வசந்ததீபன் கவிதைகள்(1) கொதிக்கும் நிழல்
____________________________
வண்ணப்பெட்டி  என்று
எடுத்து  விட்டான்.
வாசனை  அதனை
விட்டுப்  பிரிய
மனதைத்  தூண்டவில்லை.
நாடோடியின்
முதுகில்  கனக்கும்  கூடாரமாய்
அவனை  அது
இம்ஸிக்கத்  தொடங்கியது.
கடிகார  ஒலி
அப்பெட்டியின்  உள்ளிருந்து
மெல்லக்
கேட்கத்  தொடங்கி
இப்போது
வேகமெடுத்தது.
கீழே  வைக்கவும்  பயம்..
கையில்  பிடிக்கவும்  பயம்..
வெடித்துச்  சிதறினால்
ஒருவேளை
உருக்குலைந்து  போகலாம்.
திடுக்கிடல்
ஊறிப்பெருகி
மூழ்கித்
திளைத்தான்…
உயிர்  பற்றிய
கவலை
கரைந்து  போனது.
துடிக்க  வைத்த  சப்தம்
உறைய
அவன்  கையிலிருந்து
இறக்கை  முளைத்து
பறந்து  போனது
அந்த  வண்ணப்பெட்டி.
அவன்
நிணக்குழம்பாய்
நைந்து
பரவினான்.


(2) இறுதிக் காட்சி
______________________
நகைகள்  பற்றி  விவாதித்தார்கள்
வீடு  குறித்து  ஆலோசனைகளை  அலசினார்கள்
உணவு  டிப்ஸ்களை  பரிமாறினார்கள்
அழகு  சம்பந்தமான  கருத்துக்களை  முன்  வைத்தார்கள்
குழந்தைகளின்  கல்வி, பள்ளி, கல்லூரி, ஆசிரியர்கள்  மற்றுமான  விஷயங்களைப்  பகிர்ந்தார்கள்
எதிரிகளைத்  திட்டினார்கள்
நண்பர்களைப்  பாராட்டினார்கள்
ஜோஸ்யம், அரசியல், சமூகம்  என
காரசாரமாய்  பொரணி  கொறித்தார்கள்
ஆண்களும், பெண்களும்.
அடக்கம்  செய்யப்படுவதற்காக
கண்ணாடிப்  பேழைக்குள்
இறந்த  அவன்
காத்திருந்தான்.


(3) இருப்பின் சூத்திரம்
_________________________
மான்குட்டிகளின் பாதங்களில்
வனத்தின் சாந்தம்
விழித்திருக்கிறது.
இலைகளின் அசைவில்
மரத்தின் உயிர்
தரித்திருக்கிறது.
நீரின் சிரிப்பொலியில்
மண்ணின் மகிழ்ச்சி
ஒளிந்திருக்கிறது.
பறவைகளின் சிறகசைப்பில்
மேகங்களின் கனவுகள்
நிரம்பியிருக்கின்றன.
மலைகளின் கம்பீரத்தில்
நிலத்தின் உக்கிரம்
புதைந்திருக்கிறது.
பல்லுயிர்களின் செழிப்பில்
பஞ்சபூதங்களின் இயக்கம்
அடங்கியிருக்கிறது.
வையகத்தின் வாழ்வில்
பிரபஞ்சத்தின் தோற்றுவாய்
திறந்திருக்கிறது.
வசந்ததீபன்