(1) பிரிவு காண்டம்
_____________________
சாணம் மணக்கும் தரையில்
கந்தல் பாயை விரித்து வைத்தாள்.
தாலிக் கயிற்றுக்கு
கஸ்தூரி மஞ்சள் தடவி முறுக்கேற்றினாள்.
நெற்றியில் சந்தோஷமாய்
பெளர்ணமி முளைத்தது.
சொட்டுச் சொட்டாய்
இரவின் உயிர் உறிஞ்சும்
ஹரிக்கேன் விளக்கு
இமை கொட்டியபடி வெறிக்கிறது.
எண்ணெய் காணா தலைக்கு
மல்லிகைப்பூ
சிலிர்ப்பூட்டுகிறது.
அம்மியில் உருட்டி வைக்கப்பட்ட
கேப்பைக் களியின் சூடு
பெருமூச்சிட்டு
ஆவியாய்ப் புகைகிறது.
குச்சிக் கருவாட்டு சொதிக் குழம்பின்
புளிப்புச் சுவை
உயிர்மூச்சாய்
குடிசைக்குள் பரந்திருக்கிறது.
வெளி வாசலின் தடம் பார்த்து
அவனுக்காக
அவளின் நினைவுகள்
கிறங்கி அலைகிறது.
வேலை தேடி அஸ்மித்தவன்
ஆறு மாதங்களுக்குப் பின்
இன்று உதிப்பதாக
கைபேசி சொன்னது.
ஊது பத்திச் சாம்பல்
சிதறிக்கிடக்கும் பிரதேசத்தில்
அவள்_
பதைபதைத்து…
அணு அணுவாய்…
உருகுகிறாள்.
(2) துள்ளி எழுந்தது காற்று
____________________________________
சைக்கிள்களில்
மனம்
போன போக்கில்
விரைகிறார்கள்…
பள்ளிச் சிறார்கள்.
புத்தகங்களுக்குள்ளும்…
பரீட்சைகளுக்குள்ளும்…
நசுங்கி..
பெற்றோர், ஆசிரியர்
பார்வைகளால்
வதங்கி..
குமைந்து..
புழுங்கியவர்கள் இன்று
இறக்கையடிக்கிறார்கள்.
மழைக்காலங்களின்
தட்டான் பூச்சிகள் திருவிழா
இளவேனிற் காலத்தின்
வண்ணத்துப்பூச்சி களின் ஊர்வலம்
கண்களும் மனதுகளும்
குளிர்மையில் நீந்திக் களிக்கின்றன.
உலர்ந்து போன வாழ்வில்
சிறிது மின்னல் சந்தோஷம்.
(3) தனிமைக் காட்டுக்குள் பெருந்தீ
____________________________________________
நினைத்துப் பார்க்கிறேன்
துக்கம் ஓடி வருகிறது
மனசைப் படாரென்று மூடுகிறேன்
தனிமை காய்கிறது
இதயம் துடிக்கிறது
நிழலே.. நிழலே.. கொஞ்சம் இரக்கம் காட்டு
அதிகாலை இருளுக்குள் ஊடுருவிச் செல்கிறேன்
குளிர் கூட வருகிறது
வெயிலுக்குள் போய் சேர்வது வேதனையளிக்கிறது
சொல்லிக் கொள்ளாமல் தருவது முத்தங்கள்
கிள்ளிக் கொடுப்பதல்ல முத்தங்கள்
அள்ளி அள்ளி முத்தாட்டுவதே முத்தங்கள்.
மேகத்தில் என் உயிர்
பூமியில் என் உடல்
மழையாய் உயிர்த்து நடனமாகிறேன்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

