வரலாற்றுப் புதையல் – 16
சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும் பல்வேறு பத்திரிகைகளில், அரசு அறிக்கைகளில் வந்த படைப்புகளையும் செய்திகளையும் அச்சுப் பிசகாது அறிந்திடும் முயற்சியே இது. அன்றைய உரைநடையை, இலக்கியப் போக்கினை, வரலாற்றை, செயல்முறையை அறிந்திடும் முயற்சிகளில் ஒன்றாகக்கூட இதை கொள்ள முடியும்.
யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தினின்றும் கலையாக்கங் கருதி மும்மாத வெளியீடாக பதிப்பிக்கப்பட்டு வந்த கலாநிதி ஜனவரி 1943 இதழில் வெளியிடப்பட்டு வந்த சமகால வசன இலக்கியம் குறித்த கட்டுரைத் தொடரின் ஒரு பகுதி இங்கே தரப்படுகிறது.
20 -ஆம் நூற்றாண்டில் வசனம்
ஸ்ரீ அ.வி.மயில்வாகனம் அவர்கள்
றோயல் கல்லூரி, கொழும்பு
வ.ரா என்பவர் சிறுகதைக் கோவை ஒன்றை எழுதி “நடைச் சித்திரம்“ எனப் பெயரிட்டு வெளியிட்டுள்ளார். வண்ணான் நாகப்பன், ஹோட்டல் மணி, தாசி கோகிலாம்பாள், சமையல் சாமா, முதலிய தலைப்பில் எழுதும் வாழ்க்கைச் சித்திரங்கள்தான் அவை. சில இடங்களில் ஆசிரியர் தனது தனிச் சிறப்பும் (ORIGINALITY) காட்டியுள்ளார். உ-ம். பக்கம் 184. “நான் சமூக ஊழல்களின் அழுக்குகளை வெளுக்கிற வண்ணான். நாகப்பன் அழுக்குத் துணிகளை வெளுக்கிற வண்ணான். நடை யுடை பாவனைகளில் படியும் அழுக்குகளைப் போக்கும் சங்கரனுடைய (சம்ஹரிப்பவனுடைய ) குலம் எங்களுடையது. எங்கள் பிதிரார்ஜித சொத்திலே நாகப்பன் ரிஷபத்தைப் பங்காக எடுத்துக் கொண்டான். நான் எதை எதை எடுத்துக் கொண்டேனென்று விரைவில் நினைவு வரவில்லை. கொஞ்சம் யோசித்துச் சொல்லுகிறேன்.”
இவர் மிகவும் எளிய தமிழ்நடையிலேயே எழுதி விளங்க வைக்கும் வன்மை வாய்ந்தவர். திசைச் சொற்களை அடியோடு ஒழிக்க முற்படுவோரின் விழையை இவர் தம் நூலில் குறிப்பாகக் காட்டிச் செல்கின்றார்.
சுவாமி சுத்தானந்த பாரதியார் பலவசன நூல்களை எழுதியுள்ளார். அவையும் புத்துணர்ச்சியைப் புகட்டுவன. கோவலன் சரிதை ஒன்று உண்டு. அது ஏனைய சிலப்பதிகார வழிநூல்களிலும் பார்க்கச் சிறப்புடையது. தமிழ்நாட்டிலே மானிடர் முன்னேற்றுமடைதற்கு ஏற்ற புதிய எண்ணங்களை ஊட்டும் ஒரு சில எழுத்தாளருள் சுத்தானந்த பாரதியார் முதல்வராவர். இவ்வெண்ணங்களை அவருடைய நூல் ஒவ்வொன்றிலும் காணலாம்.
தமிழ்நாட்டில் தற்போது இலக்கணக் கட்டுரை எழுதுபவர் வேங்கடராஜுலு ரெட்டியார் ஒருவரே. இவருடைய கட்டுரைகள் ஆராய்ச்சி நிரம்பியவை. சொற்களின் ஆதித் தோற்றத்தையும் பிறப்பையும் அடிப்படையாகக் கொண்டவை அவை. “Grammatical Essays” என்னும் நூலில் இவற்றைக் கண்டு களிக்க. இவர் கபிலர் பரணரைப் பற்றியும் எழுதியுள்ளார்.
வேங்கடசாமி நாட்டார், பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார், கா.சுப்பிரமணிய பிள்ளை முதலிய மூவரும் அழகிய சீரிய நடையைக் கையாளுபவர்கள். நாட்டார் நக்கீரர், கபிலர் ஆகிய பழைய புலவரைப் பற்றியும் பண்டிதமணி ‘உதயண காவியம்‘ என்று உதயணனைப் பற்றியும், சுப்பிரமணிய பிள்ளை இலக்கிய வரலாற்று தமிழ் நூல்களின் தோற்றம் தொன்மை முதலியன பற்றியும் எழுதியுள்ளார்கள். இவற்றைத் தனித்தனி விரிக்க இங்கே இடம் போதாதாதலின் குறிப்பிட்டுப் போகின்றேன்.
சில பாதிரிமார் தமிழைப் படித்துத் தமிழில் வசனம் எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்கள் தமிழில் எழுதினும் தமிழ் வழக்கையும் அதற்கேற்ற நடையையும் பின்பற்றச் சற்றே கஷ்டப்படுகிறார்கள். ஆங்கில வழக்கே அவர்களுக்குத் தமிழிலும் புகுந்து விடுகிறது! உதாரணமாக:- “He cannot but do,” என்பதை “அவன் செய்யத்தான் செய்வான் “ என்று கூறுவர். “I have a coconut” என்பதை “ நான் ஒரு தேங்காயை உடைத்தாயிருக்கிறேன் “ என்பார்கள். இவற்றைத் தமிழ்முறையில் கூறின் – கட்டாயம் செய்வேன் என்றும், எங்களிடம் ஒரு தேங்காய் உண்டு என்றும் கூறுவோம். இப்படிப் பல பிசகுகள் பலப்பல உள. எனினும் இவையும் தமிழின் ஒரு நடையைக் குறிப்பன. ( Missionary style).
அடுத்து எனது ஆசிரியர் அழகசுந்தரதேசிகரைப்பற்றிக் கூறுவேன். இவர் சிறுபிள்ளைகளுக்கு வாசினைப் புத்தகங்கள் அரிய எளிய நடையில் எழுதியுள்ளார். இலக்கண வரம்பு கடவாது அழகாகத் தனித் தமிழ்மொழியில் எழுதுவதிற் பெரும்பாலும் கைதேர்ந்தவர்; ஏசு. ஓகனர், ஆயோலை, சங்கதம், இருவது, ஐவது, தொண்டு என்பன போன்ற சொற்கள் அழியாவண்ணம் எடுத்தாண்டவர் இவரே. ஓர், ஈர், ஒரு, இருமேல், கீழ், முன், பின், அல்ல, முதலாம், 2ஆம் என்னும் வழக்குகளை எல்லாம் பொதுவழக்குப் பின்பற்றியும் சிறப்பு வழக்கு விலக்கியும் வழங்குபவர் ஒரு சிலரே. அவருள் என்னாசிரியரும் விபுலானந்த அடிகளுமே தலை சிறந்தவர். இவர்களுடைய வசனத்தில் ஒரு இனிமையுண்டு. வசனங்கள் பொருளின் போக்குடன் தொடர்வுபட்டே செல்லும். வழு ஒன்றேனுங் கிடையாது. சில தத்துவார்த்தமான பொருட்களை எடுத்தாளும்போது சுவாமியவர்கள் கடுஞ்சொற்களை உபயோகித்தும் உன்னத நடையைக் கையாண்டும் கட்டுரை வரைவார். ஆனால் இலகுவான பொருள்பற்றி எழுதும்போது அவருடைய எளிய நடையில் சிறப்பியல் தோன்றும். உதாரணமாக ‘உணவு ‘ என்னம் பொருள்பற்றி எழுதிய கட்டுரையைக் காண்க. தேசிகரவர்கள் எந்தப் பொருள்பற்றி எழுதினும் ஒரே எளிய இனிய நடையைக் கையாளுவர். உதாரணமாக அடியில்வரும் ஒரு பாகத்தைக் காண்க. P.S. “ஏசுவின் தாய்தந்தையர் செல்வரல்லர், வறியவரெனவும், சூசையார் சீவனோபாயத்தின் பொருட்டுத் தச்சுவேலைசெய்து வந்தாரெனவும் முன்னமே கண்டுள்ளோம். ஏசுவும் தந்தையார் தொழிலறையிற் சென்று அவருக்கு உதவி செய்தும் தச்சுவேலைசெய்ய அவர்பாற் பயிற்சியடைந்தும் வந்தார். ஏசு காளைப்பருவம் அடையுமுன்னரே தந்தையார் பரமபதஞ் சேர்ந்தனர் “ என்பது அப்பகுதி.
இவ்வாக்கியங்கள் எளிய இலகுவான நடையில் நிகழ்கின்றன. இவற்றுள் எண்ணும்மைவரு மிடங்களெல்லாம் ஆசிரியர் உறுப்பிசைக் குறியை விட்டுவிடுகின்றனர். இவர் ஆங்கில நடையைப் பின்பற்றுகின்றார்போலும். இவருடைய வசன நடை யாவரும் பின்பற்றத் தகுந்தது. தேசிகரும் சுவாமி அவர்களும் வடமொழி வழங்குவதில் ஏக மனதுடையவர். தமிழ் வழக்கில் வந்துள்ள சொற்களை மாத்திரம் இன்றியமையாத விடங்களில் அமைக்க இடம் கொடுப்பார்கள்.
அடுத்தவர் பண்டிதர் கணபதிப் பிள்ளை. இவர் அதிகம் வசனநூல் எழுதியவரல்லர். எழுதிய ஒருசில கட்டுரைகளுக்குள் தன் வசனம் இன்னதென்றும், நகைச்சுவையுடன் எழுதுவது எப்படி என்றும், நோகாமல் நொடிக்காமல் கண்டிப்பது எப்படியென்றும் காட்டியுள்ளார். பண்டிதன்மாருள் இவர்போல் எளிய சீரிய நடையைக் கையாளுபவர் இல்லை என்னலாம். இவருடைய வாக்கியங்கள் சில வருமாறு:-
*”அப்பாலுள்ள அதிகாரங்களைப் பரிசோதித்து அச்சிடுதற்கு அக்காலத்திலே தமிழ் நாட்டிலிருந்த எந்த வித்துவானுக்கும் துணிவு பிறக்கவில்லை. வித்துவான்களெல்லாம் நீந்தப் பழகிக்கொண்டுதான் நீரில் இறங்குவதாகத் தீர்மனம்பண்ணிக்கொண்டு கரையில் நின்று விட்டார்கள். பொருளதிகார விஷயத்தில் தமிழ்நாடு தலை குனிகிற காலத்தில் ஒரு நூல் – தொல்காப்பியம் – பொருளதிகாரம் – நச்சினார்க்கினியம் – சி.வை.தாமோதரம் பிள்ளை பரிசோதித்து வெளியிட்ட பதிப்பு தமிழ்நாடெங்கும் பவனி வந்தது. தமிழ் வித்துவான்களெல்லாம் தங்கள் கண்களை நம்பாமலே கண்டுகளித்தார்கள். “நீடிய சீர் பெறு தாமோ தரமன்ன நீழ்புவியில் கோடி புலவர்கள் கூடினும் நின் புகழ் கூறரிதே “ என்ற பாட்டு வேதநாயகம் பிள்ளையின் வாயிலிருந்து வழுவி விழுந்தது.“ இங்கே நாம் நீந்தப்பழகிக் கொண்டு நீரிலிறங்கத் தீர்மானித்த வித்துவான்களைப் பற்றி வாசிக்கும்போது எங்கண்முன் ஒரு படம் தோன்றுகின்றது. கோழிக் குஞ்சின் நெஞ்சுடையார் பதறிக் கொண்டு நிற்கின்றனர். பழைய ஏட்டிற் கை வைக்கவும் பயம். தமிழ்நாடு தலை குனிந்ததென்னும்போழ்து நிலந்தரு திருவீற் பாண்டியனும் சபையும் தலைகுனிந்ததை நினைவூட்டுகின்றதல்லவா? ‘பவனி வந்தது’ என்னுஞ் சொற்றொடரை மாற்றி வேறு எச்சொல்லைப் புகுத்தினாலும் சுவைக்காது. அதுவே சொல். அது இருக்கவேண்டிய இடமே இடம். ‘கண்களை நம்பாமல் நாணல் ‘ ஆங்கிலத்தில் They could not believe their eyes என்பதற்குப் பொருத்தமாகவுள்ளது. பண்டிதர் ஆங்கில அறிவில்லாவிடினும் ஆங்கிலச் சொற்றொடரை எடுத்தாளும் வன்மை வியக்கத்தக்கது. வேதநாயகம்பிள்ளை இலேசாகச் சாற்றுகவி கொடுப்பவரல்லர். தகுதியறிந்தே கொடுப்பவர். ஆதலின் பாட்டு “வழுவி விழுந்தது “ என்னும் தொடர் மிகப் பொருந்தும். இதனை வாசிக்க எமக்கு இளமையிற் கற்ற ஒரு அழகிய வசனம் நினைவுக்கு வருகின்றது. ‘பழுத்த கொய்யாப்பழம் பஞ்சவர்ணக்கிளியின் சொண்டினின்று நழுவி விழுந்தது ‘ என்பது அது. உண்மையில் பறவைக்கு விருப்பமில்லாவிடினும் பழம் பாரமானபடியால் நழுவிவிட்டது. இங்கும் இலக்கணப் படிப்பாளர் செய்த வேலை அபாரமனாபடியால் பிள்ளையவர்களை அறியாமலே ஆர்வம் பிடர்பிடித்துத் தள்ளப் பாட்டொன்று நழுவி விழுந்து விட்டது! இப்படிச் செல்லும் பண்டிதரவர்களின் வசனம். அவர் இன்னும் பல நூல் எழுதுவார் என்று தமிழுலகு எதிர்பார்த்திருக்கின்றது.
இன்னும் 20-ஆம் நூற்றாண்டிற் பெயர்போன வசன ஆசிரியன்மாருள் சூரியநாராயண சாத்திரி, செல்வக் கேசவராய முதலியார், கலியாணசுந்தரர், இராகவஐயங்கார், சேதுப்பிள்ளை, கிருட்டினமூர்த்தி ஆகியோரைப்பற்றியும் சில கூறல்வேண்டும். சாத்திரியாரவர்கள் நாடக நூலும் நவீன சிறு கட்டுரைகளும் தமிழ்மொழி வரலாறொன்றும் எழுதியுள்ளார். அவர் நடையதனுள் வசனநடை இருக்கவேண்டிய முறையை எடுத்தாண்டுள்ளார். வடமொழிக் கலப்பு அவருக்கு விருப்பமில்லை. பரிபாஷைச் சொற்களை உபயோகியார். எளிய நடையைக் கையாண்டு பொருளை யாவரும் விளங்க வைப்பர். இவருடைய நூல் சில இன்னும் அச்சுவாகனமேறாமை துன்பத்திற்கிடமானது. மணிபிரவாள நூலாசிரியரைக் கண்டிக்கும்பொழுது:- “இப்படியாக அவருக்கு இவ்வகை ஆபாசபாஷை ஒன்று வகுக்குமாறு தோன்றிற்று “ என்று ஏசி எழுதுகின்றார். ஆசிரியர் உண்மையில் தமிழபிமானியே.
செல்வக் கேசவராய முதலியருடைய வியாசங்கள் யாவும் மிகச் சிறந்தனவென்றும் வடசொற் பலகலந்த நாவலருடைய வசனத்திலும் அழகிய முறையில் எழுதப்பட்டனவென்றும் தென்னிந்தியர் போற்றிக்கொள்ளுகின்றனர். ஆனால் அவ்வளவிற்கு சொல்லுவதற்கில்லை. முதலியாரவர்களே நாவலருடைய வசனநடை, வசனமெழுதுவோருக்கெல்லாம் ஒரு நடைவண்டிபோலிருக்குமென்று கூறியிருப்பதால் அவரே இவருடைய நடையை மெச்சினரென்றறிதல்வேண்டும். அன்றியும் நாவலருடைய நடை வண்டியை உருட்டியே அவர் நடைபழகினார் என்றாலும் பொருந்தும். திரு.வி.கலியாணசுந்தரனார் பல வசன நூல்களை எழுதித் தந்துளார். இவர் எழுதியனவற்றை நுணுகி ஆராய்ந்து படிப்போமானால் பொருட் செறிவிலும் சொற்பெருக்கம் கூடக் காணலாகும். இவர் பேசுவதுபோலவே எழுதுவதும். தண்ணளியாய் நீரோட்டம்போலிருக்கும். ஓரிடத்திலும் தங்கு தடை இராது. ஆனால் பொதிந்துள்ள ஒரே பொருளையே மேலும்மேலும் எடுத்து வெவ்வேறு சொற்றொடரால் விளக்குவர். அவருடைய நூல் ஒன்றும் தவறாது ஆராயின் ஒவ்வொன்றிலும் எதுவிதமோ “பெண்ணின் பெருமை “ – வந்துவிடும்! ஏதோ ஒரு சந்தர்ப்பம் உண்டு பண்ணி அந்தப் “பெருமையைக்“ கொண்டுவந்து புகுத்திப் பலபாகங்களில் வரைந்து விடுவார். ஆனால், வசன நடைக்கு ஒரு வரம்பானார் இவர் என்னல் சாலும்.
மு.இராகவஐயங்காரும் நல்ல சிறந்த வசன மெழுதுபவர். அறிவு நன்றாகப் படைத்தவர். ஆதலால் இலக்கண வழுவின்றியும் பொருள் பல பொதிந்தும் எழுதும் ஆற்றல் மிக்குடையவர். ஒரு சிறு அளவிற்குப் பிராமணர் கட்சியைத் தகுவியே யெழுதும் குணமுடையவர். ஆதலின் சோமசுந்தரபாரதியார் கையால் கடிய கண்டனம் பல பெற்றுக்களை தெளிந்தவர். “ஐயர் யாத்தனர் கரணமென்ப “, எனவரும் தொல்காப்பிய சூத்திர அடியிலிருந்தே அந்த வாதம் பிறந்தது. ஐயங்காரின் வடமொழி அபிமானம் காட்டும் வசனம் பின் வருவது போன்றதே:-
47 “சாசனக்கவி வெற்றிவேந்தனின் வீர முதலிய செயல்கள் பிரபந்த ரூபமாக முன்னோராற் பாடப்பட்டிருத்தலை வடமொழியிலன்றிச் சிறிது தமிழினும் காணலாகும்.“
கனம் சேதுப்பிள்ளையவர்களும் தமிழ்வசனத்திற்கு நன்முயற்சி செய்துள்ளார். இனிமையும் எளிமையும் வாய்த்தவிடத்திற் சுவையும் பொதிந்தே கட்டுரை எழுதுவர். அவருடனும் அவர் நூலுடனும் பழகாதார் எதுகைச் சொற்களை வலிந்து வரவழைத்துத் தம் வசனத்தில் வைக்கின்றாரென்று வசை கூறுவர். ஆனால் அது அப்படியன்று, இந்நடை அவருக்கு நன்கு கை வந்துளது. பேச்சிலும் எழுத்திலும் எதுகை பரக்க வருகின்றது. எவ்வழியாலும் கஷ்டப்பட்டுச் சொற் கோக்கின்றார் என நினைத்தல் தவறு. P.7 வீரமாநகரத்திலிருந்து ஒரு தொடை வருகின்றது பாருங்கள்:- “இக்காலத்தில் தன்னரசு பெற்ற நல்லரசுகள் தனிக் கொடியுடையனவாக விளங்குதல் போன்று முற்காலத்து மன்னரும் கொடியுடை கொற்றவராக விளங்கினர். நானிலம் காக்கும் மன்னரும், தேவரிற் சிறந்த மூவரும், தமக்குரிய தனிக்கொடியோடு திகழ்ந்தனர். அண்டங்களைத்தையும் ஆக்கும் தொழிலுடைய அயன், அழகிய அன்னத்தைக் கொடியில் எழுதிய அன்னக் கொடியோனாக அமைந்தான். காக்குந்த தொழிலுடைய (கரிய) திருமால் வலிய கலுழனைத் தன்கொடியில் எழுதிக் கருடக்கொடியோன் என்று பெயர் பெற்றான். அழிக்குந் தொழிலுகொண்ட அரன் மழவிடையைத் தன் கொடியில் எழுதி விடைக்கொடியோன் என்று வழங்கப் பெற்றான் “ என்பதே. பிள்ளையவர்களுடைய வசனங்களுள், கம்பர், வள்ளுவர், மணிவாசகர், இளங்கோவராகிய இந்நால்வரும் மிகவும் நடமாடுவர். அவர்கள் பாக்களை அப்படியே எடுத்துத் தம் வசனத்துட் புகுத்தும் வழக்கம் இவருக்கு உண்டு. இம்முறையைச் சில கடிகின்றனர். சிலர் போற்றுகின்றனர்.
தொகுத்து எழுதியவர் :

ராமச்சந்திர வைத்தியநாத்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

