வசந்ததீபன் கவிதைகள்

வசந்ததீபன் கவிதைகள்



(1) வெள்ளைக்  கொடியில் தாயின் இதயம்
_______________________________________
துப்பாக்கிக்  குழலின்
தொலைநோக்கி
குறி  பார்க்கிறது…
காரிலிருந்து  இறங்கும்
அந்த  மனிதனின்  தலையை.
அவன்  மனைவி  வருகிறாள்..
செல்ல  மகன்  வருகிறான்..
ஆதரவாய்  மூவரும்
ஒட்டி  உரசி  நிற்கிறார்கள்.
மனைவியின்  தலையை  கோதுகிறான் அவன்
மகன்  எறியும்  பந்தைப்  பிடித்து  வீசுகிறான்…
நாய்  ஒன்று  அவனது  முழங்காலை
தாவி  முகர்ந்து  விளையாடுகிறது.
தூரத்தில்  பதுங்கியிருக்கும்
அந்த  கொலை  வெறியின்
வலது  கை  சுட்டு  விரல்..
குண்டை  வெளியேற்றும்
குதிரையை  அழுத்த  முனைகையில்…
கார்  விபத்தில்
முகம்  சிதைந்து  உருக்குலைந்த
தாயின்  முகம்…
அதன்  மனதில்  சட்டென்று  பூத்தது.
கொலையாக  வேண்டிய  குடும்பம்
காரில்  ஏறி
கொலைப்  பார்வை  தாண்டிப்  போனது.


(2) ஒற்றையான பயணத்தில்
_________________________________
கனவு  தாவரம்
அடர்ந்து
கிளை
விரிக்கிறது.
பூக்கள்  மலர்வதில்
தனிமை
கங்காக
தெறிக்கிறது.
அடி மனசின்
வண்டல்  படிவில்
மிதந்து  கொண்டிருக்கும்
வேதனை
சிலிர்த்து
ஊறி
பீறிட்டடிக்கிறது.
சொல்லொணாத்  துயரம்
குடையின்  மீது
கவிழ்ந்து  கொட்டும்
குடத்  தண்ணீராய்…
நெஞ்சுக்குள்
நாளும்
அதிர் வேட்டாய்  வெடிக்கிறது.


(3) கடற்பயணத்தில் என் சின்னப் படகு
________________________________________
வேரோடு பிடுங்கி எறியப்பட்ட
மரம்
குற்றுயிருமாய்.. குலையுயிருமாய்..
துடித்துக் கொண்டிருக்கிறது.
இன்னும்
சில மணி நேரங்களில்
இடம்
தூய்மைப்படும்.
பிறந்த மண் உதறிச் செல்ல
துரத்தும்
பிழைக்கும் காலம்.
பூக்கள் கூத்தாடும் நந்தவனம்..
கனிகள் குலுங்கும் சோலை..
நீரோடைகள் புரளும் பூமி..
பகலிலும் கனவுகளாய்
விம்முகின்றன.
விழிகள் நீர் வடிக்க
இதயங்கள் கனன்று
அகல்வதை
எங்ஙனம் வெளிப்படுத்த முடியும்..?
வசந்ததீபன்


Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *