வரலாற்றுப் புதையல் - 3 :- "தூக்குமேடைக்கும் அஞ்சாத தேசபக்தி - கய்யூர் தோழர்களுடன் பி.ஸி.ஜோஷி" கட்டுரை - ராமச்சந்திர வைத்தியநாத் | www.bookday.in

வரலாற்றுப் புதையல் – 3 :- “தூக்குமேடைக்கும் அஞ்சாத தேசபக்தி – கய்யூர் தோழர்களுடன் பி.ஸி.ஜோஷி” கட்டுரை – ராமச்சந்திர வைத்தியநாத்

வரலாற்றுப் புதையல் – 3

சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும்  பல்வேறு பத்திரிகைகளில், அரசு அறிக்கைகளில் வந்த படைப்புகளையும்  செய்திகளையும்  அச்சுப் பிசகாது அறிந்திடும் முயற்சியே இது.  அன்றைய உரைநடையை, இலக்கியப் போக்கினை, வரலாற்றை, செயல்முறையை   அறிந்திடும் முயற்சிகளில் ஒன்றாகக்கூட இதை கொள்ள முடியும்.

கய்யூர் விவசாயிகளின் எழுச்சியில் தண்டிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தளிர்களை தூக்குமேடையேறுமுன் சந்தித்த அனுபவத்தை அன்றைய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பி.ஸி.ஜோஷி விவரணம் செய்த இக்கட்டுரை  ஜனசக்தி 14.04.1943 இதழில் வெளியானது,

தூக்குமேடைக்கும் அஞ்சாத தேசபக்தி
கய்யூர் தோழர்களுடன் பி.ஸி.ஜோஷி

கண்ணனூர் சிறைக்கூடம்.  மறுநாள் விடிந்தால் மறையப்போகும் நாலு தியாகிகள்.  வாழைக் குருத்துப் போன்ற வாலிப மணிகள்.  தேச பக்திச் சுடர்கள்.  கம்யூனிஸ்ட் தளிர்கள்.  அவர்களின் முன்னே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்காரியதரிசி தோழர் பி.ஸி.ஜோஷி, மயிர்க்கூச்செறியும் காட்சி.  அவர்களது வீர மொழிகள் எங்கும் எதிரொலிக்கின்றன.  இந்தக் காட்சியைத் தோழர் ஜோஷி வர்ணித்திருக்கிறார்.  அதன் சுருக்கத்தைக் கீழே தருகின்றோம்.

நான்கு கம்யூனிஸ்ட் இளந்தளிர்கள், கிஸான் மணிகள் மறைந்துவிட்டன.  காங்கிரஸிலே பிறந்து கிஸான் இயக்கத்திலே வளர்ந்து சுதந்திரப் போராட்ட  ராணுவமான கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தனர் இவர்கள்.  இருபத்து ஐந்து வயதுகூட நிரம்பப் பெறாத இளைஞர்கள்.  ‘இமயம் முதல் குமரி வரையில் கைய்யூர் தோழர்களைத் தூக்கிடவேண்டாம்’ என்று கிளர்ச்சி பொங்கியது.  எழுகடல் கடந்து இங்கிலாந்து தேசத்திலே பிரிட்டிஸ் பொதுமக்களின் தலைசிறந்த புதல்வர்களான பிரிட்டிஸ் தொழிலாளிகள் தங்கள் பிரிட்டிஸ் கம்யூனிஸ்ட் கட்சி மூலம் சர்வ முயற்சிகளும் செய்தார்கள், பயனில்லை.

முகத்தில் வீரம் ஜொலித்தது

தூக்குமேடை யேறுமுன் அந்த வாலிபத் தியாகிகளைக் காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.  அந்த கௌரவத்திற்கு நான் அருகனானேன்.  கேரள கம்யூனிஸ்ட் மகாநாடு  முடிந்தபின் கண்ணனூர் சிறைக்கு அவர்களைக் காணச் சென்றேன்.  உள்ளே சிறைக்கூடத்தில் அந்த நான்கு தோழர்களும் நின்றிருந்தனர்.  எங்களைக் கண்டவுடன் முஷ்டியை உயர்த்தி லால் சலாம் செய்தனர்.  இளமையின் மெருகு ஒரு வருட சிறைவாசத்தால் மங்கியிருந்தது.  முகத்திலே வீரம் துடித்து, நம்பிக்கை ஒளி படர்ந்திருந்தது.

என் கண்களிலே நீர்மணிகள் துடித்தன.  கண்ணில் நீர்கொட்டியிராவிடில் தொண்டை அடைத்துப் போயிருக்கும்.  வாய் திறந்து ஆங்கிலத்திலே பேசினேன்.  தோழர் கிருஷ்ண பிள்ளை மலையாளத்திலே எடுத்துக் கூறினார்.  நான் சொன்னவற்றின் சாரம் இதுதான்.

“மற்ற எந்த அங்கத்தினரைக் காட்டிலும் உங்களைப் பற்றி  நம் கட்சி பெருமை கொள்கிறது.  நாங்கள் நூற்றுக்கணக்கிலே  இருந்தபோது நமது அணிக்குள் நீங்கள் வந்தீர்கள்.  இன்னோ நமது கட்சியில் 9,000 மெம்பர்களும், 8,000 அனுதாபிகளும் உள்ளனர்.  இந்தப் பதினேழாயிரம் பேரும் நீங்கள் மதிப்புடன் தாங்கி நின்ற கொடியைத் தாழாது தவிழாது பிடித்து நின்று அதன் நிழலில் நீங்கள் தீரத்துடன் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தச் சபதம் ஏற்கின்றோம்.”

‘கம்யூனிஸ்டுக்கு இதினும் சிறந்த முடிவில்லை’ 

“நீங்கள் என்றும் அழியாத ஒரு லட்சியத்திற்காக – நமது தேசத்திற்கும் உலகத்திற்கும் சுதந்திரமும் சுபிட்சமும் வேண்டுமென்பதற்காக உயிர் துறக்கின்றீர்கள்.  நமது லட்சியம் நியாயமானது.  ஆகவே, நிச்சயமாக ஜெயம் பெறும்.  அதன் வெற்றிக்காகத்தான் உங்கள் இன்னுயிரை அர்ப்பணம் செய்கின்றீர்கள்.  நீங்கள் மரணமடையவில்லை.  உங்கள் சிந்தனைக்கனவை நிறைவேற்றுகின்றீர்கள்“.

“ஆருயிர்த் தோழர்களான உங்கள் நால்வரின் பிரிவு கட்சிக்கு மகத்தான நஷ்டம்.  ஆனால் உங்களைப் போன்ற தோழர்களின் சேவையும் உதாரணமும்தான் நமது கட்சியை முன்னிருந்த நிலைமையிலிருந்து, இன்றுள்ள கட்டத்திற்கு வளர்த்து வந்திருக்கின்றது.  நீங்கள் கட்சியில் சேர்ந்த காலத்தில் மலபாரிலே நமது கட்சி ஒரு சில இளம் தேசபக்தர்களின் கட்சியாக இருந்தது.  இப்போதோ கேரள மாகாணத்தின் தலைசிறந்த ராஜீய ஸ்தாபனமாகத் திகழ்கின்றது.  தேசம் பூராவிலும் பொதுமக்களின் அரும் புதல்வர்கள் நமது கட்சியிலே சேர்ந்து வருகின்றனர்.  நமது கட்சி எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் உங்கள் நாமம் அன்புடனும் மரியாதையுடனும் ஸ்மரிக்கப்படுகின்றது.  உங்களைப் போன்ற இளந் தியாகிகளுடைய நமது கட்சியில் சேருவதை மகத்தான கவுரமாக யுவர் யுவதிகள் கருதுகின்றார்கள்.  கட்சி நஷ்டமடையவில்லை – தியாகிகளின் வரிசையில் நீங்கள் நான்கு பேரும் சேருகின்றீர்கள். “

“உங்கள் நால்வரை அவர்கள் தூக்கு மேடைக்கு அனுப்பட்டும் – அதை இன்று நம்மால் தவிர்க்க முடியவில்லை.  ஆனால் உங்கள் ஜீவித மாண்பால் உத்வேகமடைந்து நாநூறு பேர் – நாலாயிரம் பேர் . . . . .  நமது கட்சியின் அணியிலே புதிது புதிதாகச் சேர வருவர்.  அதை அவர்களால் தடுக்க முடியாது.  இந்த வழியிலே நாம் சேவை செய்வோம்.  வெற்றி நிச்சயம் என்று உறுதி கூறுகிறோம்.  நமது கட்சியும் சிரஞ்சீவியானது: அதனை அடையும் ஆயுதமான நமது கட்சியும் சிரஞ்சீவியானது.  அடக்குமுறையால் நம் சக்தியை உடைக்க முடியவில்லை; நமது பலம் அதிகரித்தே வந்தது.  உங்கள் உயிர்த் தியாகம் நமது கட்சிக்கு மங்காத புகழை மாத்திரம் அளிக்கவில்லை; பலத்தையும் கொடுத்திருக்கிறது.  ஒரு கம்யூனிஸ்ட் விரும்பும் இதைவிடச் சிறந்த முடிவு வேறில்லை. “

“உங்கள் பிரிவு உங்கள் குடும்பங்களுக்குத் தீரா கஷ்டம்.  கட்சியில் சேர்ந்த அந்நாளே நீங்கள் பொதுமக்களை உங்கள் பெற்றோராகக் கருதினீர்கள்.  உங்கள் பெற்றோரைப் போலவே எந்த இந்தியத் தகப்பனோ, தாயோ துன்பப்படுவதைக் காணக்கூடாது என்று சேவை செய்யக் கிளம்பினீர்கள்.  தோழர்களே! நாங்கள் பதினேழயிரம் பேர் எங்கள் குடும்பம் போல உங்கள் குடும்பத்தைப் பாதுகாப்பது உறுதி.  உங்கள் பெற்றோர் நமது கட்சியைத் தங்கள் குடும்பமாகக் கருதவும் ஒவ்வொரு கட்சி மெம்பரையும் தம் புதல்வனாக் கருதவும் எல்லாம் புரிவோம். “

“உங்களைக் கண்டு பேசி அளவளாவச் சந்தர்ப்பம் கிடைத்ததே என் வாழ்க்கையில் மகத்தான சுதினம்.  நான் நீங்கள் உயிரினும் மேலாய் மதிக்கும் கட்சியின் வாழ்த்துக்களை தாங்கி வந்திருக்கிறேன்.  நான் உங்கள் கிராமத்திற்குப் போவேன்; உங்கள் குடும்பங்களைப் பார்ப்பேன் அவர்களுக்குச் செய்தி ஏதுமுண்டா?” என்று கேட்டேன்.

இக்கவுரம் கிடைக்குமென்று கனவும் காணவில்லை

“அவர்களுக்குத் தைரியமூட்டுங்கள்.  கவலைப்பட வேண்டாமென்று கூறுங்கள்“. என்று நால்வரும் ஏகக் குரலில் கூறினர்.

“நீங்கள் கூறிய மொழிகள் எங்கள் உள்ளமெல்லாம் நிரம்பிவிட்டன“ என்றார் ஒரு தோழர்.

அனுமதிக்கப்பட்ட நேரத்தில்ஒரு வினாடிகூட வீணாக்கத் தோழர்கள் விரும்பவில்லை.

தோழர் குஞ்சம்பு கூறினார் “நான் இதுவரை மக்களுக்கு சேவை செய்ததெல்லாம் கட்சிதான் செய்யவைத்தது.  நான் எனது கடமையைச் செய்துவிட்டேன் என்று கட்சி எண்ணுமானால் அதுவே எனது பேராவல்“.

தோழர் அப்பு கூறினார் “நமது கட்சியின் பலம் வளர்ந்து வருகின்றதென்ற மகத்தான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.  இந்தக் கூடிய சக்தியுடன் நாங்கள் தூக்குமேடை யேறுவோம்.  நமது தேசத்தின் விடுதலைக்காகப் போராடி உயிர்துறக்கவே நம் கட்சியில் சேர்ந்தோம்“.

தோழர் சிறுகண்டன் சொன்னார் “நாங்கள் நாலுபேர் கிஸான் புதல்வர்கள்.  இந்தியாவின் கோடிக்கணக்கான மக்கள் கிஸான்கள்தான்.  எங்களைத் தூக்கிலிடலாம்; ஆனால் அவர்களை அழிக்க முடியாது.  இந்த எண்ணந்தான் எப்போதும் எங்களுக்கு ஊக்கமூட்டி வந்தது.  தேசத்தின் பல பாகங்களிலிருந்தும் வந்து குவிந்திருக்கும் கடிதங்களைக் காணும்போது இன்னும் ஜீவித்திருந்து கிஸான் பெருமக்களுக்கு சேவை செய்ய முடியவில்லையே என்ற துக்கம் மேலிடுகின்றது.  எங்களுக்கு வேறு வருத்தம் ஏதுமில்லை.  எங்கள் ஜீவிதம் மீண்டும் நிற்குமானால் இன்னும் அதிகமாக மேலும் மேலும் நமது லட்சியத்திற்காக உயர்விட முடியும்“.

தோழர் அபூபக்கர் கடைசி அறையில் இருந்தார்.  “நமது தியாகிகளின் வாழ்விலிருந்து பல படிப்பினைகளை உணர்ந்திருக்கிறோம்.  தியாகிகளின் ஒன்றாக உயிரை அர்ப்பணம் செய்யும் கவுரம்“ எங்களுக்குக் கிடைக்குமென்று சொப்பனத்திலே கூட நினைக்கவில்லை.  நாங்கள் தீரத்துடன் தூக்குமேடை யேறுவோம் என்று தோழர்களுக்குச் சொல்லுங்கள்.  என் தாய் ரொம்ப வயதானவன்.  அவளை உற்சாகப்படுத்துங்கள்.  எனது சகோதரர்கள் இளஞ்சிறுவர்கள்.  கட்சி வேலைக்காக அவர்களுக்குப் பயிற்சி கொடுங்கள்.  நான்தான் குடும்பத்திலே தலைச்சன், அவர்களைப் பராமரிக்க வேறு யாருமில்லை“ என்று அவர் கூறினார்.

மனித ஜாதியின் அழியா மலர்கள்

நேரமாயிற்று.  அவர்களுடன் கைகுலுக்க அனுமதி கேட்டேன். கிடைத்து.  அவர்கள் அருகிலே சென்று அவர்களது இளங்கரங்களைப் பிடிப்பதில் மின்சாரம் பாய்ச்சியது போன்ற உணர்ச்சி.  அவர்கள் செந்தொண்டர்கள்.  கைகுலுக்கியவுடன் முஷ்டியை உயர்த்தி ‘லால் சலாம்’ செய்தனர்.

அப்பு என் கைகளை விடாமல் சிறிது நேரம் பற்றி நின்றான்.  “காம்ரேட் ……. அதற்கு மேல் அவர் வாய் பேசவில்லை.  அவரது கண்களிலே நீர்மணிகள் துடித்தன.  திரும்பி நோக்கினேன்.  அங்கே ஒரு மலர் மேடை.  என் உள்ளம் விம்மியது.  “அந்தப் பூக்கள் அழிந்துவிடும்.  ஆனால் சகாக்களே! நீங்கள் மனித ஜாதியின் மணி மலர்கள்.  உங்களுக்கு அழிவில்லை“ என்றேன் நான்.  தோழர் பிள்ளை அதை மொழிபெயர்த்துக் கூறினார்.  தோழர்  அப்புவின் முகம் மலர்ந்து சிவந்தது.

தோழர் அபூபக்கரிடம் கைகுலுக்கிய பொழுது நான் அவர் கரங்களைப் பற்றி நின்றேன்,  மாப்பிள்ளைகளையும் அவர்களது பழங்கால தீரச் செயல்களையும் எண்ணினேன்.  அவர்கள் நால்வரில் ஒரு தியாகியை நமக்கு அளித்திருந்தார்கள்.  நமது முஸ்லீம் தேசபக்தர்களின் உண்மையான ஆர்வத்தை யார் சந்தேகிக்க முடியும்.  ‘லால் சலாம் ‘ என்று கூறினார் அவர்.  அவரது செதுக்கிவைத்தாற்போலிருந்த இளம் முகத்திலே ஒளிக்கண்களிலே தேசபக்திச் சுடர் சிந்தியது.

மீண்டும் உயர்ந்தன முஷ்டிகள்.  லால் சலாம்.  இத்தகைய தோழர்களைப் பெற்ற பேற்றினால் ஏற்பட்ட பெருமை என்னுள்ளத்திலே பொங்கியது.

தியாகிகள் எனக்கு தைரிய மூட்டினர்

இதுவரைக்கும் பேசாமிலிருந்த தோழர் சுந்தரய்யா கூறினார்.  “நீங்கள் அவர்களுக்கு தைரியமூட்டுவதாக வந்தீர்கள்.  ஆனால் பதிலாக அவர்கள் உங்களுக்கு தைரியமூட்டிவிட்டார்கள். “

“அவர்கள் நமது தியாகிகள், அவர்களுக்கு தைரியமூட்டவேண்டியதில்லை.  நான் பின்னால் விடப்பட்டிருக்கும் அவர்களது தோழன்.  எனக்குத் தைரியம் தேவை.  அது எனக்கு கிடைத்து விட்டது“ என்று பதில் கூறினேன்.

29ந்தேதி காலை நால்வரும் தூக்கிலிடப்பட்டனர்.  முந்தின இரவிலே புரட்சி கீதங்களிலே லயித்திருந்தனர்.  ‘கம்யூனிஸ்ட் பார்ட்டி ஜிந்தபாத் ‘ என்று கோஷமிட்டனர்.  அந்த இரவிலே கண்ணனூர் மத்தியச் சிறையிலே கண்ணிமைக்கவில்லை எவரும்.  காலையிலே மூவாயிரம் பொது மக்கள் இவர்களது வீர உடலைத் தர வேண்டினர்.  அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

கேரள கிஸான்கள் இவர்களைப் போன்ற சிரஞ்சீவித்துவம் பெற்ற தியாகிகளை சிருஷ்டித்திருக்கின்றனர்.  புன் சிரிப்புடன் சாவைத் தழுவும் தியாகிகளை நமது கட்சி பேணி வளர்த்திருக்கிறது.  உயிர் நீத்த தியாகிகளின் வீர ரத்தத்திலே நம் செங்கொடியை நனைப்போம்.

எழுதியவர் : 

ராமச்சந்திர வைத்தியநாத்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் - ரூ. 10,000 பரிசு புத்தகங்கள் வெல்வோம்..

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *