வரலாற்றுப் புதையல் – 14:
சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும் பல்வேறு பத்திரிகைகளில், அரசு அறிக்கைகளில் வந்த படைப்புகளையும் செய்திகளையும் அச்சுப் பிசகாது அறிந்திடும் முயற்சியே இது. அன்றைய உரைநடையை, இலக்கியப் போக்கினை, வரலாற்றை, செயல்முறையை அறிந்திடும் முயற்சிகளில் ஒன்றாகக்கூட இதை கொள்ள முடியும்.
ஜனவிநோதினி பத்திரிகை 1874 ஜனவரி இதழில் வெளிவந்த கட்டுரை இது. சென்னப்பட்டணம் எனும் மதராஸ் என்றுமே பிரமிப்பினை மட்டுமின்றி வசீகரம் கொண்டதாயும் இருந்து வந்திருக்கிறது என்பதை இச்சிறு கட்டுரை உணர்த்துகிறது.
சென்னபட்டணம் அல்லது மதராஸ்
தென்னிந்தியாவில் புகழ்பெற்றிருக்கும் இந்த ராஜதானி தற்காலத்தில் சற்றேறக்குறைய 13 பேட்டைகளையும் நான்குலக்ஷ ஜனங்களையும் உடைத்தாய், உலகத்திலுள்ள பட்டணங்களுள் லண்டனைவிட்டு மற்றவைகளைப் பார்க்கும்போது மூன்றாவதென் றெண்ணத்தக்கதாயிருக்கிறது. நான்கு பக்கங்களிலும் அநேக மெத்தைகளும் மேடைகளும் கண்ணைக் குளிரச் செய்வனவாய் அவைகளில் குடியிருப்பவர்களுடைய ஸம்பத்தைத் தெரிவிக்கின்றன. இந்தப் பட்டணம் 250 வருடங்களுக்குமுன் சில செம்படவர் குடிசைகள் உள்ள ஒரு மணல் வெளியாயிருந்ததென்பது சிலருக்குத் தெரிந்திருக்கலாம். இந்த மணல்வெளி பெரிய பட்டணமானதை யோசித்தால் எவர்க்கும் ஆச்சரியமுண்டாகாமற்போகாது. நல்லது, இவ்விடம் கப்பல்தங்கத்தக்க துறையா? அல்லது விசேஷ வர்த்தகம் செய்து கொண்டிருந்த இடமா? இல்லாவிட்டால் ஏதாவது பிரபலமான கைத்தொழில் நடக்கும் ஸ்தானமா? யாதொரு யோக்கியதையுமில்லையே, மேலும் இத்தேசத்தார் பழைமையானவைகளைக் கொண்டாடுந் தன்மையுடையவர்களேயன்றிப் புதிதாய் ஒன்றையுஞ்செய்யும் எண்ணமில்லாதவர்கள் என்பது பிரத்தியக்ஷம். இப்படியிருந்தும் இவ்விடத்தில் நூதனமாய் ஒரு பட்டணமுண்டானதை யோசிக்கின்ற யாவருக்கும் ஆச்சரியமாயிருக்கின்றதாதலால், இதன் வரலாற்றை அவசியம் விசாரிக்க வேண்டும்.
சரித்திரத்தை விசாரிக்கவேண்டுமென்னும் கருத்துள்ளவர்கள், முதலில் தான் குடியிருக்கும் நகரத்தின் சரித்திரத்தை அறிந்து பிறகு அது இருக்கும் தேசத்தின் வரலாற்றைத் தெரிந்து கொண்டு அதன்மேல் மற்றத் தேசங்களினுடைய சரித்திரங்களைக் கற்கும் விஷயத்தில் முயலவேண்டும். மேற்சொல்லிய காரணங்களைக் கொண்டு இப்படிப் பத்திரிகையை வாசிப்பவர்களுக்கு நமது ராஜதானியின் சரித்திரத்தைச் சுருக்கமாய்த் தெரிவிப்பதில் விசேஷபயனுண்டென்று கருதி, சென்னை நகரத்தின் சரித்திரத்தை எழுதத்தொடங்கினோம்.
நம்முடைய தேசத்தார்களின் முன்னோர் இப்படிப்பட்ட சரித்திர விஷயத்தில் விசேஷமாய் ஞாபகம் வைத்து எழுதாமையைப் பற்றி இந்தப் பட்டணத்தின் பூர்வஸ்திதி இன்னதென்று சரியாய் இன்றும் வெளிப்படவில்லை; ஆயினும் மைலாப்பூர், திருவல்லிக்கேணி இந்த இரண்டு ஸ்தலங்களும் அநேக நூற்றாண்டுகளுக்கு முன்னமே பிரசித்தமான இடங்களாயிருந்தனவென்று அவைகளைப்பற்றிய புராணங்களால் ஒருவாறு தெரியவருகிறதுமன்றி, பிராஞ்சுதேசத்தார் முதலிய ஐரோப்பியர் வைத்திருக்கும் சாஸனங்களாலும் விசிதமாகின்றது. ஆனாலும் பிரகிருத ராஜதானி விஷயமாய் ஒரு நிஷ்கருஷைசொல்லத் தகுதியான ஸாதனங்களில்லையென்று பலர் அபிப்ராயப்படுகிறார்கள். எது எப்படியிருந்த போதிலும் பதினாறாம் நூற்றாண்டின் துவக்கத்திலே போர்டியூகீஸ் என்பவர்கள் 1504ம் ஆண்டில்தானே செயிண்டுதோம் என்னும் இடத்தில் தங்கள் வியாபாரத்தின் பொருட்டு இறங்கி நிலை நின்றார்கள்.
எலிஜபேத் மஹாராணியவர்கள் அங்கிலேய வர்த்தகர்கள் இந்தியாதேசத்தில் வர்த்தகம் செய்யும்பொருட்டு அந்த மஹாராணியவர்களிடத்தில் 1600 ம் ஆண்டில் சாஸனத்தைப் பெற்று, 1662ம் ஆண்டில் சூரத்துப் பட்டணத்தில் வர்த்தகசாலையை ஸ்தாபித்ததுமன்றி அந்த வருஷத்திலேயே மச்சிலிபட்டணத்திலும் 1628ம் ஆண்டில் ஆர்மிகம் என்னுமிடத்திலும் வர்த்தக சாலைகளை ஸ்தாபித்தார்கள். ஆயினும் இந்த இடங்களில் சுதேசிகளுடைய போராட்டத்தினால் வர்த்தகத்துக்குத் தடையுண்டாய் வந்த காரணத்தைப் பற்றி அப்படிப்பட்ட அசந்தர்ப்பங்களில்லாத ஓர் இடத்தைத் தேட வேண்டியதாய் அவர்களுக்கு நேரிட்டது. மைலாப்பூருக்குச் சமீபத்திலிருந்த இடம் மேற்கண்ட இடையூறுகளில்லாததாய் அவர்களுக்குத் தோன்றினதால் அவர்கள் அதின் ஹக்குதாரர்களிடத்தில் அந்த இடத்தை வாங்க முயற்சி செய்தார்கள்.
அக்காலத்தில் துலுக்கருடைய துரைத்தனம் கோதாவரிக்கு வடக்கிலிருந்ததேயொழிய தெற்கில் இல்லை. மத்திய கர்னாடகம் முழுமையும் சந்திரகிரிராஜா அவர்களுடைய ராஜ்யத்திற்கு சேர்ந்திருந்தது. அவ்வரசனிட பிரதிநிதியாகிய பாளையக்காரரிடம் மேற்கண்ட ஸ்தலத்தைப் பற்றி ஒப்பந்தம் செய்ததில், அவர் அவ்விடத்தில் தாம் சொந்தப் பணம் செலவுசெய்து ஓர் கோட்டையைக் கட்டுவதாயும், அதில் அங்கிலேயர் வியாபாரம் செய்யவேண்டுமென்றும், அதற்காக வருஷம் ஒன்றுக்கு 1200 வராகன் கிஸ்தி செலுத்த வேண்டுமென்றும் சொன்னதற்கு, அங்கிலேயர் ஒத்துக் கொண்டு அந்த இடத்தைப் பெற்றுக் கொண்டார்கள். அப்படி இவர்களுக்கு விடப்பட்ட நிலம் தற்காலத்தில் ICE HOUSE என்று வழங்கும் பனிக்கட்டி மெத்தைக்கு வடக்கும் காசிமோட்டுக்குச் சமீபத்திலிருக்கிற சென்னப்பநாயக்கன் குப்பம் என்னும் கிராமத்திற்கு தெற்குமாயிருந்தது. அதின் அகலம் சமுத்திரக்கரைதொடங்கி சராசரி ஒரு மைல் உள்ளது.
இந்தத் துண்டு நிலத்தின் தெற்கு முனையில் மதராஸ் பட்டணம் என்னும் பெயருள்ள ஒரு கிராமம் இருந்தது. அதன் சமீபத்தில் அங்கிலேயர் தாம் பெற்ற சொல்ப நிலத்தில் ஓர் சிறிய கோட்டையைக் கட்டினார்கள். அந்தக் கோட்டையானது இப்போது கவரன்மென்ட் ஆபீசு முதல் வடக்கிலுள்ள கட்டிட மட்டுமே பூர்வமிருந்தது. அவர்கள் ஸ்தாபித்த வர்த்தகசாலைக்குச் சந்திரகிரிராஜா தன்னுடைய பெயரைத் தரவேண்டுமென்றும், மேற்சொல்லிய பாளையக்காரர் அச்சிறப்பு தன்பெயருக்கு உண்டாகவேண்டுமென்றும் ஆங்கிலேயரிடத்தில் கேட்டுக்கொண்டார்கள். பாளையக்காரன் சமீபத்திலிருக்கும் பலவான்; ராஜாவோ உள்நாட்டிலிருப்பவர்.
அவருடைய அதிகாரமும் பேருக்குமட்டும் வழங்கிவந்தது. ஆகையால் பாளையக்காரன் கோரிக்கைப்படி ஊருக்குச் சென்னபட்டணம் என்று பெயர் கொடுக்கப்பட்டது. அவர் பெயர் சென்னப்ப நாயக்கர்; இப்பெயரை சுதேசிகள் நாளது வரையில் அப்பட்டணத்துக்கு வழங்கிவந்த போதிலும், அங்கிலேயரும் துலுக்கரும் மதராஸென்றே சொல்லுகிறார்கள். இந்தப் பெயரின் உற்பத்தியைப் பற்றி ஜனங்கள் பலவாறாய் எண்ணுகிறார்கள். சிலர் அது மதில் என்னும் மொழி வருவிவந்ததென்றும், சிலர் மதிரிஸ்ஸா என்னும் ஹிந்துஸ்தானி மொழியிலிருந்துவந்ததென்றும் அபிப்ராயப்படுகிறார்கள். மதராஸ் என்னும் பெயர் மாதராசு என்னும் பாளையக்காரனுடைய நாமதேயத்திலிருந்துண்டாயிற்றென்று சிலர் ஊஹிக்கிறார்கள். அதுவே சிறந்தென்று நமக்கும் தோன்றுகிறது.
மேற்சொல்லியபடி கட்டப்பட்ட கோட்டையானது விசேஷ விஸ்தீரணத்தையுடையதாயிருக்கவில்லை. தற்காலத்திலிருக்கும் சிறந்த கோட்டையின் வடகிழக்கு முனையில் அது கட்டப்பட்டிருந்தது. அது கட்டியான ஐந்து வருஷம்வரையில் அதன் பேரில் செலவானதெல்லாம் 23,000 ரூபாய் என்று தெரியவருகிறது. அதைப் பாதுகாக்கும் பொருட்டு 26 காலாள் போதுமென்ற நினைக்கப்பட்டது. ஆயினும் இவ்விடத்தில் வியாபாரம் மிகவும் விருத்தியடைந்ததைப் பற்றி அது கட்டி முடிந்த மூன்று வருஷத்திற்குள்ளாகவே அங்கிலேயர் வங்காளக்குடாவைச் சார்ந்த துறைகளில் தாம் வியாபாரஞ்செய்தவைகளுள் இதை முக்கியமானதாயும் பிரதானமானதாயும் ஏற்படுத்திக் கொண்டார்கள்.
1653 ம் ஆண்டில் இவ்விடத்தில் ஒரு கவர்னரும், இரண்டு வர்த்தகர்களும், தங்களைப் பாதுகாக்கும் பொருட்டு 26 தொப்பிக்கார காலாள்களை வைத்துக்கொண்டு கனம்பொருந்திய கம்பெனியாருடைய காரியங்களைப் பார்த்து வந்தார்கள். மேற்கண்ட ராணுவம் மிகவும் பெரிதென்றெண்ணி முதலாளிகள் 10 பேர் இருந்தால் போதுமென்ற அபிப்ராயப்பட்டு அவ்வாறே உத்தரவு செய்தார்கள். 1679ம் ஆண்டில் மதராஸில் இந்த கம்பெனி உத்தியோகஸ்தர்களுடைய சொல்பமொத்தத்தையும், சம்பளங்களையும் யோசிப்போமானால் இவ்வூர் அக்காலத்தில் எவ்வளவு சிறியதாயும் அநாமதேயமானதாயும் இருந்திருக்கவேண்டுமென்று ஊகிக்க இடமுண்டாகிறது.
அக்காலத்தில் கவுன்சலில் வருஷமொன்றுக்கு 3,000 ரூபாய் சம்பளம் வாங்கிவந்த கவர்னர், 1,000 ரூபாய் சம்பளமுள்ள கணக்கன் (Book Keeper), 700 ரூபாய் சம்பளமுள்ள பண்டக சாலைத் தலைவர், 500 ரூபாய் சம்பளமுள்ள (Buyer) தாகிரி, 500 ரூபாய் சம்பளமுள்ள 2 Senior Merchant இவர்களிருந்து வேலைபார்த்து வந்தார்கள். இவர்களன்றியில் இன்னம் சில கீழ் உத்தியோகஸ்தர்களிருந்தார்கள்.
கோட்டை கட்டியானவுடனே சுற்றுப் பக்கத்தில் வீடுவாசல்கள் உண்டாய் விருத்தியடையும்பொருட்டு அதிகாரிகள் போர்தியூகீஸ்காரரையும் மற்ற மிசிரமஜாதியாரையும் வீடுகள்கட்டி வாசஞ்செய்யும்படியாய்க் கேட்டுக் கொண்டதினாலும், அநேகருக்கு அப்படிச் செய்ய திரவிய சகாயம் செய்ததினாலும், சுவல்பகாலத்தில் கோட்டையின் சமீபத்தில் “வெள்ளைக்காரர் பட்டணம் “ (White Town) ஒன்றுண்டாயிற்று. அதின் சுற்றிலும் சுவர் போடப்பட்டு நான்கு பீரங்கிப் பத்திரிமேடைகளும் கட்டப்பட்டிருந்தன.
கோட்டைக்குத் தெற்கே செம்படவர் குடிசைகளும், அதற்குத் தெற்கே தற்காலத்தில் (“Island”) அரங்கம் என்று சொல்லப்படும் காலி நிலமும் இருந்தன. இவைகளுக்கும் தக்ஷிணத்தில் (“Choultry Plain”) சாவடி வெளி என்னும் ஒரு மைதானமிருந்தது. இந்த வெளியில் ஒன்றொடொன்று சம்பந்தப்படாமல் திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், இராயப்பேட்டை, இந்த கிராமங்கள் தனித்தனியே நின்றன. கோட்டையின் வடக்கே வெகு சீக்கிரத்தில் ஓர் பட்டணமுண்டாய் விருத்தியடைந்து வந்தது.
தொகுத்து எழுதியவர் :

ராமச்சந்திர வைத்தியநாத்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

