வசந்ததீபன் கவிதையும், ஹிந்தி மொழிப்பெயர்ப்பு கவிதையும்…!

Vasanthadeepan Poetries And One Veena Srivastava Hindi Poetry Translated in Tamil. Book Day is Branch of Bharathi Puthakalayam.நட்சத்திரங்கள்
____________

வானத்தைப் பார்த்தேன்
சின்னஞ் சிறு ஒளிப் பூக்கள் ஏராளமாய்
பரவிக் கிடந்தன
எங்கிருந்து இவை உதிர்ந்தன?
ஒரு வேளை
இறந்தவர்களின் இருதயங்களோ…
இல்லை
இனி பிறப்பவர்களின் ஆன்மாக்களோ…
அகல் விளக்குகளாய் ஜொலிக்கும்
அவை ஏற்றி வைக்கப்பட்டும்
இன்னும் ஏன் இருட்டாயிருக்கிறது?
என்ன வகையான கடல் அது?
துளித் துளி மீன்கள் நீந்திச் திரிகின்றன…!
எந்த அரக்கன்
எவரின் கண்களைப் பறித்து
இப்படி போட்டு வைத்திருக்கிறான்
யார்
பதுக்கி வைத்திருக்கும்
தங்க, வெள்ளி நாணயங்கள்
அங்கே
சிதறிக் கிடக்கின்றன?
மேலே நகரும் ஊர்திகளின்
எரியும் விளக்குகளா…!
யார்
சிந்திய கண்ணீர்த் துளிகள்?
ஏதோ மரத்தில்
மின்மினிகள் அமர்ந்து இருக்கின்றனவா?
எவரின்
உறைந்த ரத்தச் சுவடுகள்?
எந்த வேட்டைக்காரர்கள்
நெற்றியின் மேல்
டார்ச்சுகளைக் கட்டி அலைகிறார்கள்?
இருண்ட காட்டின்
பசித்த மிருகங்களின்
ஒளிரும் முகங்களா?
பிரபஞ்சத்திலிருந்து கடவுள்
பல்லாயிரம் கண்களால்
ஏழு உலகங்களை
வேவு பார்க்கிறாரோ…!
எந்த மூட்டையிலிருந்து கொட்டிய
என்ன வகையான தானியங்கள்?
எந்தப் பறவையின் முட்டைகள்?
என்னை பசி மயக்கத்திற்குள் தள்ளி
ரௌத்ரங்களைக் குவிக்கின்றன மனவெளியெங்கும்
பறிபோன
சோற்றுப் பருக்கைகளென.

– வசந்ததீபன்நாங்கள் ஆதிவாசிகள்
———————————

நாங்கள் காட்டை நேசிக்கிறோம்
வீழும் அருவிகள் , மலைநதிகள்
இருதயத்தைப் போல இருக்கின்றன
இலுப்பையின் போதையூட்டும் வாசம்
உடல் – மனதுக்கு மணமூட்டுகிறது
ஊசிலை மரங்களின் நாட்டியம்
மனதுள் பொங்கித் ததும்புகின்றன
நதிக்கரை, தானியக்குதிர், சணல், சருகுகள் மற்றும் நெட்டி, தக்கை மரங்களின் வெப்பம் தரும் காய்ந்த மரத் தண்டுகள்
எங்கேயும் போக விடுவதில்லை
சால மரம் எங்களது பாதுகாவலர்
அது தட்டு, வட்டி, கிண்ணத்தை ஏந்தி
மூடுகின்றன எங்களுடைய உடலை.

நாங்கள் பாதுகாத்து வைத்திருக்கிறோம்
எமது பாரம்பரியங்களை
வாழ வைத்திருக்கிறோம்
எமது கலாச்சாரங்களை.

எங்களிடம் சிறுவன் _சிறுமி இல்லை
இருக்கிறவர்களோ உழுபவர் அல்லது கீரைகள் பறிப்பவர்
கீரை பறிப்பவருக்கு
வெளிப்படையான விலக்கு இருக்கிறது
தமது வாழ்வை வாழ்வதற்கு
அவர்களுக்கு காற்றைப் போல விடுதலை இருக்கிறது
நதியில் பாய்ந்தோட, சுதந்திரம் இருக்கிறது
மற்றும் உழுவது
புரிய வைக்கிறது
சமமான அதிகாரத்தை.

முன்னோர்களை மறக்காமல்
இருக்கிறோம் நாங்கள்
திருவிழாவின் பெருமையாக இருக்கிறது பசுமை
எங்களோடு இணக்கப்பட்டிருக்கின்றன எமது நிலம்
எமது காடுகள்
மற்றும்
கல கலவென்று பாய்கிறது நீரால்
கலாச்சாரத்தை அலங்கரித்தோம்
இந்த தேசவாசிகள்
நாங்கள் ஆதிவாசிகள்.

ஹிந்தியில் : வீணா ஸ்ரீ வாஸ்தவ்
தமிழில் : வசந்ததீபன்இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.