துகளினுள்ளே அலைகள் – வசந்ததீபன்துகளினுள்ளே அலைகள்
______________________

அசைவம் சைவம்
சைவம் அசைவம்
அடப் போங்கடா
பசி வயித்தக் கிள்ளுது.

🦀

துயருற்றவர்களின் வேதனைகள்
பாறைகளாய் கிடக்கின்றன
ஆயுதங்களாக
காலத்தை எதிர்நோக்கி.

🦀

என்னால் அமைதியாய்
இருக்க முடியவில்லை
கடல் போல மனசு
ஆனால் இன்னும்
புயல் எழவில்லை.

🦀

வறண்ட நிலங்களிலிருந்து வீசுகிறது துயரக்காற்று
பெருமூச்சின் வெப்பம்
நிரம்பித் ததும்புகிறது
உலர்ந்த காலத்தின் கோபம்
பற்றி எரிகிறது.

🦀

கிழிபட்ட இருதயத்திலிருந்து சிதறின
விழுங்கப்பட்ட பல இதயங்கள்
பிதற்றிக் கொண்டே
போகிறது காற்று.

🦀

குதிரையில் ஏறிப் போனேன்
வழி நெடுக பள்ளம் மேடுகள்
குதிரையை நான்
சுமக்கும்படி ஆகிவிட்டது.

🦀

தொட்டிலை கைகளால் பிடித்தாட்டுகிறாள்
நீர்த்துளிகள் தரையில் சொட்டுகின்றன
இறந்த குழந்தையின் நினைவுகள் நெஞ்சிலாடுகின்றன.

🦀

சிட்டுக்குருவிகள் கூடைத் தேடுகின்றன
குரங்கு பிய்த்தெறிந்து கொண்டிருக்கிறது
கதைகளெல்லாம் நிஜமாகிக் கொண்டிருக்கின்றன.

🦀

சிரிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும்
அழுவதற்கு பயிற்சி தேவையில்லை
சிரிப்பும் அழுகையும்
மனிதரைப்பாடாய்படுத்தும்.

🦀

கண்ணாடி முன் நிற்கிறான்
கண்ணாடி சிரிக்கிறது
கண்ணாடியை இனி பார்ப்பதில்லை
என சபதம் செய்கிறான்.

🦀

வசந்ததீபன்