வசந்ததீபனின் கவிதைகள்

Vasanthadheepan Poems 16 வசந்ததீபனின் கவிதைகள் 16
பித்தாய் பெருகுதடி உன் நினைவு
***************************************
நீ தான் என் கவிதையூற்று
நீ தான் என் கற்பனைகளின் பெருங்கடல்
நீ தான் என் கனவுகளின் அமுதசுரபி
காதலின் வலி
கசப்பாகவும் இருக்கும்
இனிப்பாகவும் மாறும்
என் இதயத்தை எடுத்துக் கொண்டாய்
என் உயிரைப் பறித்துக் கொண்டாய்
உன் முத்தத்தையாவது எனக்குக் கொடு
நெஞ்சுக்குள் நீ
நுழைந்ததை அறியேன்
நான் திக்கு முக்காடித் தவிக்கிறேன்.

முள்ளாய் பார்க்காதே
பூவான என் மனம் காயமாகும்
ஒட்டடைகளை நீக்கி விடு
வர்ணம் தீட்டி அழகுபடுத்து
உன் உள்ளத்துள் வசிக்க
நான் வருகிறேன்
என் இதயத்தைக் கொண்டு வா
உன் இதயத்தை தருகிறேன்
திருடியவைகளை
திரும்பப் பெற்றுக் கொள்வோம்
கண்ணீர் மழையில் நனைகிறேன்
காதல் தெருவில் அலைகிறேன்
காலமெல்லாம் தடுமாறி
கசந்த வேதனையில் விழுகிறேன்
தனித்த ஊஞ்சல் நான்
ஆட்டும் உள்ளத்திற்காக ஏங்குகிறேன்
ஆட்டுவித்தால் ஆடாதோ கண்ணே
வாடைக்காற்றிற்கு சற்று விடைகொடுப்பாயா ?

சடசடத்துப் பெய்கிறது ஆற்றாமை
****************************************
மீனாயிருந்தால்  கடல்
பறவை  என்றால்  காட்டுப்பறவை
புலியின்  வாழ்விடம்  பரந்த  வனம்
கடல்  என்னாச்சு
நாடு  கடலாச்சு
எல்லாம்  கிழிபட்ட  நாட்காட்டியாச்சு
சாம்பல்  பறக்கிறது
கங்கு  ஒளிர்கிறது
வெடிப்பு  நெருங்குகிறது.
நெருக்கடிகள்  அதிகரிக்கின்றன
பதற்றம்  சூடு  பிடிக்கிறது
தப்பிப் பிழைக்க  முகாந்திரமில்லை
புருவங்கள்  சுருங்குகின்றன
இமை ரப்பைகள்  அடித்துக்  கொள்கின்றன
வியப்பாய்  அவளின்  வருகை
நாக்கைக் கடித்துக்  கொள்கிறேன்
உதடுகள்  துடிக்கின்றன
பிரிவின்  துயரம்   என்னுள்  பரவுகிறது
கூண்டிற்கு  கதவுகள்   உண்டு
கூட்டிற்கு  திறந்த  வாசல்
விடுதலைக்குள்  வீடுபேறு
குழந்தை  வீறிட்டழுதது
பொம்மை  சோறு  சாப்பிடவில்லை
அன்புக்கு  உண்டோ  அடைக்கும்  தாழ்
விட்டு விடுதலையானால்
வாழ்வே வர்ணமயம்
இதில் பறவைகள் மட்டுமென
யாவுமே ஆகும் வானவில்லாக
பழுப்பேறிய  புத்தகத்துள்
எழுதப்பட்ட  வரிகள்
காதலின்  கானல்வரி  ஓவியம்
வாசிக்கப்பட்டதை  அறியவில்லை  எழுதியவன்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.