வரலாற்றுப் புதையல் - 17:- ஸ்ரீமான் அ. மாதவையர் எழுதிய “கான் சாயபு கம்மந்தான் | மருதநாயகம் பிள்ளை வரலாறு” கட்டுரை - ராமச்சந்திர வைத்தியநாத் | www.bookday.in

வரலாற்றுப் புதையல் – 17:- அ. மாதவையர் எழுதிய “கான் சாயபு கம்மந்தான் | மருதநாயகம் பிள்ளை வரலாறு” கட்டுரை – ராமச்சந்திர வைத்தியநாத்

வரலாற்றுப் புதையல் – 17

சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும்  பல்வேறு பத்திரிகைகளில், அரசு அறிக்கைகளில் வந்த படைப்புகளையும்  செய்திகளையும்  அச்சுப் பிசகாது அறிந்திடும் முயற்சியே இது.  அன்றைய உரைநடையை, இலக்கியப் போக்கினை, வரலாற்றை, செயல்முறையை  அறிந்திடும் முயற்சிகளில் ஒன்றாகக்கூட இதை கொள்ள முடியும்.

தமிழர் நேசன் எனும் பத்திரிகையில் 1925 பிப்ரவரி மற்றும் மார்ச் இதழ்களில் அ.மாதவையா எழுதிய வரலாற்றைப் பார்க்கையில் மருதநாயகம் பற்றிய செய்திகளுக்கு தமிழகத்தில் என்றுமே பஞ்சம் இருந்ததில்லையோ என்றுதான் தோன்றுகிறது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தேசிய இயக்கம் எழுச்சி கொண்ட பின்னணியில் அதுவும் தமிழ்நாட்டுச் சூழலில் இஸ்லாமுக்கு மாறி கான்சாயபுவாக புகழ்பெற்ற  மருதநாயகம் வரலாற்றை மாதவையா சற்று விரிவாகவே எழுதியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.

கான் சாயபு கம்மந்தான்
Khan Saheb, Commandant
ஸ்ரீமான் அ. மாதவையர் எழுதியது

இவர், இராமநாதபுரம் சீமையைச் சேர்ந்த பனையூரிலே, வேளாளர் குலத்தில் பிறந்தவர்; இயற்பெயர், மருதநாயகம் பிள்ளை; இவர் ஜனனம் 1720-1730-க்குள் இருக்கலாம்.  சிறுவதிலே வெகு துஷ்டனரான இவர் பெற்றோர்க்கடங்காது, ஊரைவிட்டு ஓடிப்போய், முஸ்லீமாகி, முகம்மது யூஸப் கான் என்ற பெயர் பூண்டு, புதுச்சேரியை அடைந்து, ஷாக்கா என்ற பிரெஞ்சுக்காரரிடன் 3 வருஷம் குற்றவேல் புரிந்து வந்தாராம்.  பிறகு அவர் வீட்டில் திருடினாரென்று அவர் விரட்டிவிட, பிரண்டன் என்ற துரைமகனிடம் வேலையிலமர்ந்தனர்.  பிரண்டன் இவரைத் தன் மகனைப் போலப் பேணிவளர்த்து, இவருக்குக் கல்வியும் பல பாஷைகளும் கற்பித்து வந்தனர்.  இந்தப் பிரண்டன் இன்னாரென்று துலங்கவில்லை.

ஷாக்கா என்பவரின் குடும்பத்தினர்கள், முதலில் ‘பிரண்டனூர் ஸாக்கள் ‘ என்று அழைக்கப்பட்டன ரென்பர்.  அங்ஙனமாயின், ஸாவும் பிரண்டனும் ஒருவராகவே இருந்திருக்கலாம்.  அஃதெவ்வாறாயினும் யூஸப் கான், பல பாஷைகள் பேசவும் எழுதவும் தெரிந்தவர் என்பது திண்ணம்.  இதுவு மன்றி, ஒரு காலத்தில், திருப்பதி, நெல்லூர்ப் பிரதேசங்களை யாண்டு வந்த முகம்மது கமால் என்பவரிடம் இவர் வைத்தியராக யிருந்தமையால், இவருக்கு வைத்தியமும் தெரியுமென்பது தேற்றம்.  பிரண்டன் துரை சேவகத்தை விட்டு நீக்கிய பின்னர், யூஸப்கான், நவாபின் நிர்வாகத்தில் அமர்ந்து, முறையே தண்டல்காரன், சுங்கச்சாவடிக்காரன், சிப்பாய், நாயக், ஹவில்தார் வேலைகளிலிருந்து படிப்படியாக யுயர்ந்து, ஒரு சிப்பாய் கம்பெனியின் தலைவராகி, சுபேதார் என்னும் பட்டத்தை அடைந்தனர் என்பர்.  அந்தக் காலத்திலே, கருநாடக நவாப் ஸ்தானத்தைப்பற்றி, முகம்மதலிக்கும் சண்டாசாயபுக்கும் வழக்கும் போர்களும் நிகழ்ந்தமையும்; அவரவர் கைவலிமைக் கமைந்தவண்ணம் நாட்டிற்  சில பாகங்களை அவரவர் ஆண்டு வந்தமையும்; புதுச்சேரியைத் தலைநகராகக் கொண்டிருந்த பிரெஞ்சுக்காரர் சண்டாசாயபுக்கும், தேவி கோட்டை ( Fort St.David) யையும் சென்னையையும் தலைநகராகக் கொண்டிருந்த ஆங்கிலேயர் முகம்மதலிக்கும் உதவி செய்து, ஒருவரோடொருவர் சண்டை செய்தமையும்; இந்தியாவில் ஆங்கிலேயர் துரைத்தனத்தின் மூலபுருஷர் எனத்தகும் க்ளைவ் என்பவர், இந்தச் சண்டைகளில் முதல் முதல் பெயர் பெற்றமையும், சரித்திர விஷயங்கள்.  யூஸப் கான் சண்டாசாயபுவின் சேவகத்தில் தான் முதலில் அமர்ந்தனர் போலும்; ஏனெனில், சண்டாசாயபுவின் உத்தியோகஸ்தர்.  கமாலின் வைத்தியராக யூஸப்கான் எவ்வளவு காலமிருந்தன ரென்பது தெரியவில்லை.  பலநாள் அவ்வேலையி லிருந்தா ரென்று எண்ணுதற்கு மிடமில்லை.  அதுவரையில் தான் சம்பாதித்திருந்த கைப்பொருளைக்கொண்டு, தனக்கே சொந்தமான ஒரு சிப்பாய்ப் படையைத் திரட்டி, அதன் சுபேதாராகத் தானிருந்துகொண்டு, “நெல்லூர் சுபேதார் “ என்னும் பெயரோடும், தன் சிப்பாய்ப் படையோடும், அவர் ஆங்கிலேயரின் சேவகத்திற் புகுந்தார்.  இங்ஙனம் அவர் ஆங்கிலேயரின் கீழ் முதல் முதல் உத்தியோகஸ்தரானது 1752 -ம் ஆண்டின் துவக்கத்தில், க்ளைவின் சைநியத்தில் என்பர்.  இவர் சேர்நத பிறகே, ஆறுகாட்டுக் கோட்டையை கிளைவ் பிடித்துக் கொண்டார்.  அப்பால், சண்டாசாயபுவின் குமாரர் ராஜா சாயபு என்பவர், தோற்றுச் சிதறுண்டு, தன் படைகளை யெல்லாம் ஒருவரது திரட்டிச் சேர்த்து, பிரெஞ்சுக்காரர் உதவியையுங் கொண்டு, மீண்டும் யுத்த சன்னத்த ராயினர்.  1752 -ம் வருஷம் பெப்ரவரி மாதம் 28-ம் தேதியன்று, காவேரிப்பாக்கத்தில் நடந்த சண்டையிலே, க்ளைவ், மீண்டும் அவரை முறியடித்தார்.

அடுத்த மாதத்தில் மேஜர் லாரன்ஸ் இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்து ஆங்கிலேயே சேனாதிபதியாகிவிடவே, க்ளைவ், அவர் கீழ்ப் படைத்தலைவராயும்  இராணுவ உக்கிராணியாயும்; க்ளைவின் தலைமைக் கீழுள்ள தண்டில் நெல்லூர் சுபேதார் தன் சிப்பாய்களோடு ஒரு வகுப்பாயும், சேவித்து வந்தனர்.  அக்காலத்து இராணுவ அறிக்கைப் பத்திரங்களிலும், லிகிதங்களிலும், யூஸப்கான் பெயர் “நெல்லூர்ச் சுபேதார், “ அல்லது “நெல்லூர்“ என்று மாத்திரமே குறிக்கப் பட்டிருக்கிறது.

யூஸப்கான் உதவியினால் பிரெஞ்சுக்காரரை உட்டாத்தூரிலே தோற்கடித்த காப்தன் டால்டன் என்பவர்: “ நெல்லூர் சிப்பாய்கள் சுத்தவீரர்கள்:  அவர்கள் சுபேதாரோ, ஒப்புயர்வற்ற வீரர்:  அவர் தான் எனக்கு ஒரே தாரகம்” என்று எழுதியிருக்கிறார்.  அதன் பின் வாலிகொண்டபுரத்திலே பிரெஞ்சுக்காரரை வென்றபோதும், நெல்லூர்ச்  சிப்பாய்களை புகழ்ந்திருக்கிறார்.

இதற்குள், தஞ்சாவூர் ராஜ்யத்து மகாராஷ்டிர சேனாதிபதியான மங்கோஜி என்பவர் கையில் அகப்பட்டு விட்ட சண்டாசாயபு, அவரால் கொலையுண்டார்.  பல வருஷங்களுக்கு முன்னர், திருச்சிராப்பள்ளியிலே, காவேரிக்கரையி லுள்ள தளவாய்மண்டபத்திலே, பாண்டியராணி மீனாக்ஷிக்கு உண்மையாயிருந்து உதவி செய்கிறேனென்று குரானைக் கையிலேந்திச் சத்தியஞ்செய்து கொடுத்து திருச்சிராப்பள்ளிக் கோட்டைக்குள் நுழைந்த சண்டா சாயபு, பாண்டியராணிக்காக யுத்தஞ்செய்து நாட்டைக் கைப்பற்றிய பின்னர், கொடுந் துரோகஞ்செய்து அவளைச் சிறைப்படுத்தி இராஜ்யத்தைத் தானே அபகரித்துக் கொண்டு, இராணியை மானபங்கமுஞ் செய்து,  அவள் நஞ்சுண்டு சாகும்படி செய்து விட்டார்.  ‘அரசன் அன்று கேட்கும்; தெய்வம் நின்று கேட்கும்‘, என்னும் நீதிப்படி, அந்த மகா துரோகத்தின் பயனாக, அதே தளவாய்மண்டபத்திலே, 1852 -ம் வருஷம் ஜூன் மாஸம் 3 -ம் தேதியன்று, ‘நீயன்று பொய்ப் பிரமாணம் பண்ணிச் செய்த துரோகத்துக்கு இதுவே தண்டனை ‘ என்று சொல்லிக் கொண்டே மங்கோஜி சண்டா சாயபுவின் தலையை வீசிவிட்டார்.  சண்டாசாயபு ஒழிந்து, முகம்மதலியே கர்நாடக நவாபாகிவிட்ட பின்பு, இனிச் சண்டை சச்சரவுக ளில்லையென்று ஆங்கிலேயர் எண்ணினர்.  ஆனால் முகம்மதலிக்கு உதவி செய்து மைசூரார், அவர் வாக்கு கொடுத்தபடி, திருச்சிராப்பள்ளியைத் தமக்குக் கொடுத்துவிட வேண்டுமென்று வாதாடினதாலும், ட்யூப்ளேயின் சூழ்ச்சிகளாலும், ஜேர் லாரென்ஸ், திருச்சிராப்பள்ளியைக் காத்துப்  போர்புரிய வேண்டியதாயிற்று.  அவர் சைநியங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்கள் படைக்கலங்கள் எதையும் எதிரி கையில் அகப்படாமல், ஆங்கிலேயரிடம் வெகு சாமர்த்தியமாகக் கொண்டு சேர்த்து உதவினர் யூஸப்கானே, இவ்வாறு பேருதவி செய்த யூஸப்கானைப் பற்றி, மேஜர் லாரன்ஸ், பின் வருமாறு எழுதியிருக்கிறார்:-

“அவர் சிறந்த தளகர்த்தர்.  இந்தப் பிரதேசங்களை நன்கறிந்தவர்; வீரமும் மனவுறுதியும் வாய்ந்தவராயினும், சமயத்தில் வெகு நிதானமாய், புத்திசாலித்தனமாய், நடப்பவர்;  சுருக்கிக் கூறின், பிறவியில் யுத்தவீரர், அவருக்குச் சமானரானவரை இந்நாட்டில் நான் கண்டதில்லை.  ஓயாதுழைக்கிறார்;  ஒவ்வொரு வேலையையும் நேரில் கவனிக்கிறார்;  தன் புத்திசாலித்தனத்தினால் உணவுப் பொருள்களை அவர் கொண்டுவந் துதவினார்,” ஒப்புயர்வற்ற உத்தம வீரரும் ஆங்கில அரசாட்சி ஸ்தாபனக் கர்த்தருமான க்ளைவைப் பற்றியும், இவை போன்ற சொற்களால் லாரன்ஸ் புகழ்ந்திருப்பதை கவனித்தால், யூஸப்கான் க்ளைவுக்குச் சமமானவர் என்பது விளங்கும்.

மேலே கூறியவண்ணம் ஆங்கிலேயர்க்கும் மைசூரார்க்கும் திருச்சிராப்பள்ளிக் கோட்டையைப் பற்றிப் போர் நிகழ்ந்துகொண்டிருக்கும் காலத்திலே, யூஸப்கானது உதவியினால்தான் மேஜர் லாரன்ஸின் படைகள் ஜீவித்துப் போராடுகின்றன என்பதையும், அவர் உதவியில்லாவிடின் ஆங்கிலேயரை விரைவில் வென்று நசுக்கி விடலாமென்பதையும் அறிந்து, அதுகாரணமாக மேஜர் லாரன்ஸ் யூஸப்கானிடத்து வைத்திருக்கும் மிக்க பிரீதியையும் பெரு மதிப்பையும் கண்டு பொறாமை கொண்ட முனுஷி புண்ணியப்பர் என்னும் பிராமணர், யூஸப்கானைத் தொலைக்கச் சூழ்ச்சி செய்யலானார்.  மைசூர் சேனாதிபதியான நந்தராஜரிடமிருந்து யூஸப்கானுக்கும் வேறொரு சிப்பாய்த் தலைவனுக்கும் ஒரு சதியாலோசனைக் கடிதம் வருமாறும்; அக்கடிதம் ஆங்கிலேயர் பாதையில் கீழே கிடக்க, அதையொருவன் கண்டெடுத்து ஆங்கிலேயர் தலைவரிடம் கொடுக்கு மாறும், புண்ணியப்பர் ஏற்பாடு செய்தார்.  அந்தப் பொய்க் கடிதத்திலே, திருச்சிராப்பள்ளிக் கோட்டையைத் துரோகமாய் மைசூராருக்குப் பிடித்துக் கொடுத்துவிட யூஸப்கான் சம்மதித்தது போற் கண்டிருந்தது.  கடிதத்தைப் பார்த்தவுடன், மேஜர் லாரென்ஸ், யூஸெப்கானையும் அவருடன் துரோகத்திற் சேர்ந்த சிப்பாய்த் தலைவனையும் சிறைப்படுத்தி, காப்தன் கைலாட்டை, அவ்விஷயத்தைப் பற்றித் தீர விசாரணை செய்ய ஏவினார்.  கைலாட் விசாரணை செய்ததில் உண்மை துலங்கி, யூஸப்கானின் சத்தியமும் புண்ணியப்பரின் சதியாலோசனையும் விளங்கிவிடவே, கவர்னரின் கட்டளைப்படி, புண்ணியப்பர் பீரங்கி வாயில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்;  யூஸப்கான் சிறை நீங்கி மீண்டும் தன் பதவியைப் பெற்றார்.  நாட்டில் வழங்கும் பாஷை தமக்கும் தெரியாமையால், புண்ணியப்பரைப் போன்ற துரோகிகளின் உதவியைக் கொண்டு வேலைகளை நடத்தி  ஆங்கிலேயரிடம் சேவகம் செய்ய வேண்டுமென்பதை, யூஸப்கான் அப்பொழுது நன்குணர்ந்தார்.

திருச்சிராப்பள்ளியிலுள்ள சைநியங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களைக் காவற் படைகளுடன் காப்டன் கைலாட்டும் யூஸப்கானும் ஒரு நாளிரவு கொண்டுவருகையில், வழக்கம்போல் யாவர்க்கும் முன்பு ஒற்றர் தலைவனாய்க் குதிரைமீது சென்ற யூஸப்கான், பிரெஞ்சுக்காரரான எதிரிகள் காட்டு மறைவில் ஒளிந்திருப்பதையறிந்து, வேகமாய்த் திரும்பி வந்து தெரிவித்ததால், உடன காவற்படைகளை வேறு வழியில் இரு கிளைகளாகத் திருப்பி நடத்தி, எதிரிகளைத் தாக்கி முறியடித்து விரட்டிவிட முடிந்தது.   அன்றுமட்டும் எதிரிகள் கையில் அகப்பட்டுத் தோல்வியுற்று, உணவுப் பொருள்கள் திருச்சிராப்பள்ளி சேராமலிருந்தால், மேஜர் லாரன்ஸ் கோட்டையை இழந்து புறங்காட்டி யோடியிருக்க வேண்டியதுதான்.  யூஸப்கானே அன்று ஆங்கிலேயரின் படைகளையும் மானத்தையுங் காப்பாற்றினார் என்பது பொருந்தும்.

யூஸப்கானின் யோக்கியதையையும், அரும்பெருஞ்திறனையும், அவர் செய்துவரும் விலைமதிப் பில்லாப் பேருதவிகளையும் நன்கறிந்த மேஜர் லாரன்ஸ், சென்னையிலுள்ள கவர்னருக்கு அவரைப் புகழ்ந்தெழுதி, அவருடைய சேவகச் சிறப்புக்.கு ஏற்க கம்பெனியார் அவரை மரியாதை செய்ய வேண்டினார்.  அதனால் ஆங்கிலேய கம்பெனியார், தமது சிப்பாய்ப் படைகளுக்கெல்லாம் யூஸப்கானையே சேனாபதியாக்கி, கம்மந்தான் (Commandant)  என்னும் பட்டத்தையும், அவருக்கு அளித்தனர்.  மூன்றவுன்ஸ் கனத்துக்கு மேலான அந்தப் பதக்கத்தில், ஒருபுறத்தில் கம்பெனியாரின் படை முத்திரையும் வாழ்த்துரை வாசகமும் பொறித்திருந்தது; மறுபுறத்திலே, “கனம் கம்பெனியாரின் சிப்பாய்களுக்கெல்லாம் கம்மந்தானான முகம்மது யூஸப்கான் பகதூருக்கு, போர்டு ஸெண்ட் ஜார்ஜ் கனம் கவர்னர் பவுன்ஸிலர் அவர்களால், வீர வெகுமானமாகவும், அஞ்சாத போர் வீரரும் அதி சாமர்த்திய தளகர்த்தரும் உண்மைச் சேவகருமான அவர் பெயரைப் பிற்காலத்தில்  நிலைக்கச் செய்யும் ஞாபகச்சின்னமாகவும், இந்தப் பரிசு அளிக்கப்பட்டது “ என்று, பாரசீக பாஷையில் எழுதியிருந்தது.  இவ்வாறு புகழ்ப் பத்திரமும் பொற் பதக்கமும் 1754 – ம் வருஷத்திலே யூஸப்கானுக்கு அளித்த ஆங்கிலேய கவுன்சிலர்கள் எழுவரில் மூவர், பத்தாண்டுகளுக்குப் பின், அவரைத் தூக்கிலிடும் கட்டளைக்கும் கையொப்பமிட்டவராவர்.

சண்டாசாயபு கொலையுண்டதால் நாட்டின் ஏகபோகம் நவாபு முகம்மதலியை அடைந்த தாயினும், அதுரை திருநெல்வேலிச் சீமைகள், பாளையக்காரர் வசத்திலும் சண்டா சாயபுவின் கட்சியைச் சேர்ந்த மூவர் வசத்திலும் இருந்தமையால், அந்தப் பிரதேசங்களைக் கைப்பற்றி வாழ்வித்து, குடிகளிடத்திலும் பாளையக்காரரிடத்திலும் வரிதண்ட வேண்டியிருந்தது.   இந்தப் பாளையப்பட்டுக்கள் சிலவற்றில் குடியிருந்த கள்ளர் மறவர் முதலியோர், “முடலையாக்கை முழுவலி மாக்கள்;” 12 அடி முதல் 18 அடி வரை நீளமுள்ள ஈட்டிகளே அவர்கள் முக்கிய ஆயுதங்களாம்; அவற்றைக் கெண்டு, மட்சுவர்களுக்கும் முள் வேலிகளுக்கும் பின் பதுங்கி யிருந்து, பொல்லாப் போர் புரிய வல்லவர்.  இறைவனுக்குத் திறையிறுக்கும் விஷயத்திலோ, “மழை பெய்கிறது; நாங்கள் உழைக்கிறோம்; உண்மை யிப்படி யிருக்க, நம்மைப் போன்ற மற்றொரு மனிதன் சொற்படி நடந்து, ஏன் அவனுக்கு வரி கொடுக்க வேண்டும் “ என்று வழக்காடுபவர்.  இன்னாரிட மிருநது வரி தண்டுவது எளிதன்றே.

நவாபு முகம்மதலி தரப்பில் நாட்டை வாழ்வித்து, ஒழுங்கு படுத்தி, வரி தண்டும் பொருட்டு, ஒரு பெரும் படையுடன், ஹெரன் தளகர்த்தரும், அவருக்குதவியாக நவாபின் தமையன் மாபுஸ்கானும் தென்னாடு நோக்கிச் சென்றனர்.

இம் மூவருள், கம்மந்தானே யோக்கியதையிலும் சாமர்த்தியத்திலும் மிக்கவ ரென்பதில் சந்தேகமே யில்லை.  மதுரை, திருநெல்வேலிச் சீமைகளில் நடந்த அழிம்புகளுக்கும், கலகங்கள் அடங்காமல் மீண்டும் கிளைத்துக் குழப்பம் மிகுந்ததற்கும், நவாபின் அதிகாரம் நிலைபெறாமல் நெடுநாள் தத்தளித்ததற்கும், மாபுஸ்கான் ஒரு முக்கிய காரணஸ்தராய் நடந்து கொண்டார்.  ஹெரன் தளகர்த்தரோ குற்றஞ் சாட்டப்பட்டு, கம்பெனியாரின் கட்டளைப்படி, வேலைமுடியுமுன்பே சென்னை மீளவேண்டியதாயிற்று.  யார் எவ்வித அநியாயஞ் செய்வதைக் காணினும் உடனே அடங்காத கோபங் கொள்ளப்பட்டவரென்றும்; வேறு மேல்நோக்கமின்றி வெறும் பணவாசை பிடித்தவரல்ல ரென்றும், சத்தியசந்த ரென்றும், கம்மந்தான் மெய்ச்சப்பபட்டிருக்கிறார்.  இப்படிப்பட்டவருக்கும் மற்றிருவருக்கும் ஆதி முதலே ஒருப்படாமை வியப்பன்றே.

கம்பெனியாரின் பிரதிநிதியும் சேனாதிபதியுமான ஹெரன் உத்திரவுப்படியே மற்றியவரும் நடக்கவேண்டியவராயிருந்தனர்.  அவரோ, அயோக்கியத்தனமாயும், மூடத்தனமாயும் நடந்து கொண்டார்.  கோவில் குடிக்கோயில் கதவைத் தீயா லெரித்து, உட்புகுந்து, கள்ளர்களை வாளுக் கிரையாக்கியதோடு நில்லாமல், அவர்கள் வணங்கும் சிறிய செப்பு விக்கிரகங்களையும் அழிசெம்பாக விற்றுக்  காசாக்கும் பொருட் அபகரித்துக் கொண்டுபோய், கள்ளர்களின் தீராப்பகைமையையும் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டார்; கைக்கூலி வாங்கிக் கொண்டு மாபுஸ்கானையே குறைந்த தொகைக்குக் குத்தகை அமிஸ்தா ராக்கினமையால், நவாபின் அவநம்பிக்கையும் அப்பிரியத்தையும் அடைந்தார்.  கள்ளக் கணக் கெழுதியும், கைக்கூலிகள் வாங்கியும், நவாபுக்குச் சேரவேண்டிய கப்பத்தை வசூல் செய்வதிலும் பாளையக்காரர் தனக்குக் கொடுக்கும் நன்கொடைகளிலே கண்ணும் கருத்துமா யிருந்தும், கம்பெனியாருக்கு நவாபு கொடுக்க வேண்டிய கடனுக்காகப் பணம் வசூலிப்பது கிடக்க, படையெடுப்புச் செலவுக்குமே வசூலித்த தொகை போதாதபடி செய்து விட்டதால், தன் யஜமானராகும் கம்பெனியாரின் வெறுப்பையும் அடைந்தார்.  ஹெரனது நடவடிக்கைகளைக்  கண்டறிந்த கம்பெனியார், உடனே மதராஸ் மீளும்படி அவருக்குக் கட்டளை யனுப்பினர்.  அவர் மீண்டு வரும் வழியில், நாடுகளிலே மறைவிற் பதுங்கியிருந்த கள்ள வீரர்கள் தக்கவாறு பழிவாங்கிச் செய்த போரில், அவர் சைநியங்கள் பெருஞ் சேதமுற, அவர் அரிதில் உயிர்தப்பி மீண்டனர்.  அவரை வேலையினின்றும் தன்னிச் சிறையில் வைத்திருக்கையில், அவர் தப்பியோடி, சதுரங்கப்பட்டணம், புதுச்சேரி மார்க்கமாக ஐரோப்பா போய்ச் சேர்ந்தார்.  அவர் தென்னாடு சென்ற காரியம் கை கூடாமற்போயிற்று.  இந்த விஷயத்திலே, கம்மந்தானுக்கு எவ்வித அபக்கியாதியும் இல்லை யென்பது மாத்திரமோ; அவர் ஒருவர்தான், அக்கிரமமாக இலஞ்சம் வாங்கிக் கொள்ளாது, யோக்கியமாய் நடந்தவர் என்பது உறுதி.

தென்னாட்டுக் குத்தகையைப் பெற்ற தன் தமயன் மாபுஸ்கான் பாளைக்காரர்களிடமிருந்து கப்பங்களை வசூலிக்க முயன்று கொண் டிருக்கையில், தன் ஆட்சிக்கு உட்பட்டவரும், வல்லாண்மை யுள்ளவரும், வேலூர் பூஜ்தாருமான முர்த்தஸா அலி என்பவர் தனக்குச் செலுத்த வேண்டிய கப்பங்களை வசூலிக்கும்பொருட்டு, நவாபு முகம்மதலி, கம்பெனியாரின் உதவியை நாடினார்.  தென்னாட்டுப் படையெடுப்பில் கைக்கூலி வாங்காதவர் கம்மந்தான் ஒருவரே என்பதை நவாபு அறிந்திருந்தமையால், கம்பெனியார் படையுடன் அனுப்பிய கில்பாட்ரிக் தளகர்த்தருடன் கம்மந்தானையும் அவர் அனுப்பினார்.  முர்த்தஸா அலி, மகா தந்திரசாலி; அவரைச் சூழ்ச்சியின் வெல்லுதல் அரிது; நவாபின் கோரிக்கையையும், அவருக்கு ஆங்கிலேயரின் உதவி யிருப்பதையும் கண்டு, பிரெஞ்சுக்காரரின் சகாயத்தை அவர் நாடினார்.  இதற்குள், கில்பாட்ரிக்கும் கம்மந்தானும் சைநியங்களுடன் வேலூர்க் கோட்டையை வளைந்து கொண்டனர்.  கம்மந்தான் கோட்டைக்குள் சென்று   ’கடனறிந்து காலங் கருதி, இடனறிந்து, துணிவோடு ‘ தான் நவாபுக்கு உறுதி பயப்ப கூறிய சொல்வன்மையினால், நவாபுக்கு நாலு லக்ஷம் ரூபாய் கொடுக்கிறேனென்று முர்த்தஸா அலியைச் சம்மதிக்கச் செய்தார்.

இதனிடையில், புதுச்சேரிப் பிரெஞ்சுக்காரர், வேலுராருக்கு உதவி செய்ய, ஒரு பெரும்படையை அனுப்பலாயினர்.  அதையறிந்த சென்னைக் கம்பெனியார், அப்படை வேலூர் சென்றடையுமுன், ஒரு லக்ஷம் ரூபாயேனும் பெற்றுக்கொண்டு சமாதானஞ் செய்துவிடும்படி ஆர்ம் துரையை வேலூருக் கனுப்பினார்.  கம்மந்தான் நான்கு லக்ஷம் தருவ தென்று பேசி முடித்திருப்பதை அறிந்தவுடன், ஆர்ம் துரை அளப்பரிய சந்தோஷத்தை யடைந்தார்.  தன் உத்தேசம் வேறொருவருக்கும் தெரியா தென்பது ஆர்ம் துரையின் நினைப்பு; ஆனால்  முர்த்தஸா அலிக்கு அது நன்கு தெரியும்.  சமாதானம் பேசும் தூதர்களாகி, ஆர்ம் துரையும் கம்மந்தானும் வேலூர்க் கோட்டைக்குள் சென்று, முர்த்தஸா அலியைக் கண்டு பேசிக் கொண்டிருக்கும் பொழுது, ஆர்ம் துரை,  நாலு லக்ஷம் தந்தால் போய் விடுவதாகச் சொன்னார்.   முர்த்தஸா உடனே வாக்குமாறி, தான் ஒரு லக்ஷமே கொடுக்க ஒப்புக் கொண்டதாகக் கூற, அந்தப் பொய்யை செவியுற்ற கம்மந்தான், கடுங்கோபமுற்றுத் தன் கட்டாரியை உருவிக் கொண்டு, முர்த்தஸாவின் மேல் பாயப் போனார்.

“குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது“

அன்றோ அதைக் கண்ட முர்த்தஸா, தன் மெய்காப்புப் படை வீரரைக் கூவலானர்.  ஆர்ம் துரை, மனஸ்தாபம் முதிர்ந்துவிடாமல் இருவரையும் கையமர்த்திச் சமாதானஞ் செய்து, மேல் விவகாரம் பேசலாயினர்.  முடிவில் இரண்டு லக்ஷம் ரூபாய் கொடுப்பதாக முர்த்தஸா சம்மதித்தனராயினும், பிரெஞ்சுப் படைகள் துணைக்கு வரும் வரை எவ்வாறானும் காலங் கடத்துவதே அவர் கருத்தாயிருந்தது.   அவர் சூழ்ச்சியே நிறைவேறிற்று; சில தினங்களில் பிரெஞ்சுக்காரர் பெரும்படையோடு உதவிக்கு வந்து சேர, ஆங்கிலேயர் வேலூர் முற்றுகையை விட்டுச் சென்னை மீளவேண்டிய தாயிற்று.  ஒரு காசுமே நவாபுக்கு கொடாது, முர்த்தஸா அலி தப்பிக் கொண்டார்.

II தெற்குச் சீமையை வாழ்வித்தல்

அமில்தார், பூஜ்தார்,  என்னும் இருபெரும் அதிகாரங்களையும் தானே தாங்கி நாட்டையாள முயன்ற மாபுஸ்கானால், பாளையக்காரர்களை யடக்கவோ, கப்பப் பாக்கிகளை வசூலிக்கவோ, தன் கீழுள்ள படைகளின் சம்பளத்துக்கு வேண்டிய பணத்தையேனும்  திரட்டவோ, ஒன்றும் முடியவில்லை.  தமக்கு நவாபு முகம்மதலி கொடுத்தற் குரிய கடனில் ஒரு காசும் அடைபடாமையைக் கண்ட கம்பெனியார், மதுரை திருநெல்வேலிச் சீமைகளை நவாபிடமிருந்து மூன்றாண்டுகளுக்கு தாமே குத்தகையாகக் கொண்டு   தம், பிரதிநிதியை அனுப்பி, அந்நாடுகளை அடக்கி யாண்டு  வரி வசூலித்து, படைகளின் பராமரிப்புச் செலவுபோகமிக்க பணத்தில் ஒரு பாதியை நவாபுக்குக் கொடுத்து விட்டு, மறு பாதியைத் தமக்கு வரவேண்டிய கடனுக்கு வரவுவைத்துக் கொள்வதாக, நவாபு முகம்மதலியோடு உடன்படிக்கை செய்து முடித்தனர்.  இவ்வேற்பாட்டின்படி கான் சாயபு கம்மந்தானை, அச்சீமைகளை வாழ்வித்து ஆளும்படி யனுப்பக் கம்பெனியார் தீர்மானித்தனர்.  இராணுவ  அமுலிலும், இராஜ்ய பரிபாலனம் திறை வசூல் முதலியவற்றிலும் சர்வ அதிகாரம் கொடுக்கப்பட்டது.  திருநெல்வேலிச் சீமையின் குத்தகை மட்டும்,  படைகளின் பராமரிப்புச் செலவு போக 12 லக்ஷ மென்று தளவாய் தீத்தாரப்ப முதலியாரிடம் ஒப்படைத்து, படைகளின் சம்பளத்தையும் குத்தகைப் பணத்தையும் கம்மந்தானிடத்தில் செலுத்திவிடும்படி ஏற்படுத்தினர்.  செலவுபோக மீந்த பணத்தை, திருச்சிராப்பள்ளியிலே கம்பெனியாரின் பிரதிநிதியாயிருந்த காப்தன் கைலாடுக்கு அனுப்பி, பொதுவாய் அவர் மேற்பார்வையில் கம்மந்தான் வேலை பார்க்க நியமித்தனர்.  இவ்வண்ணமாக, மதுரை திருநெல்வேலிச் சீமைகளின் அதிகாரியான கான் சாயபு கம்மந்தான், 1756ம் வருஷம் மார்ச்சு மாதம் 26-ந்தேதி, படைகள் பரிவாரங்களுடன் திருச்சிராப்பள்ளி விட்டுப் புறப்பட்டு, ஏப்பிரல் 6-ம் தேதி யன்று மதுரை நகரத்தையடைந்தார்.  சுதேசப் படைகள் தவிர, ஐரோப்பியப் படை வீரர்களும் இராணுவ வைத்தியர் முதலிய உத்தியோகஸ்தர்களும் அவர் கீழிருந்தனர்.

முதலில் இவ் வேற்பாட்டுக்குச் சம்மத்தித்த  நவாபு முதம்மதலி, இதற்குள் மனம் மாறிவிட்டார்.  கம்மந்தானும் முகம்மதலியும், சத்தியம் வீரம் ஊக்கம் கபடமின்மை  மானவுணர்ச்சி நியாயவுணர்ச்சி ஔதாரியம் முதலிய பல குணங்களில் நேர் விரோதிகள் என்னலாம்.  கம்மந்தானிடத்தில் நவாபுக்கு அச்சமும் அசூயையும் அதிகம்; கம்மந்தான் முகம்மதலியை அவமதித்து வெறுத்தார்.  இதுவு மன்றி, தன்னினும் இழிகுண முள்ள உதவாக்கட்டையான தன் தமயன் மாவுஸ்கா னிடத்தில், முகம்மதலிக்கு சகோதர வாஞ்சையும், விசுவாசமும் என்று முண்டு.  இவ்விரு காரணங்களினால், கம்மந்தான் தென்னாட்திபதியாய்ச் செல்வதை நவாபு தடுக்க முயன்றார்: ஆனால், கம்பெனியார் அதற் கிணங்க வில்லை.

1756-ம் ஆண்டில் கம்மந்தான் தெற்கு நோக்கிச் சென்றது முதல், 1758-ல் பிரெஞ்சுக்காரர் சென்னைக் கோட்டையையே சூழ்ந்து கொண்டபோது ஆங்கிலேய கம்பெனியாருக்கு உதவி செய்து அவர்களை விடுதலை செய்யுமாறு சென்னையை நோக்கி அவர் திரும்பி வந்தது வரை, ஈராண்டுகளில் நிகழ்ந்த விஷயங்களையும், அவர் புரிந்த போக்குகளையும் விரித்துக் கூறின் இம் பெருகுவது மன்றி, மனத்தையும் குழம்பச் செய்யும்.  அக்காலத்தில் அவர் அடைந்த வெற்றிகளுக்கும் நிகழ்த்திய வீரப் பிரதாபச் செயல்களுக்கும் அவரே காரண மென்றும்; அவருற்ற அபஜயங்களுக்கும், நிறைவேற்ற முடியாமற் போன விலைக்குறைகளுக்கும் நவாபு முகம்மதலியும், அவன் தமயன் மாபுஸ்கானும், நாட்டிலே ஒழுங்கும் நியாயமும் நடைபெறுவதால் விளையும் நன்மையைவிட அக்கிரமங்கள் அநியாயங்கள் குறைகள் முதலியன நடைபெறுவதால் அதிக லாபத்தை அடையலா மென்று எதிர்பார்த்த சில பாளையக்காரர்களும், பிறரும், கம்மந்தானது கண்டிப்பான நியாய முறையை அஞ்சி வெறுத்து அவர் மீது அன்னார் குறைகூறிப் பொய்ப்பழி சாத்தியதால் அப்போதைக் கப்போது ஆங்கிலேய கம்பெனியார் அவர்மீது கொண்ட அவநம்பிக்கையுமே காரணங்களென்றும், சுருக்கிக் கூறுதல் பொருந்தும்; ஆகையால், அந்த விருத்தாந்தங்களிலே அதிக ருசிகரமான இரண்டொன்றை மாத்திரம் ஈண்டெடுத்துரைப்பாம்.

மூவாயிரம் படை வீரர்களுடன் எதிரிகள் மதுரைக் கோட்டைக்குள் இருந்தனர்.  கோட்டையைத் தாக்கித் தகர்த்துப் பிடித்தற்கு வேண்டிய பீரங்கிகள் இல்லாமையால், தந்திரத்தாற்  கைபற்ற நினைந்து, கோட்டையின் காவல் மதிலிற் பலக் குறைவான ஓரிடமிருப்பதையறிந்து, இருட்டிலே சென்று தாக்கி, அதன் வழியே கோட்டைக்குட் செல்லலாமென்று தீர்மானித்துக் கொண்டு, கம்மந்தானும் கைலாடென்னும் ஆங்கிலேய தளகர்த்தரும், தெரிந்து போகாது சில வீரர்களுடன் இரவிலே பதுங்கிப் பதுங்கி அரவமின்றிச் சென்று கோட்டையை அணுகினர்.  இவர்கள் சூழ்ச்சி பலிக்கும் தறுவாயில், படைகளுடன் வந்த ஒரு நாய் திடீரென்று குரைத்ததனால், கோட்டைக் காவலிலிருந்த எதிரிகள் இவர்கள் வருதலை அறிந்து கொண்டு, மற்றப் படைகளை எழுப்பி ஏவிப் பீரங்கிகளால் இவர்களைச் சுட்டு, வெருட்டி விட, கைக்கெட்டியது வாய்க்கெட்டாமற் போயிற்று.  அப்பால் கம்மந்தானையும் ரம்போல்ட் என்ற தளகர்த்தரையும் சில படைகளுடன் கோட்டையை முற்றுகை செய்ய விட்டுவிட்டு, கைலாடு திருச்சிராப்பள்ளி போய்விட்டார்.

மதுரைக் கோட்டைக்குள் ளிருந்த எதிரிகள், வெளியே தம்மை முற்றிநின்ற படைகளுக்குத் துணையாகத் திருச்சிராப்பள்ளியிலிருந்து பீரங்கியும் பாளையங்கோட்டையிலிருந்து படைவீரரும் சீக்கிரம் வரப்போவதை யறிந்து, அதற்குமுன் தாமே வெளிபோந்து படைகளைத் தாக்கி அழித்து விடத் தீர்மானித்தனர்.  இதை யறிந்த ரம்போல்ட், வைகைத் துறையைக் காக்கச் சில படைவீரருடன் கம்மந்தானை அனுப்பிவிட்டு, தன் படை வீட்டை எதிரிகள் நெருங்காலாறு நீரினால் சூழ்ந்து கொண்டார்.  1757-ம் வருஷம் ஜூன் மாதம் 9-ந்தேதியன்று காலை, எதிரிகள் போரைநாடி வெளிப்பட்டு, ரம்போல்டின் பாசறை எளிதில் அணுகமுடியாத வண்ணம் வெள்ளத்தால் சூழப்பட் டிருப்பதைக் கண்டு, கம்மந்தானைத் தாக்கினர்.  எதிரிகளின் குண்டுச் சத்தம் கேட்ட நிமிஷமே, கம்மந்தானோ டிருந்த படைவீரர்கள் திகிலுற்று நாலாபக்கமும் புறங்காட்டி யோடி விட்டனர்.  அதுவரை அவ்வாறு நிகழ்ந்ததே யில்லையாதலால், கம்மந்தான் தம்மை வெகு கண்டிப்போடு நடத்தியதன் பொருட்டு, வேண்டுமென்றே அவரைத் தனி விட்டு அவர்கள் ஓடிவிட்டன ரென்று சரித்திரக்காரர் ஒருவர் எழுதியிருக்கிறார்.  ஓடாது கம்மந்தானுக்கு துணை நின்றவர் மொத்தம் பத்தாட்களே; தாக்கிய எதிரிகளோ, மிகச் சிறந்த வீரர்கள்  நானூற்றுவருக்கு மேலாம்.  அங்ஙனமிருந்தும், கம்மந்தான் ஒரு சிறிதும் மனந்தளராது, பின்வாங்காது, பக்ககத்திலிருந்த ஒரு சத்திரத்தில் காவல்கொண்டு, பத்தே துணைவருடன், நானூறு வீரர்களை எதிர்த்துப் போர் செய்து கொண் டிருந்தார்.  எதிரிகளால் அவரை அசைக்கவோ, சிறைப் பிடிக்கவோ, கொல்லவோ, புறங்காட்டியோடும்படி துரத்தவோ, ஒன்றும் முடியாவில்லை.  அதையறிந்த ரம்போல்ட், தன் படைகளுடன் வந்து உதவி செய்து எதிரிகளை விரட்டும்வரை, இவ்வதிசயப் போர் நிகழ்ந்தது.  இத்தகைய வீர சிகாமணியான கம்மந்தானை ஆங்கிலேய தளகர்த்தர்கள் வாயார மனதாரப் புகழ்ந்திருப்பது ஆச்சரியமன்றே.

கம்மந்தானது பெருந்தண்மையையும் நியாயவுண்ச்சியையும் விளக்கும் மற்றொரு நிகழ்ச்சியையும் உரைப்போம்.  பர்க்கதுல்லா என்பவர் மதுரையைக் கைக்கொண்டு சிலநாள் ஆண்டு வந்த காலத்தில், ஒரு முகம்மதியப் பக்கிரி, தன் குடையை மீனாக்ஷியம்மன் கோயில் வாயிலில் நாட்டி,  அங்கே ஒரு மசூதி கட்டத்  தொடங்கினான்.  கோயிலாரும் ஊராரும் பர்க்கத்துல்லாவிடம் எவ்வளவோ முறையிட்டும், பயன்பட வில்லை.  இதுவு மன்றி, பர்க்கதுல்லா, கோயிலின் மானிய வரும்படி அனைத்தையும் தன் சொந்தச் செலவுக்கு அபகரித்துக்கொண்டு விட்டார்.  அவர் அதிகாரம் நீங்கிக் கம்மந்தான் மதுரையைக் கைக்கொண்ட காலத்தில், பக்கிரியையும் அவன் குடையையும் கோயிலுக்கு வெளியே தள்ளினது மின்றி, கோயிற் சொத்துக்களை யெல்லாம் திருப்பிக் கொடுத்து விட்டார்.

கம்மந்தானது வீரமும் நியாயமும் யோக்கியதையும் இவ்வாறாக, அவருடைய முக்கிய விரோதியும் நவாபு முகம்மதலியின் தமயனுமான மாபுஸ்கானது வஞ்சத்தை விளக்கும் ஒரு நிகழ்ச்சியையும், ஈண்டுக் கூறுதல் இசையும்.  ரம்போல்டும் கம்மந்தானும் மதுரைக் கோட்டையை முற்றிக்கொண்டிருக்கையில், மாபுஸ்கான், கேள்வி முறையின்றி, திருநெல்வேலிச் சீமையைச் சூறையாடிக் கொண்டும், மலையாளத்தரசரின் உதவியை நாடிக்கொண்டுமிருந்தார்.  அவர் இஷ்டப்படி நடப்பதற்குப் பாளையங்கோட்டையிலிருந்த பட்டாளம் ஒன்றே தடையாயிற்று.  அக் கோட்டையைப் பிடிக்க அவரால் முடியாமையால், நயவஞ்சனையால் அதைக் கைப்பற்ற வெண்ணி, தான் சமாதானத்தை விரும்புவதாக ரம்போல்டுக்கு செய்தியனுப்பினார்.  ரம்போல்டு, 50 போர் வீரரோடும், சமாதானம் பேசி முடிக்கும் அதிகாரத்தோடும், இராம நாயக்கர் என்ற தளகர்த்தரை மாபுஸ்கானிடம் தூதனுப்பினர்.  இராம நாயக்கர் தன்னை அணுகியவுடன், மாபுஸ்கான், தன் குதிரைப் படைகளுடன் திடீரென்று அவரைச் சூழ்ந்து கொண்டு, ‘பாளையங்கோட்டையை என்கு விட்டுவிடும்படி அக்கோட்டை  யதிகாரிக்கு ஓர் உத்தரவு எழுதி யனுப்பும் ‘ என்று அவரை நிர்ப்பந்தித்தார்.  “ செத்தாலும் சரி, அப்படி நான் துரோகஞ் செய்ய மாட்டேன் “ என்று கூறிவிட்டு, இராமநாயக்கர், தன்னுடன் வந்த ஐம்பது படையாட்களையும் அணிவகுத்து நின்றார்.  உடனே மாபுஸ்கான் தன் குதிரைப் படைகளை அவரைத் தாக்கும்படி ஏவினார்.  ஆனால் யஜமானனைவிட யோக்கியனான ஒரு வேலைக்காரன், அலி சாயபுப் என்பவன், “ தராக நீரேது இராமநாயக்கரை வரவழைத்து விட்டு இப்படித் துரோகஞ் செய்யலாமா?  இது மானக்கேடான காரியம், இதற்கு யோக்கியன் எவனும்  உடம்பட மாட்டான்  “ என்று சொல்லிவிட்டு, தன் குதிரை வீரர்களுடன் தானே இராம நாயக்கருக்குத் துணை நின்று, அவரையும் அவர் பரிவாரத்தையும் சேமமாய்ப் பாளையங்கோட்டைக்குட் கொண்டுபோய்ச் சேர்ப்பித்தான்.  இத்தனை யோக்கியர் மாபுஸ்கான்!

திருச்சிராப்பள்ளியிலிருந்து வந்த பீரங்கியைக்  கொண்டு தகர்த்துப் பார்த்தும் மதுரைக் கோட்டையைப் பிடிக்க முடியவில்லை.  அப்பால்,  கைலாடு, ஐரோபியப் படைகளுடன் திருச்சிராப்பள்ளியிலிருந்து திரும்பி வந்து கம்மந்தான் படைகளுடன் கலந்து கொண்டு, நாய் குலைத்துக் கெடுத்தபோது சென்றதுபோலவே மீண்டும் பதுங்கிச் சென்று கோட்டையை யணுகிப் பிடிக்க முயன்றார்.  அவருக்கே பலத்த காயமும் அமிதமான ஆட்சேதமுமன்றி, காரியம் கைகூடவில்லை.  அப்பால் தன் காயங்களை யாற்றிக் கொள்ளுமாறு அவர் திருவாதூர் சென்றுவிட, எஞ்சிய படைகளைக் கொண்டு கம்மந்தானே மதுரைக் கோட்டையை நெருக்கிச் சூழ்ந்து முற்றலானார்.  அக்காலத்தில் சென்னைக் கவர்னராயிருந்த பிகட் என்பவர், கம்மந்தானுக்குப் பின்வருமாறு இதைப் பற்றி எழுதியிருக்கிறார்:-

“பாளையக்காரர் தண்டுகளையும் மற்றப் படைகளையுங்கொண்டு மதுரைக் கோட்டையை நீர் நெருங்கி வளைந்து முற்றிக்கை செய்து வருவதைத் தெரிவிக்கும் உம் கடிதம் வரப் பெற்றேன்.  உம்முடைய ஊக்கத்தையும் வீரத்தையும் புகழ்ந்து காப்தன் கைலாடும் எழுதி யிருப்பதைக் கண்டு மிக்க சந்தோஷமடைந்தேன்.  கம்பெனியாருக்கு  நீர் நம்பிக்கையான உத்தியோகஸ்தர்; உம் விஷயத்தில் என் சினேகத்தை உறுதியாய்க் கொள்ளும்”.

எதிரிகள் எதிர்பார்த்தவாறு வெளியுதவி வராமையாலும், கம்மந்தான் செய்த நிர்ப்பந்தத்தினாலும், அவர்கள் சமாதானத்துக் கொருப்பப்பட்டு, செப்டம்பர் 8-ம் தேதியன்று மதுரை கைக்குவரவே , இனித் தெற்குச் சீமைகளைச் சீர்படுத்தி யாளுவதைப்பற்றி யோசிக்கலாயினர்.  ஆர்ம், கைலாடு, முதலிய ஆங்கிலேய  தளகர்த்தர்கள்,  கம்மந்தான் ஒருவரர்தான் நாட்டை யடக்கி யாண்டு பணம் வசூலிக்க வல்லவரென்றும், குத்தகைப் பணம் எவ்வளவு சொற்பமாயினும் அவரிடமே நாட்டை ஒப்படைத்துவிட வேண்டுமென்றும் வற்புறுத்திக் கவர்னருக் கெழுதினர்.  குத்தகைத் தொகை நிச்சயப்படும் வரை கம்மந்தானே நாட்டை யாண்டு வருவதென்றும், முன் குத்தகைதாரரான தளவாய் முதலியார் சென்னைக்கு நேரிற் சென்று கணக்குக் கொடுப்பதென்றும் கவர்னர் உத்திரவு செய்ய, அவ்வண்ணம் கம்மந்தான் சில சில மாதகாலம்  தென்னாடுகளின் பரிபாலனைத்தைக் கைக்கொண்டார்.

நவாபு முகம்மதலி, தனக்கு மைசூரார் செய்த உதவிக்குப் பதில் திருச்சிராப்பள்ளிக் கோட்டையை அவர்களுக்கு விட்டுவிடுவதாக வாக்குக் கொடுத்தபடி நிறைவேற்றாமையால், மைசூர் ஹைதரலி படையெடுத்து வந்து, தொந்திரை செய்யலானார்.  ஹைதரலி நத்தம் கணவாயில் பாசறைகொண்டு நாட்டைச் சூறையாடுகையில், கம்மந்தான் சென்று அவரைத் தாக்கிப் பொருது செயித்துத் திண்டுக்கல்லுக்கும் மீளும்படி வெருட்டினார்.

அப்பால் கம்மந்தான் திருநெல்வேலிச் சீமை சென்று, அந்தப் பிரதேசத்திலே அழிம்புகள் செய்து கொண்டிருந்த மாபுஸ்கானை வென்றெடுக்கினார்.  இக்காலத்தில்தான் உமார்தீன் கிங் என்ற குதிரைப்படை ஜமேதார், பர்க்கதுல்லாவின் கட்சியைச் சேர்ந்தவன்,  கம்மந்தானை தூங்கித்துக் கொலை செய்ய முயன்று, தன் கூட்டாளிகளோடு உயிரை யிழந்தான்.

தெற்குச் சீமையையும், ஸ்ரீவில்லிபுத்தூர்ப் பக்கமுள்ள பாளைப்பட்டுக்களையும் ஒழுங்கு படுத்தி, ஹைதரலி இடித்துவிட்ட சோழன்வந்தான் கோட்டையை மீண்டும் கட்டிப் பலப்பபடுத்திய பின்னர், கம்மந்தான் மதுரை நகரம் திரும்பி, பர்க்கதுல்லாவின் அதிகாரத்திலே நிகழ்ந்த அக்கிரமங்களை யெல்லாம்ம நீக்கி, முறை செய்தார்.  மேலே கூறியவாறு, மதுரைக் கோயிலிற்குள் கூடாரமடித்திருந்த பக்கிரியை அப்புறப்படுத்தி, பர்க்கதுல்லா அபகரித்த  கோயிற் சொத்துக்களைத் திருப்பிக் கொடுத்தது, இக்காலத்தில்தான்.  இதற்குள், பிரெஞ்சு வீரரான லாலி என்பவர், ஆங்கிலேயரை வெல்வதற்கென்றே ஒரு பெருஞ்
சைநியத்துடன் பிரான்ஸிலிருநது புறப்பட்டு  வந்திறங்கி, கூடலூர், டேவிட் கோட்டை முதலிய இடங்களைப் பிடித்துக் கொண்டு, ஆங்கிலேயரின் தலை நகரான சென்னையை முற்றிக்கை செய்யப் பிரயத்தனித்ததால், தன் படைகளுடன் உடனே புறப்பட்டு வடக்கே வந்து சென்னையைக் காக்கும்படி, கம்மந்தான் அழைக்கப்பட்டார்.

அவ்வண்ணமே 200 சிப்பாய்களுடன் சென்ற கம்மந்தான், 1758 வருஷம் ஜூன் 16 ந்தேதி திருச்சிராப்பள்ளியை அடைந்தார்.  ஸ்மித் என்ற தளகர்த்தருடன் அங்கிருந்து புறப்பட்டு, பிரெஞ்சுக்காரர் துணைவரான துறையூர் செட்டியாரை எதிர்த்துச் செய்த சண்டையில், கம்மந்தானுக்குக் கையில் காயம்பட்டது.  வாழ்நா ளெல்லாம் போர்க்களங்களிலேயே பெரும்பாலும் கழித்த கம்மந்தான் காயமுற்றது, இந்த ஒருமுறைதான்.  அவர் தேகத்திற்குள் மறைத்துப் பொதிந்து வைத்திருந்த ஓர் இரக்ஷையின் சக்தியினால், அவரைக் காயப்படுத்த முடியாதென்பது, படை வீரர்களுக்குள் பொது நம்பிக்கை.  துறையூரை விட்டு விட்டால் பதினாயிரம் வராகம் கைக்கூலி தருகிறேனென்று ரெட்டியார் எவ்வளவோ மன்றாடிக் கேட்டும், கம்மந்தான் அதற்கு இணங்கிலர்.

 III சென்னை முற்றிக்கை – கலியாணம் – கவர்னர் 

சென்னைப் பக்கம் சென்றடையும் வழியிலே  கோட்டைகளையும் ஊர்களையும் பிடித்தும், புதுச்சேரியைச் சூழ்ந்துள்ள பிராஞ்சியர் பிரதேசங்களைச் சூறையாடி அழித்தும், கம்மந்தான் இயற்றிய வீரச் செயல்களால் லாலியுமே மனங்கலங்கி விட்டார்.  அப்பால் சென்னையை அணுகிக் கோட்டைக்குப் புறம்பேயுள்ள ஆங்கிலப் படைகளுடன் சேர்ந்துகொண்டு, கோட்டையை முற்றிக்கை செய்துகொண்டிருந்த லாலியின் படைகளை அடிக்கடி தாக்கிப் பொருதும்; அப் படைகளுக்கான வந்த உணவு பொருள்களையும் ஆடுமாடுகளையும்  பிற  பண்டங்களையும் வழி மறித்துப் பறிமுதல் கொண்டும்; ஒரு கணமேதும் ஓய்வொழிவின்றி எதிரிகளைத் தொந்தரை செய்தும்; இடையிடையே, ஆறுகாடுவரை சென்று, பலவிடங்களைக் கைக்கொண்டு, எதிரிகளின் கூட்டாளிகளை வெருட்டு, அவர் பலத்தைக் குறைத்தும், கம்மந்தான் செய்த சிறு போர்களாலும் இமிசைகளாலும் முற்றிக்கையை மேல் நடத்தி நிறைவேற்ற மாட்டாதவராய், லாலி தோற்றுப் போய் மீள வேண்டியதாயிற்று.

இத்தகைய போரில் நிகழ்ந்த சம்பவங்களில் இரண்டை மாத்திரம் எடுத் துரைப்போம்: முஸாபர்பெக் என்ற வீரன், முதற்கண் ஆங்கிலேய கம்பெனியாரின் போர்ச் சேவகத்திலிருந்தவன், இக்கட்டான தறுவாயில் துரோகஞ்செய்து ஆங்கிலேயர் சேவகத்தை விட்டு நீங்கி பிராஞ்சியர் சேவகம் பூண்டவன், காஞ்சிபுரம் கோட்டையில் எதிரிகள் படையுடனிருந்தான்.   கம்மந்தான் மதிலேறிக் கோட்டையுட் புகுந்து, எதிரிகளை முறியடித்து, ஊரைக் கைக்கொண்டு முசாபர் பெக்கை “துரோகிகளின் கதி இதுவே! “ என்று சூளுரைத்துத் தன் கைவாளால் வெட்டி வீழ்த்தினார்.  வயது முப்பதுக்கு மேலாகியும் கம்மந்தானுக்கு கலியாணமாகவில்லை.  இந்த யுத்த காலத்திலேதான் மாசா என்ற கட்டழிகியைக் கண்டு காதல்கொண்டு அவள் இனத்தாரிடம் ஆளனுப்பிப் பரிசம் பேசி, அவளை அவர் மணம் புரிந்து கொண்டார். இது நிகழ்ந்தது ஆறுகாட்டிலே என்றும்; மாசா, போர்த்துகேய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவச்சி என்றும்; புதுச்சேரியைச் சேர்ந்த பறைச்சி என்றும்; பறங்கிக்காரி என்றும், பலபடக் கூறுவர்.  இம் மணவினை காதலிருவர் கருத்தொத்து முடிந்ததொன்று என்பது மாத்திரம் தேற்றம்.

இவ்வாறு துணை நின்று போர்புரிந்து ஆபத்துக் காலத்திலே தம்மைக் காப்பாற்றி யதற்காக, ஆங்கிலேய கம்பெனியார், யுத்தச் செலவுக்கென்று  மூன்று லக்ஷ ரூபா கம்மந்தானுக்குக் கொடுத்ததுமன்றி, செவ்வந்திக்கல்லும் வயிரங்களுக் குயிற்றிய ஒரு மோதிரமும், முந்நூறு வராகன் பெறுமான பட்டுக்களும், துப்பாக்கிகளும், தமது நன்றியறிவின் அறிகுறிகளாக அவருக்கு வெகுமானமளித்தனர்.

சென்னைக் கோட்டை முற்றிக்கை நீங்கி எதிரிகள் தோற்றோடிய பின்னர், மாபுஸ்கானும் புலித்தேவனுங்கூடி நாசஞ் செய்து கொண்டிருந்த திருநெல்வேலிச் சீமையையும், மதுரைச் சீமையையும், மீண்டும் ஒழுங்குபடுத்தியாண்டு, நவாபு முகம்மதலியின் கடனை வசூலிப்பதே முக்கிய கவலையாயிற்று.  கம்பெனி உத்தியோகஸ்தர் அனைவரும், கம்மந்தான் ஒருவரே அவ் வேலையை நிறைவேற்ற வல்லவ ரென்றனர்; முகம்மதலியோ, அவர் நியமனத்தைத் தடுத்தனர்.  முடிவில், நாட்டை அடக்கியாண்டு  திறை தண்டுதற்கு வேண்டிய படைகளையும் சிப்பந்திகளையும் தானே அழைத்துக் கொண்டு, சகல செலவுகளும் நீங்கிய கப்பமாக ஆண்டுக்கு ஐந்து லக்ஷம் ரூபா திருச்சிராப்பள்ளியிலுள்ள கம்பெனியாரின் காரியஸ்தரிடம் கம்மந்தான் செலுத்தி விடுகிற தென்றும்; அந்த நிபந்தனையின்படி, மதுரை திருநெல்வேலிச் சீமையை ஆண்டு வருகிறதென்றும், நவாபின் கோரிக்கைக்கு விரோதமாகக் கம்பெனியாரிடம்  ஒப்புக்கொண்டு, படைகள் பரிவாரங்களுடன் கம்மந்தான் புறப்பட்டு ;

“ மாசாவைக் காடியின் மேலேற்றி – சேனை
மருங்கில் நெருங்கிவரக் குதிரைமேலேறி
ஆசாரவாசல்வழி தாண்டி – நல்ல
அழகான சென்னைபுரிக் கோட்டைவெளி தாண்டி
திருச்சிராப்பள்ளிக் கோட்டை தாண்டி – கானு
செயமாக மங்கலம் விராலிமலை தாண்டி
வரிசையா மணப்பாரை கடந்து – தோகை
மலை தாண்டி கம்மன் குறிச்சியி லிறங்கி
துவரங்குறிச்சியத தாண்டி – உயர்
தோகைக் குறிச்சியெனுன கத்தம் வந்து சேர்ந்து,
அழகர்மலைக் கொம்பையும் தாண்டி – நல்ல
அழகான தேனூர் மைதானவெளி தாண்டி
கொடிமுரசு தம்பூ ரடிக்க – நல்ல
கோட்டமிடு சதுரங்க பட்டாளம் சூழ
கும்பேனி முரசு வெள்ளைக்காரர் – தனமும்
கூட்டி மதுராபுரியில் ஒயிலாகச் சேர்ந்து
இப்புவியி யெலாம் செவிபெடவே – பீரங்கி
இருபத்தொரு வேட்டு தீர்த்தார்”

இவ்வண்ணம் அவர் மதுரை சென்ற மார்க்கத்தைப் பற்றி, ப்ரேற்டன் என்ற ஆங்கிலேய தளகர்த்தர், தான் கூறியவாறன்றி வேறு மார்க்கத்திலே தன் கட்டளை மீறிச் சென்றாரென்று கம்பெனியாருக்குத் தெரியப்படுத்த, கம்பெனியார் கம்மந்தானை முகாந்தரம் கேட்டனர்.  அவர் எடுத்துக் காட்டிய முகாந்திரங்களால் கம்பெனியார் திருப்தியுற்றாராயினும், தன் யோக்கியதையை நன்கறிந்த பழைய ஆங்கிலேய உத்யோகஸ்தர்கள் நாளுக்கு நாள் குன்றி வருவதையும், ஆங்கிலேயரின் சமுதாய குணத்தையும், கம்மந்தான்  உணர்ந்து சிந்திக்கலானார்.

தென்னாட்டைச் சீராக்கி ஆள மதுரை செல்லும் வழியில் தானே,  கம்மந்தான், கள்ளர் தலைவர் சிலரைக் கண்டுபேசி, வழிப்பறிகளை நிறுத்தி அவர்கள் நியாயப்படி நடக்க வேண்டுமென்றும்; அதில் தவறினால் தன் கோபத்துக்கும் கடுந்தண்டனைக்கும் உள்ளாக்குவரென்றும் பயமுறுத்தி எச்சரித்தார்.  உதாரணமாக:-

“தத்தத்து ஸிங்கனை அழைத்து – கானு
நலமாக ஒரு செய்தி திடமாகச் சொல்வான்:
கள்ளர் பயம் இந்நாட்டில் மெத்த – என்று
கனமாம் நவாஹபுதுரை சொன்னாரடா பாவி!
எள்ளளவும் இந்த வழி தனிலே – லிங்கா!
இனிமேலும் பாதையிலே கள்ளர் பயமானால்,
எட்டு நாளையில் கச்சை கட்டி உன்னை
ஏலேலே தூக்கிலே போட்டிடுவேன் கள்ளா!
மட்டுள்ள வழிபாதை பதனம்”

1759- வருஷம் மே மாதம் 20 -ம் தேதியன்று கம்மந்தான் மதுரையை அடைந்து நாடெங்கும் ஒழுங்கின்றிக் குழப்பமா யிருப்பதை அறிந்தார்.  உடனே வம்பர் குறும்பர்களை யெல்லாம் ஒடுக்கி யடக்கி வழிப்படுத்த யத்தனித்து, முதற்கண் நாட்டுக் கள்ளரை எதிர்த்துச் சென்று வேட்டையாடி, யாவர்க்கும் முன் மாதிரியாகும்படி இரண்டொரு கொடுந்த தண்டனைகளால் அச்ச முறுத்தி, அதுகாறும் அவர்கள் செய்த அழிம்புகளுக்கு அபராதமாக ஆயிரம் மாடுகளையும் ஈராயிரம் ஆடுகளையும் அவர்களிடமிருந்து பறி செய்து திருச்சிராப்பள்ளிக்கு அனுப்பினார்.  அப்பால், மேலூர், வேளாளப்பட்டி என்னும் ஊர்களில் கோட்டைகள் கட்டிக் காவல்களை ஏற்படுத்தி, அது முதல் நாட்டுக் கள்ளர்கள் கப்பமிறுக்க வேண்டியதில்லையென்றும்; ஆயின், வழிப் பறிகள் களவுகள் இன்றிக்காத்து ஜனங்களை எவ்வாற்றானும் தொந்தரை செய்யாமல் ஒழுத வேண்டுமென்றும், நியமித்தார்.  இக்காலத்தில் தான் “ கள்ள கருவறுத்த வீரன் “ என்று கம்மந்தான் பொது ஜனங்களால் புகழப் பெற்றது.

மதுரைச் சீமையை இவ்வண்ணம் சீராக்கிய பின்னர், திருநெல்வேலி சென்று, கொல்லங் கொண்டான், கொல்லர்பட்டி முதலிய கோட்டைகளைப் பிடித்து, கட்டப் பொம்ம நாயக்கனையும் புலித்தேவனையும் ஒடுக்கி, மாபுஸ்கான் தன் நாட்டை விட்டு வெளியேறும்படி செய்தார்.  தெற்குக் கோடியிலுள்ள பிரதேசங்களை நிலையாக ஒழுங்கு செய்ய நினைந்து, திருவாங்கூர் அரசருக்குக் களக்காட்டைக் கொடுத்து, அந்தப் பிரதேசத்தைப் பாதுகாத்துத் தனக்கு எப்பொழுதும் துணை நிற்கும்படி, அவருடன் உடம்படிக்கை செய்து கொண்டார், இவ்வாறு திருநெல்வேலிச் சீமையையும் பாளையக்காரர்கள் அனைவரையும் அடக்கி யொடுக்கி ஒழுங்கு செய்து, தான், செலுத்தற்குரிய குத்தகைப் பணத்தில் நான்கு லக்ஷம் ரூபாயை இரண்டு தவணையாகத் திருச்சிராப்பள்ளியிலுள்ள கம்பெனியார் காரியஸ்தருக்குனுப்பினார்.

தென்னாடுகளின் குத்தகை முதலில் ஓராண்டுக்கே கம்மந்தானுக்குக் கொடுக்கப்பட்டது; பிறகு அடுத்த வருஷத்துக்கும் அவரே குத்தகையைப் பெற்றார்.  கம்மந்தானது போர் வீரத்தையும் திறமையையும் புகழ்வது மிகையாகும்.  நாட்டை ஒழுங்கு படுத்தி வாழ்வித்துத் தன் அதிகாரத்துக் குள்ளாக்கிய பின்னர், அவர் இராஜ்ய பரிபாலனஞ் செய்த முறையைச் சுருக்கிக் கூறுதல் பொருந்தும்;

சந்தா சாயபு, பர்க்கதுல்லா முதலியோர் காலங்களில் அவர்களால் அபகரிக்கப்பட்ட கோயில் மானியங்களையும் சொத்துக்களையும் கம்மந்தான் திருப்பிக் கொடுத்து, கோயிற்பணிகள் செவ்வனே நடைபெறும்படி செய்தாரென்று முன்னமே கூறினோம்.  மதுரை மீனாக்ஷியம்மனிடத்தில் அவருக்கு பக்தியுண்டென்றும், அம்மன் அவர் சொப்பனங்களில் வந்து தோன்றி அருள்செய்வதுண்டென்றும்,  புதைந்து கிடந்த ஒரு பெருநிதியை அம்மன் அருளினால் அவர் அடைந்தாரென்றம், அதைக் கொண்டு அரண்மனை கட்டினாரென்றும் கதைகளுண்டு.  வேளாளராய்ப் பிறந்து முஸ்லீமான அவர் மீது பிராமணரும் ஹிந்துக்கள் பிறரும் குறை கூறுதற்கிடமின்றி நியாயமாய் நடந்துகொண்டது மன்றி; தேவஸ்தானச் செலவுகளுக்குப் போதிய அளவு திட்டமான மோகினிப் பணத்தை ஸர்க்காரிலிருந்து கொடுத்து, அர்ச்சகர்கள் அனுபவித்துவந்த மானியங்களை ஸர்க்கார் பராமரிக்கும்படி, அவர் நியமித்தார்.

ஏழைகளான நாட்டுக் கள்ளர்கள் வரியிறுக்க வேண்டியதில்லை யென்றும், ஊர்க்காவல் வழிக்காவல்களைச் செய்தாற் போதுமென்றும் பணித்தது போலவே, ஆங்காங்குள்ள மற்றக் குடிகளுக்கெல்லாம், அவரவர் பயிரிடும் நிலபலன்களுக் கேற்றவாறு நிதானமான வரிகளையே விதித்தார்.  இவ்வாறு அவர் செய்த ஒப்பந்த நிபந்தனைகளை, ஓர் இம்மியும் வழுவாது தான் அநுசரித்தது போல, தத்தம் கடமைகளின்படி குடிகளும் ஒழுகும்படி செய்தார்.  கர்னல் புல்லற்டன் என்பவர், கம்மந்தானின் அரசியல் முறைகளைப் பற்றி எழுதுவதாவது:-

“இந்நாடுகளை அவர் ஆண்டபோது, அவர் ஆட்சி வெகு திடமாயும் நன்றாயும் நிகழ்ந்தது: அவர் செங்கோல் ஒரு சிறிதும் கோணினதில்லை; அவர் சொன்ன செயல் மாறின தில்லை.  கால தேசங்களுக்குப் பொருந்த நற்பயன் விளையும்படி இராஜ்ய முறைகளை ஆலோசித்து ஏற்படுத்தி கண்டிப்பாய் நிறைவேற்றினார்; அவர் ஆட்சியில் குற்றஞ்செய்தவர்கள் தண்டனையின்றித் தப்ப முடியாது.  சர்க்கார் தான் குடிகளின் தந்ததை என்பதும்; ஸர்க்காருக்கு க்ஷேமலாபங்களை விளைக்கும் உழவர்களும் கைத்தொழிலாளிகளும்தான் அத் தந்தையின் அருமைப் பிள்ளைகள் என்பதும்; பாளையக்காரர்களும் கள்ளர்களும்கூட ஸர்க்காரின் மக்களாயினும், உண்மையும் நியாயமும் தவறாது அவர்களையும் ரக்ஷிப்பது ஸர்க்காரின் கடமையாயினும், சோம்பித்திரிந்து, தம் முதலையும் பிறர் பொருளையும் பாழாக்கும் அப்படிப்பட்ட மக்கள், ஸர்க்காரின் தயவு தாக்ஷணியங்களுக்கு அருகரல்ல ரென்பதும், அவர் கொள்கைகள்.  “பாடுபட்டுழைக்கும் அயலார் சொத்தைக் கொள்ளையடிப்பதை விட்டு விட்டு, அவர்களும் தத்தமக்குரிய நியமனங்களை பாதுகாக்கட்டும்.  அப்படிச் செய்தால், அவர்களையும் பேணிப் போற்றுவேன்; அப்படிக்கி தன்றி, அவன் அவர்கள் சோம்பேறிகளாய்த்திரிந்து, நாட்டை நாசமாக்குவதையே தம் தொழிலாகக் கொண்டிருக்கும்வரை, ஈட்டி பிடித்த ஒவ்வொரு மறவனையும், தலைச்சாத் துணிந்த ஒவ்வொரு பாளையக்காரனையும், பொது நல விரோதியாகவே நான் மதித்து நடத்துவேன்” என்று, அவர் கூறுவதுண்டு,  அவர் ஆட்சியின் நாடிருந்த நிலைமையையும், அவர் நடத்தையையும் கூற்றுக்களையும் ஒப்பிட்டுப் பார்த்தபின், எந்தப் பிரதேசத்திலுமே, எந்தச் சாதியிலுமே விவேகமும் ஆண்மையும் யோக்கியதையும் ஒருங்கு சிறந்து விளங்கியவர், அவரினும் மேலானவர் மற்றெவருமே இல்லை என்பது தெளிவாயிற்று,”

சென்னைக் கவர்னருக்குக் கம்மந்தான் எழுதிய கடிதமொன்றில் “கள்ளர்கள் மனிதரல்லர்; பிசாசுகளே “ என்று, அவர் எழுதியிருக்கிறார்; ஆயினும், அக் கள்ளர்கள் அவரிடத்தில் அளவற்ற பக்தியும் விசுவாசமு முள்ளவரா யிருந்தனர்.  ஏழை உழவர்களுக்குப் பணம் கொடுத்தும்; கால்வாய் குளங்கரைகளைப் பழுதின்றிச் செப்பனிட்டுக் காப்பாற்றியும்; மதுரைச் சாலியர்களுக்கு வேண்டியவாறு முன்பண முதவியும்; இராணுவ விஷயத்தில், வெடிமருந்து துப்பாக்கி பீரங்கிகள் செய்யும்படி, கைவல்ல கம்மியரைப் பழக்கியும்; உள்நாட்டு வர்த்தகம் செழித்தோங்கும்படி, வழிப்பாதைகளைப் பாதுகாத்தது மன்றி, பிரயாணிகளின் சௌகரியத்துக்காச் சத்திரம் சாவடிகளைக் கட்டி, அவற்றுக்கு  வேண்டிய நிதிகளை ஏற்படுத்தியும், அவர் நாட்டைப் பேணிப் போஷித்தார்.  போர்க் குழப்பங்களின் மத்தியிலும், அவர் நாளிலே களவு கொள்ளைகள் நடவா; பாளையக்காரர் தத்தம் கப்பங்களைத் தவணைப்படி செலுத்தத்  தவறார்.  அவர் காலத்து ஜமாபந்தி ஓராண்டிலே ரூ.31,11,325 ஆயிற்றென்றால், நாட்டின் வளமையைப் பற்றி வேறு கூற வேண்டா; அதே நாட்டின் ஜமாபந்தி, சில வாண்டுகளுக்குப் பின்னர், நவாபு முகம்மதலியின் பரிபாலனத்திலே ரூ.18,47,587 தான் ஆயிற்றெனின், நவாபின் திறமையைப் பற்றி வேறு கூறவும் வேண்டுமோ?  கம்மந்தானுக்குப் பின் நவாபு முகம்மதலி நாட்டையாண்ட காலத்திலே, குடிகளையும் பாளையக்காரர்களையும் அவர் பலவகையில் இமிசத்ததையும், இறுக்க முடியாத வரிகளை விதித்துப் பலவாண்டுகளுக்குச் சிறைகளில் அடைத்து  வைத்ததையும், நாட்டின் சீர்கேட்டையும் பற்றி லஷ்ஷிங்டன் என்பவர் எழுதியிருப்பதை வாசித்தால், கம்மந்தானுக்கும் முகம்மதலிக்கும் உள்ள வேற்றுமை ஒருவாறு விளங்கும்.

1761-ம் ஆண்டிலே, ஆங்கிலேய கம்பெனியாரின் கவர்னர் பிகட் என்பவர், நாட்டுக்குரியவர் நவாபானதால், அவர் கொடியையே மதுரை பாளையங்கோட்டையி லுள்ள கோட்டைகளில் நாட்டி, அவருக்கே கப்பப்பணத்தை அனுப்பும்படி, கம்மந்தானுக்கு ஒரு கடித மனுப்பினா ராயினும், அக்கடிதம், முகம்மதலியின் கண்ணைத் துடைப்பதற் கன்றி மற்றில்லை; கம்பெனியார் கொடியையே பறக்கவிட்டு, கம்பெனியாரின் காரியஸ்தருக்கே பணமனுப்பும்படி வேறுத்திரவு இரகசியமாய் அனுப்பப்பட்டது.

1762-அம் ஆண்டிலே கம்மந்தானுக்கு ஒரு மகன் பிறந்தான்.  அப்போது, இராமநாதபுரம் சேதுபதி உதயத்தேவரின் பிரதானியான தாண்டவராய பிள்ளை, குழந்தைக்கு ஒரு தங்கத் தொட்டில் அனுப்ப, கம்மந்தான், எதிர்மரியாதையாக, அவருக்கு சாக்குடி என்னும் ஊரை மானிய மளித்தார்; தாண்டவராயபிள்ளை, தனக்குக் கிடைத்த மானியத்தை மீனாக்ஷியம்மன் கோயிலுக்குக் கொடுத்துவிட்டார்.

1762-ம் ஆண்டிலே, கம்மந்தான் செலுத்தும் குத்தகைப் பணம் ஒன்பது லக்ஷம் ரூபா ஆக்கப்பட்டது.  அதன்படி, கம்மந்தான் நான்கு லக்ஷம் ரூபா முதல் தவணையாக, திருச்சிராப்பள்ளியிலுள்ள ந்யூட்டன் என்ற கம்பெனிச் சம்பிரதிக் கனுப்பினார்.  இதற்குள் கம்பெனியாரின் மனம் மாறிவிட்டது; முகம்மதலியே நாட்டுக்குரியவ ரெனினும், அவர் கம்பெனியாரின் கடனாளியாயும் தஞ்சமாயு மிருந்தார்; அவர் அபிப்ராயத்தைக் கவனியாமலே, மதியாமலே, கம்மந்தானைத் தென்னாட்டுக் கவர்னராகக் கம்பெனியார் நியமித்திருந்தனர்.  கம்மந்தானை யன்றி மற்றெவராலும் நாட்டை வாழ்வித்துச் சீர்படுத்தித் திறைதண்டியிருக்க முடியாதென்பது திண்ணம்; கம்பெனியார் தரப்பின்றி, நவாபு முகம்மதலியின் உத்தியோகஸ்தராகிச் சென்று வேலைபார்க்கக் கம்மந்தான் ஒரு நாளும் சம்மதித்திருக்க மாட்டாரென்பதும் நிச்சயம்.  இப்பொழுது அரும்பாடுபட்டு நாட்டையடக்கி யொடுக்கிப் பயன்கொள்ளும் தருணத்திலே, கம்பெனியார், “மதுரை திருநெல்வேலிச் சீமைகள் நம்மாலன்றி நவாபினால் குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறபடியால், குத்தகைப் பணங்களை நவாபினிடத்திலே செலுத்த வேண்டும்  “ என்று, கம்மந்தானுக்கு உத்திர வனுப்பினர்.  முகம்மதலிக்கும் கம்மந்தானுக்குமோ, ஜன்ம விரோதம்; அவர் கீழ் இவர் ஒரு கணமேனும் சேவிப்பது அசாத்தியமாயிருந்தது.  இவ்வாறு தன்னைத் தன் எதிரி கையில் ஒப்படைத்து, நட்டாற்றிற் கை விட்டாற்போல, கம்பெனியார் மோசஞ்செய்து விடுவார்களென்று, கம்மந்தான் கனவிலும் கருதினதில்லை.  நவாபு முகம்மதலியின் தந்தை ஆனவருடிகான் என்பவர், தன்னைப்போலவே ஒரு சாதாரண குடும்பத்திற் பிறந்தவர்தான் என்பதும்; ஒரு சாமானியப் படைவீரரான ஹைதரலி, தன் கண்காண மைசூரதிபதியானதும்; தமக்கு நவாபிடமிருந்து வரவேண்டிய கடனை மீட்பதன்றி, நாட்டுரிமை விஷயத்தில் தலையிடும் பாத்தியதை ஆங்கிலேய கம்பெனியாருக் கில்லை யென்பதும்; ஆங்கிலேயரின் உதவின்றி, முகம்மதலியால் மாத்திரம் தான் வெல்ல முடியாதென்பதும்; தன்னைக் கைவிட்ட ஆங்கிலேயர் நவாபுக்கு துணைநிற்பின், தான் பிராஞ்சியரின் உதவியை நாடி யடையலா மென்பதும்; திருவாங்கூர்  தஞ்சாவூர் அரசர்களும், பாளையக்காரர்களிற் பலரும், கள்ளர்களும், தன் கட்சியி லிருப்பர் என்பதும், கம்மந்தானுக்கு நன்கு தெரியும்.  அன்றியும், இவ்வாறு தான் எண்ணித் துணிந்த கருமத்திலே செயித்தால் சிம்மாசனம், தோற்றால் தூக்குமரம் என்பதையும், அவர் அறிந்திருப்பர்.  அவருக்கு நேர்ந்த இக்கட்டிலே, அவர் செய்யக் கூடியன மூன்றேயாம்; ஒன்று, மரணத்தைத் துறந்து நவாபின் கீழ்ச் சேவிப்பது; அல்லது, தன் அதிகாரத்தையும் ஆட்சியையும் இழந்து, வேறிடஞ் சென்று பிழைப்பது; அல்லது, தன்னாலன்றித் தன் காலத்தவர் வேறெவரானுமே சாதிக்கவொண்ணாத அரும் பெருங்காரியத்தைச் சாதித்து முடிந்ததன் நற்பயனை அநுபவிக்கும் வழியிலே நின்று,

“ ஒட்டார்பின்  சென்றொருவன் வாழ்தலின், அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று”

“ காண முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது”.

என்னும் பொய்யா மொழிகளையே மனத்தில் ஊன்றி தன்னால் இகழ்ந்து வெறுக்கப்பட்டவரும் தன் ஜன்ம விரோதியுமான நவாபை எதிர்த்துப் பொருவது, இம் மூன்று வழிகளில் முதலிரண்டையும் இகழ்ந்து துறந்து, வெற்றியும் தோல்வியும் விதிவசமாயினும், பொன்றாப்புகழ் தன் வரத்ததென்று கருதி, மூன்றாம் வழியையே கம்மந்தான் தொடர்ந்து நடந்தது அவர் போக்கையே காட்டியது.

IV கடை மூவாண்டுகள்

காலக்கிரமத்தில் தன் அதிகாரத்தை மீறியெ திர்க்கக் கம்மந்தான் யத்தனித்துப் படைகள் திரட்டுவதையும், கோட்டை கொத்தளங்களைப் பலப்படுத்துவதையும், துணையாளிகளை நாடுவதையும் அறிந்த முகம்மதலி, கம்பெனியாரிடம் முறையிட, கம்பெனியார், உடனே சென்னைக்கு வருமாறு கம்மந்தானுக்கு கட்டளை யனுப்பினர்.  அப்பொழுது, கம்மந்தானை நன்கறிந்து அவருக்கு அநுகூலஞ் செய்ய வல்ல ஆங்கிலேய உத்தியோகஸ்தர்கள், சென்னையில் இரண்டொருவரே இருந்தனர்; கம்பெனியாரின் நிர்வாக சபையிலே நவாபின் செல்வாக்கு மேலிட்டிருந்தது; தஞ்சாவூர் அரசர், முர்த்தஸா அலி முதலிய நண்பர்கள், கட்டளைப்படி கம்மந்தான் சென்னை சென்றால் தீங்கும் அவமானமுமே விளையுமென்று தடுத்தனர்; இக் காரணங்களால், அவர் சென்னைக்குச் செல்லாது, அவர் கைதாகும் தறுவாயென்று கருதித் திருநெல்வேலிச் சீமையின் மீது படையெடுத்து வந்த திருவாங்கூர் அரசரை யெதிர்த்துத் தெற்கே சென்றார்.  உடம்படிக்கையை மீறிக் கேரளத்தார் தன்னைத் தாக்கியது, ஆங்கிலேய கம்பெனியாரின் தூண்டுதலால்தா னென்பது, அவருக்கு விளங்கிற்று.  அந்தச் சமயத்திலே, நெருப்போடு காற்றுச் சேர்ந்ததுபோல, மார்ச்சண்டென்னும் பிராஞ்சிய வீரர், ஐரோப்பிய படையாட்கள் பலருடன் வந்து, கம்மந்தானுடன் சேர்ந்து கொண்டார்.  அது காறும் ஆங்கிலேயரின் கொடிகளே கம்மந்தானது படைமுகங்களிலும் கோட்டை கொத்தளங்களிலும் பறந்து வந்தன.  ஆங்கிலேயர் நட்பு முறித்துத் துரோகஞ் செய்து தன்னைக் கைவிட்டுப் பிராஞ்சியர் தனக்குத் துணைவராகிவிடவே, 1762-ம் வருஷம் ஜனவரி மாதம் 9-ம் தேதியன்று, பாசறையிலே யுள்ள ஆங்கிலேயக் கொடிகள் எரிக்கப்பட்டுப் பிராஞ்சியக் கொடிகள் நாட்டப்பட்டன.  கேரளத்தரசர் கம்மந்தானோடு நட்புக் கொண்டு, அவருக்குத் துணை நின்று வேண்டியவாறு உதவி செய்யவும், அவருடைய எதிரிகளுக்கு இடங்கொடாது மறுக்கவும் ஒப்புக்கொண்டு, உடம்படிக்கை எழுதிக்கொடுத்தார்.  பின் நிகழ்ந்த போரில், கேரளத்தரசர் அவ்வாறே ஒழுகினமை, இப்பொழுது அவருற்ற தோல்வியின் கடுமையையும், அதனால் கம்மந்தானிடத்து அவருக்குண்டான பயபக்தியையும் நிரூபிக்கும்.

அக்காலத்தில் இந்தியாவிலுள்ள பிரெஞ்சுக்காரர்களின் முக்கிய காரியஸ்தரா யிருந்தவர் மாடேவ் என்பவர்.  ஐரோப்பாவிலே, ஏழாண்டுகளாக ஆங்கிலேயருக்கும் பிராஞ்சியருக்கும் யுத்தம் நடந்து கொண்டிருந்தது.  இந்தியாவிலே ஆங்கிலேயர் கை உயர்ந்தும், பிராஞ்சியர் கை மிகத் தாழ்ந்து மிருந்தன.  எல்லாவற்றானும் பிராஞ்சியரை மீண்டும் தலையெடுக்கச் செய்து, ஆங்கிலேயரைத் தாழச் செய்வதே மாடேவின் ஒரு கவலை; அவர், இந்தியாவிற் பலவிடங்கள் சென்று, அதற்கேற்றவாறு சூழ்ச்சிகள் செய்து வந்தார்.   மார்ச்சண்டையும் ஐரோப்பியப் படைவீரர்களையும், கம்மந்தானுக்குத் துணை நின்று அவர் கீழ்ச் சேவிக்க அனுப்பியது மன்றி, மாடெவ் செய்த சூழ்ச்சியால், மொகலாய ராஜாங்கத்திலே தக்ஷிண சுபேதாரும், கருநாடக நவாபின் மேலதிகாரியுமான நிஜாமலி என்பவர், மதுரை திருநெல்வேலிச் சீமைகளின் கவர்னராகக் கம்மந்தானையே நியமித்து, ஓர் உத்தரவனுப்பினார்.  இந்த உத்திரவினால், நவாபு முகம்மதலியின் தயவின்றி, அவருக்கும் மேலதிகாரியின் அநுமதி பெற்று, கம்மந்தான் கவர்னராகிவிடவே, ஆங்கிலேய கம்பெனியரேனும் முகம்மதலியேனும் அவரை அங்கீகரிப்பது மிகையாகி, அவர் அதிகாரம் நியாயமாகிவிட்டது.  1763-ம் ஆண்டிலே ஷா ஆலம் டில்லியிலே மொகலாய சக்கிரவர்த்தியா யிருந்தனர்; அவர் கீழ் நிஜாமலி தக்ஷிண சுபேதார்; அவர் கீழ் முகம்மதலி கருநாடக நவாபு; திருநெல்வேலிச் சீமைகள் நவாபுக்குட்பட்டன.  எனவே, சுபேதாருக் குட்பட்டனவென்பது கூற வேண்டா.  சென்னையி லுள்ள ஆங்கிலேய கம்பெனியாருக்குச் சில ஊர்கள் கோட்டைகள் மாத்திரமே சொந்தமாயிருந்தன; அவர்களுக்கு நவாபு கடன் பட்டிருந்தார்.  சுபேதார் நிஜாமலி கம்மந்தானைக் கவர்னராக நியமித்தார்; அரசியல் முறைப்படி, அதை மாற்றும் உரிமை, சக்கரவர்த்திக்கே யுண்டு; தன் யஜமானரான சுபேதார் கட்டளையை மீறிக் கருநாடக நவாபு ஒழுகினால், இவர் அதிகாரத்தை மீறிச் சுபேதார் கட்டளைப்படி கம்மந்தான் நடப்பது நியாயமாகி விடும்.  இஃதெவ்வாறாயினும், கம்பெனியார் இவ்விஷத்தில் தலையிட்டு, கம்பெனியின் சேனாபதியான லாரன்ஸ்  என்பவர் கம்மந்தானை ஆணை மீறினவராகப் பழித்து, அவர் மீது படையெடுத்துச் சென்றது, “ வல்லான் வகுத்ததே வாய்க்கால் “ என்றும் ஒரு நியாயத்தைத் தவிர, மற்றெவ்வித நியாயத்துக்கும் ஒவ்வா தென்பது தேற்றம்.  ஆகையால், கம்பெனியின் நிர்வாக சபையார் 1/801763 அன்று, (கம்மந்தானை வென்று சிறைப் பிடித்தவுடன்) “முதல் மரத்திலே சைநியங்கள் காணத் தூக்கிலிடுவதுதான் எங்களுக்கு முழுச் சம்மதம் “ என்று எழுதியது, அவர்கள் மனப்பான்மையையும் நியாவுணர்ச்சியையும் நன்றியறிவையும் நன்கு விளக்கும்.

நவாபும் கம்பெனியாரும் செய்த சூழ்ச்சிகளால், பெரிய மறவர் சின்ன மறவர் என்ற இராமநாதபுரத்தாரும் சிவகங்கையாரும் கம்மந்தான் கட்சியைத் துறந்து நவாபுக்கு உதவி செய்ய ஒப்புக் கொண்டனர்.  இதனல் கம்மந்தான் முதலில் உத்தேசித்தவாறு திருச்சிராப்பள்ளியைச் சென்று தாக்க முடியாமற்போயிற்று.  தளகர்த்தர் பிரட்டன் (பாஸ்டன்) என்பவர், ஜூலை 14-ம் தேதி திருச்சிராப்பள்ளியை விட்டுப் படைகளுடன் புறப்பட்டு, ஆகஸ்டு 6-ம் தேதி திருப்புவனம் வந்து சேர்ந்தார்.  கம்மந்தான், அவர் படைகளில் ஒரு பகுதியைத் தாக்கி முறியடித்துப் பெருஞ் சேதம் விளைவித்தார்.

இதற்கிடையில் ஐரோப்பாவிலே ஆங்கிலேயருக்கும் பிராஞ்சியருக்கும் நடந்து கொண்டிருந்த கலகம் ஒழிந்து சமாதானம் ஏற்பட்டுவிட்ட செய்தி, இந்தியாவை எட்டிற்று.  அதனால், மாடேவ், ஆங்கிலேயருக்கு விரோதமாகக் கம்மந்தானுக்கு உதவி செய்ய முடியாமற் போயிற்று; ஆயினும், மார்ச்சண்டு, பிளாமிக்கோற்டு, என்ற பிராஞ்சிய தளகர்த்தர்களும், ரிக்கட் என்ற ஜர்மானிய தளகர்த்தனும், ஐரோப்பிய படைகளும், கம்மந்தானிடம் சம்பளம் பெற்று, அவர் இராணுவத்தில் சேவித்து வந்தனர்.  கர்னல் மான்ஸன் என்பவர், முதலில் கம்பெனியாரின்  சேனாபதியாயிருந்தார்.  மதுரைக் கோட்டையைக் காத்துவந்த கம்மந்தானின் தண்டுகளின் மொத்தம், 200 பிராஞ்சியரும், 1000 குதிரை வீரரும், 3000 சிப்பாய்களும், கள்ளர்கள் பலரு மென்றும்; கோட்டையை முற்றிக்கை செய்த மான்ஸனது சைநியங்கள், 1600 ஐரோப்பியரும், 4000 சிப்பாய்களும், 2000 குதிரை வீரரும், பல்லாயிரம் கள்ளர்களு மென்றும் சொல்லப்பட்டிருக்கிறது.  இவ்வண்ணமாக, 1763 -ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், மதுரை முற்றிக்கை தொடங்கிற்று.  அம் மதி இரண்டாந் தேதி நிகழ்ந்த ஒரு சிறு சண்டையிலே, கோட்டைக் காவலை ஒற்றி யறியச் சென்ற ஓர் ஆங்கிலேயப் பட்டாளத்தைக் கம்மந்தான் முறியடித்துத் துரத்தினதில், டோனால்டு காம்பல் என்ற தளகர்த்தர் காயமுற்றுச் சிறைப்பட்டார்.   அவர் காயங்களைக் கண்ணுற்ற கம்மந்தான் கண்ணீர் வடித்து, அவருக்காகக் பரிதாபப்பட்டதுமன்றி, தன் கைதியாகிவிட்ட அவரை மிக்க மரியாதையோடு உபசரித்து, எதிரிகளின் பாசறைக்குச் திருப்பி யனுப்பி விட்டனர்.

இந்த முதல் முற்றிக்கை இரண்டரை மாதக் காலத்தில் முடிந்தது; ஆங்கிலேயர், நாற்பதினாயிரம் குண்டுகள் வரை சுட்டு, பதினென்ணாயிரம் புதை குண்டுகளைக் கோட்டைக்குள் ளெறிந்து, ஐரோப்பியப் படைவீரர் எழு நூற்றுவர் வரை இழந்து போராடிப் பார்த்தும், ஒன்றும் பலிக்கவில்லை. கோட்டைக்கு வெளியிலுள்ள தன் கட்சியாருடன் கம்மந்தான் தாராளமாய் வந்து போய் உறவாடுவதையும், அவர்கள் மூலமாய்த் தனக்கு வேண்டிய பண்டங்களைத் தருவித்துக் கொள்வதையும் கூட, அவர்களால் தடுக்க முடியவில்லை.  கடைசியில் மழைக்காலம் வந்துவிடவே, முற்றிக்கையை நீக்கி, பிரட்டனைச் சேனாபதியாக விட்டுவிட்டு, மான்ஸன் முதலியோர் சென்னைக்குத் திரும்பிவிட்டனர்.  கம்மந்தானின் போர்த்திறலை யறிந்த தக்ஷிண சுபேதார் நிஜாமலி, ‘முகமதலியின் ஸ்தானத்தில் கம்மந்தானையே கருநாடக நவாபாக்க உத்தேசிக்கிறேன் ‘ என்று, மாடேவுக்கு எழுதினார்.  சுங்குராம செட்டியா ரென்ற சென்னை வாசி, ஆங்கிலேய கம்பெனியாரின் கவர்னருக்குக் கம்மந்தானைப் பற்றி எழுதிய கடிதத்தில், பின் வருமாறு கூறியிருக்கிறார்:-

“திருச்சிரிப்பள்ளிக் கோட்டை முற்றிக்கையின் காலத்தில், முகம்மது யூஸப்கான் கம்மந்தான் நமது படைகளுக்கு வேண்டிய உணவுப் பொருள்களை விசுவாசமாய்க் கொண்டு வந்து உதவிக் காப்பாற்றியதும்; சென்னைக் கோட்டையை லாலி முற்றிக்கை செய்தபோது, திருநெல்வேலிச் சீமையிலிருந்து படைகளைக் கொண்டு வந்து பிராஞ்சியரின் பிரயத்தனங்களை யெல்லாம் பாழாக்கிக் கடும்போர் புரிந்து, அவர் பேருதவி செய்ததும், சேனாபதி லாரன்ஸ் எழுதிய சரித்திரத்தினாலே விளங்கும்.  இவற்றை யெல்லாம் மறந்து, நவாபின் பேச்சைக் கேட்டு, அவரை எதிர்த்துச் சைநியத்தை அனுப்பினீர்களே: கம்மந்தான் விசுவாசத்துடன் நமக்குச் செய்துள்ள பேருதவிகளுக் கெல்லாம் இதுதானோ நாம் காட்டும் நன்றியும் கைம்மாறும்! இப்பொழுது அவர் நமது தண்டுகளை நான்றாய் அடித்து வெருட்டு, அநேகரைக் கொன்றுவிட்டா ரென்றும், நமது சைனியங்கள் புறங்காட்டி ஆத்துக் கிப்பால் ஓடி வந்து விட்டன வென்றும் கேள்வி.  “

முதல் முற்றிக்கை நீங்கிய பின்னர், கம்மந்தான், தன் படைகளுக்கும் தளகர்த்தருக்கும் பரிசுகளும் வெகுமானங்களும் அளித்து, சிதைவுண்ட மதிற்சுவர் கொத்தளங்களைச் செப்பனிட்டுப் பலப்படுத்தலானார்.

1764-ம் ஆண்டின் துவக்கத்திலே, ஏராளமான உணவுப் பொருள்களையும் துணைப் படைகளையும் பெற்ற பிரட்டன் தளகர்த்தர், மீண்டும் மதுரையை முற்றிச் சூழ்ந்து, கோட்டையைக் கைக்கொள்ள எண்ணி, அதற்கு வேண்டிய பிரயத்தனஞ் செய்யலானார்.  இதனிடை நிகழ்ந்த சமாதானப் பேச் சொன்றும் பலிக்க வில்லை.  பெப்ரவரி மாதம் பத்தாந் தேதி, டோனால்டு காம்பலின் தமயனான மேஜர் காம்பல் என்பவர் மதுரை வந்தடைந்து, தண்டுகளின் தலைமையைக் கைக்கொண்டார்.  பம்பாயிலிருந்தும் பிறவிடங்களிலிருந்தும் அவருக்கு உதவி செய்யப் படைகள் வந்து சேர்ந்தன.  மதுரைக் கோட்டையிலோ, சிப்பாய்கள் கள்ளர்களைத் தவிர, இருநூறு ஐரோப்பியரும், முந்நூறு காபிரிகளுமே இருந்தனர்.  இங்ஙன மிருந்தும், எதிரிகளால் கோட்டையைப் பிடிக்கவோ, கம்மந்தானைப் போரில் வெல்லவோ, முடியவில்லை; கடைசிவரை, தன் சேவகத்திலிருந்த ஐரோப்பிய தளகர்த்தரின் துரோகத்தினாலேயே அவர் மோசம் போனார்.

இந்தியாவின் சரித்திரத்திலே, போர்த்துகேயர் டச்சுக்காரர் டேனிஷார் பிராஞ்சியர் பிரிட்டிஷார் முதலிய மேல்நாட்டார் பலர் வர்த்தக நிமித்தம் வந்தடைந்த காலமுதல், முடிவில், மொகலாயர் மராட்டியர் சீக்கியர் ரஜபுத்திரர் சுதேசமன்னர் பிறர், அனைவரையும் பிரிட்டிஷார் தமக்குள்ளாக்கித் தனியாட்சியைப் பெற்ற காலம் வரை நிகழ்ந்த விருத்தாந்தங்களை ஆராய்ந்து பார்த்தால், ஒரு விஷயம் தெளிவாகும்;  மேலையர் வர்த்தகப் போட்டி அதிகார அசூயைகளால் அடிக்கடி தமக்குள் மாறுபட்டு, வெவ்வேறு சுதேச மன்னர்களின் கட்சிகளைத் தழுவித் துணை நின்று ஒருவரோ டொருவர் பொருதாராயினும், உற்ற தறுவாய்களிலே, இனம் இனத்தோட என்னும்  இயற்கை நியாயப்படி, தம்மை நம்பித் தமக்குச் சேவகமும் கௌரவமும் பெரும் பொருளும் உதவிவந்த மன்னர்களுக்குத் துரோகஞ் செய்து, தமக்குள் ஒன்று சேர்ந்து கொண்டு, அவர்களை ஏமாற்றி மோசஞ் செய்து வந்தமை, இமயமலை முதற் கன்னி முனைவரை எல்லா  நாட்டு வரலாறுகளாலும் விளங்கும்.  கம்மந்தானும், ஆங்கிலேயர் தன்னைக் கைவிட்ட பின்பு தான் நம்பிய ஜர்மானிய பிராஞ்சிய வீரர்களினால், அவ் வண்ணமே மோசம் போனார்.  அவர்களை அவர் நம்பாதிருப்பின், அல்லது அவர்கள் துரோகஞ் செய்யாதிருப்பின், தென்னாட்டுச் சரித்திரம் வேறு வழி திரும்பியிருக்கலாம்.

கம்மந்தான் முழு நம்பிக்கை கொண்டிருந்த ஐரோப்பிய தளகர்த்தர், ரிக்கட்டும், மாச்சண்டுமே.  இவர்களுன் ரிக்கட்டு, ஆங்கிலேயருக்கு இரகசியமாய்த் தூதனுப்பி, எண்ணாயிரம் வராகனைக் கைக்கூலி பெற்றுக் கொண்டு, பெப்ரவரி 26-ம் தேதியன்று, தன்கீழுள்ள பட்டாளத்தோடு துரோகமாய் வெளியேறி, எதிரிகளைச் சேர்ந்து கொண்டார்.  இது முதல் கோட்டையிலிருந்த ஐரோப்பிய படைகள் சிறிது சிறிதாய் வெளியேறி, எதிரிகளைத் சேரலாயின.  மார்ச்சண் டென்பவரைப் பற்றி இங்கே சிறிதுரைத்தல் பொருந்தும்.  கம்மந்தானது  குண விசேஷங்களிற் சில, அவருக்கு முண்டு; அவரும், எதற்கும் அஞ்சாத வீரர்; முற்கோபி; படபடப்புள்ளவர்; இதனால், அவருக்கும் கம்மந்தானுக்கும் மனஸ்தாபங்கள் நேர்ந்தன; ஒரு காலத்தில், கம்மந்தான் அவரைச் சிறையிலடைத்து வைத்திருந்தார்; மற்றொரு போது, கடுங்கோபத்தில் அவரைத் தன் சவுக்கினால் அடித்தார்.  இந்த அவமானங்களை மனதில் வைத்து வைரங்கொண்டிருந்த மார்ச்சண்டு, அற்றம் நோக்கி மோசஞ் செய்துவிட்டார்.  கம்மந்தான் படைகள் கோட்டைக்குள் அடைபட்டுவிடவே, தளகர்த்தர் பிரட்டன், சில படைகளுடன் திருநெல்வேலிச் சீமை சென்று, அங்குள்ள கோட்டைகளைக் கைவசப் படுத்திக் கொண்டார்.  வழக்கம்போல, மற்றி நின்றார்க்கும் முற்றப் பட்டார்க்கும் அடிக்கடி சிறு சண்டைகள் நிகழ்ந்தன.  இவ்வாறு நிகழ்ந்த காலங்களிலே, ஆங்கிலேய தளபதிகள் சிலர் கம்மந்தான் கையிலும், இவர் உத்தியோகஸ்தர் சிலர் எதிரிகள் கையிலும், அகப்பட்டுக் கொண்டனர்.  இரு கட்சியினரும் சிறைப் பிடித்த கைதிகளைப் பரிவர்த்தனை செய்து கொள்ளுதல் போர் மரபு.  அதன்படி, எதிரிகள் கையி லகப்பட்டுவிட்ட தன் அரிக்காரன் இராமலிங்கத்தையும் மற்றிருவரையும் தன்னிடம் அனுப்பினால், தான் சிறைப் பிடித்திருந்த தளபதி பால்ட்வின் என்பவரைத் தான் விடுதலை செய்வதாகக் கம்மந்தான் எழுதிய கடிதத்துக்கு, ஆங்கிலேய சேனாபதி காம்பல் எழுதிய பதிலில், ஒரு விஷயம் கவனித்தற் குரியது; அஃதாவது, வெள்ளைக்காரருக்கு இணையாகக் கறுப்பு மனிதரை மாற்றிக் கொள்வது காதாலும் கேளாத தொன்று, ஒரு பொழுதும் ஒருப்பபட முடியாதது, என்பதே.

எதிரிகளின் சூழ்ச்சிகளால் நாளுக்கு நாள் சைநியத்தில் துரோக குணம் அதிகப்படவே, கம்மந்தான் கண்டிப்பான தண்டனைகளை விதிக்க வேண்டியதாயிற்று.  கோட்டைக்குள் நடக்கும் விஷயங்களைப் பற்றித் துரோகிகளிடமிருந்து தான் கேள்வியானபடி, சேனாபதி காம்பல் சென்னைக்கு எழுதிய ஒரு நிருபத்திலே பின்வருமாறு கூறியிருக்கிறார்:-

“அவர் (கம்மந்தான்) கொடுமை நாளுக்கு நாள் அதிகப்படுகிறதாம்; அற்ப காரணங்களுக்காக, தன் கையினாலேயே குற்றவாளிகள் தலையினை வீசிவிடுகிறாராம்.  அவருடனுள்ள காவற்படைகளெல்லாம் மனம் வெறுத்து வெளியேறக் காத்திருக்கின்றனராம்.  தன் கீழ் உத்தியோகஸ்தரிடத்தில் பொறாமையும் சமுசயமுமே காட்டி, இப்பொழுது அவர் இரத்தப் பழிகள் கொலைகளினாலே தன் அதிகாரத்தைச் செலுத்துகின்றனராம்; அவருக்கு எப்பொழுது முள்ள இயற்கையான விவேகம் ஒழிந்து விட்டது போலும்; இவ்வாறு நடப்பவர் விரைவில் நாசமடைவரென்பது நிச்சயம்.  அவருடைய ஜனங்கள் படைகளின் அதிருப்தியை என்னாலியன்ற மட்டும் நான் இடைவிடாது அதிகப்படுத்த முயலுவேன். “

இவ்வாசகங்களை ஊன்றி ஆலோசித்துப் பார்த்தால் கம்மந்தானைச் சூழ்ந்துள்ளோர் துரோகங்களும், அவர் எதிரிகளின் சதி சூழ்ச்சிகளும், அவற்றால் அவர் மனம் புழுங்கிக் கோபாவேசமும் வீராவேசமும் மனவேக்கமும் மாறி மாறிப் பொங்கியெழ, அவர், வெறி கொண்டவர் போல, சில வேளைகளில் விபரீதமான யொழுகிய நடபடிக்கைகளும், ஒருவாறு துலங்கும்.

1764 ம் வருஷம் ஜூன் 7 தேதியன்று நவாபு முகம்மதலி முற்றிக்கைப் பாசறை வந்தடைந்தார்.  முற்றிக்கையினால் நற்பயனைக் காணாத ஆங்கில சேனாபதி, மதுரைக் கோட்டையைத் தாக்கித் தகர்த்துப் பிடிக்க வெண்ணி, அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தனர்.  11 தேதியன்று நவாபின் கொடியைப் பாசறையில் உயர்த்தியபின், பீரங்கிகள் கோட்டையைத் தாக்குதற்கு சூசகமாக ஒரு குண்டு சுடவே, அதையறிந்த கம்மந்தான், சாகும் வரை கோட்டையை விடுவதில்லை என்று தான் துணிந்துவிட்டதற்கு அறிகுறியாக, ஒரு மஞ்சட் கொடியைக் கோட்டையின்மேல் பறக்கவிட்டார்.  அன்று கோட்டையில் ஒரு சிறு பாகம் இடிபட்டது; அதைக் கண்டு மகிழ்ந்த முகம்மதலி, கோட்டையைப் பிடித்தால், படைகளுக்கும் தளபதிகளுக்கும் 130,000 வராகன் வெகுமதி யளிக்கிறே னென்று விளம்பரஞ் செய்தார்.  அன்று மாலை கோட்டையிலிருந்த ஐரோப்பிய தளபதிகள் நால்வர் கம்மந்தானை வஞ்சித்து வெளியேறி, எதிரிகளைச் சேர்ந்து கொண்டனர்.  அடுத்தடுத்து நிகழ்ந்த சிறு சண்டைகளில் இரு கட்சியிலும் ஆட் சேதம் நேர்ந்துகொண்டிருந்தது.

ஜூன் 26-ம் தேதி யன்று காலை, வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டு,  எதிரிகள் பெருந்திரளாய்ச் சென்று கோட்டையைத் தாக்க, அன்று பெரும்போர் வெகு மும்முரமாய் நடந்து, இரு திறத்தாராலும் பல வீரச் செயல்கள் நிகழ்த்தப்பட்டன; முடிவில், ஆங்கிலேயர் தோற்று மீளவேண்டியதாயிற்று.  சேனாபதி காம்பல் சமாதானக் கொடியோடு தூதனுப்பிக் கம்மந்தானின் அனுமதி பெற்று, அன்றைச் சண்டையில் மடிந்தவர் காயமுற்றவர்களை மாலையில் தன் பாசறைக்கு எடுத்துப் போனார்.  சேனாபதிக்கு அடுத்தபடியி லுள்ளவரும், ஒரு காலத்தில் கம்மந்தானது நண்பராயிருந்தவருமான மேஜர் பிரட்டன், அன்று மரண காயங்களுற்றுச் சில நாள்களில் உயிர்துறந்தார்.  அவரையன்றி, தளபதிகள் பலர் உட்பட, ஐரோப்பிய வீரர் மாத்திரம் நூற்றிருபதின்பர் வரையும், சிப்பாய்கள் பலரும், அன்றைப் போரில் மாண்டனர்.இத்துணைப் பெருஞ் சேதமும் முடிவில் அபஜயமு முற்று எதிரிகள் கோட்டை மதிலுக்குச் செய்த ஹானியை, கம்மந்தான் விரைவில் செப்பனிட்டு, மதிலைப் பலப்படுத்திக் கொண்டார்.

இவ்வாறு நெடுநாளாகப் பலமுறையாக மதுரைக் கோட்டையைத் தாக்கிப் பிடிக்கச் செய்த முயற்சிகள் பயன்படாமற் போனதை யறிந்த  கம்பெனியார், வெளிப்போக்கு வரவு அசாத்திய மாகும்படி கோட்டையைச் சூழ்ந்து வளைந்து, உணவுப் பொருள்கள் உட்செல்வதை அறவே தடுத்து, பஞ்சத்தினால் கம்மந்தானை கீழ்ப்படுத்திக் கைக்கொள்ளத் தீர்மானித்தனர்.  இந்தச் சூழ்ச்சியைச் சிலகாலம் நிறைவேற்றியதனால், கோட்டைக்குள்ளிருந்தவர்களில், மாமிச பக்ஷிணிகளாவார், தங்கள் குதிரைகளைக் கொன்று தின்ன வேண்டியதாயிற்று; சாகா மூல பல பக்ஷணிகள்,  வெறும் வாய்க்கிலையுமின்றித் தவிக்கலாயினர்; பலர், ஏற்ற உணவின்மையினால் நோய்களுற்று வருந்தி மாண்டொழிந்தனர்.  இங்ஙனமாகியும், கம்மந்தான் கீழ்ப் படிந்திலர்.  “ வெவ்வேறு நாட்டினர்களான ஒரு பெருங்கூட்டத்தார், இவ்வளவு இன்னல்களையும் சந்தோஷமாய் மனமிசைந்து சகித்துக்கொண்டு, அவர் சொற்படி ஒழுகி வந்ததே, கம்மந்தானது திறமையை நன்கு விளக்கும்  “ என்று, ஒருவர் எழுதியிருக்கிறார்.  இவ்வாறு தன்னை நம்பி ஜனங்கள் வருந்துவதையும் மடிவதையும் காணப் பொறாதவராய், ‘என் குடும்பத்தோடும் என்னைச் சேர்ந்தபடை பரிவாரங்களோடும் மரியாதையாய் வெளியேறி வேறெங்காவது செல்லும்படி எனக்கு அனுமதியறித்தால், கோட்டையை விட்டு விடுகிறேன் ‘  என்று கம்மந்தான் தூதனுப்பினார்; ஆனால், அதற்குக் காம்பல் இசையவில்லை.  இப்படிப்பட்ட தர்மசங்கடத்தினால் கம்மந்தானின் மனம் குழம்பித் தத்தளிக்க, அவர், நம்பிக்யற்று உற்சாகங்குன்றி ஏக்கமடைந்து கோபமும் தாபமும் மிதமிஞ்சிக் கொத்தளிப்பதால், நிதான அறிவில்லாதவர்கள் போலச் சில வேளைகளில் ஒழுகலாயினர்.  இக்காலத்தில் ஓர் சமத்தில்தான், ஏதோ துடுக்காக மார்ச்சண்டு எதிர்த்துச் சொன்ன சொல்லைப் பொறாதவராய், கம்மந்தான் அவரைத் தன் சவுக்கால் அடிக்க நேர்ந்தது.  இந்த அவமானமே மார்ச்சண்டின் மனத்திலும் துரோக எண்ணத்தை முளைக்கச் செய்தது.

பிராஞ்சியரின் உதவியை நம்பியும், மாடேல் மார்ச்சண்டு முதலியோரின் தூண்டுதலினாலுமே, கம்மந்தான், நவாபையும் ஆங்கிலேயரையும் எதிர்க்கத் துணிந்தனர்.  பகிரங்கமாக ஆங்கிலேய கம்பெனியாரை எதிர்த்துச் செய்த முதற்செயல், கம்மந்தான் அநுமதி பெற்று, அவர் பாசறையி லுள்ள ஆங்கிலேயரின் கொடிகளை மார்சண்டெரித்து, பிராஞ்சியரின் கொடியை நாட்டினதேயாம்.  ஐரோப்பாவிலே சமாதானம் ஏற்பட்டு, இந்தியாவிலுள்ள பிராஞ்சியர் அதனால் பகிரங்கமாய்க் கம்மந்தானுக்கு உதவி செய்வதை நிறுத்திய பின்னருங்கூட, மார்ச்சண்டும் வேறு சிலரும் கம்மந்தானின் கீழ் இராணுவச் சேவகம் பூண்டு, அவர் கட்சியில் போராடி வந்தனர்.  ஆகையால், ரிக்கட் முதலிய மற்றெல்லோரையும் விட, மார்ச்சண்டே விசுவாசமயொழுக அதிகம் கடமைப்பட்டிருந்தார்; கம்மந்தானுக்கு அடுத்தபடியில் அவர்தான் யுத்த முறையில் தேர்ந்தவீரர்,  அவரே  இப்பொழுது துரோகஞ்செய்யத் துணிந்து; தாம் படுங்கஷ்டங்களினாலும், கம்மந்தான் முடிவில் வெற்றியடைவாரென்ற நம்பிக்கை நாளுக்கு நாள் குன்றி வருவதனாலும், கம்மந்தான் வெளியேறித் தாம் மாத்திரம் நவாபு கையில் அகப்பட்டுக் கொண்டால் தமக்குப் பெருங்கேடு விளையக்கூடு மென்ற பயத்தினாலும், அதற்கு முன்னரே துரோகஞ்செய்து, கம்மந்தானை எதிரிகள் கையில் காட்டிக் கொடுத்துவிட்டால் தமக்கு க்ஷேமலாபங்கள் சித்திக்குமென்ற  துராசையினாலும் தூண்டப்பட்டு,  துரோகத்துக்குச் சித்தமாயிருந்த ஸ்ரீநிவாஸ ராவ், பாபா சாயபு என்ற இருவரோடுங்கூடிச் சதியாலோசனை செய்து முடித்தார்.  ஸ்ரீநிவாஸ ராவ், தஞ்சாவூர்ப் பிராமணர்; கம்மந்தானின் திவான்; பாபா சாயபு அவர் முக்கிய தளகர்த்தரில் ஒருவர்.  இவ்விருவரும் மார்ச்சண்டும் கூடி, வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டனர்.

அக்டோபர் மாதம் 13ந்தேதி ஐந்து மணிக்கு, கம்மந்தான் ஒரு தனியறையிலே நமாஸ்செய்து ஆண்டவனைத் தொழுதுகொண்டிருக்கையில், இம்மூன்ற துரோகிகளும் அவர் கூட்டாளிகள் சிலரும் திடீரென உட்புகுந்து, அவர்களில் ஒரு சுபேதார் எங்களைக் கைவிட்டு நீர் மாத்திரம் தப்பிவிடப் பார்க்கிறீரே என்று, அவரை ஏசித் தூஷித்தான்.  வந்தவர்களின் கோரிக்கையை அறிந்து கொண்ட கம்மந்தான், உடன தன் வாளையுறுவி அவனை வெட்டி வீழ்த்தினார்.  இதற்குள் மற்றவர்கள் அவர்மேல் விழுந்தமுக்கிப் பிடித்து, அவருடைய தலைப்பாகைத் துணியைக் கொண்டே அசைய முடியாமல் அவரை இறுக்கிக் கட்டிவிட்டனர்.   “என்னை இப்பொழுதே வாளால் கொன்று விடுங்கள்; காட்டிக் கொடாதேயுங்கள்” என்று, அவர் வேண்டிக்கொண்டதற் கிணங்காமல், அவரைத் தூக்கிச் சென்று, மார்ச்சண்டு வீட்டின் பக்ககத்திலுள்ள ஓர் அறையிற் சிறைவைத்துக் காவல் நியமித்தனர்.   அப்பால் எதிரிகளுக்குத் தூதனுப்பி நிபந்தனகைள் பேசலாயினர்; மிகச் சிலருக்கே இச்செய்தி தெரியும்.  கம்மந்தானின் வீரர்களில் இளஞ்சிங்கமொருவன், முதலியார் மரபினன், தன் எஜமானனுக்கு நேர்ந்த ஆபத்தை யறிந்து, அந்தப்புரத்திலுள்ள கம்மந்தானது மனைவி மாசாவுக்குச் செய்தியனுப்பிவிட்டு, ஐந்து – ஆறு நூறு வீரர்களைத் திரட்டிக் கொண்டு, கம்மந்தானைச் சிறையினின்றும் விடுவிக்க முயன்றான்.  மார்ச்சண்டு உடனே வந்து முதலியை மட்டும் கொன்றுவிடவே, மேல்கடத்தும் தலைவனின்றிப் படை வீரர் தத்தளிக்க, கலகம் ஒடுங்கிவிட்டது.  மார்ச்சண்டு ஒரு பீரங்கியைத் தன் வீட்டு வாயிலில் வைத்து, மேற்கலகம் நேராமல் தடுத்துக் கொண்டார்.  நிகழ்ந்தவற்றை யெல்லாம் அறிந்த மாசா, தன் கணவரை மட்டும் விட்டு விட்டால் கோட்டையையும் தன்னிடத்துள்ள அளவிறந்த திரவியங்களையும் கொடுத்து விடுவதாக, மார்ச்சண்டுக்கு கடித மெழுதி யனுப்பினாள்; ஆனால், அவர் அதற்கிணங்கவில்லை.

துக்கத்தையும் வெட்கத்தைமே விளைக்கத்தக்க கதையை வளர்ப்பதில் பயனில்லை; 14-ம் தேதியன்று எதிரிகள் கோட்டையையும் கம்மந்தானையும் கைக்கொண்டனர்.  மறுநாள், 1764ம் வருஷம் அக்டோபர் 15ந்தேதி திங்கட்கிழமை மாலை ஐந்து மணிக்கு நவாபின் கட்டளைப்படி, எதிரிகளின் பாசறைக்கப்பால் திண்டுக்கல் செல்லும் பாதைக்கருகே நின்ற ஒரு மாமரத்தில், கம்மந்தான் தூக்கிலிடப்பட்டார்.  அவர் பிடிபட்ட நாள் முதல் கொலையுண்டதுவரை உணவு கொள்ளவில்லை யென்றும்; திங்கட்கிழமை யன்று நவாபின் உத்திரவுப்படி கொடுத்த ஊண் தாம்பாளத்தை இடது காலால் உதைத்து தள்ளிவிட்டாரென்றும்; அவரைத் தூக்கிலிட்ட போது, இருமுறை உயிர்போகாமற் கயிறறுந்து கீழே விழுந்தாரென்றும்; அப்பால், அவர் தேகத்தில் பொதிந்து வைத்திருந்த ஓர் இரட்சையை எடுத்து விடும்படி அவரே கூற, அவ்வணம் செய்தபிறகு, மூன்றாவது முறை தூக்கிலிட்டபோதுதான் அவர் உயிர் துறந்தாரென்றும், கூறுவர்.  போர்க்களத்திலே காயமுற்றுக் கிடந்தவரைப் பார்த்துத் தான் கண்ணீர் பெருக்கி டொனால்டு காம்பெலின் தமயனான ஆங்கில சேனாபதி காம்பெனை யேனும், நவாபு முகம்மதலியை யேனும் தனக்கு உயிர்ப்பிச்சை கொடுக்கும்படி அவர் வேண்டிலர்.  ‘ தோற்றால் தூக்கு மரம், செயித்தால் சிம்மாசனம் ‘ என்பதை முதலிலே தான் நன்குணர்ந்து துணிந்த வண்ணமே, சிறந்த ஆண்மைத்தனத்துடன், அவர் கடைசிவரை ஒழுகினார்.  அவர் பிரேதத்தைத் துண்டங்கள் செய்து, அவர் தலையைத் திருச்சிராப்பள்ளிக்கும், அவயவங்களைத் தஞ்சாவூர், பாளையங்கோட்டை, திருவாங்கூருக்கும் அனுப்பிவிட்டு, அவர் உடலை மட்டும், மதுரையை ஆண்ட காலத்தில் அவர் வசித்து வந்த சமாதிபுரத்தில்தானே புதைத்தனரென்பர்; 1808-ம் ஆண்டிலே அஃதாவது 144 ஆண்டுகளுக்குப் பின்னர், ஷேக் காதர் குமாரர் ஷேக் இமாம் என்பவர், அவர் உடலைப் புதைத்த இடத்தின் மீது ஒரு சிறு மசூதியைக் கட்டினார்.  மதுரை நகரத்துக்கு இரண்டு மைல் தொலைக்கு மேற்கே, திண்டுக்கல் ரஸ்தாவின் சமீபத்திலே, “கான் சாகிப் பள்ளிவாசல் “  என்று வழங்கும் அந்த மசூதியை, இன்றும் காணலாம்.

“இந்தியா பெருமை பாராட்டக்கூடிய  கறுப்பு மனிதர் யாவரினும் மிகச் சிறந்த யூஸப் கான்!  “ என்று ஆங்கிலேய தளகர்த்தர் ஒருவரே புகழ்ந்துள்ள “முகம்மது யூஸப்கான் சாயபு பகதூர், கம்மந்தான்“ என்ற மருதநாயகம் பிள்ளையின் வாழ்க்கை வரலாறிது.

தொகுத்து எழுதியவர் : 

ராமச்சந்திர வைத்தியநாத்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *