வசந்ததீபன் கவிதைகள்…!

(1) ஒரு ரூபாய் மகாத்மியம்
__________________________________

அவனிடம் ஒரு ரூபாய் இருந்தது
என்ன கிடைக்கும் ?
ஒரு பூ
ஒரு வடை
ஒரு பேனா
ஒரு மிட்டாய்
ஒரு காகிதம்
ஒரு சிகரெட்
ம்க்கூம் ஒன்றும் கிடைக்காதா !
என்ன செய்யலாம்…
பிச்சைக்காரனின் பாத்திரத்தில் போட்டான்
அவன் திருப்பி அவனிடமே முறைத்தபடிக் கொடுத்தான்
குழந்தையிடம் அவனும் நீட்டினான்
அது வவ்வேக் காட்டி ஓடிப்போனது
இறந்து கிடந்தவரின் நெற்றிக்காசாய் வைத்தான்
அவரோ எழுந்து காசை அவனிடம் தந்துவிட்டு மறுபடியும் செத்துப் போனார்
பேட்டா செருப்பு வாங்கிவிட்டு அந்த ஒரு ரூபாயை விலையுடன் சேர்த்து
தந்தால்
கடைக்காரன் சிரித்தபடி ரவுண்டாய் அமெளண்ட் வாங்குறதில்ல
எப்பவும் ஒன்பது தான் என்றான்
ஆட்டோக்காரன் பஸ்க்காரன் பெட்டிக் கடைக்காரன் எவனும் ஒரு ரூபாய சீந்தவில்லை
கடுப்பாகி முச்சந்தியில் வீசினான்
கைதட்டி அழைத்த வழிப்போக்கன் எடுத்து அதை கையில் வைத்து விட்டுப் போனான்
ஆற்றில் போட்டால்
மீன்கள் கவ்வி வந்து அவன் முகத்தில் அடித்தன
வானத்தில் சுண்டிவிட்டால்
பறவையொன்று பிடித்து
ணங்கென்று அவனின் நடு மண்டையில் போட்டது
புதைத்து வைத்தால் மண்புழுக்கள் கொண்டு வந்து
அவனின் காலடியில் போட்டது
மலையில் போட்டு வந்தால்
வழியும் நீர் கொண்டு வந்து சேர்த்தது
ஒரு ரூபாயே என்னை விட்டு அகலமாட்டாயா என்ற வேதனையில்
கால் ரூபா அர ரூபா போல
நீயும் காணாமல் போகமாட்டாயா எனப் புலம்பிய படி
அந்த ஒரு லாயக்கற்ற நாணயத்தின்
நாணயத்தைப் பற்றி கவிதை எழுதினான்
நாணயத்தை இழிவு செய்தேனென
குற்றக்கூண்டில் நிறுத்தப்பட்டான்
தண்டனை வழங்கப்பட்டது
அபராதம் ஒரு ரூபாய் என விதிக்கப்பட்டது.

 

🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀

(2) சும்மா தான இருக்க
_________________________________

விடியறதுக்கு முன்ன முழிக்கிறேன்
கண்ணெல்லாம் இருட்டுக் கட்டிக்கிட்டு வருது
ஒரே அசதியா ஆளக் கீழ தள்ளுது
வாசலக் கூட்டித் தெளிச்சுக் கோலம் போடுறேன்
அடுப்ப பத்தவச்சு காப்பி போடுறேன்
புள்ளைகளுக்கும் அவருக்கும் கொடுத்துட்டு
கொஞ்சத்த வாயில ஊத்திக்கிறேன்
வெளிச்சம் வெரட்டுது
சீக்கிரம் டிபன் சாப்பாடு செய்யணும்
பாத்திரத்தக் கழுவுறதுக்குள்ள
காலு பொட்டோடிப் போச்சு
காலைக்கும் மதியத்துக்கும்
ரெடி பண்ணியாச்சு
தூங்குறவங்கள எழுப்பி விடணும்
குளிக்க வச்சு டிரஸ் பண்ணி
ஒடம்பே புண்ணா காந்துது
ஸ்கூல் வேனுல புள்ளகள ஏத்திட்டு வந்தா
இன்னும் படுக்கையில் பெரண்டுக்கிட்டே
இருக்கிறாரு மனுசன்….
ம்..
பாவம் அவரும் என்ன செய்வாரு?
சம்பாரிக்கப் போற ஆம்பிளைக்கு
ஆயிரத்தெட்டு இம்ச..
வீட்டுல கெடக்குற எனக்கு
என்னத்தத் தெரியப் போகுது
ஒரு வழியாக எல்லோரும்
வெளியேறிப் போக
வீடே வெறுச்சோடிப் போச்சு
காஞ்சு ஒணந்து போனத
வாயில போட்டுக்கிட்டு
பாத்திரத்த கழுவி பெண்டு நிமிந்து போச்சு
துணிகள கொஞ்சம் தொவைக்கிறேன்…
செத்த நேரம் தலைய சாய்க்கிறேன்…
பால் வந்திருச்சு..
புள்ளைக வந்துட்டாங்க..
டிபன குடுத்ததும்
அவங்க படிக்கப் போய்ட்டாங்க..
நெடுந் தொடரப் பாத்து..
அழுது..
சிரிச்சு..
கோபப்பட்டு..
பரிதாபப்பட்டு..
பொழுது போனதே தெரியல…
ராத்திரி சாப்புட்டு புள்ளைக ஒறங்குனதும்
அவரு வந்தாரு..
சாப்புட்ட பாத்திரத்தக் கழுவி
படுக்கைக்கு வந்தேன்….
கண்ணத்தொறக்க முடியாம
ஒறக்கம் கீழே தள்ளியது..
மெல்லக் கட்டைய சாய்த்தேன்..
அவர் தொட்டு
சட்டென தன் பக்கமாய் இழுத்தார்….
நான் சொன்னேன், “அலுப்பா இருக்குங்க…”
அவர் எரிச்சலாய்_
“பொழுதன்னைக்கும்
சும்மா தான இருக்க……”
எனக் கத்தினார்.

வசந்ததீபன்