வரலாற்றுப் புதையல் - 6:- ஈ.வே.ராமசாமி நாயகர் எழுதிய "விதவா விவாக விளக்கம்" கட்டுரை - ராமச்சந்திர வைத்தியநாத் | www.bookday.in

வரலாற்றுப் புதையல் – 6:- ஈ.வே.ராமசாமி நாயகர் எழுதிய “விதவா விவாக விளக்கம்” கட்டுரை – ராமச்சந்திர வைத்தியநாத்

வரலாற்றுப் புதையல் – 6

சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும்  பல்வேறு பத்திரிகைகளில், அரசு அறிக்கைகளில் வந்த படைப்புகளையும்  செய்திகளையும்  அச்சுப் பிசகாது அறிந்திடும் முயற்சியே இது.  அன்றைய உரைநடையை, இலக்கியப் போக்கினை, வரலாற்றை, செயல்முறையை   அறிந்திடும் முயற்சிகளில் ஒன்றாகக்கூட இதைக் கொள்ள முடியும்.

சென்னை எண் 188 கோவிந்தப்ப நாயகன் தெருவிலிருந்து கே.எஸ்.முத்தையா அவர்களை பத்திராதிபராகவும், க.சு.சுந்தரம் பிள்ளை அவர்களை பத்திராசிரியராகவும் கொண்டு லக்ஷ்மி மாத இதழ்  1923 ஆகஸ்ட் முதல் வெளியிடப்பட்டு வந்திருக்கிறது.  1926 அக்டோபர் இதழில் பெரியார் எழுதிய புத்தக விமரிசனம்தான் இக்கட்டுரை.  ஏற்கனவே சுயமரியாதை, பெண்ணுரிமை, விதவை மறுமணம் போன்றவற்றில் அவர் அதீத அக்கறை கொண்டு எழுதியும் பேசியும் வந்ததன் அடிப்படையில் இக்கட்டுரையை எழுதியிருக்கிறார்.  இதன் பின்னர் 1934ல் ஈரோட்டில் உள்ள பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தின் வாயிலாக பெண் ஏன் அடிமையானாள்? எனும் முக்கியத்துவம் வாய்ந்த பதிப்பை பெரியார் கொணர்ந்திருக்கிறார். இக்கட்டுரையில் எழுதிய பல்வேறு  விஷயங்களை, தகவல்களை 1934ம் வருஷத்து பதிப்பில் அவர்   தொடர்ச்சியாக முன்வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விதவா விவாக விளக்கம்

ஸ்ரீமான் திரு.ஈ.வே.ராமசாமி நாயகர் அவர்கள் எழுதியது

பழுத்த ஞானமும் நீடிய அனுபவமும் கொண்ட அறிஞர் திரிசிரபுரம் திருவாளர்  சி.பி.இராஜகோபால் நாயுடு அவர்கள் ஆக்கிய விதவா விவாக விளக்கம் என்னும் புத்தக அச்சுப் பிரதியை அனுப்பி எனது அபிப்ராயத்தை எழுதுமாறு எழுதியிருந்தார்.  விதவா விவாகத்தைப் பற்றி நான் தீவிரக் கருத்துக் கொண்டவனே யாகிலும் போதிய அமயமும் அவகாசமும் வாய்திலாமையான் அதனை ஊன்றிப் படித்து விரைவில் எனது கருத்தினை வெளியிட இயலாது போயிற்று.  பிறகு அப்புத்தகம் முடிவு பெற்று புத்தக ரூபமாய்க் கிடைக்கப் பெற்றேன்.  அதனை அமைதியுடன் படித்து எனக்குத் தோன்றிய சில கருத்துக்களை எழுத முற்பட்டேன்.

இந்திய நாட்டின் ஆளுமை உரிமை இந்தியருக்கே கிடைக்க வேண்டுமென அரசியல் சீர்திருத்தக்காரர்களும், இந்திய மக்களுக்குள்ளிருக்கும் வகுப்புப் பிரிவினையும் ஜாதி வேற்றுமையும் தொலைய வேண்டுமென்பதற்காக சமூக சீர்திருத்தக்காரர்களும் போராடுகிறார்களேயன்றிப் பெண் மக்களுள் ஒரு பகுதியார் அழிந்து வருவதைப் பாராமுகமாகவே பார்த்து வருகின்றனர்.  (இயற்கை தேவியார்) சிருஷ்டிக் கர்த்தா, மக்கட் படைப்பி லடங்கிய ஆண் பெண்களை ஏற்றத்  தாழ்வுடன் படைக்கவில்லை என்பதை அறிவுடைய உலகம் ஏற்கும்.  அங்க அமைப்பிலன்றி அறிவின் பெருக்கிலோ வீரத்தின் மாண்பிலோ ஆண் பெண்களுக்குள் ஏற்றத் தாழ்வான வித்தியாசம் காண இயலுமோ?  இயலவே இயலாது.  ஆடவரிலும் சரி, பெண்டிரிலும் சரி முறையே அறிவாளிகளும் ஆண்மை யுடையோரும், அறிவீலிகளும் பேடிகளும் உண்டு.  இவ்வாறிருக்கத் திமிர்படைத்த ஆண் உலகம் சாந்த குண பூஷணமான பெண்ணுலகைத் தாழ்த்தி அடிமைப்படுத்தி வருதல் முறையும் தர்மமுமான செயலாகாது.

ஹிந்து மத ஆண் உலகம் தனது பெண் உலகத்தில் மாட்டுப் பூண்டொழுகும் கொடுமைச் செயல்கள் பலவற்றில் இங்கு நாம் விதவைகளைப்  பற்றி மட்டும் கவனிக்க வேண்டியுளது.

உலக இன்பத்தை நுகர்ந்து அலுத்துப் போயிருக்கும் பழுத்த கிழவனே யாயினும், தன் மனைவியார் இறந்துபட்டவுடன் மறுமணம் புரிய முயலுகின்றான்.  அதுவும் வனப்பு மிகுந்த – எழில் பொருந்தி இளஞ் சகோதரிகளையே தன் மணத்திற்குத் தேர்ந்தெடுக்கின்றான்.  ஆயின் ஓர் பெண்மகள் தன் கொழுநனை இழந்து விட்டால், அவள் உலக இன்பத்தையே சுவைத் தறியாதவளா யிருப்பினும் – தன் ஆயுட்கால முற்றும், அந்தோ!  தன் இயற்கைக் கட்புலனை இறுக மூடி, மனம் நொந்து, வருந்தி மடிய நிபந்தனை ஏற்பட்டு விடுகிறது.  என்னே! அநியாயம் !ஹிந்து சகோதரர்கள் இவ்வாறு தங்கள் சமூகம் அநியாயமாய் அழிந்து வருவதைப் பார்த்துக் கொண்டு வருவது பெரும் பாபகரமான செயலாகும்.

முன் நாளில் தன் கணவனைப் பறிகொடுத்த மனைவியும் உடன் கட்டை யேறுதல் வழக்கமாயிருந்தது.    இக்கொடிய வழக்கத்தை அக்காலத்தில் ஆங்கிலோ இந்திய வியாபாரக் கூட்டத்தின் தலைவராக யிருந்த  ஹேஸ்டிங்ஸும், சுவாமி தயானந்த சரஸ்வதி, ராஜா ராம் மோகன் ராய் போன்ற இந்திய நாட்டு அறிவாளிகளும் எடுத்துக் கொண்ட பெரு முயற்சியால் நிறுத்தப்பட்டது.  உடன்கட்டை யேறுதலை நிறுத்துதற்காகப் போராடிய அக்காலத்திலும் ஆசாரமே அழிந்து போவதாகவும் மதமே கெட்டுப் போவதாகவும் பெருங்கிளர்ச்சி ஏற்பட்டது/  ஆனால் நாளடைவில் அக் கூக்குரலும் அடங்கி ‘ஸககமனம்’  என்னும் உடன்கட்டையேறுதலான கொலை வழக்கமும் அறவே மறைந்தது.

இது போழ்து நம் நாட்டில் விதவைகள் மறுமணம் செய்து கொள்ளலாகாதென்னும் வழக்கமிருப்பது பாரபட்சம் நிரம்பிய கொடுமையான செயலாகும்.  தன் மனைவியை இழந்து கிழவன் மறுமணம் செய்து கொள்ளலாமென்றும் தன் கணவனை இழந்த மகப்பேறு பெறாத இன மங்கை மறுமணம் செய்து கொள்ள லாகாதென்றும்  கூறுவது நடு நிலைமை கொண்ட அறச் செயலாகுமா?

விதவைகள் மறு மணம் செய்து கொள்ளும் வழக்கம் கற்புக்கு பங்கம் விளைவிப்பதாகும் எனக் கூறினால் அது  பொருந்தாது,  விதவைகளை மறுமணம் செய்விக்கா திருத்ததலினாலேயே அவர்கள் கற்பழிந்து மாய்கின்றனர்.  காமச்சுவை கருதும் இளங்கைம்பெண்கள் பல படிற்றொழுக்கத்தில் வீழ்ந்து, அதனால் கருப்பந்த தரித்து இரண்டோர் திங்களுள் கிரஹத்தி தோஷத்திற்கு உள்ளாகின்றார்கள்.  இப்பாவம் யாரைச் சாரும்?   விதவைகளை மறுமணம் செய்து கொள்ளல் ஆகாதென்று கட்டாயப் படுத்திவரும் பெற்றோர்களையே சாரும்.  மறுமணம் விரும்பாத பெண்களைத் தவிர்த்து ஏனைய கைம்பெண்களுக்கு மறுமணம் செய்வித்தலே நன்று.

விதவைகளில் கலியாணத்தைப் பற்றி இவ்வாறு எழுதும் நான் எழுத்தளவோடும் சொல்லளவோடும் ஆதரிக்கிறேனா என்ற ஐயம் அன்பர்களுக்குத் தோன்றலாம்.  இதன் பொருட்டேனும் எனது கருத்தைப் பிரதிபலிக்கும் செய்கையைக் கூற விரும்புகிறேன்.

நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன்.  எனது வகுப்பில் பெண் மக்கள் முக்காடுடன் கோஷாவாக இருக்க வேண்டியவர்க ளெனவும் விதவா விவாகத்தை அனுமதிக்கப்படாத வகுப்பின ரெனவும் வழங்கப்படு பவர்கள்.  நான் பிறந்த குடும்பமோ அளவுக்கு மிஞ்சி ஆசாரத்தையும் வைணவ சம்பிதாயத்தையும் கடுமையாய் ஆதரிக்கும் குடும்பம்.  இப்படி இருந்த போதிலும் என்னுடைய 7வது வயதிலிருந்தே மக்களில் உயர்வு தாழ்வு கற்பித்தலையும் ஒருவர் தொட்டதை மற்றொருவர் சாப்பிடலாகாதெனச் சொல்வதையும் நான் பரிகாசம் செய்து வந்ததோடு யாவரையும் தொடுவதற்கும் எவர் தொட்டதையும் சாப்பிடுவதற்கும் நான் சிறிதும் பின் வாங்கியதே கிடையாது.  என்னை, இளம்போதிலிருந்தே எங்கள் வீட்டுச் சமையலறைக்குள் செல்ல அனுமதிப்பதில்லை.  நான் தொட்ட செம்பை, எனது தகப்பனார் தவிற, மற்றையோர் சுத்தம் செய்யாமல் உபயோகப்படுத்த மாட்டார்கள்.  எங்கள் குடும்ப ஆசார அனுஷ்டானங்கள் பார்த்து பொறமைப்படுபவர்கள் என்னைப் பார்த்து சாந்தியடைந்து விடுவார்கள்.  “நாயக்கருக்கு அவர்கள் ஆசாரத்திற் கேற்றற்போல் தான் ஒரு பிள்ளை என்றாலும், பிள்ளை நவமணியாய்ப்  பிறந்திருக்கிறது” என்று சொல்லுவார்கள்.  என்னுடைய 16வது வயதிலேயே பெண்மக்களைத் தனித்த முறையில் பழக்குவதும் அவர்களுக்கெனச் சில கட்டுத் திட்டங்களை  ஏற்பாடு செய்வதையும் ஆண் மக்களின் அகம்பாவம் என்று நினைத்து வந்தேன்.

இவ்வாறாக, என் தங்கை தனது இளம் வயதிலேயே ஒரு பெண் குழந்தையையும்  ஓர் ஆண் குழந்தையையும் விடுத்து விண்ணுற்றாள்.  அவற்றுள் ‘அம்மாயி’ என் றழைக்கப் பெறும்  அப் பெண் குழந்தைக்கு அதன் 10வது வயதில் சிறந்த செல்வாக்கோடு ஒரு செல்லக் கலியாணம் செய்து வைத்தோம்.   கலியாணம்  செய்த 60ம் நாள் அப்பெண்ணின் கணவன் என்னும் 13 வயதுள்ள சிறு பையன் பகல் 2 மணிக்கு விஷபேதியால் விண்ணுற்றான்.  அவன் இறந்தான் என்ற செய்தியைக் கேட்டதும் அப்பெண் குழந்தை என்னிடம் ஓடி வந்து “ மாமா! எனக்குக் கலியாணம் செய்து வை என்று நான் உன்னைக் கேட்டேனா?  இப்படி என் தலையில் கல்லைப் போட்டாயே” என்று ஓவென்று அலறிய சத்தத்தோடு என் காலடியில், மண்டையில் காய முண்டாகும்படி, திடீரென்று விழுந்தது, துக்கம் விசாரிப்பதற்காக அங்கு வந்திருந்த ஆண் பெண் உள்பட சுமார் 600, 700, பேர்கள் அக் குழந்தையையும் என்னையும் பார்த்த  வண்ணமாய்க் கண்களிலிருந்து தாரை தாரையாய் நீர் வடித்தனர்.  எனக்கும் அடக்கவொண்ணா அழுகை வந்துவிட்டது.  ஆனால் கீழே கிடந்த அந்தக் குழந்தையை நான் கையைப் பிடித்துத் தூக்கும்போதே அதற்கு மறுபடியும் கலியாணம் செய்து விடுவது என்ற உறுதியுடனேயே தூக்கினேன்.

பிறகு அந்தப் பெண் பக்குவ மடைந்த ஒரு வருடத்திற்குப் பின் அதற்குக் கலியாணம் செய்ய நானும் எனது மைத்துனரும் முயற்சி செய்தோம்.  இச்செய்தி எனது பெற்றோருக்கும் மற்றொருக்கும் எட்டவே அவர்கள் இதைத் தங்கள் வகுப்புக்கு ஒரு பெரிய ஆபத்து வந்து விட்டது  போலக் கருதிப் பெரிதும் கவலைக்குள் ளானவர்களாகி நாங்கள் பார்த்து வைத்த இரண்டொரு மாப்பிள்ளைகளையும் கலைத்தார்கள்.  முடிவில் எனது மைத்துனரின் இரண்டாந்தரம் மைத்துனரைப் பிடித்துச் சரி செய்து, எவரும் அறியா வண்ணம் பெண்ணையும் மாப்பிள்ளையையும் சிதம்பரத்திற் கழைத்துச் சென்று அங்கு கோயிலில் கலியாணம் செய்வித்து ஊருக்குக் கூட்டி வந்தனர்.  ஆனால் நான் அங்கு போகாமல் ஊரிலேயே இருக்க வேண்டியதாயிற்று.  ஏனெனில், நான் போயுள்ள செய்தியைச் சுற்றத்தார் அறிந்தால் ஏதாவது, மாப்பிள்ளையைத் தடைசெய்து விடுவார்களோ என்கிற பயத்தால், நான் ஊரி லிருந்தால் கலியாணத்திற்காக வெளியூருக்குப் போயிருக்கிறார்களெனச் சந்தேச மிருக்காது என்கிற எண்ணங்கொண்டே யாகும்.  இக் கலியாணத்தில் பலனாக இரண்டு மூன்ற வருட காலம் பந்துக்களுக்குள் வேற்றுமையும் பிளவும் ஏற்பட்டு ஜாதிக் கட்டுப்பாடு இருந்து பிறகு அனைத்தும் சரிப்பட்டுப் போயின.

பெண்ணும் மாப்பிள்ளையும் ஒத்து வாழ்ந்து ஓர் ஆண் மகவைப் பெற்றனர்.  ஆனால் துரதிர்ஷ்ட வசமாகக் கொஞ்ச நாலையில் அந்த இரண்டாவது புருஷனும் இறந்துவிட்டான்.  இப்பொழுது தாயும் மகனுமே க்ஷேமமாயிருக்கிறார்கள்.  இன்னமும் எனது வகுப்பில் 13 வயதுக்குக் கீழ்பட்ட விதவைக் குழந்தைகள் சிலர் இருக்கின்றனர்.   பாவம், அக்குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் தீண்டாதார் போல் கருதி நடத்துவதைத் தினமும் பார்க்க பாபமா யிருக்கிறது.

எவ்வளவோ இடருக்குள் அகப்பட்டு  அக் கலியாணத்தை முடித்து வைத்தோம்.  ஆனால் கடைசியில் அந்த இரண்டாவது கணவனும் மரிக்கவே விதவா விவாக விஷயத்தில் தீவிரமாகத் தலையிட வேண்டுமென எனக்கிருந்த கருத்துக்குப் பெரிய முட்டுக் கட்டை போட்டது போலாயிற்று.

விதவைகளின் விஷயம் நினைவிற்கு வரும்போதும், நேரில் காண நேரும்போதும், உலக இயற்கை எளியாரை வலியார் அடக்கி ஆண்டு ஹிம்சிப்பதல்லாமல் வேறல்லவென்றே முடிவு செய்வேன்.  நமது ஹிந்து சமூகம் எந்தக் காலத்தில் எவருடைய ஆதிக்கத்தில் கட்டப்பட்டதோ, அன்று மத மில்லாமல் முறையில்லாமலிருந்து இயற்கையாகவே ஏதாவது கட்டுப்பாடுகள் ஏற்பட்டு அவற்றை வலியவர்கள் தங்கள் தங்கள் சுயநலத்திற்குத் தக்கபடி திருப்பிக் கொண்டார்களோ என நினைக்கும்படி இருந்தாலும் பொதுவாய் விதவைத் தன்மை நிலைத்திருக்கும் காரணத்தினாலேயே ஹிந்து மதமும் ஹிந்து சமூகமும் ஒரு காலத்தில் அடியோடு அழிந்துபோனாலும் போகு மென்பதே எனது முடிவான கருத்து.

அரசியல் என்றும் சமூகவியல் என்றும் ஜனாச்சார சீர்திருத்தவியல் என்றும் பெண் மக்கள் முன்னேற்ற மென்றும் சொல்லிக்கொண்டிருக்கும் மக்களில் பெரும்பான்மையோர், இவற்றைத் தங்களது வாழ்வுக்கும் கீர்த்திக்கும் சுயநலத்திற்கும் உபயோகப்படுத்திக் கொள்ளுவோராக இருக்கிறார்களே தவிற, உண்மையில் அக்கருத்துக் கொண்டு உழைப்பவர்கள் அரிதிலு மரிதாகி விட்டனர் என்று சொல்லுவதை மன்னிக்க வேண்டுகிறேன்.  அன்றியும் இவ்விதத் துறைகளிலும் சீர்திருத்தங்களிலும் பாடுபடுபவர்களாய்க் காணப்படுவோரில் பெரும்பாலோர் தாங்கள் செய்வது சரியென்ற தீர்மானம் தங்களுக்கே யல்லாமல் உலக மெய்ப்புக்கு செய்கிறவர்களாகவே இருக்கிறார்கள்.  பெண் மக்கள் முன்னேற்றத்தைப் பற்றிப் பேசுவோர் தங்கள் வீட்டுப் பெண்களை படுதாவுக்குள் வைத்துக்கொண்டும், விதவா விவாகத்தைப்பற்றிப் பேசுவோர் தங்கள் குடும்பங்களில் உள்ள விதவைகளை காவல்போட்டு விதவைத் தன்மையைக் காப்பாற்றிக்கொண்டும் இருக்கிறார்களே தவிற உண்மையில் ஒரு சிறிதும் தாங்கள் நடவடிக்கையில் காட்டுவதில்லை.  இதன் காரணம் என்னவெனப் பார்க்கும்போது, பெண் மக்கள் என்று நினைக்கும்போதே அவர்கள் அடிமை, நமக் கடங்கினவர்கள், கட்டுப்படுத்தி வைக்கப்பட வேண்டியவர்கள் என்கிற உணர்ச்சி ஏற்படுகிறது என்றே நினைக்கிறோம்.  இதனாலேயே அவர்களை விலங்குகளைப் போல் நடத்தி வருகிறார்கள்.  அவர்களுக்குச் சுதந்திரங் கொடுப்பது என்கிற விஷயத்தை நினைக்கும்போது செய்யக்கூடாத ஒரு பெரிய குற்றமான செய்கையைச் செய்ய நினைக்கிறது போலவே தோன்றுகிறது.  அதனால் மனித சமூகத்தில் சரி பகுதியான எண்ணிக்கைக்குப் பிறவியிலேயே சுதந்திரம் இல்லை என்பதுதானே இதன் பொருள்?  ஆடவருக்குப் பெண்டிரைவிடச் சிறிது வலிமை அதிகமாக ஏற்பட்ட குற்றந்தானே இம்மாதிரி ஒரு சரி சமமான சமூகத்தை சுதந்திர மில்லாமல் அடிமைப்படுத்தும் கொடுமையை அனுஷ்டிக்க வேண்டியதாயிற்று.  இந்தத் தத்துவமே வரிசைக் கிரமமாக மேலோங்கி எளியோரை வலியோரால் அடிமையாகச் செய்கிறது.

உலகில் மனித வர்க்கத்திற்கு அடிமைத் தத்துவம் ஒழிய வேண்டுமானால் பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும் கொடுமையும் ஒழிய வேண்டும்.  இது ஒழிந்த நிலையே சமத்துவம் சுதந்திரம் என்னும் முளை முளைக்கும் இடம்.

உலகிலேயே மிகப் பெரிய சீர்திருத்தக் காரரான மகாத்மா காந்தி இந்து விதவைகளைப் பற்றி அநேக சந்தர்ப்பங்களில் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்.  அவற்றுள் சென்ற ஆண்டு “நவஜீவன்“ பத்திரிகையில் மகாத்மா எழுதியிருக்கும் விஷயத்தைக் கவனித்தால் விதவைகளின் விடுதலை சம்பந்தமாய் மகாத்மா எவ்வளவு தூரம்  உழைக்கிறார் என்பது புலனாகும்.  அக்கட்டுரையின் ஒரு சில பாகமாவது:-

“பால்ய விதவைகளைக் கட்டாயப் படுத்தி வைத்திருப்பது போன்று இயற்கைக்கு விரோதமான பொருள் உலகில் வேறொன்றும் இல்லை என்பது எனது திடமான நம்பிக்கை.  விதவைத் தன்மை என்பது எவ்விதத்திலும் ஒரு தர்ம மாகாது.  பலாத்காரத்தினால் அனுஷ்டிக்கச் செய்யும் எவ்விதச் செயலும் அறமாகாது.  பலாத்காரத்தினால் நடத்தும் விதவை வாழ்வு பாவ மானது, பதினைந்து வயதுள்ள ஒரு பால்ய விதவை தானாகவே விதவை வாழ்வைக் கொண்டிருக்கிறாள் என்று சொல்லுவது, அவ்விதமாகச் சொல்லுவோரின் கொடூர சுபாவத்தையும் அறியாமையையுமே விளக்குகிறது. “

என்று எழுதிவிட்டு, விதவைகள் மறுமணம் செய்து கொள்ள வேண்டு மென்பதாகத் தன் உள்ளன்போடும் ஆவேசக் கிளர்ச்சியோடும் மகாத்மா கூறிய மணிவாசகங்களில் ஒரு சிலவற்றைக் கவனிப்போம்.

“அமைதியுடன் தங்களுடைய துக்கத்தைச் சகித்துக் கொண்டு தங்களுடைய உண்மையான கருத்தைத் தங்கள் பெற்றோர் அல்லது போஷகர்களான ஸ்திரீ புருஷர்களிடம் தைரியமாய்ச் சொல்லிவிட வேண்டும்.  அவர்கள் அதைக் கவனிக்காவிட்டால் தாங்களே, ஒரு யோக்கியமான புருஷன் கிடைத்தால் உடனே விவாகம் செய்து கொள்ளட்டும்.  அது வரையில் யோக்கியமான புருஷனை அடைய தமயந்தி சாவித்தி முதலியவர்கள் போல் தவம் செய்வதே ஏற்ற வழியாகும்……….விதவைகளின் போஷகர்கள் இவற்றைச் சரிவரக் கவனியாவிடின் பின்னர் பச்சாதாபப் படுவார்கள்.  ஏனெனில் நான் ஒவ்வோரிடத்திலும் துராசாரமே பார்த்துக் கொண்டு வருகிறேன்.  விதவைகளைப் பலாத்காரமாய்த் தடுத்து விதவைத் தன்மையை அனுஷ்டிக்கச் செய்வதால் விதவைகளுக்காவது, குடும்பத்திற்காவது அல்லது விதாவ தர்மத்திற்காவது மேன்மை உண்டாகவே மாட்டாது.  இம்மூன்று தத்துவங்களும் நசித்து வருவதை என் கண்களினாலேயே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  பால்ய விதவைகளே! நீங்களும் உங்களைப் பலவந்தப்படுத்தி விதவைகளாக வைத்திருக்கும் ஸ்திரீ புருஷர்களும் இதை அறிவீர்களாக “  இவ்வாறாக,

1921ம் வருடத்திய ஜனசங்கைப்படி ஹிந்துக் கைம்பெண்களின் தொகையினை நோக்குகையில் ஐயகோ! என் நெஞ்சு துடிக்கிறது!

வயது வரம்புகைம்பெண்களின் எண்ணிக்கை
1 வயதுக்குட்பட்டவர்கள்597
1 முதல் 2 வயது வரை494
2 முதல் 3 வயது வரை1,257
3 முதல் 4 வயது வரை2,837
4 முதல் 5 வயது வரை6,707
5 வயதுக்குட்பட்டவர்கள் (மொத்தம்)11,892
5 முதல் 10 வயது வரை85,037
10 முதல் 15 வயது வரை2,32,147
15 முதல் 20 வயது வரை3,96,172
20 முதல் 25 வயது வரை7,42,820
25 முதல் 30 வயது வரை 11,63,720
ஆக மொத்த கைம்பெண்கள்26,31,788

அல்லாமலும் இத்தகைய விதவைத் தன்மையானது பிரஜா உற்பத்திக்குப் பேரிடரா யிருக்கிறது.  நமது ஹிந்து மதத்திலிருந்து எவரேனும் இரண்டொருவர் பிற மதத்திற்கு  மாற்றப்பட்டால் நம் மக்களுக்கு எவ்வளவோ துன்பம் நேரிட்டுவிட்டதாகக் கருதி பரிதாபப்படுகிறார்கள்.  இதன் காரணம் நமது மதத்தினரில் இருவர் குறைந்து விட்டதால் ஹிந்து சமூகத்திற்குக் கஷ்டமும் நஷ்டமும் ஏற்பட்டு விட்டது என்பதினேதலே யன்றோ? அந்த இரண்டு நபருக்கு இவ்வளவு துக்கமும் துயரமும் ஏற்படுமானால் தற்காலம் நமது இந்திய நாட்டிலுள்ள இருபத்தாறு லட்சத்து முப்பத்தோராயிரத்து எழுநூற்று எண்பத்தெட்டு விதவைகளும் கலியாணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கை நடத்துவதா யிருந்தால் எத்தனை குழந்தைகள் பெறக்கூடும்?   சராசரி மொத்தத்தில் மூன்றில் இருமடங்குப் பெண்களை 2 வருடத்திற்கு ஒரு குழந்தை வீதம் பெறுவதாக வைத்துக் கொண்டாலும் தடவை ஒன்றுக்கு 8,77,263 குழந்தைகள் வீதம் வருடம் ஒன்றுக்கு 4,38,631 பிரஜா உற்பத்தியை நாம் கெடுத்துக்கொண்டு வருகிறோம்.  இது, இரண்டொருவர் மத மாறுவதால் நஷ்டம் வந்து விட்டதாகக் கருதுவோருக்குப் புலப்படுவதில்லை.  பால்மண மாறா 5 வயதிற்குட்பட்ட இளங் குழந்தைகள் மட்டிலும் 11,892 பேர் இருக்கிறார்களென்பதையும் தன் பிறவிப் பயனையே நாடுதற்கில்லாது, இன்பந் துய்த்தற்கில்லாது, அடக்கிவைக்கப்பட்டிருக்கும் 10, 15 வயதிற்குட்பட்ட கைம் பெண்கள் 2,82,147 பேர் இருக்கிறார்களன்பதையும் கேட்கவே என்குலை நடுங்குகிறது.  இத்தகைய படுமோசமான விதவைத் தன்மையை எந்த நாகரீக உலகம் ஏற்கும்?

விதவைகளின் கொடுமையை நீக்கி ஒரு நூறு வருடங்களாக ராஜாராம் மோகன ராய், ஈஸ்வர சந்திரா வித்யாசாகரர், கோலாப்பூர் மகாராஜா, சுரேந்திரநாத் பானர்ஜி முதலிய அறிஞர்கள் பாடுபட் டுழைத்தனர்.  இது போழ்தும் இத்தகைய சீர்திருத்தத் துறையில் பாஞ்சாலத் தலைவர்கள் பலர் இறங்கி உழைத்து வருகின்றனர்.

நமது நண்பர் திருசிரபுரம் திரு.சி.பி.இராஜகோபால நாயுடுகாரு விதவைகளை ரக்ஷிப்பது என்னும் பரோபகாரத் துறையில் இறங்கி, ‘ஆச்சாரம்’ ‘வழக்கம்’  என்று உளரும்  வைதீகப் பைசாசங்களின் பலமான எதிர்ப்புக் கிடையே, நுணுகிய ஆராய்ச்சியுடனும் அனுபவத்துடனும் “விதவா விவாக விளக்கம் “ என்னும் புத்தகத்தை எழுதி யிருக்கிறார்.  இதில் நம் நாட்டு மக்களுக்குள்ள கஷ்டமும் கொடுமையும், அவர்களால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏற்படும் அபகீர்த்தியும், விதவைத் தன்மையைக் காப்பாற்றும் பொருட்டுப் பெரிய பெரிய இழி சொல்லையும் சகித்துக் கொண்டிருக்கும் சாதனையும், விதவைத் தன்மையைக் காப்பாற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இவ்வித அபகீர்த்தி நேருகிறபடியால் இது உலக வழக்கம் என்று சமாதானப்படுத்திக் கொள்ளும் தன்மையும் எவ்வளவு தைரியமாயும் தெளிவாயும் அனுபவமாயும் தெரிவிக்கக் கூடுமோ அதற்கு மேலாகவே அனைவரும் சரி என்று ஒப்புக் கொள்ளத்தக்க வண்ணம் விவரித்து எழுதியிருக்கிறார்.  இப்புத்தகத்தை வாசிப்பவர்கள் எவ்வளவுதான் ‘ஆச்சாரம்’  ’பழக்கம் ’ ‘வழக்கம்’ என்னும் மூட நம்பிக்கையில் ஈடுபட்ட கல் நெஞ்சர்களா யிருந்தாலும் அவர்கள் மனதை இளக்கி விதவைகள்பால் கருணை காட்டும்படி செய்து விடுமாதலால், புத்தகம் உருவில் சிறியதா யிருப்பினும் உலகிற்குப் பயன்படக்கூடிய வகையி லிருப்பதால் இதைப் பெரிய நூல் என்றே கூற வேண்டும்.  இப்புத்தகத்தால் திரு நாயுடுகாரும் நம் நாட்டிற்குப் பெருந்தொண்டு செய்தவராகிறார்.  இது பற்றி திரு நாயுடுகாரு அவர்களுக்கு நமது நாடும், ஹிந்து மதமும் பெண்டி ருலகமும் நன்றி செலுத்தப் பெரிதும் கடமைப்பட்டுள்ளது.

தொகுத்து எழுதியவர் : 

ராமச்சந்திர வைத்தியநாத்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Show 2 Comments

2 Comments

  1. Ramachandra vaidhyanath

    லே அவுட் செய்தவருக்கு/ ஏஅய்க்கு பெரியார் பிடிக்காதவராக இருக்கலாம். அதற்காக பெரியார் எழுதிய கட்டுரையை போடுகையில் பேருக்குக்கூட ஒரு சின்னப் படம் இல்லாமல் தொகுத்தவர் படத்தை ஏகப்பெரிசாக போடுவது சரியல்ல.

  2. Bookday

    தவறை சுட்டிகாட்டியமைக்கு நன்றி தோழர். தவறை சரி செய்து விட்டேன் தோழர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *