வசந்ததீபன் கவிதைகள்

வசந்ததீபன் கவிதைகள்



எல்லாக் காலத்திற்குள்ளும் ரணம்
______________________________________
இரவில்
தாமதமாகவே
எனக்குள்
வந்தடைகிறது உறக்கம்.
மிகுந்த பாரமேற்றி
கரடுமுரடான
மேடு பள்ளங்களில்
அச்சொடிவது போல
கீறிச்சிடும்
கட்டை வண்டியாய் நான்.
நாள்பட்ட புண்ணில்
கூட்டமாய் காக்கைகள்
மாறி மாறிக் கொத்த
தப்பிக்க ஓடியலையும்
கழுதையாய்
என் காலம்.
இரவு மட்டுமல்ல..
பகலும் கனக்கிறது.


சமீப நரகம்
_______________________
புகைந்து எரியும் சிதை
கரிந்து நாறும் சடலம்
கபாலங்களும்
கைகால்முட்டி எலும்புகள்
பரசிக் கிடக்கும்
சுக்கான் மண் பூமி
புதைமேடுகளும்
இடிந்த கல்லறைகளும் ஆக்கிரமித்திருக்கும் பொட்டல் காடு
பிரண்டையும் எருக்கும் தும்பையும் விளைந்திருக்கும்  வயல்
இரவில் கோட்டான்களும் ஆந்தைகளும் கூகைகளும் சப்தமெழுப்பும்
நரிகளும் கழுதைப்புலிகளும் திரியும்
சில நேரங்களில் சவம் ருசித்த நாய்கள்
பகலில் கருங்காக்கைகள்
தகரத்தில் மரக்கிளை உரசுவது போல கத்தும்
மட்க்கிய உடலின் துர்வாடை நிலம்கிளர்ந்து வெளிகளில் நிரம்பும்
ஆன்மாக்களின் பேரோலம்
ஆடி ஓடிப் பாடும் காற்றில் எதிரொலிக்கும்
பாழின் அடையாளங்களாய்
அந்த சாம்பல் பறக்கும் வனமது
என் தேசமாகவும்
என் வாழ்காலமாகவும்
என் கனவுகளாகவும்
என் நிலத்தின் பருவங்களாகவும்
ஆகிப் போனது பெருந்துயராக.
வசந்ததீபன்


Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *