கேட்கிறோம் – வசந்ததீபன்



புத்தன் ..இயேசு..அல்லா..ஈஸ்வரன்..
நீவிர் எவராயினும்
எமக்குரியதை
எமக்குப் பங்கிட்டுத் தாரும் ?

வீடற்று வீதிகளில் நாடோடிகளாய்
உணவற்று
மென்று தின்னும் பசியோடு
சொந்த நாட்டில் அலையும் ஏதிலிகளாய்
மருந்துகள் எட்டாமல்
நொடிகள் பின்னும்
மரணவலையை
அறுக்கத் திராணியற்று
மொழிகள் சிதைக்கப்பட்டு
நாவுகள் அறுக்கப்பட்டு
புதைத்த கனவுகளின்
உடைந்த படிமங்களாய்
எரித்த சரித்தத்திலிருந்து தீப்புண்களோடு
சாம்பல் மூடிய நெருப்பாய்க் கனல்கிறோம்.

கனத்த மெளனத்தை
சுமக்கும் கணங்களெல்லாம்
பதற்றத்தை நுகர்ந்து கொண்டிருக்கின்றன.

ரத்த நதியில் உளைந்து விளையாடும் காற்று..

நடுநிசியின்
அச்சத்தை..குரூரங்களை..
வெளிகளில் நிறைக்கின்ற நாட்கள்
நடுங்கிக் கொண்டு.

வலியத் திணிக்கப்பட்ட
புறக்கணிப்பின் கூர் முனைகளில்
அரற்றியபடி
மிதந்து கொண்டிருக்கிறது
தகிக்கும் சூரியன்.

நிலாவின் குறுக்கு நெடுக்காக
தற்கொலையும் கொலையும்
ஓடிக் கொண்டிருக்கின்றன.

வெறிச்சோடிக் கிடக்கின்ற
வாழ்க்கையின் கனவில்
புகைந்து சிதறுகின்றன
மினுக்கும் நட்சத்திரங்கள்.

ஆழக் கீறப்பட்ட
காயங்களிலிருந்து
சொட்டுகின்ற ரத்தத்தால்
நனைந்து நடுங்குகின்ற
அடர் தனிமைக்குள்
அதிசயமான பிரபஞ்சம்
நினைவுகளின் இருண்ட பாதை வழியே
சுழன்று கொண்டிருக்கிறது.

ஆகவே
உமக்கு முன்னால்
மனக் கொந்தளிப்பான வார்த்தைகளுடன்.

வசந்ததீபன்