1886 சென்னை பீபில்ஸ் பார்க் தீவிபத்தை பின்னணியாகக் கொண்டு, டி. செல்வகேசவராய முதலியார் மற்றும் தொகுப்பாசிரியர் ராமச்சந்திர வைத்தியநாத் இடம்பெற்ற வரலாற்று விளக்கப்படம்.

வரலாற்றுப் புதையல் – 11:- செல்வகேசவராய முதலியார் எழுதிய “ஸுப்பையர்” கதை – ராமச்சந்திர வைத்தியநாத்

வரலாற்றுப் புதையல் – 11

சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும்  பல்வேறு பத்திரிகைகளில், அரசு அறிக்கைகளில் வந்த படைப்புகளையும்  செய்திகளையும்  அச்சுப் பிசகாது அறிந்திடும் முயற்சியே இது.  அன்றைய உரைநடையை, இலக்கியப் போக்கினை, வரலாற்றை, செயல்முறையை   அறிந்திடும் முயற்சிகளில் ஒன்றாகக்கூட இதைக் கொள்ள முடியும்.

அன்றைய தினம் சென்னப்பட்டணத்தின் கீர்த்திவாய்ந்த பொழுது போக்கு ஸ்தலங்களில் ஒன்றாக  பீபில்ஸ் பார்க் இருந்திருக்கிறது.  அங்கே 1886ல் நிகழ்ந்த பெரும் தீவிபத்தில் நூற்றுக் கணக்கானோர் மரித்திருக்கின்றனர்.  இதனை  பச்சையப்பன் கல்லூரியில் போதகராக இருந்த ட்டி.செல்வகேசவராய முதலியார் எம்.ஏ  “ஸுப்பையர்” என்ற தலைப்பிலான கதையின் முற்பகுதியில் விவரணம் செய்துள்ளார். கதைமுழுமையாக இன்றி முற்பகுதி மட்டும் இங்கே தரப்படுகிறது.   வேப்பேரி எஸ்.பி.சி.கே. பிரஸ்ஸில் 1921ல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட அவரது சிறுகதைத்தொகுப்பான அபிநவ கதைகளில் இந்த ஸுப்பையர் கதையும் இடம் பெற்றுள்ளது. இவ்விபத்து குறித்து வெளியான குஜிலி பாடலையும் பிறிதொரு தருணத்தில் காண்போம்.

ஸுப்பையர்

ட்டி.செல்வகேசவராய முதலியார் எம்.ஏ

கிழக்கில் பெத்துநாய்க்கன் பேட்டைக்கும், மேற்கில் வேப்பேரிக்கும், வடக்கில் உப்பளத்துக்கும், தெற்கில் பூந்தமல்லி சாலைக்கும் இடையில், சென்னைக்கு நடுநாயகமாய் ஒரு பூங்காவனம் உண்டு.  ஸாதாரண ஜனங்கள் அதை ராணி தோட்டம் விக்டோரியா தோட்டம் சிங்காரத் தோட்டம் என்றும், இங்க்லிஷ் படித்தவர்கள் பீபில்ஸ் பார்க் என்றும் வழங்குவர்.  சில இடங்களில் செய்குன்றுகளும் சில இடங்களில் தாமரைத் தடாகங்களும் சில இடங்களில் தீவுகளும் சில இடங்களில் பர்யாயத்தீவுகளும் அமைத்து, இடைவெளிகளில் பல தேசத்திலிருந்து கொண்டுவந்த பலவித மரங்களை வளர்த்து, நகரபரிபாலன ஸபையார் இந்தத்தோட்டத்தை மிகவும் ரமணீயமாக வைத்திருக்கின்றனர்.

தோட்டம் ஸுமார் ஒரு மைல் நீளமும் கால் மைல் அகலமும் உள்ளதாயினும், உள்ளே குறுக்கு நெடுக்காய் வளைய வளையப் போட்டிருக்கிற பாதைகள் நாலைந்து மைல் நீளம் இருக்கும்.  பாதைகள் நீங்கலான இடம், எங்கே பார்த்தாலும், அறுகம்புல் பச்சென்று படர்ந்திருக்கும்.  பாதைகளின் இரு பக்கங்களிலும் கமுகமரங்களும் காட்டுவாழை மரங்களும் புன்கமரங்களும் பூவரசமரங்களும் வெய்யிலின் வெப்பம் தெரியாதபடி நிழல்கொடுத்து நிற்கும்.  புல்வெளிகளின் இடையிலே வட்டமாகவும் முக்கோணமாகவும் நாற்கோணமாகவும் பலகோணமாகவும் பாத்திகள் அமைத்து, பலவர்ணமான புஷ்பங்களைப் புஷ்பிக்கும் பலவித செடிகள் வைத்திருக்கும்.  சில இடங்களில் சிறிய மேடைகள் அமைத்து, அவைகளின் மீது சிறியனவும் பெரியனவுமான பல புஷ்பத் தொட்டிகள் அடுக்கடுக்காவும் வரிசை வரிசையாகவும் வைத்திருக்கும்.  இந்தப் புஷ்பப் பாத்திகளுக்கும்,  மேடைகளுக்கும், பாதைகளிலிருந்து இரண்டு முழம் மூன்று முழம் அகலமுள்ள கிளைவழிகள் அமைத்திருக்கும்.  அவைகளின் ஓரங்களில் சீமைக் கரிசிலாங்கண்ணி கருநொச்சி முதலானவைகள் அடத்தியாக வைத்துத் திட்டமாகக் கத்தரித்திருக்கும்.  சில இடங்களில் க்ரோட்டன் கொறுக்கச்சி மூங்கில் முதலியன புதர்போல் வளர்ந்திருக்கும்.  காலை மாலைகளில் வருவார் போவார் உட்கார்ந்து காற்றுவாங்கவும், காட்சிகளைக் கண்டு களிக்கவும், அங்கங்கே மர நிழலில் இருப்புப் பீடங்களும் விசிப்பலகைகளும் இட்டிருக்கும்.

இரண்டு மூன்றிடங்களில் பெரிய பெரிய கூண்டுகள் கட்டி, அவைகளில் புறாக்களும் கிளிகளும் மயில்களும் சிறிதும் பெரிதுமான பலவித பக்ஷிகளும் விட்டிருக்கும்.  ஓரிடத்தில் சுற்றிலும் இரும்புக் கம்பிகளால் வேலியிட்டு உள்ளே மான் கூட்டங்கள் விட்டிருக்கும்.  ஓரிடத்தில் ஒரு நீர் நிலையில் முதலை விட்டிருக்கும்.  ஓரிடத்தில் யானை கட்டியிருக்கும்.

இந்தத் தோட்டத்தின் வடபாதியின் மத்தியில், நான்கு பர்லாங்க் சுற்றளவுள்ள இடம், சுற்றிலும் துத்தநாகத் தகடுகளால் ஓராள் எட்டிப்பார்க்க முடியாத உயரமுள்ள அடைப்பு அடைத்திருக்கிறது.  அதினுள்ளே மூன்று பக்கம் ஸுமார் இருபதடி அகலமுள்ள நீர்க்கால் ஒன்று உண்டு.  அந்த நீர்க்காலில் சில பால்யர்கள் சிறு படகுகளில் ஏறித் தாங்களே துடுப்புப் பிடித்து படகைத் தள்ளிக் கொண்டு போவர்.  இந்த அடைப்பிடத்தின் உள்ளே போவோர்  வாயிலில் உள்ளே ஆளிடம் ஓரணா கொடுத்துப் போகவேண்டும்.  மேல்பாதியில் அங்கங்கே பெரிய பெரிய இரும்பு போன்கள் அமைத்திருக்கின்றன.  ஒன்றில் சிங்கம் இருக்கும்:  ஒன்றில் புலிகள் இருக்கும்: ஒன்றில் கரடி இருக்கும்: ஒன்றில் சிறுத்தை இருக்கும்: ஒன்றில் சிவிங்கி இருக்கும். நீர்க்காலின் அப்பால் ஒரு மேடையில் பலஜாதிக் குரங்குகள் கட்டியிருக்கும்.  வேடிக்கை பார்க்க வருவோர் அவைகளுக்கு வேர்க்கடலை பட்டாணி வாழைப்பழம் முதலானவைகளை வாங்கி வந்து கொடுப்பார்கள்.

தோட்டத்தின் தென்பாதியில் ஓரிடத்தில், ஒரு காணி விஸ்தாரமுள்ள இடத்தில், தேக்குவரிச்சல்களாலும் சட்டங்களாலும் பந்தலிட்டு, உள்ளே பெரிய தொட்டிகளில் மடல் மடலான இலைகளுள்ள சில மலைப்பூடுகளைத் தினம் இருமுறை மும்முறை ஜலம் விட்டு வளர்த்து, எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்திருக்கிறார்கள்.  பெர்னெரியென்றும் இவ்விடத்தில் வெய்யிற்காலத்தில் மாலைவேளையில் பீடங்களில் உட்கார்ந்து சிலர் ஜதை ஜதையாய்ப் பேசியிருப்பார்கள்.  சிலர் வர்த்தமானபத்ரிகை கதைப்புத்தகம் முதலியவைகளைப் படித்திருப்பார்கள்.  உள்ளே போனால் பொழுதுபோகிற வரையில் அதைவிட்டு வெளியில் வருவதற்கு மனம் ஒப்பாது.  அங்கே இருக்கிற வரையில் பெங்களூரில் இருப்பது போலவும் வெலிங்க்ட்டனில் இருப்பதுபோலவும் வெய்யிலின் வெப்பம் தெரியாமலிருக்கும்.

அவ்விடத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் பான்ட் ஸ்டான்ட் என்கிற வாத்யமேடை விமானம்போல் கட்டியிருக்கிறது.  மேடையைச் சுற்றிச் சிலகஜ தூரம்  வெளியிடம் விட்டுச் சுற்றிலும் பாதை அமைத்திருக்கிறது.  பாதை ஓரடி உயரமாய் ஸமமாக இருக்கிறது.  பாதையைச் சுற்றி இரும்புக் கம்பிளால் வேலியிட்டிருக்கிறது.  உள்ளே போவதற்கு நான்கிடங்களில் ஆறடி அகலமுள்ள வழிகள் விட்டிருக்கின்றன.  அந்த வழிகளின் மீது வளைவாகக் கம்பிகள் பின்னியிருக்கும்.  அவைகளின்மேல் ரங்கூன்மல்லி ஸம்பங்கி காக்கணம் முதலிய கொடிகள் பந்தலிட்டதுபோல் படர்ந்திருக்கும்.  வேலியைச் சுற்றிலும் பெரிய பாதை உண்டு.

வாரத்தில் ஒரு நாள் இந்த வாத்யமேடையில் ராணுவ வீரர்கள் பான்ட் வாசிப்பார்கள்.  அந்தக் கீதவாத்யத்தைக் கேட்டு மகிழும்படி இங்க்லிஷ்காரரும் சுதேசிகளும் வந்து கூடியிருப்பார்கள்.  இங்க்லிஷ் சிறுவர்கள் அந்த வாத்யத்துக்கேற்றவாறு கூத்தாடி ஸந்தோஷிப்பார்கள்.  அங்கே எரிகிற விளக்குகளின் ஜோதியாலும், ஜனங்களின் உடை விசேடங்களாலும் குளிர்ச்சியாக வீசும் காற்றினாலும், அந்த ஸமயத்தில் அவ்விடம் அதிரம்யமாக இருக்கும்.

முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னே இந்தத்தோட்டம் இப்பொழுதிருப்பதைவிட மிகவும் இனிமையாக இருந்தது.  அப்போது நகரசபா மண்டபம் அங்கே இல்லை.  மூர் மார்க்கெட் அதற்கப்பால் ஏற்பட்டது.  முனிஸிபல் ஆபீஸ் இப்போது ஏற்பட்டிருக்கிறது.  தோட்டத்தை மேல்பார்வை செய்கிற உத்யோகஸ்தனுக்காகக் கட்டியிருக்கிற சிறிய மாளிகை தவிர வேறே ஒரு கட்டடமும் இல்லை.  எவ்விடமும் பாயில்லாமலே இருக்கவும் படுக்கவும் ஏற்றபடி இந்தத்தோட்டம் சுத்தமாக இருந்தது.  எவ்விதமான துக்கமுள்ளவர்களுக்கும் இந்தத் தோட்டம் துக்கத்தை நீக்கி ஸந்தோஷத்தைக் கொடுக்கும் அமிர்த ஸஞ்சீவிபோல் இருந்தது.  தனிகரான மணவாளரும் மணவாட்டிகளும் தீவுகளில் தனியிடங்களில் கூச்சமில்லாமல் உல்லாஸமாய்ப் பேசியிருப்பார்.  கிழம் பழங்கள் விசிப்பலகைகளில் உட்கார்ந்து தங்கள் பூர்வோத்திரங்களைச் சொல்லி ஸந்தோஷிப்பார்கள்.  இங்க்லிஷ் படிக்கும் பாலகர்கள் பல வாதங்கள் செய்து உலாவித்திரிவர்.  நாட்டுப் புறங்களிலிருந்து வருகின்றவர்கள் காட்டு மிருகங்களைப் பார்த்து அதிசயிப்பர்: மிட்டாய் தினுஸுகளை வாங்கிவந்து இந்தத் தோட்டத்தில் தடாகக்கரைகளில் இருந்து உண்டு இன்பமடைவர்.  உபாத்யாயர்களும் உத்யோகஸ்தர்களும் வந்து அங்கங்கே உட்கார்ந்தும் உலாவியும் வேடிக்கைபார்த்தும் ஸந்தோஷடைந்து திரும்புவர்.

II

தாது வருஷத்திலும் அதற்கு முன்னும் சென்னை ராஜ்யத்தில் மழையில்லாமல் ஜனங்கள் பட்டபாடு இப்படிப்பட்டதென்று இப்போது அநேகர் அறியார்.  அந்த க்ஷாமத்தின் கொடுமை அடங்கின பிறகு, சென்னையில் உள்ள சில இங்க்லிஷ் கனவான்களும் சில சுதேசதனவான்களும் சில பெரிய உத்யோகஸ்தர்களும் கூடி ஆலோசித்து, டிஸெம்பர்மாத முடிவில், கிறிஸ்துவர்கள் கிறிஸ்து பிறந்த நாளைக் கொண்டாடுகிற காலத்தில், துரைத்தன உத்யோகசாலைகளிலும் பெரிய வர்த்தகசாலைகளிலும் கல்லூரிகளிலும் விடுமுறை காலமாகையால், அப்போது ஜனங்களின் விநோதத்தின் பொருட்டாக ராணி தோட்டத்தில் ஒரு சந்தை கூட்டுவதென்று ஏற்பாடு செய்தார்கள்.  உரிய ஏற்பாடுகளெல்லாம் அவர்களால் நியமிக்கப்பட்ட ஒரு கம்மிட்டியால் நடை பெற்று வந்தன.

வெளியூர்களிலிருந்து வருகிற உத்யோகஸ்தர்கள் தங்கள் மனைவிமக்களுடனே காட்டு மிருகங்களைப் பகலில் போய்ப் பார்ப்பது தவிர, தோட்டத்தின் வடபாதியில் விசேஷமான வேடிக்கை ஒன்றும் இராது.  பல ஜனங்கள் வருவதும் போவதுமாயிருப்பார்கள்.  தென்பாதிதான் சந்தைகூடுகிற இடம்.  வாத்ய மேடையாகிய பான்ட் ஸ்ட்டான்டைச் சூழ்ந்துள்ள பாதையைச் சுற்றிலும் வட்டமாகப் பந்தலிட்டு மூங்கில்களாலும் ஓலைகளாலும் அடைப்படைத்திருக்கும்.  அங்கே சந்தைக்கடை வைப்பவர்களுடைய வேண்டுகோளுக்கேற்றபடி பந்தல் தனித்தனி விடுதிகளாகப் பிரிந்திருக்கும்.  சிலர் மிட்டாய் விற்பார்கள்.  சிலர் ரொட்டி பிஸ்கட் பன் கேக் ஸோடாலெமொனேட் வெற்றிலைப்பாக்கு முதலியவைகளை விற்பார்கள்.  சிலர் அருமையான சீமை ஸாமான்களையும் நாட்டு ஸாமான்களையும் விற்பார்கள்.  சிலர் ஸாமான்களுக்கு எண்கள் இட்டு, அவைகளுக்கேற்ற டிக்கெட்டுகள் போட்டு, டிக்கெட்டுகளை ஒரு பெட்டியிலிட்டு “உங்கள் அதிஷ்டத்தைப் பாருஙகள்”  “உங்கள் அதிஷ்டத்தைப் பாருங்கள்” என்று கூவியிருப்பார்கள்.  விருப்பமுள்ளவர் பணங்கொடுத்து அந்தப் பெட்டியில் கையைவிட்டு ஒரு டிக்கெட்டில் கண்டிருக்கிற எண்ணுக்குரிய ஸாமானை எடுத்துக்கொடுப்பர்.    இப்படிப்பட்ட லாட்டெரி கடைகள் அநேகம் இருக்கும்.  அக்கடைகளில் டிக்கெட் பெட்டியிடம் நிற்பவர்களும் ஸாமான்களை எடுத்துக் கொடுப்பவர்களும் அழகிய இங்க்லீஷ் ஸ்த்ரீகள்.  ஒரு விடுதி கமிட்டியார் கூடுகிற இடம்.  பொழுதுபோனதும் வாத்ய மேடையைச் சுற்றி ஏற்றியிருக்கிற மின்சார விளக்குகள் பல சந்திரர்கள் ஏககாலத்தில் ஸமீபத்திலிருந்து ப்ரகாசிப்பதுபோல் அதிக ஆநந்தத்தைக் கொடுக்கும்.  அப்போது இடையிடையில் வாத்யகோஷம் உண்டாகும்.  உள்ளே ப்ரவேசிப்பதற்கு நாலு பக்கத்திலும் வழி விட்டிருக்கும்.   உள்ளே போவோர் ஒவ்வொருவரும் நாலணா கொடுக்கவேண்டும்.  ஜனங்கள் அதிக்ரமித்து நடவாதபடி, அங்கே போலீஸ் ஜவான்கள் சில நின்றிருப்பர்.

வளைவான இந்த அடைப்பிடத்தில் சந்தைக்கடைகளில் ஸாமான்கள் வாங்க வருவோர் மிகச் சிலரே.  பல ஜாதி ஆண்களும் பெண்களும் கூடுகிற இடமென்று தெரிந்திருப்பதால், ஆடையாபரணங்களால் உண்டாகும் ஒப்பனையழகைக் கண்டு மகிழும்படி வருகின்றவர்கள் பலர்.  மனித ஸ்ருஷ்டியில் அரிய ஆடையாபரணங்கள் இன்றியே ஸ்வயம்ப்ரகாசமாக விளங்கும் இயற்கையழகைக் கண்டு மகிழும்படி வருகின்றவர்கள் பலர்.  உடைகளின் பாங்கையும் அவைகளைத் தரிக்கும் பாங்கையும் கண்டறிய வருகின்ற பாலர் சிலர்.  ஆபரணங்களின் விதங்களைக் கண்டறிந்து அவைகளில் விசேஷமான விதமாய் ஆபரணம் செய்தணிய விரும்பிவருகின்ற ஸ்த்ரீகள் அநேகர்.  நெடுநாளாய்க் காணப்பெறாதவர்களைக் கண்டு களிக்க வருவார் சிலர்.  பெரிய உத்யோகஸ்தர்களைக் கண்டு ஸலாம்போடும்படி வருவார் சிலர்.  ஒரு நோக்கமும் இன்றி உல்லாஸமாய் உலாவும்படி வருவார் பலர்.  வயிறு பசித்தாலும் பொருட்டு செய்யாமல், சற்று நேரம் கழித்துப் போகலாமென்றே ஆலச்யம் பண்ணிக்கொண்டு அவ்விடத்தில் சுற்றிவருவார் தொகை மணிக்கு மணி அதிகரித்திருக்கும்.  காஷாயம் தரித்தவர்களும் சீக்கிரம் அவ்விடத்தை விட்டு நீங்கார்கள்.

இங்ஙனம் சந்தை கூடுகின்ற காலத்தில், ஸமீபத்தில் வெளியிடங்களில் கூத்துக்கொட்டாய்களும், நாடகசாலைகளும், மல்லர் தங்கள் திறத்தைக் காட்டுமிடங்களும், அங்கங்கே வகுத்திருக்கும்.  அப்ராக்ருதமான ஸ்ருஷ்டி விசேஷங்களில் சிலவற்றைச் சேகரித்துக் காட்டுகிற பந்தல்களும் சில வகுத்திருக்கும்.

கீழ்ப்பாதியில் சிலம்பம் பயின்றவர்களுக்குப் பரிசளிக்கும்படி இப்போது கட்டியிருக்கும் ஆத்லெடிக் அஸோஸியேஷன் என்கிற மண்டபமும் அடைப்பும் அப்போதில்லை.  அங்கே சுற்றிலும் கால்கள் நாட்டி வடங்கள் கட்டியிருக்கும். உள்ளே குதிரைப் பந்தயம் ரேக்லா பந்தயம் ஓட்டப் பந்தயம் முதலானவை நடக்கும்.  கையில் தண்ணீர்க்குடங்களை வைத்துக் கொண்டு ஓடுகின்றவர்களில் விழுவாரைக் கண்டும், கழுத்துவரையில் கோணிப்பைகளைக் கட்டிக்கொண்டு தத்தித் தொத்திக் குதித்தோடுகின்றவர்களில் தப்பி விழுவாரைக் கண்டும் ஜனங்கள் கொல்லென்று சிரிப்பார்கள்.  அவ்விடத்தில் உள்ளூற ஜனங்கள் நெருங்காதபடி ஸார்ஜெண்டுகள் குதிரைகளை வளையவளையவிட்டு ஜனங்களை வெருட்டியிருப்பார்கள்.  ஜனங்களைச் சில இடங்களில் போலீஸ் ஜவான்கள் அதட்டியிருப்பார்கள்.  சில இடங்களில், அந்த ஜவான்களை ஸமயம்பார்த்து ஜனங்கள் நெருக்கித் தள்ளிவிடுவார்கள்.  உயரமில்லாதவர்களில் சிலர் வண்டிகளின்மேலிருந்து வேடிக்கை பார்ப்பார்கள்: சிலர் மரக்கிளைகளில் வாலில்லாத வாநரம்போல் தொத்தியிருந்து வேடிக்கை பார்ப்பார்கள்.

குஜிலியில் அந்த ஸமயம் வேலையில்லாமையால், இந்த ஜனத்திரளில் தங்கள் வேலையின் திறத்தைக் காட்டும் பெரிய மனிதர்கள் சிலருக்கு அந்தக் காலம் நல்ல கந்தாயம்.  ஜேபியிலுள்ள நோட்டுகளும் மடியிலுள்ள காசுகளும்  மேலேயுள்ள அங்கவஸ்திரங்களும் ஸ்திரீகளின் கண்டமாலைகளும் இவர்களைக் கண்டால் மாயமாய்ப் போய்விடும்.  கோழி திருடிக் கூடவிருந்து குலாவுவதுபோல், இவர்கள் மிகவும் பரிதபித்து, “படவாவைப் பிடி பிடி” “அதோ ஓடுகிறான் கழுதை அடி அடி“  என்று கூவிப் போக்குக் காட்டுவார்கள்.

நாலைந்து நாள்கள் வரையில் இந்தப்ரகாரம் சிங்காரத் தோட்டம் திமில குமிலமாக இருக்கும்.  கடைசி நாள் இரவில் பத்துமணிக்கு மேல் பாணவேடிக்கை நடத்துவார்கள்.  அதில் அபூர்வமான சில அதிசங்களைக் கண்டு ஜனங்கள் ஆனந்தமடைவார்கள்.  அதேனோடு சந்தை முடிவுபெறும்.

III

1886-ம் வருஷத்து டிஸெம்பர் மாதத்துக்கு ஸரியான பார்த்திப வருஷத்து மார்கழி மாஸத்தில் இவ்விதம் சந்தைகூடி இரண்டு மூன்று நாள்கள் வரையில் எல்லா வேடிக்கைகளும் வழக்கம்போல் ஒழுங்காக நடந்துவந்தன.  நாலாநாள் மாலை ஏழுமணிக்கு, சந்தைக் கடைகளின் அடைப்பிலிருந்து ஓவென்ற அழுகுரல் புறப்பட்டது.  சுற்றடைப்பில் ஐந்தாறிடங்களில் ஏககாலத்தில் நெருப்புப்பற்றி எரிதலாயிற்று.  சில நிமிஷநேரத்தில் மேலுங்கீழும் இடமும் வலமுமாக நெருப்புப் பல பக்கங்களிலும் பரவத் தொடங்கியது.

வாயில்களின் ஸமீபத்தில் இருந்தவர்களில் எச்சரிக்கையாக ஓடிப்போனவர்கள் பிழைத்தார்கள்.  தீப்பற்றிவராத இடங்களில் மூங்கில்களை உடைத்தும் ஓலைகளைப் பிய்த்தும் அடைப்புகளில் வழிசெய்துகொண்டு ஓடின பாலர்களும் பலசாலிகளும் சிலர் பிழைத்தார்கள்.  நிமிஷநேரத்தில் வாயில்களினிடத்தில் ஜனங்கள் முன்பின்பாராமல் நெருங்கியதால், நசுங்குண்டிறந்தவர் சிலர், மிதியுண்டிறந்தவர் சிலர்.  அடைப்புத்தட்டிகளை உடைத்துக்கொண்டு போனவர்களில் ஓலைகளாலும் மூங்கில்களாலும் கீறுண்டு இரத்தம் வடிந்து கொண்டு போயினர் சிலர்.  ஜனநெருக்கத்தால் கையொடிந்தும் காலொடிந்தும்   “அப்பாடா“   “அம்மாடி“ என்று ஓலமிட்டும் நொண்டியும் போயினர் சிலர்.  சில நேரத்தில் அங்கும் தீ நெருங்கிவிட்டது; வாயில்களிடத்தும் தீ நெருங்கிவிட்டது.  “ஐயோ, குழந்தை எங்கே”  என்பாரும் “அப்பா எங்கே” என்பாரும் “அம்மா எங்கே” என்பாரும், “அத்தான் எங்கே” என்பாரும், “ஐயோ தீ  நெருங்கிவிட்டதே, என்ன செய்யலாம்” என்பாரும், “ஐயோ வெப்பம் பொறுக்கமுடியவில்லையே” என்பாருமாய் உள்ளே அகப்பட்டவர்கள் தத்தளித்திருந்தார்கள்.  பத்து நிமிஷநேரத்தில் பந்தல்களெல்லாம் தரையோடு தரையாய்விட்டன.  தலைமயிரும் மீசையும் தாடியும் பற்றியெரிந்து முகங்கரிந்தோடினார் சிலர்.  உடைகளையெல்லாம் கழற்றியெறிந்து நிர்வாணமாய் ஓடித் தப்பினார் சிலர்.  மற்றவர்களில் ஸ்மரணையில்லாமல் குற்றுயிராய்க் கிடைத்தவர் சிலரே.  மாண்டவர்கள் பலநூறு என்று கணக்கு ஏற்பட்டது.

சென்னை, எந்தத் தெருவிலே பார்த்தாலும், அரைமணி நேரத்தில் அல்லோலகல்லோலமா யிருந்தது.  “ஐயோ என் மகனைக் கண்டீரா” என்றழுதனர் தாய்மார்கள்.  “ஐயோ எங்கள் வீட்டுக்காரர் எங்கே” என்றழுதனர் பெண்டிர்கள்.  “தம்பியைத் தேடிப்பார்” என்று அண்ணன்மார்களை அனுப்புவர் சிலர்.  “மருமகன் இன்னும் வரவில்லையே” என்று தெருத்தெருவாய் அலைந்தனர் சிலர்.  “ஐயோ சொன்ன பேச்சைக் கேளாமல் போனானே, என்னவானானோ“ என்று அலைந்தார் பலர்.  “அண்டைவீட்டுக்காரப் பாவி பலாத்காரமாக இழுத்துக் கொண்டு போனான்.  அவனையும் காணோம் இவனையும் காணோம் “ என்று புலம்பினார் பலர்.  “எவனோ சிநேகிதன் வெள்ளையுஞ் சள்ளையுமாக வந்து வலித்துக்கொண்டு போனானே, என் மகன் கொச்சை.  செத்தானோ பிழைத்தானோ” என்று அலறினார் பலர்.

பிள்ளைகளைப் பறிகொடுத்தவர்களும், அண்ணனைப் பறிகொடுத்தவர்களும், தம்பியைப் பறிகொடுத்தவர்களும், பெண்களைப் பறிகொடுத்தவர்களும், பெண்டிரைப் பறிகொடுத்தவர்களும், வாயிலடித்துக் கொண்டும், மார்பிலடித்துக் கொண்டும், கையைப் பிசைந்துகொண்டும், வயிற்றைப் பிசைந்துகொண்டும், ஐயோ என்றும் அப்பா என்றும் அம்மா என்றும் கண்ணே என்றும் புலம்பிக்கொண்டும். சிங்காரத் தோட்டத்துக்குப் போனர்கள்.

இதற்குள் போலீஸார் தீயை அவித்து, பிணங்களை வேறிடத்தில் வரிசையாக வளர்த்தி, குற்றுயிரோருந்தவர்களை ஜெனரல் ஆஸ்பத்ரிக்குக் கொண்டு போயினர்.  சிற்சில அடையாளக் குறிப்புகளால் என் பிள்ளை என் தம்பி என் மாமன் என் மைத்துனர் என்று சில பிணங்களைச் சிலர் வண்டிகளில் கொண்டுபோயினர்.  அடையாளப் பிசகால் மாறின பிணங்கள் பல.  பரிஷ்காரமாய் இன்னாரின்னாரென்று தெரியாத பிணங்களைப் போலீஸார் கொண்டுபோய்ப் புதைத்து  விட்டார்கள்.

தொகுத்து எழுதியவர் : 

ராமச்சந்திர வைத்தியநாத்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *