வசந்தகால விண்மீன்கள் - அசோக் சித்து 
தமிழ் இலக்கிய உலகம் ஆரம்ப நிலையில் இருந்து இன்று வரை வெவ்வேறு பரிணாமங்களை எடுத்து வருகிறது. சங்க இலக்கியங்களாகட்டும் அதன் பிறகு வந்த இடைக்கால இலக்கியங்களாகட்டும் இன்றைய நவீன கவிதைகளாகட்டும் எல்லாவற்றிலும் மனங்களின் ஆளுமை வெளிப்படுத்தப்படுகிறது.
எழுத்தாளர் தான் எண்ணிய கருத்தை எளிய நடையிலும் எழுதிப் பழகலாம் அல்லது அகராதியைக் கொண்டு பொருள் புரிந்து வாசிக்கும்படியான கடின நடையிலும் இலக்கியங்களைப் படைக்கலாம். சங்க இலக்கியங்களைப் புரிந்து கொள்வதற்கு இலக்கணங்கள் மற்றும் அவற்றின் முழுமையான வடிவங்களை நாம் உணர்ந்து கொள்ளுதல் அவசியமாகிறது. ஆனால் தொடர்ச்சியான பயணத்திலும் அறிவியல் யுகத்தின் நீண்டு கொண்டிருக்கும் கால வெளியின் ஓட்டத்திலும் இன்று வாசிப்பை நோக்கி நகரும் சூழல் இல்லாத காலகட்டத்தில் இலக்கணங்களின் மீதான ஆர்வமும் இலக்கியங்களை வாசிப்பதற்கான நேரமும் குறைந்து வரும் சூழலில் நவீன கவிதைகள் நேரடியான பொருளை வாசிப்பவருக்குக் கொடுத்து விடுகின்றன.
அந்த வகையில் காதலும் தத்துவமும் இரண்டறக் கலந்தும் அன்றாட வாழ்வின் பாடுகளை உட்பொருளாகக் கொண்டும் சமூக சீர்கேட்டில் உழன்று தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ள இயலாத மனிதர்களின் இயலாமை குறித்தும் சமூகச் சீர்கேடுகளில் சிக்கித் தவிக்கும் வறுமை மனிதர்களைக் குறித்தும் எண்ணக் குமுறல்களை கவிதை என அமைத்துத் தந்திருக்கிறார் அசோக் சித்து அவர்கள்.
வசந்தகால விண்மீன்கள் என்ற இந்த தொகுப்பில் உள்ள 70 கவிதைகளில் சரிபாதியாக காதல் இடம் பெற்று இளைஞனின் மனதிற்குள் காதல் எப்படியெல்லாம் நுழைந்து விடுகிறது அப்படி நுழையும் காதல் அவனை எப்படியெல்லாம் அனுதின நகர்வில் பாடாய்படுத்துகிறது என்பதை சமூகத்தின் போக்குடனும் தீண்டாமையின் வலி மிகுந்த தருணங்களோடும் பதிவு செய்கிறது. உலக இயல்பில் திரிந்து சமூகத்தில் சீர்கேடுகளை ஏற்படுத்தும் மனிதர்களை தனது எழுச்சிமிகு வரிகளால் சீர்திருத்த முடியும் என்ற நம்பிக்கை சாட்டையால் விளாசுகிறார். எளிய மொழியில் தனது எண்ணங்களை வடித்து வாசிப்போரின் சிந்தைக்குள் சமூகத்தின் போக்கை விமர்சிப்பதோடு நின்றுவிடாமல் சீர்திருக்கக் கல் கொண்டு இருட்டு மனங்களுக்குள் வெளிச்சத்தை மீட்டுத்தரவும் முயற்சிக்கிறார்.
கவிதைகளுக்குள் மறை பொருட்களை நுழைத்து வாசிப்போரைத் திண்டாட விடாமல் நேரடியான விளக்கபென கவிதைகளைவழங்கிவிடுகிறார். நாமும் அவை உணர்த்தும் சிந்தனைகளுக்குள் மயங்கி நின்றுவிடாமல் அடுத்த நிலையை நோக்கி நகர்வதள்கான வெளியையும் ஏற்படுத்திவிடுகிறார் கவிஞர்.
எனக்குப் பிடித்த சில கவிதைகளைப் பட்டியலிட எண்ணுகையில் மொழியின் வளம் எவ்வாறெல்லாம் சிந்தனையை வளர்த்தெடுக்க உதவுகிறது என்பதை மகிழ்வுடன் உணர வழி தருகின்றன இந்நூலின் கவிதைகள்.
*விடுதலை
கூலி வேலை செய்யும்
பெண்களிடம்
பெண் விடுதலையைப் பேசினேன் நிசப்தமானார்கள் பிறகு
சத்தமாய் சிரித்தார்கள்
*நிகர எடை
தங்கத்தை விட மதிப்பு மிக்கது உழைப்பாளர் உழைப்பு
நிகர எடை தெரியாமல்
அடகு வைக்கப்படுகிறது
முதலாளிகளிடம்
*நடைமுறை
உழைப்பவனுக்கு
ஊறுகாய்
உறங்குபவனுக்கு
பிரியாணி
மனிதனைப் பார்த்து
சிரிக்கிறது இயற்கை
*தேடல்
தன்னைத்தானே
பூட்டிக் கொண்ட சிலர்
சாவியை
கோவில் கோவிலாக
தேடுகிறார்கள்
*நினைவுப் பரிசு
உழைப்பாளர்களுக்கு
திருவோடும்
முதலாளிகளுக்கு
தங்கத் தட்டும்
நினைவுப் பரிசாக
அறிவிக்கப்பட்டது
உழைப்பாளர் தினத்தில்
*பசி
பசியோடு வாசலில்
காவலாளி
மொட்டை மாடியில்
காகத்திற்கு
நெய் சோறு
*சுரண்டல்
முதலாளிகள் விட்டு வைத்த தொழிலாளர்களின்
கொஞ்சநஞ்ச ரத்தத்தையும்
குழாய் போட்டு
உறிஞ்சி விடுகின்றன
கொசுக்கள்
*நந்தவனம்
உள்ளம் சிவந்த
என்னவளின்
எண்ணம் சுமந்து
சென்றேன்
நடுநிசியும்
நந்தவனமானது
*குடையின்றி மழையில் நீ
சாலையில் நடந்தாய்
உன்மேல்
பட்டுத்தெறித்த
மழைத்துளிகள்
புதிதாய் பிறந்து
சாலையில் ஓடியது
தங்கக் காசுகளாய்
*காதல் போதும்
காண்பதெல்லாம் வெளிச்சமாகி வானத்தில் சிறகடித்து
ஞானம் பெறலாம்
தியானம் தேவையில்லை
காதலித்தால் போதும்
*நிலத்தடி நீர்
விலைக்கு வாங்கிய
தண்ணீர் பாட்டிலை
திறந்தேன்
விடுதலை பெற்று
ஆவியாய் பறந்தது
நிலத்தடி நீர்
*விழி வெளிச்சம்
ஓர் இருண்ட இரவில்
உன்னை
சந்தித்து விட்டு
திரும்புகையில்
என் முன்னால்
ஒளியாய் வழிகாட்டியது
உனது கண்கள்
*பூச்சிக்கொல்லி
பூச்சிக்கொல்லிகள்
பூக்களை மட்டுமல்ல
பயிர்களோடு
மனிதர்களையும்
கொன்று விடுகின்றன
*அன்று இன்று
விவசாயிகளுக்கு அன்று
முப்போகம்
விளைச்சல் மிஞ்சிட
இன்று
முடிவில்லா கடன்களே
மிஞ்சுகிறது
*ஓட்டு
சாதி ஓட்டுக்கள்
சமத்துவ ஓட்டுக்களாக
மாறாதவரை
தொழிலாளியின்
ஒட்டுக் கோமணமும்
மாறாது
*தீட்டு
ஊருக்கு
ஒதுக்குப்புறமாக உள்ள
சேரியினைத் தொட்டுத்தான்
தென்றல் காற்று
வருகிறது
தீட்டு பார்ப்பவர்கள்
சுவாசிக்காமல் இருக்க முடியுமா
*ஆழ்துளைக் கிணறு
ஆழ்துளைக் குழாயில்
அடித்த தண்ணீரில்
கைகளில்
தாங்கிப் பிடித்தேன்
மிதந்தது
குழந்தையின் முகம்
வறுமையின் தாண்டவத்தில் வசிக்கும் சூழலிலும் தனது கனவுகளை பசியின் நீள் கொடுமைக்குத் தின்னத்தராமல் நம்பிக்கையின் கரம் பிடித்து வாழ்வை எதிர்கொள்ளும் தனது அன்றாடப் பிரச்சனைகளைக் கண்டு மனம் தளராது சமூகத்தின் போக்கை மாற்றமுடியும் என்ற உறுதியில் கவிதையைக் கையில் எடுத்திருக்கும் அசோக் சித்து அவர்கள் மொழிச்சுரங்கத்தில் எழுத்துப் புதையல்களை அள்ளிவந்து நமக்குப் பரிசாக்கியிருக்கிறார்.
காதலைக் கடந்து சமூகத்தைக் கடைந்து சமத்துவத்தின் பாதையை அடையப் பார்க்கும் கவிஞருக்கு தமிழ் துணை நின்று வெற்றி அளிக்கும் என்ற நம்பிக்கையில் நகர்பவருக்கு இன்னும் ஏராளமான சொற்கள் காத்திருக்கின்றன உலகெங்கும் சிந்தனைகளை விதைப்பதற்கு. எல்லாக் காலமும் கவிதை வானில் வசந்தத்தைப் பிரசவிக்கும் விண்மீனாய் ஒளிர்ந்திட வாழ்த்துகள்.

 

நூலின் தகவல்கள் 

நூல் : வசந்தகால விண்மீன்கள் (கவிதைத் தொகுப்பு)

ஆசிரியர் : அசோக் சித்து 
வெளியீடுமின் கவி
தொடர்புக்கு 9626227537
பக்கம்110 
விலை ரூ 150
முதல் பதிப்பு : மே 2024
நூலறிமுகம் எழுதியவர் 
இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *