வரலாற்றில் ஐயம்பேட்டை நூலிலிருந்து…
என். செல்வராஜ், வரலாற்றில் ஐயம்பேட்டை என்ற நூலில் மண்ணின் பெருமைகளை சோழர் காலம், தஞ்சை நாயக்கர் காலம், தஞ்சை மராட்டியர் காலம் ஆகிய காலகட்டங்களில் தொடங்கிப் பல சான்றுகளின் அடிப்படையில் ஆவணப்படுத்தியுள்ளார்.
ஐயம்பேட்டையில் உள்ள 45 கோயில்களைப் பட்டியலிட்டுள்ளதோடு சில கோயில்கள், அங்கு நடைபெறும் விழாக்கள், சக்கரவாகேஸ்வரர் சப்தஸ்தானம், ஸ்ரீ கிருஷ்ணன் பஜனைக்கூடம் ஆகியவற்றைப் பற்றியும், சமூகத்தினர் என்ற வகையில் பட்டு சாலிய சமூகத்தினர், சௌராஷ்டிர சமூகத்தினர், குதினி நெசவுக்கலைஞர்கள் மற்றும் பிற சமூகத்தினரைப் பற்றியும் விவாதிக்கிறார்.
ஆற்காடு நவாப்-சாவடி நாயக்கர் மோதல், உடையார்பாளையம்-ஜமீன் சாவடி நாயக்கர் மோதல், அண்ணன்மார் சுவாமிகள்-ஐயம்பேட்டை தொடர்பு, ஐயம்பேட்டையில் சத்ரபதி சிவாஜியின் பட்டத்தரசி, ஆற்காடு நவாப்-மன்னர் பிரதாம சிம்மர் போரும் சமாதானமும் என்ற தலைப்புகளின் மூலமாக வாசகர்களை அக்காலகட்டத்திற்கே அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர்.
ஆச்சார்யன் பெரியநம்பிகள் திருவரசு, ஸ்ரீ சுகந்த தூப தீர்த்தார்ய ஸ்வாமிகள், ஸ்ரீ பதரா மன்னார் ஆர்ய பாகவத ஸ்வாமிகள், ஸ்ரீ வேங்கடஸுரி ஸ்வாமிகள், ஸ்ரீமத் வேங்கட ரமண பாகவதர், சத்குரு ஸ்ரீ தியாக பிரம்மம், பெங்களூர் நாகரத்தினம்மா, சூலமங்கலம் ஸ்ரீ வைத்தியநாத பாகவதர் ஆகியோரைப் பற்றிய பதிவுகள் மூலமாக பல அரிய செய்திகளைப் பகிர்கிறார்.
ஐயம்பேட்டை அரண்மனை, சோழர் காலப் புத்த செப்புத்திருமேனி, விஜயராகவ நாயக்கர் காலச்செப்பேடு, நில விற்பனைச் செப்பேட்டு ஆவணம் போன்ற வரலாற்றுச் சான்றுகளை ஆராய்வதுடன், உப்பு சத்தியாகிரகத்தில் ஐயம்பேட்டையின் பங்கினை நினைவுகூர்கிறார். இந்நூலிலிருந்து சில குறிப்பிடத்தக்கப் பகுதிகளைக் காண்போம்.
“…ஐயம்பேட்டை வரலாற்றுப் பின்னணியை நாம் சூலமங்கலத்தின் வாயிலாகத் தான் அறியவேண்டியுள்ளது. காவிரியின் கிளை நதியான குடமுருட்டி ஆற்றின் தென் கரை கிராமமான சூலமங்கலத்தின் வட பகுதி, குடமுருட்டி ஆற்றின் தென் கரையை ஒட்டியுள்ள பகுதிகள் ஆகியவை காலங்கள் தோறும் எவ்வாறு பெயர் மாற்றம் பெற்றன என்பதில்தான் ஐயம்பேட்டை வரலாறும் உள்ளடங்கியுள்ளது. ” (ப.32)
“……சூலமங்கலம் கிராமத்திலிருந்து பிரிக்கப்பட்ட பகுதி இராமச்சந்திரபுரம் ஆகப் புது அவதாரம் எடுத்து, வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளைக் கண்ட கிராமமாக மாறிப்போனது…இராமச்சந்திரபுரத்தில் சில காலம் வாசம் செய்த செவ்வப்ப நாயக்கர் குடும்பம், தஞ்சையில் அரண்மனை, கோட்டை கொத்தளங்கள், அகழி சீரமைப்புப்பணிகள் பூர்த்தி சான்றுகள் நமக்குக் கிடைக்கவில்லை.” (ப.37)
“செவ்வப்ப நாயக்கர் தன்னுடைய ராஜகுரு கோவிந்தய்யன் நினைவாக இவ்வூருக்குத் தென்மேற்கில் உள்ள குடியிருப்புப் பகுதிக்கு ஐயன்பேட்டை என்று பெயரிட்டார். இவ்வூர் வணிகப்பெருவழியில் இருந்ததால் ஐயன் என்பதோடு பேட்டை இணைக்கப்பட்டு ஐய(ன்)ம்பேட்டை ஆயிற்று.” (ப.49)
“…….ஐயம்பேட்டையின் வரலாறு ஸ்ரீ பிரசன்ன கோதண்டராமஸ்வாமி ஆலயத்தினை மையமாகக் கொண்டுதான் எழுதப்பட வேண்டும்….ஐயம்பேட்டை சிறு நகரிலுள்ள கோயில்களில் இவ்வாலயமே காலத்தால் முற்பட்டது. 500 ஆண்டுகள் பழமையான இவ்வாலயத்தின் பின்னணியில் இரண்டு அரச வம்சாவளியினர் வரலாறும் அடங்கியுள்ளது.” (ப.121)
“திருஞான சம்பந்தர் தேவாரப் பதிகம் பெற்ற திருச்சக்கரப்பள்ளி சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்றாக ஐயம்பேட்டை இல்லை. இருப்பினும் ஏழூர்ப் பல்லக்குத் திருவிழாவில் பங்கு வகிக்கும் சிவாலயம் ஐயம்பேட்டை ஆற்றங்கரைக்கோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு பர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரர் ஆலயம் ஆகும்.” (ப.140)
“ஐயம்பேட்டையின் அடையாளமாக இருந்த அரண்மனை, தர்பார் மண்டபம் பழமையின் அடையாளமாகவும் இருந்த குளம் ஆகியவை எல்லாம் சுவடழிந்துப் போய்விட்டன. பெயர் சொல்லிக்கொண்டு இருப்பது பள்ளிக்கூடம் உள்ள மண்டபத்தின் 25 சதவிகிதம் மட்டுமே. அதற்கு என்ன காலக்கெடு, யார் வைத்திருக்கிறார்கள் என்று யாருக்குத் தெரியும்?” (ப.227)
“ஆற்றங்கரை சந்தியா மண்டபத்திற்கு அருகில் ஒரு துளசி மாடத்தையும், அதில் இருந்த கல்வெட்டுப் பலகையையும் பல ஆண்டுகளுக்கு முன்னர் நூலாசிரியர் கண்டறிந்தார்….ஐயம்பேட்டைப் பகுதி கோயில்கள் எதிலும் பழமையான கல்வெட்டுகள் காணப்படவில்லை. பதினாறாம் நூற்றாண்டின் இக்கல்வெட்டே மிகப் பழமையான ஒரே ஒரு கல்வெட்டு என்ற பெருமையும் இதற்கு உண்டு.” (ப.251)
இந்நூல் ஐயம்பேட்டையைப் பற்றிய ஒரு வரலாற்றுக் களஞ்சியமாக உள்ளது. சில வரலாற்றுச் சான்றுகளைப் பாதுகாக்க எடுத்துக்கொண்ட முயற்சிகளை இளந்தலைமுறையினருக்கு உதாரணமாக அமையும் வகையில் நூலாசிரியர் முன்வைத்துள்ளார். பொதுமக்கள் மட்டுமின்றி ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் பெருந்துணையாக உள்ள இந்நூலைப் படைத்துள்ள அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
நூலின் விவரம்:
தலைப்பு : வரலாற்றில் ஐயம்பேட்டை (Varalaatril Ayyampettai)
ஆசிரியர் : என். செல்வராஜ் (அலைபேசி 94434 48159)
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
அலைபேசி +91-95000 45609
ஆண்டு : 2024
விலை : ரூ.325
நூல் அறிமுகம் எழுதியவர்:
முனைவர். பா.ஜம்புலிங்கம்
[Assistant Registrar (Retd), Tamil University]
19 S N M Rahman Nagar, East Gate
Thanjavur, Tamil Nadu 613 001, India
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
“வரலாற்றில் ஐயம்பேட்டை ” இந்த ஆய்வு நூலின் ஆரம்ப புள்ளி வைத்தவர் முனைவர். குடந்தை. ஜம்புலிங்கம் ஐயா அவர்கள்…. அவர் வைத்த புள்ளிகளை இணைத்து கோலம் போட்டுள்ளேன்…. ஒரு நல்ல உள்ளம் கொண்டவர் வழிகாட்டியாக அமைந்ததே ஒரு சிற்றூர் வரலாறு அச்சில் ஏறி, வாசகர்கள் கையை அலங்கரித்துக் கொண்டுள்ளது… இன்னூல், சத்குரு. தியாகராஜரின் இளமைகால நிகழ்வுகள் பற்றி புதிய தகவல்களை பதிவு செய்துள்ளது…. தஞ்சாவூர் நாயக்கர், மராட்டிய மன்னர் கால போர் நிகழ்ச்சிகளையும் வரலாற்று உலகிற்கு முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது…..
நீண்ட மதிப்புரையாகவும், அணிந்துரையாகவும், ஆய்வுரையாகவும் வழங்கியுள்ள சோழ நாட்டில் பௌத்தம் ஆய்வறிஞர் அவர்களுக்கு நன்றி…. நன்றி 🙏🏼🙏🏼🙏🏼