வாஸ்கோடகாமாவின் விஷமத்தனமான கடற்பயணம்
இப்போது வருடத்திற்கு 80லட்சம் மக்களை பலிவாங்கும் தொற்றுநோயாக பரவியுள்ளது…!
வாஸ்கோடகாமாவின் கடற்பயணத்திற்கும் உலகம் முழுவதும் இன்று உடல்நலக்குறைவை உண்டாக்கி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் புகையிலைக்கும் முக்கிய தொடர்பு உள்ளது. 1497 ஆம் ஆண்டு வாஸ்கோடகாமாவின் வரலாற்று சிறப்புமிக்க கடற்பயணம் உலகளவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அது கடற்பயணத்திற்கும் புதிய வாணிப தொடர்பிற்கும் அதன் மூலம் நடைபெற்ற கலாச்சார மாற்றத்திற்கும் பெரும் பங்கு வகித்து அழிக்க முடியாத அடையாளங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஏற்பட்ட வர்த்தக பரிமாற்றங்களில் புகையிலை முக்கிய பங்கு வகிக்கிறது. புகையிலை சமூகத்தை ஆழமாகவும் பல விதங்களிலும் பாதிப்பையும் ஏற்படுத்திய ஒரு பொருளாகும்.

மனித உடலில் புகையிலை கடுமையான பாதிப்புகளை உருவாக்குகிறது. நுரையிரல், வாய், தொண்டை, உணவுக்குழாய், கணையம், மற்றும் சிறுநீர் பை ஆகிய உறுப்புகளில் புற்றுநோய் ஏற்பட காரணமாக உள்ளது. அது போல் எம்பசிமா(திசுக்களில் காற்று பரவுதல்) உள்ளிட்ட சுவாச நோய்கள், இருதயம் தொடர்பான நோய்கள் நீரழிவு நோய், கருவுருதல் இல்லாமை கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிக்கல்கள் உள்ளிட்ட ஏராளமான நோய்கள் ஏற்பட காரணமாக உள்ளது.புகையிலையை தொடர்ந்து பயன்படுத்துவதால் மீள முடியாத பழக்கத்திற்கு உள்ளாகிறோம் அதில் உள்ள நிக்கோட்டின் அதிக போதையை ஏற்படுத்தும் தன்மையை கொண்டுள்ளதுஇதனால் மூளையை பாதிப்படையும்.இன்று உலக அளவில் பரவலாக புகையிலை நுகரப்படுவதால்மக்களின் ஆரோக்கியமானவாழ்விற்கு கடும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது. இதிலிருந்து மீள உலகளவிலான ஒருங்கிணைந்த எதிர்ப்பு நடவடிக்கை தேவை..
இந்தியா முழுவதும் புகையிலை பயன்படுத்தப்பட்டாலும் முதன் முதலில் பயிரிட்டது பூர்வக்குடி அமெரிக்கர்கள் தான். 16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பாவிலும் பிறகு ஐரோப்பியர்களின் வாணிப தொடர்புகளின் வழியாக தென் ஆசிய பகுதிகளிலும் இது அறிமுகமானது. போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள் பிரிட்டிஷ்கார்கள் ஆகியோர் அடுத்துடுத்து புகையிலை. பயன்பாட்டை பரவலாக்கினர். தெற்காசிய சமூக மக்களின் கலாச்சார மற்றும் சமூக வாழ்வில் புகையிலைதவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இந்தியாவிற்கு புகையிலை ஒரு அந்நிய பொருள் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். ஐந்து மொழிக்குடும்பங்கள் ஆயிரக்கணக்கான மொழிகள் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த போதிலும் புகையிலைக்கு என்ற தனித்த வார்த்தை இல்லை புகையிலைக்காண இலக்கிய ஆதாரம் எதுவும் காணப்படவில்லை. ஆனால் திராவிட மொழிக்குடும்பங்களில் அதன் செயல்பாடுகளும் விளக்கங்கள் குறித்த சொற்களும் இடம்பெற்றுள்ளது ஆனாலும் ஐரோப்பியர்களின் படையெடுப்பிற்கு முன் இந்தியாவில் புகையிலை பயன்படுத்தியதற்கான ஆதாரம் எதுவுமில்லை.

இந்தியாவில் புகையிலை ஏற்படுத்திய தாக்கம் அதிகம் ஐரோப்பியர்களுக்கு அடிமையாக இருந்ததற்கும் மக்களின் பல்வேறு நோய்களுக்கு வழி வகுத்ததிற்கும் முக்கிய காரணியாக விளங்கியது இன்றைக்கும் அது தொடர்கிறது. ஆனாலும் ஆச்சர்யபடும் விதமாக அன்றைக்கு அது பெரிய விவாதமாக மாறவில்லை அதன் பொருளாதார பரிமாணங்களூம் பேசும் பொருளாக இருந்ததில்லை. ஐரோப்பியர்களின் சுரண்டலின் சின்னமாக கோஹினூர் திகழ்ந்தது ஆனால் அதைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய புகையிலைக்காக யாரும் பிரிட்டிஷாரை எதிர்த்தாக தெரியவில்லை.
வருவாய் சார்ந்த பரிசீலனைகள்:
புகையிலை வறட்சியை தாங்க கூடியது, இது ஒரு கடுமையான பயிர், பொருளாதார ரீதியாக ஏழை மக்களும் பயன்படுத்தும் வகையில் அமைந்த முக்கியத்துவம் வாய்ந்த பொருள். இன்று இந்தியாவில் புகையிலை 2% என்ற அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது அதில் சுமார் 5 கோடி பேர் பணியாற்றுகிறார்கள். ஏற்றுமதி மற்றும் இதர வரிகளின் மூலமாக ஆண்டுக்கு சுமார் 22 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது.ஆனாலும் புகையிலை ஏற்படுத்தும் பாதிப்புகளால் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் பொருளாதார இழப்புகளும் ஏற்படுகிறது பல லட்சம் பேர் நோயினால் பாதிக்கப்படுவது உள்ளிட்ட 11 லட்சம் பேர் வருடத்திற்கு மரணமடைவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது. இந்தியாவில் புற்றுநோயாளர்களில் சுமார் 27% பேர் புகையிலை பயன்படுத்திய காரணத்தால். பாதிப்படைந்துள்ளனர். காலனித்துவ பாரம்பர்யத்தின் இந்த அம்சம் காலனித்துவ வாதிகளுக்கு பொருளாதார நன்மைக்கான ஒரு கருவியாகவும் அதை பயன்படுத்திய உள்ளூர் மக்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகளை எற்படுத்தியதாகவும் விளங்கியது. இது பற்றிய வரலாற்று ரீதியான விவாதம் நடைபெற வேண்டும்.
முன்னுரிமைக்கான விவாதம் :
சமகாலத்தில் புகையிலை தொடர்பான ஆராய்ச்சிகள் இரண்டு பெரிய நிறுவனங்களின் முரண்பாட்டால் தொடர்ந்து நடைபெறுகிறது.இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு பொது சுகாதாரத்தை பாதுகாக்க புகையிலை பயன்பாட்டை குறைப்பதை நோக்கமாக கொண்டு புகையிலை மீதான முதலீடுகளை குறைப்பதற்கு ஆலோசனை வழங்கியுள்ளது. அதற்கு நேர்மாறாக இந்திய வேளான்துறை புகையிலை உற்பத்தியை பெருக்குவதற்கு நவீன மரபணு நுட்பங்கள் சார்ந்த வழிமுறைகளை பயன்படுத்த ஆர்வம் காட்டுகிறது. இந்திய வேளான் துறை முன்னெடுக்கும் இந்த ஆராய்ச்சி ராஜமுந்திரியில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறுகிறது.புகையிலை மற்றும் விதைகளின் நிலைப்புத்தன்மையின் தரத்தை உறுதி செய்யும் அதேவேளையில் புகையிலை வர்த்த்கத்தை மேலும் அதிகரிப்பதேநிறுவனத்தின் நோக்கமாக உள்ளது. இதுதான் இந்திய மருத்துவ ஆலோசனைக்குழு முரண்படுகிற இடம் புகையில்லா இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நெறிமுறையை இந்திய மருத்துவ ஆலோசனைக்குழு முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. இந்திய வேளான்துறை அதில் முரண்படுகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக சிலவற்றை வலியுறுத்துகிறது.இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு-21 வாழ்வதற்கான உரிமை, தனிப்பட்ட சுதந்திரம் உட்பட ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்கிறது. இது அடிப்படை உரிமைகளின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. கூடுதலாக அரசியலமைப்பின் வழிகாட்டும் நெறிமுறைகளாக சட்டப்பிரிவுகள் 39(e) 39(f), 41,42,47 ஆகிய பிரிவுகள் அரசை பொது சுகாதாரத்தை பாதுக்காக்க வேண்டியும் சமூக நீதியை கடைபிடிப்பதையும் மற்றும் வாழ்வதற்கான உரிமையையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்துகிறது. புகையிலையினால் கிடைக்கும் பொருளாதார நன்மைகளை விட மக்களின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் முக்கியத்துவம் தரப்பட வேண்டுமென அரசியல் அமைப்பு சட்டப்பிரிவுகள் வலியுறுத்துகிறது.
CRISPR(CLUSTERED REGULARLY INTERSPACED SHORT PALINDROMIC REPEATS) ஏதேனும் மாற்றங்களை நிகழ்த்தியதா..?

புகையிலையில் சில மரபணுக்களை நீக்கி நிக்கோட்டினை குறைப்பதன் மூலம் அதிலிருந்து ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முடியும் என்ற முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் CRISPR தொழில்நுடப முறையை பயன்படுத்துகிறார்கள். இது ERF-199 மற்றும் ERF-189 ஆகிய மரபணுக்களை குறைப்பதாக உறுதியளித்துள்ளதால் நிக்கோடின் அளவுகள் 2 முதல் 5 சதவீதம் வரை மட்டுமே குறைந்திருந்தது. பிறகுQPT2 மரபணுவை வெளியேற்றும் போது அது நிக்கோட்டினை பெருமளவு குறைத்துள்ளது ஆனால் மறுபக்கம்புகையிலை உற்பத்தியை பாதித்துள்ளது எனவே விவசாய பயன்பாட்டிற்கு பொருத்தமற்றதாக மாறியது.
கூடுதலாக, BBLன் ஆறு வகையான மரபணுக்களையும் குறிவைத்து வேலை செய்ததால் நிக்கோட்டின் அளவை 94% வரை குறைக்க முடிந்தது. இது நிக்கோட்டினை குறைக்கும் CRIASPRன் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இருப்பினும் விவசாய உற்பத்தியை பாதிக்காத வகையில் சில முன்னெடுப்புகளை செய்ய வேண்டும். இந்திய மருத்துவ ஆலோசனைக்குழுவும், இந்திய வேளான் துறையும் இதில் இணைந்து பணியாற்ற வேண்டும். இதில் உடல் பாதிப்பு இல்லாத புகையிலையை உருவாக்கி பொருளாதார இழப்புகளையும் தவிர்ப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.
மறைமுகமான விளம்பரங்கள்:
புகையிலை நிறுவனங்கள் சட்ட விதிமுறைகளை மீறுவதில் திறமையோடு செயலாற்றுகின்றது. புகையிலை கட்டுப்பாடு தொடர்பான கூட்டமைப்பு புகையிலை விளம்பரங்களுக்கான தடையை ஏற்படுத்திய போதிலும் வெவ்வேறு வகையில் மறைமுகமாக விளம்பரப்படுத்துகிறது புகையிலை இல்லாத வேறு பொருட்களின் பிரபலமான பெயர்களை பயன்படுத்துதல், ஊடகம் மற்றும் பொழுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு நிதியளிப்பது புகையிலை தொடர்பானபுகைப்படங்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட மறைமுக விளம்பரபடுத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து புகையிலை உற்பத்தி நிறுவனங்கள் பின்பற்றுகிறது. இது பொது சுகாதார துறை எடுக்கும் முயற்சிகளை மலினப்படுத்துகிறது.

உலகளவில் பரவும் பெருவாரியான தொற்று நோய்கள் கிருமிகளால் மட்டுமே பரவும் என்ற தவறான கருத்து உள்ளது தொற்றுநோய்க்கான வரையறைகள் அத்தனை கூறுகளையும் புகையிலை நுகர்வும் கொண்டுள்ளது. உலகளவில் ஆண்டுக்கு 80லட்சம் மக்கள் புகையிலையினால் உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.மேலும் கோடிக்கணக்கானோர் நோய்களால் அவதிப்படுகின்றனர் அந்த வகையில் இது உலக அளவில் பரவியிருக்கிறது எனவே இதுவும் ஒரு வகையான தொற்றுநோய்தான் என வரையறுக்கலாம்.புகையிலை தொடர்பான நோய்கள் மற்றும் அதன் பாதிப்புகளை எதிர்த்து சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த போராட்ட முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் அப்போது தான் இதன் பாதிப்புகளை தடுக்க முடியும்.
கட்டுரையாளர்:
டாக்டர்.சி.அரவிந்தா
பொது சுகாதார மருத்துவர்
தமிழில்:
மோசஸ் பிரபு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

