கவிதை: உழுகுடிகளின் முழக்கத்தால் இந்தியாவில் விடியட்டும் – வசந்ததீபன்உழுகுடிகளின் முழக்கத்தால்
இந்தியாவில் விடியட்டும்
ஜீவ நதிகளே.. பாடுங்கள்
பரணி கீதங்கள்
கோதுமை வயல்களே.. ஆடுங்கள்
ஊழி நடனங்கள்.
வானமே.. பூச்சொரியுங்கள்
காற்றே…பன்னீர் தெளியுங்கள்
அவர்கள் செல்கிறார்கள்
தீராத வேதனைகளைத் தீர்க்க
ஆறாத ரணங்களை ஆற்ற.
சிந்திய கண்ணீர்…
வடித்த ரத்தம்…
கங்குகளாய் உருமாற
ஏய்த்த காலங்கள்
ஏமாற்றிய வித்தைகள்
உருத்தெரியாமல் ஒழிய…
அவர்கள் செல்கிறார்கள்
நுரை ததும்பும் புது வெள்ளமாய்.
தடைகளெல்லாம் உடைகின்றன
அவர்களின் வீறுநடையில்…
விடைகள் கிடைக்கும்
அவர்களின் கோர்த்த கரங்களில்…
பட்டினி கிடந்தது போதும்..
பயந்து உளைந்தது போதும்..
விழிபிதுங்கி கை பிசைந்து
வழியற்று நின்றது போதும்
எதிர்காலம் இருளானதாய் மருகி
தூக்கிலிட்டும் விஷம் தின்றும்
தற்கொலைக்குள் கரைந்தது போதும்…..என
அதிகாரங்களைச் சரிக்க
அரியணைகளை மாற்ற
கண்கள் சிவக்க
நெஞ்சம் கொதிக்க
செல்லும் உழுகுடிகளே….
உமது கனவுகளின் வீச்சில்
எமது பொற்காலம் பிறக்கட்டும்
உமது வியர்வையின் மழையில்
எமது விடுதலை விளையட்டும்.
எமது முஷ்டிகளை
உமது திசைநோக்கி ஏறெடுக்கிறோம்
எமது குரல்களால்
உம் வெற்றிக்கு
வாழ்த்தொலிக்கிறோம்.
வெல்க…உமது வீரம்
வீழ்க… சூத நரிகளின் நயவஞ்சகம்.
வசந்ததீபன்