வரலாற்றுப் புதையல் - 5:- பி.ராமமூர்த்தி எழுதிய "முதலாளித்துவம் பாஸிஸமாக மாறுவதெப்படி?" கட்டுரை - ராமச்சந்திர வைத்தியநாத் | www.bookday.in

வரலாற்றுப் புதையல் – 5:- பி.ராமமூர்த்தி எழுதிய “முதலாளித்துவம் பாஸிஸமாக மாறுவதெப்படி?” கட்டுரை – ராமச்சந்திர வைத்தியநாத்

வரலாற்றுப் புதையல் – 5

சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும்  பல்வேறு பத்திரிகைகளில், அரசு அறிக்கைகளில் வந்த படைப்புகளையும்  செய்திகளையும்  அச்சுப் பிசகாது அறிந்திடும் முயற்சியே இது.  அன்றைய உரைநடையை, இலக்கியப் போக்கினை, வரலாற்றை, செயல்முறையை   அறிந்திடும் முயற்சிகளில் ஒன்றாகக்கூட இதைக் கொள்ள முடியும்.

காங்கிரஸ் சோஷியலிஸ்ட் கட்சியின் சித்தாந்தந்தத்தை எடுத்துச் சொல்லும் சோஷியலிஸ்ட் வாரப் பத்திரிகையாக ப.ஜீவானந்தன் அவர்களை ஆசிரியராகவும் பதிப்பாளராகவும் கொண்டு திருவல்லிக்கேணி போஸ்டாபிஸிற்கு சமீபத்தில்  எண் 270ல் ஆர். பாலன் அவர்களால் ஜேஸு பிரஸ்ஸில் அச்சிட்டு வெளியிடப்பட்டு வந்த ஜனசக்தி 30.04.1938 மற்றும் 07.05.1938 இதழ்களில் வெளியானது இக்கட்டுரை.  சாதாரணமாக அரசியல் பொருளாதார கட்டுரைகள் என்பது இரும்புக் கடலையை கடித்து மெல்வதுபோல் அமைந்திருக்க வேண்டும் என்ற வரையறை செய்யப்பட்டு இன்று வரை எழுதப்பட்டு வருகிறது.  ஆயின் கிட்டத்தட்ட  90 ஆண்டுகளுக்கு முன்னர் சாதாரண வாசகனும் புரிந்து கொள்ளும் விதமாக  கிட்டத்தட்ட மணிப்பிரவாள நடையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது ஆச்சரியத்தை அளிக்கிறது.  அரசியலையும் பொருளாதாரத்தையும் சகல பகுதியினரிடத்திலும் அறியத்தக்க விதத்தில் எடுத்துச் செல்கையில்தான் ஸ்தாபனத்தை வலுப்படுத்த முடியும் என்ற அவர்களின் நோக்கத்தினை உணர முடிகிறது.

முதலாளித்துவம் பாஸிஸமாக மாறுவதெப்படி?

பி.ராமமூர்த்தி

பாஸிஸம் என்பது எங்கிருந்தோ திடீரென்று முளைத்ததல்ல,  முதலாளித்துவத்தின் மூப்புக் காலத்தில்,  சமூகச் சக்திகளின் நிலைமையை அநுசரித்து, சில சந்தர்ப்பங்களில், ‘பாஸிஸம்’ என்கிற உருவத்தை முதலாளித்துவம் தாரணம் செய்து கொள்ளுகிறது.  ஆகையால், பாஸிஸத்திற்கு மூலாதாரமாயிருக்கும் பொருளாதார தத்துவத்தை அறியவேண்டுமாயின், முதலாளித்துவத்திற்கு அஸ்திவாரமாயுள்ள பொருளாதார அமைப்பையும், முதலாளித்துவம் சரித்திர பூர்வமாகப் பெற்றிருக்கும் வளர்ச்சியையும் நன்கு அறிதல் வேண்டும்.

முதலாளித்துவத்தின் ஆதாரம் – லாபம்

தனி உடைமை, அதாவது பொருள்களை உற்பத்தி செய்யக்கூடிய நிலம், தொழிற்சாலைகள், கனிகள் முதலிய சாதனங்களெல்லாம், தனி மனிதர்களின் ஆதீனத்திற்குட்பட்ட சொத்தாய் இருப்பது, தான் முதலாளித்துவத்தின் மூலாதாரமான பொருளாதார அமைப்பு.  இந்த முதலாளித்துவ சமூகத்தில், பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதன்  நோக்கம், தனி மனிதர்களின், – பொருள் உற்பத்தி சாதனங்களின் சொந்தக்காரர்களின் – லாபத்தைத் தவிற வேறில்லை.  இதனால் லாபத்திற்காகவே பொருள்களை உற்பத்தி செய்யும் இந்த சமூகத்தில், முதலாளிகளுக்குள்ளே போட்டி ஏற்படுவது மிகவும் சகஜமாயிருக்கிறது.  இந்தப் போட்டி நாளா வட்டத்தில், ஏகபோக்கிய உரிமையாகவும் மாறுகிறது.  இந்த ஏக போக்கிய உரிமைக்கும், போட்டிக்கும் இருக்கும் முரண்பாடு, முதலாளித்துவ சமூகத்திலுள்ள ஒரு விசேஷ குணம்.

போட்டியினால்  நெருக்கடி

முதலாளிகளக்குள்ளே யுள்ள போட்டியினால், அவர்களுக்குக் கிடைக்கும் லாபமும் குறைந்து கொண்டே போகிறது.  மேலும் இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்காக, பொருள்களை உற்பத்தி செய்ய ஏற்படும் சிலவைக் குறைப்பதற்காக எல்லா முயற்சியும் செய்யப்படுகின்றன.  அதனால், தொழிலாளிகளுக்குக் கொடுக்கப்படும் கூலி குறைக்கப்படுகின்றது.  இவ்வாறு தொழிலாளிகளுக்குக் கிடைக்கும் வருவாயில் துண்டு விழுமேயானால், தொழிலாளிகளுக்கிருக்கும் பொருள்களை வாங்கும் சக்தி குறைந்து விடுகிறது.  அதனால், முதலாளிகள், தங்கள் சாமான்களை விற்றுப் பணமாக்கும் சந்தை, நாளுக்கு நாள்  சுருங்கிக் கொண்டே போகின்றது.  இதனால்தான், சிலகாலம் வரை வியாபாரம் செழித்தோங்கிய பிறகு, பெரிய வியாபார மந்தம் ஏற்பட்டு, உற்பத்தியான பொருள்கள் கேட்பாரற்று சந்தையில் குவிந்து கிடக்கின்றன.  இப்படிப்பட்ட நெருக்கடியான சமயத்தில்,  முதலாளித்துவம், வேறு மார்க்கத்தைத் தேடுகின்றது.

இங்கிலாந்தின் ஏகபோக்யம்

19வது நுற்றாண்டின் முற்பகுதியில், முதலாளித்துவத்தின் இளமைக்காலத்தில், இங்கிலாந்திற்கு உலகம் பூராவும் பரவியுள்ள ஸாம்ராஜ்யம் இருந்தது.  ஆகவே, இங்கிலாந்து, தனது இயந்திர வளர்ச்சியால் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்பனை செய்வதற்கு, ஏக போக்கிய உரிமையை அநுபவித்து வந்தது.  முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்த, நிலச்சுவான்தார்களின் ஆதிக்கமும், அதிகாரமும், தகர்த்தெறியப்பட்டன.

வல்லரசுகள் தோன்றுதல்

ஆனால், இங்கிலாந்து அநுபவித்து வந்த இந்த ஏகபோக்கிய உரிமை நீடித்து நிற்கவில்லை.  நாளாவட்டத்தில், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான், முதலிய நாடுகளும், இங்கிலாந்துடன் போட்டி போட ஆரம்பித்தன.  இந்த நாடுகளுக்குள்ளே ஏற்பட்ட இந்த வியாபாரப் போட்டி, அரசியல் துறையிலும் பிரதிபிம்பித்தது.  மேலும், இந்த முதலாளித்துவ தேசங்களில் உள்ள முதலாளிகளுக்குள்ளேயே ஏற்பட்ட போட்டியின் காரணமாக, சிறிய சிறிய முதலாளிகள், ஒடுக்கப்பட்டனர்.  இதனால், பெரிய பெரிய கம்பெனிகளும், பாங்கிகளும் தோன்றி, இது வரையில் கண்டிராத பிரம்மாண்டமான தொழிற்சாலைகள் தோன்றின.

பணம் ஏற்றுமதியாகிறது

1875ஆம் ஆண்டிற்குள், உலகம் பூராவும், இந்த முதலாளித்துவம் பரவி விட்டது.  இந்த முதலாளித்துவ நாடுகளின் வியாபாரிகள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் சந்தை இல்லாத தேசம் ஒன்றுகூட உலகில் இல்லை எனலாம்.  இந்தப் போட்டியில், வெற்றி பெறுவதற்காக, ஒருவரை ஒருவர் நசுக்கிவிட வேண்டும் என்ற இந்த முயற்சியில், சில கம்பெனிகள் ஒன்றுக்கொன்று இணைந்து விட்டன.  19வது நூற்றாண்டின் பிற்பகுதியில் முதலாளித்துவம் செழித்தோங்கி நிற்கும்போது,  இங்கிலாந்து, பிரான்ஸ் முதலிய பெரிய முதலாளி தேசங்களில், முதல் ஏராளமாகக் குவிந்து விட்டது.  அந்த முதலை, உள்நாட்டில் புதிய துறைகளில், புதிய வியாபாரத்திலும் தொழிலிலும், போடுவதற்கு வழியில்லாமலும் போய்விட்டது.  அந்த நிலையில், வெளி நாடுகளில் போய் முதலைப் போட்டு,  தொழிற்சாலைகளை ஸ்தாபித்து, வியாபாரத்தை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறது.

ஏகாதிபத்திய யுகம்

இந்த நிலையில் சாமான்களுடன், முதலும், ஏற்றுமதி செய்வதற்காக சந்தைகள் தேடும் முயற்சியில் பிறப்பது ஏகாதிபத்திய யுகம்.  ராஜீயத் துறையில், இயந்திர வளர்ச்சியடையாத விவசாய நாடுகளை அடிமைப்படுத்தி, குடியேற்ற நாடுகளைத் தேடும் முயற்சியாகவும் உலகத்தை முதலாளி தேசங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ளும் முயற்சியாகவும், தோன்றுகிறது ஏகாதிபத்தியம்.

ஏகாதிபத்தியத்தின் குண விசேஷங்கள்

‘ஏகாதிபத்தியத்தின்’ முக்கியமான குணவிசேஷங்கள் என்ன?  முதலாளித்துவத்தின் ஒரு புதிய ரூபம், முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் உச்சாணிப்படியேயாகும் ஏகாதிபத்தியம் எனக் கூறுகிறார் லெனின்.  முதலாளித்துவத்தின் ஜீவாதாரமான சட்டமாகிய போட்டி, நேர்விரோதமாக மாறிவிடுகிறது.   “போட்டி நீங்கி, ஏக போக்கிய உரிமையை முதலாளித்துவம் அநுபவிக்கும் நிலைமையே ஏகாதிபத்தியமாகும்” எனக் கூறுகிறார் லெனின்.  ஏகாதிபத்தியத்தின் முக்கியமான விசேஷங்களை கீழ்க்கண்டவாறு அவர் நிர்ணயிக்கிறார்:-

உலகத்திலுள்ள முதல் ஒரு சிறுகோஷ்டியினரிடமே போய் குவிந்து விடுவதால், பொருளுற்பத்தியில் ஏகபோக்கிய உரிமை ஏற்பட்டு, இந்த உரிமை, உலகப் பொருளாதார வாழ்க்கையில் ஒரு முக்கிய அம்சமாய் விடுகிறது.

பாங்கிகளின் முதலும், தொழிற்சாலைகளின் முதலும் ஒன்றுக்கொன்று இணைந்து, பாங்கிகளின் முதலை ஆதாரமாகக் கொண்டு, ஒரு சில பாங்கர்களின் ஸர்வாதிகாரம் ஏற்பட்டு விடுகிறது.

குடியேற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முதல், மிகவும் முக்கியமான ஸ்தானத்தை பொருளாதார வாழ்கையில் அடைந்து விடுகிறது.
ஸர்வதேச முதலாளிகளுக்குள்ளே ஐக்கியம் ஏற்பட்டு, உலக மார்க்கட்டு, இவர்களுக்குள்ளேயே பங்கிடப்பட்டு, ஸர்வதேச முதலாளிகளின் ஏகபோக உரிமை ஏற்பட்டு விடுகிறது.

உலகத்தை, பெரிய முதலாளி தேசங்கள், தங்களுக்குள்ளே பங்கு போட்டுக்கொள்ளுகின்றன.

முதலாளித்துவம், முற்போக்கு சக்தியாய் இருப்பதிலிருந்து சமூக வளர்ச்சியைத் தடைப்படுத்திப் பிற்போக்கு சக்தியாய் மாறி, பரச்ரம ஜீவியாய் விடுகிறது.

லெனின் கூறியது உண்மைதானா என்பதை கவனிக்கவேண்டும்.  கடந்த 20 வருஷங்களாக உலகத்தில் ஒவ்வொரு பொருளுற்பத்தித்துறையிலும், உற்பத்திசாதனங்கள் ஒரு சிறு கோஷ்டியிடமே போய் குவிந்து ஏகபோக்கிய உரிமை ஏற்பட்டிருப்பது நன்கு விளங்கும்.

பாங்கர்களின் ஆதிக்கம்

பாங்குங்களை எடுத்துக் கொள்வோம், “ 1909 ஆம் வருஷத்தின் இறுதியில், பர்லின் நகரத்திலுள்ள, 9 பெரிய பாங்குகளும், அவைகளுடன் இணைக்கப்பட்ட ஸ்தாபனங்களும், 11,30,000 கோடி மார்க்குகளின் மீது (ஜர்மன் நாணயம்) ஆதிக்கம் செலுத்தி வந்தன.  அதாவது, ஜர்மனியிலுள்ள பாங்க் முதலில், 100க்கு 83, இந்த பாங்குகளின் ஆதிக்கத்திலிருந்தது. “

இந்த பாங்குகள், தொழிற்சாலைகளின் மீது பெரிய ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன.  பாங்கியிலுள்ள பணம் சும்மா பூட்டப்பட்டு வைக்கப்படுவதில்லை.  தொழிற்சாலைகளிலும், வியாபாரத்திலுமே போடப்படுகின்றன.  ஆனால் இந்த பாங்குகளின் மீது, இயந்திர முதலாளிகள்  ஆதிக்கம் செலுத்துகின்றனர்.  அவைகளில், டைரெக்டர்களாக இருக்கின்றனர்.  இயந்திர முதலாளிகள் மேலும், பெரிய பெரிய பாங்குகளில், உள்ள பங்குகளில், பெரும்பான்மை பாகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதன் மூலம், அவைகளில் உள்ள மூலதனத்தின் மீதும், அவைகளில் இணைக்கப்பட்டுள்ள மற்ற ஸ்தாபனங்களுடைய மூலதனத்தின் மீதும், ஆதிக்கம் செலுத்த முடிகிறது.  ஹைமன் என்கிற ஜெர்மன் பொருளாதார நிபுணர் ஓரிடத்தில் கூறுகிறார்:-

“ஒரு டைரெக்டரின் ஆதிக்கத்தில் மூலக்கம்பெனி இருக்கிறது.  இந்த மூலக்கம்பெனியின் ஆதிக்கத்தில், இதன் பிள்ளைக் கம்பெனிகள் இருக்கின்றன.  இந்தப் பிள்ளைக் கம்பெனிகளின் ஆதிக்கத்திலிருக்கின்றன 8 பேரப்பிள்ளை கம்பெனிகள்.  ஒரு டைரக்டர் ஒரு கம்பெனியின் மூலதனத்தில் பாதி அளவிற்கு போடுவாரேயாகில், அந்தக் கம்பெனியின் நிர்வாகம் பூராவும் அவரிடமே வந்து விடுகிறது.  ஆகவே, மூலக்கம்பெனியில் பாதி பங்குகள் வைத்திருப்பதன் மூலம்,  “பேரப்பிள்ளைக் கம்பெனிகளிலும்” ஆதிக்கம் பெற்றுவிட முடிகின்றது.

கம்பெனிகளின் பங்குகளின் மதிப்பைக் குறைத்து, ஜனநாயக முறையை அனுஷ்டிப்பதனால், பெரிய முதலாளிகளின் ஆதிக்கம் குறைந்துவிடும்என்ற ஒரு அபிப்ராயம் உலவி வருகிறது.  ஆனால், இது உண்மைக்கு நேர்விரோதமானது.  ஒரு கம்பெனியில் சுமார் லக்ஷம் ரூபாய் பெறுமான முள்ள பங்குகள் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு பங்குதாரர்முன் ஐந்து ரூபாய் பெறுமானமுள்ள பங்குகளை வைத்துக்கொண்டிருப்பவர்கள் என்ன செய்ய முடியும்?  ஆகவே, இவ்வாறு முதல் குவிந்து போயிருப்பவர்கள், கம்பெனிகளை ஸ்தாபித்தும், பாங்குகளை நிர்வகித்தும், முதலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும், ஏகபோக்ய லாபத்தைக் கறக்கிறார்கள்.

முதல்தரமான முதலாளி தேசங்களாகிய இங்கிலாந்தும் பிரான்ஸும் வெளிநாடுகளில் போட்டிருக்கும் முதல் அடியிற் கண்டவாறு அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது.

வருஷம்இங்கிலாந்துபிரான்ஸு
18623.6
18721510
18822215
18934220
19026227-37
191475-10060

பாங்கு முதல் உலகப் பொருளாதாரத் துறையில் செலுத்தும் ஆதிக்கமும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முதலும், மேற்கூறிய புள்ளி விவரங்களிலிருந்து நன்கு விளங்கும்.  லெனின் கூறிய மற்ற விஷயங்களைப் பற்றி பெரிய ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசியமே இல்லை.  சோவியத் ரஷ்யா நீங்கலாக, உலகத்திலுள்ள மற்ற எல்லா பிரதேசங்களும், இங்கிலாந்து, பிரான்ஸு, இத்தாலி, அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, முதலிய வல்லரசுகளுக்குள் பங்கு போடப்பட்டு விட்டன.  மேலும்,  சீனாவைப் போன்ற தேசங்களில், வல்லரசுகளுக்கு ராஜீய ஆதிக்கம் இல்லாவிடிலும், பொருளாதார ஆதிக்கம் போதிய அளவிற்கு இருந்து வருகிறது.  எனவே, லெனின் எழுதியது, முற்றிலும் உண்மை என்பதைப் பற்றி சந்தேகமேயில்லை.  அடுத்தபடியாக, ஏகாதிபத்தியப் படியை அடைந்த இந்த முதலாளித்துவம், எப்படி பாஸிஸமாக மாறுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

உலக நெருக்கடி

ஏகாதிபத்தியம் அரசியல் துறையில் கையாளும் முறையை கவனிக்க இங்கு இடமில்லை.  ஆனால் ஏகாதிபத்திய நிலைமை அடைந்த பிறகு கூட, முதலாளித்துவத்தின் அடிப்படையான ஆதாரங்களில் யாதெரு மாறுதலும் ஏற்படவில்லை என்பதைக் கண்டோம்.  லாபம்-தனிமனிதர்களின் லாபம்- என்பதையே ஆதாரமாக் கொண்டிருக்கிறது ஏகாதிபத்தியப் பொருளாதார அமைப்பு.  போட்டி, முதலாளித்துவத்தின் கீழ் இருந்ததைக் காட்டிலும், பதின்மடங்கு அதிகரித்து, பெரிய வல்லரசுகளுக்குள்ளே ஏற்படும் போட்டியாக மாறுகிறது.  குடியேற்ற நாடுகளில் உள்ள ஏகபோக உரிமை ஒரு குறிப்பிட்ட  காலம் வரையில் கொள்ளை லாபம் கொடுக்கிறது.  ஆனால், இவ்வாறு ஏற்படும் லாபம், மீண்டும் முதலாக மாறி, குடியேற்ற நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்பட்டு, அந்த நாடுகளிலும் பெரிய பெரிய தொழிற்சாலைகளும், தொழில்களம் தோன்றுகின்றன.  இந்தத் தொழிற்சாலைகள், தாய்நாட்டுத் தொழிற்சாலைகளுடன் போட்டி போடவும் ஆரம்பித்து விடுகின்றன.  ஆகவே, உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கைள விற்பனை செய்வதற்காக மார்க்கட்டுகளைத் தேடிப்பிடிக்கும் முயற்சி  மிகவும் மும்முரமாக நடக்கிறது.  ஆனால் இந்த மார்க்கட்டோ நாளுக்கு நாள் குன்றிக்கொண்டே போகிறது.  இப்படிப்பட்ட நிலைமையில், பெரிய நெருக்கடி ஏற்பட்டு விடுகிறது.  நெருக்கடியைத் தீர்ப்பதற்கு முதலாளித்துவதிடம் ஒரே ஒரு மருந்துதான் உண்டு – யுத்தம்.  முதலாளித்துவத்தில் உலகம் பூராவையும் பாதிக்கக்கூடிய முதல் நெருக்கடியின் விளைவாக ஏற்பட்டது 1914-18வது வருஷத்திய உலகமகாயுத்தம்.

மகாயுத்தம் சாதித்தது என்ன?

உலகமகாயுத்தம், ஒரு நெருக்கடி செய்ய வேண்டிய திருப்பணிகளை யெல்லாம் சரிவரவே செய்தது.  உலகமக்களுக்கு “வேண்டாத “ அநேக பொருள்களை நாசம் செய்தது.  அநேக தொழிற்சாலைகளும், பாங்குகளும், கம்பெனிகளும் ‘திவால் ‘  எடுத்தன.  பூமிக்கு பாரமாயிருக்கும் கோடிக்கணக்கான மக்களை மடித்தது உலகயுத்தம்.  வல்லரசுகள், உலகத்தை புதிய முறையில் பங்கு போட்டுக் கொண்டன.  ஆகவே முதலாளித்தவத்தில் ஏற்பட்ட நெருக்கடி தீர்ந்து மீண்டும் அது தலை தூக்கி வளர்பதற்குச் சந்தர்ப்பம்  அளித்தது இந்த உலக யுத்தம்.  முதலாளித்துவம் எப்பொழுதுமே எதிர்பார்க்காத – கனவிலும் காணாத ஒரு புதிய விளைவும் ஏற்பட்டது.  இந்த மகா யுத்தத்தின் பயனாக, அதுதான் சோவியத் சோஷியலிஸ்டு ரஷ்யா, உலகத்தில் முதல் முதலில் ஏற்பட்ட இந்த சோஷியலிஸ்டு சர்க்காரினால், உலக முதலாளித்துதவமே பாதிக்கப்பட்டு வருகிறது.  இன்று இயந்திய வளர்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள உற்பத்தி முறையில் உற்பத்தி வினியோக முறைகள் தனி மனிதர்கள் கையில் – முதலாளிகள் கையில் – இருந்தால்தான் முடியும் என்பதைப் பொய்யாக்கி, சமூகத்தின் கையிலேயே இவைகளை ஒப்படைக்கலாம் என்பதை சோஷியலிஸ்டு ரஷ்யா முதல் முதலாக நிரூபித்து விட்டது.  இரண்டாவதாக, உலகத்தில் ஆறில் ஒரு பங்காகிய ரஷ்ய பிரதேசம் முதலாளித்துவ மார்க்கட்டைவிட்டு அகன்றுவிட்டது.  மேலும், நாளாக ஆக, முதலாளித்துவ உலகத்தில் ஏற்படும் கொந்தளிப்புகளும், நெருக்கடிகளும், சோஷியலிஸ்டு உலகத்தில் ஏற்படாது என்பதை பகிரங்கமாக காட்டுகிறது சோவியத் ரஷ்யா.

மீண்டும் சுபீட்சம்

உலக மகாயுத்தத்திற்குப் பிறகு சிறிது காலம் வரையில் முதலாளித்துவத்தின் நெருக்கடி தீர்ந்து, அது முன்னேறத்துடங்கியது.  முதலாளித்துவப் பொருளுற்பத்தி நாளுக்க நாள் அதிகரித்துக் கொண்டே போய், வியாபாரமும் செழித்தோங்கியது.  பொருளாதார ‘நிபுணர்கள் ‘ நிரந்தர சுபிக்ஷ்ம் முதலாளித்துவ உலகில் ஏற்பட்டு விட்டதாக ஐம்பமடித்துக் கொண்டனர்.  உலக யுத்தத்திற்குப் பின்னால் ஏற்பட்ட இந்த ‘சுபிட்சத்தின் ‘  காரணமாய், பெரிய முதலாளி தேசங்களின் அரசியல் அமைப்பில்  யாதெரு மாறுதலும் எற்படவில்லை.  ஆனால் இத்தாலியும், ஸ்பெயினும் இதற்கு விதிவிலக்கு.  யுத்தத்தின் விளைவாக இத்தாலியில் பெரிய பொருளாதார மந்தமேற்பட்டது.  அதன் பொருளாதார அமைப்பே கொந்தளித்துச் சாகும் தருவாயில் இருநதது.  ஆனால், இத்தாலியிலுள்ள முதலாளிகளும், பாங்கர்களும் இந்த நெருக்கடியில் ஒன்றுசேர்ந்து ஒத்துழைத்தார்கள்.  வாய்ப் பேச்சில் வல்லனான முஸோலினி, அவர்களுக்கு துணையாய் நின்று, பொது மக்களை ஏமாற்றி, அவர்களுக்குள்ளே பிளவுகளை உண்டுபண்ணினான்.  இதனால், இத்தாலியில் முதலாளித்துவம் நாசமடையாமல், உயிர்வாழ்வது சாத்தியமாயிற்று.  அரசியல் துறையில் ஜனநாயக ஆட்சி முறை தகர்த்தெறியப்பட்டு, பாஸிஸ்டு ஸர்வாதிகாரம்  தோன்றியது.  ஆயினும், இத்தாலி பொருளாதாரத் துறையில் முன்னேற்றமடைய முடியாமல் தவித்துக் கொண்ட  இருந்தது.  ஆனால் 1924-1929 வருஷங்களுக்கு இடையிலுள்ள ஐந்து ஆண்டுகள், உலக முதலாளித்துவத்தின் நன்னாட்களாகவே கருத வேண்டும்.

இந்த வருஷங்களில் அமெரிக்காவின் உற்பத்திகள் 100க்கு  26 விகிதம் அதிகரித்தது.

இங்கிலாந்தின் உற்பத்திகள் 100க்கு 16 விகிதம் அதிகரித்தது.

ஜெர்மனியின் உற்பத்திகள் 100க்கு 42 விகிதம் அதிகரித்தது.

பிரான்ஸின் உற்பத்திகள் 100க்கு 27 விகிதம் அதிகரித்தது.

ஜப்பானின் உற்பத்திகள் 100க்கு 42 விகிதம் அதிகரித்தது.

உலக வியாபாரம் 100க்கு 22 விகிதம் அதிகரித்தது.

முதலாளித்வத்தின் நடுக்கம்

ஒரு எல்லை வரையில், முதலாளித்துவத்தின் கீழ், சமூகத்தின் பொருள் உற்பத்தி முறைகள் – விஞ்ஞான ரீதியான முறைகள்- வளர்ச்சி பெறுகின்றன என்பதை மறுக்க முடியாது.  ஆனால், முதலாளித்வத்திலுள்ள பெரிய கோளாறு இந்த வளர்ச்சியை, சமூகத்தின் நன்மைக்காகப் பயன்படுத்திக் கொள்ள முடிவதில்லை.  அது மாத்திரமல்ல, முதலாளிகளுக்குள்ளும், வல்லரசுகளுக்குள்ளும் ஏற்படும் போட்டியினாலும், இயந்திர வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க, மக்களிடை வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதனால், உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் வாங்குவாரின்றி குவிந்து போவதனாலும், முதலாளித்துவம், உற்பத்தி முறைகளின் வளர்ச்சியைக் கண்டே நடுங்குகின்றது.  இந்த எல்லைக்கு  வந்த உடன், முதலாளித்துவம், சமூக வளர்ச்சியை, – விஞ்ஞான வளர்ச்சியை – தடுக்கும் பிற்போக்கு சக்தியாக மாறிவிடுகிறது.  ஆடோமொபைல் இஞ்சினீயர்கள் சங்கத்தை சேர்ந்த H.C.ஆர்மிடேஜ் என்பவர் ஓரிடத்தில் கூறுகிறார்:-

“அமெரிக்காவில் உபயோகிக்கப்படும், பெரிய இயந்திரங்களை இங்கிலாந்தில் உபயோகித்தால், லாபகரமாயிருக்காது”.  இன்று உலகத்திலுள்ள இயந்திர சக்தி 900 கோடி மனிதர்களின் சக்திக்கொப்பானவை.  அதாவது, உலகிலுள்ள ஒவ்வொரு ஆண்; பெண், குழந்தைகளுக்கும் 5 அடிமைகள் இருப்பதைப் போன்ற சக்தி இன்று மெஷின்களின் சக்தி உலகிலிருப்பதாக, ஸ்டீவர்ட்ட சேஸ், என்பவர், “மெஷீன்களும் மனிதர்களும் “ (MACHINES AND MEN) என்கிற புஸ்தகத்தில் குறிப்பிடுகிறார்.  ஸர். ஜார்ஜ் ரிப்ஸ் என்ற புள்ளி விவரங்களில் தேர்ச்சி பெற்ற பொருளாதார நிபுணர், உலகில் இன்று ஏற்பட்டுள்ள விஞ்ஞான வளர்ச்சியினால், உலகிலுள்ள மக்களைப் போன்று நாலு பங்கு மக்களுக்கு, நன்கு உண்டு, உடுத்து, நாகரீக வாழ்க்கையை நடத்தக்கூடிய சவுகரியங்களை அளிக்கலாம் எனக்கூறுகிறார்.

சுபீட்சத்தில் வறுமை!

உலகத்தில் மக்களுடைய தேவைக்காக, பொருள்களை உற்பத்தி செய்யும் முறைகளும், சக்திகளும், இவ்வளவு தூரம் பன்முறை அதிகரிதிருக்கையில், பொருளாதார நெருக்கடி ஏற்படுவது தான் விந்தை! இன்று முதலாளித்துவ உலகில், மக்களின் தேவைப்பொருக்ள் ஏராளமாக உற்பத்தி செய்யப்பட்டு, சுபீக்ஷத்தின் நடுவே, வறுமையும், இல்லாமையும் தாண்டவமாடுவதுதான் கொடுமையிலும் கொடுமை.  இன்று பெரிய பெரிய மெஷின்களைச் சிறிதும் கவலையின்றி உபயோகிக்கும் நாடு சோவியத் ரஷ்யா ஒன்றுதான்.  இதற்குக் காரணம் என்ன?  முதலாளித்துவ உலகில், உற்பத்தி சக்திகளுக்கும், தனி உடமைக்கும், முரண்பாடு ஏற்பட்டிருக்கிறது.  ஏராளமான பொருள்கள் உற்பத்தி ஆய்விட்டால், சரக்குகள் விற்பனை ஆகாமல், முதலாளிகள்பாடு திண்டாட்டமாய் விடுகிறது.  ஆனால் சோஷியலிஸ்டு பொருளாதார அமைப்பிலோ, எந்தத் தனி மனிதனின் சொந்த லாபத்தையும் ஆதாரமாகக் கொண்டு பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை.  பொருள் உற்பத்தி அதிகமாக அதிகமாக, மக்களின் தேவைகளும் அதிகமாய்க் கொண்டே போகின்றன.  ஆகவே, முதலாளித்துவத்தில் காணும் கோரக்காக்ஷியை சோஷியலிஸத்தின்கீழ் காண முடியாது.  மக்களின் வாழ்க்கைச் சவுகரியங்கள் அதிரிக்க, சமூகத்தின் நாகரீகமும் முன்னேறி வளர்ந்து கொண்டே போகிறது.  இந்த சமூகத்தில், மக்களின் தேவை அதிகரிக்க அதிகரிக்க, பொருள் உற்பத்தி முறைகளும் விஞ்ஞான ரீதியில் முன்னேறிக்கொண்டே  போகுமன்றோ?

மீண்டும் நெருக்கடி

மகா யுத்தத்திற்குப் பிறகு சில வருஷங்கள் வரையில் ஏற்பட்ட சுபீக்ஷம், நெருக்கடியாக மாறிக்கொண்டே வந்தது.  இந்த நெருக்கடி முதல் முதலில் அமெரிக்காவில் ஏற்பட்டது தான் இங்கு முக்கியமாகக் குறிப்பிடத் தக்கதாகும்.  முதலாளித்துவம், உற்பத்தி முறையிலும், வியாபார ஸ்தாபனங்களிலும், உச்சாணி ஸ்தானத்தை அடைந்த அமெரிக்காவில்தான் இந்த நெருக்கடி முதல் முதலாகத் தோன்றியது.  ஆனால், நெருக்கடி தோன்றியவுடன், வெகு சீக்கிரத்திலேயே உலகம் பூராவையும் – முதலாளித்துவ நாடுகளையெல்லாம் – இந்த நெருக்கடி பாதித்து, வாட்டி வதைத்தது.  1929 வருஷத்தில் ஏற்பட்ட இந்த நெருக்கடி இன்னும் தீர்ந்தபாடில்லை.  அநேகமாக இது நிரந்தரமான நெருக்கடியாய் விட்டதாகவே  தோன்றுகிறது.

நெருக்கடி சாசுவதமானதா?  தற்காலிகமானதா?

இந்த நெருக்கடி, முதலாளித்துவத்தின் சாசுவத நெருக்கடி – என்றைக்கும் தீராது, நீடித்திருக்கக்கூடிய நிரந்தர நெருக்கடியாக மாறி விட்டதற்குக் காரணங்கள் என்ன?  பாம் தத்தர் என்ற பேராசிரியர், ‘பாஸிஸமும், சமூகப் புரட்சியும்  ‘ என்ற நூலில், அடியிற்கண்ட காரணங்களைக்  காட்டுகிறார்.

1. இன்று தினம், ஏகாதிபத்திய வல்லரசுகள் உலகம் பூராவையும் தங்கள் ஆதீனத்த்தில் கொண்டு வந்து விட்டன.

2. முதலாளித்துவமானது, ஏகபோக உரிமையை அநுபவிக்கும் ஏகாதிபத்தியமாக மாறிய பிறகு, ஏகாதிபத்திங்களுக்குள், தங்களுக்குள்ளேயும், ஏகாதிபத்தியங் களுக்கும், சோஷியலிஸத்திற்கும், போட்டி வலுத்திருக்கிறது.

3. ஏகாதிபத்தியங்களுக்கு – உலக முதலாளித்துவத்திற்கு – சுரண்டுவதற்கு புதிய புதிய நாடுகளும், பிரதேசங்களும் கிடைப்பதற்கில்லை.   ஆனால், அதற்கு நேர்விரோதமாக, உலகில் ஆறில் ஒரு பங்காகிய, சோவியத் ரஷ்யா, ஏகாதிபத்தியச் சுரண்டலிலிருந்து அறுத்துக் கொண்டு, விடுதலை அடைந்து விட்டது.

4. ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்குட்பட்ட குடியேற்ற நாட்டு மக்கள் ஏகாதிபத்தியச் சுரண்டலை எதிர்த்துக் கிளர்ச்சியும், விடுதலைக்காக விடாமுயற்சியும், பலத்த போராட்டமும் செய்து வருகின்றனர்.

‘சந்தை’ போய் விட்டது

மேற்கூறிய விஷயங்களிலிருந்து, உலகிலுள்ள மார்க்கெட்டுகள் நாளுக்கு நாள் சுருங்கிக்  குறைந்துகொண்டே போய் விடடன என்பது தெளிவாகும்.  புதிய சந்தைகள் – புதிய குடியேற்ற நாடுகள் – கிடைப்பதற்கு வழியில்லை.  உலகிலுள்ள, ஏகபோக்ய முதலாளிகள், தங்கள் முதலை உபயோகிப்பதற்கு  வேண்டிய நவீனத் துறைகள் இல்லாமல் தவிக்கின்றனர்.  ஆகவே , உலக முதலாளித்துவம் இனி வளர முடியாமல், – முன்னேற முடியாமல் – தடைப்பட்டுக்கிடக்கிறது.  ஆகையால்தான், ஒவ்வொரு வல்லரசும் – அந்தந்த நாட்டிலுள்ள முதலாளிகள் அரசாங்கமும் – உலகம் பூராவிலும் தங்களுடைய  ஆதிபத்தியமே நிலையுற வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.  இதனால், ஸர்வதேச வல்லரசுகளுக்குள்ளே ஏற்பட்டிருக்கும் போட்டி, நாளுக்கு நாள் வலுவடைந்துகொண்டே போகிறது.  இது ஒரு புதிய உலக யுத்தத்தில் கொண்டுபோய்விடும் என்பதில் சந்தேகமே இல்லை.  யுத்த நெருக்கடி நாளுக்கு நாள் நெருங்கிக் கொண்டே வருகிறது.

சில புள்ளிகள்

நாம் ஏதோ முதலாளித்துவத்தின் குறைகளை மிகைப்படுத்துவதாக நினைக்க வேண்டாம்.  ஸர்வ தேசச் சங்கத்தின், உலகப் பொருளாதார போர்ட் கூறுவதைக் கேளுங்கள்:-

“இப்பொழுது ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தத்தைப் போன்று எப்பொழுதுமே ஏற்பட்டது கிடையாது.  1860 வருஷத்திலிருந்துள்ள புள்ளி விவரங்களைப் பார்த்தால், மூலப் பொருள் உற்பத்தியிலும், மற்றப் பொருள்களின் உற்பத்தியிலும், இப்பொழுதுள்ள குறைவு, எந்தக் காலத்திலும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.  1932வருஷத்தில் உலகத் தொழிற்சாலைகளில் உற்பத்தியான பொருள்கள், 1913ம் வருஷத்தில் உற்பத்தியானதைவிட, மிகமிகக் குறைந்து விட்டது என்பது உறுதியாகிறது.”

1928 வருஷத்திலிருந்து, 1932 வருஷத்திற்குள், உலகிலுள்ள தொழிற்சாலைகளின் உற்பத்தியாகும் பொருள்கள் 100க்கு 30 விகிதம் குறைந்து விட்டன.

பொருளுற்பத்தி 

ஜெர்மனியில் 100க்கு 45 விகிதம் குறைந்து விட்டது. அமெரிக்காவில் 100க்கு 41 விகிதம் குறைந்து விட்டது.  இங்கிலாந்தில் 100க்கு 22 விகிதம் குறைந்து விட்டது.  பிரான்ஸில் 100க்கு 23 விகிதம் குறைந்து விட்டது.

மெஷின்கள் தயாரித்த பொருள்களின் விலை வாசிகள் மூன்றில் ஒரு பங்கு இறங்கிவிட்டன.  விவசாயப் பொருள்களின் விலை வாசிகளோ, இன்னும் அதிகமாக  விழுந்து விட்டன.  விற்பனையாகாமல் குவிந்து கிடக்கும் விவசாயப் பொருள்கள் இரட்டித்து விட்டன.  1932ம் வருஷத்தில் மாத்திரம் உலகில் 3 கோடி மக்கள் வேலையில்லாமல் தவித்தனர் எனக் கூறுகிறது சர்வதேச லேபர் ஆபீஸ்.  (INTERNATIONAL LABOUR OFFICE). இது மிக மிகக் குறைவான மதிப்பு.  ஏனெனில், இந்தியாவைப் போன்ற அநேக தேசங்களில் வேலையில்லாத மக்களின் புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை,

முதலாளித்துவத்தின் பதில் என்ன? 

இந்த கோரக் காட்சிக்கு முதலாளித்துவம் என்ன பதில் கூறுகிறது?  உலகில் தாண்டவமாடும், இந்தக் கொடுமைகளுக் கெல்லாம், முதலாளித்துவம் என்ன சமாதானம் சொல்லுகிறது?  உற்பத்தி சக்திகளை மாய்த்து விடுவது, மெஷீன்களின் மீது பாய்வது, புதிய முறைகள் கண்டு பிடிப்பதைத் தடுப்பது, விஞ்ஞான வளர்ச்சியைத் தடைப்படுத்துவது, முதலாளித்துவத்தின் ஏகபோக்கிய உரிமையை அதிகரித்து, போட்டி போடுபவர்களையெல்லாம் அழிப்பது, மக்களின் வாழ்க்கைச் சவுகரியங்களக்கு உலைவைப்பது, உலக யுத்தத்திற்காக முஸ்தீப்புகளைச் செய்வது, இவைதான் முதலாளித்துவம் கூறும் பதில்.

அமெரிக்காவில், ரூஸ்வெல்டு சர்க்கார், உணவுப் பொருள்களையும், மற்ற மூல விவசாயப் பொருள்களையும் நாசம் செய்ய புதிய இயக்கம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறது.  14கோடி டாலர் பெறுமானமுள்ள பருத்திச் செடிகள் அமெரிக்காவில் மாத்திரம் அழிக்கப்பட்டன.  35 கோடி டாலர் மதிப்புள்ள கம்பு, கேழ்வரகு, சோளம் முதலிய தான்யங்கள் நாசம் செய்யப்பட்டன.  12 கோடி டாலர் விலை போகக் கூடிய கோதுமையும், 2 கோடி டாலர் கிடைக்கக்கூடிய புகையிலையும் விளையும் படியான வயல்களும், நிலமும் சாகுபடி செய்யப்படாமல் தரிசாய்க்கிடந்தன.

1933ம் வருஷத்தில், வாரா வாரம் 5000 மாடுகளும் பசுக்களும், காளைகளும் டென்மார்க் தேசத்தில் கொல்லப்பட்டன.  இந்த நெருக்கடி காலத்தில், தொழிலாளி மக்களின் வருமானம் மிக மிகக் குறைந்து விட்டதும் நமக்குத் தெரியும்.

இவைகள்தான் பாஸிஸத்தின் பொருளாதார அஸ்திவாரமாகும்.

பாஸிஸத்தின் குண விசேஷங்கள்

பாஸிஸத்தின் குண விசேஷங்களை அடியிற் கண்டவாறு பாம் தத்தர் கூறுகிறார்:-

  1. முதலாளித்துவமே ஈன்ற, உற்பத்தி முறையின் வளர்ச்சியினாலும், வர்க்கப் போராட்டத்தினாலும் முதலாளித்துவத்தையே தகர்த்தெறியக்கூடிய சமூகப் புரட்சி நெருங்கிக் கொண்டே வருகிறது.  இந்தப் புரட்சியைத் தடுத்து, முதலாளித்தவத்தை சாசுவதமாக, நீடித்து நிறுத்துவது, பாஸிஸத்தின் பிரதம லக்ஷ்யமாகும்.
  2. இந்த லக்ஷ்யம் கைகூடுவதற்காக, முதலாளித்துவத்தின் ஸர்வாதிகாரம் நாளுக்குநாள் வலுக்கிறது.
  3. சுயேச்சையான தொழிலாளி வர்க்க இயக்கத்தை, அடக்கு முறையால் நசுக்கி, வர்க்க ஒத்துழைப்பை ஸ்தாபிக்கிறது பாஸிஸம்.
  4. பார்லிமெண்டரி ( சட்ட சபைகள் மூலம் ஏற்பட்ட) ஜனநாயகத்தை எதிர்த்து,  பாஸிஸம் அதை நிர்மூலமாக நாசம் செய்கிறது.
  5. தொழில்களின் மீதும், நாணயச் செலாவணி ஸ்தாபனங்களின் மீதும், அரசாங்கத்திற்கு இருந்து வரும் ஆதிக்கத்தை பாஸிஸம் விரிவு படுத்துகிறது.
  6. ஏகாதிபத்தியங்களின் சிறிய சிறிய கூட்டங்கள், ஒன்றுக்கொன்று இணைந்து, ஒத்துழைத்து, ஒரே அரசியல் அமைப்பை  ஆதாரமாகக் கொண்ட ஸ்தாபனமாக மாறுகிறது.
  7. ஏகாதிபத்தியப் போட்டியினால், ஏற்படும் தவிர்க்க முடியாத யுத்தத்தை நோக்கி முன்னேறிக்கொண்டே போவதால், யுத்த முஸ்தீப்புகளை அதிகரித்துக் கொண்டே போகிறது பாஸிஸம்.

பாங்கர்களின் சர்வாதிகாரம்

மேற்கூறிய பாஸிஸத்தின் குண விசேஷங்களில், பொருளாதார விசேஷங்களைப் பற்றி மாத்திரம் இங்கு கவனிப்போம்.  பாஸிஸம் என்பது ஏகாதிபத்தியத்திலிருந்து வேறுபட்டதல்ல;  முதலாளித்துவத்தின் தொடர்ச்சியும், வளர்ச்சியுமே யாகும் என்பதை மாத்திரம் இங்கு விளக்குதல் வேண்டும்.  பாஸிஸம் என்பது சிலர் நினைப்பது போல், கீழ்த்தர மத்திய வர்க்கத்தின் சர்வாதிகாரமல்ல;  பாங்கு முதலாளிகளின் சர்வாதிகாரமே பாஸிஸமாகும்.  வறுமையால் வாட்டப்பட்டுள்ள கீழ்த்தர மத்திய வகுப்பினர்க்கு ஓரளவு வரையில் பாஸிஸம் திருப்தி அளித்தது.  ஆனால், இவ்வாறு திருப்தி ஏற்பட்டதற்குக் காரணம், பெரிய பெரிய பிரசங்கங்களும், யூதர்களை வதைப்பதுமேயாகும்.  யூதர்களின் சின்னஞ்சிறிய கடைகளையும், வீடுகளையும் சூரையாடப்படுகின்றன.  ஆனால் பெரிய முதலாளிகள் தொடப்படுவதுகூட கிடையாது.  பாஸிஸ்டு ஆட்சியில், பெரிய தொழில் ஒன்றுகூட  சர்க்காரால் பறிமுதல் செய்யப்பட்டது கிடையாது.  அதற்கு நேர் மாறாக, இயற்கையை அநுசரித்து, முதல் சிறிய  கூட்டத்தினிடையே போய்க் குவிந்து, அவர்களின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.  பாஸிஸத்தை பெரிய முதலாளிகள் மனப் பூர்வமாக போஷித்து வருகிறார்கள்.

நாஸிக் கஷியின் போஷகர்கள்

“ஜெர்மனி கடியாரத்தைத் திருப்புகிறது” என்ற புஸ்தகத்தில் மெளாக் என்ற பேராசிரியர் எழுதுகிறார்:-

“சமீப காலமாக, தேசிய சோஷியலிஸ்டு (பாஸிஸ்டு) இயக்கத்தின் போஷகர்கள் ஜாப்தா மிகவும் நீண்டு விட்டது.  அமெரிக்காவில், தொழிற்சலைகளின் மானேஜர்களும், முதலாளிகளும், கம்பெனிக்காரரின் வக்கீல்களும், அமெரிக்காவின் பாஸிஸ்டு கக்ஷிக்கு பண உதவி அமோகமாகச் செய்து வருகிறார்கள். “

டெடர்டிங்கு, போர்ட், க்ராயா, ஸ்கோடா (ஜெகோஸ்லோவகியாவிலுள்ள யுத்த தளவாடங்களை உற்பத்தி செய்யும் பெரிய முதலாளி) போன்ற பெரிய பெரிய இயந்திர முதலாளிகள் பாஸிஸ்டுக் கக்ஷிக்குப் பரிபூரண ஆதரவு அளிக்கின்றனர்.

எர்னஸ்ட் ஹென்ஸி என்பவர் “ஐரோப்பாவின் மீது ஹிட்லர் (HITLER OVER EUROPE) என்று ஒரு புஸ்தகம் எழுதியிருக்கிறார்.  அதில் தேசீய சோஷியலிஸத்தின் (பாஸிஸத்தின்) பொருளாதார ஆதரவை நன்கு விளக்கியிருக்கிறார்:-

“ஒவ்வொரு நிலக்கரிக் கம்பெனியும், எஃகுக் கம்பெனியும், தாங்களாகவே ஒரு வரியை விதித்துக் கொண்டு, அதனால் வரும் பணத்தை  தேசிய சோஷ்யலிஸ்டு கக்ஷியின் தேர்தல் நிதிக்குக் கொடுத்துதவுமாறு, தைஸன் ஏற்பாடு செய்தார்.“  (தைஸன் ஜெர்மனியில் எஃகு அரசர் என்ற பட்டப் பெயர் அவருக்கு உண்டு. ) இந்த வரியைச் சமாளிப்பதற்காக  ஜெர்மனியின் நிலக்கரியின் விலை  ஏற்றப்பட்டது.  ஜெர்மனியில் தலைவர் தேர்தலுக்கு மாத்திரம், தைஸன் 10 லக்ஷம் ரூபிள்கள் கொடுத்தார்.  இந்த உதவி கிடைக்காவிட்டால் 1830-33 ஆண்டுகளில், ஹிட்லரின் இயக்கம் நடந்திருக்கவே முடியாது.”

நாஜி சர்க்கார் அமைப்பு

நாஜி சர்க்காரின் பொருளாதாரக் கௌன்ஸிலில் அடியிற் கண்ட முதலாளிகள் அங்கம் வகிக்கின்றனர்:-

  1. ஹைர்குருப் வான் போஹெக்ம் – “யுத்த தளவாடங்கள் அரசர்”.  சொந்த சொத்து, 60 லக்ஷம் பவுன், – கம்பெனியின் முதல் 1 ½ கோடி பவுன்.
  2. ஹெர் தைஸன் – “எஃகு அரசர்”.  சொந்த சொத்து 60 லட்சம் பவுன் – கம்பெனியின் முதல் 4½ கோடி பவுன்.
  3. ஹெர்.எப்.ஸி.வான்ஸினியூ – மின்சார மன்னர் – சொந்த சொத்து 65 லட்சம் பவுன் – கம்பெனியின் முதல்   1 ¼ கோடி பவுன்.
  4. ஆசிரியர் கார்ட் போஷ் – சாயக் கம்பெனியின் கோடீசுவரர் – சொந்த சொத்து 20 லட்சம் பவுன் – கம்பெனியின் முதல் 5 ½ கோடி பவுன்.
  5. டி.ஏ.லோக்னர் – எஃகு கம்பெனி முதலாளி – சொந்த சொத்து 60 லக்ஷம் பவுன் – கம்பெனியின் முதல் 5 ½ கோடி பவுன்.
  6. ஹெர் ஏ.டீன் – பொடாஷ் கம்பெனியின் டைரெக்டர்- கம்பெனியின் முதல் 1 கோடி பவுன்.

ஹிட்லரின் நாஜி சர்க்காரில், முதலாளிகள் செலுத்தி வரும் ஆதிக்கத்தைக் காட்டு வதற்கு இதுவே போதும்.  1934 வருஷத்தில் நடந்த தொழிற்சாலைத் திருத்தி அமைக்குப் பிறகு ஜெர்மனியில் முதலாளி ஏகபோக்கியமும், ஆதிக்கமும், சட்ட பூர்வமாகப் பரிபூர்ணமாக ஏற்பட்டு விட்டது.

பொருளாதாரத் துறையில் பாஸிஸம் சாதித்தது என்ன என்பதைச் சற்று கவனிக்க வேண்டும்.  பொதுமக்கள் ஓரளவிற்கு ஆதரவு அளிப்பதாலேயே பாஸிஸம் அதிகாரத்திற்கு வருகிறது.  பாஸிஸம், பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதாயும், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதாயும், சம்பள உயர்வு முதலியவைகளை ஏற்படுத்துவதாயும் வாக்குறுதி கொடுத்து மக்களின் ஆதரவைப் பெற்றது.  இந்த வாக்குறுதிகளை அது எவ்வளவு தூரம் நிறைவேற்றியிருக்கிறது?

இத்தாலியில் 1922 வருஷத்திலேயே உலகப் பொருளாதார  நெருக்கடிக்கு முன்போகவே பாஸிஸ்டு ஆட்சி ஏற்பட்டு விட்டது.  ஆயினும், சென்ற மகா யுத்த்திற்குப் பிறகு முதலாளிதுத்வ உலகில் ஏற்பட்ட ‘சுபீக்ஷம் ‘ இத்தாலிக்கு அவ்வளாவாகப் பயன்படவில்லை.  பொருளாதார நெருக்கடியோ, மற்றைய நாடுகளைவிட சீக்கிரத்தில் இத்தாலியில் ஏற்பட்டு விட்டது.  இத்தாலிய பாஸிஸத்தை ஆதரிக்கும் ரன்ஜிக் என்பவர்கூட இதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.  “1920-30 வருஷங்களில், இத்தாலியில் நிலவிவந்த பொருளாதார மந்தத்தை, மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மனக் கொதிப்புண்டாகும்” என எழுதுகிறார்.  இந்த நிலைமையைக் கண்டு முஸோலினிக்குச் சிறிது கூட மனவருத்தமே இருப்பதாகத் தெரியவில்லை.  1930வருஷத்தில், அவர் எழுதியது, அவருடைய மனப் பான்மையை நன்கு விளக்குகிறது:-

“இத்தாலியின் மக்களிடம் தினந்தோறும் பன்முறை சாப்பிடும் வழக்கம் இன்னும் ஏற்படாதிருப்பது, ஒரு பெரிய பாக்கியமே.  இத்தாலி மக்களுடைய வாழ்க்கைச் சவுகரியங்கள் மிக மிகக் கீழ்த்தரமானவை.  ஆகவே, வறுமையையும் துயரத்தையும், அவ்வளவு தூரம் அவர்கள் உணர்வதில்லை.”

கம்பெனிகள் ‘திவால்’   

ஸர்வதேசச் சங்கத்தின் 1932-33 வருஷத்திய உலகப் பொருளாதார அறிக்கை கூறுகிறது:-

“1931 ம் வருஷத்தில், இத்தாலியில் திவால் எடுத்த கம்பெனிகளின் எண்ணிக்கை 21,000.  இங்கிலாந்தைப் போன்று 5 மடங்காகும் இது.  வேலையில்லாத் திண்டாட்டமும், சம்பள வெட்டும், வெளிநாட்டு வியாபாரக் குறைவும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போய்க் கொண்டிருந்தது.  அரசாங்கம் மக்களுக்குச் செய்த உதவி பூஜ்யம்தான்.   நாஜி ஜெர்மனியின் நிலைமையும் இதேமாதிரித் தான் இருந்தது.  நாட்டின் பொருளாதாரம் பூராவும், யுத்த முஸ்தீப்புகளுக்காக திருத்தி அமைக்கப்பட்டிருக்கிறது.  நாஜி ஜெர்மனியில் வேலையில்லாத மக்களின் புள்ளி விவரங்கள் சரியாகக்  கிடைப்பதில்லை.  உண்மை மறைக்கப்படுகிறது.  1934ம் வருஷத்திய மே மாதத்திய தொழிலாளர் சட்டப்படி, தொழிலாளர்களின் வர்க்க ஸ்தாபனங்களும். கக்ஷிகளும் கலைக்கப்பட்டு விட்டதால் தொழிலாளிகள் ஐக்கியப்பட்டு, முதலாளிகளுடன் பேரம் பேச முடியாது.  ஆகவே அவர்கள் நிலை மோசமாய் விட்டது.  வேலை அதிகம் வாங்கப்படுகிறது, ஆனால் கூலியோ குறைந்து விட்டது”.

மகாநாடுகள் சாதித்ததென்ன?

முதலாளித்துவத்தில் இருக்கும் இந்த முரண்பாடுகளை தீர்ப்பதற்கு பெரிய முயற்சிகளெல்லாம் செய்யப்படுகின்றன.  ஆனால் முதலாளித்துவம் எல்லா தேசங்களிலும் ஒரே அளவிற்கு வளரவில்லை.  ஆகவே இந்த முயற்சிகளெல்லாம் பயன்படுவதில்லை.  இதற்கு முன்னால், அநேக நாடுகள், கூட்டுறவு முறையில் ஒன்று சேர்ந்து, மற்ற நாடுகளைச் சுரண்டுவதற்காக ‘ஒப்பந்தம் ‘  செய்து கொள்ள முயற்சிகள் செய்திருக்கின்றன.  அதேமாதிரி, இன்று தினமும், உலகப் பொருளாதார மகாநாடுகளும், வியாபார உடன்படிக்கைகளும் கணக்கின்றி நடந்து வருகின்றன.   ஆயினும், இந்த மகாநாடுகளும், உடன்படிக்கைகளும், முறிவடைந்து கொண்டே வருவதை நாம் கண்ணாரப் பார்க்கிறோம்.  முதலாளித்துவத்திற்கு ஆதாரமான சட்டங்களை மாற்ற முடியுமா?  லெனின் கூறுவதை இங்கு கவனிப்போம்:-

“இந்தப் பிரச்சினையைச் சரிவர ஆலோசித்தால், இது அசாத்தியமானது என்பது நன்கு விளங்கும்.   முதலாளித்துவத்தின் கீழ், சுரண்டலையும், குடியேற்ற நாடுகளையும் வல்லரசுகள் பங்கு போட்டுக் கொள்ளும்போது, தங்கள் தங்களுடைய பொருளாதார பலத்தையும், ராணுவ பலத்தையும், மற்றுமுள்ள சக்திகளையுமே கவனிக்கின்றன.  அவ்வாறு ஏற்படும் பங்கும் இந்த பொருளாதார ராணுவபலத்தையே ஆதாரமாக கொண்டிருக்கிறது.  இந்த பலம் மாறிக் கொண்டேயிருக்கிறது.  சில நாடுகளுக்கு பலம் மிக மிக அதிகரித்துவிடுகிறது.  இவ்வாறு ஒரு ஏகாதிபத்தியத்தின் பலம், மற்ற ஏகாதிபத்தியத்தின் பலத்தைவிட அதிகரித்தவுடன், ஒப்பந்தத்தை யெல்லாம் கிழித்தெறிந்து, தங்கள் பலத்தை ஆதாரமாகக் கொண்டு புதிய சுரண்டல் மார்க்கெட்டுகளைத் தேடத்துடங்கி விடுகின்றன.  10 அல்லது 20 வருஷங்களுக்குப் பிறகும், போட்டி போடும் ஏகாதிபத்தியங்களின் பலம், இன்றைக்கிருப்பது போலவே இருக்கும் எனக்கனவிலும் கருதமுடியுமா?” சரித்திரம் லெனினின் தீர்க்க திருஷ்டியை நிரூபித்து விட்டது.

யுத்தம் நிச்சயம்

பாஸிஸத்தினால் உலகில் யுத்தம் ஏற்பட்டுத்தீருமா?  ஹிட்லரும், முஸோலினியும், சமீப காலத்தில் பேசி வருவதும் அவர்களுடைய நடத்தையும், ஜப்பானில் ஏகாதிபத்திய வெறியர்கள் செய்து வரும் மிருகத்தனமான அட்டூழியங்களையும், பார்த்த பிறகும்கூட, பாஸிஸம் யுத்த வெறி கொண்டுள்ளது என்பதைப் பற்றி சந்தேகமிருக்க முடியாது.  ஆனால் பாஸிஸ்டு நாடுகள் மாத்திரமல்ல ஏகாதிபத்திய வல்லரசுகளெல்லாம் உலக யுத்தத்திற்காக முஸ்தீப்புகள் செய்து கொண்டு வருகின்றன.  சோவியத் ரஷ்யா நீங்கலாக, மற்றெல்லா நாடுகளிலும், பொருள் உற்பத்தி மிக குறைந்து விட்டது.  ஆனால், யுத்த தளவாடங்கள் மாத்திரம் அதிகரித்து வருகின்றன.

முசோலினி கூறியதைப் போல் ஏகபோக்ய உரிமையை நாடும் முதலாளித்துவம் “ரொட்டியைக் காட்டிலும் – சாப்பாட்டைக் காட்டிலும் – வெடி குண்டுகளையே விரும்புகிறது.”

துயரம் போக்க வழி

“மக்கள் படும் துயரமெல்லாம் தீர்ந்து விடும் – உலகில் ஜீவிக்காமல், யுத்த களத்தில் மாய்வதனால்” அழுகலெடுத்துக் கிடக்கும் முதலாளித்துவத்தின் கடைசி கோர ரூபம் பாஸிஸமாகும்.

எதிர் கால வாழ்க்கையிலும் நாகரீகத்திலும், கலையிலும், முற்போக்கிலும் நம்பிக்கை இழந்து துடிதுடித்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், முதலாளிதுவத்துவம், யுத்தத்தையும், காட்டுமிராண்டித் தனத்தையும், பிற்போக்கையும், நாடி பெருமைப்படுத்துகிறது.  மனித வர்க்கத்தை உய்விக்க முதலாளித்துவத்தினால் இயலாது என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?

எழுதியவர் : 

ராமச்சந்திர வைத்தியநாத்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *