வரலாற்றுப் புதையல் – 9
சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும் பல்வேறு பத்திரிகைகளில், அரசு அறிக்கைகளில் வந்த படைப்புகளையும் செய்திகளையும் அச்சுப் பிசகாது அறிந்திடும் முயற்சியே இது. அன்றைய உரைநடையை, இலக்கியப் போக்கினை, வரலாற்றை, செயல்முறையை அறிந்திடும் முயற்சிகளில் ஒன்றாகக்கூட இதைக் கொள்ள முடியும்.
இது சென்ற நூற்றாண்டு வரை சென்னப்பட்டணத்தையொட்டிய சின்னஞ்சிறு கிராமமாக கருதப்பட்ட வேளச்சேரியின் தல புராணம் மட்டுமல்ல. வரலாற்றுச் சுவடுகளையும் பெருமையையும் கொண்ட வேளச்சேரி இன்றைய தினம் நகரின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ஒன்றாக திகழ்கிறது. இது பற்றி சக்தி 1965 ஜனவரி இதழில் வெளியிடப்பட்ட கட்டுரை இங்கே தரப்படுகிறது. பிரித்தானிய நிர்வாகம் இங்கே கால் பதிப்பதற்கு முன்னரே இப்பிராந்தியம் மன்னராட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்ததோடன்றி நிர்வாக அமைப்பினையும் கொண்டிருந்ததை இக்கட்டுரையின் வாயிலாக அறிய முடிகிறது.
வேளச்சேரி
சென்னையிலும் சுற்றுப்புறங்களிலும் பழைய கோயில்கள், புனிதத் தலங்கள் பலவுண்டு. நகரங்களில் அன்னையாகிய நம் சென்னைக்கு வயது 324: ஆனால் இதன் உட்பகுதிகளான மயிலையும் திருவல்லிக்கேணியும் சுமார் 1,300 வயதுக்கும் மேற்பட்டவை. இத்தகைய பழமையும் பெருமையும் தொடர்ச்சியான வாழ்க்கையும் பண்பாடும் சென்னையை அடுத்திருக்கும் திருவொற்றியூர், திருவான்மியூர் முதலான தலங்களுக்கும் உண்டு. திருவான்மியூருடன் பழமையான தொடர்பு கொண்டிருந்த வேளச்சேரிக்கும் வரலாற்றுப் பழம்பெருமை உண்டு.
வேளச்சேரி இன்று ஒரு குக்கிராமம்தான் – தன் பெருமையைத் தான் அறியாத குக்கிராமம். மிகவும் அண்மையில் உள்ள குதிரைப் பந்தய மைதானம் இன்று மிகவும் புகழ் பெற்றிருக்கிறது. கிண்டி கவர்னர் மாளிகையையும் சென்னைக்கு வந்து போகிறவர்கள் அறிவார்கள். ஆனால் கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை எட்டக்கூடிய தொன்மை வாய்ந்த வேளச்சேரியின் புகழைச் சென்னைவாசிகளும் அறியார்.
சைதாப்பேட்டை மர்மலாங் பாலத்தின் வழியாகச் செல்லும் முக்கிய ரஸ்தாவிலிருந்து பிரிந்து போகும் ஒரு கிளை வேளச்சேரி ரஸ்தா. இந்தக் கிளை வழியே போய் வந்திருப்பவர்களும், தலத்தின் பெருமையையோ, மூர்த்தியான தண்டீசுவரின் கீர்த்தியையோ அறிந்திருக்க மாட்டார்கள்.
திருவான்மியூருக்கு அருகிலுள்ள பல ஊர்களிலும், புராணப் புகழ்பெற்ற கோயில்களுடன், வரலாற்றுச் செய்திகளை வெளியிடும் கல்வெட்டுகளும் உண்டு. இவ்வூர்களில் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்தது வேளச்சேரி. இங்குள்ள தண்டீசுவரர் கோயிலுள்ள கல்வெட்டில் திருவான்மியூர் குறிக்கப் பெற்றிருக்கிறது. திருவான்மியூர்த் தலபுராணத்தில் வேளச்சேரி வேதச்சிரேணி என்ற பெயரால் குறிக்கப் பெற்றிருக்கிறது. வேளச்சேரி கல்வெட்டிலும் வேதச்சிரேணி என்ற பெயரைக் காண்கிறோம்.
வேதச்சிரேணி என்ற பெயர் வந்த காரணம் குறித்த ஒரு புராணக் கதையும் திருவான்மியூர் தலபுராணத்தில் காணப்படுகிறது. இதே புராணத்தில் தண்டீசுவரருக்குப் பெயர் வந்த காரணத்தை விளக்கும் ஒரு ரசமான கதையையும் காண்கிறோம்.
ஊரும் கோயில்களும்
வேளச்சேரியில் தண்டீசுவரர் கோயில் தவிர, செல்லி அம்மன் கோயில் என்ற ஓர் அம்மன் கோயிலும் இருக்கிறது. நரசிங்கப் பெருமாளுக்கும் ஒரு கோயில் இருக்கிறது. இப்பெருமாள் கோயில் பிற்காலத்தில் தோன்றியதுதான். இங்கே கல்வெட்டு ஒன்றும் கிடையாது. செல்லியம்மன் கோயில் ஒரு சின்னஞ்சிறு கோயில்தான்; ஆனால் நெடுங்காலப் பெருமைவாய்ந்தது. தண்டீசுவரர் கோயிலுக்கு அடுத்தபடியாக உள்ள பழமை இந்த அம்மன் கோயிலுக்கு உரியது.
செல்லியம்மன் கோயில் வடக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்மனின் பெயர்தான் புதுமை; உருவம் பழமையானது. இக்கோயிலில் சப்த மாதாக்கள் என்ற ஏழு கன்னிகைகள் காணப்படுகிறார்கள். இவ்வுருவங்களும் பழமையின் சின்னங்களே. பத்தாம் நூற்றாண்டுச் சோழக் கட்டிட முறையில் இக்கோயில் அமைந்திருக்கிறது. இரண்டு பழைய சாசனங்கள் இங்கே காணப்படுவதும் இக்கோயிலின் பழமையை மெய்ப்பிக்கிறது.
இத்தகைய பழம் பெருமை வாய்ந்த செல்லியம்மன் கிராமதேவதைதான். இந்தக் கிராமத்தின் தொன்று தொட்டு வரும் சிறப்புக்கு மூலகாரணம் தண்டீசுவரர் கோயில் என்ற சிவன்கோயில்தான். கருணாம்பிகை சமேத தண்டீசுவரமுடையான் என்ற கல்வெட்டுகள் இப்பெருமானைக் குறிப்பிடுகின்றன. எனவே, தண்டீசுவரம் என்பது கோயிலின் பெயர் எனலாம்.
சிதைந்த நிலையிலிருந்த போதிலும், இக்கோயில்தான் இன்றும் இவ்வூருக்கு முக்கிய ஆலயம். கோயிலைப் புதுப்பிக்கத் திருப்பணி கழகம் ஒன்று ஏற்பட்டு சில ஆண்டுகளாகச் செயற்பட்டு வருகிறது. ‘நல்ல வேளையாக் கோயிலின் முக்கியமான பகுதி திருப்பணி முயற்சிகளில் ஈடுபடும் பக்தர்களின் கைக்குத் தப்பிவிட்டது! எனவே எல்லாப் பழைய சின்னங்களும் இங்கே காணப்படுகின்றன’: என்கிறார் புதைபொருள் ஆராய்ச்சித் துறை அதிகாரி ஸ்ரீ தேவ குஞ்சரி அம்மையார்.
தலபுராணமும் தண்டீசுவரரும்
இத்தலத்திற்குத் தனியாகத் தலபுராணம் ஒன்றும் இல்லை. திருவான்மியூர்த் தலபுராணத்தில் அவ்வூர்ச் சிறப்புடன் இவ்வூர் சிறப்பும் கூறப்படுகிறது. அவ்வூரில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானின் பெருமையுடன் தண்டீசுவரரின் பெருமையும் பேசப்படுகிறது. இப்புராணம் தமிழ்ப்பெரும் புலவர் அஷ்டாவதானம் பூவை கலியாணசுந்தர முதலியாரால் பாடப் பெற்றிருக்கிறது. இத் தமிழ்நூல் வடமொழிப் புராணம் ஒன்றின் ஒரு பகுதியைத் தழுவியது என்பர். இதன் சுருக்கமாகத் திருவான்மியூர்ப் புராண வசனம் என்று ஒரு சிறு நூல் சுமார் பத்தாண்டுகளுக்கு முன் மூன்றாம் பதிப்பாக வெளி வந்திருக்கிறது. புராண வசனத்தில் ‘வேதம் பூசைபுரிபடலம்’ என்ற ஒரு பகுதி உண்டு. இதில், வேதங்கள் தவம் புரிந்த இடம் வேதச்சிரேணி என்று கூறப்பட்டிருக்கிறது. திருவான்மியூருக்கு வேதபுரி என்ற ஒரு பெயரும் உண்டு. திருவான்மியூர்ப் பெருமானை வேதபுரீச்வரர் என்ற பெயராலும் குறிப்பிடுவதுண்டு. வேதபுரீச்வரரை வேதங்கள் பூசித்து வரம் பெற்றனவாம். அப்போது அந்த வேதங்கள் தவம் புரிந்து வந்த இடம்தான் வேதச் சிரேணி ஆயின்று என்கிறது புராணம்.
தண்டீசுவரர் என்ற பெயர் வந்த காரணத்தைத் திருவான்மியூர்த் தலபுராணத்தில் யமன் பழி தீர் படலம் என்ற பகுதியில் காண்கிறோம். யமனுக்கு வந்த பழிதான் என்ன? அது எப்படி தீர்ந்தது? மார்க்கண்டனுக்கு என்றும் பதினாறு வயது என்று பிரசித்தமாக நம் மக்கள் சொல்லுகிறார்களே, அந்தச் சிரஞ்சீவிச் சிறுவனைத் தண்டாயுதத்தால் பயமுறுத்திப் பாசத்தை வீசி அவன் உயிரைக் கவர்ந்து செல்ல முயன்றான் யமன் என்பதும், அப்போது சிவபெருமான் அந்தக் காலனைக் காலால் உதைத்தார் என்பதும் ஆகிய கதையை அறியாதார் யார்?
சிறுவனைக் காத்த சிவகருணை யமனுடைய குற்றத்தையும், அவன் உணர்ந்து பிரார்த்தித்ததும், பொறுத்தருளி ஆட்கொள்ள விரும்பியதாம், பயங்கரமாக மீசை முறுக்கிப் பாசம் வீசிய அதே யமன் இப்போது பெரும் பணிவுடனும் அதே தண்டாயுதத்துடனும் திருவான்மியூர் வேதபுரீச்வரரின் திருவருளை நாடிவந்து கொண்டிருந்தான். வேதங்கள் முன்பு தவம் புரிந்த வேதச்சிரேணிக்கு வந்து சேர்ந்ததும், தலமான்மியம் தெரிந்து கொண்டு இங்கேயே சிவபூஜை செய்ய விரும்பினான்.
அருகில் ஒரு குளம் தோண்டி நீராடி நிர்மனாகிறான். பூஜிக்கச் சிவலிங்கம் வேண்டுமே – என் செய்வது? தன் தண்டாயுதத்தையே சிவலிங்கமாக நிறுத்திப் பூசனை புரிகின்றானாம். இப்படிப் பூசித்த பின், திருவான்மியூருக்கும் போய் வழிபடுகிறான். யமன் பிரதிஷ்டை செய்த அந்த லிங்கம்தான் தண்டீசுவரர் எனப் பெயர் பெற்றிருக்கிறது என்று தெரிவிக்கிறது திருவான்மியூர்த் தலபுராணம்.
சித்தரும் பக்தரும்
யமதண்டத்திலேயே ஆவேசித்து யமதர்ம ராஜாவால் ஆராதிக்கப் பெற்ற ராஜாதி ராஜரும் தேவாதி தேவருமாகிய திருத்தண்டீசுவரரது கருணையின் மர்மங்களை உணர்ந்து கொள்வதற்காக எவ்வளவு காலமாய் சித்தர்களும் பக்தர்களும் இவ்வூருக்கு வந்து இப்பெருமாளை ஆராதித்திருக்கிறார்கள்! வேதச்சிரேணி என்ற வேளச்சேரியைச் சித்தர்கள் வாழ்ந்த இடம் என்கிறார்கள். தட்சிணாமூர்த்தி, காசிலிங்கம், துர்க்கை, விசாலாட்சி, லட்சுமி, சரஸ்வதி முதலான விக்கிரகங்களுடன் புத்தர் பெருமானின் மரச்சிலை ஒன்றும் இவ்வூர்க் கோயிலில் காணப்படுவதிலிருந்து, பல்வேறு கொள்கைகளையுடைய சித்தர்களும் இந்தப் பிரதேசத்தில் சஞ்சரித்திருக்கக் கூடும் என்பர். இன்றும் சித்தர்கள் சூட்சும வடிவில் இங்கே வந்து போவதாக நம்புகிறவர்களும் உண்டு.
வேளச்சேரியில் அப்பைய தீட்சிதர் என்ற சிவபக்த சிகாமணி வேள்வி செய்த இடமும் இருக்கிறது. ‘அப்பையர் குளம்’ என்ற குளம் ராஜபவனத் தோட்டத்தின் தெற்கு வாசலில் இன்றும் காணப்படுகிறது. இது தோட்டத்தின் தெற்கு வாசலில் இன்றும் காணப்படுகிறது. இதை ‘அப்பளக் குளம்’ என்று சாதாரண மக்கள் வழங்குகிறார்கள். வேளச்சேரிக்குக் குடி தண்ணீர் இது. காட்டுமான்களும் இங்கே வந்து தண்ணீர் பருகும்.
அப்பைய தீட்சிதர் சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். பரம பக்தராகத் திகழ்ந்ததுடன், ஒரு பிரபல வடமொழிக் கவிஞராகவும் புகழொளி பரப்பி நூற்றக்கணக்கான வடமொழிப் பிரபந்தங்களை இயற்றியுள்ளார். இவர் தொண்டை நாட்டுக்கு வந்து திருவான்மியூரிலும் வேளச்சேரியிலும் சில காலம் தங்கியிருந்தார். வேளச்சேரியிலேயே தங்கித் திருவான்மியூருக்குப் போய் வந்தார் என்று கருதுவோரும் உண்டு.
அப்பைய தீட்சிதரின் வாழ்க்கை வரலாற்றுச் செய்திகள் பல; பிரசித்தமாகப் பலரும் அறிந்தவை. திருவான்மியூர்த் தலபுராணத்திலும் இவரது வாழ்க்கைக் குறிப்புகள் சில உண்டு என்பர். அவை இப்பெரியாருக்கு திருவான்மியூருடனும் வேளச்சேரியுடனும் உள்ள தொடர்பை வெளியிடும் வகையில் அமைந்திருக்க வேண்டும். ஆனால் புராண ஓலைச்சுவடியில் இப்பகுதி கறையானுக்கு இரையாகிவிட்டதால், இந்த விவரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை.
அப்பைய தீட்சிதர் பிரதிஷ்டை செய்த சிவசக்திதான் கருணாம்பிகை என்பர். தண்டீசுவரின் மூலஸ்தானத்திற்கு அருகில் வடகிழக்கே அமைக்கப் பெற்றிருக்கும் தேவி கோயிலின் அமைப்பு முறை விஜயநகர காலத்தைச் சார்ந்தது. அப்பைய தீட்சிதரை ‘ அப்பிலே கலந்த நாமம் பெற்ற சித்தன்’ என்று வினோதமாய்க் குறிப்பிடுகிறது ஒரு நாடி சோதிட நூல்.
அப்பைய தீட்சிதருக்குப் பின் இந்தப் பிரதேசத்தில் சித்தராகவும் பக்தராகவும் ஒருங்கே திகழ்ந்தவர்களில் சபாபதி சுவாமிகளையும் அம்பலவாண சுவாமிகளையும் சிதம்பர சுவாமிகளையும் குறிப்பிடலாம். சபாபதி சுவாமிகள் அகஸ்திய ஆசிரமத்திற்குப் போகும் வழியில் தண்டீசுவரரைத் தரிசித்து மூன்று நாள் மௌன நிஷ்டையில் அமர்ந்திருந்தாராம். இவருக்கு வட இந்தியப் புகழும் உண்டு. இவரை உலகப் புகழ் பெற்றிருக்கும் பேராசிரியர் மாக்ஸ் முல்லர் தாம் எழுதியுள்ள நூல் ஒன்றில் குறிப்பிடுகிறார்.
சிதம்பர சுவாமிகளுக்கு சென்ற ஆண்டில் 104 வது குருபூசை கொண்டாடப்பட்டது. இவர் சமாதி இவ்வூரில் இருக்கிறது. தண்டீசுவரரை இவர் தம் பாடல்களில் தண்டபாணி என்றும், இவ்வூரை வேதச்சிரேணி என்றும் குறிப்பிடுகிறார். இப்பெருமானை வரம் தரும் வள்ளல் என்ற பொருளில் ‘வரதன்’ என்கிறார். நீதியை நிலைநிறுத்துபவன் என்ற பொருளில் ‘நிதன்’ என்கிறார். தூய்மையானவன், குற்றம் பொறுத்துத் தூய்மை செய்பவன் என்ற பொருளில் ‘நிமலன்’ என்கிறார்.
‘அப்பனே! தண்டபாணியனே!’ என்று பாடுகிறார் சிதம்பர சுவாமிகள்.
எந்தையே ! வேதசிரேணி வாழ் பரனே!
என்றும் அகம் குழைந்து அழைக்கிறார். தண்டீசுவரர் தமது நெஞ்சிலுள்ள மடமை தீர்த்து நன்மதி அருளவல்லவர் என்ற கருத்தையும் சிதம்பர சுவாமிகளின் வாக்கிலே காண்கிறோம்.
அண்மையில் வாழ்ந்த கடுந்துறவியும் பெரும்புலவருமாகிய பாம்பன் சுவாமிகள் திருவான்மியூரில் தங்கியிருந்து இவ்வூர்த் தண்டீசுவரரையும் வழிபட்டுப் பேறுபெற்றார். இவர் ஆறாயிரத்துக்கு மேற்பட்ட தொகையுள்ள பாடல்களை அநாயாசமாகப் பாடி வைத்திருக்கிறார். இவர் சமாதி திருவான்மியூருக்கும் வட கிழக்கே கடற்கரையில் இருக்கிறது. அங்கே, சீடர்கள் இவருக்கு குருபூசை கொண்டாடுகிறார்கள்.
1959ம் ஆண்டுத் தொடக்கத்தில் இன்றைய சித்த புருஷரும் பக்தமணியும் பரமஞானியுமான ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராசாரிய சுவாமிகள் இக்கோவிலுக்குப் பாதயாத்திரையாக வந்து, அப்பயைர் குளத்தில் நீராடி, அந்தத் தீர்த்தத்துடன் தண்டீசுவரரைத் தாமே பூஜித்து மகிழ்வெய்தினார். அவர் அன்று நடந்து வந்த பாதை இன்று மக்கள் முன்னேற்றத்தின் அறிகுறியான பல்வகைக் கட்டிடங்களுடன் பொலிகின்றது. அன்று முதல் சென்னையிலும் சுற்றுப் புறங்களிலும் உள்ள நன்மக்கள் வேளச்சேரிக் கோயிலின் பெருமையை உணர்ந்து தரிசனம் செய்ய வருகிறார்கள்.
வரலாற்றுச் சிறப்பு
திருவான்மியூரையும் கடற்கரையையும் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் தேவாரத்தில் பாடியிருக்கிறார்கள்; ஆனால் வேளச்சேரியைப் பாடவில்லை. இதிலிருந்து தேவார காலத்தில் இக்கோயில் இல்லை அல்லது பிரபலமடையவில்லை என்று ஊகிக்கலாம். எனினும், கல்வெட்டுகள் பல இக்கோயிலின் தொன்மைக்குச் சான்று தருகின்றன.
தண்டீசுவரைத் ‘திருக்கற்றளி மகாதேவர்’ என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கற்றளி என்றால் கற்கோயில்; பழைய கற்கோயில்கள் பலவும் இப்படிக் குறிக்கப் பெற்றுள்ளன; இதிலிருந்தே இக்கோயிலின் தொன்மைக்குச் சான்று கிடைக்கிறது என்கிறார் ஸ்ரீதேவ குஞ்சரி அம்மையார்.
இவ்வூருக்கு வேதச்சிரேணி என்ற பெயருடன் பிரமதேயம், சதுர்வேதி மங்கலம், வேளிச்சேரி, ஜின சிந்தாமணி என்ற பெயர்களும் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. ஜினசிந்தாமணி என்ற பெயரைக் கொண்டு ஜைனர்கள் (சமணர்கள்) முன்னாளில் இங்கு இருந்தனர் போலும் என்கிறார் ஆராய்ச்சிக்காரர் ஒருவர். ஆனால் இப்பெயர் பிற்காலச் சோழர் கல்வெட்டுகளில்தான் காணப்படுகிறது. எப்படியும் இவ்வூருக்கு ஜைனர் தொடர்வு மிகவும் பழமையானதாக இருக்க முடியாது.
ஜினசிந்தாமணி என்பது தினசிந்தாமணியின் சிதைவு என்கிறார் ஸ்ரீதேவகுஞ்சரி அம்மையார். கி.பி.1070-1120 வரை ஆண்ட முதலாவது குலோத்துங்க சோழனின் ராணி ஒருத்தியின் குடும்பப் பெயர் தின சிந்தாமணி; ஆகவே, முதலாவது குலோத்துங்கன் காலம் முதல்தான் இவ்வூர் இப்பெயர் பெற்றிருக்க வேண்டும்.
பலகல்வெட்டுகளும் இவ்வூரை வேளிச்சேரி என்று குறிப்பிடுவது கூர்ந்து நோக்கத் தக்கது. வேள்விச்சேரிதான் வேளிச்சேரி எனச் சிதைந்திருக்கக்கூடும் என்று ஊகிப்பது தவறாகாது. வேள்விகள் அல்லது யாகங்கள் நடந்த இடம் வேள்விச்சேரி. வேதம் வல்ல பிராமணர்களுக்கு வழங்கப்பட்டதால் இது பிரமதேசம் என்றும், சதுர்வேதி மங்கலம் என்றும் பெயர் பெற்றிருக்க வேண்டும். வேள்வி செய்து வந்த வேதியர்களுக்குத் தானமாக அளிக்கப்பட்ட ஒரு பிரமதேயக் கிராமம் வேள்விச்சேரி என்ற வேளச்சேரி.
கல்வெட்டுகளிலிருந்து, இவ்வூர் சீரும் சிறப்பும் உற்று, பேரும் புகழும் பெற்றிருந்த திருக்கோயிலை மையமாகக் கொண்டு, தழைத்துச் செழித்து வளர்ந்திருந்தது என்று தெரிய வருகிறது. அந்த நாளில் இவ்வூர், புலியூர்க் கோட்டத்தின் உட்பிரிவுகளில் ஒன்றான கோட்டூர் நாட்டைச் சேர்ந்தது என்பது கல்வெட்டுச் செய்தி. புலியூர்க் கோட்டத்தின் தலைமையூரான புலியூர் கோடம்பாக்கத்திற்கு அருகில் உள்ளது.
கட்டிட அமைப்பும் கல்வெட்டுகளும்
இக்கோயிலின் கட்டிடக் கலை அமைப்பு கி.பி. ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டுக்குரியது என்று நிபுணர்கள் நிச்சயிக்கிறார்கள். பல பழைய கோயில்களைப் போல் அடி முதல் ஸ்துபி வரை இது ஒரு கற்கோயில்தான் (கற்றளிதான்). கர்ப்பக்கிரகத்து (கருவறை) ச்சுவர்களிலுள்ள சதுரத்தூண்களும் அலங்காரங்களும் பல்லவர் கால வேலைப்பாட்டைப் பெரிதும் ஒத்திருக்கின்றன. தெற்கு மாடக் குழியிலுள்ள தட்சிணா மூர்த்தி யுருவமும் பல்லவ அமைப்பு முறையில்தான் இருக்கிறது. பழைய சோழர் கோயில்களை நினைவூட்டும் பகுதிகளும் உண்டு
பிற்காலப் பல்லவமுறை, அதை அடுத்து வந்த சோழ அமைப்பு முறையாக, மாறிவந்த காலப்பகுதியைச் சேர்ந்தது இத்திருக்கோயில். இத்தகைய அமைப்பு முறையைப் புலப்படுத்தும் கோயில்களில் இது ஒரு முற்பட்ட கோயில் ஒன்று கருதுவதும் பொருந்தும். பல்லவர் பிற்காலம், சோழப் பேரரசின் முற்காலம் என்ற இருகாலப் பகுதிகளின் கதம்ப அடையாளங்களை இந்தக் கோயிலின் கட்டிட அமைப்பில் காண்கிறோம். கல் வெட்டுகளும் இந்த ஊகத்தை உறுதிப்படுத்துகின்றன.
கல்வெட்டுகள் பலவும், வழக்கம்போல் கோயில்களில் திருவிளக்குகள் எரிப்பதற்கு நன்கொடை வழங்கப்பட்ட செய்தியைக் குறிப்பிடுகின்றன. அரசர்கள் கோயிற் பூசைக்குப் பொருளும் நிலமும் தானம் செய்ததையும் கல்வெட்டுகளில் காணலாம். வேளச்சேரிக் கோயிலில், பத்தாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் வாழ்ந்த சுந்தர சோழன் காலத்திலிருந்து தொடங்கும் கல்வெட்டுகள் பல காணப்படுகின்றன. அரசர்கள் ஆண்டவனுக்காக வாரி வழங்கியதுடன், அடியவர்களுக்கும் உதவினர்கள்.
வேளச்சேரியிலிருந்த ஒரு நிலத்தை சேதிராயதேவன் என்பவன் திருவான்மியூரிலிருந்த திருநாவுக்கரசர் மடத்துக்கு தானம் செய்த விவரமும் கல்வெட்டில் காணப்படுகிறது. இதனால் திருவான்மியூரில் அந்த நாளில் திருநாவுக்கரசர் மடம் இருந்தது என்று தெரியவருவதுடன், வேளச்சேரிக்கும் திருவான்மியூருக்கும் உள்ள தொடர்பு உறுதிப்படுவதையும் காண்கிறோம்.
கல்வெட்டுகளில் அரசர்களின் தொண்டுகளுடன் பொதுமக்களைப் பற்றிய செய்திகளும் காணப்படுகின்றன. கி.பி.1021ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று முதலாவதாக ராஜேந்திரசோழ மன்னனின் அனுமதிபெற்று, பார்ப்பனரல்லாதவர்கள் கோயிலுக்கு நிலம் விற்ற ஒரு செய்தியைக் குறிப்பிடுகின்றது. முதலாவது இராஜேந்திர சோழன், தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டி நிறுத்திய முதலாவது ராஜராஜசோழனின் அருமைத் திருமகன். தமிழ் நாகரிகத்தையும் தமிழர் பண்பாட்டையும் சிவபக்திச் செல்வத்தையும், கடல் கடந்து போய் அக்கரைச் சீமைகளான மலேயா சுமத்ரா, ஜாவா முதலிய நாடுகளிலும் விதைத்தவன். இவனைத்தான் கங்கைகொண்ட சோழன் என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகிறது இந்தியச் சரித்திரம்.
ஒரு கல்வெட்டிலிருந்து கணபதி கோயில் ஒன்று கி.பி.962-இல் கட்டப் பெற்றது என்று தெரியவந்தது. வேறொரு கல்வெட்டு, பதிமூன்றாம் நூற்றாண்டினிடைய (கி.பி.1237)-இல் ஒரு நடராஜ சிலை அமைக்கப் பெற்றதைத் தெரிவிக்கிறது. இத்தகைய கல்வெட்டுகள் ஓரளவு சோழ சாம்ராஜ்யக்கதை சொல்வதுடன் ஊர்க்கதையும் சொல்லுகின்றன. பக்தி உபதேசம் பண்ணுவதுடன் நாட்டுவளமும் பேசுகின்றன.
இக்கோயிலில் புலியும் மீனும் பொறிக்கப் பட்டிருப்பதையும் காண்கிறோம். புலிக் கொடி சோழ மன்னர்களுக்கு உரியது. மீன்கொடி பாண்டியர்களுக்கு உரியது. இந்தச் சின்னங்கள், பிற்பட்ட சோழர்காலம் அல்லது பாண்டியர் காலத்தை நினைவூட்டுகின்றன. இந்தப் பிற்காலத்தைச் சேர்ந்தது அர்த்த மண்டபம்.
தமிழர்களின் பல நூற்றாண்டுக் கதையை நினைவூட்டுகின்றன வேளச்சேரிக் கோயில்களான தண்டீசுவரர் கோயிலும் செல்லியம்மன் கோயிலும். சைவ சமய வரலாறு என்ற நெடுங்கதையிலும் வேளச்சேரிக்கு இடம் உண்டு.
தொல்புகழ் வாய்ந்த வேளச்சேரிக் கோயிலில் அரசரும் அந்தணரும் சித்தர்களும் பக்தர்களும், பொதுவாகத் தொண்டக்குலத்தினர் அனைவரும் பல நூற்றாண்டுகளாக வழிபட்டுப் பேறுபெற்று வந்திருக்கிறார்கள். பண்டைத் தமிழ் நாகரீகத்தைப் பொது மக்களின் வாழ்க்கையைப் பண்படச் செய்த இடைக்காலக் கோயில் நாகரிகமாக வளர்ந்து விட்ட பக்திப பண்ணைகளிலும் வேளச்சேரி ஒன்று எனலாம்.
நாளடைவில், கட்டுக் குலைந்து சீர்கெட்டுப் புகழ் மங்கிப் போயின இப்புனிதத்தலமும் கோயிலும், எனினும் பக்தர் கண்களுக்கு, நீறுபூத்த நெருப்பாக இக்கோயில் தோற்றமளித்து வந்திருக்கிறது. சாம்பலை ஊதி ஜொலிக்கச் செய்ய வேண்டுமென்று அன்பர் சிலர் முயன்று வருகிறார்கள்.
இன்றைய பந்தயக் கிளப்புக்கும், வேட்டைக் கிளப்புக்கும் அருகிலிருந்து இவ்வூர், குதிரைகளின் காலடிச் சத்தத்தையும் வேட்டை நாய்களின் குலைப்பையும் கேட்டுக் கொண்டிருக்கிறது புதுவாழ்க்கையின் பரபரப்பையும் கவர்ச்சிகளையும் பேசாமடந்தை போல் பார்த்து கொண்டிருக்கிறது எனினும், பண்டைக் காலங்களில் தண்டீசுவரர் அருளால் பெருவாழ்வு வாழ்ந்த நான் புதுமைப் பெருவாழ்வும் வாழப் போகிறேன் என்ற நினைவும் நெஞ்சில் இருக்கிறது.
வேளச்சேரி அன்று பக்தியிலும் விவசாயத் துறையிலும் செழிப்பாக் திகழ்ந்தது; இன்று தொழில் வளம் பெறத் தொடங்கி விட்டது. அன்று சோலை சூழ்நத ஊர், இனி ஆலை சூழ்ந்த நகரப் பகுதியாய் உயர்ந்தோங்கும்.
தொகுத்து எழுதியவர் :

ராமச்சந்திர வைத்தியநாத்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

