நூல் அறிமுகம்: ஆயிஷா இரா.நடராசனின் *வன்முறையில்லா வகுப்பறை* – பூபாலன்புத்தகம் : வன்முறையில்லா வகுப்பறை
எழுத்தாளர் : ஆயிஷா இரா.நடராசன்
பக்கம் : 112
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/vanmurai-illa-vakupparai-10991/

ஆயிஷா இரா.நடராசன் அவர்கள் கல்வி முறையை குறித்தான பல்வேறு சிறுகதைகளும், புத்தகங்களும் எழுதிக் கொண்டிருப்பவர்.கல்வி முறை குறித்த விமர்சனங்களையும், பிற்போக்கு தனங்களையும் சுட்டிக்காட்டி கல்வி முறையில் மாற்றங்களையும் வளர்ச்சியையும் கொண்டுவர தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பவர். அவரின் ‘ஆயிஷா’ என்னும் சிறுகதை நான் வாசித்த போது கல்வி முறை குறித்தும் கல்வி நிலையங்கள் குறித்தும் என் பார்வை விரிந்தது. அந்த புத்தகத்தை இதுவரை யார் புத்தககங்கள் கேட்டாலும் நான் கொடுக்கும் புத்தகங்களில் அதுவும் இருக்கும். அதைத்தொடர்ந்து புத்தகநிலையத்துக்கு செல்லும்போதெல்லாம் ஆயிஷா இரா நடராசனின் புத்தகங்களை சேகரிப்பதுண்டு அப்படி சேகரித்த புத்தகம்தான் “வன்முறையில்லா வகுப்பறை”எனும் இப்புத்தகம்.

புத்தகத்தின் தலைப்பே பல கேள்விகளை தூண்டுவதாக இருந்தது அதென்ன வன்முறையில்லா வகுப்பறை ,வகுப்பறையில் என்ன வன்முறை நடக்கிறது, எதை வன்முறை என்று குறிப்பிடுகிறார் என பல கேள்விகளை எழுப்பியது. வன்முறை என்பது பெரிய ஆயுத தாக்குதலோ ,குண்டுவெடிப்போ, சண்டைகளோ மட்டுமில்லை மனிதனின் உரிமைகள் பறிக்கப்படும் அவன் மீதான ஆதிக்கமும் அவனை ஒடுக்குமுறைக்குள்ளாக்குவதும் மிகப்பெரிய வன்முறை. புத்தகத்தின் படி மாணவர்களின் அடிப்படை உரிமையாகக் கேள்வி உரிமைகள் போன்ற பல்வேறு உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது ஒடுக்கப்பட்டுள்ளது என்பதை இப்புத்தகம் உணர வைக்கிறது.

அதேநேரம் கல்வி நிலையங்களிலிருக்கும் சாதிரீதியான வர்க்க ரீதியான மத ரீதியான ஒடுக்குமுறைகளையும் கொஞ்சம் விவாதித்திருக்கலாம் . சரி இந்தப் புத்தகம் யாருக்கானது என்றால் முதலில் ஆசிரியர்களுக்கானது, ஆசிரியர் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் மணவர்களும் நிச்சயம் வாசிக்க வேண்டியது. இதில் விவாதிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் நிச்சயம் அனைவருக்குமானது அனைவரும் தன் குழந்தைகளையும் மாணவர்களின் புரிந்து கொள்வதற்கு இப்புத்தகத்தை படிக்க வேண்டியது அவசியம். வாசித்தபின் நிச்சயம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உள்ள இடைவெளி குறையும்.குருகுலங்கள் வெவ்வேறு வடிவங்களில் கல்வியினுள் கொண்டுவர முயற்சி செய்யும் காலமிது.புராணங்கள் வரலாறாக மாற்றப்படும் காலமிது. சமூகத்தில் சனநாயகம் கொல்லப்படும் காலமிது. இப்படிப்பட்ட காலத்தில் வகுப்பறையில் கொல்லப்படும் சனநாயகத்தையும் கவனிப்பது அவசியமானது.

– பூபாலன்