வரலாற்றுப் புதையல் - 7:- "சீகன்பால்க் சிரேஷ்டனுடைய சரித்திரம் - மூன்றாம் அதிகாரம்" கட்டுரை - ராமச்சந்திர வைத்தியநாத் | Bartholomäus Ziegenbalg's Arunothayam Tranquibar Machine Press | www.bookday.in

வரலாற்றுப் புதையல் – 7:- “சீகன்பால்க் சிரேஷ்டனுடைய சரித்திரம் – மூன்றாம் அதிகாரம்” கட்டுரை – ராமச்சந்திர வைத்தியநாத்

வரலாற்றுப் புதையல் – 7

சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும்  பல்வேறு பத்திரிகைகளில், அரசு அறிக்கைகளில் வந்த படைப்புகளையும்  செய்திகளையும்  அச்சுப் பிசகாது அறிந்திடும் முயற்சியே இது.  அன்றைய உரைநடையை, இலக்கியப் போக்கினை, வரலாற்றை, செயல்முறையை   அறிந்திடும் முயற்சிகளில் ஒன்றாகக்கூட இதைக் கொள்ள முடியும்.

தரங்கன்பாடி மிசியோனின் பத்திரிகையான அருணோதயம் டிரான்குபார் மிஷின் பிரஸ்ஸில் அச்சிடப்பட்டு வெளிவந்திருக்கிறது. அப்பத்திரிகையில் இந்தியாவில் அச்சுப் புரட்சியை நடத்திய சீகன் பால்க் சிரேஷ்டனின் சரித்திரம் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வந்திருக்கிறது.  செப்டம்பர் 1863 இதழில் வெளியான அதன் மூன்றாம் பகுதி  இங்கே தரப்படுகிறது. ஆச்சரியப்படத்தக்க அபூர்வமான சமாச்சாரங்களை இச்சரித்திரம் கொண்டிருக்கிறது.

சீகன்பால்க் சிரேஷ்டனுடைய சரித்திரம்

மூன்றாம் அதிகாரம்

 சீகன்பால்க் சிரேஷ்டன் பின்பு பத்துவருஷம் மிசியோனை நடத்தினதும் மரணமடைந்ததும்,

தென்மாற்கு சீர்மையிலிருந்துவந்த அந்தப் பணத்தினால் சீகன்பால்க் சிரேஷ்டனாகிய தேவஊழியக்காரர் முதலாவது கடன்களைச் செலுத்தி மிசியோனுக்குச் சொந்தமாகக் கோட்டையில் ஒரு வீட்டையும் புறையாற்றில் ஒரு தோட்டத்தையும் வாங்கினார்கள்.  அந்த வீட்டில் ஒரு பங்கு இன்னம் இருக்கிறது.  அது இப்போது இருக்கிற ஆலோசனை சங்கத்தார் கூடிவருகிற இடந்தான்.  அந்தத் தோட்டத்தில் பிந்தின காலத்திலே பெத்லகேம் கோவில் கட்டப்பட்டது.

1709ம் வருஷம் செப்டெம்பர் மாதம் 2ந்தேதியில் சீகன்பால்க் சிரேஷ்டன் சபையாரில் சிலரைக் கூட்டிக் கொண்டு தஞ்சாவூரைச் சேர்ந்த நாட்டிற்குட்போய்ச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வகைதேடினான். அவனோடு கூடப்போன சனங்கள் எங்கேபோகிறோமென்று அறியவில்லை.  பின்பு தஞ்சாவூருக்குப்போகிறோமென்று சீகன்பால்க் சிரேஷ்டன் சொன்னபோது அவர்கள் எல்லாரும் பயப்பட்டுத் திரும்பிப் போக விரும்பினார்கள்.  அப்போது அவன் சொன்னதாவது, பாரபரன் நம்முடனே கூடவிருந்தால் ஒருவனும் நமக்குச் சேதம்பண்ணக் கூடாது.  என்றாலும் எவனாவது பயப்பட்டால் அவன் வீட்டுக்குப் போகலாம் என்றான்.  ஆனால் ஒருவனுந் திரும்பிப்போனதில்லை.  அவர்கள் தரங்கன்பாடி எல்லையைக் கடக்கிறதற்குமுன் சீகன்பால்க் சிரேஷ்டன் தமிழரைப் போல வஸ்திரத்தை உடுத்துக் கொண்டான்.  பின்பு அவர்கள் வெள்ளத்தினிமித்தம் வரப்பு வழியாய் நடந்து போனார்கள்.  மத்தியானத்தில் பெருமலை என்ற ஒரு சின்ன ஊருக்கு வந்து அங்கே கொஞ்ச நேரம் தங்கி இருக்கையில் அவ்வட்டத்தின் கணக்கை எழுதிவைக்கக் கூடிவந்த அநேக சனங்களைக்கண்டார்கள்.   அவர்கள் நீர் ஆர், எங்கேயிருந்து எங்கே போகிறீர் என்று கேட்டதற்கு அவன் நான் ஒரு குரு தரங்கன்பாடியிலிருந்து தஞ்சாவூருக்குப் போகிறேன், கர்த்தருடைய வசனத்தைக் கேட்கவிரும்புகிற சனங்களைத் தேடுகிறேனென்றான்.  அப்போதவர்கள் நீர் தரங்கன்பாடியில் தமிழ்ப்பாஷையில் பிரசங்கிக்கிற வெள்ளைக்குரு அல்லவா என்றார்கள்.  அவன் ஆம், எப்படி என்னை அறிந்திருக்கிறீர்களென்றான். அப்போமு ஒரு பிராமணன் வெகுநாளுக்குமுன்னே அனந்தமங்கலத்தில் உம்மிடத்தில் பேசினேனென்றான்.  வேறொருவன் இரண்டு வாரங்களுக்குமுன் தரங்கன்பாடியில் உம்முடைய பிரசங்கத்தைக் கேட்டேனென்றான்.  மற்றச் சனங்கள் நீர்மோசத்திலுட்படாதபடிக்குத் திரும்பிப்போனால் தாவிளையென்றார்கள்.  அவன் பிரத்தியுத்தாரமாக ஒரு ஈயைக் கொல்ல அஞ்சுகிற இத்தேசத்தார் மோட்சவழியைக் காட்டுகிற என்னைக்கொலை செய்வார்களா என்றான்.  அதற்கு அவர்கள் உம்மை ஒருவனுங் கொலைசெய்யமாட்டான்.  ஆனால் இத்தேசத்தில் அநேகர் பண ஆசையினிமித்தஞ் சத்தியத்தையும் நீதியையும் விசாரியாமல் போகிறார்கள்.  நீர் தரங்கன்பாடியில் அஞ்ஞானிகளைக் கிறிஸ்தவர்களாக்குகிறீரென்றுங் கொஞ்ச நாளுக்கு முன் வெகு பணஞ் சீர்மையிலிருந்து உமக்கு வந்ததென்றும் எல்லாரும் அறிந்திருக்கிறபடியால் உம்மைக்காண்கிறவன் உம்மைப்பிடித்து  இராசாவினிடத்திற் கொண்டு போவான்.  மேலும் இராசாவின் உத்தரவில்லாமல் வெள்ளைக்காரரில் ஒருவனும் அவர் தேசத்தில் பயணம் பண்ணக் கூடாதென்றார்கள்.  அப்போது சீகன்பால்க் நான் இன்னானென்று எப்படிகண்டறிவார்கள் என்க.  அவர்கள் தரங்கன்பாடியிலிருநது ஒரு மாடு வந்தால் அதையொருவரும் போய்ப்பார்ப்பார்ரர்கள்: ஆனால் யானை வந்தாலோ எல்லாரும் முக்கியமாய்ப் போய்ப் பார்ப்பார்கள்.  அப்படிப்போல நீர் எங்களைப் போலொத்த மனிதனானால் உம்மைக் கவனியார்கள்.  நீர் வெள்ளைக்குருவாயிருக்கிறதினாலும் எப்போதும் மோட்சவழியைப் பிரசங்கிக்கிறபடியினாலும் நீர் மறைவாயிருக்கக்கூடாதேயென்றார்கள்.  அப்போது அவன் அவர்கள் சொற்படி வேறுவழியாய்த் தரங்கன்பாடிக்குத்திரும்பினான்.  அவன் அவ்வளவு சீக்கிரமாய்த் திரும்பி வந்ததற்காக மற்றத் தேவஊழியக்காரர் ஆச்சரியப்படாலுந்த தரங்கன்பாடியில் அறிவிக்கப்பட்ட சுவிசேஷம் தஞ்சாவூருக்குக்கடுத்த எல்லைகளில் கொஞ்சம் அறிவிக்கப்பட்டதற்காகச் சந்தோஷப்பட்டார்கள்.  இப்போது இந்தியாதேசமெல்லாஞ் சுவிசேஷத்தின் பிரசங்கத்திற்குத் திறந்து வைத்திருக்கிறதற்காக அதிகமாயச் சந்தோஷப்பட முகாந்திரமுண்டு.

மறுமாதமாகிய அக்டோபர் மாதம்  16 ந்தேதியைத் தேவஊழியக்காரர் பெரிய சந்தோஷ நாளாக எண்ணினார்கள்.  அதேதெனில் அந்த நாளிலே கணபதிவாத்தியாரென்ற ஒரு கனம்பெற்ற தமிழன் தன்தகப்பன் முதலிய ஆஞ்ஞானிகளுடைய விரோதத்தைக்கவனியாமல் மிசியோன் வீட்டிலே ஞானஸ்நானம் பெற்றான்.  சீகன்பால்க் சிரேஷ்டன் தென்மாற்கு ராசாவை அவன் ஞானத்தகப்பனாக்கி அவனுக்குக் கிறிஸ்தியான் பிரீதரீக்கென்று பேரிட்டான்.   சீகன்பால்க் சிரேஷ்டனுக்கு முந்தி தமிழ்ப்பாஷையைப் போதிவித்த வாத்தியினுடைய மகனாகிய இவன் தன் தகப்பனைப்பார்க்க வெகு அதிக அறிவைப்பெற்று ஞானஸ்நானத்துக்கு முன் ஞானஉபதேசத்தின் ஐந்து மந்திரங்களையுஞ் செய்யுளாக்கிப் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளுக்குப் போதிவித்து வந்தான்.  ஞானஸ்நானம் பெற்ற பிற்பாடு அஞ்ஞானிகளோட சம்பாஷிக்கிறதினாலும் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளுக்கும் போதிக்கிறதினாலுந் தேவஊழியக்காரருக்கு நல்ல உதவியாயிருந்தான்.  ஆனாலிவனிமித்தம் அவர்களுக்கு  வந்த சந்தோஷஞ் சீக்கிரமாய்த் துக்கமாக மாறிப் போயிற்று.  1710ம் வருஷத்தில் இவன் தரங்கன்பாடியிலிருந்த உரோமான் குருவுக்குச் செவிகொடுத்து உரோமான் சபையில் உட்பட்டுப் பின்புமறுபடியும் அஞ்ஞானத்தில் விழுந்து பூசாரியாக விருந்து இறந்துபோனான்.  இவனைப்போல் மிசியோனில் ஊழியஞ் செய்கிறவர்களில் அநேகர் உண்மையற்றவர்களாயிருக்கிறதினால் மிசியோனுக்கு வருந் தடையைநீக்க நீங்கள் எல்லாருங் கவலையாயிருங்கள்.   1709ம் வருஷத்தில்  17 பேர் ஞானஸ்நானம் பெற்றார்கள்.  அவ்வருஷத்தின் முடிவில் 36 பேர் ஞான உபதேசத்தைப் படித்து ஞானஸ்நானத்திற்கு ஆயத்தப்பட்டார்கள்.

1710ம் வருஷம் ஜனவரி மாதம் 7ந்தேதியில் சீகன்பால்க் சிரேஷ்டன் முதல் விசை சென்னப்பட்டணத்திற்கு  பயணம் போனான்.  அது அக்காலத்திலும் இங்கிலீஷ்காரருடைய வசத்திலிருந்தது.  அங்கே இருந்த இங்கிலீஷ் கவர்ணர் அவனைத்தன் வீட்டிலே ஏற்றுக் கொண்டு பட்சமாய் நடத்தினான்.  அவன் மூன்று வாரம் அங்கே தங்கி கடைகளிலும் வீதிகளிலும் கிறிஸ்துவைக்குறித்து சாட்சி கொடுத்தபின் அங்கே யிருந்து புறப்பட்டு பிப்ரவரி மாதம் 12ந்தேதியில் தரங்கன்பாடிக்குத் திரும்பி வந்தான்.

1710ம் வருஷத்தில் பிலீட்ஷோஐயர் தரங்கன்பாடியைவிட்டுத் தான் பிறந்த தேசத்திற்குத் திரும்பினான்.  சீகன்பால்க் சிரேஷ்டன் ஐந்து வருஷம் மாத்திரந் தரங்கன்பாடியிலிருந்பேன் என்று அவனைப் போல் வார்த்தைப் பாடு கொடுத்திருந்தும் அவனுடனே போகவில்லை.  இவனுங் கிரீண்ட்லர் ஐயருந் தங்கள் மரண நாள் மட்டும் மிசியோனில் கர்த்தருக்கு ஊழியஞ் செய்யத் தீர்த்துக் கொண்டார்கள்.  பிலீட்ஷோ ஐயர் சீர்மைக்குப் போன நாட்களில்தான் 1711ம் வருஷம் சூலை மாதம் 10ந்தேதியில் சீகன்பால்க் சிரேஷ்டன் இரண்டாம் விசை சென்னப்பட்டணத்திற்குப் போனான்.  ஒரு விசை அங்கேயிருந்து புறப்பட்டுப் பயணம் பண்ணுகையில் பெரிய மோசத்தில் உட்பட்டான்.  திருப்பதியென்ற ஒரு இடத்தில் ஒரு பெரிய அஞ்ஞானப் பண்டிகை ஆசரிக்கப்படுமென்று கேள்விப்பட்டுச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அங்கே போனான்.  அவன் ஐந்து நாள் பயணம் பண்ணின பின் ஒரு சத்திரத்தில் இராத்தங்கி நித்திரை பண்ணுகையில் சம்பவித்ததேதென்றால் சில பிராமணர் வந்து ஒருவரோடொருவர் இதோ நித்திரை பண்ணுகிறான், அவனைக் கொலை செய்வோமென்றார்கள்.  ஆனால் கர்த்தர் தம்முடைய பிள்ளைகளைக் காப்பாற்றிவருகிறாரென்பது அந்தச் சமயத்திலும் விளங்கிற்று.  அவனோடுகூடவிருந்த தாவீதென்ற ஒரு பள்ளிக்கூடத்துப் பிள்ளை அந்தப் பிராமணர் சொன்னத்தைக்கேட்டு அவனை யெழுப்பினான்.  அப்போது கொலைக்காரர்போய்விட்டார்கள்.  சீகன்பால்க் மிகவும் வியாதிப்பட்டபடியால் நெடுங்காலமாகச் சென்னப்பட்டணத்திலிருந்தபோது தரங்கன்பாடியிலுள்ள சபையாருக்குப் புத்தி சொல்லி ஆறுதல் செய்யும்படிக்கு ஒரு நல்ல காகிதத்தை எழுதியனுப்பினான்.  1712ம் வருஷம்  ஜனவரி மாதம் 5ந்தேதியில் அவன் தரங்கன்பாடிக்கு திரும்பி வந்தான்.  1712ம் வருஷத்தில் சபையின் தொகை 21பேருக்குதிகமாயிருந்தது, 56 பிள்ளைகள் பள்ளிக்கூடங்களில் படித்தார்கள்.

1709ம் வருஷத்தின் துவக்கத்தில் காவலிலிருந்து விடுதலையாக்கப்பட்ட பின் புதிய ஏற்பாட்டைத் தமிழ்ப்படுத்தி வந்தான்.  1711 ம் வருஷம் மார்ச்சு மாதம் 31ம் தேதியில் அவன் பராபரனைத் தோத்தரித்து சொன்னதாவது, இன்று புதிய ஏற்பாட்டின் புஸ்தகங்களை எல்லாந் தமிழ்ப்படுத்தி முடித்தேன்.  இந்தியா தேசத்தில் எல்லாத் திரவியங்களிலும் இந்தத்திரவியமுயர்ந்தவிலையாயிருக்கிறதென்றான்.  இங்கிலாந்து தேசத்திலுள்ள அநேக நல்ல கிறிஸ்தவர்கள் தரங்கன்பாடி மிசியோனைப்பற்றிய நல்லசெய்தியைக் கேட்டு அதற்கு உதவி செய்ய ஆசைப்பட்டார்கள்.  அவர்கள் கொடுத்த பணத்தினால்  1711ம் வருஷத்தில் ஒரு இங்கிலீஷ் அச்சு இயந்திரம் வாங்கப்பட்டு  1712ம் வருஷத்தில் தரங்கன்பாடிக்கு வந்தது.  அந்த அச்சுக்கூடத்தில் அனேக பொர்த்துகீஸ் புஸ்தகங்கள் அச்சுப்பதிப்பிக்கப்பட்டது.  மிசியோனுக்கு அதிக பிரயோசனம் வரும்படிக்கு ஆலே பட்டணத்திலுள்ள நமது மிசியோனின் உபகாரிகள் அந்தப்பட்டணத்தில்தான் தமிழ் எழுத்துக்களை வார்ப்பித்தார்கள்.  அந்த அச்சுகளைப் பரிசோதித்து அவைகளால் விசுவாசப் பிரமாணத்தை அச்சடித்தார்கள். அதற்கு முன் தமிழில் எழுதப்பட்டதொன்றும் அச்சடிக்கப்படவில்லை. 1713 ம் வருஷத்தில் பெர்லின் (BERLIN) ஆத்லேர் (ADLER) என்று பேர்கொண்ட இரண்டு துரைகள் அந்தத் தமிழ் அச்சுக்கூடத்தைத் தரங்கன் பாடிக்குக் கொண்டு வந்தார்கள்.  அல்மன்னியா தேசத்திலிருந்து வந்த அந்தத்தமிழ் அச்சுகளால் 1714 ம் வருஷத்தில் புதிய ஏற்பாட்டின் முதலாம் பங்கு அச்சடிக்கப்பட்டு முடிந்தது.  அதிலே நாலு சுவிசேஷங்களும் அப்போஸ்தலருடைய நடபடிகளும் அடங்கியிருந்தது.  பிற்பாடு கடிதாசி குறைபட்டதினிமித்தம் ஆத்லோ துரை தரங்கன்பாடியில் அதிகசின்ன அச்சுகளை வார்ப்பித்தான்.  அந்த அச்சுகளால் 1715ம் வருஷத்தில் புதிய ஏற்பாட்டின் இரண்டாம் பங்கை அச்சடித்து முடித்தார்கள்.  அப்புறங் கடிதாசி குறைபடாதபடிக்குப் பிரயோசனமுளள் மிசியோன் ஊழியக்காரனாகிய அந்த ஆத்லேர் துரை புறையாற்றில் கடிதாசியை உண்டு பண்ணிணான்.  இக்காலத்திலும் தரங்கன்பாடி அச்சுக்கூடத்தினால் மிசியோனுக்கு அதிகமான பிரயோசனம்  வரும்படிக்குக் கர்த்தர் கிருபைசெய்வாராக.

1716ம் வருஷம் சூலை மாதம் 21ந் தேதியாகிய சந்தோஷநாள் முதற்கொண்டு பணக் குறைச்சலினால் இந்த மிசியோன் தடை பண்ணப்பட்டதில்லை.  1711ம் வருஷத்தில் மிசியோனின் பெரிய உபகாரியாகிய தென்மாற்கு இராசா ஒரு பொதுவான பொக்கிஷத்திலிருந்து வருஷந்தோறும் மிசியோனுக்கு 2000ரூபாய்க் கொடுக்கப்படவேண்டுமென்று மாறாத கட்டளையாக்கக் கட்டளையிட்டான்.  அப்போது மரண அவஸ்தையிலிருந்த லீட்கின்ஸ் ஐயர் அதைக்கேட்டபோது மிகவுஞ் சந்தோஷப்பட்டுச் சொன்னதாவது, இப்போதுசந்தோஷமாய் மரிப்பேன், கர்த்தர் இராசாவை ஆசிர்வதிப்பராக என்று சொல்லி கொஞ்சக்காலத்திற்குப் பின் மரித்தான். 1714ம் வருஷத்தில் இராசா கோப்பனாகன் பட்டணத்தில் மிசியோன் கொலேகியும் என்கிற ஒரு சங்கத்தை ஏற்படுத்தினான்.  அது முதல் அந்தச் சங்கத்தார் தென்மாற்கு தேசத்தில் மிசியோன் காரியங்களை விசாரித்து வந்தார்கள்.  அந்த வருஷத்தில்தான் சேதப்பட்ட ஒரு கப்பலில் இழந்துபோன  2000ரூபாய்குப் பதிலாக இராசா தன் சொந்தப் பணத்திலிருந்து வேறே 2000ரூபாயைத் தரங்கன்பாடிக்கு அனுப்பினான்.

தரங்கன்பாடியிலுள்ள துரைகளின் விரோதத்தினால் மிசியோனுக்கு வந்த தடையையும் முழுவதும் மேற்கொள்ளும்படிக்குச் சீகன்பால்க் சிரேஷ்டன்  1714ம் வருஷத்தில் சீர்மைக்குக்குப் போகத் தீர்த்துக் கொண்டான்.  ஆசியூஸ் என்றபெரியதுரை அதைக்கேட்டு ராசாவின் கோபத்துக்குப்பயந்துதான் அவ்வளவாய்த் துன்பப்பபடுத்தின சீகன்பால்க் சிரேஷ்டனை அவன் போகுமுன் தன் சினேகிதனாக்கிக்கொள்ளப் பிரயாசைப்பட்டான்.  ஆதலால் அந்த வருஷத்தின் அக்டோபர் மாதம் 14ந் தேதியில் ஆகியூஸ் முதலிய டேனிஷ் ஆலோசனைக்காரருஞ் சீகன்பால்க் கிரீண்ட்லர் என்கிற இரண்டு மிசியோனேரிமார்களும் ஒருவரோடொருவர் சமாதானமாகி நடந்த எல்லாத்தையும் மன்னித்து மறந்துபோவோம் என்று ஒரு காகிதம் எழுதி அதின் கீழ்க்கையொப்பம் வைத்து உறுதிப்படுத்தினார்கள்.  இங்கிருந்த கிறிஸ்தவர்கள் தங்கள் போதக பிதாவாகிய சீகன்பால்க் சிரேஷ்டன் தங்களை விட்டுப் போகமனதாயிருக்கிறதைக்கேட்டு மிகவுந் துக்கப்பட்டார்கள்.  அஞ்ஞாளிகளிலும் அநேகர் தேவனுக்குச் சமீபமான ஒரு பரிசுத்த மனிதன் தங்களுக்குச் சமீபமாய்வாசம் பண்ணுகிறதினால் தங்களுக்குப் பிரயோசனம் வருமென்றெண்ணி அவன் போனதற்காக விசனப்பட்டு அவன் சீக்கிரமாய்த் திரும்பிவரவேண்டுமென்று வேண்டிக் கொண்டார்கள்.  அக்டோபர் மாதம் 31ந் தேதியில் அவன் கப்பலேறினான்.  1715ம் வருஷம் சூன் 1மாதம் ந்தேதியில் நொர்வே தேசத்திலுள்ள பெர்கென் (Bergen) என்ற பட்டத்தில் கப்பலிலிருந்திறங்கி அங்கேயிருந்து அல்மன்னியா தேசத்திலுள்ள ஸ்திரால்கண்ட் (Stralsund)  பட்டணத்திற்குப்போய்ப் போராட்டத்தினிமித்தம் அங்கே பாளயமிறங்கின  தென்மாற்கு இராசாவைக்கண்டு அவரிடத்தில் மிகுந்ததயவைப் பெற்றான்.  மறுபடியுங் கோப்பனாகன் பட்டணத்திற்குப் போய் மிசியோனுக்கு மிகுந்த பிரயோசனமுண்டாக அங்கிருந்து கொலேகியு சங்கத்தாரையும் இந்தியாவில் வியாபாரஞ் செய்கிறவரின் தலைவரையுஞ் சந்தித்தான்.  அங்கேயிருந்து அவன் தன்பிறந்தகதேசமாகிய அல்மன்னியா தேசத்திற்குப் போய்மிகுந்த சந்தோஷத்துடனே பிறாங்கே சாஸ்திரி முதலிய சினேகிதரையும் மிசியோன் உபகாரிகளையுங் கண்டான்.  முன்னே தன்னால் போதிவிக்கப்பட்ட பிள்ளைகளைப் பெரியவர்களாகத் திரும்பக் கண்டு அவர்களில் ஒருத்தியாகிய தோரோதேயா சாஸ்ட்ஸ்மன் (Dorothea Salzmann) என்கிற தேவபத்தியுள்ள கன்னியாஸ்திரியை விவாகம் பண்ணினான். அவன் ஆலே பட்டணத்திலிருக்கையில் தென்மாற்கு இராசா அவனை மிசியோனின் சிரேஷ்டகுரு அதாவது மிசியோனை விசாரிக்கிற குருவாக ஏற்படுத்தினான்.

தொகுத்து எழுதியவர் : 

ராமச்சந்திர வைத்தியநாத்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *