வரலாற்றுப் புதையல் – 8
சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும் பல்வேறு பத்திரிகைகளில், அரசு அறிக்கைகளில் வந்த படைப்புகளையும் செய்திகளையும் அச்சுப் பிசகாது அறிந்திடும் முயற்சியே இது. அன்றைய உரைநடையை, இலக்கியப் போக்கினை, வரலாற்றை, செயல்முறையை அறிந்திடும் முயற்சிகளில் ஒன்றாகக்கூட இதை கொள்ள முடியும்.
வை.கோவிந்தன் அவர்களின் சக்தி பிரசுராலயம் குகப்பிரியை அவர்களை பதிப்பாசிரியராகக் கொண்டு பெண்களின் புத்தகமாக 1945 டிசம்பர் முதல் மங்கை மாதந்தோறும் வெளியிடப்பட்டு வந்தது. பின்னர் விசாலாட்சி அவர்களை ஆசிரியராகக் கொண்டு மாத இதழாக வெளிவந்தது. கல்பனா தத் குறித்து செப்டம்பர் 1947 இதழில் வெளியிடப்பட்ட கட்டுரை இது. பின்னாளில் பொம்மை, அம்புலிமாமா இதழ்களை வெளியிட்டு வந்த விஜயா குழுமம் சார்பில் இதே பெயரில் மங்கை எனும் மாத இதழும் வெளியிடப்பட்டு வந்திருக்கிறது.
கல்பனா தத்
புதுமைப்பெண்
நளாயினி, சாவித்திரி, கண்ணகி போன்ற பல மாதர் திலகங்கள் நமது பழம் பெரும் பாரதத்தின் சரித்திரத்தை அலங்கரிக்கிறார்கள். இது பழங்கதை.
இன்று நாம் புதிய சகாப்தத்தில் வாழ்கிறோம். கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நம்மை அடிமைப்படுத்தி வரும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துவரும் சுதந்திரப் போராட்ட சகாப்தத்தில் வாழ்கிறோம். இந்திய சுதந்திரச் சரித்திரத்தில் பல வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். ஆண்களுக்குப் பெண்களும் சளைத்தவர்களல்ல. எத்தகைய தியாகம் செய்யவும் தயங்கவில்லை என்பதை பல வீராங்கனைகள் நிரூபித்துக் காட்டி யிருக்கிறார்கள். இந்தியாவை அடிமைத்தளைகளிலிருந்து விடுவித்து, சுதந்திர சுபீட்ச இந்தியாவைச் சமைப்பதில் முக்கிய பங்கெடுத்துக் கொண்ட மாதர்களில் சிட்டாகாங்கில் பிறந்து வளர்ந்த கல்பனாதத் தலைசிறந்தவள். அத்தகைய வீராங்கனையைப் பெற்றதற்காக பெண்கள் சமூகம் பெருமை யடையாமலிருக்க முடியாது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சரித்திரம் நீண்டது. மனதை உருக்கும் சம்பவங்கள் நிறைந்தது. பலர் பல முறைகளைப் பின்பற்றி, நமது தாய்த் திருநாட்டின் அடிமைச் சங்கிலியை உடைத்தெறியப் பெரிதும் பாடுபட்டார்கள்.
பொது ஜனங்களை வாட்டி வதைத்துவரும் ஆங்கிலேய அதிகாரிகளை ஒரு சில தன்னலமற்ற, அஞ்சா நெஞ்சம் படைத்த வீர இளைஞர்களும், பெண்களும் கொல்வதன் மூலமாக சுதந்திரம் பெற்றுவிடலாமென்று நினைத்தார்கள் பயங்கர இயக்கவாதிகள். 1906-ம் வருடத்திலிருந்து, இவர்கள் பெரும்பாலும் வங்காளத்திலும், பாஞ்சாலத்திலும் செயலாற்றி வந்தார்கள்.
வங்காளத்தில் பிரசித்திபெற்ற அம்பிகா சக்கிரவர்த்தி, சூர்யாஸென், அனந்த சிங் போன்ற வீர வாலிபர்கள் “இந்தியக் குடியரசுப் படை“ என்ற இரகசிய ஸ்தாபனத்தை அமைத்திருந்தார்கள். “நான் சிட்டகாங் புரட்சி வீரர்களின் கூட்டத்தில் சேரும்பொழுது, இளம் பெண்ணாக இருந்தேன்“ என்று கல்பனா தத் கூறுகிறாள். ஆம், பதினைந்து வயதுகூடப் பூர்த்தியாகாத பள்ளிப் பெண்ணாக இருந்தாள், தான் புரட்சி இயக்கத்தில் ஈடுப்படும்பொழுது.
சுதந்திரத் தாகத்தால் தவியாய்த் தவித்தாள் கல்பனாதத். ஏகாதிபத்தியத்தின் மீதுள்ள வெறுப்பும், தாய் நாட்டின் மீதுள்ள பற்றுதலும் அவளைப் புரட்சி வேலையில் குதிக்கும்படி தூண்டிற்று. ஆனால், அந்தக் காலத்தில் புரட்சிக்குழாத்தில் சேருவது அவ்வளவு சுலபல்ல. அன்னிய சர்க்கார் புரட்சி வீரர்களை வலை போட்டுத் தேடினார்கள். அகப்பட்டால், அவர் கதி அதோகதிதான். எனவே, புரட்சிக் குழாத்தின் கட்டுப்பாடு கடுமையாக இருக்கத்தானே செய்யும்? துப்பாக்கி கொண்டு எதிரிகளைச் சுடுவது, தலைமறைவாக வாழ்வது, தூக்கு மேடைக்குப் போகத் தயாராக இருப்பது போன்ற பணிகளுக்குப் பெண்கள் அருகதை யற்றவர்கள் என்று கருதினார்கள் நமது பழைய சுதந்திர வீரர்கள். பெண்கள் இளகிய மனதுடையவர்கள், அடுக்களையில் அடுப்பூதத்தான் தகுதியுள்ளவர்கள் என்ற பத்தாம் பசலி வாதம் நிலவிய காலமல்லவா அது? எனவே, சூழ்நிலைக்குத் தகுந்தபடி, அவர்களும் அப்படி நினைத்ததில் ஆச்சரியமில்லை! ஆனால், அந்த மனோபாவத்தை கல்பனாதத் உடைத்தெறிந்தாள். ஆண்களுக்குப் பெண்கள் சளைத்தவர்களல்ல என்ற உண்மையை நிரூபித்துக் காட்டினாள்.
புரட்சிக் கூட்டத்தில் கல்பனாதத் சுலபமாகச் சேர முடியவில்லை. “நான் அனந்த சிங்கை நேரில் பார்த்ததில்லை. அவர் ஜெயிலுக்குப் போன பின்புதான் அவரோடு எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. பெண்களைப் புரட்சி இயக்கத்தில் சேர்க்கக் கூடாது என்று கருதினார். எங்களை நம்பவில்லை….. (பின்பு) அவர் தொடர்பு கிடைத்தது. இந்த உலகில் நான் அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானது எனக்கு மிகப் பெரிய பெருமையை அளித்தது…. எந்தக் காரியத்தையும் செய்து முடிக்க முடியும் என்று நானும் நினைக்க ஆரம்பித்தேன்….“ என்று கல்பனாதத் தனது சுய சரிதத்தில் குறிப்பிடுகிறாள். அப்பொழுது 16, 17 வயதுப் பெண்.
“இந்தியக் குடியரசுப் படை“யில் கல்பனாதத் சேர்ந்தாள். புரட்சிக்காரர்கள் கொடுத்த வேலையைத் திறம்படச் செய்து முடித்தாள். பெண்களைப் பற்றி தவறான அபிப்பிராயங்கொண்டிருந்த அனந்தசிங்கே, பின்பு, “புரட்சி வேலையில் பெண்கள் என்ன செய்யக்கூடும் என்பது பற்றி நான் தவறான எண்ணங்கொண்டிருந்தேன், இந்தத் தவறான அபிப்பிராயத்திற்காக மன்னிக்க வேண்டும்“ என்று கல்பனாதத்திற்கு எழுதியிருந்தார்.
சிட்டாகாங்கிலுள்ள ஆயுத்தச்சாலையைச் சூறையாடப் புரட்சி வீரர்கள் திட்டமிட்டார்கள். அதற்கு வேண்டிய ஆயத்தங்களும் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. அச்சமயத்தில் காலேஜில் படித்துக் கொண்டிருந்தாள் கல்பனாதத். படிப்போடு, புரட்சி வேலைகளும் நடந்தன. இரகசியமாக போலீஸ் ‘புலிக‘ளின் கையில் சிக்காததோடு, அவர்கள் சந்தேகப் படுவதற்குக்கூட இடம் கொடுக்காமல், தந்திரமாகப் புரட்சி வேலைகளைச் செய்து வந்தாள்.
இந்திய சரித்திரத்தில் பொன் னெழுத்துக்களில் பொறிக்கவேண்டிய சிட்டகாங் ஆயுதச்சாலை தாக்குதல் 1930-ம் வருடம் ஏப்ரல் மாதம் 18-ந்தேதி நடத்து. “இரவு பத்துமணி யிருக்கும். தபால் ஆபீஸும், ஆயுதச் சாலையும், போலீஸார் பாரக்குகளும் ஒரே சமயத்தில் ஆயுதம் கொண்டு தாக்கப்பட்டன. காட், தூம் ஆகிய இரு இடங்களில் தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன. காந்திஜி சட்டத்தை மீறும்படி அறைகூவி அழைத்திருக்கிறார். எனவே, தேசத் துரோகம் என்ற சட்டத்தைத் தகர்த்தெறிகிறோம் என்ற துண்டுப் பிரசுரம் நகரம் முழுவதும் வினியோகிக்கப்பட்டது. இந்தியக் குடியரசுப் படையின், சிட்டகாங் கிளை ஸ்தாபனத்தின தலைவர் என்ற பெயரோடு மற்றொரு துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டது. அதில், தாக்குதலின் நோக்கம் விவரிக்கப் பட்டிருந்தது….. ஆயுதச் சாலையில் மேஜர் பெர்ரோல் கொல்லப்பட்டார். போலீஸ் பாரக்கில் இரண்டு காவலாளிகள் இறந்தனர்.
“போலீஸ் பாரக்கையும், ஆயுதச்சாலையையும் புரட்சிக்காரர்கள் கைப்பற்றினார்கள்…… ஆயுதச்சாலைக்கு எதிரே இருந்த ஒரு குன்றில் சர்க்கார் படைகள் இருந்தன. இங்கிருந்து கொண்டு, புரட்சிக்காரர்களைத் தாக்கி வந்தார்கள். சாதகமற்ற இடத்தில் புரட்சிக்காரர்கள் இருந்தபோதிலும், சர்க்கார் படைகளின் தாக்குதலை முடியடித்து வந்தார்கள்.
“ஆனால் அந்த இடத்தில் நீண்டகாலம் இருப்பது அபாயம். எனவே, முடிந்தவரையிலும் ஆயுதக்ளைத் தூக்கிச் சென்று, மிஞ்சியவைகள் அழிக்கப்பட்டன.
“ஜலாலா பாத் குன்றில் போராட்டம்! ஏப்ரல் 22-ந்தேதி மாலை 4-30 மணி இருக்கும். புரட்சிக்காரர்கள், பிரிட்டிஷ் துருப்புகளோடு போராட்டத்தை ஆரம்பித்தார்கள். ஜலாலா பாத் குன்றில் நின்று கொண்டு புரட்சிக்காரர்கள் போராடினார்கள். அதற்கு எதிரே இருந்த குன்றில் பிரிட்டிஷ் துருப்புகள் இருந்தனர். இருட்டுவது வரையிலும் பயங்கரமான போராட்டம் நடந்தது. இறுதியில் பிரிட்டிஷ் துருப்புகள் பின்வாங்கின. இரண்டு தரப்பிலும் பலர் கொலையுண்டு போனார்கள். ஜலாலா பாத் குன்றில் நடந்த வீரம் செறிந்த போராட்டத்தை, எதிரிக்கு அடிபணியாத போராட்டத்தை சிச்சகாங்கிலுள்ள புரட்சி மனப்பான்மை படைத்த இளைஞர்கள் ஒரு இதிகாசமாகவே கருதினார்கள். “ (கல்பனாதத் எழுதிய சுய சரித்திரம்)
ஒரு சில வீரர்கள் பிரம்மாண்டமான பிரிட்டிஷ் துருப்புகளின் பீரங்கிகளிலிருந்து சரமாரியாகப் பொழியும் குண்டுகளோடு எவ்வளவு நாட்கள் போராட முடியும்? ஆகவே, கிராமங்களுக்குப் பின்வாங்கினார்கள். கொரில்லாப் போர் முறையைப் பின்பற்றி, பிரிட்டிஷ் சர்க்காரைத் தொடர்ந்து தாக்குவது என்ற உறுதியோடு பின்வாங்கினார்கள். மொத்தம் 160 சர்க்கார் சிப்பாய்கள் இறந்து போனார்கள். இந்த வீரம் செறிந்த போராட்டத்தில் கல்பனாதத்தும் பங்கெடுத்துக் கொண்டாள். ஆனால், பிடிபடாமல் எப்படியோ தப்பினாள்! பல வீரர்களை அன்னிய சர்க்கார்” தாய் நாட்டை நேசித்தார்கள் “ என்ற குற்றத்திற்காக ஈவிரக்கமின்றி பழி வாங்கிற்று.
பின்னர் பல இடங்களில் நடந்த பயங்கரச் செயல்களில் கல்பனாதத் தொடர்ச்சியாகப் பங்கெடுத்துக் கொண்டு வந்தாள். சிட்டகாங் ஆயுதச்சாலையைத் தாக்கிய பின்பு மேலும் பல பெண்களைப் புரட்சிக் கட்சியில் சேர்த்துக் கொண்டார்கள். ஸாவித்ரி தேவி, ஸிஹாஸின் கங்குலி போன்ற வீராங்கனைகள் புரட்சிக் கட்சியில் சேர்ந்தார்கள். “இவ்வாறு பெண்களையும் புரட்சிக் கட்சியில் சேர்த்துக் கொண்டு, புரட்சி செய்வதன் மூலமாக, உற்சாக மூட்டக்கூடிய ஒரு புது சகாப்தத்தைப் பொதுமக்களுக்குக் காட்டுவோம் “ என்று புரட்சி வீரர்களில் தலைசிறந்தவரான ஸூர்யா ஸென் கூறினார்.
1932-ம் வருடம் ஸெப்டம்பர் மாதம் 24-ந்தேதியன்று பஹார்தலி ரெயில்வே கிளப்பை பிரதிவாதாதார் என்ற வீராங்கனையின் தலைமையில் ஆயுதம்கொண்டு புரட்சிக்காரர்கள் தாக்கினார்கள். மொத்தம் 13 பேர்களுக்குப் படுகாயம். ஸ்ரீமதி ஸில்விவான் அங்கேயே இறந்து போனாள். பிரீதியும் திரும்பும்பொழுது தற்கொலை செய்து கொண்டாள்.
அச்சமயத்தில் போலீஸ் வேட்டை கடுமையாக இருந்தது. எனவே, கல்பனாதத்தும் ஒளிவு மறைவாகப் புரட்சி வேலைகளைச் செய்து வந்தாள். “1932-ம் வருடம் ஸெப்டம்பர் மாதம் 17-ந்தேதி இரவு சிட்டகாங்கிலுள்ள பஹார்தலி கிளப்பிற் கருகில், நான் ஆண் உடையில் போய்க் கொண்டிருக்கும்பொழுது போலீஸார் என்னைக் கைது செய்தார்கள்,,,,, நான் அப்பொழுது பி.ஏ. வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். தலைமறைவாக இருந்த கூட்டத்தைச் சேர்ந்தவளல்ல. “
“ஆண் உடையில் பெண்ணா? …… இது போலீஸாருக்குப் புரியாத மர்மமாகவே இருந்தது….. இரவில் போலீஸார் என்னைச் சந்தேகித்து வந்தார்கள். என்னைக் கண்காணித்து வந்தார்கள். “கல்லூரிக்குப் போவது, திரும்பி வருவது என்பதைத் தவிர அவள் வீட்டை விட்டு வெளியே கிளம்பினது கிடையாது“ என்று அவர்கள் திருமபத் திரும்ப அறிவித்தார்கள்….“ என்று கல்பனாதத் தமது சுயசரித்திரத்தில் குறிப்பிடுகிறாள். ஆயினும் போலீஸார் சந்தேகம் அறவே அகலவில்லை.
இந்தச் சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குள் பிரீதியின் தலைமையில் பஹார்தலி கிளப் தாக்கப்பட்டது. இதில் கல்பனாதத்துக்கும் பங்குண்டு என்று போலீஸார் திடமாக நம்பினார்கள். போதிய சாட்சியம் கிடையாததால், 109 வது சட்டப்படி கல்பனாதத்தைக் கைது செய்தார்கள். ஜாமீனில் விடுதலையானாள். விபச்சாரத்தனம் செய்வதற்காகக் தங்களை இன்னாரென்று காட்டிக் கொள்ளாமல் வேஷம் மாற்றித் திரியும் பேர்வழிகளைத்தான் இந்தச் சட்டப்படி கைது செய்வது வழக்கம்!
டிசம்பர் மாதம் ஜாமீனில் இருக்கும்பொழுது தப்பி, வெளியேறிவிட்டாள். 109 சட்டப்படி கல்பனாதத்தின் மீது குற்றஞ் சாட்டினார்களென்றாலும், ஆயுதச் சாலையைத் தாக்கிய சம்பவத்திற்குப் பிறகு, அதில் கைப்பற்றிய ஆயுதங்களை கல்பனாதான் ஒளித்து வைத்திருக்கிறாள் என்றும், கட்சியில் ஏனைய பெண்களைச் சேர்க்க முயன்றாளென்றும், புரட்சிக்காரர்கள் செய்த பல பயங்கரச் செயல்களில் பங்கெடுத்துக் கொண்டாளென்றும் பல குற்றங்களைச் சாட்டினார்கள்!
இதைப் பார்த்துப் பொது ஜனங்கள் சிரித்தார்கள். 109வது சட்டப்படி அரசியல் விசாரணையா?
1933-ம் வருடம் மே மாதம் 19 தேதியன்று காஹிரா கிராமத்தில் கல்பனாதத் பிடிபட்டாள். ஜூன் மாதம் சிட்டகாங்க் சதியாலோசனையில் சிக்கின இரண்டாவது கூட்டத்தின் விசாரணை முடிந்து, தீர்ப்பும் கூறப்பட்டது.
ஸூர்யாஸென், கார் கேஸ்வர் தாஸ்திகார் முதலியர்களுக்கும், கல்பனாதத்துக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்பு, கல்பனாதத் பெண்ணாக இருப்பதாலும், யௌவனனப் பெண்ணாக இருப்பதாலும் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. ஸூர்யாஸென் முதலிய சுதந்திர வீரர்கள் தாய் நாட்டின் விடுதலைக்காக, தூக்குக் கயிற்றை முக மலர்ச்சியுடன் ஆலிங்கனம் செய்தார்கள்!
அன்னிய ஏகாதிபத்தியத்தின் குண்டுக்கும், தூக்கு மேடைக்கும் பலியாகாதவர்கள் பத்து இருபது வருட சிறைத் தண்டனையைப் பெற்றார்கள். சிறைக் கோட்டத்தில் படிப்பதற்கும், ஆழ்ந்து சிந்திப்பதற்கும் போதிய அவகாசம் கிடைத்தது, தனிப்பட்ட ஒரு சில அஞ்சா நெஞ்சம் படைத்தவர்கள் வீர தீரச் செயல்கள் மூலமாகச் சுதந்திரத்தைப் பெற முடியாது என்ற உண்மையை உணர்ந்தார்கள். ஆனால் வேறு வழியென்ன? பொது மக்களை ஒன்று திரட்டி, விஸ்தாரமான முறையில் போராடுவதே லட்சியமாகக் கொண்ட கம்யூனிஸ்டுக் கட்சி இந்த வீரப் புதல்விகளையும், வீரப் புதல்வர்களையும் ஆகர்ஷித்தது. சிறைக் கோட்டத்தில், கல்பனாதத்து கம்யூனிஸ்டானாள்.
1937-ம் வருடத்தில் அந்தமான் சிறையிலிருந்து, நமது தேச பக்தர்களைத் திருப்பியழைக்க வேண்டுமென்ற கிளர்ச்சி வலுத்தது. பொது ஜன சக்தி வெற்றியும் பெற்றது. மஹாத்மா காந்திஜி, கவி தாகூர், தேசபந்து ஆண்ட்ரூஸ் முதலிய தலைவர்கள் கல்பனாதத்தின் விடுதலைக்குப் பெரு முயற்சி செய்தனர், மஹாத்மா காந்திஜியே சிறைக்குச் சென்று நேரில் பேசினார். “உன் மீது நாஜி முதீன் ரொம்பக் கோபமாக இருக்கிறார். சிட்டகாங்க் ஆயுதச்சாலையைத் தாக்கிய கைதிகள் ஒரு வரையும் விடுதலை செய்யப்போவதில்லை என்று சொல்கிறார். ஆயினும், நான் முயற்சி செய்கிறேன்“ என்று காந்திஜி கல்பனாவிடம் கூறினார். பொது ஜனக் கிளர்ச்சிக்கு அடிபணிந்து, 1939-ம் வருடம் மே மாதம் முதல் தேதியன்று வங்காள சர்க்கார் சிறைக் கதவைத் திறந்தது.
கல்பனா தத் விடுதலையடைந்த பின்பு, குருதேவ் தாகூர் ஒரு கடிதமெழுதினார்: அதில், “நீண்ட நாட்களுக்குப் பிறகு விடுதலை யடைந்திருக்கிறாய். நாள்தோறும் அமைதியும், ஆக்கமும் பெற்று வளர்வாயாக. நம் நாட்டில் இன்னும் எத்தனையோ காரியங்கள் செய்வதற்கு இருக்கின்றன. அதற்கு, கலவரமடையாத, பக்குவமான மூளை தேவை. நீ பெற்ற துன்பமயமான அனுபவம் உனது வாழ்க்கைக்குப் பூரண பொலிவை அளிக்கட்டும். எனது ஆசிர்வாதம் இதுவே….“ என்று வரைந்திருந்தார்.
தேச பந்து ஸி.எப்.ஆண்ட்ரூஸும், “முந்திய பிறவியில் நீ எனக்குப் புத்திரியாய் இருந்தாய் என்ற எண்ணத் தோன்றுகிறது. நான் முதுமை அடைந்திருக்கும் இப்போது, என் மகள் என்னிடம் வந்துவிட்டாள். சந்தர்ப்பம் நேரும்போதெல்லாம் இந்தக் கிழவனை நினைப்பதற்கு மறந்துவிடாதே“ என்று கல்பனாவுக்குக் கடிதமெழுதினார்.
விடுதலைக்குப் பின்னர் திரும்பவும் மக்களுக்குத் தொண்டு செய்வதில் முழு மூச்சுடன் ஈடுபட்டாள். தொழிலாளர்கள் விவசாயிகள், ஹரிஜனங்கள் ஆகிய ஏழைகளிடையே தீவிரமாத் தொண்டு புரிந்து வந்தாள்.
1943-ம் வருடத்தில் நமது நாட்டில் பஞ்சம், தொத்து நோய் முதலியன கோர தாண்டவமாடின. வங்கத்தில் ஐம்பது லட்சம் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மாண்டனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், கள்ள மார்க்கெட் கொலைபாதகர்களும் பொது மக்களைப் பட்டினி போட்டுக் கொன்றார்கள். இந்த நெருக்கடியான சமத்தில், கல்பனாதத் ஊர் ஊராக, வீடு வீடாகச் சென்று மக்களுக்குச் சேவை செய்தாள். கற்புக்கு உறைவிடமாக இருந்த இந்திய மாதர்கள், ஒரு கவளம் சோற்றுக்காக மானத்தை விற்றார்கள். தன் சகோதரிகளின் மானத்தைக் காப்பாற்ற கல்பனாதத் செய்த பெரு முயற்சியை மாதர் உலகம் ஒரு நாளும் மறக்க முடியாது.
இவ்வளவு மகத்தான தியாகம் செய்த தன்னலமற்ற மாதர் திலகம், பல போராட்டங்களில் கலந்து கொண்ட வீராங்கனை, இன்று இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் நிற்கும் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் பொதுக் காரியதரிசி பூர்ண சந்திர ஜோஷியைக் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறாள்.
மஹாத்மா காந்திஜி, தேசபந்து ஆண்ட்ரூஸ், குரு தேவர் தாகூர் ஆகிய மஹா புருஷர்களின் ஆசியைப் பெற்றவள், மக்களுக்கு இடைவிடாது தொண்டு புரிந்து வருகிறவர்களை சிட்டகாங்க் வாசிகள் “அமர் மயி“ (நம்ம பெண்) என்று அவளை அன்பாக அழைப்பதில் ஆச்சரியமென்ன?
தொகுத்து எழுதியவர் :

ராமச்சந்திர வைத்தியநாத்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

