அந்த சத்தியாகிரகியின் ரத்த சாட்சி நினைவு விழா – வசந்ததீபன்ராட்டை இற்றுக்கிடக்கிறது
துளசி மணி மாலையில்
நூலாம்படை பின்னியிருக்க
தூசி படிந்து புத்தக அடுக்குகளுக்குள்
போர் உபதேச நூல் மெளனமாய்…
ராம் ..ராம் என்ற வார்த்தை உச்சரித்த
மெலிந்த மனிதனின் புகைப்படத்துள்
உறைந்த ரத்தத்துளிகள்
அணத்தும் ஓசை
ராஜ்காட் மைதானம் மட்டுமல்ல
கங்கைகாவிரி உள்ளடக்கிய நிலங்களில்
தீராத வலியின் முனகல்களாய்…
துரோகத்தின் சாட்சியாய்
கொலைகாரர்களை வாழ்த்திய படி
ரணம் பட்ட சிட்டுகுருவியாய்
இந்திய மனங்களில்
அலறிக் கொண்டு திரிகிறது
மனித உதிரம் பருகி
மாபெரும் ஜனநாயக உடலைப் பிய்த்து
தின்று கொண்டிருக்கும்
பசு தோல் போர்த்திய கழுதைப்புலிகளை
ஓநாய்களும் நரிகளும் கரவொலி எழுப்பிப் பாராட்டுகின்றன
தேசத்தை
சிறுசிறு துண்டுகளாக வெட்டித்
தமது களஞ்சிகளை நிரப்பும்
காக்கைகளும் கழுகுகளும்
தேசீய கீதம் பாடி
விழாவை முடிக்க
புராதான நிலத்தின்வாழ்வின் கனவுகள்
மெல்ல மெல்ல சாம்பலாகிக் கொண்டிருக்கிறது
இன்னும் காற்றடிக்கவில்லை
சீக்கிரம் பறந்து மறைவதற்கு.

வசந்ததீபன்