நவம்பர் 7
__________________
சோறு இல்லை
சுதந்திரம் இல்லை
ஓய்வு இல்லை
உறக்கம் இல்லை
இரவும் பகலும் ஓயாத வேலை
எதிர்த்தால் செய்வார்கள் கொலை
மறுத்தால் குரூர சித்திரவதை
தப்பிக்க முயன்றால் கொடூர வதை
பண்ணைகள் கொட்டடிகளாயின
பண்ணையார்கள் அசுரர்களாயினர்
சவுக்குகள் சொல்லின
சுவைத்த உதிரத்தின் கதைகளை…
தூக்குக் கயிறுகள் பகர்ந்தன
தொங்கிய பிணங்களின் கணக்குகளை…
பெண்கள் சிதைக்கப்பட்டார்கள்
ஆண்கள் நசுக்கப்பட்டார்கள்
நிலப் பிரபுக்களின் வெறியாட்டம்
அடிமைகளாய் மக்கள்
ஜாரின் கொடுங்கோல் சர்வாதிகாரம்
நெருப்பில் மீன்களாய் ஜனங்கள்
காற்றெல்லாம் நிணக் கவிச்சி
நிலமெல்லாம் பிணக்குவியல்
சூரியன் கறுத்துப் போனது
நிலவு ரத்தம் கக்கியது
உழைக்க இயலாதவர்கள் துரத்தப்பட்டனர்
உழைப்பவர்கள் உறிஞ்சப்பட்டனர்
காடுகள் புலம்பி அழுதன
கடலலைகள் பேரோலம் எழுப்பின
நிலம் கொந்தளித்தது
நீசர்கள் நடுங்கினர்
எந்திரங்கள் தோன்றின
கிராமங்கள் இடம் பெயர்ந்தன
நகரங்கள் கூண்டுகளாயின
மண்ணின் தோலணிந்தவர்கள்
எண்ணெய் அழுக்கு கப்பிய ஆடைகள் பூண்டனர்
பூச்சிகளாய் தெருக்களில் திரிந்தனர்
புழுக்களாய் ஆலைகளில் ஊர்ந்தனர்
வீடுகளில் புகையாய் படிந்தனர்
ஆலைச்சங்குகள் விடியாத காலைகளில் அலறின
வெளிச்சத்தை அறியாமல் வாழ்ந்தனர் ஜனங்கள்
தொழிலகச் சக்கரங்கள்
தொழிலாளிகளை மென்றன
உறுப்புகள் இழந்தவர்கள்
தூக்கி எறியப்பட்டனர்
உரிமை எழுப்பியவர்கள்
பனிச் சிறைகளில் தள்ளப்பட்டனர்
கட்டுப்படாதவர்கள்
சிரச் சேதம் செய்யப்பட்டனர்
பணிப் பாதுகாப்பு இல்லை
பாதிக்கப்பட்டவர்க்கு
நிவாரணம் இல்லை
உடலுக்கும் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை
நிலங்களில் விலங்குகளாய்
ஒடுக்கப்பட்டவர்கள்
ஆலைகளில் எந்திரங்களாய் ஆட்டி வைக்கப்பட்டனர்
இரவுகள் பிசாசுகளாயின
பகல்கள் குருதி குடித்தன
கனவுகள் பற்றி எரிந்தன
நினைவுகள் கரிந்து சாம்பலாயின
செஞ்சூரியன் உதித்தது
செந்நிலவு ஒளிர்ந்தது
செம்படை கிளர்ந்து எழுந்தது
புரட்சி வெடித்தது…
புரட்சி வெடித்தது…
புழுக்களல்ல…நாங்கள்
கோடிக்கால் பூதமென…
தொழிலாளி வர்க்கம் திரண்டது
விவசாயிகள் வெகுண்டு
கரங்கள் கோர்த்தனர்
சுரண்டல் சகாப்தம் ஒழிந்தது
சிகப்பு யுகம் பீறிட்டு உயர்ந்தது
எல்லோர்க்கும் வேலை
எல்லோர்க்கும் உணவு
எல்லோர்க்கும் இலவச மருத்துவம்
நிலமெல்லாம் மக்களுடைமை
தொழிற்சாலைகள் யாவும் பொதுடைமை
யாவர்க்கும் இலவசக் கல்வி
அனைவர்க்கும் தேசமே சொந்தம்
வேலை நேரம் அளவிடப்பட்டது
ஓய்வு வயது நிர்ணயிக்கப்பட்டது
உழைக்க இயலாதவர்க்கு ஓய்வூதியம்
உழைப்பவர்க்கு உன்னத மரியாதை
பெண்களுக்கு சம உரிமை
குழந்தைகளுக்கு
தகுந்த பாதுகாப்பு
சோவியத் புரட்சி சாதித்தது
நவம்பர் எழுச்சி உழைப்பவரை விடுவித்தது
பேதமற்ற வாழ்வு
பேரன்பின் பெருவாழ்வு
கண்ணீர் இல்லை
கஷ்டங்கள் ஏதுமில்லை
உலகத் தொழிலாளர்கள்
உற்சாகமாக வாழ்த்தினர்
உலகமே வியந்தது.
வசந்ததீபன்

