(1)
தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டுக்கேட்டு
இதயம் கற்ஜாடியானது
ஆசீர்வாதங்களை எதிர்நோக்கி
காலம்
புளிப்புக்காடியாய் நுரைக்கிறது
லீலி புஷ்பங்களைத்
தேடித்தேடி
வெளிமானாய் நான்.
(2)
காதலாய் கசிந்துருகும்
கனவாய் வாழ்வு
பூவே
இதயம்
காலியாய் இருக்கிறது.
(3)
கதவைப் போலிருக்கிறாள் பெண்
வெளியேயும் வராமல்
உள்ளேயும் போகாமல்
நிலைப்படியில்
நிறுத்தப்பட்டிருக்கிறாள்
கதவை எப்போதும்
பூட்டியே வைக்கிறார்கள்.
(4)
சொல்வதற்கு வார்த்தைகள் இருக்கின்றன
சொல்லத்தான் மனசு நினைக்கிறது
சொல்வதில் ஏனோ
தயக்கம் தடுக்கிறது.
(5)
பெண் உடலைத் திறக்கிறாள்
பிரபஞ்சம் வெளிப்படுகிறது
பஞ்சபூதங்கள்
பேருருக் கொண்டு
பெண்ணாகின்றன
அறைவதற்கு கையை ஓங்குகிறான்
மின்னலிட்டுப் பார்க்கிறாள்
சப்தநாடியும் ஒடுங்க
தலை கவிழ்கிறான்.
(6)
கொட்ட குடி ஆத்துக்குள்ள
கொறவ மீனுக துள்ளுது..
கொமரிப் புள்ள
மனசுக்குள்ள
கூந்தப் பன பூக்குது..
கல்யாண பூ வாசம்
காத்தெல்லாம்
மணக்குது.
(7)
இன்று அழகு
நாளை அசிங்கம்
இடையில் அடிக்காதே தம்பட்டம்
மேகங்கள் மறைக்கின்றன
நிலவு தெரியவில்லை
கூந்தலை நீ அள்ளி முடிந்திடு.
(8)
படுக்கை அறையோ
பொழுது போக்குமிடமோ
இல்லை
தேநீர் குடிக்குமிடமோ
அரட்டையடிக்கும் திண்ணையோ
இல்லை முக நூல்
என் ரணங்களின் சங்கப் பலகை
என் ஆயுதங்களின் பாசறை.
(9)
பூவைப்போல என்னை
எளிதாகப் பறித்தெறியலாம்
செடியைப்போல சிரமமின்றி
பிடுங்கி வீசலாம்
என் முன்னோர்களை
அப்படித்தானே
அப்புறப்படுத்தி இருக்கிறீர்கள்.
(10)
இவ்வுலகம் குழந்தைகளின் நரகம்
ராட்சசர்களை வளர்த்தெடுக்கிறது
கனவுகளின் மரண ஓலம்
அவர்களுக்கு பள்ளி எழுச்சி பாடுகிறது
மரணத்தின் சித்திரங்களை உயிர்ப்பிக்கிறது
வாழ்வின் போலிமைகளை
விதந்தோதுகிறது
காலம் காலமாய்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.