வரலாற்றுப் புதையல் - 18:- "துறையூரில் 7-வது எட்வர்டு சக்கிரவர்த்தியாருக்காக நிகழ்ந்த முடிசூட்டு வைபவம்” குறித்த கட்டுரை - ராமச்சந்திர வைத்தியநாத் | www.bookday.in

வரலாற்றுப் புதையல் – 18:- “துறையூரில் 7- வது எட்வர்டு சக்கிரவர்த்தியாருக்காக நிகழ்ந்த முடிசூட்டு வைபவம்” குறித்த கட்டுரை – ராமச்சந்திர வைத்தியநாத்

வரலாற்றுப் புதையல் – 18

சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும் பல்வேறு பத்திரிகைகளில், அரசு அறிக்கைகளில் வந்த படைப்புகளையும் செய்திகளையும் அச்சுப் பிசகாது அறிந்திடும் முயற்சியே இது. அன்றைய உரைநடையை, இலக்கியப் போக்கினை, வரலாற்றை, செயல்முறையை அறிந்திடும் முயற்சிகளில் ஒன்றாகக்கூட இதை கொள்ள முடியும்.

சுகுண சுந்தரம் எனும் பத்திரிகையின் ஜனவரி 1903ம் இதழில் மணிப்பிரவாளமாய் இக்கட்டுரை வெளியாகியுள்ளது. மதராஸ் பட்டணத்தில் மட்டுமல்ல மாகாணமெங்கிலுமே ராஜவிசுவாசிகளுக்கு பஞ்சம் இருந்ததில்லை அதுவும் அந்த நூற்றாண்டின் துவக்கத்தில் என்பதை இக்கட்டுரைவாயிலாக அறிகிறோம்.

துறையூரில் 7- வது எட்வர்டு சக்கிரவர்த்தியாருக்காக
நிகழ்ந்த முடிசூட்டு வைபவம்

நமது 7-வது எட்வர்டு அரசர், ‘இந்தியன் சக்கிரவர்த்தி’ என்று நமது வைசராய் அவர்களாகிய லார்ட் கர்ஸன் அவர்களால் டில்லிமா நகரில் பிரங்கப்படுத்தப்பட்டு தர்பார் கூடிய தினமாகிய 1903 – ம் வருஷம் ஜனவரி மாதம் முதல் தேதியன்று இந்த ஊரில் “முடிசூட்டு வைபவச் சிறப்பு“ என்னும் ஓர் உச்சவத்தை விமரிசையாய்க் கொண்டாடுவதற்காக அந்தரங்கமாயுள்ள இராஜ விசுவாசத்தை வெளிக்குக்காட்டியவர், முன் இந்த ஜில்லாவில் தாசில்வேலை பார்த்து பென்ஷன் பெற்றவரும், இப்பொழுது ஜமீன்தாருடைய பிரதிநிதியும், யூனியன் அக்கிராஸனாதிபதியுமான S. அண்ணாமலைப் பிள்ளையவர்களே, அவர் இந்த கொண்டாட்டத்திற்காக சுமார் ஒரு மாதத்திற்கு முன்னமேயே எடுத்துக் கொண்ட பிரயாசையின் மிகுதியை எம்மனோரால் செப்பத்தரமில்லை.

பிள்ளையவர்கள் ஜனவரி மாதம் முதல் தேதியன்று திருச்சிக் கொண்டாட்டதைக்கண்டு மகிழச்சென்றிருந்தாலும், அன்று அவ்வைபவதினமானபடியால் இந்த ஊரில் தானிருப்பதற்கில்லாமல் போனாலும், ஏழைகட் கமுதளித்தலும், வஸ்திர தானஞ்செய்தலும் முற்பகல் பதினோரு மணிக்குள் நடத்தும்படிக்கும்; பிற்பகலில் சுமார் 5 – மணிக்கு நமது 7-வது எட்வர்டு சக்கிரவர்த்தி அவர்களுடையவும், அலெக்ஸாண்டிரியா மகாராணியாருடையும் திவ்வியமான படங்களை வினோதமாய் அலங்கரிக்கப்பட்ட விமானத்தில் அமைத்து நான்கு வீதிகளிலும் கடைவீதிகளிலும் சிறப்பாய் மத்தாப்பு பாண வேடிக்கைகளுடன் ஊர்கோலஞ் செய்யும்படிக்கும் அவர் ஏற்பாடு செய்திருந்தபடி, சப்ரிஜிஸ்தரார் மகா ராஜ ராஜ ஸ்ரீ கணபதி அய்யரவர்களும் எட்மாஸ்டர் மகா ராஜ ராஜ ஸ்ரீ கோதண்ட ராமானுஜச்சாரியார் அவர்களும் மற்றுமுள்ள கனவான்களும் வெகுசிரத்தையாய் நடத்தினார்கள். ஊர்கோலத்தின்போது சப்மாஜிஸ்திரேட் மகா ராஜ ராஜ ஸ்ரீ பக்குடீன்சாயப்பு அவர்கள் திவ்வியாலங்கார உடுப்புகள் உடுத்து குதிரையின்பேரில் ஆரோகணித்துக் கூடச் சென்றனர். அன்று கொண்டாட்டம் அம்மட்டில் நடந்தது.

ஊரில் முக்கியமான இடங்களில் உன்னதமான தோரணங்களாலும், பந்தல்களாலும், பட்டுவிதானங்களாலும், வாழை கமுகு கரும்பு முதலியவைகளாலும் வெகு விமரிசையாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

திருச்சிக்குப்போயிருந்த கனம்பிள்ளையவர்கள் 4-ந்தேதி திரும்பிவந்ததும், அன்று மாலை சுமார் 4-மணி சுமாருக்கு வஸந்த மண்டபத்திற்கு கெதிரில் உள்ளூர், வெளியூர் பாடசாலைகளிலுள்ள பிள்ளைகளை வினோதமாய் விளையாடும்படி செய்து அவர்களுள் தேசாப்பியாசத்தில் தேர்ந்தவர்கட்டு சட்டை பெல்டுகளை நல்கியும், சிறுமி சிறுவர்கட்கு பழம், குஞ்சாலாடு, பப்ரிமெண்டு முதலிய தின்பண்டங்களையளித்தும், மறுதினமாகிய 5-ந்தேதி சோமவாரத்தன்று சிவ விஷ்ணு வாலயங்களில் அபிஷேகார்ச்சனை நைவேத்தியங்களியற்றியும், சூரியாஸ்தமனமானதும் கோபுரமுதலான உன்னத ஸ்தானங்களிலும், தெருக்களில் சிற்சில இடங்களிலும் போலீஸ் ஸ்டேஷன் போஸ்டாபீஸ் சப்மாஜிஸ்திரேட் ஆபீசு சப்ரிஜிஸ்த்ராராபீசு ஆஸ்பத்திரி முதலான இடங்களிலும், வரிசை வரிசையாகத் திருவிளக்குகளேற்றப்பட்டன. திருக்குளத்தில் இரதவடிவமாய்ச்செய்த தீபங்களை ஏற்றினாற்போல நாற்புறத்திலும் தீபங்களை பிம்ப பிரதி பிம்பங்களால் கீழும் மேலும் நவமணிச்சரங்கள் போல தோன்றும்படிக்கும், நான்கு மூலைகளிலும் விதம் விதமான மத்தாப்பு பிரகாசிக்கும்படிக்கும், மத்தியிலுள்ள நீராழி மண்டபத்தில் தீபாலங்காரங்கள் செய்தும், குளத்தைச் சுற்றியும் உச்சவமூர்த்திகளை திருவாபரணங்களாலும், புஷ்பங்களாலும் அலங்கரித்தெழுந்தருளப்பண்ணியும், அப்பொழுது குளத்தின் வடபுறத்தில் நானாவித பாணவேடிக்கைகளைச் செய்தும், பட்டணத்து ஜனங்களெல்லாருங் கண்டு மகிழ்ந்து வெகு நாளைக்கு முன் நடந்த இத்திருக்குள தீபாலங்காரக்காட்சியைக் கண்டு நேத்திரானந்த மடையவும் செய்துக்களித்தனர். திருக்குள தீபாலங்காரமும் அதன் கீழ்புறமுள்ள மகம்மதியர் பள்ளிவாசல், சின்னமட முதலிய மாடங்களின் தீபாலங்காரமும் கோடி சூரியப்பிரகாசமாய் விளங்கின. இந்த வைபவத்தை இரண்டாயிரம் நாவைப்படைத்த ஆதிசேஷனே வர்ணிக்க வேண்டும். திருக்குள தீபங்களும், ஏரிமத்தியிலுள்ள மூன்றடுக்கு உப்பரிகைகளுடன் கூடிய சஜ்ஜை என்னுமிடத்தில் பொருத்திய தீபங்களும் கோபுரங்களில் பொருத்திய தீபங்களும் சுமார் 5000 – 6000 தீபங்களிருக்கலாம். லக்ஷதீபாலங்கார மென்றே சொன்னாலுந்தகும். ஜமீன் கிராமம் ஒவ்வொன்றிலிருந்தும் இரண்டு நமபக்குக் குறையாமல் தீபாலங்காரங்கட்கு கிராம அதிகாரிகள், தங்கட்கு இராஜங்கத்தாதிடம் இருக்கும் அன்புக்கறிகுறியாக எண்ணெய் சப்ளை செய்தார்கள்.

வெகு காலமாய் ஈசுவர கைங்கரியத்தைச் சிறப்பாய்ச் செய்யக் காலத்தை ப்ரதீக்ஷித்துக்கொண்டிருந்த நமது ஜமீன்தார் அவர்களாகிய மகா ராஜ ராஜ ஸ்ரீ பிரசன்ன வேங்கடாச ரெட்டியார் துரையவர்கள் தேவஸ்தான தர்ம பரிபாலனத்வம் கிடைத்த மகிழ்ச்சியால், தமது பிரதிநிதியாகிய மகா ராஜ ராஜ ஸ்ரீ அண்ணாமலை பிள்ளையர்களைக் கொண்டு, நமது சக்கிரவர்த்தியாரின் மகுடாபிஷேக வைபவமாகிய மகோத்சவத்தை எல்லோரும் வியந்து கொண்டாடும்படியாக நடத்தினார்கள். இந்த வைபவதினத்தன்று திருக்குளத்தில் தெபோத்சவமே நடத்தியிருக்கலாம். வருண பகுவான் திருக்குளத்தை இந்த வருஷம் நிறப்பாதபடி மோசஞ்செய்தமையால் அவ்வுச்சவம் நடப்பதிற்கில்லாமல் போயிற்று என்ற மனக்குறையும் நமது பிள்ளையவர்களுக்குண்டு.

மேற்கூறிய திருக்குளத்தைப் போலச் சிறந்த வேலைப்பாடுள்ளதாயும். கண்களுக்கு ஓர் காட்சியாயும் உள்ளது எங்கும் கிடையாது. அதைப்போல சிறந்த தடாகத்தை அமைக்க இனியாவராலும் சாத்தியமில்லை. சுமார் 300 வருஷங்கட்கு முன் இந்த ஜமீன் வம்சஸ்ர்களில் ஒருவறான லிங்காரெட்டியார் துரையவர்களால் இந்த புண்ணிய காரியம் செய்து முடிக்கப்பட்டது.

அவருடைய சரித்திரத்தை மிகவும் உருக்கமான நடையில் எழுதப்பட்டிருப்பதை இந்த சஞ்சிகையில் ’தீர்த்தபுரி ’ என்ற விஷயத்தில் காணலாம். இப்போழுது திருக்குளத்தைச் சுற்றிலும் உள்ள கருங்கல் தளவரிசை மேடுபள்ளமாகி முன்னும் பின்னுமாயிருக்கிறது. கொஞ்சகாலத்தில் அதைக் கவனித்துப் பாராவிடில், மிக்க கேவலஸ்திதிக்கு வந்துவிடும். அப்படிப்பட்ட அர்த்தசை அதற்குவராமலிருக்க நமது யூனியன் சேர்மன் (அக்கிராஸனாதிபதி) அவர்களாகிய மகா ராஜ ராஜ ஸ்ரீ S .அண்ணாமலைப்பிள்ளை அவர்கள் முயன்றாரோயானால் அது சீர்ப்படுவது மல்லாமல், நமது பிள்ளையவர்கட்கு அழியாத கீர்த்தியானது இப்பூமியுள்ளவரையும் ஓங்கி நிலைபெற்றிருக்கு மென்பதில் யாதொரு ஆக்ஷேபனையுமில்லை. முன் இக்குளத்தை வெட்டியவரும் இந்த ஊர் அரசரின் அமைச்சர்தான். இப்பொழுது அதைநல்ல ஸ்திதிக்குகொண்டு வருபவரும் தற்காலத்திய் அமைச்சரென்றே எண்ணுகிறோம். இத்தகைய பொது நன்மையைக் கருதிய கனவான் இப்பொழுது இங்கு வசிப்பதே நமது பாக்கியம். இவரிருப்பதால் ஜமீனுக்கும் க்ஷேமக்ரந்தான். தேவஸ்தான காரியங்களும் ஜமீன் காரியங்களும் ஒழுங்காய் நடந்துவரும் என்பதற்கையமில்லை. ஆனால் ஜமீன்தார் அவர்கள் அவர் எல்லாக்காரியங்களையும் சுயேச்சையாய் இன்னும் விட்டபாடில்லையாம். எவ்விதமெனின்; பெருங்காடுகளை அழித்து சுத்தமாக்க நினைக்கும் ஒருவனை கைகால் ஓடவிடாமல் செய்து வருவதென்னமோ, அன்னணமே, பிள்ளையவர்களின் நிலையிலிருந்து வருகிறது. கீழ் உத்தியோகஸ்தர்களின் வேலைகளையும் மற்றுமுள்ள ஜமீன் காரியங்களையும் செவ்வனே அறிந்து நடத்தத்திறமையுடன் கூடிய லேட் ஏஜெண்டு பாண்டமங்கலம் இராமசுவாமி அய்யங்கார் அவர்களும் இவ்வாறு தானே அவதிப்பட்டு தன் பாஜா நடவாமல் மனங்கசிந்து சென்றனர். பரிசுத்த மனதையுடைய நமது பிள்ளையவர்களைப் போன்ற பெருந்தகையோர் கிடைப்பது துர்லபம். இந்த விஷயம் இங்கெடுத்துக் கூறியதின் கருத்து யாதெனில், அருமை வேலைப்பாடுள்ள திருக்குளம் சீர்ப்படுவதற்காகவும் நமது ஜமீன் கௌரவமுற்று சிறப்பாய் இருப்பதற்காக வுந்தான். சிறந்த திருக்குளம் நல்ல ஸ்திதியிலிருந்தால் மேற்கூறிய வைபவக்காட்சி நமக்கு எந்நாளும் கொடுத்துக்கொண்டே யிருக்குமல்லவா? இப்பொழுது நாம் நேத்திரோச்சவமாய்ப் பார்த்துகளித்தது நமது இந்திய சக்கிரவர்த்தியார் 7-வது எட்வர்டு அவர்களலல்லவா? அவர் நீடூழி வாழ்வாராக. தர்மந்தழைக்க இராஜ்யமாளுவாராக:
சுபம்: சுபம்:

தொகுத்து எழுதியவர் : 

ராமச்சந்திர வைத்தியநாத்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *