வரலாற்றுப் புதையல் – 13:
சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும் பல்வேறு பத்திரிகைகளில், அரசு அறிக்கைகளில் வந்த படைப்புகளையும் செய்திகளையும் அச்சுப் பிசகாது அறிந்திடும் முயற்சியே இது. அன்றைய உரைநடையை, இலக்கியப் போக்கினை, வரலாற்றை, செயல்முறையை அறிந்திடும் முயற்சிகளில் ஒன்றாகக்கூட இதைக் கொள்ள முடியும்.
2007ல் சென்னைத் துறைமுகப் பொறுப்புக் கழகம் சென்னைத் துறைமுகம் உருவான வரலாற்றை மனித முயற்சியின் 125 வருட வரலாறாக சித்தரித்து துறைமுக வெற்றிச் சாதனை எனும் வெளியீட்டை கொணர்ந்தது. எஸ்.முத்தையா மற்றும் கே.ஆர்.ஏ.நரசய்யா ஆகியோர் இதனைத் தொகுத்திருந்ததனர். அதன் முன்னுரையில் எஸ்.முத்தையா குறிப்பிடுகின்றார்.
“1881ஆம் ஆண்டையே சென்னைத் துறைமுகம் பிறந்த வருடமாகக் கொள்ளலாம். அக்கட்டமைப்புதான் தொடர்ந்து பல தடைகளை வென்று இன்று உலகின் சிறந்த துறைமுகங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது.”
துறைமுகப் பணிகள் தொடங்கிய அந்த ஆண்டிலேயே அது நடைபெறும் விதம் குறித்து அதே தருணத்தில் அப்பணிகளில் பங்காற்றிய பார்க்ஸ் துரையவர்கள் பிரசங்கமொன்றை நிகழ்த்தினார். மதராஸ் காலேஜ் ரோடிலுள்ள மதராஸ் ஸ்கூல் புக் அண்ட் வெர்னாகுலர் லிட்டரேச்சர் சொஸைட்டி வெளியிட்டு வந்து இருமாத சஞ்சிகையான ஜநவிநோதிநி யில் அப்பிரசங்கம் விரிவாகவே 1881ல் வெளியான ஜனவரி / பிப்ரிவரி இதழ்களில் மட்டுமின்றி மார்ச் / ஏப்ரல் இதழிலும் வெளியாகிற்று. சென்னையின் மகத்தானதொரு கட்டமைப்பு எப்படி உருவாக்கப்பட்டது என்பதை இப்பிரசங்கம் விலாவாரியாய் உணர்த்துகிறது. துவக்க கால அச்சங்களையும் ஐயங்களையும் கடந்து காலத்தை வென்று மனித உழைப்பின் மகத்தான சாதனையாக இத்துறைமுகம் இன்றும் விளங்குவதன் பின்னணியை அறிவது அவசியமாகும்.
சென்னையில் கட்டப்படும்
கப்பல் அடைக்கலஸ்தானத்தைப் பற்றிய உபந்நியாசம்
இப்பொழுது நடந்தேறுகிற சென்னைக் கப்பல் அடைக்கலஸ்தானவேலையை செய்துவரும் முக்கிய சிற்பவல்லவர் (என்ஜினீர்) ஆகிய மேஸ்தர் டபில்யூ – பார்க்ஸ் துரையவர்கள் நாளது பிபர்வரி மாதம் 12ந்தேதி சனிக்கிழமை மாலை சென்னை விநோதப் பொருட்காட்சிசாலையில் எவரும் ஆநந்தமாய்க் கேட்கத்தக்க உபந்நியாசம் ஒன்று செய்தார். அதைக் கேட்க அவ்விடத்தில் சீமான்களும் சீமாட்டிகளுமாய் வெகுபேர் வந்து நிறைந்திருந்தனர். கப்பல் அடைக்கலம் கட்டுவதற்குரிய கருவிகளாகிய பெரிய நீர்வாங்குகுழாய், பெரிதாய் உருவாக்கிச் செய்த கற்பாறைகள் முதலியவற்றின் மாதிரிகள் அவ்விடத்தில் கொண்டு வைக்கப்பட்டிருந்தன. கடலோரவீதியில் கட்டடங்கள் அமைந்திருப்பது, விளக்குக்கூண்டு, கடலில் கப்பல்கள் நங்கூரம் பாய்ச்சி நிற்பது, கப்பல் அடைக்கலஸ்தானத்துக்காக இப்பொழுது வடபுறத்திலும் தென்புறத்திலும் மேடை கட்டியிருப்பது முதலியவற்றோடுகூடக் கப்பல் அடைக்கலஸ்தானத்தின் வரிவடிவமும் ஒரு பலகையில் எழுதப்பட்டது.
சி.எஸ்.ஐ. பட்டம்பெற்ற ஆனரெபில் டேவிட்சன் அதற்கு அக்கிராசனாதிபதியாக வீற்றிருந்து, அந்த உபந்நியாசம் ஆரம்பிப்பதற்கு முன்னே, தமக்கு அப்பொழுது அந்த உபந்நியாசத்தைக் கேட்கவர அசந்தர்ப்பமென்று சொல்லிக் கனம்பொருந்திய கவர்னரவர்களிடமிருந்துவந்த திருமுகமொன்றைப் படித்தார்.
அந்த உபந்நியாசம் முடிந்ததும் அக்கிராசனாதிபதியானவர், எவர்க்கும் நல்லறிவு கொளுத்தத்தக்கதான இனிய உபந்நியாசம் செய்ததற்காகவும், இச்சென்னைத்துறைக்கு மிகவும் அநுகூலமான கப்பல் அடைக்கலஸ்தானவேலையை வெகு கருத்தோடு விடாமுயற்சியாய் நடத்திவருவதற்காகவும், பார்க்ஸ் துரையவர்களுக்கு வந்தனம் செய்தார். மேலும் இத்தன்மையான வியாபாரம் இவர் இன்னும் எவ்விடத்தில் செய்யப்புகுந்தாலும் இவ்வண்ணமே காரியசித்தி பெறுவாரென்றும், இச்சென்னையில் கப்பலடைக்கலம் கட்டுவிக்கிறநிமித்தம் இவர் எக்காலத்திலும் லோகோபகாரியாகக் கருதப்படுவாரென்றும் அக்கிராசனாதிபதி நிச்சயமாக நினைத்தார்.
இவ்வண்ணம் தமது உபந்நியாசத்தைப் புகழ்ந்து பேசியதற்காக டேவிட்சன் துரையவர்களுக்கும், அவ்விடத்தில் தயை செய்திருந்த பின்னும் பல பிரபுக்களுக்கும் சீமாட்டிகளுக்கும் பார்க்ஸ் துரை வந்தனம் செய்தார். அவர் எடுத்துரைத்த உபந்நியாசமாவது:-
“ஓ அக்கிராசனாதிபதி முதலிய கனவான்களே, இப்பொழுது நடந்தேறுகிற இச்சென்னைக் கப்பல் அடைக்கலத்துறைக் கட்டட வேலையின் விஷயங்களை ஒரு உபந்நியாசமாய் எடுத்துரைக்கும்படி என்னை வேண்டிக்கொண்டதின்மேல், நான் அப்படியே அதற்கு அங்கீகரித்தேன். ஆயினும் அவ்விஷங்கள் மிகவும் அதிகமானதுபற்றி அவையெல்லாவற்றையும் ஒன்றுதப்பாமல் எடுத்துரைப்பது அசாத்தியமென்றாலும், யாவரும் ஆவலோடு கேட்கத்தக்க சில விஷயங்களை மட்டும் இங்கு எடுத்து சொல்லுகிறேன்.
ஆதியில் இது மிகவும் நஷ்டசாத்தியமான காரியமென்று யாவரும் ஏகோபித்து அபிப்ராயப்பட்டதுதான். அது வாஸ்தவமாகவேயிருக்கின்றது. முதலில் இச்சென்னைத் துறையில் கப்பல் அடைக்கலமொன்று அமைக்க வேண்டுமென்பதைப் பற்றி யாவரும் ஒரே மனதாய் அபிப்பிராயப்பட்டார்களெனினும், அவ்வடைக்கலம் இன்னவிதமாய் உபயோகப்படுமென்பதைப் பற்றி வெவ்வேறு விரோதமான அப்பிராயங்களுண்டாகி அது காரணமாகச் சில கொடிய கஷ்டங்கள் நேர்ந்தன. எப்படியெனில், புசல் அடிக்கிற காலங்களில் அடிக்கடி கப்பல்கள் கரைதட்டி உடைந்து கைக்கெட்டின தூரத்தில் கரையிலே கோடி ஜனங்கள் பார்த்திருந்ததும், அவர்கள் உதவிசெய்யக்கூடாமல், அதிலுள்ள ஜனங்களும் சாமான்களும் அநியாயமாய் அழிந்து போம்படி நேர்வதனால், அதற்காகக் கப்பலடைக்கலமொன்று அவசியம் வேண்டுமென அநேகர் எடுத்துரைத்தார்கள். கடலின் இயற்கையை அறியாதவர்களுக்கு இது சரியான யுத்திதானெனத் தோன்றும். ஆயினும் கடலில் பழகியவர்களான மாலுமிகள் இதன்மேல் எடுத்துரைத்த ஆக்ஷேபமாவது: நீங்கள் கட்டக் கருதியவிடம் புசலடிக்கையில் கப்பல்களுக்குச் சிறிதும் ஏற்ற அடைக்கலமாகமாட்டாது; குறுகலானவிடத்தில் அநேகம் கப்பல்கள் ஒன்றாய்க் கூடிக் காற்றிலல்லாடி ஒன்றொடோன்று இடிபடுகிற உபத்திரவத்தைவிடக் கொடியது வேறுண்டோ? ஆதலால் அக்காலத்தில் நாங்கள் விசாலமான நடுக்கடலில் நங்கூரம் பாய்ச்சிக் கொள்ளுகிறோம்; அதுவும் கூடாதபக்ஷத்தில் கப்பலை நிறுத்தாமலே நடத்திக்கொண்டுபோகிறோம் என்றார்கள். அதைக் கேட்கையில் குற்றங்கூறுபவர்களுக்குத் தளிப்பு அதிகமாகுமல்லவா? பெருங்காற்றடிக்கும்போது கப்பல் தங்கக்கூடாத பக்ஷத்தில் அப்படிப்பட்ட கப்பலடைக்கலஸ்தானம் கட்டுவதிற் பயனென்னவென்று அவர்கள் ஆக்ஷேபம் செய்தார்கள்.
அதன்மேல் லோகோபகார நினைவுள்ள மற்றொருவர், திருங்கோமாலிக்கும், ஊக்கிலி நதிக்கும் மத்தியில் பத்திரமாய்க் கப்பல் அடைக்கலம் புகுமிடம் ஒன்றுகூடக் கிடையாதாதலால் அப்படிப்பட்டவிடமொன்று இன்றியமையாதென எடுத்துரைத்தார். அதற்கும் கப்பற்காரர்கள், பெரும் புசலடிக்கையில் நாங்கள் ஒருவேளை வங்காளக்கூடாக்கடலில் அகப்பட்டுக் கொண்டாலும், அதினின்றும் தப்பித்துக்கொண்டு போகத்தக்க சாமர்த்தியம் எங்களுக்குண்டு; ஆதலால் அடைக்கலஸ்தானத்தில் போய்ப் புகுந்து அவதிப்படச் சம்மதமில்லை என்றே சொன்னார்கள். அதைக் கேட்டு துராக்ஷேபனை செய்பவர்கள் ஐயம்பெற்றவர்கள் போலெழுந்து, ஆயின் நாம் இம்முயற்சி செய்யவேண்டுவதே இல்லையென்றார்கள்.
ஆலோசித்துப் பார்க்கையில் இவை யாவும் அதிசயோக்தியாகவே முடிகின்றன. கப்பல் அடைக்கலம் கட்ட வேண்டுமென்றவர் இயற்கையின் நிலையறியாமல், அது கப்பல்களுக்கு ஒவ்வொரு தருணத்தில் தங்குவதற்குத் தகுந்தவிடமாகுமென்று சொல்வதைவிட்டு, பெரும் புசலில் இன்றியமையாத அடைக்கலமென்றார். அப்படியே கப்பல் தலைவரும் அவ்வுதவி தமக்கு அநாவசியமென்ற வீராவேசத்தோடு அது தமக்குச் சிறிதும் தேவையில்லையென்றார்.
வாஸ்தவத்தில் புசலடிக்கையில் ஒதுக்கிடம், கப்பல்களுக்கு ஓரடைக்கலமாகாமற்போகாது. மேலும் கப்பல் அடைக்கலம் கட்டவேண்டுவது அவசியமா அல்லவா என்கிற கேள்வி இது ஒன்றினாலேய சாந்தமானதில்லை: அதற்குள்ள மற்றக் காரணங்களையும் சற்று யோசித்துப் பாருங்கள். இவ்விந்துதேசமெல்லாம் பின்புறத்திலும், முன்புறத்தில் சமுத்திரமாகிய பெரும்பாதையுமாய் இச்சென்னைநகர் அமைந்திருக்கின்றதல்லவா? மேலும் நாட்டுச் சரக்குகள் பலவிடங்களிலிருந்தும் எளிதில் வந்து சேரும்படி பல இருப்புப் பாதைகளும் வாய்க்காலும், தேசாந்தரச்சரக்குகள் வந்துபோக சிறந்த கப்பல்துறையுமாய் இது பெரிய வர்த்தக நகரமாயிருக்கின்றது. இப்படியிருந்தும் கரையிலுள்ள சரக்கு கப்பல்போய்ச் சேரக்கூடாமல் அதற்குப் பெருந்தடையொன்றிருக்கிறது. அதாவது கடலின் கரையோரத்திலுள்ள பேரலைகளே. அவ்வலைகள், அவ்வழியாய்ப் போய்வருபவர்க்கு மிகுந்த வருத்தமுண்டாக்குவதுமாத்திரமேயன்றிச் சரக்குகளுக்கு மிகவும் கெடுதல் விளைவிக்கின்றன. மேலும் கப்பலுக்கும் கரைக்குமுள்ள இந்தச் சிறிது தூரம் சரக்குகள் கொண்டுபோகச் செல்லும் செலவு, இருப்புப்பாதை வழியாக நாற்பதுமைல்தூரம் கொண்டு போவதற்கும், கடல்மார்க்கமாய் ஆயிரம் மைல் தூரம் கொண்டுபோவதற்கும் செல்லும் செலவுக்குச் சரியாவது மாத்திரமேயன்றி, சரக்கும் நனைந்து கெட்டுப் போகின்றது; களவு போகின்றது; ஒவ்வொரு தருணங்களில் அலைகளின் வழியாய்க் கப்பலுக்கும் கரைக்கும் போக்குவரவு செய்வதே சிறிதும் கூடாமற்போகின்றது.
புசலடிக்கும்போதுதான் இந்தக் கஷ்டங்கள் உண்டாகின்றனவென்றில்லை: என்றைக்கும் எந்த நிமிஷமும் ஏறக்குறைய ஒருவாறு இருந்து கொண்டேயிருக்கின்றன. இவற்றைத் தீர்க்கிறவழி ஒன்றுமில்லையாவென்கிறீர்களோ? ஒன்று உண்டு. அதாவது, கப்பலடைக்கலம் கட்டுவதுதான். அப்போது சரக்குகளைக் கப்பலுக்கு ஏற்றவும் இறக்கவும் மிகவும் அனுகூலமாகும்: அதற்குச் செல்லும் செலவும் இப்போதிருக்குமளவில் மூன்றிலொருபங்காகச் சுருங்கும்; அப்போது படவுகளையும் ஏற்றபடி இப்போதிருப்பதைப்பார்க்க நன்றாகவும் பெரிதாகவும் செய்துகொள்ளக்கூடுமாதலால், சரக்கு நனைந்து கெட்டும் போகமாட்டாது; திருட்டு முதலியவைகளால் நஷ்டமும் நேரிடாது; அதிகமான காற்று முதலியவற்றால் சரக்கு இறக்கக்கூடாமல் கப்பல்கள் தாமதப்படுவதற்கும் அவசியமிராது. சரக்குகளைக் கப்பலுக்கு ஏற்றவும் இறக்கவும் செல்லும் செலவில் மிகும்பணமாத்திரமே குறைந்தது கப்பலடைக்கலம் கட்டப் பிடிக்கும் பணத்தின் வட்டிக்கு ஈடாகும். அதன்மேல், சரக்குகள் சேதப்படாமலிருப்பதும், உத்தரவாத உடன்படிக்கைச் செலவு மிகுவதும், கப்பலுக்குப் போய்வருபவர்க்கு சவுக்கியம் அதிகமாவதும், கப்பல்களை அதிகநாள் நிறுத்திவைத்துக்கொள்ளாமலிருப்பதும், கப்பலின், புறங்களுக்கும் கப்பிக் கயிறு முதலியவற்றிக்கும் அதிகமாய்த் தேய்வு நேரிடாமலிப்பதும், கப்பலுக்கும் கரைக்கும் யதேச்சையாய் வேண்டும்போது வருத்தமின்றிச் செய்தி தெரிவித்துக்கொள்ளும்படியாவதும், காற்றடிக்கும்போது கப்பலுக்கு அடைக்கலமாவதும் இவை முதலாக விளைகின்ற பல நன்மைகளும் நமக்கு லாபமே. மேலும் அப்போது இச்சென்னை சிறந்த வர்த்தகநகரமாகி, கல்கத்தாவுக்குப் போகிற கப்பல்களும் அங்கிருந்து வருகிற கப்பல்களும் இங்கே சற்று வழித் தங்கி வேண்டிய சரக்குகளை உடனே இறக்குமதி ஏற்றுமதி செய்து கொண்டு போகக்கூடுமாதலால், வர்த்தகத்துக்கு மிகவும் அபிவிருத்தியுண்டாகும். பின்னும் இச்சென்னைத்துறை சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் நேர்முகத்தில் இருப்பதால் இதற்கு அதிக சிறப்புண்டாகும்.
இச்சென்னைத் துறையில் கப்பலடைக்கலமொன்று கட்டினால், அது இவ்வண்ணம் தன் செலவைத் தானே சம்பாதித்துக் கொடுப்பதோடு கூட வர்த்தகத்துக்கு மிகவும் அனுகூலமாகி உலகத்தாருக்கும் நன்மை விளைவிக்கும்.
முதலில் ஏழுவருஷங்களுக்குமுன் இதைக்குறித்து எடுத்துரைத்தபோது அவ்விஷயங்களெல்லாம் அதிவாதமென்று தோன்றினவாயினும், பரீக்ஷை செய்து பார்த்தபிறகு எல்லாம் சரியென்றே அங்கீகரிக்கப்பட்டன. அந்தக் கட்டடத்துச் செலவும் ஆதியில் உத்தேசித்த தொகைக்குள்ளேயே அடங்குகின்றது. இன்னும் அந்த வேலை முற்றுப்பெறவில்லையென்றாலும், இப்போதே படவுக்கூலிகளும் படவுகளில் போய்வருகின்றவர்களுடைய வருத்தமும் வெகுவாய்க் குறைவுபட்டிருக்கின்றன.
மேலும் இச்சென்னைக் கடற்கரையோரெமெல்லாம் மணலாயிருப்பதால் அலைகள் அம்மணலை அரித்தரித்துக் கரையோரத்தில் கொண்டுவந்து ஒதுக்கிக் கடல் நெருங்கிவருவதைத் தடுப்பதும் இந்தக் கட்டடம் கட்டுவதற்கு ஒரு பிரயோஜனந்தான்.
இப்படி இச்சென்னையில் கப்பலடைக்கலமொன்று அமைக்கவேண்டுமென்னும், ஏற்பாடு சென்ற 1873ம் வருஷம் இச்சென்னைத் துரைத்தனத்தார்க்கு அறிக்கை செய்யப்பட்டது. காலஞ்சென்ற லார்ட்டு ஹோபர்ட்டு துரையவர்கள் அப்போது இச்சென்னைக் கவர்னராயிருந்தார். அந்தப் பிரபு தாமும் இந்த ஏற்பாட்டுக்கு உபபலமாக நின்று அதை அங்கீகரிக்கும்படி இந்திய துரைத்தனத்தார்க்கும், சீமைக்கும் எழுதியனுப்பினார். இப்படி கப்பலடைக்கலமொன்று கட்டுவது கூடவே கூடாதென்று அதைப்பற்றி ஒருவரும் அதிகமாய் ஆக்ஷேபித்துத் தடுக்கவில்லை. ஆயினும் அதற்குப் பிடிக்கும் செலவு விஷயத்தைப்பற்றி மாத்திரம் பலமான பல ஆக்ஷேபங்கள் உண்டாயின. அதற்கு நான் மதித்துத் தீர்மானித்த தொகை அதன் செலவுக்குச் சிறிதும் போதாதென்றும், இப்பொழுது கப்பல்களுக்குச் சரக்கேற்றவும் இறக்கவும் செல்லும் செலவு முதலியவைகளில் மிகுமென்று நான் எடுத்துக் காட்டிய தொகை மிகவும் அதிகமென்றும் ஆக்ஷேபித்தார்கள். அப்படியே பதினைந்துமாத காலம் ஆக்கிரகமாய் அநேகர் போராடினார்களெனினும், கடைசியில் 1875ம் வருஷம் மார்ச்சு மாதத்தில், முதலில் எடுத்த ஏற்பாட்டின்படியே கப்பலடைக்கலம் கட்டும்படி சீமையில் உத்தரவு பிறந்தது. உடனே வேலை ஆரம்பிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பிறகு நான் சமர்த்தரென்று தேர்ந்தெடுத்த ஜேம்ஸ் மே துரையவர்கள் இந்த வேலைக்கு விசாரணைத் தலைவராக இவ்விடத்துக்கு அனுப்பப்பட்டார். நான் இங்கிலாந்திலேயே இருந்து இந்த வேலைக்கு வேண்டிய யந்திரம் கருவி முதலியவைகளைச் சித்தஞ்செய்யத் துவக்கினேன்.
கப்பலடைக்கலம் கட்டும்படி கடைசியாய் உத்தரவு பிறந்த சில வாரங்களுக்குள் லார்ட்டு ஹோபர்ட்டு துரையவர்கள் யாவரும் கேட்டுக் கண்ணீர் சொரியக் காலஞ்சென்றார். விசாரிக்கப்புகில், இச்சென்னையில் கப்பலடைக்கலம் கட்டுவித்த கீர்த்தி மற்றவர்களைப் பார்க்க அவர்க்கே முக்கியமாய் உரியதென்று உரைக்கவேண்டும்.
வேலை நடந்தேறுகிற வரலாற்றை எடுத்துரைப்பதற்கு முன்னே அந்தக் கட்டடத்தின் சொரூபத்தைப் பற்றிச் சற்று விசாரிப்போம். உட்புறத்தில் அலைமோதாதபடி அலையைத் தடுக்கத்தக்க அணை ஒன்றுபோட்டு, 48 அடி ஆழமுள்ளவிடத்தில் கப்பல்கள் உள்ளே புகவும் வெளியே போகவும் கடலில் கிழக்கு முகமாக வழிவைத்து, ஏறக்குறைய 1000 சதுர கஜம் விசாலமுள்ள பெரிய தடாகமென்றை வளைத்துக் கொள்ள வேண்டுமென்பது ஏற்பாடு. கடலின் அலை ஏதாவதொன்று அந்தத் தடாகத்திற்குள் வரவேண்டுமென்றால், அந்தச் சிறு வாயிலின் வழியாகவே வரக்கூடும்; அப்படி ஓரலை உள்ளே நுழைந்தாலும் அது அவ்வளவு விசாலமான தடாகம் முழுவதும் பரவிக் கடைசியின் அதற்குள் அலை சிறிதும் இல்லாததுபோலவே ஆகிவிடும். மேலும் அலைகள் காற்றின் குணத்தால் தென்கிழக்கு மூலையிலிருந்தும், வடகிழக்கு மூலையிலிருந்துமே வருவதனால், அது அவ்வடைக்கலஸ்தானத்திற்குள் நேராக வந்து நுழையாமல் ஒரு புறமாகவே வந்து புகும். ஆதலின் அந்தக் கட்டடத்திற்குள் தண்ணீரில் சிறிதும் அசைவு காணமாட்டாது. சமுத்திரமெல்லாம் வடக்கிலும் தெற்கிலுமே விசேஷமாகி, நேர்கிழக்கே மிகவும் சொற்பமாயிருப்பதால் அதன் கலக்கமும் இவ்விடத்தில் உண்டாகித் தங்குகிற கப்பல்களை அலைக்கமாட்டாது.
கடலில் கட்டிய இந்த அணை அடியில் குண்டுக் கற்களைக் கொட்டி மேலே வெண்டுமென்று உருவாக்கி அறுத்த பெரும்பாறைகளைக் கொண்டு கட்டப்பட்டிருக்கின்றது. இது மிகவும் சுலபமான வேலையேயாயினும், சற்று நிதானித்து யோசிப்போமானால், இத்தேசத்தில் எங்கும் சாதாரணமாய் நடத்தப்படுகிற வேலைகள் போல, மேஸ்திரி ஒருவனை ஏற்படுத்தி அவன் இஷ்டப்படி கூலிக்காரர்களைக் கொண்டு செய்விக்கத்தக்க வேலையல்லவெனத் தெளிவாய்த் தோன்றும். 27 டன் எடையுள்ள பெரும்பாறைகள் பண்ணுவதும், தண்ணீர்க்குள் 24 அடி ஆழத்திற்குக் கீழே குண்டுக் கற்களைக் கொண்டு அஸ்திவாரம் போடுவதும் ஆகிய இவையெல்லாம் வேறு ஒத்தாசையில்லாத நாட்டுக்கூலிக்காரர்களால் சிறிதும் செய்து முடிக்கக்கூடாத காரியம். இவ்விதமான வேலையே அவசிமென்பது ஆலோசனையில்லாமல் ஏற்றுக்கொண்டதன்று; தீரத்தெளிய ஆலோசித்ததில், இதுவே அவசியமென்றும், மற்றெந்த மார்க்கமும் நாம் கருதிய காரியத்திற்கு இவ்வளவு சிறந்ததல்லவென்றும் தெரியவந்ததனால் இதுவே முக்கியமாக் கொள்ளப்பட்டது.
மற்றவைகளையெல்லாம் தள்ளி இவ்விதமான அணைக்கரையே கட்டும்படி தீர்மானித்ததற்குரிய ஆதாரங்களையெல்லாம் எடுத்துரைக்கப்புகின் இரண்டு மூன்று நாள் உபந்நிய்சித்தாலும் போதாது. ஆதலின் அவற்றில் அவசியமான இரண்டொரு சங்கதிகளை மட்டும் எடுத்துரைப்போம்.
அணைக்கரை ஓரங்களில் சாய்வாகக்கட்டுவதுமுண்டு; செங்குத்தாகக் கட்டுவதுமுண்டு. கடலின் அலைகள் வந்து மோதுவதை உறுதியாய்த் தாங்கத்தக்கது செங்குத்தாகக் கட்டிய கரையா, சாய்வாகக் கட்டிய கரையா என்பதைப்பற்றி அநேகவருஷங்களுக்கு முன்னே எஞ்சினியர்களுக்குள் ஒரு சர்ச்சை உண்டாயிற்று. சாதாரணமாய்க் கடற்கரைகளில் காணப்படுவதுபோல மணல்களை அரித்தரித்துச் சரிவாக்குவது அலைகளின் இயற்கையாதலால், அவ்வியற்கைக்கேற்றபடி கடலில் கட்டுகிற அணைக்கரைகளும் கடற்புறத்தில் கூடியவரையில் சாய்வாக இருக்கவேண்டுமென்று ஒரு பக்ஷத்தார் எடுத்துரைத்தார்கள். கடலோரங்களிலுள்ள செங்குத்தான பெரிய பாறாங்கற்களில் அநேகமாயிரம் வருஷகாலமாய் அலைகள் மோதிக்கொண்டிருந்தும் அவற்றில் யாதொரு கெடுதியும் காணப்படவில்லையாதலால், புதிதாய்க் கட்டுகிற கரையும் அவ்வளவு உறுதியான கற்களைக் கொண்டு செங்குத்தாகவே கட்டப்படுமானால் அதற்கு யாதொரு பழுதுமில்லையென்று மற்றொரு பக்ஷத்தார் எதிர்வாதமாடினார்கள்.
பின்பு அலைகளின் இயற்கையைப்பற்றி இரண்டு பக்ஷத்திலும் விசேஷமாக விசாரங்கள் செய்யப்பட்டன. கடைசியில் அது செலவு விஷயத்தில் வந்து முடிவானதாகத் தெரியவருகின்றது. அநேக விடங்களில் இவ்விரண்டு விதத்தினாலும் அணைக்கரைகள் கட்டப்பட்டுச் சீர்குலையாமலிருக்கின்றன.
இப்பொழுது இங்கே எந்த முறைமைப்படி கரை கட்டத்துவக்கினால் செலவு சுலபமாகுமென்பதைச் சிற்பி ஆலோசிக்கவேண்டும். பொதுவாய்ப் பார்க்கையில், எவ்விடத்தில் கற்கள் விசேஷமாயும் நயமாயுமிருக்கின்றனவோ அங்கே கடலின் செயலுக்கேற்கச் சாய்வான கரையே கட்டலாம். கற்கள் அகப்படுவது கடினமாகி, கூடியவரையில் கற்களைக் கொஞ்சமாகவே உபயோகித்துக் கட்டவேண்டுமென்ற தோன்றுகிற விடங்களில் செங்குத்தான கரை கட்டுவதே நலம். செலவு சுலபமாயிருக்கிறதென்கிற காரணமொன்றினாலேயே இச்சென்னையில் இப்போது இரண்டாவது முறைமை ஏற்றுக்கொள்ளப்பட்டது. சாய்வாகக் கரைகட்ட எவ்வளவு செலவுபிடிக்குமோ, அதில் பாதிச்செலவிலேயே செங்குத்தான கரைகட்டித் தீருமெனத் தெரியவந்தது. எவ்விதமான கரைகட்டினாலும் இச்சென்னையில் கற்கள் கிடையா; வெகு தூரத்திலிருந்து இருப்புப்பாதைவழியாய் ஒரு பாரத்துக்கு இவ்வளவென்று கூலி கொடுத்துக் கொண்டுவரவேண்டும். ஆதலின் அநேகமாயிரம் பாரம் கற்கள் கொண்டுவந்து அவற்றை அப்படியே கடலில் கொட்டிவிடுவதைப்பார்க்கச் சில பாரம் கற்கள் கொண்டு வந்து அவற்றைச் செங்குத்தான சுவர்கட்டுவதற்கு ஏற்ற கருவியாக மாற்றிக்கொள்வது சுலபமல்லவா?
கடலில் நீர்மட்டத்துக்கு உள்ளேயாயினும், அதற்குமேல் சிறிது தூரம் வரையிலாயினும் சுண்ணாம்பைப் பிரயோகிப்பது கூடாதாகையால், செங்குத்தான சுவர் சிறிதும் சுண்ணாம்பில்லாமலே கட்டவேண்டும். ஆதலின் அதற்கேற்ற, ஒரு பாறைக்கும் மற்றொரு பாறைக்கும் இடையில் சிறிதும் சந்து கொடாமல் ஒன்றோடொன்று நன்றாய்ப் பொருந்தும்படி அவற்றின் பக்கங்கள் செம்மையாய்ச் சமப்பட்டிருக்கவேண்டும். இயற்கையான பெரிய பாறைகளையே வெட்டிக் கொண்டுவந்து போட்டுக் கரைகட்டும்படி முதலில் ஏற்பாடு செய்தார்கள். ஆயினும் கடலில் செய்கிற வேலைக்குப் பலவிதமான முரட்டுக்கற்களையும் சேர்ந்து வேண்டியபடி பெரிய பாறைகள் செய்து போட்டுக் கட்டுவதே எங்கும் ஏற்ற வழக்கமாயிருக்கின்றது. இப்படியானால் நமக்கு வேண்டிய அளவிற்குப் பலவிதமாய்க் கற்கள் செய்து அறுத்துக் கொள்ளலாம். மேலும் இயற்கையான பாறைகளையே வெட்டிக்கொண்டுவந்து போட்டுக் கரைகட்டும்படி முதலில் ஏற்பாடு செய்தார்கள். ஆயினும் கடலில் செய்கிற வேலைக்குப் பலவிதமான முரட்டுக்கற்களையும் சேர்த்து வேண்டியபடி பெரிய பாறைகள் செய்து போட்டுக்கட்டுவதே எங்கும் ஏற்ற வழக்கமாயிருக்கின்றது. இப்படியானால் நமக்கு வேண்டிய அளவிற்குப் பலவிதமாய்க் கற்கள் செய்து அறுத்துக் கொள்ளலாம். மேலும் இயற்கையான பாறைகளையே உபயோகிக்கிறதென்றால், சதுரமாக்கத்தக்கதாய் 10 டன் எடையுள்ள பாறைகள் கூட அகப்படுவது கடினம். சாதாரணமாய் இரண்டு மூன்று டன் எடையுள்ள பாறைகள்தாம் அகப்படும். இப்பொழுது இங்கு உபயோகப்படுத்துகிற செயற்கைப் பாறைகளோ 27 டன் எடையுள்ளவை. இவ்விதமான வேலைகளுக்கு அநேகவிடங்களில் ஏறக்குறைய இந்த அளவான பாறைகளே உபயோகிக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும் சிலவிடங்களில் மிகப் பெரிய பாறைகளையும் உபயோகித்திருக்கிறார்கள். தப்லின் நகரத்தில் 350 டன் எடையுள்ள பாறைகள் கரைமேலே செய்துகொண்டுபோய், அதற்கென்று செய்வித்த யந்திரங்களைக் கொண்டு இறக்கிக் கட்டடம் கட்டியிருக்கிறார்கள்.
செங்குத்தான சுவர்கட்டுகிற முறையையே ஏற்றுக்கொள்கிற பக்ஷத்தில் சிற்பிகள் தாமே நிதானித்து நிச்சயிக்கவேண்டிய சில விஷயங்கள் உண்டு. சாய்வான கரை கட்டும் பக்ஷத்தில் இவ்விஷயங்களைக் கடல் தானே தீர்த்துக் கொடுக்கும். எப்படியெனில், முதலில் ஒரு குப்பல் கற்களைக் கடலில் கொண்டு கொட்டுவானானால், அது முதலில் கொஞ்சம் குத்தான சார்பாய் அமையும். ஆயினும் கடலின் அலைகள் அதை ஒவ்வொன்றாய் அரித்தரித்து அகற்றிவிடும். அவ்வுயரம் போதாதபக்ஷத்தில் அதன்மேல் பின்னும் கற்களைக் கொண்டு கொட்டி அது எந்த அளவாக நின்றால் அசையாதிருக்குமோ அந்த அளவுக்கு அமைத்துக் கொள்கிறான்.
செங்குத்தான சுவர் கட்டுகிற விஷயத்தில் இப்படியன்று; கடல் அவனுக்குச் சிறிதும் சகாயம் செய்வதில்லை. அனுபவத்தாலேதான் அந்த விஷயத்தில் கடலின் செயலைக் கண்டுகொள்ளவேண்டும். முதலில் சிற்பி போட்ட சுவர் சமுத்திரராஜனுக்கு இஷ்டமாயிராவிட்டால் அவன் அதைத் தள்ளிவிடுகிறான். பிறகு தப்பிதம் எங்கிருக்கிறதோவென்று தானே தேர்ந்தறிந்து சிற்பி அதைத் திருத்திக்கொண்டு மறுதடவை சரியாகச் செய்ய வேண்டும். இவ்வாறு பலதடவை செய்து பரிக்ஷைபார்த்துச் சில விஷயங்களை நன்றாம் நாம் இப்பொழுது தெரிந்துகொண்டிருக்கிறோம். நீர்மட்டத்துக்குள் எவ்வளவு ஆழம் வரைக்கும் சமுத்திரராஜன் நமக்கு விரோதம் செய்கிறானோ, அவ்வளவு ஆழம் நாம் அஸ்திவாரம் போடவேண்டும். கடலின் அடிப்புறத்தில் இயற்கையான அஸ்திவாரம் கெட்டியான கற்களாகவே இருக்குமானால், அதன்மேல் கெட்டியான கற்களைக் கொண்டே நாம் கட்டடம் கட்டிவிடலாம்; சமுத்திரராஜனுக்கும் அது திருப்திகரமாயிருக்கும். இச்சென்னைக் கரையில் கற்களேயில்லையே; எல்லாம் மணலாய்க் கிடக்கின்றனவே.
அலைகளுக்கு அதிகமான பலம் நீரின் மேல்மட்டத்திலேதான் என்று அனுபவத்தால் காணப்பட்டிருக்கின்றது. கொஞ்சம் ஆழத்திற்குக் கீழ் கடல் நீரில் அசைவே கிடையாது. ஆயின் அவ்வாழத்தின் அளவு அலையெழும்புகிற உயரத்திற்குத் தக்கபடி வேறுபடும். அவ்வாழத்திற்கு மேலெல்லாம் ஒருவாறு அலையுண்டு. அவ்வலைகள் நீரின் மேல்மட்டத்துக்கருகில் அநேகம் பாரம் எடையுள்ள பெரும் பாறைகளைப் புரட்டித் தள்ளும்படி அத்தனை வலிவுள்ளவையாயிருக்கும்; அதற்குச் சிறிதடி ஆழத்தின் கீழ்க் குண்டுக் கற்களை அசைக்கத்தக்க வலிவுள்ளவையாய் இருக்கும்; அதற்கும் அதிக ஆழத்தில் மணலை அசைக்கத்தக்க வலிவுள்ளவையாயிருக்கும்; அதற்கும் அதிக ஆழத்தில் மண்ணை அசைக்கத்க்க வலிவுள்ளவையாயிருக்கும். தட்டுத் தடையின்றி அலைகள் முன்னும் பின்னும் ஓடிவரும்படி இந்தப் பொருள்கள் அவ்வளவு சார்வாய் அமைக்கப்பட்டிருக்குமானால், இவை அந்தந்த மட்டங்களுக்குமேலே கூட அசைவற்றிருக்கும். அந்தச் சார்வான தரையின் குறுக்காய் ஏதாவது ஒரு பொருளைத் தடையாக வைப்போமானால், அலையின் ஓட்டம் தடுக்கப்படுகின்றது. அதனால் உண்டாகிற கெடுதியென்னவெனில், அந்தத் தடைக்குக் கீழ் ஆதாரமாயுள்ள பொருளை அலை அறுக்க ஆரம்பிக்கின்றது.
ஆயினும் மேற்சொன்ன மட்டங்களுக்குக் கீழே அந்தத் தடை வைக்கப்படுமானால் அவ்விடத்தில் அதை அறுக்கத்தக்க வலிமை அலைக்குக் கிடையாது. அந்தத் தடை செங்குத்தான சுவராகவேயிருக்குமானால் அதன் அஸ்திவாரம் உலர்ந்த தரையிலிட்ட அஸ்திவாரம்போலவே யாதொரு அபாயமும் இல்லாமல் பத்திரமாயிருக்கும். ஆதலின், தண்ணீர்க்குள் எந்தெந்தப் பொருள் எவ்வளவு ஆழத்தின் கீழ் அலையின் செயலால் அசைக்கப்படாமல் ஸ்திரமாயிருக்குமென்பதை முதலில் நாம் கண்டு கொள்ள வேண்டுவது அவசியம். பிறகு அந்த மட்டத்துக்குமேல் கீழ் மட்டத்துக்குரிய பொருள்களை நமது கட்டடத்துக்கு உபயோகப்படுத்தாமல் நாம் ஜாக்கிரதையாயிருக்கவேண்டும்.
இந்த விஷயம் மேற்பார்வைக்கு வெகு சுலபமாயிருப்பதாகத் தோன்றினும், அலைகளோடு நெடுங்காலம் வருந்திப் போராடாமல் இதைக் கண்டுகொள்வது அசாத்தியமாயிருந்தது. சாதாரணமாய் ஜனங்கள் நினைக்கின்றபடி சிற்பிகள் தமக்கு வேலை கொடுப்பவர்களுடைய பொருளைப் பிரயோஜனமில்லாமல் வீணாய் ஒருபோதும் செலவு செய்கிறவர்களல்லர். ஆதலால் தண்ணீர்க்குள் செங்குத்தான சுவர் கட்டுவதற்கு அஸ்திவாரம் இவ்வளவு ஆழத்தின்கீழ்ப் போடவேண்டுமென்கிற விஷயம் பரிசோதனைகளால் தெளிவாகத் தெரிகிறவரையில், தண்ணீர்க்குள்ளே குளிகாரரைக்கொண்டு கட்டவேண்டியதாயும், கஷ்டசாத்தியமாய் மிகச் செலவு பிடிக்கத்தக்கதாயும் இருக்கின்ற வேலையைக் கைக்கொள்வதற்கு இல்லை. இவ்விஷயத்தில் சமுத்திரராஜனுடைய சகாயம் ஒன்றுமில்லை. அவரவர்க்குத் தோன்றியபடி ஓரளவைக்கொண்டு கட்டினால், தன் வலிமைக்குச் சாத்தியமாகாத மிகப் பெரிய பாறைகளைக் கொண்டு தன்னுடைய ராஜ்யத்தை எதிர்த்தது கண்டு சமுத்திரராஜன் மிகக்கோபங்கொண்டு அந்தப் பாறைகளின் அடிப்புறத்திலும் ஓரங்களிலுமுள்ள சிறு கற்களை நன்றாய் அறுத்துப் பள்ளங்கல்லிக் கடைசியில், அந்தச் சுவர் எவ்வளவு உறுதியாகக் கட்டப்பட்டிருந்த போதிலும், அது புரண்டு கீழே வீழ்ந்துபோம்படி செய்து விடுகிறான்.
அதனால் சிற்பிகள் கடல் நீர் மட்டத்துக்குள் ஆறடி ஆழம் அஸ்திவாரம் போடவேண்டுமெனக் கண்டறிந்து, அப்படியே குளிகாரரைக்கொண்டு அவ்வளவு ஆழத்தில் அஸ்திவாரம் போடுவித்தார்கள். ஆயினும் அதுவும் போதாது. அதையடுத்த மேல்மட்டத்தில் நீருக்கு அதிக வேலையில்லையாதலால் அது அந்த அஸ்திவாரத்தைத் தற்காலத்தில் ஒன்றும் செய்யவில்லை. அதனால் அதுவே நிலையானதென்று பிரமைகொண்டிருக்க, உடனே நான்கு மாதத்தில் கடல் மிகக் கொடியதாகி அதையும் அழித்துவிட்டது. அதனால் ஆறடி ஆழம்வரை சமுத்திராஜனுடைய பொருளெனக் கண்டு கொள்ளப்பட்டது.
பிறகு பன்னிரண்டடி ஆழம்வரையில் முயன்றார்கள். போதுமோ போதாதொவென்று அதுவும் சந்தேகத்திற்கிடமாயிருக்கிறது. ஏனெனில் சிலவிடங்களில் அவ்வளவு ஆழத்தில் காரியசித்தியுண்டாயிருக்கிறது; சில இடத்தில் தவறிப்போயிருக்கிறது. மேலும் குளிகாரர் மூழ்கி வேலைசெய்கிற பக்ஷத்தில் பன்னிரண்டடி ஆழத்தில் வேலை செய்வது எவ்வளவு வருத்தமோ, அவ்வளவு வருத்தந்தான் இருபத்து நான்கடி ஆழத்திலும். அதனால் சந்தேகமில்லாமல் உறுதியானவிடத்தில் அஸ்திவாரம்போடுவதே உத்தமானதென்று சிலர் சொன்னார்கள். அதன்படியே இச்சென்னையில் கட்டத்துவங்கிய அணைக்கரையும், அதேசமயத்தில் வேறிடங்களில் துவக்கிய இரண்டொன்றும், சுலபமாய்க் கொஞ்சம் ஆழத்திலேயே அஸ்திவாரம் போடுவதைவிட்டு, இருபத்துநான்கடி ஆழத்தில் அஸ்திவாரம் போட்டுக் கட்டடத்துவக்கப்பட்டன. குண்டுக்கற்களைக் கொண்டு அஸ்திவாரம் போடுகிற பக்ஷத்தில் இருபத்துநான்கடி ஆழம் அதிகமேயொழிய, மணலாலேயே அஸ்திவாரம் அமைப்பதற்கு அது சிறிதும் போதாது. இன்னும் அதிக ஆழத்தில் போட வேண்டும்.
இருபத்துநான்கடி ஆழத்தில் பொடிக்கற்களைக்கொண்டு அஸ்திவாரம் போட்டு அதன்மேல் செங்குத்தான் கரை கட்டுவதற்குவேண்டிய நியாயங்களை இப்பொழுது எடுத்துரைத்தோமல்லவா? இதைக் கேட்கையில் கடலின் ஆழம் இருபத்துநான்கடிக்கு அதிகப்பட்டிருக்குமிடங்களில் இந்த ஏற்பாடு சரிதான்; அவ்வாழத்திற்கு குறைந்திருக்குமிடங்களில் என்ன செய்கிறது? இருபத்துநான்கடி ஆழத்திலேயே மணல் நிலையான அஸ்திவாரமல்லவென்றால், இயற்கையாய்ப் பன்னிரண்டடி ஆழத்திற்கு குறைந்தவிடங்களில் மணல் எப்படி அசைவற்றிருக்கும்? அப்படியே குண்டுக்கற்கள் பன்னிரண்டடி ஆழத்தில் நிலைபெறாதென்றால் ஆறடிக்கும் குறைந்தவிடங்களில் என்ன செய்கிறது என்கிற ஆக்ஷேபம் தானே தோன்றும்.
இச்சென்னையில் அணைக்கரை கட்டுகிற விஷயத்தில் உண்டான வருத்தமெல்லாம் இந்தச் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வதைவிட வேறில்லை. மூன்று நான்கு வருஷங்களுக்குமுன்னே இந்த வேலை துவக்கமாயிருக்கையில் வேலை துரிதமாக நடக்காமல் தாமதப்பட்டிருந்ததற்குக் காரணம் இதுதான். இந்த விஷயத்தில் இவ்விதமாக நடக்கிறதென்று எங்களுக்கே ஒருவழியும் தோன்றாமற்போயிற்று. குண்டுக்கற்களும் பெரும்பாறைகளும் அலையின் உபத்திரவத்தால் ஸ்திரப்படாதவிடங்களில் அவைகளைக் கெட்டிக் கொட்டிப் பார்த்துவரும்படி நேர்ந்தது. கடைசியில் அவ்வருத்தத்தைத் தீர்க்க ஒரு வழி யோசிக்கலாயிற்று.
என்னவெனில், செங்குத்தான கரையென்றும், சாய்வான கரையென்றும் அணைக்கரை இரண்டுவிதமென முன்னமே மொழிந்திருக்கிறோமல்லவா? அவற்றுள் இச்சென்னையில் செங்குத்தான கரைகட்டச் சம்மதித்து, அது மற்றொன்றை பார்க்கச் சுலபமான செலவில் செய்துமுடிக்கக் கூடியதாயிருப்பதனாலேயேயன்றி வேறல்ல. இவ்வளவு ஆழத்திற்குமேலேதான் அந்தக் கரைகட்டக்கூடுமென்று தெரியவரவே, கரைமுதல் அவ்வாழம்வரையில் மற்றொருவிதமான கரையேகட்டி, அந்தச் சாய்கரையைக் கொஞ்சம் கொஞ்சமாக நேராக்கிக் கொண்டுபோய்ச் செங்குத்தான கரையாக்குகிறதென்று தீர்மானிக்கப்பட்டது. சாய்வான கரைக்கு வேண்டியதெல்லாம் அதிகமான குண்டுக்கற்களே. முன்சொல்லியபடி அந்தக் கற்களை எவ்வளவு விசாலமாகக் கொட்டினால் கடல் அதைச் சிறிதும் அசைக்காமலிருக்குமோ அவ்வளவு விசாலமாகக் கொட்டிச் சாய்வான கரை போடவேண்டும்; தனித் தனி ஒவ்வொருபுறத்திலும் சுமார் 4000 அடி நீளமுள்ள அணைக்கரையில் முதலில் 1000 அடி நீளம் வரை சாய்வான கரை கட்டி அப்புறம் செங்குத்தான கரை கட்ட வேண்டியதென்று தீர்மானிக்கலாயிற்று.
சென்னையில் கப்பல் ரக்ஷணஸ்தானம் கட்டுகிற விஷயத்தைப் பற்றி உண்டான ஆக்ஷேபங்களும், பின்பு அதைக் கட்டுவது அவசிமென்பதற்கு ஆதாரமாக விளக்கிய பல நியாயங்களும், அதைக் கட்டத்துவக்கிய முறையும் இத்தன்மையனவெனச் சென்ற சஞ்சிகையில் சொல்லிய உபந்நியாசத்தால் தெளிவாய் விளங்குகின்றனவல்லவா? பக்கத்துப்படத்தில் தொங்குவது அந்தக் கட்டடத்தின் காட்சியே. பின்னும் அவர் செய்த உபந்நியாசத்தை முழுதும் எடுத்துரைத்தால் பெருகுமென்று அதை ஒருவாறு சுருக்கி எழுதுவோம்.
“இந்த வேலை சென்ற 1876ம் வருஷம் ஆதியில் துவக்கமானது. ஆயினும் அந்த வருஷமெல்லாம் காற்றினாலும், மணலொதுக்கத்தாலும்; மத்தியில் மேஸ்தர் மே என்னும் அதன் விசாரணைத்தலைவர் இறந்துபோனதாலும், இன்னும் இவை போன்ற சில காரணங்களாலும் வேலை செம்மையாக நடக்கவில்லை. பின்பு புதிதாய்ச் செய்த பெரிய பாறைகளை ஏற்றி இறக்குவதற்கேற்ற கருவி வரவழைக்கப்பட்டு, 1877 ம் வருஷம் ஆரம்பத்தில் வேலை வெகு தீவிரமாக நடக்கத்துவக்கிக் கடலில் 300 அடி தூரம் வரையில் மேற்கொண்டு பெரிய பாறைகளை நாட்டிக் கரை கட்டப்பட்டது. ஆயினும் முதலில் 200 அடிவரையில் அமைந்த பாறைகள் சிறிதும் ஒழுங்குபாடில்லாமல் தாறுமாறாய் அமைந்திருப்பது அதைப் போய்ப் பார்ப்பவர் எல்லார்க்கும் தெரியவரும். அதன் நிமித்தம் என்னவெனில், அந்தவிடம் தப்பாமல் எப்போதும் அலை அலைத்துக்கொண்டிருக்கிற கரையோரமாதலால், அங்கே மனிதர் நின்று எந்தவிதமான கருவியைக் கொண்டும் அஸ்திவாரத்திற்கு ஒருமட்டம் ஏற்படுத்துவது அசாத்தியமாயிருந்ததே. ஆயினும் அப்போது இருக்கிற அளவாவது ஒருவாறு அமைந்தது அதன் விசாரணைத் தலைவருடைய புத்திசாமர்த்தியத்தாலும், நீருக்குள்ளேயும் இறங்கி நன்றாக வேலை செய்யத்தக்க இத்தேசத்து வேலைக்காருடைய திறமையாலுமே அன்றி வேறல்ல. அங்கிலேய வேலைக்காரர்களானால், இவ்வளவு வேலையைச் செய்து முடியுமென்பது சந்தேகமே.
இவ்வண்ணமே கடலோடு பலவிதமாய்ப் போராடிக்கொண்டு வடபக்கத்துக்ரை கொஞ்சம் கொஞ்சமாய் இருபத்துநான்கடி ஆழம்வரை நடத்தப்பட்டது. சென்ற சஞ்சிகையில் சொல்லியபடி 24 அடி ஆழத்துக்கு மேலே அஸ்திவாரம்போட நமக்கு யாதொரு தடையுமில்லையாதலால், அதற்குமேல் வேலை நடக்க யாதொரு விசாரமுமில்லை.
தென்கரை கட்டத் துவக்கிய கதையும் இப்படிப்பட்டதுதான். 1877ம் வருஷத்தின் துவக்கத்தில் க்ஷாமோபத்திரவத்தால் சென்னை இருப்புப்பாதை வண்டிகளுக்குச் சிறிதும் ஒழிவில்லாமற்போனதாலும், கடற்கரையில் இருப்புப்பாதை வண்டியோட அவகாசமில்லாமற்போனதனாலும் தென்னிந்திய ரெயில் மூலமாய்ப் பல்லாவரத்தினின்றும் கற்கள் கொண்டுவந்து தென்புறத்துக் கரை கட்டத் துவக்கப்பட்டது. செய்பாறைகள் முன்னமே ஆயத்தமாயிருந்தபடியால், வடபுறத்துக் கரையைப்போல நெடுந்தூரம் குண்டு கற்களாலேயே கட்டிக் கொண்டுபோகாமல் புதிய பெரும் பாறைகளை போட்டுக் கட்டுவதற்கு ஏதுவாயிற்று. இவை முதலிய காரணங்களால் தென்புறத்துக் கரையின் வேலை சீக்கிரமாக நடத்தப்பட்டது. 1877ம் வருஷம் நவம்பர் மாதத்தில் பெரிய செய்பாறை கடலில் முதலிலே ஸ்தாபிக்கப்பட்டது. 1878ம் வருஷம் தென்றல் காற்று ஆரம்பமாகிறவரையில் வேலை நன்றாக நடந்தேறிற்று. தென்றல் காற்று ஆரம்பமானவுடனே முன் வடகரைக்கு நேரிட்டதுபோலவே மணலால் பெருந்தடை நேரிட்டது. அம்மணல்களை ஒதுக்குவதற்கு ஏற்ற வழிகள் தேடி வேலையை நிறுத்தாமல் நடத்த முயன்றார்களாயினும் அந்தத் கஷ்டத்துக்கேற்றபடி காரியசித்தி உண்டாகவில்லை.
வெகு வருத்தப்பட்டு வடபுறத்திலும் தென்புறத்திலும் கரைகட்டும்விதம் இப்படியென்று இதனால் தெளிவாயிற்றல்லவா? அதற்கு வேண்டிய சாதனங்களைத் தேடிய விதத்தை அடியில் எடுத்துக் காட்டுவோம். இவ்வேலை வெகு தீவிரமாய் நடந்தேறும்போது, சென்னை இருப்புப்பாதைக்காய் இச்சென்னைக்கு 10 மைல் தூரத்திலுள்ள அம்பத்தூரிலே பருக்கக்கல் வெட்டியெடுக்கும்படி ஒரு ஒப்பந்தக்காரர் வசத்தில் 2000 புருஷர்களும் அவ்வளவு பெண்களும் வேலை செய்தார்கள்.
அவ்வண்ணமே தென்னிந்தியா ரெயில் வழியார் 14 மைல் தூரத்திலுள்ள பல்லாவரத்துக்கு அருகே பாறைகள் வெட்டும்படி மற்றொரு ஒப்பந்தக்காரர் அதீனத்தில் அவ்வளவு கூலியாள்கள் வேலை செய்தார்கள். அப்படிக் கற்களை வெட்டியெடுக்கிற வேலை முற்றும் அந்த ஒப்பந்தக்காரார்களுடைய வசத்திலே விடப்பட்டது. அவர்கள் சுதேசிகளே. வெட்டியெடுத்த கற்களை இவ்வளவு எடைக்கு இவ்வளவென்ற கூலிவிகிதப்படி வண்டிகளில் ஏற்றுவிப்பது அவர்களுடைய வேலை.
அவர்களும் அவர்களுடைய விசாரணைத் தலைவர் வேலை துவக்கினது முதல் கடைசிவரையில் யாதொரு தடையுமில்லாது வேலையை முற்றும் சரியாக முடித்தது அவர்களுடைய திறமைக்கும் பெருமைக்கும் ஒரு திருஷ்டாந்தமாகின்றது. அந்தக் கற்கள் சாமான் வண்டிகளில் ஏற்றப்பட்டவுடனே அம்பத்தூர் கற்கள் வடகரையண்டையும் பல்லாவரத்துக் கற்கள் தென்கரையண்டையும் கொண்டுவரப்பட்டன. பின் அந்தக் கற்களை வண்டிகளினின்றும் இறக்கிக் கூலிக்காரர்கள் தலையிலே ஏற்றிக்கொண்டு போய், கற்களைக் கடலில் குறித்தவிடத்தில் கொட்டுவதற்கு வேண்டுமென்று புதிதாய்ச் செய்த ஒருவரை நீராவிச் சாமான் படவுகளில் ஏற்றிடுவார்கள். அந்தப் பெரும்படவுகளின் அடிப்புறம் வேண்டும்போது மூடவும் திறக்கவும் ஏற்றதான கதவுள்ளதாயிருக்கும். கற்களை அதிலேற்றி குறித்தவிடத்தில் கொண்டுபோய் அந்தக் கதவைத் திறந்துவிட்டால் கற்கள் அங்கே வீழ்ந்துபோம். அந்தப் படவு ஒவ்வொன்றும் 130 டன் சுமையைக் கொண்டுபோம்.
ஆயினும் அந்தக் கற்கனை ஏற்றுமதிசெய்வதற்குத் தகுந்த துறை கட்டுமளவு அந்தப் படவுகளை உபயோகிப்பது அசாத்தியமாயிருந்தது. முதலில் கட்டுமரம் தோணி 12 டன் சுமை எடுக்கும்படியான சிறு படவுகள் உபயோகிக்கப்பட்டன. இந்தக் கற்களை ஏற்றவிடத்தில் அளந்து கொண்டு கொட்டுவதற்குக் கவனமும் ஜாக்கிரதையும் மிகவும் அதிகமாகவே வேண்டியிருக்கின்றது. ஏனெனில், அந்தப் புகைப்படவு 50 அடி ஒதுங்கிப்போமானால் 260 ரூபாய் விலையுள்ள 130 டன் கல் வீணாய்ப்போகும். முன்னமே வேலை செய்து முடிந்த கரைமேல் கற்கள் கடலுக்குள் கண்ணுக்குத் தெரியாதவிடத்தில் கொட்டப்படுமானால், கல் வீணாய்போகும். தவிர அதிகமான கூலிகொடுத்துக் குளிகாரர்களைக் கொண்டு அதையெல்லாம் அப்புறப்படுத்த வேண்டியதாகும். ஆயினும் யாதொரு பிசகுமில்லாமல் அந்த வேலை இப்போது அநேகமாய் முடிவுபெற்றது.
இப்படிப்படி கொட்டிய கல்லின் மேற்புறம் ஓரளவாயிராமல் மேடுபள்ளமாயிருக்குமாதலால், புதிதாய்ச் செய்த பெரும்பாறைகள் அதன்மேல் நன்றாய்ப் பொருந்தும்படி அந்தக் கற்களைச் சரியாக மட்டப்படுத்துவது குளிகாரர்களுடைய வேலை. அவர்கள் குறித்தவிடத்தில் படவினின்று பத்திரமாய் இறங்கி நீர்மட்டத்தின் கீழ்ச் சுமார் 24 அடி ஆழத்தில் அதை மட்டப்படுத்துவார்கள். பின்பு அதன்மேல் பெரிய செய்பாறைகள் அமைக்கப்படும். அவற்றின் சுமையால் அஸ்திவாரம் அழுந்து இரண்டு மூன்றடி ஸ்திரப்படும்.
பொடிக்கற்களால் செய்யும் அஸ்திவாரத்தின் வரலாறு இதனால் தெளிவாயிற்றல்லவா? அதன்மேல் பொருத்தப்படும் பெரிய செய்பாறையில் சக்தியைச் சிறிதுசொல்வோம். இப்படி கடலுக்குள் இந்தப் பெரும்பாறைகளைக் கொண்டு வேலை செய்வது முற்காலத்தில் கிடையாது. முப்பதுவருஷங்களுக்கு முன் நான்தான் முதலில் இந்த வழக்கத்தை ஏற்படுத்தினேன். அப்போது உபயோகித்த பாறைகளெல்லாம் 7 டன் எடைக்குட்பட்டவைகளே. அக்காலத்தில் அதுவே அதிக பளுவென்று தோன்றினதால் அவ்வளவு சிறிதாகச் செய்யப்பட்டது. இப்போது இச்சென்னை கப்பல் ரக்ஷணஸ்தானத்துக்கு உபயோகிக்கப்படுகிற பாறை 27 டன் எடையுள்ளவை.
இவை பத்திலொருபங்கு சீமைச் சுண்ணாம்பும், மற்ற ஒன்பது பங்கு பொடிக்கற்களும் மணலும் சேர்த்துச் செய்யப்படும். சுண்ணாம்பு 2,333 டன் சீமையிலிருந்து வரவழைக்கப்பட்டது. 4,440 டன் இச்சென்னையிலேயே செய்யப்பட்டது. சிறிது வேலையையும் தூளியையும் சகிப்பவர்களுக்கு அந்தப் பாறைகள் செய்வதைப் பார்க்க வெகு வினோதமாயிருக்கும். அப்படியெனில், பல்லாவரத்தினின்றும் வந்த பாறைகள் ஒரே அளவான சிறு கற்களாக ஒரு யந்திரத்தால் உடைக்கப்படுகின்றன. உடைத்தானவுடனே அவை அந்த யத்திரத்தின் உதவியாலேயே அங்கிருக்கும் ஒரு மேடையின்மேல் கொட்டப்படுகின்றன. அவ்விடத்தில் அதற்கேற்ற அளவாய் அளந்து மணலும் சுண்ணாம்பும் அதனுடன் சேர்த்துக் கலந்து அங்குள்ள குழிகளுள் ஒன்றில் நிரப்பப்படும். அந்தக் குழிகளின் ஒவ்வொன்றில் அடியிலும் ஒவ்வொரு கதவுண்டு. அந்தக் கதவின்கீழ் அவற்றை நன்றாகக் கலக்கிற கருவியொன்றுண்டு. அந்தக் கருவியில் கல் மணல் முதலியன அந்தக் கதவின் வழியே போய் விழும். பின்பு அதனுள் தக்கவளவு தண்ணீர் ஊற்றி அந்தக் கதவை மூடிவிடுவார்கள். பின்பு யந்திரத்தால் அந்தக் கருவி பலதரம் சுற்றுவிடப்படும்.
அளவுப்படி எத்தனைதரம் சுற்றவேண்டுமோ அத்தனை சுற்று சுற்றியவுடனே அது கதவு அடிப்புறத்தில் நிற்கும்படியாக நிறுத்தப்படும். பின்னர் அதற்கு நேர்கீழே இரண்டு மரத்தொட்டியோடு சிறு கைவண்டி ஒன்று வந்து நிற்கும். அந்தச் சமயத்தில் கலக்கும் கருவியின் கீழ்க்கதவைத் திறந்துவிட்டால், அதிலுள்ள கல் மணல் முதலியவெல்லாம் நன்கு கலந்து அந்தத் தொட்டிகளில் விழும். இவ்வண்ணமாக இந்த இரு தொட்டிகளையும் நிரப்பிக்கொண்டு மூன்று நான்கு கூலிக்காரர்கள் அந்தக் கைவண்டியைத் தள்ளிப் பெரும்பாறை அறுக்கும் இடத்திற்கு கொண்டு போவார்கள். அங்கே செய்ய வேண்டிய கற்களின் பரிமாணத்திற்கேற்றபடி பெரிய மரப்பெட்டிகள் இருக்கின்றன. அவைகளின் பக்கத்துப் பலகைகளை வேண்டும்போது எடுத்துவிடக்கூடும். கைவண்டிகளில் கொண்டுபோன தொட்டிகளை அப்படியே யந்திரத்தால் தூக்கியெடுத்துப் போய் அதற்குள்ளிருக்கும் கலவைப்பொருளைப் பாறையறுக்கிற பெட்டியில் கொட்டுவார்கள். மறுபடி அந்தப் பாறையைச் சுலபமாய்த் தூக்கியபடி மத்தியில் இரண்டு துவாரம் உண்டாகும்படி இரண்டு மரத்துண்டுகளை நாட்டி, இந்தக் கலவைகளையெல்லாம் அந்தப் பெட்டி நிரம்பிக் கொண்டு இடையிடையே சில பெரும் கற்களும் கலந்து நன்றாய் மிதித்து கெட்டிப்பார்கள். கெட்டித்தானவுடன் நடுவே நாட்டிய இரண்டு துண்டுகளையும் எடுத்துவிட்டால், மத்தியில் இரண்டு பெரிய துவாரமுண்டாகும். அதற்குள்ளேதான் இரும்புக் கம்பிகளை மாட்டி இந்தப் பாறைகளைக் கடலில் அணை கட்டும் இடத்திற்குத் தூக்கிக் கொண்டுபோவார்கள். இவ்வண்ணம் இப்பாறைகள் ராயபுறத்தில் செய்யப்படுகின்றன.
அதேவிதமாய் அந்தச் செய்பாறை 24 மணிநேரம் இருந்தபின் அதன் பக்கத்துப் பலகைகளை அப்புறம் ஒதுக்குவார்கள். பின்பு பக்குவமாய் உலரும்படி பார்த்திருக்க வேண்டுவதுதவிர வேறு வேலையில்லை. உலரும்போது அது நன்றாகக் கெட்டிப்படும்படி அதன்மேல் கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக்கொண்டுவரவேண்டும். குறைந்தது அது ஒரு வார காலம் உலரவேண்டும். அதற்குமேல் எவ்வளவுகாலம் உலர்ந்தாலும் அவ்வளவும் அதற்கு நலமே. உலர்ந்தானபின்பு அதன் மத்தியிலுள்ள இரண்டு துவாரத்திலும் இரண்டு இருப்புக் கம்பிகளைக் கடாவி, அதற்கென்று ஏற்படுத்திய ஒரு யந்திரத்தினால் அதைத் தூக்கிப் புகைவண்டியிலேற்றி அணைக்கரைகட்டும் இடத்தில் சேர்த்து, அங்கே ஸ்தாபித்திருக்கும் சுமைதூக்கி யந்திரத்தால் அந்தப் பாறையை அந்த வண்டியிலிருந்து அப்படியே தூக்கிக் கடலில் இறக்கி ஏற்றபடி கரைகட்டுவார்கள்.
இவ்வாறு சென்ற ஜனுவரி மாதம் 31ந்தேதிக்குள் 12,14,40,400 பாறைகள் கடலுள் அமைத்துச் சுமார் ஒன்றரை மைல் தூரம் கரைகட்டப்பட்டது. இவ்வளவு வேலை நான்கு வருஷகாலத்தில் இரண்டு யந்திரத்தைக் கொண்டு செய்யப்பட்டது. இந்த வேலை இவ்வருஷத்திலேயே பூரணமாய் முடிவுபெறும்.
இந்தக் கட்டிடம் கட்டியதனால் இதன் தென்புறத்தில் மணல் விசேஷமாய் வந்து குவிந்துபோகக் கண்டோம். முதலில் இது இந்த வேலைக்குப் பெருந்தடையாயிருக்குமென்று தோன்றிற்று. ஆயினும் அதனால் இனி அதற்கு யாதொரு கெடுதியுமில்லையென்பது இப்போது தெளிவாகின்றதல்லவா?
இந்த வேலை துவக்கிய நாள்முதல் இது செம்மையாக முற்றுப்பெறாதென்றே சிலர் சொல்லிக்கொண்டிருந்தார்கள். வேலை நடந்தேற ஏற இருந்த சந்தேகமெல்லாம் சரியல்லவெனத் தெளிவாயிற்று. இப்போதும் சிலர், இதுவரையில் உங்கள் அதிர்ஷ்டவசத்தால் பெரும்புசல் அடிக்கவில்லை; பெரும்புசல் வரப்போகிறகாலத்தை எதிர்பார்த்திருங்களென்று அச்சமுறுத்துகிறார்கள். அப்படிப்பட்ட சமயம் நேர்ந்தால் இந்தக் கட்டிடம் முற்றும் அழிக்கப்படுமென்று சில உறுதியாய்ச் சாதிக்கிறார்கள். ஆயினும் அவர்களுக்கு எதிருக்கு எதிராக இதற்கு எவ்விதமான அழிவும் வராதென்று சொல்ல நான் துணியேன். அப்படிப்பட்ட புசலொன்று அடித்தபின்புதான் அதற்கேற்ற பரிகாரம் ஏதாவது யோசிக்க வேண்டும். முன்சாக்கிரதைப்பட்டும் பலவிடங்களில் கெடுதிநேரிட்டிருக்கின்றது. இந்தக் கரையிலும் துர்ப்பலமான இடங்களிலிருக்கக் கண்டு கடல் இதற்கு அழிவு விளைவிக்குமானால் அதுவும் நமக்கு நலமே; இதுவரையிலும் தெரியாத சிற்பநுட்பங்களை நன்றாய் அறிந்து மறுபடியும் அத்தன்மையான கெடுதி நேரிடாமலிருக்க வழிதேடுவதற்கிடமாகுமல்லவா? இப்பொழுது எவ்வளவு யோசித்தாலும் இந்தவிதமாகக் கெடுதி நேரிடுமென்று தெரியவில்லை; தெரிந்தால் அதற்கேற்ற பரிகாரம் தேடலாம். இதுவரையில் சமுததிரம் நாம் எதிர்பார்த்திருந்ததைப் பார்க்க அதிகமான கெடுதியொன்றும் நமக்குச் செய்யவில்லையே. இனி எது நேர்ந்தாலும் அதனால் நமக்கு நன்மையேயென்று எதிர்பார்த்திருக்கிறோம்.
பின் குறிப்பு: மாபெரும் துறைமுக கட்டமைப்பை உருவாக்கியோர் எதிர்பார்த்தபடி அதிகமான கெடுதியொன்றும் நிகழாது இன்றும் சென்னைத் துறைமுகம் வலுவோடு இருந்து வருகிறது என்பது இப்பிரசங்கியார் கூறியுள்ளதைப் போன்று மனித உழைப்பின் மகத்தான சாதனையே!
தொகுத்து எழுதியவர் :

ராமச்சந்திர வைத்தியநாத்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

