(1)
பறந்து களிக்கமுடியவில்லை
கூண்டுக்கிளி
நீந்திக் திளைக்க முடியவில்லை
கண்ணாடித் தொட்டி மீன்
வேர் பாய்ச்சி
வெளியெங்கும் பரவ முடியவில்லை
மண் சட்டியில் வளரும் செடி
பாதைகளில்
சஞ்சரிக்க முடியவில்லை
எலும்பு சதையாலான வீடு.


(2)
பூக்களுக்கிடையே
நிழல்
ஒளிந்து ஒளிந்து நகர்கிறது
உருவம்
முட்களில் நின்று
தவமியற்றுகிறது.


(3) நிஜத்தின் விஷம்
________________________
கட்டிய துணியைத் தவிர
எல்லாம் போய்விட்டது
இனி நாசமாக
மீதம் ஏதுமில்லை.
நேசித்தேன்…..
ஓய்வு இல்லை
உறக்கம் இல்லை
ரத்தம் வடித்தேன்..
செழித்தீர்கள் நீங்கள்
சந்தோஷம் தான் எனக்கு
எனக்கென கனவுகள் என்பது
என்றும் இருந்ததில்லை
என் சுகம் என்று
தனிப்பட்டு ஏதும் இல்லை
அம்பெய்கிறீர்கள்
குறுவாளால் குத்துகிறீர்கள்
என் நிழலையும் தூஷிக்கிறீர்கள்
என் இந்நிலையைப்  பரிகசிக்கிறீர்கள்
உங்கள் உதாசீனம் என்னை ரணப்படுத்துகிறது
உங்கள் அவமானப்படுத்தல்கள்
என்னுள் மரணத்தை நினைக்க வைக்கிறது
கண்ணீரும் வற்றிப் போனது
கவலை ஏற வாழ்க்கை எதுவரை போகுமோ..?
நிறுத்துமிடம் எப்போதடையுமோ..?
இதயம் உருகி உயிர் கரைகிறது
நான் காத்திருக்கிறேன்
அந்த நாளின் தொடுதலுக்காக..
நீங்கள்
ஆல விருட்சமாகுங்கள்.


(4) அவதாரமானாள்
_______________________
நகக்கண்களில் உறைந்த ரத்தம்
விரல்களில் வலியாய்
ஊற்றெடுக்க
விளையாத சவங்க காயைத்
தனக்கு மட்டும் கொடுத்து
இலவம்பஞ்சு எடுக்கச் சொல்லி
கூடையை எற்றி விட்டுச் சென்றான் அவன்
அவள் மெளனமாய் இருந்தாள்.
தூக்குத் தராசில்
பஞ்சை நிறுக்கும் போது
எடையில் திருட்டுத்தனம் செய்தான் அவன்
அவள் அமைதியாக இருந்தாள்.
அவளுக்கு மட்டும் சாப்பிடும் நேரத்தை தாமதப்படுத்தி
அவளை ஆபீஸை கூட்டிப் பெருக்கச் சொன்னான் அவன்
அவள் முகம் சுளிக்காமல் செய்தாள்.
அவளைப் பார்த்து கண்ணடித்தான்..
அவளுக்கு  முத்தம் அனுப்புவதாய் அபநயித்தான்..
அவள் தனித்து சிறு கழிக்கப் போகையில் அசிங்கமான சைகை காட்டினான்..
அவள் எந்தவித எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை.
மாலையில் கடைசியாய்
கூலி பெற
காக்க வைத்துக் கொடுக்கையில்..
நாக்கைச் சுழற்றி
எச்சில் வழிய நாய் சிரிப்பு சிரித்தபடி
அவளின் விரல்களை அவன் பிசைந்த போது..
கொட்டாப்புளியால் அவன் மண்டையில் அடித்தாள் அவள்.
வசந்ததீபன்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *