வசந்ததீபன் கவிதைகள்(1) யுக தர்மம்
________________

அணில்கள் மரக்கிளைகளில் ஓடிப்பிடித்து விளையாடுகின்றன
சிட்டுக்குருவிகள்
பறந்து பறந்து சிரிக்கின்றன
நடக்க இயலாமல் சிறிது சந்தோஷப்பட்டுக் கொள்கிற
வனத்துள்
காட்டுக் குதிரைகள் மேய்கின்றன
குளம் நீர்த் தூரிகையால்
வானை வரைகிறது
பனிசூடிய மலையும்
ஊசியிலை மரங்களும் வியக்கின்றன
நதியில் மிதந்து
வருகின்றன கனவுகள்
நீர்ப்பரப்பில்
தனிமையின் இசை குமிழியிடுகிறது
மஞ்சள் ஒளியில்
தீராத காதல் பொழிகிறது
அடிமை வாய்க்குப் பூட்டு
எடுபிடி மூளையை கட்டியிருக்கிறது சங்கிலி
வாழ்வின் மொழி திண்டாடுகிறது
வரப்புகளில் கரிசாலையும் நெருஞ்சியும் பூத்திருந்தன
கொறவையும் கெழுறும் நெல் பயிருக்குள் நீந்தித்திரிந்தன
கொக்குகளும் மடையான்களும் கூத்தடித்தன
அது ஒரு காலம்
கண்ணீரின் வெப்பத்தில் கனவுகள் தகித்தெரியும்
அவலங்களையும் அவமானங்களையும் துடைத்தெறிய
ஒத்த கரங்கள் திரளும்
வார்த்தைகள் சும்மா இருப்பதில்லை.(2) மூளையைத் தின்னும் கறுப்புச் சிலந்தி
__________________________________________

ஐந்து மனநோயாளிகள் கை கோர்த்தனர்
ஒருவன் கதை சொன்னான்
இன்னொருவன்
திரைக்கதை விவரித்தான்
மூன்றாமவன்
வசனத்தை ஒப்புவித்தான்
நான்காமவன் கற்களையும் மரக்கட்டைகளையும்
நடிநடி என மிரட்டினான்
ஐந்தாம் பத்தாம்பசலியாய்
அழுதான்
ஆவேசப்பட்டான்
அப்படியே தூங்கிப்போய்விட்டான்.

வீடுகளிலெல்லாம்
விஷ நிழல்கள்
படிவதால்
காலம் உருகிக் கொண்டிருக்கிறது.(3)

கேள்விகள் விடைகளைத்
தேடியபடியே
பயணிக்கின்றன
குழந்தைகளின் மனம்
காலியாகவே இருக்கிறது
கிழிந்த பையில்
கனவுகளை
நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள் யாவரும்.

 

வசந்ததீபன்