மறைந்த நாடுகளும் அதன் தபால் தலைகளும்-ஹைதராபாத்

மறைந்த நாடுகளும் அதன் தபால் தலைகள் என்று நான் எழுத நினைத்தபோது என் மனதில் வந்த நாடுகளில் ஒன்றுதான் ஹைதராபாத். தற்போது உள்ள தெலுங்கானா மாநிலத்தின் தலைநகராக இருக்கும் ஹைதராபாத் 1948க்கு முன்பு தனி நாடக இருந்து வந்தது, இந்த  நாட்டின் வரலாறு மிகவும் சுவாரசியமானது.

இந்திய துணைக் கண்டத்தின் தென்-மத்திய பகுதியில் ஹைதராபாத் அமைந்துள்ளது, இது 1724 முதல் 1948 வரை நிஜாம் பரம்பரையில் வந்தவர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளது. 1680 களில் இப்பகுதி முகலாயப் பேரரசின் ஒரு பகுதியாக மாறியது, இருப்பினும், 1724 இல், இந்த பேரரசு பலவீனமடையத் தொடங்கியபோது, முகலாய அதிகாரி ஆசிப் ஜா, பேரரசின் தெற்கு மாகாணங்களின் முகலாய ஆளுநரை தோற்கடித்து கட்டுப்பாட்டைக் கைப்பற்றி தன்னை “ஹைதராபாதின் நிஜாம்-அல்-முல்க்” என்று அறிவித்தார்.

அதற்குப்பின் ஹைதராபாத் 1798 இல் ஆங்கிலேயர்களால் கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் கொண்டுவரப்பட்டது, ஆனால் உள்நாட்டின் விவகாரங்களை இந்த நாட்டின் நிசாமின் வசமே விட்டது. நிஜாம்கள் இஸ்லாமிய கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியங்களை போற்றி பின்பற்றி வந்தனர். இதனால் ஹைதராபாத் முஸ்லீம்களின் அடையாளத்தின் மையமாக மாறியது மற்றும் ஹைதராபாத்தில் தொடர்வண்டி அறிமுகப்படுத்தப்பட்டது.

1947ஆம் ஆண்டில், இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரித்து, ஆங்கிலேயர்கள் இரண்டு நாடுகள் உருவாகியநேரத்தில் நேரத்தில், இரண்டு நாடுகளிலும் இருந்த இருந்துவந்த தனிநாடுகளுக்கும் சமஸ்தானங்களுக்கும் அவர்கள் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ தங்கள் பகுதியை சேர்த்துக் கொள்ளவோ அல்லது தனி நாடாக இருந்து கொள்ள வாய்ப்பளித்தது. இந்தியாவில் இருந்த பல்வேறு சமஸ்தானங்கள் இந்திய நாட்டுடன் தங்களை இணைத்துக் கொள்ள சம்மதம் தெரிவித்து இந்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் ஹைதராபாத் நிஜாம்-ஒஸ்மான் அலி கான், இந்த இரண்டு நாடுகளுடனும் ஹைதராபாதை சேர்க்க வேண்டாம் என்று முடிவு செய்து தனி நாடாக செயல்பட முடிவு செய்தார்.

சுதந்திர இந்திய அரசு ஹைதராபாதை தங்கள் நாட்டுடன் இணைக்க நிஜாம்-ஒஸ்மான் அலி கானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது ஆனால் அவரோ இந்தியாவின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு ஹைதராபாதின் முயற்சிகளை இராஜதந்திர வழிகளில் தோற்கடிக்க முயன்றாலும், துணைப் பிரதமர் சர்தார் வல்லபாய் படேல் ஹைதராபாத் பிரச்சினையைத் தீர்க்க ராணுவ வழிகளை நாடினார்.

இந்திய அரசு ஹைதராபாத் மீது போர் தொடுத்து அந்த நாட்டை இந்தியாவுடன் இணைக்க தங்கள் இராணுவத்தினை அனுப்பியது, இந்த திட்டத்திற்கு ஆபரேஷன் போலோ என்று பெயரிடப்பட்டது. செப்டம்பர் 13,1948 அன்று, இந்திய இராணுவப் படைகள் ஹைதராபாதிற்குள் அதிகாலை 4 மணிக்கு நுழைந்தன. சோலாப்பூர்—செகந்திராபாத் நெடுஞ்சாலையில் உள்ள நல்துர்க் கோட்டையில் ஹைதராபாத் காலாட்படையின் 1வது தற்காப்புப் படைக்கும் இந்திய அரசின் 7 வது படைப் பிரிவின் தாக்குதல் படைக்கும் இடையே முதல் போர் நடந்தது.

இரண்டு நாடு படைகளுக்கும் இடையில் கடும் சண்டை நடந்தது ஆனால் பெரிய இந்தியப்படையை சமாளிக்க முடியாமல் ஹைதராபாத் ராணுவம் திக்குமுக்காடியது. இறுதியில் செப்டம்பர் 17 அன்று மாலை 5 மணியளவில், ஹைதராபாத் நிஜாம் போர் நிறுத்தத்தை அறிவித்தார், இதனால் ஆயுத நடவடிக்கை முடிவுக்கு வந்தது. இந்திய ராணுவ ஜெனரல் ஜோயந்தோ நாத் சௌத்ரி, மாலை 4 மணியளவில் ஹைதராபாத்தில் ஒரு படையை வழிநடத்தினார், செப்டம்பர் 18 அன்று மேஜர் ஜெனரல் எல். எட்ரூஸ் தலைமையிலான ஹைதராபாத் ராணுவம் சரணடைந்தது.

ஹைதராபாத் சரணடைந்தவுடன் நிஜாம் பதவி விலகினார் மற்றும் சமஸ்தான அரசின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பின்னர், நிஜாம் இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

தபால் தலை சேகரிப்பாளர்கள் இந்திய தபால் தலைகளை வெளியிட்ட நாடுகள், மாநிலங்களை இரண்டு பிரிவாக பிரிக்கிறார்கள். நிலப்பிரபுத்துவ சமஸ்தானங்கள் தங்கள் சொந்த தபால் சேவையை நடத்தி, அவர்கள் நாட்டிற்குள் பயன்படுத்தக்கூடிய தபால்தலைகளை வெளியிட்ட நாடுகள் என்றும் மற்ற சமஸ்தானங்கள் தங்கள் தபால் சேவையை கையாள பிரிட்டிஷ் இந்திய அஞ்சல் அமைப்புடன் ஒப்பந்தம் செய்தது.

ஹைதராபாத் நிலப்பிரபுத்துவ நாடக இருந்துவந்தது, ஹைதராபாத்தின் முதல் தபால் தலை 1869ஆம் ஆண்டு தொடங்கி வெளியிடப்பட்டன, மேலும் 1/2, 1 மற்றும் 2 அனாக்கள் ஆகிய மூன்று வெவ்வேறு மதிப்புகளை கொண்ட ஒரு அரபு எழுத்து வடிவமைப்பைக் கொண்டிருந்தது. 1880 ஆம் ஆண்டில் புதிய வடிவமைப்புடன் அந்த தபால்தலைகள் மாற்றப்பட்டன, அதில் “POST ஸ்டாம்ப்” என்று பொறிக்கப்பட்டது மற்றும் அதன் மதிப்பு இந்தி, தெலுங்கு, உருது மற்றும் தபால் தலையின் மைய பகுதியில் ஆங்கிலம் நான்கு மொழிகளில் அச்சிடப்பட்டது.

இந்த வடிவமைப்பு ஹைதராபாத் தபால்தலைகளுக்கு (அதிக கட்டணம் உட்பட) பயன்படுத்தப்பட்டது. இதன் பின்னர் ஹைதராபாத் நிசாம் தபால் தலைகளில் ஒரு புதிய வடிவமைப்பினை அறிமுகப்படுத்தினார், அதில் நடுவில் ஹைதராபாத் நிஜாமின் முத்திரை இடம்பெற்றது. முதல் சில ஆண்டுகளில் தபால்தலைகளின்  மேல் பகுதியில் ஒரு அரைவட்ட வடிவில் “POSTAGE” என்ற வார்த்தை பொறிக்கப்பட்டிருந்தது. 1915-16 இல், “POST & RECEIPT” என்ற எழுத்துக்களுடன் கூடுதல் தபால்தலைகள் வெளியிடப்பட்டது.

– அருண்குமார் நரசிம்மன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *