வரலாற்றுப் புதையல் – 10
சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும் பல்வேறு பத்திரிகைகளில், அரசு அறிக்கைகளில் வந்த படைப்புகளையும் செய்திகளையும் அச்சுப் பிசகாது அறிந்திடும் முயற்சியே இது. அன்றைய உரைநடையை, இலக்கியப் போக்கினை, வரலாற்றை, செயல்முறையை அறிந்திடும் முயற்சிகளில் ஒன்றாகக்கூட இதைக் கொள்ள முடியும்.
தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஆனந்தரங்கப் பிள்ளையை அறிமுகம் செய்வதென்பது கொல்லன் தெருவில் ஊசி விற்ற கதையாகவேதான் அமையும். இருப்பினும் சென்னப்பட்டணம் பற்றிய முக்கியத்துவம் வாய்ந்த அவரது பதிவுகளை வாசிக்கையில் அவரது விரிவான அரசியல் பார்வையை மட்டுமின்றி வரலாற்றை கூறும் பாங்கினையும் அறிய முடிகிறது. சென்னையிலிருந்து செயல்பட்டு வந்த இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டமில் ஸ்டடீஸின், ஜர்னல் ஆஃப் டமில் ஸ்டடீஸ் ஜூன் – டிசம்பர் 2000 இதழில் ஆய்வாளர் இர. ஆலாலசுந்தரம் அவர்கள் எழுதிய கட்டுரை இது. சென்னப்பட்டண வரலாற்றின் மற்றொரு பக்கத்தை ஆனந்த ரங்கப் பிள்ளை பதிவு செய்ததை ஆலாலசுந்தரம் சுவைபட விவரணம் செய்கிறார். சென்னப்பட்டணம் பிரெஞ்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்ட நிலையை இக்கட்டுரையின் வாயிலாக முழுமையாகவே நாம் அறிகிறோம்.
ஆனந்தரங்கரின் பார்வையில் சென்னையும், முதலாம் கர்னாடகப் போரும்
இர. ஆலாலசுந்தரம்
ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பு தமிழ் நூல்களில் ஈடுஇணை இல்லாத ஒரு வரலாற்றுக் களஞ்சியம். தமிழிலேயே மிகப் பெரியதான நூல் இதுவே என்றும் நாம் கூறலாம். இந்நூல் தரும் வரலாற்றுச் செய்திகளும், தமிழர்தம் 18ஆம் நூற்றாண்டும் சமுதாய வாழ்வு பற்றிய செய்திகளும் ஏராளம். பிள்ளையவர்களின் இவ்வரிய நூலிலே தமிழரின் இன்றைய தலைநகரமாகவும் தமிழகத்தின் பெருநகரமாகவும் இயங்கும் சென்னையைப் பிரெஞ்சுக்காரர் பிடித்து ஆட்சி செய்தது பற்றியுள்ள செய்திகளை நாம் இக்கட்டுரையில் காணலாம்.
பிள்ளையின் நாட்குறிப்பு
1736 செம்டம்பர் 9 ஆம் நாள் தொடங்கி 1761 சனவரி 12இல் முடிவடையும் இந்நாளேட்டினில் – ‘தினசரி‘ என்றே பிள்ளை இதனைக் குறிப்பார் – சென்னப்பட்டணம் என்றே எல்லாவிடங்களிலும் இவ்வூரின் பெயரினை முழுமையாகவே ஆசிரியர் குறிக்கிறார். இப்பட்டணம் 1639இல் ஆங்கிலேயரால் நிறுவப்பட்டது என்று அவரே எழுதுகிறார். இவ்வூரின் வளர்ச்சியும் வரலாறும் பற்றி ஆங்கிலேயர்கள் தமது கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு சில நூல்கள் எழுதியுள்ளனர்.(1) இந்நூல்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஆவணங்களைக் கொண்டு பிற்காலத்தில் தொகுக்கப்பட்டவை. ஆனால் நம் பிள்ளையின் நாளேடோ அந்நகரிலேயே 1709இல் பிறந்தவரும் ஆரம்பக்கல்வி பயின்றவரும் சமகாலத்தவருமான ஒருவரால் வரையப்பற்றதொன்று. அப்பட்டணத்தின் வரலாறு என்று இல்லாமல், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளை நடைபெற்ற அதே காலத்தில் வரைந்து வைத்துள்ளமை காரணமாக இந்நூல் ஆதாரபூர்வமான அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகத் திகழ்கின்றது. மேலும் தமிழகத்தின், தென்னிந்தியாவின் தலைவிதியையே மாற்றி அந்நியருக்கு அடிமைப்படுத்திய கர்னாடகப் போர்கள் நடைபெற்ற காலகட்டத்தில் எழுதப்பட்ட இப்பெருநூலின் இன்றியமையா முக்கியத்துவத்தினை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.(2)
ஆனந்தரங்கர் ஓரிடத்திலும் ‘மதராஸ் பட்டணம்‘ என்ற பெயரினைப் பயன்படுத்தாதது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயே ஆளுநர்களும் தமது பார்சி மொழி முத்திரையில் ‘சென்னப் பட்டணம் துறையின் கவர்னர்‘ என்றே தம்மைக் குறிப்பிட்டதையும் பிள்ளை தெரிவிக்கிறார். (9:39) ( நாட்குறிப்பின் ஆங்கிலத் தொகுதி 9 என்பதையும் அதன் பக்கம் 30 என்பதையும் இது குறிக்கும்.) சென்னையை அடுத்த பிரம்பூரில் 1709 மார்ச் திங்களில் பிள்ளை பிறந்தார் என்றாலும் அவரது தந்தை திருவேங்கடம் பிள்ளை சென்னையில் வாணிபம் செய்து வந்த காரணத்தினால் விரைவிலேயே சென்னைக்குக் குடிபெயர்ந்தனர் போலும். ஆனந்தரங்கரின் பிள்ளைப் பருவத்தில் அக்குடும்பம் சென்னப் பட்டணத்தில் நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவில் வாழ்ந்தது என்றும், அத்தெருவினை யடுத்த சந்துகளில் பிற பிள்ளைகளோடு சேர்ந்து தான் விளையாடியதையும், எம்பார் என்ற ஆசிரியரிடம் தானும் தன் தம்பியும் கல்வி பயின்றதையும் அவரே பின்னர் நினைவு கூருகிறார். (த6:228) (இங்கு தமிழ் தொகுதி 6 சுட்டப்படுகிறது) அவ்வீதியில் திருவேங்கடம் பிள்ளைக்கும் அவரது சகோதரருக்கும் மூன்று மாடி வீடுகள் இருந்தன. (த6:225) நாளேட்டின் தகவலைக் கொண்டு, ஆனந்த ரங்கருக்கு வயது 12-13 இருக்கையில், 1721-22இல், அவரது குடும்பம் புதுச்சேரிப் பட்டணத்துக்குக் குடிபெயர்ந்தது தெரிகிறது. (5:361) பின்னர் நாற்பதாண்டுகாலம், தனது மரணம் வரை பிள்ளை புதுச்சேரியிலேயே வாழ்ந்தார். அங்கு பிரெஞ்சு கம்பெனியின் நிழலில் அவது குடும்பம் வாழ்ந்தது எனினும், சென்னப் பட்டணத்தின் மீது அவர் கொண்டிருந்த மதிப்பு இறுதி வரை மங்கவேயில்லை என்பதைனை அவரது பெருநூலின் பல பக்கங்கள் நமக்குப் புலப்படுத்துகின்றன.
தந்தையார் காலமானபோது நம் பிள்ளைக்கு வயது 17 மட்டுமே. தாயையும் அவர் சிறு பிள்ளையாயிருந்த போழ்தே இழந்திருந்தார். அவருக்குத் திருவேங்கடம் என்ற ஒரு தம்பி இருந்தார். இவர் மெத்தப் படித்தவர். சிறந்த மதியூகி என்றெல்லாம் தம்பி மரணமுற்ற நேரத்தில் மனமுருகி எழுதுகிறார் நம் பிள்ளை. (த3:6) இவ்வாறு சிறு வயதிலேயே வியாபாரம், கும்பினியில் தரகர் பொறுப்பு, குடும்பப் பொறுப்பு ஆகியவற்றை நம் பிள்ளை சுமக்க நேரிட்டது. அப்பொழுது ஆளுநராயிருந்தவர் லெனுவார்.(Lenoir) பெரியவர் திருவேங்கடம் பிள்ளையிடமும் மகன் ஆனந்தரங்கர் பேரிலும் அன்பு கொண்டிருந்த இவர், தந்தையை இழந்த மகன் மீது மேலும் அதிக அன்பு வைத்து, பரங்கிப்பேட்டையில் இருநத பிரெஞ்சுப் புடைவைக் (துணி) கிடங்கினை நம் பிள்ளையின் பொறுப்பில் விட்டார். இவ்விளைஞரின் திறமையிலும் உழைப்பிலும் நேர்மையிலும் அவ்வளவு நம்பிக்கை லெனுவாருக்கு. இவ்வருங்குணங்கள் அடுத்த ஆளுநரான துய்மாவையும் (Dumas) கவர்ந்தன. நிறைந்த அனுபவசாலியான கனகராய முதலியார் பெரிய துபாசியாகச் சீரோடும் சிறப்போடும் அப்பொழுது பணி புரிந்து வந்தாரெனினும், நம் பிள்ளையையும் அவருக்குச் சமமாகவே துய்மா பாராட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்குறிப்புப் பணியின் தொடக்கம்
இக்காலத்தில் தான், 27ஆவது வயதில், அன்றாடம் வர்த்தகம் மற்றும் கும்பினி நிகழ்வுகளை எழுதி வைக்கவேண்டுமென்கிற ஒரு வியப்பான ஆர்வம் நம் பிள்ளைக்கு உதயமாயிற்று. அதற்குரிய ஒரு வாசகத்தினை ஒரு நீண்ட பெரிய நோட்டுப் புத்தகத்தில் நாளேட்டுக்கான ஒரு உறுதிமொழிபோல் தலைப்பில் வரைந்து கொண்டும் ஸ்ரீராமஜெயம் என்று எழுதியும் 25 வருட எழுத்துப் பணியினை அவர் துவக்கினார். “நான் கண்ணால் காண்பதையும் காதால் கேட்பதையும், கப்பல்களின் வருகை புறப்பாடு ஆகியவற்றையும், அன்றாடம் நடக்கும் அதிசயங்களையும் எழுதிவைக்கத் தொடங்குகிறேன்“ என்பதுதான் அவரது உறுதி மொழி வாசகம். (3)
அக்காலகட்டத்தில் பிரெஞ்சுக் கம்பெனி வெறும் வர்த்தகத்தில் மட்டுமே கருத்தைச் செலுத்தியது; நம் பிள்ளையும் வெறும் வணிகராக மட்டுமே இருந்தார். ஆகவே கப்பல்களின் வருகை, அவற்றின் பெயர்கள், கப்பல் கேப்டன் போன்ற தலைமை அதிகாரிகளின் பெயர்கள், அவற்றில் வந்த சரக்குகளின் விவரம் மதிப்பு, அவை எங்கிருந்து வந்தன புறப்பட்டன, எவ்வெத் துறைகளில் வழியில் தங்கின, எங்கு புயலில் சிக்கி எத்தனை உயிர்களைப் பலிகொடுத்தன, எவ்வூருக்குப் புறப்பட்டுப் போகின்றன போன்ற மிக அரிய தகவல்களை எல்லாம் அவர் தனது ஆரம்ப ஏடுகளில் அயராமல் குறித்துள்ளார். ஆண்டுகள் செல்லச் செல்ல, கம்பெனியில் கூடுதல் பொறுப்புகள் அவரிடம் கொடுக்கப்படுகின்றன; நிறைய வியாபாரச் செய்திகளும் அரசியல் செய்திகளும் அவரது காதுகளில் விழுகின்றன. அடுத்ததாக கம்பெனிக்கு அரசியல் ஆசைகள் உதிக்கின்றன; ஊதாரிகளும் உதவாக்கரைகளும் பதவியிலும் கொள்ளையிலும் மட்டுமே ஆசையுள்ள முஸ்லீம்களும் பாளையக்காரர்களும் கர்னாடகத்திலும் பிற பகுதிகளிலும் ஆளுவதைக் காணக்காண வெள்ளையருக்கும் நாவில் நீர் சுரக்கிறது. நாமும் வாளாவிருக்க வேண்டாமே, கனி பழுத்துக் காத்துக் கிடக்கிறதே, நாமும் பறித்துக் கொள்ளலாமே என்ற உண்மை மெதுவாகப் புலப்படுகிறது அவர்களுக்கு. எனவே பிள்ளையின் எழுத்தில் இவையெல்லாம் இடம்பெறத் துவங்குகின்றன. அவரது நாட்குறிப்பு வரலாற்று முக்கியத்துவம் பெறும் ஏடாக மலர்கிறது.
ஆங்கிலேய – பிரெஞ்சுப் பகைமை
கி,பி 17ஆம் நூற்றாண்டு தொடங்கி 19 ஆம் நூற்றாண்டு முடிய இங்கிலாந்தும் பிரான்சும் விரோதிகளாகவே இருந்து வந்துள்ளன. ஆனந்தரங்கப் பிள்ளை காலத்தில் கூட இவ்விரு நாடுகளும் அவர்களின் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பெனிகளும் போட்டியும் பகைமையும் பாராட்டி வந்தன. இதன் விளைவே தமிழகத்தில் நடந்த கர்னாடகப் போர்கள். தமிழகத்தில் – கர்னாடகத்தில் – கர்னாடக நவாபின் ஆட்சி நடைபெற்று வந்தது. தில்லி பாதுஷாவின் பிரதிநிதியான தக்கண சுபேதாரின் பர்வானைவினைப் பெற்று, ஆற்காட்டு நவாபு தமிழகத்தை ஆண்டு வந்தார். பிள்ளை தனது நாட்குறிப்பினை எழுதத் தொடங்கிய காலத்தில் ஆற்காட்டில் நவாபாயிருந்தார் தொஸ்த் அலிகான் (1732-40), இவர் புதுச்சேரியுடனும் சென்னப்பட்டணத்துடனும் – அதாவது பிரெஞ்சுக்காரரோடும் ஆங்கிலேயரோடும் – நல்லுறவு பூண்டிருந்தார். இரண்டு பட்டணத்துக் கவர்னர்களுக்கும் கடிதங்களும் வெகுமதிகளும் அனுப்புவது இவரது வழக்கம். இவரது மருமனான சந்தா சாயபு தென் தமிழகத்திலும் முஸ்லீம் ஆதிக்கத்தினைப் பரப்ப எண்ணி 1732இல் திருச்சியை ஆண்ட மீனாட்சியை நயவஞ்சகமாகச் சிறைப்பிடித்து, அக்கோட்டையில் முஸ்லீம் கொடியைப் பறக்கவிட்டார். தனது ஒரு சகோதரன் படே சாயபுவை அனுப்பி திண்டுக்கல்லையும், மற்றொருவனான சதக் அலியை அனுப்பி மதுரையையும் கைப்பற்றித் தென்னாடு முழுவதையும் முஸ்லீம் ஆதிக்கத்தின் கீழ்க் கொணர்ந்து, அது போதாதென்று, முஸ்லீமல்லாத மராட்டியராண்ட தஞ்சையையும் கைப்பற்ற முயன்று அடிக்கடி தாக்கிப் பெருநாசத்தை விளைவித்ததோடு, சமாதானம் என்ற பெயரில் பல முறை லட்சம் லட்சமாகவும் தஞ்சை மன்னரிடம் பணம் பறித்தார். காரைக்காலைப் பிடுங்கவேண்டுமென்பதற்காக, தஞ்சைக் கெதிராகப் பிரெஞ்சுக்காரர் சந்தாசாயபுவுக்கு உதவியும் வந்தனர். இதனைப் பிள்ளை பல பக்கங்களில் விவரிக்கிறார். (த: 43, 47, 56-57, 59, 80, 131). தம்மைக் காத்துக்கொள்ள வேண்டி, தஞ்சை மராட்டியர்கள் மகாராஷ்டிரத்தில் பேஷ்வாக்களின் படையுதவியினைக் கோரினர். 1740இல் மராட்டியரின் 50,000 குதிரைகள் தக்கணத்தைக் கடந்து தமிழகத்துக்குள் புகுந்தன. ஆற்காட்டு நவாபுவான தொஸ்த்தலியை ஆம்பூருக்கருகில் கொன்று, வழிநெடுகிலும் முஸ்லீம் ஆட்சிக்கெதிரான போர் என்று பேர் சொல்லி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ஆரணி முதலான நூற்றுக்கணக்கான ஊர்களை, டச்சுக்காரர் வசமிருந்த சதுரங்கப்பட்டணம் முதல் திருச்சி வரையில் கொள்ளையிட்டனர். (4) மக்கள் அனைவரையும் சித்திரவதை செய்தது, வீடு தவறாமல் புகுந்து எல்லாவற்றையும் அள்ளிச் சென்றது, பெண்களை ஆயிரக்கணக்கில் இழுத்துச் சென்று அவமானப்படுத்தியது, கால்நடைகளை ஓட்டிச் சென்றது, பயிர்களை எல்லாவிடங்களிலும் நாசஞ்செய்தது ஆகிய கொடுமைகளைப் பிள்ளை பக்கம் பக்கமாக விவரித்துக் கண்ணீர் விடுகிறார். (1:133-48). இறுதியில் சந்தா சாயபுவிருந்த திருச்சிக் கோட்டையைப் பிடித்து, அவரைக் கைதியாகத் தம் நாட்டுக்குக் கொண்டு சென்றனர் மராட்டியர் (1:159-62). தக்கணத்திலிருந்து நிசாமுல்முல்க் தானும் மேலும் பெரியதொரு படையோடு தமிழகம் போந்து, திருச்சிக் கோட்டையில் மறுபடியும் முஸ்லீம் கொடியினைப் பறக்கவிட்டார்.
இப்படித்தான் தமிழகம் போர்க்களமாயிற்று. ஆற்காடு, வேலூர், வந்தவாசி போன்ற ஊர்களிலிருந்த ஆளுங்குடும்பத்து நவாபுப் பெண்களும் பிள்ளைகளும் சென்னப்பட்டணத்துக்கும் புதுச்சேரிப்பட்டணத்துக்கும் ஓடி, வெள்ளையரின் அனுமதி பெற்றுப் பாதுகாப்பு கருதித் தஞ்சம் புகுந்தனர். தொஸ்த்தலி கானின் மனைவியும் மகளும் சந்தா சாயபுவின் குடும்பத்தினரும் புதுச்சேரியிலும், தொஸ்த்தலியின் மகனும் அடுத்த நவாபுமான சப்தாலி கானின் மனைவி சென்னையிலும் அடைக்கலம் புகுந்தனர். (1:121, 123, 126) அவர்களிடமிருந்த செல்வத்தையும் ஊர்களையும் கவர்ந்துகொள்வதற்குச் சுலபமாக வழி பிறந்தது வெள்ளையருக்கு. வெள்ளையரின் கொடி பறந்த கோட்டைகளை மட்டுமே மராட்டிய மற்றும் நிசாமின் பெரும் படைகளால் நெருங்கமுடியவில்லை. அவர்கள் அவ்வாறு நெருங்கியபோது, அக்கோட்டைச் சுவர்களிலிருந்த பீரங்கிகள் அவர்களைக் கதிகலங்கி ஓடச் செய்தன. உள்நாட்டு ஆட்சியாளர்களின் பலவீனமும் அவர்கள் தங்களையே நாடியிருக்கிறார்கள் என்ற உண்மையும் வெள்ளையருக்கு வெட்ட வெளிச்சமாயிற்று. அவர்கள் தங்களது ஆதிக்கப் போட்டியில் இறங்கலாயினர்.
சென்னையைப் பிரெஞ்சுக்காரர் பிடித்தல்
சென்னைக் கோட்டையின் ஆளுநர்கள், புதுச்சேரிக்கு அருகிலிருந்த தேவனாம்பட்டணத்துக் கோட்டையின் ஆளுநர்கள் – இரு ஊர்களுமே ஆங்கிலேயர் வசமிருந்தன – பற்றிய நிறைய செய்திகளைப் பிள்ளை தருகிறார். சென்னப் பட்டணத்தில் நாட்குறிப்பின் துவக்க காலத்தில் பெரிய துபாசியாயிருந்த வெங்கடாசலய்யன் ஒரு முறை கூடலூர் (இன்று கடலூர் பழைய நகர்) செல்லும் வழியில் நம் பிள்ளையின் அழைப்பினை ஏற்று அவரது இல்லத்தில் ஓரிரவு தங்கி விருந்துண்டு, பிள்ளை அளித்த விலையுயர்ந்த அச்சைக் (Acch- இன்று இந்தோனேஷியாவிலுள்ள ஓரூர்) குதிரை ஒன்றினையும் வெகுமதியாகப் பெற்றுக் கொண்டு அடுத்த நாள் பயணத்தைத் தொடர்ந்தார் (1:166). 1744 சனவரி 28 ஆம் நாள் காலை ஆறு மணிக்குச் சென்னையின் ஆளுநராயிருந்த பென்யான் (Benyon) இங்கிலாந்துக்குக் கப்பலேறினார். அவரது துரைத்தனத்துக்கு மோர்சும் (Morse) துணை ஆளுநராக – சின்ன துரையாக – மான்சனும் (Monson) நியமிக்கப்பட்டனர் – போன்ற செய்திகளையும் பிள்ளை குறித்து வைத்தார். அவர் பயணம் புறப்பட்ட கப்பலின் பெயர் ட்யூக் (Duke) என்பதையும் அதன் கேப்டன் ஹின்ட்மன் (Hindman) என்பதையும் நாம் அறிகிறோம். கடற்கரையிலிருந்து படகிலேறியே அக்காலத்தில் கப்பலை அடையமுடியும். அவ்வாறு துறையிலிருந்து படகிலேறிய உடன் பென்யான் தனது பதவிக்கான முத்திரை, மோதிரம், சாவி ஆகியவற்றினை மோர்சிடம் ஒப்படைத்தார். அப்போது 21 பீரங்கிகள் சுட்டு மரியாதை செய்தன. அப்பொழுது நட்சத்திரம், லக்னம் போன்ற தகவல்களையும் கூடப் பிள்ளை எழுதியுள்ளதும், பின்னர் பல்வேறு பதவியேற்பு , மரணம், திருமணம் போன்ற நிகழ்வுகளின் போதும் இவற்றை அவர் குறித்துள்ளதையும் படிக்கும்போது சோதிடசாத்திரத்தில் அவரது பயிற்சியையும் ஆழ்ந்த நம்பிக்கையையும் நாம் அறிய இயலுகிறது. (1:187-89).
இவ்வாறு சென்னை, தேவனாம்பட்டணம் ஆகியவற்றில் ஆங்கிலேய ஆளுநர்கள் பதவியேற்றது, பதவி விலகியது, நோய்வாய்ப்பட்டது, அவர்தம் பயணங்கள், பிற செயல்கள் ஆகிய செய்திகளையும் இந்நாட்குறிப்பில் நாம் படிக்கிறோம். சென்னப்பட்டணத்தின் ஆளுநர் தேவானம்பட்டணம் செல்லும்போதும், தேவனாம்பட்டணத்து ஆளுநர் சென்னை செல்லும் போதும் புதுச்சேரியின் குண்டுதாழையை ஒட்டியே பயணம் செய்தனர். ஒருமுறை தேவனாம்பட்டணத்துத் துரையாக இருந்த இன்த் (Hinde) என்பவர் சென்னை போய் திரும்பும் வழியில் புதுச்சேரிக்கு வெளியிலிருந்த நயினியாப்பிள்ளைச் சாவடியில் இறங்கினார். இதனை அறிந்த துய்ப்ளே கவுன்சிலர்கள் நால்வரை அனுப்பி ஊருக்கு அழைத்துவரச் செய்து, தனது மாளிகையில் அவருக்கு விருந்தளித்தும் பீரங்கி சுட்டும் மரியாதை செய்தார். இருவரும் அன்று மாலை குதிரை வண்டியில் வெளியில் உலவிவிட்டு வந்தனர். அடுத்த நாள் விடியலில் பஞ்சமி அஸ்த நட்சத்திரத்தில் இன்த் புறப்பட்டாராம் (1:189-90). இரு ஆளுநர்களுக்கிடையில் தனிப்பட்ட முறையில் இப்படி நல்லுறவு இருந்தாலும், கடல் வாணிகம், ஐரோப்பா, வட அமெரிக்கா, இந்தியா முதலிய நாடுகளில் ஆதிக்கப் போட்டி ஆகியன பிரான்சுக்கும் இங்கிலாந்துக்குமிடையே பொறமையையும் பகைமையையும் வளர்த்து வந்தன. சென்னையிலும் தேவனாம்பட்டணத்திலும் ஆங்கிலேயரின் வர்த்தக வளர்ச்சி பிரெஞ்சுக் கம்பெனியின் கண்களை உறுத்திற்று. பிரெஞ்சுக் கடற்படைத் தளபதியான லபூர்தொனே 1741ல், சென்னையைக் கைப்பற்றினாலொழிய புதுச்சேரியில் தங்களது வர்த்தகம் வளராது என்பதை ஆளுநர் துய்மாவிடம் சொல்லி, இதனை துய்ப்ளேக்கும் தெரிவியுங்கள் என்று வேண்டினார். 1746 ஜூலையில் இதனை அவரே துய்ப்ளேயிடம் நேரில் வலியுறுத்தவும் செய்தார். ஆங்கிலேயக் கடற்படையினை அழித்து, சென்னையையும் தேவனாம்பட்டணத்தையும் கைப்பற்றி அங்குள்ள வியாபாரப் பண்டங்களையும் செல்வத்தையும் கைப்பற்றுவதற்காகவே தான் வந்திருப்பதாகவும் சொன்னார்.(5) 1746 டிசம்பரில் “சீக்கிரம் தேவனாம்பட்டணத்தை நாம் பிடித்தாலொழிய புதுச்சேரியில் வர்த்தகம் பண்ணுவது சிரமம்” என்று பிள்ளையும் துய்ப்ளேயிடம் சொன்னார் (த3:301).
லபூர்தொனெயின் ஒன்பது போர்க்கப்பல்கள் 1746 ஜூலை 9ம் நாள் புதுசசேரித் துறையை அடைந்தன. முந்திய ஆண்டு ஆகஸ்டில் அவை பிரான்சிலிருந்து புறப்பட்டு, அடுத்த பிப்ரவரி 3 ஆம் தேதி மசுச்கரையை (Mascareigne) அடைந்தது. பின் மதகாஸ்கர் தீவில் சில நாட்கள் தங்கி , உணவுப் பொருட்களை ஏற்றிப் புறப்பட்டு, வழியில் பெரும் புயலில் சிக்கிச் சீரழிந்து, அவற்றைச் சீர் செய்துகொண்டு நாற்பது நாட்கள் பயணம் செய்து, நாகப்பட்டணத்துக்கு அப்பால் பெத்தோன் (Peyton) என்பாரின் ஆங்கிலேயக் கப்பல்களோடு பொருது விரட்டியடித்த பின் அவை புதுச்சேரியை அடைந்தனவாம். (த2:27-77). செய்தியறிந்ததும் கூடலூரிலும் தேவனாம்பட்டணத்திலுமிருந்த வணிகர்கள் தங்களது சரக்குகளையும் பெண்டு பிள்ளைகளையும் ஒலாந்துக்காரர் வசமிருந்த பரங்கிப்பேட்டைக்கு அனுப்பினர். பொது மக்களும் தமது காசையும் பிற பொருட்களையும் புதைத்தும் வெளியே அனுப்பியும் பத்திரப்படுத்தினர். தேவனாம்பேட்டை கவர்னரின் துபாசியான ஒருகண்டி ரங்கப்பன் கூட தனது குடும்பத்தையும் பணங்காசுகளையும் அங்கு அனுப்பி வைத்தாராம். கம்பெனியோ தனது வெள்ளிப் பெட்டியைச் சென்னைக்கு அனுப்பியது (த1:85-86).
தேவனாம்பட்டணத்தை முதலில் தாக்கவேண்டுமென்று லபூர்தொனே சொன்னார். ஆனால் துய்ப்ளேவோ அதற்கு இவ்வளவு கப்பல்கள் தேவையில்லை சிறு படை மட்டுமே கொண்டு அதனைப் பின் பிடித்துக் கொள்ளலாம் என்று சொல்லி, சென்னைக் கோட்டையைப் பிடிக்குமாறு கூறினார் (Malleson, 132-35). இத்தருணத்தில் அவருக்கும் துய்ப்ளேவுக்குமிடையே தலையெடுத்தத பூசல் பிணக்குகளையும் நாம் இந்த நாட் குறிப்பில் விவரமாகப் படிக்கிறோம். தான் பிரெஞ்ச அரசரின் கடற்படைத் தளபதி, துய்ப்ளேவோ ஒரு வர்த்தகக் கம்பெனியால் நியமிக்கப்பட்ட அதிகாரி, எனவே தான் மிகுந்த மரியாதையோடு வரவேற்கப்படுதல் வேண்டும். கோட்டைக்குள் தான் போகும் போதும் வரும் போதும் கவர்னருக்கான தம்பூர் ஷாம் என்ற பெரிய முரசு முழக்கப்பட வேண்டும் என்று லபூர்தொனே கருதினார் மாறாக துய்ப்ளேவோ, தானே புதுச்சேரிக் கோட்டையின் துரை என்பதால் தனக்கு மட்டுமே அம்மரியாதை உரியதென எண்ணி, துணை ஆளுநருக்கான மரியாதைகளை மட்டும் லபூத்தொனேவுக்கு அனுமதித்தார். இவ்வாறு இணக்கமின்மை நாளுக்கு நாள் பெருகி, கடலில் ஆங்கிலேயக் கப்பல்களோடு சண்டை கொடுக்கத்தான் தனக்கு ஆணையுள்ளதேயொழிய, கரையிலுள்ள ஒரு கோட்டையைத் தாக்கிப் பிடிக்க அல்ல என்று, லபூர்தொனே விவாதித்து, பல வாரங்கள் தாமதமும் இதனால் துய்ப்ளேவுக்குப் பொருட்செலவும் ஏற்பட்டு, இறுதியில் சென்னையைத் தாக்குமாறு புதுச்சேரிக் கவுன்சிலின் தீர்மானம் ஒன்றைப் பெற்றுக்கொண்டுதான் தாக்குதலுக்குப் புறப்பட்டார் அவர் (த2:82-84, 92,94,106,110-114). இந்நேரத்தில் ஐந்து இங்கிலீஷ் கப்பல்கள் புதுச்சேரித் துறையைக் கடந்து சென்றன. உடனே லபூர்தொனேவின் கப்பல்கள் அவற்றைத் தேடிப்புறப்பட்டன. இலங்கைத்தீவில் திரிகோணமலை வரை சென்று, அவற்றைக் காணாமல் திரும்பி வந்தன. அவர் நளிர்க் காய்ச்சலிலும் பேதியிலும் வாடிக் கரையிறங்கினார் (த2 :142-45, 156-61, 166-167).
ஒரு வழியாக, சென்னையைத் தாக்குவதற்காக செப்டம்பர் 13 இல் அவர் புறப்பட்டார். இரு நாடுகளுக்குமிடையிலான ஐரோப்பியப் போர் காரணமாக, பிரெஞ்சு வர்த்தகக் கப்பல்களின் வருகை இரு ஆண்டுகள் நின்று போய், வாணிபமும் நின்று போய், புதுச்சேரி வறுமையடைந்து கிடந்தது. இந்த நிலையிலும் துய்ப்ளே தன் சொந்தப் பணத்தைக் கொண்டு சென்னை மீதான தாக்குதலுக்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தார். அவர் சேகரித்து வைத்திருந்த கோடரி, ஈட்டி, ஏணி, மண்வெட்டி, கூடை முதலியனவும், ஆடு, கோழி, பன்றி, மாடு, கருவாடு, கொழும்பு சாராயம், ரொட்டி, அரிசி, பருப்பு, நெய், எண்ணெய், விறகு முதலான சாமான்களும், பணப்பெட்டிகள், குதிரை முதல் துடைப்பக்கட்டை ஈறான எல்லாமும் லபூர்தொனேவின் எட்டுக் கப்பல்களின் பேரில் ஏற்றப்பட்டு, அவரும் ஏறிப் பயணமானார். சென்னைக் கோட்டையைப் பிடித்தபின் அதை நிர்வாகம் செய்வதற்காக தெப்ரமெனில் (D’ Espremenil) கவர்னர் பதவிக்கும், பரவி (Paradis) துணை ஆளுநர் பதவிக்குமாக நியமிக்கப்பட்டு, அவர்களும் உடன் கப்பலேறினர். தெப்ரமெனிலுக்கு உதவுவதற்காகப் பெரிய துபாசியாக நம் பிள்ளையின் தம்பி திருவேங்கடம் முதலியோர் கரைவழியாய் மொரட்டாண்டி சாவடி, திருக்கழுக்குன்றம், கோவளம் மார்க்கமாய்ச் சென்னைக்குப் புறப்பட்டனர் (த2:191-193).
இங்கிலீஷ்காரர்கள் தங்களது வியாபாரக் கப்பல்கள் பலவற்றினைப் பிடித்துக் கொண்டனர் என்றும், எனவேதான் தாங்களும் அவர்களது பட்டணத்தின் மீது தாக்குதல் தொடுக்க நேரிடுகிறது என்றும் துய்ப்ளே நவாபு, நிசாம் போன்றவர்களுக்கு ஆகஸ்டிலேயே கடுதாசி எழுதியிருந்தார். (6) இதற்கு செப்டம்பர் 5, 19 ஆகிய தேதிகளில் நவாபு அன்வரூதின் கானிடமிருந்து இரு கடிதங்கள் வந்தன. “உங்கள் இரு தரப்புக்குமிடையே கடலில் சண்டையென்றால், கரையிலுள்ள பாதுஷா பந்தரை (சென்னை) நீங்கள் எப்படித் தாக்கலாம்?” என்று அதில் அவர் வினாவினார். அங்கு குசராத்திக்காரர்கள், பட்டாணிகள் முதலிய நானா சாதியாரும் வர்த்தகம் பண்ணுகிறார்கள், அவர்களை அலைக்கழிப்பது நியாயமல்ல, அப்படிப்பட்ட காரியத்தைச் செய்யாதீர்கள் என்று அவர் எச்சரித்தார். இதற்குப் பதிலாக, ‘பார்சா பந்தரிலே இருக்கப்பட்ட சனங்களுக்கு ஒரு தொல்லையும் வராது, எங்கள் சண்டைக்கப்பல்காரர்கள் எங்கள் ராசாவினுடைய உத்தாரம் (ஆணை) எப்படியோ அப்படித்தான் நடப்பார்கள். இப்போது 150 ஆரஞ்சுப் பழம் உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம்” என்று, நவாபின் கடிதம் கொண்டுவந்த ஒட்டகச் சுவார் மூலமே பதிற்கடிதமும் ஆரஞ்சுப்பழங்களும் துய்ப்ளே அனுப்பி வைத்தார் (த2:185, 201)
பிரெஞ்சு சொல்தாதுகளும் (வெள்ளைத் துருப்புகள்) சிப்பாய்களும் (இந்தியத் துருப்புகள்) திருப்போரூருக்கருகில் கரையிறங்கி, மயிலாப்பூர் வழியாகச் சென்னை நோக்கிச் சென்றனர். லபூர்தொனேயின் கடற்படை சென்னைக்கு நேரே நென்று துறைபிடித்துப் பீரங்கித் தாக்குதல் நடத்திற்று. ஆங்கிலேயப்படை திருவல்லிக்கேணி தெள்ளியசிங்கப் பெருமாள் கோயிலுக்கும், பின் சிந்தாதிரிப்பேட்டைக்கும் பின்வாங்கி, வெள்ளைக் கொடி போட்டது (த2:200). பகைவரின் கடற்படை அண்மையில் இல்லாத காரணத்தினால் பிரெஞ்சுக்காரர் வெகு எளிதாகச் சென்னை கோட்டையை 1746 செப்டம்பர் 21ல் கைப்பற்றினர். சென்னையில் கவர்னர் மோர்சுக்குப் பயித்தியம் பிடித்து, முன்பு விசாகப்பட்டணத்துக் கிடங்கில் கேப்டனாயிருந்த ஸ்ட்ராட்டன் என்பார் அவருக்குப் பதில் தலைமையேற்று, கோட்டையைப் பிரெஞ்சுக்காரரிடம் சரண் செய்தார் (த2:201 – 205). உடனே புதுச்சேரியில் குதூகலமாக வெள்ளையரும் தமிழரும் மகிழ்ச்சியோடு விழாக் கொண்டாடினர். கிறிஸ்துவ ஆலய மணிகள் ஓயாமல் ஒலித்தன. அவ்வாலயங்களும் கோட்டையும் வண்ண விளக்குகள் வைத்து அலங்கரிக்கப்பட்டன. பிரெஞ்சுக்காரர் தம் ஆலயம் சென்று பூசை கேட்டு, மன்னர் வாழ்க என்று மும்முறை முழங்கினர் (த2:205-08).
சென்னையை நிர்வகிக்க மேலும் ஆட்கள் தேவை என்று கடுதாசி வந்தது. உடனே கவுன்சில் கூடி கணக்கு வழக்குக்காக துவோரன் (Dulaurens), சென்னையில் அமைக்கப்போகும் கவுன்சிலுக்கு உதவுவதற்காக பர்த்தலெமி (Barthelemy), ஆர்மீனிய வர்த்தகருடன் பேசுவதற்காக ழுவானி (Joannes) பார்சி மொழிபெயர்ப்பாளராக தெலார்ஸ், ஆங்கில மொழிபெயர்ப்பாளராக புரூயல் (Bruel) போன்றோர் கப்பலில் அனுப்பப்பட்டனர் (த2:209). இம்மனிதர்களுக்கும் சென்னையைப் பற்றி ஒன்றும் தெரியாது என்பதைப் பின் அறிந்து, பிள்ளையின் சொற்படி அவரது குலத்தினரான தாண்டவராயப் பிள்ளை அனுப்பப்பட்டார். (ஏற்கனவே, திருவேங்கடத்துக்கு உதவியாக இரண்டு ராயசங்களைப் பிள்ளை அனுப்பியிருந்தார். தன் தம்பி திருவேங்கடம் நல்லவன், நேர்மையாளன் எனினும் உலகம் அறியாதவன் எனப் பிள்ளை துய்ப்ளேவிடம் சொன்னபோது ‘அவன் உன்னை விட கெட்டிக்காரன், நீ அவனை அனுப்பு’ என்று ஆளுநர் வற்புறுத்தவே பிள்ளை இணங்க நேரிட்டது). தாண்டவராயப் பிள்ளையின் பணி என்னவென்றால், சென்னப்பட்டணத்தில் யார் யார் எவ்வளவு செல்வமுடையவர் என்பதைக் கூறுவதுதான். அப்பட்டணத்தைப் பிடித்தாலும் அங்கிருக்கும் ஆர்மீனியர் போன்ற பணக்கார வணிகர்களைப் புதுச்சேரியில் குடியமரச் செய்வதாலும் தனக்கு எவ்வளவு சம்பாத்தியம் கிடைக்கும் என்று இப்பொழுதே துய்ப்ளே மனக்கணக்குப் போட்டார். இது பிள்ளைக்கே வியப்பாயிருந்தது. தான் சொன்னப்படி தெப்ரமெனில், பரதி இருவரும் வணிகர்களிடம் பேசி முடிவு செய்தால் ஐந்து லட்சம் வராகன் நிச்சயம் கிடைக்குமென்று பிள்ளை பதில் சொன்னார். “எனக்கு ஆதாயம் வரும்படி நீதான் எப்படியாவது பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று பிள்ளையிடம் ஆளுநர் கூறினார். அன்றே, அங்கு நடக்கிற சமாச்சாரங்களை அப்போதைக்கப்போதே எழுதித் தபாலிலே அனுப்பச் சொல்லியும், நாள் தோறும் நடப்பதை ஒரு தினசரியிலே எழுதிவைக்கச் சொல்லியும் தன் தம்பிக்கு “ஒரு புஸ்தகமும் கடுதாசி எழுதுகிறதற்கு இரண்டு கட்டு காகிதமும், செகப்பு அரக்குக் கொம்பு ஒன்றும், சீவின இறகு பத்தும், ஒரு கடிதமும் தபாலிலே” பிள்ளை கொடுத்தனுப்பினார் (த2:195).
லபூர்தொனே தந்த தலைவலிகள்
முதல் நாள் தொட்டே சென்னையில் லபூர்தொனே சுயேச்சையாகச் செயல்படத் தொடங்கினார். புதுச்சேரிக் கவுன்சிலையோ துய்ப்ளேவையோ அவர் மதிப்பதேயில்லை. துய்ப்ளே எழுதும் கடிதங்களுக்கு அவர் பதிலிறுப்பதுமில்லை. இவ்வகையான செயல்பாட்டினைப் பற்றி அவரிடன் தெப்ரமெனில், துலோரன், பர்த்தலெமி ஆகியோர் கேட்டதற்கு, “நீங்கள் யார்? நான் கும்பினிக்குப் பதில் சொல்லிக் கொள்கிறேன்” என்ற விடை அவரிடமிருந்து வந்தது. இது ஒரு கடித மூலம் துய்ப்ளேவுக்குத் தெரியவந்தது. மேலும் செம்மரம், புடவை, சீலை, பணங்காசு, தட்டுமுட்டு, பீரங்கிகள் எனக் கோட்டையிலும் பட்டணத்திலுமிருந்த அனைத்தையும் சேகரித்து லபூர்தொனே தன் கப்பலில் ஏற்றிக் கொண்டு, கோட்டையையும் சின்னப் பீரங்கிகளையும் பதினோரு லட்சம் வராகனுக்கு இங்கிலீஷ்காரர் வசம் ஒப்படைத்துவிட்டு மசுக்கரைக்குப் புறப்பட முடிவுசெய்திருக்கிறார் எனவும், இதில் அவரோடு முரண்பட்டு தெப்ரமெனில், துலோரன், பர்த்தலெமி மூவரும் மயிலாப்பூர் போய்விட்டனர் எனவும் அக்கடிதம் தெரிவித்தது. இதைப் படித்த ஆளுநர் அதிர்ந்துபோனார். அச்சமயத்தில் லபூர்தொனே எழுதிய கடிததெமான்றும் வந்து சேர்ந்தது. மேற்கூறிய நடவடிக்கைகளை யெல்லாம் துய்ப்ளேவுக்குத் தெரிவித்தும், ஆங்கிலேயர்கள் “இரண்டாண்டுகளில் பதினோரு லட்சம் வராகனைத் தருகிறோம், இனிமேல் என்றைக்கும் பிரான்சுக்காரருடனே சண்டை கொடுக்கறதில்லை” என்று சீட்டெழுதிக் கொடுத்துள்ளனர் என்றும் மேலும் அவர் எழுதியிருந்தார். இதைப் படித்த துய்ப்ளேவின் கோபமும் விசாரமும் எழுதி முடியாது என்கிறார் பிள்ளை (த2:222-23).
மயிலாப்பூரிலிருந்த தெப்ரமெனில், பரதி போன்ற சிலர் சென்னை சென்று லபூர்தொனேயைச் சந்தித்து அவரது செயல்பாடுகள் குறித்துக் கேட்டதற்கு, கரை மீது சண்டை கொடுக்கத் தனக்கு அதிகாரமில்லாததால் சென்னையைப் பிடித்தது அதிகாரமில்லாத செயல் என்றும், அதனால் ஆங்கிலேயரின் சரக்குகளையும் பொருட்களையும் பிடுங்கிக்கொண்டு அவர்கள் வசம் கோட்டையைத் தான் ஒப்புவித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். உடனே அவர்கள் கத்திகளை உருவிக்கு கொண்டு தெப்ரமெனில் தான் சென்னையின் ஆளுநர் என்று கூறும் புதுச்சேரிக் கவுன்சிலின் காகிதத்தைப் படித்து, லபூர்தொனேயின் முடிவுகள் அனைத்தையும் ரத்து செய்துவிடுவதாக அறிவித்தனர். அடுத்து, கோட்டையின் சாவிகளை தெப்ரமெமனில் வாங்கிக் கொண்டு மோர்ஸ் முதலானவர்களை அழைப்பித்து, “நீங்கள் காவலில் வைக்கப்படுகிறீர்கள்; உங்கள் வசம் கோட்டையை நாங்கள் தரவில்லை” என்று அறிவித்தனர் (2:231-33)
லபூர்தொனேயின் திடீர் திடீர் முடிவுகள்
இரு நாட்கள் கழித்து, லபூர்தொனே தனது பெயர் தினத்தைக் கொண்டாடுவதாகச் சொல்லி, சென்னையில் பீரங்கிகள் சுட்டு, கோட்டையில் மதிய விருந்துக்குத் தெப்ரமெனில், பரதி, துலோரன், பர்த்தலெமி, தெபுரி, லத்தூர் போன்ற முக்கிய மனிதர்களை அழைத்தார். அவர்கள் வந்து மேசையைச் சுற்றி அமர்ந்ததும், ஆங்கிலேயக் கப்பல்கள் சென்னையை நெருங்கிக் கொண்டிருப்பதாகத் தனக்குத் தகவல் வந்துள்ளதாகவும், ஆதலால் புதுச்சேரியில் இருந்து வந்துள்ள எல்லா சொல்தாதுகளும் தனது கப்பலில் ஏற அவர்கள் அனுமதிக்க வேண்டுமென்றும் அவர் கோரினார். அவர்கள் முடியாது எனக் கூறியவுடன், லபூர்தொனே தனது ஆட்கள் இருபத்து நாலு பேரை, உருவிய கத்தியும் கையுமாக இருந்தவர்களைக் கொண்டு அவர்களைக் காவல் பண்ணி எல்லா அதிகாரத்தையும் தானே மேற்கொண்டுவிட்டார். பின்னர் நகரிலே இருந்த சரக்குகளையும் சொல்தாதுகளையும் கப்பலிலே ஏற்றிக் கொண்டு, எல்லாக் கணக்குகளையும் கிழித்துப் போட்டார். தான் மசுக்கரை, மரீசியஷ் போன்ற இடங்களிலிருந்துக் கொணர்ந்த, தனக்கு விசுவாசமான சொல்தாதுகளையும் காப்பிரிகளையும் மட்டுமே கோட்டையில் இருக்கச் செய்தார். துய்ப்ளேயின் துக்கம் சொல்லிமுடியாது. அவரது கடிதங்களுக்கும் பதில் வருவதில்லை. தெப்மெனில் உள்ளிட்ட அனைவரும், திருவேங்கடமும் கூடப் புதுச்சேரிக்குத் திரும்ப எண்ணி மயிலாப்பூரைச் சென்றடைந்தனர்.
இத்தருணத்தில், கோட்டைக் கொடி மரத்தின் கீழ் ஆங்கிலேயர் இரண்டு லட்சம் வராகனைப் (ஆறு லட்சம் ரூபாய்) புதைத்து வைத்திருப்பது லபூர்தொனேவுக்குத் தெரியவந்தது (7). உடனே மோர்சைத் தருவித்து, இப்படி நீங்கள் என்னை என்னென்ன வகையில் ஏமாற்றி இருக்கிறீர்களோ தெரியாது என்று கூறி, அவரோடு செய்திருந்த உடன்படிக்கைகளைக் கிழித்துப் போட்டுவிட்டு அவரையும், அவரது ஆட்களையும் கப்பலில் ஏற்றி, புதுச்சேரி சொல்தாதுகளை இறக்கிப்போட்டு, இவ்வாறு தான் மோசம் செய்யப்பட்டதை எல்லாம் துய்ப்ளேவுக்கு விளக்கியெழுதி, தெப்ரமெனில் முதலியோரைத் திருப்பியனுப்பிக் கோட்டையை ஓப்புக் கொள்ளுமாறு கேட்டார் லபூர்தொனே. துய்ப்ளேவுக்கு இதுவரை இருந்த வேசடை எல்லாம் போய் சந்தோஷம் மிகுந்தது. உடனே கவுன்சில் கூடி, அனைவரையும் சென்னை சென்று கோட்டையை வாங்கிக் கொள்ளுமாறு கடிதம் அனுப்பப்பட்டது. சதுரங்கப்பட்டணம் அருகில் அவர்கள் இக்காகிதத்தைப் பார்த்துத் திரும்பிச் சென்றனர். திருவேங்கடம் மட்டும் உடல்நிலை சரியின்மையால் புதுச்சேரி மீண்டார் (த2:236-27 , 247-50).
இந்த நேரத்திலும் துய்ப்ளே நம் பிள்ளையைத் தனியே ஒரு மூலைக்கு இட்டுச் சென்று, லபூர்தொனேவுக்கு சென்னையில் எவ்வளவு செல்வம் கிடைத்திருக்கும் என்று ஆவலோடு – பொறாமையோடு – வினவினார். “பத்து லட்சம் வராகன் அகப்பட்டிருக்குமென்று தோணுது” என்று பிள்ளை பதிலிறுத்தார். “நான் ரொம்ப சொல்கிறதாகவும், தனக்கு இது வராமல் போச்சே யென்கிற வயிற்றெரிச்சல் காரணமாகவும். “என்ன பேச்சுப் பேசுகிறாயென்று சொல்லி, மூணு லட்சத்துக்கு அதிகமாக எப்படி இருக்குமென்று முகத்தைக் கடுப்பாக்கிக் கொண்டு” துய்ப்ளே எரிந்துவிழுந்தாராம். அதற்குப் பிள்ளை, “பொறுத்துக் கொள்ள வேணும் முசே லபூர்தொனேயின் தம்பி முசே லவீல்பாகுக்கு இரண்டு லட்சம் அகப்பட்டது மல்லாமல், அவனண்மையிலே இருக்கிற சட்டைகார ஆந்திரே பயலுக்கு ஐம்பதினாயிரம் கிடைத்தது“ என்றும், மற்ற பிறருக்கு எவ்வளவு கிடைத்திருக்குமென்றும் பிள்ளை விவரமாகச் சொன்ன பிற்பாடு, “நீ சொல்வது மெய்தான்“ என்று ஆளுநர் ஒப்புக் கொண்டாராம் (த2:251). சென்னப்பட்டணத்தை யொத்ததொரு குபேரப்பட்டணம் – மற்றொரிடத்தில் ஸ்வர்ணப்பட்டணம் என்றும் குறிக்கிறார் – கொள்ளை போகச்சே தனக்கு ஒன்றும் பெரிதாகக் கிடைக்காமல் போயிற்றே என்று துய்ப்ளே மட்டுமல்ல, தன் தம்பி திருவேங்கடம் வெறுங்கையோடு – கடலை தின்று கைகழுவினாப்போல – திரும்பிவந்தானே, இது சோசியர் காகிதத்திலே எழுதிக் கொடுத்தபடி நஷ்டகாலமானபடியினாலே இப்படி நடந்தது என்று பிள்ளையும் வருந்தினார் (த2:252)
அக்டோபர் 12 இல் தெப்ரமெனிலிடம் சென்னைக் கோட்டையை ஒப்படைத்து விடுகிறேனென்று எழுதிய லபூர்தொனே, இரண்டு நாள் கழித்து எழுதிய காகிதத்திலே தான் இங்கிலீஷ்காரருக்கு மறுபடியும் கோட்டையைக் கொடுத்துவிட்டேனேன்று எழுதினார். கவுன்சில் கூடி, “ நீ என்ன எங்களை எகத்தாளி பண்ணுகிறாயா” எனக் கேட்டுப் பதில் எழுதினர். இதற்கிடையில், ஆங்கிலேயருக்கும் கொடுக்கவில்லை, புதுச்சேரிக் கவுன்சிலர் வசமும் கொடுக்கவில்லை. என்னமாய் நடத்துவேனோ நானறியேன் என்று மற்றொரு கடிதமும் அவரிடமிருந்து வந்தது. நாளைக்கு ஒரு விதமாயும், நாழிக்கு ஒரு விதமாயும் இப்படி இவர் எழுதுவது ஐரோப்பியரும் ஒற்றுமையில்லாதவர்களாகத் தமிழர் போலேயும் துலுக்கர் போலேயும் தான் நடந்து கொள்கிறார்கள் என்று பிள்ளைக்குப்பட்டது (த2: 254- 55)
புயற்காற்றினால் ஏற்பட்ட சேதம்
அக்டோபர் 13 இரவும் அதற்கடுத்த நாளும் பலத்த சூறைக்காற்று சென்னையில் வீசியது. லபூர்தொனேவின் கப்பல்களுள் சில போனவிடம் தெரியவில்லை. சில கப்பல்கள் பெருத்த சேதத்துக்குள்ளாகி முறிந்து போயின. கோவளம், சதுரங்கப்பட்டணம் வரைச் சிதைந்த கப்பல்களின் மரப்பலகைகளும் சரக்குகளும் கடலில் மிதந்தன. கரையோரம் வாழ்ந்த மக்கள் அவற்றையெல்லாம் எடுத்துப் போயினர். தனது கப்பல்களே காணமற்போன பரிதாபநிலையில், லபூர்தொனே தலை கவிழ்ந்து, தன்னாலே துய்ப்ளேவுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கெல்லாம் தான் வருந்துவதாக, வணக்கமாகக் கடிதமெழுதியுள்ளார் என மீரான் என்ற பிரெஞ்சுக்காரர் வாயிலாகப் பிள்ளை அறிந்தார் (த2:260-61). சில நாட்கள் கழித்து மற்றொரு கடிதமும் லபூர்தொனே அனுப்பினார். சென்னைக் கோட்டையைத் தெப்ரமெனில் வசம் கொடுத்து விடுவதாகவும், அடுத்த பிப்ரவரியில் அதை ஆங்கிலேயர் வசம் ஒப்புக்கொடுக்க வேண்டுமென்றும், அதுவரை நிர்வாகத்துக்குச் சில பிரெஞ்சுக்காரரை அனுப்பச் சொல்லியும் அக்கடிதத்தில் கண்டிருந்தது. இப்பெருங் குழப்பத்திலும் கவுன்சில் கூடி சிலரைச் சென்னைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தது (த3:3-4)
லபூர்தொனே பயணமாதல்
சென்னையில் பிள்ளையின் குமாஸ்தாவாக இருந்த கண்டால் குருவப்பச் செட்டிதான் அவருக்குச் செய்திகளை அனுப்பிக் கொண்டேயிருந்தார். அவர் எழுதிய மூன்று கடிதங்கள் அக்டோபர் 25ஆம் நாள் தபாலில் வந்தன.(8) மூன்று நாட்களுக்கு முன்னதாக லபூர்தொனே இங்கிலீஸ்காரர்களோடு விருந்துண்டு, அவர்களிடம் கோட்டையை ஒப்படைப்பதற்கான ஒரு ஒப்பந்தத்தை வாசித்துக் காண்பித்ததாயும், அடுத்த நாள் தெப்ரெமெனில் வசம் கோட்டையை ஒப்படைத்ததாகயும், அப்பொழுது 21 பீரங்கிகள் போடப்பட்டதாயும், பின்னர் லபூர்தொனே தனது கப்பலில் ஏறினதாகவும் அப்பொழுதும் 21 பீரங்கிகள் முழங்கி மரியாதை செய்ததாயும் தெலுங்கிலான அக்கடிதங்கள் தெரிவித்தன (த3:21). இதற்கு ஓரிருநாள் முன்னதாகவே இங்கிலீஷ் கவர்னர் மோர்கம் துணை கவர்னர் மான்சனும், லபூர்தொனேவுக்குத் தெரிந்தே தங்களது சரக்குகளை லாலாப்பேட்டை ( ஆற்காட்டுக்கு அருகிலான ஒரு வாணிபத்தலம்) வியாபாரிகளுக்கு விற்று விட்டனராம். இதனைப் பார்த்து மற்றவர்களும் தமது சரக்குகளை வெளியேற்றிவிட்டனர் என்றும் குருவப்பச் செட்டி தெரிவித்தார் (த3:38).
லபூர்தொனே ஏறிவந்த லஷீல் (La Achille) என்ற கப்பலும் உடன் வந்த பிறகும் 28ஆம் தேதி புதுச்சேரிச் துறையை அடைந்தன. அவர் கரையிரங்கவேயில்லை. அவரது சரக்குகளும் – அவரும் புதுச்சேரியில் துணி வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார் – சாமான்களும் இதர மாலுமிகளுடையனவும் கப்பல்களில் ஏற்றப்பட்டன. காப்பிரிகளும் ஏறினர் (த3:38)
மபூஸ் கானின் ஓட்டம்
பிரெஞ்சுத் தாக்குதலை எதிர்பார்த்த சென்னை வணிகர்கள், முன்பே தங்களது சரக்குகளையும் பெண்டு பிள்ளைகளையும் மயிலாப்பூருக்கும் ஆற்காட்டுக்கும் பிற இடங்களுக்கும் அனுப்பி வைத்துவிட்டனர் (2:219). தனது தந்தை நவாபு அன்வருதீன் கானின் எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்தி பிரெஞ்சுக்காரர் சென்னையைப் பிடித்துக் கொண்டதை அவரது மூத்த மகனான மபூஸ் கானால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர்களை விரட்டும் திட்டத்தோடு அவரது படைகள் நுங்கம்பாக்கம் ஏரிக்கரையில் குவிந்தன. கூவம் நதியின் முகத்துவாரத்தை உடைத்துவிடுமாறும் அவர் சில போர்வீரர்களை ஏவியிருந்தார். இதை முறியடிப்பதற்காக லத்தூரின்(La Tour) தலைமையில் சில துப்பாக்கி வீரர்களை பிரெஞ்சுகாரர் அனுப்பினர். அவர்கள் வெற்றுத் தோட்டாக்களைச் சுட்ட உடனே முஸ்லீம் துருப்புகள் ஓட்டம் பிடித்தன. தங்களை முஸ்லீம்கள் தாக்கினாலொழிய அவர்களைத் தாக்கக் கூடாதென பிரெஞ்சுத் துருப்புகளுக்கு பர்த்தலெமி உத்தரவிட்டிருந்தார். நவம்பர் 2இல் மபூஸ்கானின் படையினர் முன்னேறி வருவதைக் கண்டதும் பிரெஞ்சுக்காரர்கள் தீக்குடுக்கைகளை (கைக்குண்டுகளை) எறிந்தும் துப்பாக்கியால் சுட்டும் தாக்கவே, துலுக்கர் படை திரும்பி ஓட்டம் பிடித்தது. மபூஸ்கானும் ஆனையின் பேரிலே ஏறி ஓடினார். ஐந்து நாழிகை மட்டுக்கும் அவர்கள் ஓட, இவர்கள் துரத்த, துலுக்கர் தம் தண்டிலேயும் ஈஸ்வரன் கோயிலிலேயும் வைத்திருந்த எல்லாப் பொருள்களும் பிரெஞ்சுக்காரர் கையில் சிக்கின (த3:55-56). மயிலாப்பூரையும் அவர்கள் சூறையிட்டனர். 30 ஒட்டகைகள், 40-40 குதிரைகள், துணிப்பொதிகள் ஏற்றிய 60-70 எருதுகள், ஏராளமான வராகன் மற்றும் ரூபாய்கள் முதலியன அவர்களுக்குச் சிக்கின. முஸ்லீம் தரப்பில் 200-300 பேரும், 50-60 குதிரைகளும் பலியாக, பிரெஞ்சுத் தரப்பில் இருவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது (த3:69-70,96)
பிரெஞ்சு ஆட்சியில் சென்னை
லபூர்தொனே பயணப்பட்டுப் போன பின், தெப்ரமெனிலையும் வேறு சிலரையும் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு அழைத்து துய்ப்ளே ஆலோசனைகள் நிகழ்த்தினார். அவர்கள் தோணி மூலம் புதுச்சேரியை அடைவதற்கு இரு இரவுகளும் ஒரு பகலும் பிடித்தன. புதுச்சேரியிலிருந்த பாதிரிமார்கள் உள்ளிட்ட அனைத்து பிரெஞ்சுக்காரரும் நவம்பர் 6 இல் கூடி லபூர்தொனே ஆங்கிலேயருடன் செய்துகொண்ட ஒப்பந்தம் பலவிதங்களிலும் தவறானது, அதனை ரத்து செய்துவிட வேண்டும் என்று சிபாரிசு செய்தனர், (9) இதனை ஆலோசித்து புதுச்சேரிக் கவுன்சில் அவ்வுடன்படிக்கையை ரத்து செய்தது (த3:36, 62-63). பரதி சென்னையில் நிர்வாகப் பொறுப்பில் (Commandant) நியமிக்கப்பட்டார். அவருக்கு ஆலோசனை கூற அங்கும் ஒரு கவுன்சில் நியமிக்கப்பட்டது. புதுச்சேரிக் கவுன்சிலின் கீழ் இவர்கள் செயல்பட வேண்டும். ஆனால் இரண்டே மாதங்களில் தேவனாம்பட்டணத்துக்கெதிராகப் படை நடத்துவதற்காகப் பரதி அழைத்துக்கொள்ளப்பட்டு, துய்ப்ளேவின் மருமகனான தெப்ரமெனில் அவரிடத்தில் நியமிக்கப்பட்டார் (த 3:149) (10). ஐந்தே மாதங்கள் சென்ற பின் இவர் பிள்ளைக்குத் தெரியாத ஏதோ காரணத்தினால், புதுச்சேரிக்கும் தெரியாமல் கரைவழியாக வங்காளத்தை நோக்கிப் போய்விட்டார் (4:84). அடுத்து சென்னையை ஆளுவதற்கென துலோரன் அனுப்பப்பட்டார். அவர் புதுச்சேரியின் மேலாண்மையை மதியாமல் நடத்து கொண்டதால் அவரும் திருப்பியழைத்துக் கொள்ளப்பட்டு, அவரது மருமகனான பர்த்தலெமி நியமிக்கப்பட்டார் (4:117-228).
சென்னையைப் போன்றதொரு குபேரப்பட்டணம் கிடைத்திருந்தும் அதைப் பிரெஞ்சுக்காரர் இப்படி நிர்வாகம் செய்த முறை பிள்ளைக்கே ஏமாற்றமளித்தது. ஆளுநர்களாக அனுப்பப்பட்டவர்கள் திறமை சிறிதும் இல்லாதவர்கள்: அவர்களுக்கு உதவுவதற்காக அனுப்பட்ட பாளையக்காரன், சாவடி உத்தியோகத்தன், துபாசிகள் எல்லோருமே சுருட்டுப் பொறுக்கிகள், காசின் முகத்தையே பார்க்காதவர்கள் என்கிறார் பிள்ளை. துய்ப்ளே தனது ஆலோசனையைக் கேட்காமல், அதிகப் பொருளாசையும் ஆதிக்க ஆசையும் கொண்ட தன் மனைவியின் ஆலோசனைப்படி சென்னை விவகாரத்தில் செயல்பட்டார் என்பது அவரது குமுறல் “தான் இருக்கிற பட்டணத்தையே நிர்வகிக்கத் தெரியாத முசே துய்ப்ளே தூரத்தில் உள்ள அசல் பட்டணமும் மகத்தான பட்டணமுமாகிய சென்னப்பட்டணத்தை எப்படி ரீதியாக நிர்வகிக்க முடியும்” என்று கேட்கிறார் பிள்ளை (4:31-33).
ஒரு மாதம் கழித்து ”சென்னப்பட்டணத்திலே நடக்கிற அநியாயத்தைக் காகிதத்திலே எழுதி முடியாது” என்கிறார் அவர். லட்சாதிபதிகள் நிறைந்த பட்டணம் அது. அதைப் பிரெஞ்சுக்காரர்கள் பிடிக்கமுடியுமென்று மக்கள் நினைக்காததாலேயே, எல்லாவற்றையும் வீட்டிலேயும் அடுப்பங்கரையிலேயும் குளத்திலும் சாக்கடையிலேயுமாகப் புதைத்துவைத்து விட்டு, ரொக்கத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அவர்கள் வெளியேறிவிட்டனர். எஞ்சிய சரக்குகள் , தட்டுமுட்டுகள், தானியம் அனைத்தையும் மாயே சிப்பாய்களும் சொல்தாதுகளும் கூலிக்காரரும் கொள்ளையிட்டு நூறும் லட்சமும் சம்பாதித்துக் கொண்டனர். ஓடிப்போன சனங்களோ பிரெஞ்சுக்காரர் ஆங்கிலேயரைப் போல தயாள குணமில்லாதவர்கள், எல்லோரையும் கிறிஸ்துவ ராக்குவர், காதறுப்பர், தூக்கில் போடுவர் என்று வெறுக்கின்றனர்; புதுச்சேரிக்குக் குடியேறங்கள் என்று மதாம் துய்ப்ளேயின் ஆட்களான வெங்கய்யன், வரதய்யன், பாப்பனப்பிள்ளை முதலான பேர் மூலம் என்ன சொன்னாலும் நாங்கள் போகமாட்டோம், இங்கிலீசுக்காரர்கள் சென்னப்பட்டணத்தை விட்டு விட மாட்டார்கள், கட்டாயம் திரும்பப் பெறுவர்கள், அப்போது அவர்களண்டையிலே போய் எப்படி நிற்கிறது? – என்றெல்லாம் சென்னை சனங்கள் பேசுகிறார்கள் என்று பிள்ளை எழுதுகிறார் (த4:65-67).
சிந்தாதிரிப்பேட்டைப் பிள்ளையார் கோயில் வரையிலான வீடுகள் இடிக்கப்பட்டுவிட்டன. மேலும் எல்லா வீடுகளும் இடிக்கப்படும் என்று தமுக்குப் போடுகிறார்கள். தங்களைக் காக்க வேண்டும் – என்று சென்னை மக்கள் துய்ப்ளேவுக்கு ஒரு மனு அனுப்பினர். தெலுங்கிலான இம்மனுவினை ஒரு பிராமணர் கொண்டுவந்தார். பிள்ளை அதைப் படித்து ஆளுநருக்குக் கூறியபோது “அவர்கள் எல்லோரையும் புதுச்சேரிக்கு வந்து வீடு கட்டிக் கொள்ளச் சொல்” என்று அவர் பதில் சொன்னார். ஏழை நெசவாளிகளின் பேரில் அன்பு வைக்கவேண்டுமென்று பிள்ளை தொடர்ந்து பேசியபோது “அப்பட்டணம் இருக்கவேணுமென்கிற மனது இருந்தாலல்லவோ இப்பேச்சைக் கேட்கவேணும்? அதைச் சுத்தித் தரையாக்கிப் போட்டு, அவர்களைக் கொண்டு புதுச்சேரியிலே சேர்த்து , இதைப் பெரிய பட்டணமாக, சென்னப்பட்டணத்தைப் போல நூறு மடங்கு பெரிதாக ஆக்க நினைத்திருக்கிறதற்கு , நீ உபகாரமாயிருக்கிறாப்போல காணவில்லையே” என்று பிள்ளையின் பேரிலே கோபப்பட்டார் ஆளுநர் (த4: 219-20). இவ்வாறு பிரெஞ்சுக்காரர் ஆட்சியின் சென்னையானது மிகுந்த அழிவுக்கும் அலங்கோலத்துக்கும் ஆட்பட்டது.
கொள்ளையோ கொள்ளை
சென்னையிலிருந்த வீடுகளையும் கிடங்குகளையும் பிரெஞ்சுக்காரர் கொள்ளையிட்டனர். மக்கள் நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், பூந்தமல்லி, செங்கல்பட்டுப்பாளையம் போன்ற இடங்களுக்கு ஓடினர். இரண்டாம் முறையும் மயிலாப்பூர் கொள்ளையிடப்பட்டது. பல சென்னை வணிகரும் பொதுமக்களும் தங்கள் செல்வமனைத்தையும் பறிகொடுத்தனர். அவ்வூரே நாசப்படுத்தப்பட்டது. அருகிலிருந்த பறையர், பள்ளிகள், துலுக்கர் போன்ற பிறரும் இதுதான் சமயமென்று மயிலாப்பூரையும் அடுத்திருந்த ஊர்களையும் கொள்ளையிட்டனர். சென்னை ஆளுநர் மோர்சும் துணை ஆளுநர் மான்சனும் போர்க்கைதிகளாகப் புதுச்சேரிக்குக் கொண்டுவரப்பட்ட போது (11) அவர்களோடு வந்த பிரெஞ்சு அதிகாரிகள், 200 சொல்தாதுகள், 100 மாயே சிப்பாய்கள் ஆகியோர் தாங்கள் கொள்ளையடித்த பொருட்களை புதுச்சேரிக்குக் கொண்டுவந்தனர். அவர்கள் பிள்ளைச்சாவடிக்கும் முத்தியால்பேட்டைக்குமிடையில் பல வீடுகளில் அவற்றை ஒளித்து வைத்ததையும், அவை பின்னர் பட்டண வாயிலில் லெபோன் என்ற அதிகாரியால் சோதித்து அனுமதிக்கப்பட்டதையும், லெபோன் அவற்றின் மதிப்பை நூற்றுக்குப் பத்தாகக் குறைத்து மதிப்பெழுதிக் கொண்டு லஞ்சம் வாங்கிக் கொண்டதையும் பிள்ளை விவரமாகவும் வருத்தத்துடனும் எழுதுகிறார் (த3:127, 132-36). மிக உயர்ந்த கவுன்சிலரும் படைத்தளபதியுமான பரதியும் தான் சுருட்டிய பொருள்களை 1746 டிசம்பரில் புதுச்சேரிக்குக் கொண்டுவந்தார். அவற்றுக்குக் காவலாக 100 சொல்தாதுகளும் 40-50 காப்பிரிகளும் (நீக்ரோச் சிப்பாய்களும்) 30 மாயேச் சிப்பாய்களும் வந்தனர்.
திருப்போரூரை இவர்கள் கடந்ததும், நவாபின் மகன்கள் மபூஸ் கானும் அன்வர் கானும் 1,000 குதிரைகளும் 2,000 சேனைகளும் சூழ்ந்து கொண்டன. அவர்களை விரட்டிக்கொண்டு வெகுதூரம் சென்றதும், அவர்களில் சிலர் பின்தங்கி பலவற்றைக் கவர்ந்துகொண்டனர். வரிசையின் பின்புறத்தில் மிகுந்த காவலோடு பெட்டிகளில் பரதியால் கொண்டுவரப்பட்ட விலையுயர்ந்த ரத்தினங்களும் தங்கம் வராகனும் பல தினுசுத் துணிகளும் அவர்களால் தட்டிச் செல்லப்பட்டன. இப்படி சதுரங்கப்பட்டணம் வரையில் முஸ்லீம் துருப்புகள் தொல்லை கொடுத்து பெரு நஷ்டம் ஏற்படுத்தினர். இதைப் பற்றிப் பிள்ளை எழுதுகிறார்: “அவனவன் எத்தனை கஷ்டப்பட்டுச் சம்பாதித்த செல்வம்? இந்த உடைமைகளைப் போக்கடித்துக் கொண்டால், அவனுக்கு எவ்வளவு கிலேசமும் திகிலும் ஏற்பட்டு மனம் நெருப்பாய் எரிந்திருக்கும்? அப்படிப்பட்ட உடைமைகளை இவன் கொண்டு வந்து வீட்டிலே வைத்தால், அந்த நெருப்பு இவன் வீட்டைப் பஸ்பம் பண்ணாதே போகுமோ? அதற்குத் திருஷ்டாந்தமாக, முன் புதுச்சேரிக் கப்பல் மணிலாவுக்குப் போகிறதை இங்கிலீஷ்காரன் பிடித்த போது எத்தனை பேரது மனது எரிந்தது? அந்த நெருப்பு தானே போய்ச் சென்னப்பட்டணத்திலே விழுந்து, சென்னப்பட்டணம் இந்தப் பாடாச்சுது” ( த3:120-21). பரதியின் காவலுக்கு மேலும் துருப்புகளைப் புதுச்சேரியிலிருந்து துய்ப்ளே அனுப்பினார். சதுரங்கப்பட்டணத்திலிருந்து எஞ்சியவை ஐந்து சலங்குகளில் ( சிறு கப்பல்கள்) கொண்டுவரப்பட்டன. பெரும்பொருளைப் பறிகொடுத்த புதுச்சேரியில் நுழைந்த பரதியின் முகச் சோர்வையும் வருத்தத்தையும், தனக்கும் அதில் பங்கிருந்ததால் ஆளுநரின் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தையும் கூடப் பிள்ளை வருணிக்கிறார். (த3:116-17. 123-25) இவ்வாறு வந்த செல்வம் இவ்வாறு தான் போகும் என்று பிள்ளையிடம் கூறி மன ஆறுதல் கொண்டார் துய்ப்ளே!
சென்னையில் வீடுகளையும் கோயில்களையும் பிரெஞ்சுக்காரர் இடித்தனர். நவாபுவின் திவான் குலாம் உசேன் சாயபு, முந்திய நவாபின் திவான் இமாம் சாயபு ஆகியோர் பிரெஞ்சு ஆதரவாளர்களாக இருந்தும் கூட அவர்களது வீடுகளும் மற்றோரது வீடுகளைப் போலவே சென்னையில் இடிக்கப்பட்டன. அவற்றிலிருந்த பொருள்களும் தானியமும் கைக்கொள்ளப்பட்டன. முஸ்லீம்கள் தமக்கெதிராகப் போர் செய்வதாலேயே தாங்கள் இவ்வாறு செய்வதாக பிரெஞ்சுத் தரப்பில் சொல்லப்பட்டது (த3:124-27). அவர்கள் எழுதிய கடிதங்களுக்கும் ஒழுங்கான பதில்கள் அனுப்படவில்லை. பிள்ளை இது பற்றிப் பேசிய பொழுது, “நீ எப்பொழுதும் முஸ்லீம்களுக்கு ஆதரவாகவே பேசுகிறாய். பிரெஞ்சுக் கம்பெனி விஷயத்தில் உனக்கு அக்கறையில்லை” என்று சொல்லிவிட்டு தன் மனைவியின் அறைக்குள் சென்றுவிடுவார் துய்ப்ளே. பிள்ளைக்கும் அவரது தாயாதிகளுக்கும் சொந்தமான மூன்று மாடிவீடுகளும் இவ்வாறே பாழ்படுத்தப்பட்டன. பிள்ளைக்கு அவரது குமாஸ்தாக்கள் சென்னையிலிருந்து அன்றாடம் கடிதம் அனுப்பி இச்செய்திகளை எல்லாம் தெரிவித்தனர். பிரெஞ்சுக்காரர் சிலரும் கூடப் பிள்ளையிடம் இவ்வழிவுச் செயல்களைப் பற்றி வேதனைப்பட்டனர். சென்னையைப் பிரெஞ்சுக்காரர் பிடித்ததால் தான் எல்லாவற்றையும் இழந்துவிட்டதாகவும், சென்னையைப் போல் புதுச்சேரியை ஆக்கிவிடவேண்டுமென்கிற துய்ப்ளேயின் கனவு ஒருக்காலும் நனவாகாதென்றும், காரணம் சென்னையில் ஒவ்வொரு வர்த்தகனும் கவர்னர் போலச் சகல வசதிகளோடும் வாழ்கிறானென்றும், புதுச்சேரியிலோ தமிழரின் கோவிலில் பாதிரிகள் மலத்தைக் கரைத்து ஊற்றுகிறார்களென்றும் ஒரு பிரெஞ்சு வணிகரான பார்னவெல் (Barnevel) பிள்ளைக்கு எழுதினார் (3: 222-23).
புதுச்சேரியிலிருந்த கம்பெனியர் சுப்பீரியர் கவுன்சில் (Conseil Superieur) “ சென்னையிலுள்ள வர்த்தகர் மற்றும் எல்லா சனங்களும் எட்டு நாளைக்குள்ளாகப் புதுச்சேரிக்கு வந்துவிடவேண்டும்; தங்களது சரக்கு, சாமான்களை அவர்கள் கோட்டையிலே ஒப்படைத்துவிட்டால், அவை கப்பல் மூலம் புதுச்சேரிக்கு அனுப்பப்பட்டு அவர்கள் கையில் ஒப்புவிக்கப்படும்; இந்த எட்டு நாளைக்குள்ளாகப் புதுச்சேரிக்குப் புறப்படாதோரின் பொருட்கள் அனைத்தும் கம்பெனிக்கு உரித்தாகிப்போகும்“ என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு, 1747 மார்ச்சில் அதை நாலு காகிதத்திலே எழுதி, சென்னையின் நாலு வாசலிலேயும் அடித்து வைத்தனர். சில பேர் “ எங்களது சரக்குகளை எடுத்துக் கொண்டு போனாலும் போங்கள், நாங்கள் அவ்விடத்துக்கு வருகிறதில்லை” என்று சொல்லிவிட்டார்களென்றும், சிலர் அரைகுறை மனதோடு மதாம் துய்ப்ளேவுக்கு ஆளனுப்பிச் சமரசம் பேசப் போகிறார்களென்றும் பிள்கைக்குக் கடுதாசி வந்தது (த3:306-08).
சென்னை திருப்பி ஒப்படைக்கப்படுதல்
நிசாமுக்கும் நவாபுக்கும் எழுதிய பல கடிதங்களில் தான் சென்னையைத் திருப்பித் தந்துவிடுவதாகவும், அதற்கு ஈடாக புதுச்சேரியை யடுத்த வில்லிய நல்லூர், வழுதாவூர் கூனிமேடு பர்கானாக்களையும் அவற்றைச் சேர்ந்த கிராமங்களையும் பிரெஞ்சுக் கம்பெனிக்குத் தந்துவிட வேண்டுமென்றும், ஆனால் சென்னையை ஆங்கிலேயருக்கு எக்காரணம் கொண்டும் கொடுத்துவிடுதல் கூடாதென்றும் துய்ப்ளே வலியுறுத்தினார் (4:116, 167: 6:55). அவற்றுக்காக 60- 70 ஆயிரம் ரூபாய் தரவும் தான் தயாராயிருப்பதாக அவர் தெரிவித்தார் (4:343-46, 5:175-76). இந்நிலையில் 1749 ஜூலை 19 அன்று ஆங்கிலேயத் தளபதியான பொஸ்காவெனிடமிருந்து (Boscawen) தேவனாம்பட்டணத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. (12) ஐரோப்பாவில் தம்மிரு அரசுகளுக்குமிடையே ஒரு சமாதான உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளதால், அதன்படி சென்னையைத் திருப்பிக் கொடுத்துவிடுமாறு அவர் அதில் கேட்டிருந்தார் எனப் பிள்ளை அறிந்தார். உடனே கவுன்சிலைக் கூட்டி ஆலோசனை நிகழ்த்தி, “ எங்களுக்குக் கப்பல் ஏழெட்டு நாளையிலே வரும், அதன் பேரிலே வருகின்ற காகிதங்களைப் பார்த்துக் கொண்டு உங்கள் பட்டணம் உங்களுக்கு ஒப்புவித்துப் போடுகிறோம்” என்று துய்ப்ளே பதில் எழுதினார். இக்கடிதம் வந்தது முதல் “ மூன்று நான்கு நாளாய் அவர் வெகுயோசனையின் பேரிலிருந்ததையும் பிள்ளை கண்டார் (த 6:118. 121).
தாயகத்திலிருந்து உரிய ஆணைகள் வரப்பெற்றதும் செப்டம்பர் முதல் தேதி திங்கட்கிழமை காலை எட்டு மணிக்கு பிரெஞ்சுக்காரக் கொம்மந்தான் பர்த்தலெமி முதலியோர் ஆங்கிலேயத் தளபதிகள் பொஸ்காவென், லாரன்ஸ் ஆகியோர் வசம் சென்னைக் கோட்டையை ஒப்படைத்து, அவர்கள் அழைப்பின் படி அவர்களோடு விருந்தும் சாப்பிட்டுவிட்டு, செப்டம்பர் 4 ஆந்த தேதி குருவாரம் புதுச்சேரிக்கு மீண்டு ஆளுநருக்கு அனைத்தையும் தெரிவித்தனர். “எட்டு மணி வேளைக்கு அவர்களங்கே கோட்டையும் பட்டணமும் வாங்கினதும் பிராமணர்கள் வந்து பூசை பண்ணித் தேங்காயுடைத்து ஆடு வெட்டி என்ன என்னவோ தமிழ்ச் சடங்குகள் செய்து கொடிபோட்டார்களென்றும், அப்பால் கோட்டையிலே இருக்கிற பீரங்கிகளும் கப்பலிலேயிருக்கிற பீரங்கிகளும் ஏகவேளையிலே வெகு சத்தமாய்ச் சுட்டார்களென்றும், முன் சென்னப்பட்டணத்திலிருந்து வெளியிலே போயிருந்த தமிழர்கள், நம்முடைய நாளிலே ஒருத்தராகிலும் வராதிருந்தவர்களெல்லாம், எங்கேயிருந்தார்களோ, அந்தக் கொடி போடுகிற வேளைக்கு வந்துவிட்டார்கள் என்றும், தமிழர், துலுக்கர், சோனகர், பட்டணவர், கூலிக்காரர் முதலாய்ப் பத்து லட்சம் பிரஜைகள் வந்து நிரம்பிப்போய், அவரவர்களுக்குத்தான் கோட்டையும் பட்டணமும் வந்தாப்போல சந்தோஷப்பட்டனர் என்றும், உடனே சகல ஜனங்களும் ஐந்து வருஷத்துத் தீர்வை, சகல சரக்கு வரி, வீட்டு வரி, குப்பை வரி முதலானதுகள் என்ன உண்டோ அதுகளெல்லாம் செலுத்தத் தேவையில்லை என்றும் ( ஆங்கிலேயர் ) தமுக்குப் போடுவார்கள் என்று இது முதலான சேதிகளெல்லாம் துரையவர்களுடனே” அவர்கள் சொன்னார்கள்.
இதை எழுதிவிட்டு, பிள்ளை வரலாறு எழுதுகிறார்: “ இங்கிலீஷ்காரர் முன்பு இந்தியாவுக்கு வந்து, சென்னப்பட்டணத்துக்கு வந்து கொடிபோட்ட 121 வருஷம் 5 மாதத்துக்குப் பிற்பாடு, பட்டணத்துக்கு இசைகேடு வந்து, முன் அக்ஷய வருஷம் புரட்டாசி மாதம் 9 ஆம் தேதி புதவாரநாள், 1746ஆம் வருஷம் செப்டம்பர் 21 ஆம் தேதி, முசே லபூர்தொனே சண்டை போட்டு மேஸ்தர் ( மிஸ்டர்) மார்சு குவர்னதோர் வசத்திலே ஒப்புக் கொண்டு பிரான்சுக் கொடி பறக்கவிட, மறுபடியும் இங்கிலீஷ்காரருக்கு பிரான்ஸ்காரருக்கும் முன் விபவ வருஷம் ஐப்பசி மாதம் 5 ஆம் தேதி, 1748, ஒக்தோபர் மாதம் 17 ஆம் தேதி சீர்மையிலே ராஜாக்கள் சமாதானமாய்க் கையெழுத்துப் போட்டுக்கொண்டு சென்னப்பட்டணம் ஒப்புவித்துப்போடச் சொல்லி எழுதி வந்து , இங்கிலீஷ்காரர் மேஸ்தர் பொஸ்காவென் முதலான பேர் போய் ஒப்புவித்துக் கொண்டனர். 1749 ஆம் வருஷம் செப்தம்பர் மாதம் முதல் தேதி, சுக்ல வருஷம் ஆவணி மாதம் 20 ஆம் தேதி சோமவாரம் நாள் ஒப்புவித்துக் கொண்ட மட்டுக்கும், இரண்டு வருஷம் பதினோரு மாதம் பத்து நாளும் சென்னப்பட்டணம் பிரான்சுக்காரர் துரைத்தனம் செய்யவும் அவர்கள் கொடி பறக்கவும் சங்கல்பம் இருந்தபடிக்கு நடந்தது. அப்பால் எப்போதும் போலே இங்கிலீஷ் கொடி பறக்க பிராப்தியானபடியினாலே இங்கிலீஷ்காரரும் சென்னப்பட்டணம் போய்ச் சேர்ந்தார்கள். அந்தப் பட்டணத்துகுக் கஷ்டகாலம் வந்து, ஒரு கொடி போய் மறு கொடியானதினால் வீடுகள் முதலானவையெல்லாம் இடிபட்டுப்போனதுமல்லாமல், கனமான வர்த்தகர்கள் வெளியே புறப்பட்டுத் திரவியங்களைப் போக்கடித்துக் கொண்டுபோனதுமல்லாமல், அநேகம் பேர் செத்துப்போனார்கள். ஆன படியினாலே, பட்டணத்துக்குள்ளே குடியிருக்கிற ஜனங்கள் வந்து நிரம்பினாலும் முப்பது வருஷம் செல்லாமல் அது பழைய சென்னப் பட்டணமாக, கவர்னப்பட்டணமாக ஆகமாட்டாது….” (த6:136-38). (13)
நிறைவுரை
ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பில் இதற்குப் பின்னரும் நடைபெற்ற இரு கர்நாடகப் போர்கள், தமிழ் நாட்டின் அக்கால ஆட்சியாளர்கள் தில்லி பாதுஷாக்கள், நிசாம்கள், ஆற்காட்டு நவாபுகள், பாளையக்காரர்கள், கில்லேதர்கள் – ஆட்சி முறை, மொழிகள், சமுதாய வாழ்வு, கடல் வாணிகம், பொருளாதார அமைப்பு, சமயங்கள், சாதியமைப்புகள், வட இந்திய நிகழ்வுகள், ஐரோப்பியரால் முன்னுக்கு வந்த பட்டணங்கள், அன்று முக்கியத்துவம் பெற்றுத் திகழ்ந்த பெரிய மனிதர்கள் என இப்படி ஏராளமான உண்மைத் தகவல்கள் நமக்குத் திரட்டித் தரப்பெற்றள்ளன. நாடு முஸ்லீம்களின் கையிலிருந்து ஐரோப்பியரின் ஆதிக்கத்தின் கீழ் படிப்படியாகப் போய்க்கொண்டிருந்தது என்பதை நன்றாகக் கண்டும் ஐயமற உணர்ந்தும் எழுதிவைத்துள்ள ஒரே இந்தியர் அல்லது தமிழர் ஆனந்தரங்கரே. இப்பெரு மனிதரின் மிக விரிவான குறிப்புகள் மிக்க ஆதாரபூர்வமானவை என்பதையும், வரலாற்றுக்குப் பெரிதும் பயன்படுபவை என்பதையும் இந்நூலின் ஆங்கிலப் பதிப்பாளர்கள் குறிப்பிட்டு, இவ்வளவு சுவையான நூலை இன்னும் கூடுதல் தகவல்களைத் தந்து மேலும் விரிவாக எழுதாமல் விட்டுவிட்டாரே என வருந்துகின்றனர். (14)
அடிக்குறிப்புகள்
- அவற்றுள் முக்கியமானவை: Sir William Foster எழுதிய Foundations of Fort St.George, Madras ( London, 1902); Colonel Davidson Love என்பாரின் Vestiges of Madras ( London, 1902) என்பன.
- ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கு மிடையில் தமிழகத்தில் 1746 முதல் 1761 வரை நடைபெற்ற மூன்று கர்னாடகப் போர்களின் காலத்தில் எழுதப்பட்டு, அவை பற்றிய ஏராளமனா நேரடிச் செய்திகளை விவரிப்பதாலேயே ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பு ஒரு வரலாற்று ஆவணமாகப் பெரு முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகத்தினை வெள்ளையருக்கு அடிமைப்படுத்திய இப்போர்கள் பற்றிக் கூறும் தமிழிலுள்ள ஒரே சமகால நூல் இதுவே. தமிழர்கள் இந்நூலின் பெருமையினை இன்னமும் உணராமலிருப்பது வருத்தற்குரியது. தமிழில் இதுகாறும் வெளிவந்துள்ள இந்நாட்குறிப்பின் எட்டுத் தொகுதிகளும் ஆயிரக் கணக்கில் பிழை மலிந்து, படிக்க இயலாமலும் படிப்போருக்குப் பொருள் விளங்காதவாறும் அமைந்துள்ளதும் வருத்தற்குரியது. தக்காரைக் கொண்டு இவற்றினைச் செம்மையாக மறுபதிப்பு செய்தலும், எஞ்சிய தொகுதிகளை அச்சேறுதலும் தமிழரின் தலையாய கடமைகளுள் ஒன்றாகும்.
- ஆங்கிலமொழிப் பதிப்பில் காணப்படும் இவ்வாசகம் தமிழ்ப் பதிப்பில் விடுபட்டுள்ளது.
- பிள்ளை சென்னப்பட்டணம், புதுச்சேரிப் பட்டணம், சதுரங்கப்பட்டணம் என்றே அனைத்திடங்களிலும் எழுதுவதால் அவ்வாறே இக்கட்டுரையில் எழுதப்படுகிறது.
- G.B.Malleson, History of the Fresch in India between 1674 and 1761, New Delhi, Renaissance Publishing House, 1984, pp, 132-35.
- நம்பிள்ளைக்கும் தெரியாமல் இக்கடிதங்களை துய்ப்ளே தனது பார்சிமொழி உதவியாளரான தெலார்ஷ், பார்சி துபாஷியான மதனாந்த பண்டிதர் ஆகிய இருவர் மூலம் தயாரித்து அனுப்பியிருந்தார். அடுத்த நாளே பண்டிதர் இந்த மறைவான விஷயத்தைப் பிள்ளைக்கு வெளிப்படுத்தினார். பிரெஞ்சுக்காரருக்கும் ஆங்கிலேயருக்குமிடையிலான கடிதப் போக்குவரத்தும், பிரான்சுக்கு எழுதப்படும் கடிதங்களும் கூடப் பிள்ளைக்குத் தெரிய அவசியமில்லை. லபூர்தொனேவுக்கும் துய்ப்ளேவுக்குமிடையிலான கடிதப் போக்குவரத்தும் இதில் அடங்கும். அவை ஆளுநர் மற்றும் சில பிரெஞ்சுக்கார் வாயிலாகத் தனக்குத் தெரியவந்த போது அவற்றைத் தன் ஏட்டில் அவர் குறித்து வைக்கத் தவறவில்லை. உள்நாட்டு ஆட்சியாளர்களோடு நடந்த பறங்கி மொழி, தெலுங்கு, பார்சி, இந்துஸ்தானி, தமிழ்க் கடிதப்போக்குவரத்து மட்டுமே அவர் மூலம் பெரும்பாலும் நடந்துள்ளது.
- ஆங்கிலேயப் போர்க்கப்பல்களின் நடமாட்டம் காரணமாகப் பிரெஞ்சுக்கடல் வாணிபமே படுத்துவிட்ட நிலையில், புதுச்சேரியில் தனது ஊழியர்கட்கும் ஊதியம் தர இயலாமல் பிரெஞ்சுக் கம்பெனி திண்டாடிய இவ்வாண்டுகளில், சென்னையில் இங்கிலீஷ் கம்பெனியின் செழிப்பான பொருளாதார நிலையினை இதிலிருந்து நாம் நன்கு அறியலாம். சென்னை மக்களும் வணிகரும் இங்கிலீஷ் கம்பெனியினிடத்தில் கொண்டிருந்த விசுவாசத்துக்கு இதுவே காரணமாகும்.
- பிரெஞ்சுக்காரர் சிதம்பரம், காரைக்கால் போன்ற ஊர்களுக்கு “டபால்“ எடுத்துச் செல்லத் தபால் runnerகளை நியமித்திருந்தனர். சென்னையைப் பிடித்தபின் அங்கும் தபால்கள் கரை மூலமாகவும் கடல் மூலமாகவும் அனுப்பப்பட்டன. ஆற்காடு, செங்கல்பட்டு, கூடலூர், மேற்குக் கடற்கரையில் மாயே, தக்கணம், சூரத் போன்ற ஊர்களுக்கும் கடிதங்கள் கொண்டு செல்ல பிராமணர்கள், காசிதுகள், அறுக்காறுகள் நியமிக்கப்பட்டிருந்தனர். முப்பது வருடங்களாக சில பிராமணர்கள் ஆத்தூர், சேலம், சேந்தமங்கலம் வழியாக மிக நாணயமாக புதுச்சேரியிலிருந்து கடிதங்கள் மட்டுமின்றி, ஆயிரக்கணக்கில் வராகன்களையும் கொண்டு சென்றதாகப் பிள்ளையின் நாட்குறிப்பு தெரிவிக்கிறது. புதுச்சேரியில் ஒரு தபால் நிலையமும் இருந்தது.
- இத்தகைய அனைத்து பிரெஞ்சுக்காரர் கூட்டம் “ தேசிய சபை” என்று அழைக்கப்பட்டது.
- மதாம் துய்ப்ளேவுக்கு முதற் கணவர் வெஞ்சான் மூலம் பிறந்த 11 குழந்தைகளில் ஒரு பெண்ணே தெப்ரமெனிலின் மனைவி, துய்ப்ளே வெஞ்சானின் விதவையை மணந்து, ஒரே ஒரு ஆண் மகவுக்குத் தந்தையானார். ஆனால் இக்குழந்தை சில மணிகளிலேயே மரித்துப் போனது. தனது மனைவியின் முதல் தாரத்துப் பெண்களுக்குத் துய்ப்ளேவே தந்தையாக இருந்து புதுச்சேரியில் திருமணம் செய்து வைத்தார்.
- மோர்சும் மான்சனும் போர்க்கைதிகள் எனினும் மிகுந்த மரியாதையோடும் அன்புடனும், ஐரோப்பியர் வழக்கப்படி, விருந்தாளிகளைப் போலவே நடத்தப்பட்டு, அடுத்த ஆண்டின் துவக்கத்தில் சில உறுதிமொழிகளை அவர்களிடமிருந்து எழுதிப் பெற்றுக்கொண்ட பின், புதுச்சேரியிலிருந்து தரங்கம்பாடிக்குச் சென்று தாய் நாட்டுக்குக் கப்பலேற அனுமதிக்கப்பட்டனர் (த3:95-96, 215, 220-21, 227).
- சென்னையை இழந்தபின் இன்று கடலூரின் ஒரு பகுதியான விளங்கும் தேவானாம்பட்டணத்துக் கோட்டையைத் (இதனை ஆங்கிலேயர் Fort St.David என்றனர்) தமிழ் நாட்டில் தமது தலைமையிடமாக ஆங்கிலேயர் கொண்டனர். தங்களது கிடங்குகள், டங்காசாலை முதலியவற்றையும் சென்னையிலிருந்து இவ்விடத்துக்கு மாற்றிக் கொண்டனர்.
- நம் பிள்ளையின் இந்த ”30 வருடக்“ கணிப்பு பற்றி, ஆங்கிலப் பதிப்பின் ஆசிரியர் டாட்வெல் ( H.Dodwell) எழுதுவதைக் கவனிக்கலாம். “Ranga Pillai’s prediction was verified. Six years later the Fort St.George Council worte ( Public Despatches to England, October27, 1755: “ The wealthy inhabitants of the Black Town are very few indeed, compared with those before the loss of this settlement ….” (6: 161 FN.)
- இவை பற்றி இன்னும் விவரமாக அறியவிரும்புவோர், இக்கட்டுரையாசிரியர் எழுதியுள்ள “The Colonial World of Ananda Ranga Pillai, 1736-61” என்ற ஆங்கில நூலையோ, “ஆனந்தரங்கப்பிள்ளை காலத் தமிழகம் 1736 – 61” (பதிப்பாளர் ஆசிரியர், 11 இரண்டாவது தெரு, கைலாச நகர், லாசுப்பேட்டை, புதுச்சேரி – 605 008) என்ற தமிழ் நூலையோ பார்க்கலாம். முழுமையாகவே படிக்க விரும்புவோர் நாட் குறிப்பினையே படிப்பார்களாக. ஆனால் படிக்கத்தக்க விதத்தில் அவை முழுமையாகவும் செப்பமாகவும் என்று வருமோ? ஆனந்தரங்கர் வங்கத்திலோ மகாராட்டிரத்திலோ பிறந்து இந்நூலினை அம்மொழியில் வடித்திருபபின் அது என்றோ வெளிவந்து புகழ் பரப்பியிருக்கும்.
தொகுத்து எழுதியவர் :

ராமச்சந்திர வைத்தியநாத்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

