வரலாற்றை எழுதுதல் (Varalatarai Ezhuthuthal) -1: நாங்கள் காற்றைப் போல சுதந்திரமானவர்கள் - இரஜினி திலக் வரலாறு | பேரா. எ. பாவலன் | www.bookday.in

புதிய தொடர்:- வரலாற்றை எழுதுதல் -1: நாங்கள் காற்றைப் போல சுதந்திரமானவர்கள் – இரஜினி திலக் | பேரா. எ. பாவலன்

வரலாற்றை எழுதுதல் -1:

நாங்கள் காற்றைப் போல சுதந்திரமானவர்கள் – இரஜினி திலக்

– பேரா. எ. பாவலன்

பொதுவாக இந்திய சமூகத்தில் அதிகாரத்தில் மட்டுமல்ல ஆட்சியிலும் சாதி என்னும் பேய்ப்பிடித்து ஆட்டி வைக்கிறது. சமீபகாலமாக இந்தியா உலகில் பல்வேறு நாடுகளுடன் நட்புபாராட்டி வருகிறது. அண்டை நாடுகளைச் சகோதர மனப்பான்மையுடன் அணுகுவது வரவேற்கத்தக்கதது. ஆனால் சொந்த நாட்டில் வாழும் மக்களின் உரிமைகளை நிலைநாட்ட தவறிவிட்டதோ? என்று எண்ணத் தோன்றுகிறது. எங்கும் எப்பொழுதும் சாதியையும் மதத்தையும் காரணம் காட்டி விளிம்பு நிலை மக்களும் மதச்சிறுபான்மையினரும் தங்களுக்குச் சுதந்திரமில்லை என்பதை வெளிப்படையாக பேசத் தொடங்கியுள்ளனர். கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாக இந்த உணர்வு மேலோங்கியதைக் காணமுடியும். சொந்த நாட்டில் வாழும் மக்கள் அச்சத்துடன் வைத்திருப்பது தான் இன்றைய ஆளும் கட்சியின் சாதனை.

முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இந்தியா சுதந்திரமாகவும் மகிழ்ச்சியுடனும் வாழும் நாடுகளின் பட்டியலிலிருந்து பின்னோக்கிச் சென்றுகொண்டு இருக்கிறது. இதனால் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இந்தியா வருவோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்ததுள்ளதென்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். எதற்கெடுத்தாலும் சாதி மதம்…, சாதி மதம்… இதுபோன்றி அச்சம் நிறைந்த சூழலை இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் காண்பது அரிது. சாதிப் பெருமையையும் மதப்பெருமையும் பேசிப்பேசியே நாட்டை வழி நடத்துவதிலிருந்து வந்த நிலையே இதற்குக்காரணம். சாதியை வேரோடும் வேரடி மண்ணோடும் கலைந்து அப்புறப்படுத்துவதற்கு பதிலாக சாதியைக் கூர்மை படுத்தவே இன்றைய ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர்.

அதனால்தான் ஒரு கட்சியின் இளைஞர் அணி செயலாளராக இருந்த மருத்துவர் ஒருவர் சாதி ஓர் அழகான சொல். மனிதகுலம் இருக்கும் வரை சாதி இருக்கும். மனிதனுக்கு சாதி இல்லை என்றால் எப்படி?. அவர்களுடைய அடையாளமே சாதிதான். அதன் காரணமாகத்தான் சாதிவிட்டு சாதிதாண்டி திருமணம் செய்யும் காதலர்களை ஆணவப் படுகொலைச் செய்கிறார்கள். மனித உயிர்களைக் கொல்வதற்கு எப்படி மனம் வருகிறது?. யார் அவர்களுக்கு இந்த உரிமையைத்தந்தது. இதை ஆணவக்கொலை என்று சொல்லக்கூடாதாம். அதைக்குடிப்பெருமை கொலை என்றுதான் சொல்ல வேண்டுமாம். தமிழ் தேசியம் பேசும் தலைவர் ஒருவர் இப்படி பேசுகிறார். சாதிக் கொடுமையைக் கண்டு வெகுண்டு எழுந்த பெரியாரைப் பின்னுக்குத் தள்ளி அவர்கள் முன்னுக்கு வரதுடிக்கின்றனர். அதிலும் குறிப்பாக தந்தை பெரியாருக்கு எதிராக தலைவர் பிரபாகரனை நிறுத்துகின்றனர். இது எதைக்காட்டுகிறது. பெரியாரை எதிர்க்கும் சக்தி யாருடையது. அது எங்கிருந்து வந்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இன்னொருவர் தங்களைப் பட்டியல் சாதியிலிருந்து பிரிக்க வேண்டும் என்கிறார். அதுவரை தான்மட்டுமல்ல தன்னுடைய மகன், குடும்பம் உள்ளிட்ட அனைவரும் இட ஒதுக்கீட்டுப்பயனை முழுமையாக அனுபவித்து விட்டு தற்போது தேவேந்திர குலவேளாளர்களைப் பட்டியல் சாதியிலிருந்து நீக்கி மேல்சாதியில் சேர்க்கச் சொல்கிறார். மேலும் அவர் நேர்காணல் ஒன்றில் பட்டியல் சாதியைச் சாக்கடை என்னும் பொருளில் பேசியுள்ளார். அதுவரை டாக்டர் அம்பேத்கரை உயர்த்திப் பிடித்தவர் அவர். இன்று தன்தேவைக்காகவும் சுயநலத்திற்காகவும் டாக்டர் அம்பேத்கரை விமர்சிக்கவும் தொடங்கிவிட்டார். இவை எல்லாவற்றிற்கும் அவர் சார்ந்த அமைப்புதான் காரணம்.

இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் சாதியையும் மதத்தையும் கையில் எடுத்துக் கொண்டு அவர்களைப் பிரித்தாலும் சூழ்ச்சியை அதிகார வர்க்கத்திலுள்ள ஆட்சியாளர்கள் செயல்படுத்தி வருகின்றனர். சாதி எப்பொழுதும் அடையாளம் அல்ல. அது ஓர் அவமானச் சின்னம். அடையாளம் என்பது கல்வி அறிவும் சமூக சிந்தனையும்தான். டாக்டர் அம்பேத்கர் சாதியற்ற மனிதர்களாக உருவாக வேண்டும் என்று போராடினார். மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்றார் தந்தை பெரியார்.

ஜோதிராவ் புலே, நாராயணகுரு, ஐயன் காளி, டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் சாதிக்கெதிராகவும் மதத்திற்கு எதிராகவும் போராடி வந்துள்ளனர். அவர்கள் முன்னெடுத்த சமூக கருத்துக்களையும் கொள்கைகளையும் அடி ஒட்டி சென்ற சீர்திருத்தவாதிகளில் இரஜினி திலக் குறிப்பிடத்தக்கவர். அவர் சார்ந்த அரசியல் கருத்தையும் சமூக கண்ணோட்டத்தையும் பின்வருமாறு காணலாம்.

இரஜினி திலக் கவிஞர்; எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர்; பெண்கள் கல்விக்கும் அவர்கள் முன்னேற்றத்திற்கும் பங்காற்றியவர்; முதல் தலித் பெண்ணியச் சிந்தனையாளர்; டாக்டர் அம்பேத்கரின் சாதி ஒழிப்பையும் பெண் விடுதலையையும் கூர்மைப்படுத்தியவர்; அவர் ஓர் இந்தி மொழி எழுத்தாளர்; ஒரே நேரத்தில் சாதி ஆதிக்கத்தாலும் சொந்த சாதி ஆண்களாலும் சுரண்டப்படுவதைத் தோலுரித்து காட்டி தலித் பெண்கள் சந்திக்கும் இரட்டை ஒடுக்கு முறையை வெளிக்கொணந்தவர், இப்படி காலம் தோறும் சமூக சிக்கலுக்கு விடை காணும் பொருட்டு 1958க்கும் 2018க்கும் இடைப்பட்டக் காலங்களில் வாழ்ந்து மறைந்த ஓர் அற்புதமான களப்போராளி தான் இரஜினி திலக்.

இரஜினி திலக் தனக்கு முன்பாக போராடிய போராளிகளையும் சமூக சிந்தனையாளர்களையும் வெகுஜன மக்களிடம் கொண்டு சென்றவர். டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய தலித் பேந்தர்ஸ் (Dalit Panthers) கொள்கையால் ஈர்க்கப்பட்டு டெல்லியில் அதன் கிளையைத் தொடங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரணாக செயல்பட்டவர். சாதி இழிவிலிருந்து வெளிவந்து மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால் இந்து மதத்தில் இருந்து வெளியேறி பௌத்தம்தழுவ வேண்டுமென்றார் டாக்டர் அம்பேத்கர். அதனால் தான்மட்டுமல்லாமல் தன் குடும்பத்துடன் பௌத்தத்தை ஏற்றுகொண்டு தன்னை ஒரு தீவிர அம்பேத்கர் செயல்பாட்டாளராகவும் பௌத்தராகவும் வரித்துக்கொண்டார்.

இரஜினி திலக் தன் வாழ்நாளை அர்த்தமுடையதாக்கும் முயற்சியிலும் பெண்களின் விடுதலைக்காகவும் பல அமைப்புகளைக் கட்டி எழுப்பினார். அதன் அடிப்படையில் தலித் ஸ்திரி சக்தி மற்றும் தலித் லேக் சங்கம் போன்ற அமைப்புகளை நிறுவி பங்காற்றியதைக் குறிப்பிடமுடியும். மேலும் தலித் உரிமைகளைப் பற்றிப்பேசும் அமைப்புகளின் போக்கைக் கடுமையாக விமர்சித்தவர். பெண்கள் உரிமைகளைத் தலித் அமைப்புகளே ஏற்க மறுத்தபோது, அவர்கள் ஒரே நேரத்தில் ஆதிக்க சாதியினரிடமும் சொந்தசாதி ஆண்களிடமும் விடுதலை அடைய வேண்டியுள்ளது. சில நேரங்களில் தலித் அமைப்புகள் சொந்த மக்களின் பெண் விடுதலையைப் பேசவிரும்ப மறுக்கிறது. அவர்களின் விடுதலைக்காகப் போராட வெறுக்கிறது, ஒரே நேரத்தில் இரண்டு விதமான மக்களிடம் இருந்தும் விடுதலைக்காகப் போராடிய இரஜினி திலக் அரசியல் களத்தில் மட்டுமல்லாது இலக்கிய உலகிலும் தனக்கான ஓர் இடத்தைத் தக்கவைத்து கொண்டவர்.

இலக்கியத்திலிருந்து அரசியலை மிக கவனமாக கட்டியமைத்தவர். இலக்கியம் இல்லாமல் அரசியல் இல்லை. அரசியல் இல்லாமல் இலக்கியம் இல்லை என்ற எண்ணம் கொண்டவராக அவரை அறிய முடியும். இதற்காக அவர் பல்வேறு அமைப்புகளை உருவாக்கியுள்ளார். அவற்றுள் முன்னர் குறிப்பிட்டதைப் போன்று தலித் லேக் சங்கம் முக்கியமானது. இதில் தலித் எழுத்தாளர்களை ஒன்றிணைத்து தலித் இலக்கியங்களை எல்லாம் இந்தி மொழியில் மொழிபெயர்ப்புச் செய்து அதனை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தப் பெருமைக்குரியவர். தலித் இலக்கியத்தைப் பற்றி அவரே பின்வருமாறு விளக்குகிறார். தலித் இலக்கியம் என்பது வெறும் கதைகளோ, கவிதைகளோ மட்டுமல்ல, அது சமூக புரட்சிக்கான கருவி என்பதை நிலைநாட்டப்பட வேண்டும். குறிப்பாக தலித் இலக்கியத்தில் வாழ்க்கையை இலக்கியமாகவும் இலக்கியமே வாழ்க்கையாகவும் மாறுகின்ற தன்மை காணப்படுகிறது என்கிறார்.

இரஜினி திலக் தலித் பெண் எழுத்தாளர்களில் முக்கியமான இடத்தைப் பெற்றவராகத் திகழ்கிறார். அவர் தனது எழுத்துக்களில் தலித் பெண்ணின் வாழ்க்கை அனுபவங்களைச் சமூக அவலங்களை உளவியல் போராட்டங்களை மற்றும் விடுதலைக்கானப் போராட்டங்களை நேரடியான மொழியில் பதிவுசெய்துள்ளார். அவரது எழுத்துக்கள் தனிப்பட்ட அனுபவங்களாக தோன்றினாலும் அவை ஒரு முழு சமூகத்தின் கூட்டு வரலாற்றுச் சாட்சியாக மாறுகின்றன. அவர் சிறந்த இலக்கியவாதி என்பதற்கும் மிகச்சிறந்த கவிஞர் என்பதற்கும் நாங்கள் மௌனம் காக்க மாட்டோம் எனும் ஒற்றக் கவிதை சாட்சியாக திகழ்வது காணமுடிகிறது. அது இந்தியில் (Hum Khamosh Nahi Rahege) எனும் கவிதைப் பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட தலித் பெண்களின் மௌனத்தை உடைத்து அவர்களின் குரலை உலகிற்கு அறிவிக்கும் காட்சி,

நாங்கள் மௌனம் காக்க மாட்டோம்

பல நூற்றாண்டுகளாக நீங்கள் எங்கள் நாவுகளைத்
தையல் போட்டீர்கள் எங்கள் குரல் வளையை நெரித்து
அந்த மௌனத்தை அடக்கம் என்று பெயரிட்டீர்கள்!
ஆனால் கேளுங்கள்… இப்போது அந்த மௌனம்
உடையத் தொடங்கிவிட்டது.
நீங்கள் கட்டி எழுப்பிய சாதியச் சுவர்கள்
இனி எங்களைத் தடுத்து நிறுத்த முடியாது.
நீங்கள் உருவாக்கிய அந்தச் சட்டம் (மனுஷ்மிருதி)
இனி எங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்க முடியாது.
நாங்கள் இப்போது எழுதுகிறோம்.
எங்கள் கைகளில் பேனாக்கள் முளைத்திருக்கின்றன.
எங்கள் ஒவ்வொரு சொல்லும்
உங்களின் அநீதியான சிம்மாசனத்தை உலுக்கும்.
நாங்கள் வெறும் தொழிலாளர்கள் மட்டுமல்ல
இந்த தேசத்தின் உணர்வும் நாங்கள் தான்!
சாவித்திரிபாய் புலேவின் மக்கள் நாங்கள்!
அம்பேத்கரின் அறிவாயுதத்தை ஏந்தியவர்கள் நாங்கள்
இனி நாங்கள் குனிய மாட்டோம்
இனி நாங்கள் பின்வாங்க மாட்டோம்
நாங்கள் காற்றைப் போல சுதந்திரமானவர்கள்.

எனும் கவிதை காலம் காலமாக பெண்கள் மற்றும் தலித்துகள் தங்கள் உரிமைகளைப் பேசமுடியாமல் ஒடுக்கப்பட்டவர்களைத் தட்டி எழுப்பி, அதிகாரத்தை எதிர்த்தல் ஆதிக்க சக்திகளின் சிம்மாசனத்தை உலுக்கும் வலிமை எழுத்துக்கு (பேனாவுக்கு) உண்டென்பதை வலியுறுத்துகிறார். மேற்சுட்டிய அந்தக்கவிதை தலித் இலக்கிய உலகில் ஒரு போராட்டப் பாடலாகவும் தலித் மக்களை ஒன்றிணைக்கும் பாடலாகவும் பார்க்கப்படுகிறது. மேடைகளில் உரையாடத் தொடங்குவதற்கு முன்பாகவும் அல்லது போராட்டங்களின் போதும் இன்றும் வடஇந்தியாவில் இந்தக் கவிதை ஓங்கி ஒலிப்பதைப் பார்க்க முடிகிறது. தமிழ் நாட்டிலும் பல தலித் அமைப்புகள் தலித் சுப்பையா எழுதி மெட்டமைத்துப் பாடிய வெல்லமுடியாதவர் அம்பேத்கர் அந்த வேங்கையைப்போல் போராடியவர் வேறு யார்? என்ற பாடல் பட்டித்தொட்டி எங்கும் பரவி மக்களை உணர்ச்சி பெருக்கெடுக்கவும் சிந்திக்கத் தூண்டும் வகையில் அது அமைந்ததையும் இங்கு ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

இரஜினி திலக் தலித் மற்றும் பெண் உரிமை உக்காகப் பல அமைப்புகளை உருவாக்கினார். அதன் பட்டியல் பின்வருமாறு.

1. தலித் லேக் சங்கம் – Dalit Lakhak Sangam (DLS)
2. தலித் இஸ்திரி சங்கம் – Dalit Stree Shakti (DSS)
3. கேடம் – Centre for alternative dalit media (CADAM)
4. தலித் ஸ்திரி முக்தி – Dalit Stree Mukti
5. தலித் மற்றும் பழங்குடியின அமைப்புகளின் ஒரு தேசியக் கூட்டமைப்பு
NACDOR – National Confederation of Dalit and Adivasi Organisation
6.சாதிக்கு எதிரான கூட்டமைப்பு -Alliance Against Caste
உள்ளிட்ட அமைப்புகளை உண்டாக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணையாக நின்று போராடியவர்.

இரஜினி திலக் நூல்கள்பல எழுதியது போலவே, மொழிபெயர்ப்பு செய்துள்ளார். அவர் டெல்லியில் இருந்தாலும் அவருக்கு எப்பொழுதும் மகாராஷ்டிரா மீதும் மராத்தி மொழி மீதும் அளவு கடந்த காதலும் மரியாதையும் இருந்துள்ளது. டாக்டர் அம்பேத்கர், மகாத்மா ஜோதிராவ் புலே, சாவித்திரிப்பாய் புலே போன்ற புரட்சிகர சீர்திருத்தவாதிகளின் எழுத்துக்களைக் கூறமுடியும். அதன் நீட்சியாக சாவித்திரிபாய் குழுவில் வாழ்க்கை வரலாற்றையும் அவரது படைப்புகளையும் மராத்தி மொழியிலிருந்து இந்திக்கு மொழிபெயர்ப்பு செய்ததில் அவருக்கு பெரும் பங்கு உண்டு.

ஹாவா சி ஆசாத் – (Hawa Si Azad) , அப்னி ஜமீன் அப்னா ஆஸ்மான் (Apin Zameen Apna Aasaman), பாரத் கி நெகிழி பிஹிலி மேக்லி பேக் பகலில் (Bharat ki Pehli Shikhika) ஆகியப் படைப்புகள் இரஜினி திலக்கின் முக்கியமானவை. முதலாவது அவருடைய கவிதை நூல். இரண்டாவது அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல். மூன்றாவது சாவித்திரிபாய் பற்றிய வரலாற்று.

எழுதுவதற்கு தூண்டிய காரணம்

கல்வி மறுப்பு, சமூகப் புறக்கணிப்பு குடும்பத்திற்குள் நிலவும் ஆணாதிக்கம் போன்றவற்றால் சாதி அடிப்படையிலான பாகுபாடு பாலின அடிப்படைலான கட்டுப்பாடுகள், உழைப்பு சுரண்டல், உடல் மற்றும் உளவியல் வன்முறை இது போன்ற காரணம்தான் அவரை எழுதவும் போராட்டக் களத்திற்கு வருவதற்கும் தூண்டியது.

1972 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் கட்சிலோலி மாவட்டத்தில் மதுரா என்ற இளம்பழங்குடியின பெண்ணை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு இரண்டு காவலர்கள் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். இது நீதிமன்றம் சென்றது. உயர்நீதிமன்றம் அந்த காவலர்களைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. மேல் முறையிட்டுக்கா உச்ச நீதிமன்றம் (1979) சென்ற பொழுது அந்தக் காவலர்கள் குற்றமற்றவர்கள் என்று சொல்லி தீர்ப்பு வழங்கப்பட்டது. (நீதிபதிகள் வழங்கும் தீர்ப்பை விமர்சிக்கக் கூடாது என்பது விதி. ஆனாலும் தீர்ப்பு வழங்கப்படுவதில்லை மாறாக வாங்கப்படுகிறது. சமீப காலமாக உயர்நீதிமன்றம்/ உச்ச நீதிமன்ற வழங்கும் தீர்ப்புகள் நினைவில் கொள்க).

மதுரா பாலியல் (1972) வன்கொடுமையின்போது இரஜினி திலக் டெல்லியில் பெரும்போராட்டங்களை ஒருங்கிணைத்தார். இதுவே அவரை ஒரு தீவிர பெண்ணிய செயல்பாட்டாளராக உருவெடுக்க காரணமாக அமைந்தது.

டெல்லியில் ஐடிஐ (ITI) கல்வி நிறுவனத்தில் படிக்கும் பொழுது அங்கு மாணவிகளுக்கு இழைக்கப்பட்ட பாலின பாகுபாட்டிற்கு எதிராக போராடிய பிறகு தொழிற்சங்கம் உருவாவதற்கு காரணமாக அமைந்தது. தலித் பெண் உரிமைக்கான போராட்டம் (Dalit Feminism) தலித் பெண்கள் சாதியால் ஒடுக்கப்படுவது ஒருபுறம் இருக்க தங்கள் சொந்த சாதியில் ஆண்களாலேயே பாலின ரீதியாகவும் ஒடுக்கப்படுவதை சுட்டிக்காட்டினார். தலித் பெண்களுக்கான அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் பெண்ணியம் பேசும் மேல்தட்டு பெண்கள் தலித் பெண்களின் துயரத்தைப் புரிந்து கொள்வதில்லை என்பதை அவர் தனது கவிதைகளின் சாடியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் வீட்டு பணியாளர்களுக்கு டெல்லியில் இருந்த துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா வீட்டு பணியாளர்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தார். அவர்களுக்கு நியாயமான ஊதியம் மற்றும் பணிப்பாதுகாப்பு கிடைக்க பல போராட்டங்களை முன்னெடுத்தார்.

1980களில் சுமார் 4000 அங்கன்வாடி பணியாளர்களின் ஊதிய உயர்வு, பணி வரன்முறைக்காக தேசிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்தவர். தலித் இயக்கங்கள் ஆண்களை மட்டுமே முன்னிலைப்படுத்தியபோது பெண்களுக்கான இடம் எங்கே? கேள்வியை எழுப்பி தலித் ஆண்களின் ஆதிக்கத்தையும் மேல்தட்டு பெண்களின் சாதிய மனோபாவத்தையும் ஒரே நேரத்தில் எதிர்த்தார். இவை எல்லாவற்றையும் மனதில் கொண்டு 1996 முதல் தலித் பெண் எழுத்தாளர் மாநாட்டை நடத்தினார். தான் தொடங்கிய பெண்கள் அமைப்பு விடுதலைக்கான வழி போன்ற அனைத்தும் இந்த சமூகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அதை அந்த சமூகத்திற்கு திருப்பி அளிப்பது தான் ஜனநாயகத்தின் மாண்பு என்பதால் சாவித்திரிபாய் புலேவின் பிறந்த தினமான ஜனவரி மூன்றாம் தேதியை இந்திய பெண்கள் தினமாக அறிவிக்க வேண்டி போராடி அதில் வெற்றியும் கண்டவர். சுருக்கமாகச் சொன்னால் இரஜினி திலக்கின் போராட்டம் என்பது ஒரு பன்முகப் போராட்டம். அவர் சாதி, வர்க்கம் மற்றும் பாலினம் ஆகிய மூன்று தலங்களிலும் சமரசம் இன்றி போராடி ஒரு மாபெரும் வீராங்கனை.

அரசியல் பார்வை

இரஜினி திலக் ஒருபோதும் தேர்தலில் போட்டியிடுவதில் ஆர்வம் காட்டவில்லை. என்றாலும் கொள்கை ரீதியாக அரசியல் மாற்றத்திற்காக பாடுபட்டவர். சாதிக்கு எதிரான கூட்டமைப்பு (Alliance against caste) போன்ற தலங்களில் தீவிரமாக செயல்பட்டார். அவர் டெல்லியை மையமாகக் கொண்டு ஆற்றிய பணிகள் வட இந்திய தலித் அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியது. சாதி மறுப்புத் திருமணங்கள் செய்து கொண்ட தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதிலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி பெற்று தருவதிலும் முக்கிய பங்காற்றியதை அரசியல் செயல்பாடுகளில் ஒன்றாக காண முடியும்.

தலித் மக்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளையும் கொடுமைகளையும் வெகுஜன ஊடகங்களில் அவர்களின் உரிமைக்காக போராட முன்வரவில்லை என்பதைவிட அந்தச் செய்திகளை பதிவு செய்ய விரும்புவதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அதனால் தலித் மக்களின் பிரச்சினைகளை கவனம் பெறும் வகையிலும் அவர்களை அரசியல் படுத்தும் நோக்கத்திலும் கேடம் (Cadam – Centre for alternative Dalit media) என்ற மாற்று ஊடகத்தை தொடங்கினார். இதன் மூலம் தலித் வரலாற்று தலைவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்களை சிறு புத்தகங்களாக வெளியிட்டு மக்களிடம் கொண்டு போய் சேர்த்தார்.

துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக அவர் போராடிய போது அதிகார வர்க்கத்தினராலும் உள்ளூர் அரசியல்வாதிகளாலும் பலமுறை விரட்டப்பட்டார். ஆனால் அவர் எந்த மிரட்டலுக்கும் அடிபடையாமல் தன்னுடைய போர் குணத்தால் தொடர்ந்து முன்னோக்கிச் செல்லும் பொழுது வட இந்தியாவில் சில முக்கிய மாற்றங்கள் நடந்தன. அதனால் தலித் பெண்களின் வாக்கு வங்கி மற்றும் அவர்களின் அரசியல் முக்கியத்துவத்தை அரசியல் கட்சிகள் உணரத் தொடங்கின.

இரஜினி திலக்கின் எழுத்துக்களில் பெண் உடல் அரசியல் வெளியாக மாறியுள்ளது. அதனடிப்படையில் வெட்க பொருள்களாக அல்ல அழகியல் பொருளாக அல்ல அரசியல் வழியாக அவருடைய எழுத்துக்கள் மாறியதை உணரமுடிகிறது. இன்றும் பல படைப்பாளிகள் சமூக சிக்கல்களை பதிவு செய்து விட்டாலே போதும், அவர்கள் தங்களைத் தாங்களே மேன்மை பொருந்திய திருவாளர்களாக நினைத்துக் கொண்டு வலம் வருவதைக் காணமுடியும். ஆனால் இரஜினி திலக் எழுதியதைப் போன்று வாழ்ந்து காட்டியவர். இலக்கியத்தை வாசிப்போடு நிறுத்திக் கொள்ளாமல் அதை களம் அமைத்துப் போராடியதை இரஜினி திலக் வாழ்க்கை உணர்த்தும் பாடம்.

📚 எழுதியவர்:

பேரா. எ. பாவலன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *