வரலாற்றுப் புதையல் - 12:- சென்னையில் மிஸ்டர் காந்தியும் - மிஸ்ஸஸ் காந்தியும் (1915) சுதேசமித்திரன் தலையங்கம் - ராமச்சந்திர வைத்தியநாத் | Mr Gandhi and Mrs Gandhi in Chennai (1915) Swadesamitran Article | www.bookday.in

வரலாற்றுப் புதையல் – 12:- சென்னையில் மிஸ்டர் காந்தியும் – மிஸ்ஸஸ் காந்தியும் (1915) – ராமச்சந்திர வைத்தியநாத்

வரலாற்றுப் புதையல் – 12

சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும்  பல்வேறு பத்திரிகைகளில், அரசு அறிக்கைகளில் வந்த படைப்புகளையும்  செய்திகளையும்  அச்சுப் பிசகாது அறிந்திடும் முயற்சியே இது.  அன்றைய உரைநடையை, இலக்கியப் போக்கினை, வரலாற்றை, செயல்முறையை   அறிந்திடும் முயற்சிகளில் ஒன்றாகக்கூட இதைக் கொள்ள முடியும்.  

தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய காந்தியடிகளும் கஸ்தூரி பாயும்   1915ல் மிஸ்டர் காந்தி  மிஸ்ஸஸ் காந்தியாக அதுவும்  முதன் முறையாக சென்னப்பட்டணம் வந்த செய்தியை சுதேசமித்திரன் நாளிதழ் உடனுக்குடன்  பதிவு செய்துள்ளதோடு வருகை குறித்து தலையங்கமொன்றையும் எழுதியிருந்தது .  பின்னாளில் குமரி மலர் அக்டோபர் 1975 இதழில் அவை மறுபிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது.  

சென்னையில் மிஸ்டர் காந்தியும் மிஸ்ஸஸ் காந்தியும் (1915)

(சுதேசமித்திரன் தலையங்கம்: 19.04.1915 )

நேற்று சனிக்கிழமை சாயங்காலம் சென்னை வந்து சேர்ந்த நமது உத்தம தேசாபிமானிகளில் ஒருவராகிய மிஸ்டர் காந்திக்கும், அவரது மனைவிக்கும் நாம் நல்வரவு கூறுகிறோம்.  அவர் இத்தேசவாசியே யாவாரானாலும் நெடுங்காலம்  தென்னாபிரிகாவிலேயிருந்து விட்டாராதலால், இந்நாட்டில் அவருக்குப் போன விடங்களில் எல்லாம் இந்தியாவின் க்ஷேமத்தில் அக்கரை கொண்ட அயல் தேசவாசி யொருவருக்கு நடக்கும் மரியாதைகள் போன்ற மரியாதைகள் நடக்கின்றன.  அம்மரியாதைகள் அனைத்துக்கும் அவர் உரியரேயாவார்.

அவர்  தென்னாபிரிக்காவில் உள்ள இந்தியர்களின் நிலைமையை அடிமையினும் சீர்கேடான நிலைமையிலிருந்து புகழ்தற்கரிய தன்மறுப்புக் காட்டியும் எதிர்க்காமல் எதிர்க்கும் உபாயத்தைக் கைப்பற்றியும் செய்திருக்கும் செய்கைகளும் நடத்தியிருக்கும் நடவடிக்கைகளும் கல்லின்மேல் எழுத்துப்போல பல தலைமுறைக்கு நிலைத்து நிற்கும்.  

இப்போது அவர் காலஞ்சென்றுவிட்ட மிஸ்டர் கோகலேயின் இந்திய ஊழியச் சங்கத்தைச் சேர்ந்து அச்சங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு உழைப்பதை முன்னிட்டு இந்தியாவெங்கும் சுற்றுப் பிரயாணஞ் செய்து வருகிறார்.   

கும்பமேளா சமயத்தில் இமயமலைச் சாரலிலுள்ள ஹரித்துவாரத்திலிருந்த மிஸ்டர் காந்தி அம்மேளா கழிந்து சில தினங்களாவதற்குள்ளாக இச்சென்னைக்கு வந்து விட்டார்.

இங்கிருந்து புறப்பட்டுப் பின்னும் பலவிடங்களுக்கு அவர் போகக் கூடும்.

அவர் இப்போது செய்து வரும் சுற்றுப் பிரயாணம் வீணுக்குச் செய்யப்படும் சுற்றுப் பிரயாணமல்ல.  இந்திய ஊழியச் சங்க  வேலைக்குத் தம்மைத் தகுதியுடையவராய்ச் செய்து கொள்ளுவதற்காகச் செய்யப்படும் சுற்றுப் பிரயாணமாகும்.  அவர் இச்சென்னையில் ஒரு வாரம் போல தாமதிக்கிறார்.

மிஸ்டர் காந்திக்கும் அவர் மனைவிக்கும் உபசரிப்பு (1915)
சென்னையில் பொது மீட்டிங்கு

நேற்று (21,04,1915) மாலை 6 மணிக்கு விக்டோரியா பப்ளிக் ஹாலின் பின்புறத்திலுள்ள திறந்த மைதானத்தில் மிஸ்டர் காந்தியையும் அவர் மனைவியையும் சந்தித்து அவர்களை உபசரிப்பதற்காக ஒரு பொது மீட்டிங்கு கூடிற்று.

அந்த மீட்டிங்குக்கு பல மாணவர்களும் சென்னையிலுள்ள பல கனதனவான்களும், தலைவர்களும் வந்திருந்தார்கள்.  அவர்களில்

திவான்பகதூர் கே. கிருஷ்ணஸ்வாமி ராவ்

மிஸ்டர் ஜஸ்டிஸ் சதாசிவ அய்யர்

மிஸ்டர் ஜஸ்டிஸ் தயாப்ஜி

ஆனரபில் நவாப் ஸையெத் மகம்மது,

ஆனரபில் மெஸ்ஸெர்ஸ் வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரியார்,

பி.என்.சர்மா,

மிஸ்ஸஸ் பெஸண்டு,

திவான் பகதூர் சி. கருணாகர மேனன்,

ராவ்பகதூர் ஜி. நாராயண ஸ்வாமி செட்டி,

கான்பகதூர் குலாம் மகம்மது முஹாஜீர்,

மெஸ்ஸெர்ஸ் டி.ஆர்.ராமச்சந்திர அய்யர்,

டி.ஆர்.வெங்கடராம சாஸ்திரி,

சி.பி.ராமஸ்வாமி அய்யர்,

யாகூப் ஹுஸ்ஸேன்,

எஸ்,ஸ்ரீனிவாச அய்யங்கார்,

கே.ஸ்ரீனிவாச அய்யங்கார்,

ஜி.ஏ.நடேசன்,

டி.ரங்காச்சாரியார்,

என்.பட்டாபிராமராவ்

ரெவரெண்டு ஜே,பிட்மான், 

ரெவரெண்டு ஈ.டபிள்யூ.எவிங்க்

டாக்டர் எம்.கிருஷ்ணஸ்வாமி அய்யர்,

முதலியவர்கள், முக்கியஸ்தர்களாவார்கள்.

டாக்டர் ஸர் எஸ் சுப்பிரமணிய அய்யர் அக்கிராசனத்தை வகிக்கும்படியாக, லீக்கின் செக்ரிடேரிகளில் ஒருவராகிய மிஸ்டர் யாகூப் ஹுஸ்ஸேன் பிரேரித்தார்.  ரெவரெண்டு ஜே.பிட்மான் அதை ஆமோதித்தார்.  அதற்கிணங்கி ஸர் சுப்பிரமணிய அய்யர் அக்கிராசனம் வகித்து, லீக்கின் பிரஸிடெண்டான ரயிட் ரெவரெண்டு லார்டு பிஷப்பு (சென்னை) அவர்களிடமிருந்து மீட்டிங்கின் சேர்மனுக்கு வந்த கடிதத்தை வாசிக்கும்படியாக மிஸ்டர் நடேசனுக்குச் சொன்னார்.  அக்கடிதத்தின் அடக்கம் பின்வருமாறு:-

நான் சென்னையைவிட்டு வெளியே போயிருக்கிறதினால், சென்னைக்கு விஜயஞ் செய்திருக்கும் காந்தி தம்பதிகளைச் சந்தித்து உபசரிப்பதற்கான சந்தர்ப்பத்தை இழந்து விட்டதற்காக நான் விசனப்படுகிறேன்.  தவிர தென்னாப்பிரிக்காவில் வசித்து வந்த இந்தியர்களுடைய கஷ்டத்தை நிவர்த்தி செய்வதில் காந்தி தம்பதிகள் பலவித கஷ்டங்களுக்குள்ளாகியும் அவர்கள் அவைகளைப் பொறுமையுடன் சகித்து வந்தார்கள்.  பிறகு அவர்கள் எடுத்துக் கொண்ட பெரிய காரியத்தில் ஜெயமடைந்தார்கள்.  அவர்களுடைய நியாயமான தைரியத்தைப் பற்றியும் தன்னலம் பாராட்டாத தன்மையைப் பற்றியும் இன்னும் அவர்களிடத்தில் விளங்கும் பலவித அற்புத நற்குணங்களைப் பற்றியும் நான் சந்தோஷப்படுகிறேன்.

அப்பால் நேற்று மாலை சபா நாயகராக வீற்றிருந்த ஸர் எஸ்.சுப்பிரமணிய அய்யர் எழுந்து நின்று மிஸ்டர் காந்தி தென்னாப்பிரிக்காவில் செய்த அபாரமான காரியத்தைப் பற்றி புகழ்ந்து பேசிவிட்டு, அவர் இனி தேசத்திற்காக தம் வாழ்நாளை அர்ப்பணஞ் செய்வார் என்று சொன்னார்.

அதன் பிறகு மிஸ்டர் ஜி.ஏ.நடேசன் அவருக்கு ஒரு அட்ரெஸ்ஸை வாசித்துக் கொடுத்தார்.  அதை ஒரு சிமிழில் போட்டுக் கொடுக்கும் வழக்கமாயினும் அந்த வழக்கம் மிஸ்டர் காந்திக்குப் பிரியமில்லாததினால், அந்த அட்ரெஸ்ஸை அப்படியே கையில் கொடுத்தார்.  அதை அவர் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு சபையோரைப் பார்த்து நீண்டதோர் உபந்நியாசஞ் செய்தார்.  அதன் ஸாராம்ஸம் பின் வருமாறு:- நான் தென்னாப்பிரிக்காவில் உலகம் புகழத்தக்க காரியங்களைச் சாதித்தேன் என்று நீங்கள் சொல்லுவது மிகுதியாகச் சொன்னதேயன்றி அவ்வித புகழ்ச்சிக்கு நான் முற்றிலும் அருகனல்லன்; தவிர நான் இனிமேல் இந்தியாவுக்கு  என்னால் இயன்ற மட்டும் உழைத்து வருவேன்.  

மிஸ்டர் காந்தி தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று 20 வருஷத்திற்கு மேல் ஆய் விட்டது.  அவர் அங்கே இந்தியர்களுக்கு நேர்ந்த கஷ்டத்தை நிவர்த்தி செய்வதின் பொருட்டு உழைத்த உழைப்புக்கு அளவில்லை; நியாயத்திற்காக அவர் சண்டை போட்டார்.  அப்பொழுது அவருக்குப் பல சங்கடங்கள் நேர்ந்தன.  அவைகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு வேலை செய்தார்; கடைசியாக அவருடைய காரியம் ஜெயம் பெற்றது; இவ்வளவு சிறிய வயதில் இந்தியரின் க்ஷேமத்தைக் கருதி உழைத்துக் கடைசியில் ஜயம் பெற்ற அந்த தீரருடைய சாமத்தியத்தைப் பற்றி உலகம் புகழுகிறது.  அவர் இனி இந்தியாவிலேயே இருந்து இந்தியாவின் க்ஷேமத்திற்காகவே தம்முடைய வாழ்நாளை அர்ப்பணஞ் செய்வார்.  இப்படிப்பட்ட ஒருவரை உபசரிப்பது பொருத்தமாகும்.  மிஸ்டர் காந்தி திடகாத்திரராகக் காணப்படுவதில்லை.  ஒரு பெரும் கூட்டத்தில் அவரை அடையாளம் கண்டு பிடிப்பது அரிதாகும்.  இந்தியரின் பொருட்டு சண்டை செய்து கடைசியாக ஜெயித்த வீரரிடத்தில் விளங்கும் மனோசக்தி, நல்லொழுக்கம், சத்தியம் முதலிய குணங்கள், அபாரமானவை.  மிஸ்ஸஸ் காந்தியின் பதிபக்தியைப் பற்றி என்னென்று சொல்லுவது.  அந்த மாதை அவருடைய நிழல் என்றே சொல்லலாம்.  அவருடைய கஷ்ட காலத்திலும் சுக காலத்திலும், அவரை விட்டுப் பிரியாமல் அவருக்கு ஒரு பெருத்த துணைவியாக இருந்து வருகிறார்.  

காந்தி தம்பதிகளுக்கு உபசரிப்பு

ஸர் எஸ்.சுப்பிரமணிய ஐயர் – அவர் பேச்சுக்குப் பின் ஸ்ரீமான் காந்தி பின்வருமாறு பதிலளித்தார்.

சபாநாயகரே, நண்பர்களே!

இப்பெரிய சென்னை ராஜதானியிலுள்ள நீங்கள் அனைவரும் என் மனைவிக்கும் எனக்கும் காட்டிய கௌரவத்திற்காக நான் மிகவும் நன்றி பாராட்டுகிறேன்.  நீங்கள் எனக்கு வாசித்துக் கொடுத்த உபசாரப் பத்திரத்தில் எவ்வளவோ கௌரவித்துச் சொல்லியிருக்கிறீர்கள்.  அவ்வாறு நான் ஏதேனும் கௌரவத்திற்குப் பாத்தியமுடையவனாயிருந்தால், அக் கௌரவமானது எனது குருவின் பாதாரவிந்தத்திற்கே உரியது.  ஏனெனில் அவர் எனக்குப் புகட்டிய ஆவேச பலத்தினாலேயே இதுகாறும் தென் ஆபிரிக்காவில் உழைத்து வந்திருக்கிறேன்.  

என்னைத் துறவியென்றும் தெய்வத் தன்மை பொருந்தியவனென்றும் உபசாரப் பத்திரத்தில் சொல்லியிருப்பதை, நீங்கள் எனக்குச் செய்த ஆசீர்வாதமென்றே நான் நம்புகிறேன்.   அவ்வாறே ஜன்ம தேசமாகிய இந்தியாவிற்கு ஊழியஞ் செய்வதில் நானும் என் மனைவியும் பலங்கொண்டு வாழ்நாளை அர்ப்பணஞ் செய்யச் சக்தியுடையவர்களாவோம் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

நாங்கள் சென்னைக்கு வந்ததது அதிசயமல்ல.  இதற்கு முன்பே நாங்கள் இங்கு வந்திருக்க வேண்டும்.  நாங்கள் சென்னையை அலட்சியம் செய்து விட்டோமென்பதல்ல.  முதலிலேயே இங்கு வராமல் மற்ற ராஜதானிகளுக்கு முதன் முதல் நாங்கள் போன பின்பு இங்கு வந்ததைப் பற்றி நீங்கள் என்னை வித்தியாசமாக நினைக்க வேண்டாம்.

1896ம் வருஷத்திலே மிஸ்டர் கோகலேயை எனது ராஜகுருவாக நான் அடைந்தேன்.  அவ்வருஷத்திலேயே நான் உங்களின் முன்பு ஒரு அந்நியன் போல் தோன்றி, தென் ஆபிரிக்காவில் நம்மவரின் இழிவான நிலைமையைப் புகன்று வாதித்தேன்.  உடனே தப்பு இன்னதென்றும் சரி இன்னதெற்றும் அறியும்படியான சக்தி உங்களிடம் இருந்த தென்பதையும், தென் ஆபிரிக்கா இந்தியர்களின் நிலைமை எவ்வளவு முடுக்கான நிலைமையில் இருந்ததென்பதை நீங்கள் உடனே உணர்ந்து கொண்டீர்களன்பதையும் அறியலானேன்.

நான் தென் ஆபிரிக்காவில் உழைத்து வந்ததை உபசாரப் பத்திரத்தில் மிகவும் மிகைப் படுத்திப் புகழ்ந்திருக்கிறீர்களென்று நான் நிச்சயமாய்ச் சொல்லுவேன்.  (இவ்வாறு அவர் சொன்னதும் “இல்லை, இல்லை “ என்ற கூச்சல் கிளம்பியது)  நாங்கள் ஏதோ பிரமாதமாய்த் தென் ஆபிரிக்காவில் உழைத்து விட்டதாக மிஸ்டர் கோகலே சொன்னதை இந்தியா முழுவதும் நம்பியிருக்கிறது.  ஆதலின் அவ்வாறே நானும் என் மனைவியும் நீங்கள் எதிர்பாத்திருக்கும்படி மிகவும் பிரமாதமாய் இனி இந்தியாவில் உழைப்போம் என்பது நிறைவேறுமோ நிறைவேறாதோ என்று ஐயப்படுகிறேன்.

என்னையும் என் மனைவியையும் உபசாரப் பத்திரத்தில் நீங்கள் புகழ்ந்திருப்பதில் பத்திலொரு பங்குக்கு உரியவர்களானாலும், தென் ஆபிரிக்காவிலே கஷ்டப்படும் நமது சகோதரர்களுக்காகத் தாங்களும் பாடுபட்டு ஆவி துறந்திருப்பவர்களை நீங்கள் எவ்வாறு புகழ்வீர்கள்!

தேசத்தின் கௌரவம் கெடாமல் அதைக் காப்பாற்றுவதற்காக நாகப்பன், நாராயணசாமி ஆகிய 18 வயதுள்ள இருவரும் அரும்பாடு பட்டு எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களை அனுபவித்திருக்க அவர்களை நீங்கள் என்ன சொல்லிப் புகழ்வீர்கள்.  

தேசத்தின் கண்ணியமே பெரிதென்றெண்ணியிருந்த வள்ளியம்மை என்னும் 17 வயதுள்ள நல்ல பெண் மோரிட்ஸ்பர்க் நகரில் சிறையிலிருந்து தோலும்  எலும்புமாய் வெளிவந்து, அச்சிறை வாச கஷ்டத்தினால் ஒரு மாதத்திற்குள் ஆவி இழந்திருக்க அப்பெண்ணை என்ன சொல்லிப் புகழ்வதாக நீங்கள் உத்தேசித்திருக்கிறீர்கள்?  

தென் ஆபிரிக்காவிலே நமது சகோதரர்களுக்காகப் பாடுபட்டவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்களே மிகவும் கொண்டாடத்தக்க வரெப்தை நம்மை இரட்சிக்கும் ஈசனே அறிவர்.

தென் ஆபிரிக்கா இந்தியர்களுக்கு ஆவேச பலமூட்டியவன் நானென்று நீங்கள் சொல்வது பொருந்தாது.  அவர்கள்தான் எவ்வித கஷ்ட நஷ்டத்தையும் பொருட்படுத்தாது மிகுந்த பாடுபட்டதுடன், எனக்கும் ஆவேசம் ஊட்டியவர்கள்.  அக்கஷ்டத்திற்காக ஏதேனும் வெகுமதியை அவர்கள் எதிர்பார்த்ததில்லை.  அவர்களே கடவுளை நம்பி எவ்வித கஷ்டத்தையும் கவனிக்காமல்  உழைத்து எனக்கு ஆவேசத்தை மூட்டி என்னையும் உழைக்கச் செய்தோராவர்.

நானும் என் மனைவியும் தென் ஆபிரிக்காவில் உழைத்ததானது அவ்வளவு கஷ்டமல்ல.  நாங்கள் இருவரும் செய்த அற்ப ஊழியத்தை நீங்கள் மிகைப்படுத்திக் கூறுகிறீர்கள்.  இந்தியாவிலாயினும் தென் ஆபிரிக்காவிலாயினும் நாம் பரஸ்பர ஒற்றுமையும் உதவியுமின்றி எக்காரியமும் செய்ய முடியாது.  ஒற்றுமையும் உதவியுமின்றிச் செய்தாலும், அக்காரியம் பலன் தராது.  அம்மனிதர்களே எங்கள் இருவருக்கும் ஆவேசம் மூட்டினரேயல்லாமல் நாங்கள் அவர்களுக்கு ஆவேசம் மூட்டவில்லை யென்பது நிச்சயம்.

நான் படித்தவனாயிருந்தால் என்ன விஷயங்கள் நடக்கின்றன வென்று அம்மனிதர்களுக்கு அறிவித்தவுடனே, அவர்களே சமயத்துக்குத் தக்கபடி நடந்து கொண்டார்கள்.

இந்தியாவில் பிறந்ததின் முக்கியம், மதத்தின் பலம் இவ்விரண்டுக்குமுள்ள விசேஷம் இன்னதென்று அவர்களே அறிந்ததினால், எனக்காகவும் உங்களுக்காகவும் கஷ்டப்பட்டு உழைத்தது மன்றி ஆவியையும் இழந்தனர்.  ஆதலின் அவர்களே எனக்கும் உங்களுக்கும் ஆவேசத்தை மூட்டி விடுவாராக.  

ஐக்கிய மாகாணத்திலிருந்து தென் ஆபிரிக்காவில் வசித்து வந்த 75 வயதுள்ள ஹரிதத்ஸிங் என்பவர் சிறைச்சாலையிலேயே தமது உயிரைத் துறந்தார்.  ஆகவே எம்மாதிரியான மகுடத்தையும் நீங்கள் அவருக்கு சூட்ட வேண்டும்.  

என் மனைவியையும் என்னையும் எவ்வளவோ அடைமொழிகள் கொடுத்துப் புகழ்ந்திருக்கிறீர்களே! அவ்வளவு அடைமொழியும் மேலே கண்ட நாகப்பன் நாராயணசாமி முதலியோருக்கே உரித்தாகும்.

இனி, தென் ஆபிரிக்காவிலே கஷ்டப்பட்டது, ஹிந்துக்கள் மட்டுமல்ல முகம்மதியர், பார்ஸி ஜாதியார், கிறிஸ்தவர் முதலிய அனைவரும் பாடுபட்டிருக்கின்றனர்.  இந்தியர்களின் நிலைமை இன்னதென்றும், எத்தகைய ஆபத்து நேர்ந்திருக்கிற தென்றும் உணர்ந்து கொண்டவர்கள் அவர்களே! ஆத்ம சக்தியை உடையோரும் அவர்களேயாவர்!

சுதேசமித்திரன்
23.04.1915

தொகுத்து எழுதியவர் : 

ராமச்சந்திர வைத்தியநாத்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *