வரலாற்றுப் புதையல் – 15
சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும் பல்வேறு பத்திரிகைகளில், அரசு அறிக்கைகளில் வந்த படைப்புகளையும் செய்திகளையும் அச்சுப் பிசகாது அறிந்திடும் முயற்சியே இது. அன்றைய உரைநடையை, இலக்கியப் போக்கினை, வரலாற்றை, செயல்முறையை அறிந்திடும் முயற்சிகளில் ஒன்றாகக்கூட இதைக் கொள்ள முடியும்.
சென்னப்பட்டணத்தின் நுழைவாயில்களில் ஒன்றாக விளங்கும் பாடி வரலாற்றுப் பெருமை கொண்ட பகுதியாகும். பிரிட்டிஷார் வருகைக்கு முன்னரே கீர்த்தி வாய்ந்த கிராமமாக திகழ்ந்த பாடி இன்றைக்கும் நகரத்தையும் தொழிற்பேட்டைகளையும் மட்டுமின்றி கிராமங்களையும் உள்ளடக்கியதாகவே திகழ்கிறது. 1960களில் பாடி பெருந்தொழிற்பேட்டையாகியது. டிவிஎஸ் நிறுவனங்கள் தங்கள் உற்பத்திக்கூடங்களை இங்கே துவக்கின. அந்நிறுவனங்களின் சார்பில் தொகுக்கப்பட்ட பாடியின் பண்டைய வரலாறு அக்டோபர் 1964 குமரி மலர் இதழில் வெளியானது.
பாடி
தொண்டை நன்னாடு நிலவள நீர் வளங்களுடன் குடி வளமும் கொழிப்பது. தெண்ணீர் வயல் தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து, என்பது ஔவையார் பாடியதாகச் சொல்லப்படும் ஒரு வெண்பாவின் இறுதி பகுதி. சிறந்த நன்மக்களான சான்றோர் இந்நாட்டில் அறிவு வளத்திற்கும் பண்பாட்டுக்கும் காரணமானவர் என்பது குறிப்பு. குடியானவர் நிலம் பண்பட உழைத்ததுபோல், சான்றோர் மனம் பண்படக் குணம் பண்படப் பாடுபட்டுத் தொண்டை நாட்டைத் தென்னிந்தியாவின் திலகமாகத் திகழச் செய்தனர். இத்தகைய சீரும் சிறப்பும் வாய்ந்த தொண்டை – நாட்டைச் சார்ந்தவை சென்னையும் சுற்றுப்புறங்களும்; இப்பகுதியில் பாடி என்ற ஓர் ஊர் பாடல் பெற்ற பழைய சைவத் திருப்பதிகளில் புகழ் பூத்த ஒன்றாகும் என்பதைப் பலரும் அறியார்.
பாடியின் பழம் பெயர் வலிதாயம். தேவாரகாலத்திலேயே இவ்வூருக்கு வலிதாயம் என்ற பெயர் வழங்கி வந்திருக்கிறது. பாடி என்று இந்நாளில் வழங்கும் பெயரும் இத்தலத்தின் பழமையைச் சுட்டிக் காட்டுவதுதான். முல்லை நிலத்து ஊரைப் பாடி என்று பொதுவாகக் கூறுவதுண்டு. காடும் காடு சார்ந்த நிலமும் முல்லை நிலம் என்று நம் முன்னோரால் கூறப்பட்டன. “ஆய்ப்பாடி “ என்று முல்லை நில மக்களான ஆயர்கள் வாழ்ந்த ஊரைக் குறிப்பிட்ட நம் முன்னோர்கள், கண்ணன் பிறந்த கோகுலத்தை “ ஆய்ப்பாடி “ என்றும் “ திருவாய்ப்படி “ என்றும் சிறப்பித்துப் பேசுவராயினர். “சீர் மல்கும் ஆய்ப்பாடி “ என்று ஆண்டாள் திருப்பாவையில் கூறியிருப்பதை அறியாதார் யார்?
வலிதாயம் அல்லது பாடி இருக்கும் பிரதேசம் ஒரு காலத்தில் காடாயிருந்தது. பிறகு நாடாயிருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம்.
‘காடு வெட்டி நாடு பண்ணு’ என்ற கொள்கையுள்ள பல்லவப் பேரரசின் ஆட்சி தொடங்கிய காலத்தில், இந்த நிலப்பகுதி நாடாக்கப் பெற்றது எனலாம். காடுகெடுத்து நாடாக்கியவர்கள் அந்த நாளில் காட்டை முழுவதும் கெடுத்து விடுவதில்லை. இன்றியமையாத பகுதிகளைப் பூஞ்சோலைகளுடன் பொலியும் ஊர்கள் அல்லது கிராமங்களாக்கிக் கொண்டனர். அத்தகைய ஊர்களில் வலிதாயம் ஒரு சிறந்த ஊராகச் செழித்து வளர்ந்திருக்க வேண்டும். எனவே, முல்லை நிலத்து ஊருக்குப் பொதுப் பெயரான “பாடி“யை இவ்வூருக்குச் சிறப்பாக வழங்கினர் எனக் கருதலாம்.
பாடியும் ஞானசம்பந்தரும்
தொண்டை நாட்டில் தேவாரப் பாடல்கள் பெற்றிருக்கும் தலங்கள் முப்பத்திரண்டு; இவற்றுள் ஒன்றாகிய திருவலிதாயத்தை (பாடியை )ச் சைவ உலகின் தனிநாயகமான திருஞான சம்பந்தர் பாடியிருக்கிறார். இவர் சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன் அதாவது கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது ஆராய்ச்சியாளர்களின் துணிவு. மயிலை, திருவான்மியூர், திருவொற்றியூர் முதலான பதினொரு சைவத் திருப்பதிகள் ஒரு மணிமாலை போல் இசைந்து அணி செய்கின்றன. நம் சென்னையையும் சுற்றுப்புறங்களையும், இப்பதிகளில் ஒரு தனிச்சிறப்புடன் ஒளிரும் நன்மணி வலிதாயம். இத்தனிச் சிறப்பு, ஞானசம்பந்தர் பாடிக்குச் சூட்டியிருக்கும் பாமாலையில் இனிது புலனாகும்.
தொண்டை நாடு 24 கோட்டங்களாகப் பிரிந்திருந்தது. கோட்டங்களின் உட்பிரிவுகளையும் நாடு என்று கூறினார்கள். புழலேரியைக் கொண்ட பகுதியைப் புழல் கோட்டம் என்றனர்; புழல்-கோட்டத்திற்கு உட்பட்டிருந்தது அம்பத்தூர் நாடு. அம்பத்தூர் நாட்டைச் சார்ந்தது வலிதாயம். இங்கு வருமுன் சம்பந்தர் பாலியாற்று வடகரையில் திருவேற்காட்டைத் தரிசித்தார். பிறகு பாடிக்கு வந்து பதிகம் பாடினார்.
பதிகம் என்றால் பத்துப் பாடல்கள், இப்பதிகத்தில் பலச்ருதியுடன் (பயனைக் குறிக்கும் வாக்குடன்) பதினோரு பாடல்கள் காணப்படுகின்றன. ‘பத்தரோடு பலரும் ‘ என்று தொடங்குகிறது இப்பதிகம்.
பெயரும் புகழும்
சம்பந்தரின் பதிகத்தில் ஒவ்வொரு பாட்டிலும் வலிதாயம் என்ற பெயரைக் காண்கிறோம். ‘பெருமான் பிரியாது உறைகின்ற வலிதாயம் ‘ என்று முதற் பாட்டிலே கூறுகிறார். சக்தியைம் சிவத்தையும் பிரித்துப் பேசலாமா? வலிதாயத்தையும் சிவபெருமானையும் பிரித்துப் பேசவும் முடியாது என்று சொல்லும்படி விளங்கிய க்ஷேத்திரம் இது என்பது கருத்து. சிவபெருமான் ‘திருமாலோடு உறைகோயில்‘ என்று மூன்றாம் பாட்டிலும் இந்த க்ஷேத்திரத்தைக் குறிப்பிடுவது கவனிக்கத் தக்கது. இங்கே உமாதேவி தாயம்மை என்ற பெயருடன் காட்சி வழங்குகிறாள். ‘ஜகதாம்பா ‘ என்பது வடமொழிப் பெயர். தாயம்மையின் பழைய சிலை சிதைவுற்ற நிலையில் வலிதாய நாதரின் வலதுபுறத்தில் இன்னும் காணப்படுகின்றது. தாயம்மையின் புதிய சிலை ஒரு தனிக் கோயிலில் நிறுவப் பெற்றிருக்கிறது. வலிதாயநாதரை வடமொழியாளர் ‘ வல்லீச்வரர் ‘ என்பர்.
‘எம்பெருமான் மடவாளோடு உற்ற கோயில் ‘ என்று அடுத்த பாட்டில் வருவதும், ‘அம்மையப்பர்‘ என்று வலிதாயநாதரைக் குறிப்பிடுவது தான்.
ஏழாம்பாட்டிலே
பெண்நிறைந்த ஒருபால் மகிழ்வு எய்திய பெம்மான் உறை கோயில்
என்று வருவதும் நோக்கத் தக்கது.
இவ்வலிதாய நாதரைப் பல பிரதேசங்களிலிருந்தும் மக்கள் வந்து பணிந்து பேறு பெற்றார்கள் என்று கூறுகிறார் திருஞானசம்பந்தர்.
வையகம் வந்து பணியப் பிணி தீர்த்து உயர்கின்ற வலிதாயம் என்பது இவர் வாக்கு.
இத்தலத்தின் புகழ் எங்கும் நிறைந்திருந்தது என்பதையும் சம்பந்தர் குறிப்பிடுகின்றார். இப்புகழை “மண் நிறைந்த புகழ்” என்கிறார். இப்புகழ் காரணமாக அடியார்கள் பல திசைகளிலிருந்தும் வந்து கூடி வணங்கினார்கள். இவர்கள் காரணமாக எங்கும் பரவியது இப்புகழ் என்றும் கருதலாம்.
மண் நிறைந்த புகழ் கொண்டு அடியார்கள் வணங்கும் வலிதாயத்து
என்று இப்படிக் கூறுவதிலும், வலிதாயத் திருப்பதியின் பரந்து உயர்ந்த புகழொளியைக் காண்கிறோம். இத்திருப்பதி சம்பந்தர் காலத்திலே மிகவும் புகழ் பெற்றிருந்தது என்று ஊகிப்பது தவறாகாது.
இப்பதிகத்தில் ஒரு கருத்து, மணிகளினுடே பொற்சரடு போல், ஊடுறுவிக் கிடப்பதைக் காண்கிறோம். அதாவது, வலி அல்லது நோவு தீர்க்கும் பெருமான் வலிதாயநாதர் என்பது முதற்பாட்டிலேயே, வலிதாயத் திருப்பதி மீது சித்தம் வைக்கும் அடியார்களை இடர்களும் நோய்களும் அடைவதில்லை என்ற கருத்தைத் தெளிவாக காண்கிறோம். இக்கருத்தை அடுத்த பாட்டிலும், அடைய நின்ற அடியார்க்கு அடையா வினை அல்லல் துயர்தானே என்ற வாக்கிலும் காணலாம்.
மூன்றாம் பாட்டில் ‘பணியப் பிணி தீர்த்து உயர்கின்ற வலிதாயம்‘ என்று க்ஷேத்திர மகிமை குறிக்கும் வருணனையிலேயே இக்கருத்தைக் காண்கிறோம். நாலாம் பாட்டில், இக்கருத்து வெளிப்படையாக் காணவில்லை. எனினும் ‘அடியவர்களே! வலிதாயத்தையே பற்றாக் கொண்டு வாழுங்கள், பாடுங்கள், உங்களுக்குச் சரணாவது (உரியபுகலிடமாவது) இப்பதியே‘ என்று சம்பந்தர் கூறுவதில், எல்லா நோவுகளும் கவலைகளும் இடர்களும் வினைகளும் தீர்ந்து போகும் தலம் இது என்பது உய்த்துணரப்படும்.
ஐந்தாம் பாசுரத்தில், வலிதாயநாதரை நினைக்கும் அடியவர்களுக்கு வினைகளெல்லாம் தீர்ந்து போகும் என்ற கருத்தையும் நினைக்காதவர்களுக்குத் துயரங்கள் தீர்ந்து போவது எளிதன்று என்ற கருத்தையும் ஒருங்கே காண்கிறோம். ஆறாவது பாட்டிலும், நோவு தீர்தல் வெளிப்படையாகக் குறிக்கப்படவில்லை. ‘எம் ஆதி மகிழும் வலிதாயத்தை அமைதியாகப் பூசித்தால் தெளிவு ஏற்படும்‘ என்ற கொள்கையே இங்குக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அமைதியும் தெளிவும் பெறுவதற்கு, உடற்பிணி மனப்பிணிகளுடன் ஆன்மீகப்பிணிகளான வினைகளும் தீர வேண்டுமல்லவா?
ஏழாம் பாட்டு, வலிதாயப் பெருமானை வாயாரத் துதித்தால் உண்மைக் கதி கிடைக்கும் என்று தெரிவிக்கிறது. உண்மைக் கதிக்கு உள்ள துயரம் போகவேண்டும் என்ற கருத்தை அடுத்த பாட்டில் காண்கிறோம். மனத்துயரம் மனப்பிணிதானே, வலிதாயம் தொழுதேத்தி மனத்துயரம் போக்கிக் கொள்வோரே பெரியர் என்ற கருத்தை ஒன்பதாம் பாசுரத்தில் காண்கிறோம். இவர்களே அடியவர் என்றும் மதிக்கப்படுவர் என்ற கருத்தைப் பத்தாம் பாட்டில் காண்கிறோம்.
இப்படிப் பிணி போக்கி ஆட்கொள்ளும் வலிதாயத்திற்கு இத்திருப்பெயர் வந்த காரணம்தான் என்ன? இப்பதிகத்திலிருந்து நாம் ஏதாவது ஒரு வகையில் ஊகஞ் செய்து கொள்வது சாத்தியமா? வலி என்பதற்கு வலிமை நோவு என்ற பொருள்கள் உண்டு. நோவு என்று பொருள் கொண்டு, தாயம் என்பதற்கு உரிமை என்று பொருள் கொள்வதால் இத்திருப்பதியின் பெயருக்கு ‘ வலி அல்லது நோவு உள்ளவர்கள் பற்றிக் கொள்ளும் உரிமைச் செல்வம் என்று பொருள் கூறுவது பொருந்துமா? இது ஆராய்ச்சிக்கு உரியது. தலபுராணத்தில், பரத்வாஜ முனிவர் வலியன் என்ற குருவி உருவில் வந்து இங்கே வழிபட்டு வீடு பெற்றார் என்ற ஒரு கதை காணப்படுகிறது. வலியன் தாயம் என்பது வலிதாயம் என்று ஆகியிருக்கக்கூடும் என்று சிலர் கருதுகிறார்கள். ‘வலியன்‘ என்றும் ‘வலியான்‘ என்றும் ஒருவகைக் கருவியைக் குறிப்பிடுகிறோம்.
பரத்வாஜ மகரிஷியுடன், தேவகுருவான பிரகஸ்பதியும் ராமதூதனான அனுமன் முதலியோரும் இங்கே வழிபட்டுப் பேறு பெற்றார்கள் என்றும் தலபுராணம் தெரிவிக்கிறது. இத்தலபுராணம் வடமொழியில் ‘நந்திநாடி‘ என்ற ஒரு நூலின் பகுதியாக உள்ளது என்று சொல்லுகிறார்கள். தமிழில் திருவலிதாய புராணம் என்ற பெயருடன் ஐதிகப் படங்களுடன் அரை நூற்றாண்டுக்கு முன் ஒரு நூலை ஆசிரியரான அஷ்டாவதானம் பூவை கலியாணசுந்தர முதலியார் வெளியிட்டார். இவர் அந்த நாளில் புகழ் பெற்றிருந்த ஒரு பெருந்த தமிழ்ப்புலவர். திருவான்மியூர்த் தலபுராணமும் இவர் இயற்றியதுதான்.
திருவலிதாய புராணத்தில் வேறு புராணங்களில் இல்லாத சில சிறப்புச் செய்திகளைக் காண்கிறோம். வலியன் உருவில் வந்த வலிதாயநாதரைத் தம் உரிமையைச் செல்வமாகக் கருதி வழிபட்ட பரத்வாஜ மகரிஷி, பரத்வாஜ தீர்த்தம் என்ற ஒரு குளத்தையும் தோண்டி வைத்தார் என்கிறது தலபுராணம். இக் குளம் கோயிலுக்குத் தென் திசையில் உள்ளது.
பரத்வாஜ தீர்த்தத்தை உள்ளிட்ட ஐந்து தீர்த்தங்கள் இங்கே உண்டு. அனும தீர்த்தம், அகஸ்திய தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம் ஆகிய நான்கு தீர்த்தங்களும் வலிதாய நாதரைப் பூசிக்கவந்த இந்த நால்வராலும் தோண்டப்பட்டன. அனுமனும் சுக்கிரீவனும் ராமனும் கூட, இங்கே பூசித்துப் பேறு பெற்றார்களாம். கூவமும் அன்று ஒரு புண்ணிய தீர்த்தமாக மதிக்கப்பெற்றது. இதையும் சேர்த்து ஆறு தீர்த்தங்கள் இத்தலத்திற்கு உரியன என்பர்.
அனும தீர்த்தத்தை அடுத்திருப்பது பிள்ளையார் கோயில். பிள்ளையார் மணமாகாதவர் என்பதுதானே சாதாரண மக்களுக்குத் தெரிந்திருக்கும் செய்தி. ஆனால் இத்தலப் புராணம் வலிதாயநாதரை வணங்கிப் பிரமதேவனின் புதல்வியர் விநாயகப் பெருமானை மணந்தனர் என்று தெரிவிக்கிறது. இத்தகைய வேறு சில கதைகளையும் இப்புராணத்தில் காண்கிறோம்.
இங்கே பதினாலு கல்வெட்டுகள் உண்டு. சில கல்வெட்டுகள் சிதைந்தும் அழிந்தும் போய்விட்டன. பழந் தமிழ்க் கல்வெட்டு ஒன்று தெளிவற்ற நிலையில் இருக்கிறது. இக்கல்வெட்டுக்கள் பல செய்திகளை இத்தலம் குறித்துத் தெரிவிக்கின்றன.
இரண்டு சோழ அரசர்கள் – முதலாவது இராஜ ராஜனும் இரண்டாவது ஆதித்தனுமாகிய பத்தாம் நூற்றாண்டுச் சோழர்கள் – இக்கோயிலுக்குப் பணி செய்து பிராகாரம் எழுப்பினார்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த விக்கிரமசோழன், விமானமும் மதிலும் அமைத்தான்; வாகனங்கள் செய்து வைத்தான்; விழாக்களம் நடத்தினான். இராஜராஜ சோழன் தன் ஆட்சியின் இருபத்தெட்டாம் ஆண்டில் பிள்ளையார் கோயிலைக் கட்டி நிவேதனத்துக்கு நிலமும் விட்டான். இவன் காலத்தில் பாடியைச் சேர்ந்த சிந்தாமணிபுரம் என்ற இடத்தில் வீடுகளும் நந்தவனங்களும் கோயிலுக்கு வழங்கப்பட்டன. இதனால் இக்கோயில் உள்ள இடம் சித்தாமணிபுரம் என்பதன் ஒரு பகுதி என்று ஊகிக்கலாம்.
இவ்வூரார் அந்த நாளில் அளக்க உபயோகித்த நாழிக்குத் ‘திருஞானசம்பந்த நாழி‘ என்று பெயர். பாடி பாடிய பெருந்தகை மீது மக்கள் கொண்ட பக்தியை என்னவென்பது? இக்கல்வெட்டுச் செய்தியை அர்த்த மண்டபத்தின் தென்புறச் சுவரில் காணலாம். இங்கும் மேற்கு புறச் சுவரிலும் விஜயநகர அரசன் ஒருவனது பூதானம் முதலியவற்றைக் குறிக்கும் கல்வெட்டையும் காண்கிறோம்.
விஜயகண்ட கோபாலதேவன் என்ற சிற்றரசன் நன்கொடைகள் பல இக்கோயிலுக்கு வழங்கியதுடன், காஞ்சீபுரத்திலிருந்து நடன மாதர்களைக் கொண்டு வந்து இங்கே குடியேற்றினான் என்ற செய்தியும் கல்வெட்டிலிருந்து தெரியவருகிறது; கோயிலைச் சீர் திருத்தவும் அன்னதானம் செய்யவும் வலிதாய ஊரையே தானமாக வழங்கிய செய்தியும் தெரிகிறது. விஜய நகரத்து அரசர் இறையிலியாக (தீர்வை இல்லாமல்) மேற்படி கிராமங்களை இக்கோயிலுக்குத் தானம் செய்த செய்தியையும் அறிகிறோம். இத்தகைய செய்திகள் இக்கோயில் வளர்ந்த கதையைச் சுட்டிக் காட்டுகின்றன.
திருஞான சம்பந்தரின் பதிகத்திலிருந்து வலிதாயம் இயற்கையழகுகள் நிறைந்த ஒரு தலம் என்றும் தெரியவருகிறது. இரண்டாம் பாட்டில் சம்பந்தர், இதைச் சோலைகள் சூழ்ந்த தலம் என்கிறார்; சோலைகளைத் தேன் சொரியும் சோலைகள் என்கிறார். ஐந்தாம் பாட்டில் சோலை வளம் குறிக்கும் போது
மந்திவந்து கடுவன்னோடும் கூடி
வணங்கும் வலிதாயம்
என்று நகைச்சுவையும் பக்திச்சுவையும் சொட்டப் பாடுகிறார். இல்லற இன்பம் குலையாது அன்பர்கள் வணங்கிப் பேறு பெறுவர் என்ற குறிப்பையும் இவ்வாக்கிலே காணலாம்.
‘தேன் இயன்ற நறுமாமல் கொண்டு நின்று‘ அன்பர்கள் வழிபடுவதாக ஆறாம் பாட்டு அறிவிக்கிறது. அத்தகைய புதுமலர்கள் ஒவ்வொரு நாளும் பூத்திருக்கும் சோலைகளை உடையது இத்தலம் என்பது குறிப்பு. இச்சோலைகளிலுள்ள கமுக மரங்களிலும் பலா மரங்களிலும் தேன்கூடுகள் காணப்படுகின்றனவாம்.
‘மதுவீசும் வலிதாயம்‘ என்றும் “மதுவிம்மும் வலிதாயம்“ என்றும், இத்தலத்தைத் ‘தேன்பெருகும் சோலை, வளத்துடன் வருணிப்பது கவனிக்கத் தக்கது. அழகிய பன்னிற மலர்களிலிருந்து வண்டுகள் தேனைச் சேர்ப்பதுபோல், இங்குள்ள அன்பர்கள் வேதாகம புராணங்களின் சாரமான உண்மைகளைக் கிரகித்துக் கொண்டு தங்கள் ரசிக உள்ளங்களைத் தூய அழகு வாய்ந்த நிலையில் வைத்திருப்பார்கள் என்று நாம் கருதலாம்.
அருணகிரிநாதரும் இராமலிங்க வள்ளலாரும்
இத்தலத்தைத் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரும் பாடியிருக்கிறார்; அருட்பிரகாச வள்ளலார் என்ற இராமலிங்க அடிகளும் பாடியிருக்கிறார். ‘திருவல்லி தாயமதில் உறைவோனே‘ என்று அருணகிரியார் இங்குள்ள முருகனைப் பாடியிருப்பதிலிருந்து, வலிதாயத்தை வல்லிதாயம் என்று இவர் காலத்தில் வழங்கியதாகக் கருதலாம். இம்முருகவேளுக்குப் ‘பூந்தேர் விழா‘ (புஷ்பரத உத்ஸவம்) தைக் கிருத்திகையில் சிறப்பாக நடைபெறும்.
இராமலிங்க அடிகள் காலத்தில் இக் கோயில் கவனிப்பார் இன்றி மிகவும் பரிதாபமான நிலையில் இருந்ததென்று தெரிய வருகிறது. நல்ல ஆடையில்லாமல் கந்தை கட்டியிருந்த ஈசனைக் கண்டு அடிகள் சிந்தை நொந்து “ஒளி செய் பொன்னே! நீ கந்தை சாத்தியது என்கொலோ “ என்று பாடியிருக்கிறார். ‘இதுவோ உள் எளிமை‘ என்று வருந்தியவர் ‘வேறு உடை உனக்கு உடுத்துவோர் இல்லையோ? ‘ என்றும், ‘இந்தக் கந்தையைத் தைத்துக் கொடுப்பார் இல்லையோ? ‘ என்றும் கேட்கிறார். ‘பழங்கந்தை சாத்தினீர்‘ என்றெல்லாம் பரிதவிக்கிறார், நெஞ்சம் கரைகின்றார்.
இராமலிங்க சுவாமிகள் காலத்திற்கு முன் ஆர்க்காட்டு நவாபின் சண்டை முதலிய கலவரங்களால் கோயில் சிதைவுற்ற நிலையில் இராமலிங்கசுவாமிகள் இக்கோயிலைத் தரிசித்து இப்படியெல்லாம் உளம் நொந்து பாடியிருக்க வேண்டும்.
பாடி என்ற வலிதாயத்தின் கதை ஒரு நெடுங்கதை. ஆற்றிலே மேடும் மடுவும் காண்பதுபோல் , கால நதியும் பேட்டைப் பள்ளமாக்கிப் பள்ளத்தை மோடக்கிச் சென்றவண்ணமாயிருக்கிறது என்ற உண்மையை நம் பாரத பூமியின் வரலாற்றிலும் காண்கிறோம்; அதே காட்சியைப் பாடியின் கதையும் நமக்குக் காட்டுகிறது. இக்காட்சியைப் பாடியின் கதையும் நமக்குக் காட்டுகிறது. இக்காட்சியுடன், சமீப எதிர்கால மாட்சியையும் நான் அடையத்தான் போகிறேன்! என்று பாடி செய்யும் மௌனப் பிரசங்கமும் நம் காதில் விழுகிறது.
தொகுத்து எழுதியவர் :

ராமச்சந்திர வைத்தியநாத்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

