வசந்ததீபன் கவிதைகள் !!

வசந்ததீபன் கவிதைகள் !!

(1) தனிமையின் சங்கீதம்
என் உலகத்தில் இருக்கிறேன்
நதிகள் இல்லை
வனங்கள் இல்லை
ஆழியில்லை
பறவைகள் பறக்கவில்லை
மலர்கள்  வாசமில்லை
மழை புயல் பூகம்பம் ஏதும் வரவில்லை
சிறிய மேஜை என்னோட தோழமை
மஞ்சள் வண்ண நெகிழி இருக்கை என்னை ஆறுதல் படுத்துகிறது
கனவுகள் தின்று தின்று காலம் கழிகிறது
கைபேசியோடு எனது மெளனத் தொடல் உரையாடல்
உலர்ந்த மனதின் கனிகளை எனக்கு அப்பால் விநியோகிக்கிறேன்
அதைக் கொள்பவர்கள் சலனமற்று இருக்கிறார்கள்
விதையுள்ள கனிகள் இதயங்களில் விருட்சமாய் எழும் என்பது
என்னுள்
நீண்ட பயணத்தின் தீராத பாடலாயிருக்கிறது.
***********************************************
(2) பகடையாட்டம்
விளக்கு ஒளிக்கு முன்னால் நின்றது பூனை
சுவரில் நின்றிருந்தது அதன் பிம்பம்
அருகில் போனதும்
பயந்து சுவரின் மேல் பகுதிக்கு
ஓடியது பிம்பம்
விடாமல் அதை துரத்தியதுபூனை
பிடி கொடுக்காமல் பாய்ந்தது அது
பிடித்திட பிரயத்தனப்பட்டது இது
நீண்ட பிடித்தல்கள்
நீண்ட தப்பிதல்கள்
தவித்துக் களைத்து அமர்ந்தது பூனை
தளராமல் அதன் பின் பக்கத்தில் அதன் பிம்பம்.
**************************************************
(3) பூனையும் நுண் அரசியலும்
சுற்றும் முற்றும் பார்த்தது
நிறைய ஆட்கள்
கீழே பார்த்தது
பளிங்குத் தரை
மெல்ல நடந்து திரும்பிப் பார்த்தது
யாரும் பின் வரவில்லை
மண்தரையைத் தேடி
அருகிலிருந்த மரத்தைப் பார்த்தது
அதன் நினைவில் சிறுத்தை பேசிய பழிவெறி…
“உன்னை வெட்டா விட்டாலும்
உன் பிய்யை வெட்டுவேன்….”
என அசரீயாய் கேட்டது
மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்தது
மரத்தைப் பார்த்தது
யாரும் தென்படவில்லை
மண்ணில் குழி பறித்தது
உபாதையை தீர்த்து
அவசர அவசரமாக குழி மூடி விட்டு
சிறகு முளைத்தது போல்
பறந்து ஓடியது பூனை.
வசந்ததீபன்
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *