மனுவே பதில் சொல் – வசந்ததீபன்ஊர் மலம் அள்ளியிருக்கிறாயா ?
சாக்கடைகளை சுத்தம் செய்திருக்கிறாயா ?
செப்டிக் டேங்க் அடைப்பெடுத்திருக்காயா ?
இறந்த மிருகங்களை சுமந்திருக்காயா ?
சாவுசேதி சொல்லி பசியோடு தாகத்தோடு அலைந்திருக்காயா ?
கால் சவரம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுருக்காயா ?
அடுத்தவர் தூமத்துணியை கசக்கித் துவைத்திருக்காயா ?
கூட்டு வல்லுறவிற்குத் தள்ளி சிதைக்கப்பட்டிருக்காயா ?
வாயில் மலம் திணிக்கப்பட்டு அராஜகத்திற்கு ஆளாகி இருக்காயா?
அதிகார மூத்திரத்தில் குளிக்க வைக்கப்பட்டிருக்காயா ?
பிணத்தைப் புதைக்க கட்டாந்தரையை உண்ணி உண்ணி வெட்டியிருக்காயா ?
இறுதி ஊர்வலத்தில் தப்படித்திருக்காயா ?
கேத வீட்டில் ஒப்பாரி பாடி வேஷமிட்டு ஆடியிருக்காயா ?
கரகாட்டம் ஆடுகையில் உடம்பை நாய்கள் கடிக்கக் கொடுத்து சிரித்து அழுதிருக்காயா ?
பிணமெரித்திருக்காயா ?
ஊசக் கஞ்சிக்கு கால்கடுக்க காத்திருந்திருக்காயா ?
உழைத்துக் களைத்து பசியோடு
உறங்கியிருக்காயா ?
மருத்துவமனைகளில் ரத்தத்தை நிணங்களை மருந்துக்கழிவுகளை
சீழில் ஊறிய பேண்டேஜ் துணிகளை
தொப்புள் நச்சுகளை
அப்புறப்படுத்தியிருக்காயா?
மிருகத் தோல்களை பதனிட்டிருக்காயா ?
மூளையைக் குடையும் வெயிலில்
தார்ச்சாலை ஓரத்தில்
செருப்பு தைத்திருக்கிறாயா ?
உடற்கூராய்விற்கு சிதைந்த உடல்களோடு மல்லாடியிருக்கிறாயா ?
சக மனிதனை சக ஜீவியாக மதித்திருக்காயா ?
புழுக்களோடும் பூச்சிகளோடும் குடியிருந்திருக்காயா ?
புறக்கணிக்கப்பட்ட
சேரிப் பாலையில் வாழ்ந்திருக்காயா ?
பசிக்குத் திருடியதால்
அடித்து சித்திரவதைபட்டு கொல்லப்பட்டிருக்காயா ?
மரணித்த சொந்தங்களை
புதைக்கவோ… எரிக்கவோ…
மயானம் இன்றி
தவித்ததுண்டா ?

மனுவே…
நீ
மன்னிக்கத்தக்கவனா ?

வசந்ததீபன்