நூல் அறிமுகம்: வண்ணநிலவனின் ” *கடல்புரத்தில்* ” –  பா.அசோக்குமார்

நூல் அறிமுகம்: வண்ணநிலவனின் ” *கடல்புரத்தில்* ” –  பா.அசோக்குமார்



“கடல்புரத்தில்”
வண்ணநிலவன்
காலச்சுவடு பதிப்பகம்
₹.140
பக்கங்கள் :128
1977 இல் முதல் பதிப்பாக வெளிவந்த நாவல். வண்ணநிலவன் அவர்களால் முதலாவதாக எழுதப்பட்டு இரண்டாவதாக புத்தகமாக வெளிவந்த நாவல்.
வண்ணநிலவன் அவர்களின் சிறுகதைகளையே படித்திருந்த நிலையில் ” காலம்” நாவலைப் படித்ததில் இருந்து பித்துப் பிடித்து அலைந்ததாகவே நினைக்கிறேன்.
நாம் ஏதேனும் ஒன்றைப் பற்றி சிந்திக்கும் வேளையில் அவை பற்றிய தகவல்களே நம்மைச் சுற்றி வட்டமிடுவதும் நடக்கும். அங்ஙனமே எழுத்தாளர் அ.வெண்ணிலா அவர்களின் “வண்ணநிலவன் நாவல்கள் ” குறித்த கனலி இணைய இதழ் பதிவுகளும் எம்மை கொள்ளை கொண்டன என்பதே உண்மை.
நாற்பது வருடங்களாக சிலாகித்து பேசப்பட்டு வரும் நாவல் குறித்து புதியதாக சொல்வதற்கு ஏதுமில்லை என்ற போதிலும் என்னுள் உண்டான தாக்கத்தை பிறருக்கு கடத்து முனையும் சிறுமுயற்சியே இது.
சமீபத்தில் மதுரையில் ஒரு புத்தகக் கடையில் நுழைந்து புத்தகங்களைத் தேடிக் கொண்டிருந்த போது… நீண்ட நேரமாக தேடுவதைக் கவனித்த கடைக்காரர் , ” என்ன புத்தகம் வேண்டும் ? ” என்று வினவ, ” வண்ணநிலவன் புத்தகங்கள் ” என்று கூறியதற்கு, ” வண்ணநிலவனா??? இருக்காது… இல்லைனு நினைக்கிறேன்” என்று கூறவும் ஏமாற்றமே மிஞ்சியது.
எனினும் எனது தேடலை விடாமல் துரத்தி இரண்டு பிரதிகளில் ஒன்றைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடிய தருணமே அலாதியானதே.
“கடல்புரத்தில்” நாவல் எழுதுவதற்கான சூழலை ” வண்ணநிலவன் அவர்களின் ‘பின் நகர்ந்த காலம்’ கட்டுரைத் தொகுப்பிலேயே படித்திருந்த காரணத்தால் கதைக்கரு தெரிந்ததாகவே உணர்ந்து வாசிக்க முனைந்தேன். ஆனால், அந்த கதைக்கருவை அவர் வெளிப்படுத்திய பாங்கைக் கண்டு பிரமித்து நிற்கிறேன்.
வல்லத்திற்கும் லாஞ்சுகளுக்குமான தொழில் போட்டியை மையமாகக் கொண்ட களத்தில் மனிதர்களின் குணாதியங்களைப் படம் பிடித்துக் காட்டிய பாங்கு பரவசமானதே..
பரம்பரை பரம்பரையாக வல்லம் ஓட்டும் குடும்பத்தைச் சேர்ந்த குரூஸ்மிக்கேலின் குடும்பத்தில் தொடங்கும் கதை கடல்கரை கிராமமான மணப்பாடு மக்களின் வாழ்வியலை மிக நெருக்கமாக காட்சிபடுத்தும் வண்ணம் விரிகிறது.
மீனவத் தொழிலை விட்டுவிட்டு ஆசிரியப் பணிக்கு உடன்குடி போன செபஸ்தியனுக்கும் வல்லத்தையே உயிராகப் பாவிக்கும் தந்தையான குரூஸூக்கும் இடையேயான தலைமுறை இடைவெளியை மிகத் தத்ரூபமாக எடுத்தியம்பியுள்ளார்.
குரூஸுன் மனைவியான மரியம்மை கதாபாத்திரம் மிக மிக கணமானது. எந்நேரமும் தூக்கத்தையே விரும்பிக் கொண்டு அதிகாலையில் கருவாட்டு மீன் எடுக்கக்கூட கடல்கரைக்குப் போகாமல் எந்நேரமும் மகள் பிலோமியைச் சாடிக் கொண்டே இருக்கும் மரியம்மையின் வாழ்வு புரியாத புதிரே…
மரியம்மைக்கும் வாத்திக்குமான உறவு காவியப் படைப்பாகவே தோன்றுகிறது. அதற்கான குரூஸின் நடவடிக்கைகளும் கவனிக்கத்தக்கது. உளவியல் சிக்கலை மிக நேர்த்தியாக கையாண்ட விதத்தில் வண்ணநிலவன் ஜொலிக்கிறார்.



பிரதான கதாபாத்திரமான ” பிலோமி” தனது வாழ்வெல்லாம் தத்தளித்தது போலவே நீண்ட காலம் நம் நினைவுகளிலும்  தத்தளித்துக் கொண்டே இருப்பாள் என்றே தோன்றுகிறது.
பிலோமி தான் சந்திக்கும் ஒவ்வொருவரிடம் அன்பையே காண்பது ஆனந்தத்தின் உச்சமென்றே கருதலாம். உயிருக்குயிராக காதலிக்கும் சாமிதாஸை இறுதிவரை துளியும் அன்பு குறையாமல் நேசிக்கும் மனப்பாங்கு பிரமிப்பே.
ஆனால், இதற்கெல்லாம் மூலக்காரணம் அவளது தோழியான ரஞ்சிக்கும் அண்ணன் செபஸ்தியனுக்குமான காதல் முறிவே என்றறிவது வியப்பென்றால் மரியம்மைக்கும் வாத்திக்குமான உள்ளார்ந்த அன்போ பேரின்ப பெருநிகழ்வாகும்.
மரியம்மையின் மறைவால் குடும்பம் அடையும் சிதிலம் ஒருபுறமென்றால் மரியம்மையின் மீது இருந்துள்ள அன்பின் வெளிப்பாடு பிரவாகமாக பாய்வது மறுபுறம் பெருவியப்புக்குரியதே.
கடல்கரையில் மீன் பிடிப்பவர்கள் படும்பாட்டை அவர்களின் அன்றாட வாழ்வியல் முறைகளின் மூலம் எடுத்தியம்பியுள்ளார். வல்லத்துக்கும் லாஞ்சுக்குமான போட்டியில் சக தோழர்களாக பழகியவர்கள் விரோதிகளாக மாறி கொலை செய்யும் வரை நீள்வது காலத்தின் பிழையே…
அன்பையும் பகையையும்  பணத்தின் ஆசையையும் நாகரிக வளர்ச்சியையும் பிசிறின்றி கட்டுக்கோப்பான முறையில் கட்டமைத்து கதையை நகர்த்தியுள்ளார் எழுத்தாளர்.
மீனவர்கள் பெறும் கடனுக்காக வழங்கப்படும் ‘ஈட்டி மீன்’ போன்ற தகவல்களும் இந்நாவலில் உள்ளன. கடன் வசூலிப்பவர்கள் கருணை கொண்டும் மிளிர்ந்தனர் என்பதை தரகனார் மூலமாக புலப்படுத்தியுள்ளார்.
ரஞ்சிக்கும் பிலோமிக்குமான அன்னியோன்யமான நட்பு மெய்சிலிர்க்க வைப்பதே. பிலோமிக்கும் சாமிதாஸுக்குமான காதலை உணர்ந்த நிலையில் பிலோமியைத் தேற்றுவதும் பிலோமிக்கும் வாத்திக்குமிடையே துளிர்க்கும் உறவை புரிந்து கொள்ளும் பாங்கிலும் ரஞ்சி நம்மை கவர்கிறாள். அவற்றையெல்லாம் மிஞ்சும் வண்ணம் உச்சபட்சமாக ரஞ்சிக்கும் அவளது கொழுந்தனுக்குமான புரிதல் உறவில் நம்மைக் கட்டி போட்டு மிரட்டுகிறாள் ரஞ்சி.
Image
பாலியல் வேட்கையை உளப்பூர்வமாக அணுகியவிதத்தில் எழுத்தாளர் மிளிர்கிறார். சற்றும் எவ்வித சமசரமுமின்றி மீன் பிடித்தலை குலத்தொழிலாகக் கொண்ட ஓர் இனத்தின் வாழ்வியல் நடைமுறையை பாலியல் சிக்கல்களை பட்டவர்த்தனமாக போட்டு உடைத்துள்ளார் எழுத்தாளர்.
பெரிய மாமியா கதாபாத்திரம் அதற்கு ஓர் சான்று. சதா எந்நேரமும் கையில் ஊசி, நூலுடன் துணி தைக்கும் முனையும் நிகழ்வின் மூலம் உளச்சிக்கலைப் பகுப்பாய்வு செய்ய எழுத்தாளர் முனைவதாகவே தோற்றம் உண்டாகிறது.
பவுலுபாட்டா கதாபாத்திரம்… ஊர்ப் பெரியவர் தோரணையில் அமைந்த இயல்பான பாத்திரப் படைப்பு.
ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு விதத்தில் நம்மை வசீகரித்தாலும் அவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து அன்பெனும் மையப்புள்ளியில் நிலைநிறுத்திய யுக்தியிலையே எழுத்தாளர் வெற்றி பெற்றவராகிறார்.
ஆண் பெண் காதலை அழகாக காட்சிப்படுத்தி ஆண் பெண் நட்புறவையும் மிக சாமர்த்தியமாக படம்பிடித்து காட்டியுள்ளார். ஒவ்வொருவரும் அன்பை பகிர, பரிமாற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் நாவலாகவே இதனைக் கருதலாம்.
காதலில் காமம் விளையாடுவதைக் காட்டியவர்  காமமின்றி ஆண் பெண் நட்புறவு தொடரும் என்பதை இயல்பாக காட்சிப்படுத்தியதிலேயே எழுத்தாளர் உன்னத நிலையை அடைகிறார். ஊர் சுமத்தும் பழிகளையும் சுட்டிக் காட்ட தவறவில்லை என்பதே மணிமகுடம். அதற்கான தீர்வையும் முன்வைப்பது கனக்கச்சிதம்.
” ஊர் எல்லாக் கதைகளையும் பரபரப்பாக ஒரு சமயம் பேசுகிறது. பின்னொரு காலத்தில் எல்லாவற்றையும் மறந்துவிடுகிறது. “
அன்பைப் பெற, அன்பை பகிர இப்பூலோகம் முழுவதும் உயிர்கள் காத்துக் கிடக்கின்றன என்பதைச் சொல்லாமல் சொல்லும் கதையே இது.
திருநெல்வேலி வட்டார வழக்கில் அமைந்திருந்த போதிலும் மனதிற்கு மிக மிக நெருக்கமாக முறையில் அமைந்த எழுத்து நடை (வசனங்கள்) கவர்ச்சியளித்து ஈர்ப்பதாகவே அமைந்துள்ளது.
பிலோமி என்ற கதாபாத்திரம் வாயிலாக வண்ணநிலவன் அவர்கள் கதையை நகர்த்திச் சென்றாலும் நாவலின் அடிநாதமாக ஒலிப்பது அன்பின் தத்துவமே.
“எல்லாவற்றையுமே மறந்து போனால் எவ்வளவு அற்புதம் மனசினுள் நிகழ்ந்துவிடுகிறது”
“ஒன்றையும் மறக்காமல் மறுபடியும் எழுவது எப்படி முடியும்?”
“வாழ்க்கை சந்தோஷமானதாக இல்லாவிட்டாலும் சந்தோஷமாக இருப்பதாக நம்பிவிட்டாள்”
“எவ்வளவு கொடுமையானதாக வாழ்க்கை வருத்தினாலும் இங்கே யாரும் சாகப் பிரியப்படவில்லை. அதற்கு இந்த ஸ்நேகங்களூம் ப்ரியங்களும்தான் காரணம்”
போன்ற பல வாக்கியங்கள் நம்மை கவர்கின்றன.
உவரி, மணப்பாடு, உடன்குடி, திருச்செந்தூர் போன்ற இடங்களில் வசிப்பது போன்ற நிலையே நாவலைப் படிக்கும் வரை இருக்கிறதென்பதே உண்மை.



இந்நாவல் முழுவதும் “கடல்கரை” என்ற வார்த்தையையே பயன்படுத்தியுள்ளார் எழுத்தாளர்.  அதுபோலவே பண்டிகை – பண்டியல் என்றே வருகிறது. தேர்ந்த மொழிநடையில் அமைந்த வாழ்வியல் பதிவு,  பாடமாகவும் அமைகிறது.
வெறும் 128 பக்கங்களில் சொல்லும் சங்கதிகளோ ஏராளம். கடத்தும் உணர்வுகளோ தாராளம். பெறும் அனுபவங்களோ அபாரம்.
நல்லதோர் நாவல். கண்ணீரின் வழியே அன்பை பூசிக்கும் யதார்த்தமான படைப்பு இது.
வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள்.
நன்றி.
“கடல்புரத்தில்”
வண்ணநிலவன்
காலச்சுவடு பதிப்பகம்
₹.140
பக்கங்கள் :128
 பா.அசோக்குமார்
 மயிலாடும்பாறை.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *