடு – அமைச்சர்களின் கலாச்சாரக் கூற்றுக்களின் மீதிருந்த உள்ளீடற்ற தன்மையை அம்பலப்படுத்தின. இன்று பாஜக வந்தே மாதரம் பாடலைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறது, ஆனால் அது அடையாளப்படுத்தும் காலனித்துவ எதிர்ப்பு இயக்கத்தில் அந்தக் கட்சிக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர்கள் போராடாத, தியாகங்களின் மூலம் பெறாத ஒரு பாடலை ஆயுதமாக்கும் சந்தர்ப்பவாதத்துடன் ஒப்பிடும்போது, அவர்களின் திடீர் பக்தி போலியாக ஒலிக்கிறது.
வரலாற்றுப் பொய்கள்
1937 ஆம் ஆண்டு காங்கிரஸ் காரியக் கமிட்டியின் முடிவு நேருவின் தனிப்பட்ட விருப்பம் அல்ல, அது சுதந்திரப் போராட்டத்தின் மிக உயர்ந்த தலைவர்களான மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், ரவீந்திரநாத் தாகூர், அபுல் கலாம் ஆசாத் மற்றும் நேரு ஆகியோரின் கூட்டுத் தீர்மானம் ஆகும். இப்போது நேருவைத் தனிமைப்படுத்துவது என்பது, சிறைவாசம், நாடுகடத்தல் மற்றும் சிந்திய இரத்தம் ஆகியவற்றை சுதந்திரத்திற்காக விலை கொடுத்த ஒரு முழுத் தலைமுறையையும் களங்கப்படுத்துவதாகும்.
அவர்களின் வாதம் எளிமையானது: வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகள் பொதுவானவை என்பதோடு அனைவரையும் உள்ளடக்கியவை, ஆனால் பிந்தைய பத்திகள் – ஆனந்தமடத்தில் உள்ளவை – துர்கா மற்றும் லட்சுமியை வெளிப்படையாகப் போற்றுவதாகும். ஒற்றுமையைப் பேணுவதற்காக முதல் பத்திகளை மட்டுமே பாட வேண்டும் என்று தாகூரே வலியுறுத்தினார்; உலகளவில் ஏற்றுக்கொள்ளக் கூடியவற்றிலிருந்து மதரீதியான குறிப்பிட்ட பகுதிகளைப் பிரிப்பதில் அவருக்கு “எந்தச் சிரமமும்” இல்லை. 1905 சுதேசிப் போராட்டத்தின் போது வந்தே மாதரம் என்று முழக்கமிட்டு இந்துக்களுடன் இணைந்து அணிவகுத்த முஸ்லிம்கள், குறியீட்டு ரீதியாகப் புறக்கணிக்கப்படாமல் தொடர்ந்து பங்கேற்பதை உறுதிசெய்ய காங்கிரஸ் முயன்றது. இதற்கும், திருத்தப்பட்ட வடிவத்தையும் நிராகரித்த ஜின்னாவைத் திருப்திப்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
லத்தி அடிகள், குண்டுகள் மற்றும் சிறைவாசத்தை அனுபவித்த தலைவர்களின் தீர்ப்பு இது என்று மல்லிகார்ஜுன் கார்கே நாடாளுமன்றத்தில் நினைவூட்டினார் – வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவது போல சுதந்திரப் போராட்டத்தில் இருந்து விலகியிருந்த, பெரும்பாலும் காலனித்துவ நலன்களுடன் ஒத்துழைத்த ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தைப் (ஆர்எஸ்எஸ்) போல இல்லை, . காலனித்துவ எதிர்ப்பு மோதலைத் தவிர்த்த முழு இந்துத்துவா அமைப்பையும் விட காங்கிரஸின் “சமாதானவாதிகள்” என பா.ஜ.கா.வால் கேலிச்சித்திரம் தீட்டப்படுபவர்களின் `நகக்கண்களில்’ கூட அதிக தேசபக்தி இருந்தது.
உண்மையான வரலாறு பாஜகவின் திரிபுவாதத்தை தகர்க்கிறது. பங்கிம் இந்த பாடலை 1875-ல் எழுதினார்; இது 1905 ஆம் ஆண்டு எழுந்த சுதேசி இயக்கத்தின் போர்க்குரலாக மாறியது, இந்துக்கள். முஸ்லிம்கள் என இரு தரப்பினராலும் பாடப்பட்டது. 1907 ஆம் ஆண்டு பிகாஜி காமா இதை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றார். மேலும், 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று, நமது மிகவும் புகழ்பெற்ற ஜனநாயக அமைப்பான அரசியலமைப்பு நிர்ணய சபை, ‘ஜன கண மன’விலிருந்து வேறுபட்ட தேசியப் பாடலாக ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு அரசியலமைப்பு அங்கீகாரத்தை வழங்கியது.
பாஜக ஒருபோதும் குறிப்பிடாத, அனைத்தையும் விட முக்கியமான உண்மை இதுதான்: இந்த தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆர்எஸ்எஸ்ஸோ அல்லது இந்து மகாசபாவோ எந்தப் பங்கும் வகிக்கவில்லை. அவர்கள் அணிவகுக்கவில்லை, அவர்கள் பாடவில்லை, அவர்கள் எதிர்க்கவில்லை. சுதந்திரப் போராட்டத்திற்கு அவர்களின் பங்களிப்பு அதிகபட்சம் பூஜ்ஜியமாகவும், அதற்கு விரோதமாகவுமே இருந்தது. அவர்களின் சித்தாந்த வாரிசுகள் இப்போது சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும் தேசபக்தி குறித்தும் பாடம் நடத்துவது, வரலாற்று உண்மைக்கு ஒவ்வாமை கொண்டவர்களுக்கு மட்டுமே புரியாத ஒரு முரண்பாடாகும்.
பிளவுபடுத்தும் வியூகம்
இது உண்மையிலேயே வந்தே மாதரத்தின் ஆண்டுவிழாவைக் கொண்டாடுவதாக இருந்திருந்தால், அவசர கவனம் தேவைப்படும் பொருளாதார வீழ்ச்சியையும் நிர்வாகத் தோல்விகளையும் நாடாளுமன்றம் புறக்கணித்திருக்காது. உண்மையான காரணம் தேர்தல் கணக்குதான்: மேற்கு வங்கத்தில் 2026-ஆம் ஆண்டில் தேர்தல் நடைபெற இருக்கிறது, மேலும் மம்தா பானர்ஜியின் பிடியை பாஜகவால் இன்னும் உடைக்க முடியவில்லை. கட்சித் தாவல்கள், மத்திய ஏஜென்சிகளின் மிரட்டல்கள் மற்றும் தீவிரப் பிரச்சாரங்கள் மூலம் தோல்வியடைந்த பிறகு, கட்சி தனது மிகவும் நம்பகமான கருவியான கலாச்சாரப் பிளவுபடுத்தலுக்குத் திரும்பியுள்ளது.
இந்த உத்தி பக்குவமற்றதாக கொடூரமானதாக இருந்தாலும் அவர்களுக்கு இதனால் பயனுள்ளது: பங்கிமை தாகூருக்கு எதிராக நிறுத்துவது, இல்லாத ஒரு கலாச்சாரப் பிளவை உருவாக்குவது, மற்றும் வங்காளிகளை ஒரு தவறான தெரிவுக்குத் தள்ளுவது. இரண்டு ஆளுமைகளும் இந்திய தேசியவாதத்தை வடிவமைத்தவர்கள்; இருவரும் நெறிமுறைப் பன்மைத்துவத்திற்காக நின்றவர்கள்; மேலும் இருவரும் இந்த மதவாத அபகரிப்பை நிராகரித்திருப்பார்கள். ஆயினும்கூட, பாஜக அவர்களின் மரபுகளை வகுப்புவாதக் கட்டமைப்புக்கு மூலப்பொருளாகப் பயன்படுத்துகிறது.
வரலாற்றாசிரியர் மிருதுளா முகர்ஜி குறிப்பிடுவது போல, இந்த அரசாங்கத்தின் இயல்பு எல்லாவற்றையும் அரசியல்மயமாக்குவது, பொதுமக்களின் கவனத்தை பொருளாதார நெருக்கடியிலிருந்து திசைதிருப்பி, உருவாக்கப்பட்ட கலாச்சாரப் போர்களின் பக்கம் திருப்புவதுதான். வேலையின்மை அதிகரிக்கும்போதோ, ரூபாயின் மதிப்பு சரியும்போதோ, அல்லது நிர்வாகத் தோல்விகள் குவியும்போதோ, மக்களை “பயமுறுத்திப் பிளவுபடுத்துவதற்காக” அடையாள அடிப்படையிலான திசைதிருப்பலை பா.ஜ.க. நாடுகிறது.
உணவுப் பழக்கவழக்கங்கள், உடைகள், திருவிழாக்கள், ஏன் எதிராளிகள் எருமைகளையோ அல்லது தாலிக்கயிறுகளையோ திருடிவிட்டார்கள் என்பது போன்ற விசித்திரமான கூற்றுகளைக் கூட இக் கட்சி ஆயுதமாக்கி, அதை மீண்டும் மீண்டும் பின்பற்றி வருகிறது. இதன் நோக்கம் மாறாதது: குடிமக்கள் செயல்திறனின் அடிப்படையில் வாக்களிக்காமல், பயத்தின் அடிப்படையில் வாக்களிக்கும் வகையில் பாதுகாப்பின்மையை தூண்டிவிடுவது.
இது வெறும் சொல்லாடலுடன் நின்றுவிடுவதில்லை. யோகி ஆதித்யநாத் கல்வி நிறுவனங்களில் வந்தே மாதரத்தைக் கட்டாயமாக்கியுள்ளார்; ஹைதராபாத்தில் உள்ள பாஜக தலைவர்கள், நகராட்சி கூட்டங்களில் அது பாடப்பட வேண்டும் என்று கோரினர்; மகாராஷ்டிர அமைச்சர் ஒருவர், அதைப் பாட விரும்பாதவர்கள் “நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்று அறிவித்தார். அந்தச் செய்தி சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவாக உள்ளது: மாற்றுக்கருத்து என்பது தேசத்துரோகத்திற்குச் சமம்.
பிரியங்கா காந்தி அரசியல் கணக்கீட்டை – இந்த சர்ச்சை “வங்காளத் தேர்தல்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களை அவமதிப்பது” – எனத் தெளிவுபடுத்தினார். கார்கே வெளிப்படையாகக் கூறினார்: இது பொருளாதார வீழ்ச்சியை மறைப்பதற்கான ஒரு புகைமூட்டம். பொருளாதார வல்லுநர்கள் ரூபாய் நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் வேலையின்மை குறித்து நாடாளுமன்றத்தின் கவனத்தை ஈர்க்க அழைப்பு விடுத்தபோது, பாஜக தனது ஆற்றலை ஒரு தேர்தல்-கலாச்சார நாடகத்தை அரங்கேற்றுவதில் முதலீடு செய்தது. இது தேசபக்தி அல்ல; இது தேசப்பற்று அக்கறை போல வேடமிட்ட ஒரு திசைதிருப்பும் தந்திரம்.
இந்தியா பற்றி எறியும்போது பாஜக வரலாறை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறது
இந்த நாடாளுமன்றத்தில் அரங்கேறும் நாடகத்தின் வாய்ப்புச் செலவு மலைக்க வைப்பதாக உள்ளது. 1937 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்வதற்காக பத்து மணி நேரத்திற்கும் மேலாக செலவிடப்பட்ட நிலையில், நாடு எதிர் கொண்டிருக்கும் அவசரமான சமகால நெருக்கடிகளின் மீது மிகக் குறைந்த கவனமே செலுத்தப்பட்டது . இந்த முரண்பாடு இதைவிடத் தெளிவாகவோ அல்லது கண்டிக்கத்தக்கதாகவோ இருக்க முடியாது.
ரூபாயின் வரலாற்றுச் சரிவு: இந்திய ரூபாய் ஒரு டாலருக்கு 90.56 என்ற இதற்கு முன்பு எப்போதுமிராத மிகக் குறைந்த நிலைக்குச் சரிந்துள்ளது – இது இந்தியாவின் வரலாற்றிலேயே மிக மோசமான நிலை. இது 2014 ஆம் ஆண்டிலிருந்து 50% க்கும் அதிகமான ஒரு பேரழிவுச் சரிவைக் குறிக்கிறது, இது இந்த ஆண்டு ஆசியாவின் மிக மோசமான செயல்திறன் கொண்ட நாணயமாக ஆக்குகிறது.

இந்த நெருக்கடி இந்தாண்டு டிசம்பர் மாதம் வியத்தகு முறையில் முடுக்கிவிடப்பட்டது. டிசம்பர் 3 அன்று ரூபாய் 90 என்ற `உளவியல்’ தடையைத் தாண்டி 90.17 ஆக உயர்ந்தது, பின்னர் டிசம்பர் 11-12 வாக்கில் 90.56 ஆகத் தொடர்ந்து சரிந்தது. இந்த ஆண்டுக்கான இறுதி சர்வதேச கொடுப்பனவுகளுக்கான (payments) பெருநிறுவனங்களின் டாலர் வெளியேற்றம், தோல்வியுற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அமெரிக்கா – இந்தியா வர்த்தக ஒப்பந்தம் இல்லாதது போன்றவை அனைத்தும் சேர்ந்து நாணயத்தின் சரிவை மோசமாக்கியுள்ளன. ரூபாயின் ஒவ்வொரு சதவீதச் சரிவும் இறக்குமதிகளை அதிக விலையாக்குகிறது, பணவீக்கத்தைத் தூண்டுகிறது, இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டுக் கடன் சுமைகளை அதிகரிக்கிறது, மேலும் ஒவ்வொரு குடிமகனின் வாங்கும் சக்தியையும் குறைக்கிறது.
குறைந்து வரும் அந்நியச் செலாவணி கையிருப்பு: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுமார் $704.9 பில்லியன் என்ற உச்சத்தைத் தொட்ட பின் சரிந்து 2025 டிசம்பர் மாத நிலவரப்படி சுமார் $687 பில்லியன் என்ற அளவில் உள்ளது, இது ரூபாயை ஆதரிப்பதற்காக ரிசர்வ் வங்கி தொடர்ந்து தலையிடுவதைப் பிரதிபலிக்கிறது. ரூபாயை ஆதரிப்பதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி பல தவணைகளில் பில்லியன் கணக்கான டாலர்களை விற்றுள்ளது. இதில் ஆகஸ்ட் மாதத்தில் நடந்த பெரும் விற்பனையும், 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை தொடரும் நிகர விற்பனையும் அடங்கும். நாணயத்தின் பலவீனத்தையும் பொருட்படுத்தாமல், டிசம்பர் 5 அன்று வட்டி விகிதங்களை 25 புள்ளிகள் குறைத்த முடிவானது மந்தமடைந்து வரும் பொருளாதாரத்தைத் தூண்டி ரூபாயைப் பாதுகாக்கும் முயற்சியை பொருளாதார நிபுணர்கள் திறம்பட கைவிட்டுவிட்டனர் என்பதையே உணர்த்துகிறது. இது அவசர பாராளுமன்ற ஆய்வையும், விரிவான கொள்கை நடவடிக்கைகளையும், பொருளாதார தவறான நிர்வாகம் குறித்த நேர்மையான ஒப்புதலையும் கோருகிறது. ஆனால் இதற்கு மாறாக, பாராளுமன்றம் பாடல் வரிகளைப் பற்றி விவாதித்தது.
வேலையின்மை நெருக்கடி: CMIE-இன் படி, 2024 ஆம் ஜூன் மாதம் வேலையின்மை 9.2% ஆக உயர்ந்து, எட்டு மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியது. மேலும், 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் 8% என்ற அளவில் நீடித்தது. இது அரசாங்கம் சொல்லக்கூடிய பொருளாதார மீட்சி குறித்த கூற்றுக்கள் இருந்தபோதிலும், தொடர்ச்சியான வேலைவாய்ப்பு நெருக்கடியைப் பிரதிபலிக்கிறது. இளைஞர்களிடையே வேலையின்மை விகிதம் இதைவிட அதிகமாக உள்ளது. “வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரம்” என்ற அரசாங்கத்தின் கூற்றுக்கள் இருந்தபோதிலும், மில்லியன் கணக்கான இந்தியர்களால், குறிப்பாக இளைஞர்களால், வேலையைக் கண்டறிய முடியவில்லை. இந்த வேலைவாய்ப்பு நெருக்கடி தனிநபர்களின் வாழ்க்கையையும் குடும்பங்களையும் அழிப்பதுடன், இந்தியாவின் மக்கள்தொகை அனுகூலத்தின் மீதான (demographic dividend) மகத்தான வீணடிப்பையும் குறிக்கிறது. தொழிலாளர் பங்கேற்பு விகிதம் சுமார் 55.1% என்ற மிதமான அளவில் உள்ளது, இதில் பெண்களின் பங்கேற்பு சுமார் 33.7% ஆக பின்தங்கியுள்ளது. இது பணியாளர் தொகுப்பில் மனித மூலதனம் கணிசமாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதைக் காட்டுகிறது. இதற்கு அவசர தலையீடு, கொள்கை புதுமைகள் மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள் தேவை. மாறாக, பாராளுமன்றம் 19 ஆம் நூற்றாண்டு கவிதைகளைப் பற்றி விவாதித்தது.
உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளின் சரிவு: இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, இந்த ஆண்டு டிசம்பர் மாதம் செயல்பாட்டுச் சரிவை சந்தித்தது. இதனால் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்தனர். முக்கியமான உள்கட்டமைப்பில் ஏற்பட்ட இந்த நெருக்கடிக்கு ஒழுங்குமுறை மேற்பார்வை, பயணிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மற்றும் அமைப்பு ரீதியான தோல்விகள் குறித்த விசாரணை தேவை. மாறாக, பாராளுமன்றம் சமகால நுகர்வோர் பாதுகாப்பை விட வரலாற்று குறைகளுக்கு முன்னுரிமை அளித்தது. இது மோடியைப் பார்த்து பரவசமடைந்த நடுத்தர வர்க்கத்தினரையும் அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்திற்கு அம்பலப்படுத்தியுள்ளது.
சுற்றுச்சூழல் அவசரநிலை: டெல்லி மற்றும் வட இந்தியா அபாயகரமான மாசுபாடு அளவீடுகளால் மூச்சுத்திணறி வருகின்றன. காற்றின் தரம் அவசரநிலை அளவை எட்டியது, இது பொது சுகாதாரத்திற்கு, குறிப்பாக குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் ஆபத்தை விளைவித்தது. இந்த சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதார நெருக்கடிக்கு பயிர்க்கழிவுகளை எரித்தல், வாகன உமிழ்வுகள், தொழில்துறை மாசுபாடு மற்றும் நகர்ப்புற திட்டமிடல் ஆகியவற்றில் விரிவான நடவடிக்கை தேவை. தாய்நாட்டின் காற்று சுவாசிக்க முடியாததாக மாறியிருக்கும் நிலையில் பாடலில் எந்தப் பத்திகள் தாய்நாட்டைச் சரியாக மதிக்கின்றன என்பது பற்றி பாராளுமன்றம் விவாதித்தது.
வர்த்தகப் பற்றாக்குறை வெடிப்பு: 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதவாக்கில், இந்தியாவின் சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை சாதனை அளவாக $41.68 பில்லியனாக உயர்ந்தது. இறக்குமதிகள் வரலாற்றுச் சிறப்புமிக்க $76.06 பில்லியனாக உயர்ந்த நிலையில், ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட 12% சரிந்தன. இது மந்தமான உலகளாவிய தேவையையும் வர்த்தகத் தடைகளையும் பிரதிபலிக்கிறது. அமெரிக்கா போன்ற முக்கிய சந்தைகளுக்கான ஏற்றுமதிகளும் பல இந்தியப் பொருள்களுக்கு, குறிப்பாக ஜவுளி, ரத்தினங்கள் மற்றும் நகைகள், கடல் உணவு போன்ற தொழிலாளர் செறிவான துறைகளில், 50% வரை விதிக்கப்பட்ட `தண்டனை வரி’களால் சரிந்தன. இந்த போக்கு இந்தியாவின் ஏற்றுமதி போட்டித்தன்மையை கணிசமாக பலவீனப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு: இந்தியாவின் உலகப் பட்டினி குறியீட்டுத் தரவரிசை ‘தீவிரமான/மோசமான’ பிரிவிலேயே நீடிக்கிறது (123 நாடுகளில் 102வது இடம்). பல அண்டை நாடுகளை விட பின்தங்கியுள்ள இது, ஒரு நடுத்தர வருமான நாட்டைப் பொருத்தளவில் எதிர்பார்க்கப்படும் நிலையை விட மிகவும் குறைவாக உள்ளது. சில ஆப்பிரிக்க மற்றும் தெற்காசிய நாடுகள் சிறப்பாகச் செயல்படும் நிலையில், வல்லரசு அந்தஸ்தைக் கோரும் ஒரு நாட்டிற்கு இது அவமானகரமானது. ஊட்டச்சத்துக் குறைபாடு, உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் விவசாய நெருக்கடி ஆகியவை கோடிக்கணக்கான குடிமக்களைப் பாதிக்கின்றன. இதற்கு அவசர கொள்கை கவனம், வள ஒதுக்கீடு மற்றும் நலத்திட்டங்களின் நேர்மையான மதிப்பீடு தேவைப்படுகிறது. மாறாக, நாடாளுமன்றம் கலாச்சார மேலாதிக்கப் போட்டியில் ஈடுபட்டது.
இந்தப் பட்டியல் தொடர்கிறது: ஆதார அடிப்படையிலான கொள்கைகளைச் சிதைக்கும் தரவு மறைப்பு மற்றும் கையாளுதல்; தேர்தல் நேர்மை குறித்த கவலைகள்; நிறுவனங்களைக் கைப்பற்றுதல்; மற்றும் நடுத்தர வர்க்கத்தின் சேமிப்பை அரிக்கும் தொடர்ச்சியான பணவீக்கம் போன்ற ஒவ்வொரு பிரச்சினையும் தினமும் மில்லியன் கணக்கான இந்தியர்களைப் பாதிக்கிறது. ஒவ்வொன்றிற்கும் நாடாளுமன்ற நேரம், நிபுணர்களின் கருத்து மற்றும் சட்டமியற்றும் நடவடிக்கை தேவை. ஆனால், இவை அனைத்தும் வங்காளத்தில் வரவிருக்கும் தேர்தலில் பாஜகவின் (தேர்தல்) நாடகத்திற்காகப் புறக்கணிக்கப்பட்டன.
அரசியல் ஆயுதமாக வரலாறு
வந்தே மாதரம் சர்ச்சை பரந்த வடிவத்தின் ஒரு பகுதியாகும்: பாஜக வரலாற்றை ஓர் அரசியல் ஆயுதமாக மாற்றுகிறது. அது தனக்குச் சாதகமான உண்மைகளைத் தேர்ந்தெடுத்து, கூட்டு முடிவுகளைத் தனிப்பட்ட துரோகங்களாகச் சித்தரித்து, சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்-இன் பங்களிப்பின்மையை மறைத்து, சூழலற்ற பிற்காலப் பார்வையைக் கொண்டு கதாநாயகர்களையும் வில்லன்களையும் உருவாக்குகிறது.
இந்த முறை பல நோக்கங்களுக்குப் பயன்படுகிறது. இது சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் பெருமையை பாஜக தவறாக உரிமை கோரவும், காங்கிரஸை “தேச விரோதி” என்று அவதூறு செய்யவும், வகுப்புவாதப் பிளவுகளைத் தூண்டுவதற்காக நீண்டகாலமாகத் தீர்க்கப்பட்ட விவாதங்களைத் மீண்டும் ஆரம்பிக்கவும், தற்போதைய நிர்வாகத் தோல்விகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவும் அனுமதிக்கிறது. இதில் உள்ள முரண்பாடு அப்பட்டமானது: “துக்டே-துக்டே கும்பல்” என்று முழக்கமிடும் ஒரு கட்சி, சுதந்திரப் போராட்ட வீரர்கள் உழைத்து உருவாக்கிய ஒருமித்த கருத்தையே சிதைக்கிறது. சரிந்து வரும் பொருளாதாரம் மற்றும் ஒரு டாலருக்கு 90 ரூபாயைக் கடந்த ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் மீது உட்கார்ந்து கொண்டு அவர்கள் வந்தே மாதரத்தைப் போற்றுகிறார்கள்.
இத்தகைய வரலாற்றுத் திரிபு அரசியலமைப்பு ஜனநாயகத்தை அரிக்கும் தன்மை கொண்டது. கலாச்சார ஒருமைப்பாட்டைக் கட்டாயப்படுத்துவது இந்தியாவின் பன்மைத்துவ நெறிமுறைகளை மீறுகிறது, எதிர்ப்பைத் துரோகத்துடன் சமன்படுத்துவது விவாதங்களைக் குளிர்விக்கிறது, மற்றும் நாடாளுமன்றத்தைப் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்துவது அந்த அமைப்பையே பலவீனப்படுத்துகிறது. எல்லாவற்றையும் விட ஆபத்தானது, இது தீர்க்கப்பட்ட கேள்விகளை முடிவில்லாமல் அரசியல் ரீதியாக மீண்டும் விவாதிப்பதற்கு ஒரு முன்னுதாரணத்தை உருவாக்குகிறது. 87 ஆண்டுகள் பழமையான ஒரு முடிவை இன்று அசுரத்தனமாகக் காட்ட முடியுமானால், எதிர்கால ஆட்சியாளர்கள் வரலாற்றின் எந்த அத்தியாயத்தையும் மீண்டும் திறப்பதைத் தடுப்பதற்காக ஆயுதம் எதுவும் இல்லை, இது உண்மையான நிர்வாகத்திற்குப் பதிலாக தேசத்தை நிரந்தரமான, உருவாக்கப்பட்ட மோதலில் சிக்க வைக்கும்.
தேர்தல் காய்களாக கலாச்சாரச் சின்னங்கள்
இந்த சர்ச்சையின் வங்காளப் பரிமாணம் மிக முக்கியமானது. பங்கிம் பெங்காலி இலக்கியம் மற்றும் தேசியவாதத்தின் ஒரு தூண் ஆவார், மேலும் வந்தே மாதரம் ஆழமான கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. வங்காளத்தின் அறிவுசார் அல்லது அரசியல் மரபுகளில் எந்தவிதமான ஆழமான வேர்களும் இல்லாத ஒரு கட்சி, இந்தச் சின்னங்களை வங்காளிகளுக்கு எதிராகவே ஆயுதமாகப் பயன்படுத்துவது அப்பட்டமான சந்தர்ப்பவாதமாகும்.
வங்காளத்தின் அறிவுசார் பாரம்பரியம் – பங்கிம், தாகூர், போஸ் மற்றும் பலரும் – நுணுக்கம், ஒருங்கிணைப்பு மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய தேசியவாதத்திற்கு ஆதரவாக இருந்தனர். 1937 ஆம் ஆண்டின் முடிவு அந்த நெறிமுறைக்கு ஏற்பவே இருந்தது: அது பங்கிமின் படைப்பைக் கௌரவித்த அதே வேளையில், அதன் உலகளாவிய ஈர்ப்பையும் உறுதி செய்தது. இதைத் துரோகம் அல்லது பலவீனம் என்று அழைப்பது வங்காளக் கலாச்சாரத்தை முழுமையாகத் தவறாகப் புரிந்துகொள்வதாகும்.
பாஜகவின் உத்தி வெளிப்படையானது: பங்கிமுக்கு அவமரியாதை செய்யப்பட்டதாகக் கூறி வங்காளிகளிடையே அதிருப்தியை உருவாக்குவது, ஒரு “வெளியாளான” மம்தா பானர்ஜிக்கு எதிராக வங்காளப் பெருமையின் பாதுகாவலராகத் தன்னைக் காட்டிக்கொள்வது, மற்றும் முஸ்லிம்களை உள்ளடக்கியது குறித்துப் பேசி வகுப்புவாத பதற்றத்தைத் தூண்டுவது. இது ஒரு அடிப்படை உண்மையை புறக்கணிக்கிறது: 1937 ஆம் ஆண்டின் முடிவை வடிவமைத்தவர்கள் வங்காளத்தின் மிகச்சிறந்த அறிஞர்களே. இந்த சூழ்ச்சியை வங்காளிகளால் புரிந்துகொள்ள முடியாது என்று கூறுவது அவர்களின் புத்திசாலித்தனத்திற்குச் செய்யும் அவமதிப்பாகும்.
மஹுவா மொய்த்ரா குறிப்பிட்டது போல, பாஜக “2026 வங்காளத் தேர்தலுக்கான ஆதாயத்திற்காக” மட்டுமே “வந்தே மாதரம் எனும் அட்டையை” பயன்படுத்துகிறது. வங்காளத்திற்கான உண்மையான கேள்வி இதுதான்: அதன் கலாச்சார பாரம்பரியம் அதன் சொந்த அரசியல் மற்றும் பொருளாதார நலன்களுக்கு எதிராக ஒரு கருவியாகத் திரிக்கப்படுவதை அது அனுமதிக்குமா?
ஒரு தேசம் இதைவிடச் சிறந்ததற்குத் தகுதியானது
இந்தியா ஆழ்ந்த துயரத்தில் உள்ளது. ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராகத் தொடர்ந்து சரிந்து வருகிறது, வேலையின்மை ஒரு தலைமுறை முழுவதையும் சீரழித்து வருகிறது, உள்கட்டமைப்பு சிதைந்து வருகிறது, நிறுவனங்கள் சிதைக்கப்பட்டுள்ளன, மேலும் புதிய அமெரிக்க வரிகள் மில்லியன் கணக்கான வேலைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நிலையில் வர்த்தகப் பற்றாக்குறைகள் தலைதூக்குகின்றன. இதற்கு ஆளும் கட்சியின் பதில் நல்லாட்சி அல்ல – மாறாக, மற்றொரு கலாச்சார திசைதிருப்பலாகும்.

வந்தே மாதரம் நாடகம் இந்த அரசியல் திவால்நிலையின் சரியான பிரதிபலிப்பாகும். இது தேசிய நலனுக்குப் பதிலாகத் தேர்தல் உத்தியை மாற்றீடாகக் கொள்கிறது, வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்வதற்குப் பதிலாக அதை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது, மேலும் உண்மையான பிரச்சினைகள் தீவிரமடையும்போது பிளவுகளைத் தூண்டுகிறது. இது குடிமக்களின் பாரம்பரியத்தைக் கௌரவிப்பதாகப் பாசாங்கு செய்துகொண்டு, அவர்களை வெறும் பொம்மைகளாக நடத்துகிறது.
தேசபக்தி குறித்து அக்கறை கொண்ட ஓர் அரசாங்கம் நாணய நெருக்கடியைச் சமாளிக்கும், இளைஞர்களில் முதலீடு செய்யும், வர்த்தக சவால்களைப் பேச்சுவார்த்தை மூலம் எதிர்கொள்ளும், மற்றும் தள்ளாடும் நிறுவனங்களைச் சீரமைக்கும். ஓர் உண்மையான தேசியவாதத் தலைமை, வங்காளத் தேர்தலுக்காக 87 ஆண்டுகள் பழமையான விவாதத்தைத் தோண்டி எடுப்பதற்குப் பதிலாக, இந்தியாவின் பொருளாதார அவசரநிலைகளை எதிர்கொள்ளும்.
வந்தே மாதரத்தை சுதந்திரப் போராட்டத்திற்கு கொண்டு சென்றவர்கள் – அணிவகுத்துச் சென்றவர்கள், துன்பப்பட்டவர்கள், இரத்தம் சிந்தியவர்கள் – தங்கள் பாரம்பரியம் ஒரு தேர்தல் பிரச்சாரக் கருவியாக மாற்றப்படுவதைப் பார்ப்பதற்காக அதைச் செய்யவில்லை. அவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஓர் இயக்கத்தை உருவாக்கினார்கள்; அதற்குப் பிறகு வந்தவர்கள் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதற்கும், பொறுப்பேற்பதைத் தவிர்ப்பதற்கும் அந்த வரலாற்றை மீண்டும் எழுதுகிறார்கள்.
2026 ஆம் ஆண்டு மேற்கு வங்கத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாக்காளர்கள் தங்கள் கலாச்சாரச் சின்னங்களை பாஜக-வின் துருவமயமாக்கல் (polarization) எனும் இயந்திரத்தில் இணைக்க அனுமதிப்பார்களா, அல்லது குறைகளுக்குப் பதிலாக நல்லாட்சியையும், முழக்கங்களுக்குப் பதிலாகத் தீர்வுகளையும், கலாச்சாரப் போருக்குப் பதிலாகத் திறமையையும் கோருவார்களா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
இதற்கிடையில், ரூபாய் மதிப்பு சரிந்து, பொருளாதாரம் திணறிக்கொண்டிருக்கும் வேளையில், நாடாளுமன்றம் பாடல் வரிகளைப் பற்றி விவாதிக்கிறது, மேலும் குடிமக்கள் உண்மையாகவே தலைமை தாங்கும் தலைவர்களுக்காகக் காத்திருக்கிறார்கள். இந்தியாவிற்கு முன்னால் உள்ள தெரிவு வெளிப்படையானது: எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு கடந்த காலத்தைக் கௌரவிக்கும் அரசியல், அல்லது தற்போதைய தோல்விகளிலிருந்து தப்பிப்பதற்காக கடந்த காலத்தை ஆயுதமாக்கும் அரசியல்.
வந்தே மாதரம் (Vande Mataram) என்றால் “தாயே, உன்னை வணங்குகிறேன்” என்று பொருள் – ஆனால் எந்தத் `தாய் இந்தியா’ கௌரவிக்கப்படுகிறாள்? கலாச்சாரப் போருக்காக உருவாக்கப்பட்ட கற்பனைத் தாயா, அல்லது வேலைகள், ஸ்திரத்தன்மை, தூய்மையான காற்று மற்றும் சரிந்துவிடாத நாணயத்தின் மதிப்பு தேவைப்படும் 140 கோடி மக்களின் உண்மையான தாய்நாடா?
நாட்டின் பொருளாதார அடித்தளங்கள் தங்களுக்குக் கீழே சரிந்து கொண்டிருக்கும்போது, தங்கள் அரசியல் மூலதனத்தை அடையாளப் போர்களில் செலவிட்டவர்களுக்கு வரலாறு கருணை காட்டாது.
************************************
(இந்தக் கட்டுரை `தி வயர்’ இணைய இதழில் 14/12/2025 அன்று வெளியானது.
ஆனந்த் டெல்டும்டே (Anand Teltumbde) என்பவர் PIL நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி, ஐஐடி காரக்பூர், ஜிஐஎம் கோவா ஆகிய கல்வி நிறுவனங்களின் பேராசிரியர் என்பதோடு எழுத்தாளரும் மனித உரிமை ஆர்வலரும் ஆவார்)
******************************************************************************
புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு
2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை 49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும் ஜனவரி 8 முதல் 18 வரை சென்னை புத்தக கண்காட்சியின் ஏதாவது ஒரு அரங்கிற்கு நேரடியாக வந்து தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதை நூல் அறிமுக கட்டுரையாக bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும், புத்தக கண்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று மாலை 5.30 மணியளவில் நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும். இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன், உமர் பாரூக் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

