சரிதா ஜோ எழுதிய "வாசிக்கப்படாத அத்தியாயத்தின் ரேகைகள்" சிறுகதை | Saritha Jo Tamil Short Stories | தமிழ் சிறுகதைகள் pdf | www.bookday.in

“வாசிக்கப்படாத அத்தியாயத்தின் ரேகைகள்” சிறுகதை – சரிதா ஜோ

“வாசிக்கப்படாத அத்தியாயத்தின் ரேகைகள்” சிறுகதை

“தடக்… தடக்… தடக்…”
தையல் மிஷின் இசைக்கும் அந்த ஒலி செல்வியின் இதயத்துடிப்போடு ஒன்றாய் கலந்து கொண்டது.

ஒவ்வொரு முறை சுழலும் சக்கரம் ஓடிக்கொண்டிருக்கும் நினைவுப் பக்கங்களைப் புரட்டுவது போலிருந்தது.

“சிலுக்கா…” என்று மனசுக்குள் ஓர் பெயர் மட்டும் ஓடிக்கொண்டிருந்தது.

சிலுக்கா அக்காவின் சிரிப்பு அவரது கண்களில் இருந்த ஒளி எல்லாமே ஜன்னல் வழியே பாய்ந்து கொண்டிருக்கும் காட்சிகளைவிடவும் தெளிவாக மனதில் பாய்ந்து கொண்டிருந்தது.

அம்மா தொலைபேசியில் சொன்ன அந்த வார்த்தை, இன்னும் காதுக்குள் ஒலித்தது.

“சிலுக்கா … ஆனா நீ வந்திராத.”

தையல் மெஷினின் சத்தம் ‘தடக் தடக் தடக்…’ என்று செல்லும் ஒவ்வொரு தாளமும் செல்வியின் உள்ளத்தில் ஓர் கேள்வியை எழுப்பியது.

இப்படி எப்படிச் சிலுக்கா அக்காவுக்கா?

ஜன்னலின் வழியே பசுமை நிலங்கள், தூரத்தில் மெல்லிய காற்றில் அசையும் மரங்கள் அந்தக் காட்சிகள் அனைத்தும் நினைவின் திரையாகி, சிலுக்கா அக்காவின் முகத்தை ஒவ்வொரு காட்சியிலும் வரைந்து காட்டின.

செல்வியின் முன்னால் இருந்த தொலைக்காட்சியில் யேசுதாஸ் குரலில் இழைத்து வார்த்து எடுத்த சோகப் பாடல் ஓடிக்கொண்டிருந்தது.

அது சிலுக்காஅக்கா நினைவுகளில் கரைந்த பாழ் இடங்களைச் சொல்லும் ஒரு துக்கக் கவிதை போல இருந்தது.

ஆனால் செல்வியின் உள்ளத்தில் சிலுக்கா அக்கா ராகமாக இருக்கிறார். பேசிக்கொண்டே இருக்கிறார்.“எங்கே போயிட்டே எவ்வளவு நாளாச்சு!” என்று செல்லக் கோபமாய் கேட்கிற மாதிரி.

தையல் மெஷினின் சக்கரங்கள் சுத்தச் சுத்த செல்வியின் மனம் அந்தக் கேள்விகளோடு ஆடியது.

தையல் மெஷினின் வேகம் செல்வியின் நினைவுகளின் வேகத்தோடு போட்டி போட்டது.

ஆனால் எந்த வேகத்திலும் அந்த நினைவுகள் பின்தங்கவே இல்லை.

“ஏன் சோகமா இருக்கே?”என்று தையல் மெஷின் செல்வியிடம் கேட்டது.
“அந்தச் செருப்பு. அந்தச் சிவப்பு நிறச் செருப்பத்தான் நான் இன்னைக்கும் தேடிக்கிட்டே இருக்கிறேன். எங்கேயுமே கிடைக்கல. அதனாலதான் சிலுக்கா அக்கா சொன்ன கதை உண்மையோ அப்படின்னு நான் இன்னைக்கும் நம்புறேன்” என்றார் செல்வி.

“என்ன சிவப்பு நிறச் செருப்பு? யாரைப் பத்திச் சொல்றே?” என்று கேட்டது தையல் மெஷின்.

செல்வி அந்த சௌந்தர்யமான நினைவுகளை தையல் மெஷினோடு பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார்.

சிலுக்கா அக்காவைப் பத்தி முழுக் கதையை நான் சொல்றேன். அப்பதான் உனக்குப் புரியும். காலை நேரத்தில் வானத்தைப் பிளந்து எழும் சூரியன். என் கிராமத்தின் மேல் பரந்து விரியும் ஒளி. மங்கலாக ஒலிக்கும் கோவிலின் காண்டாமணி. அருகிலுள்ள கிணற்றடியில் துவைக்கற பெண்களோட சிரிப்பு. இவைகள் தான் என்ற மனசுல என்ற ஊரைப் பத்திப் பதிஞ்சிருக்கற ரம்யமான காட்சிகள்.
எனனோட ஊரு ஈரோடு. அங்கு இருக்கிற ஒரு சின்ன கிராமம். ஆனா அந்தச் சின்ன கிராமம்தான் அந்தக் காலத்தில் எனக்கு ஒரு பெரிய உலகம். கிராமத்தோட பேரு கினிப்பாளையம்.

வீடுகள் பெரும்பாலும் களிமண் சுவர்களாலும் மேலே தென்னை ஓலையில் வேயப்பட்ட கூரையோடும் இருக்கும். சில வீடுகளில் ஓடு இல்லைனா சிமெண்ட் கூரை கூடப் போடப்பட்டிருப்பாங்க. அத வெரல் விட்டு எண்ணிரலாம்.

சாயங்கால நேரம் தெருக்கள்ல தூசி பறக்க விளையாடுற குழந்தைகள் ஓயாமல் கத்திக்கிட்டே இருப்பாங்க.

மாடுகள், எருதுகள், ஆடுகள், கோழிகள் இதெல்லாம் கிராமத்தோட ஓர் அங்கமா இருக்கும்.

பொம்பளைங்க பெரும்பாலும் உழைப்பின் உருவமா இருப்பாங்க.

காலை எட்டு மணிக்குள்ள தோட்டங் காடுகளுக்குள்ள போயிடுவாங்க. எப்பவுமே கைத்தறி சீல தான் கட்டி இருப்பாங்க. அந்தச் சேலைகள் வெளுத்து போயி கந்தலாக் கூட இருக்கும். ஒருநாளும் அவங்களோட புடவை மடிப்பு சீராக இருந்தது இல்லை.

முகத்தில் எப்பவுமே வியர்வை, கை கால்களில் அவர்களின் உழைப்பின் அடையாளச் சின்னங்களாக வெடிப்புகள் காயங்கள்.

ஆனா இந்தப் புழுதி நெறஞ்ச வாழ்க்கைக்கு நடுவுல எப்பவுமே பளிச்சுனு முகம், ஒளிரும் உருவத்தோட ஒருத்தங்க இருப்பாங்க. அவங்க தான் சிலுக்கா அக்கா.

சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் நான் பாத்து பிரம்மச்ச அழகு அப்படின்னா அது சிலுக்கா அக்கா தான். அவங்க எங்க ஊருக்கு ஒரு நிலா மாதிரி இருந்தாங்க.

சிலுக்கா அக்காவோட வீடு எங்கள் வீட்டிலிருந்து நாலு வீடு தள்ளி இருந்துச்சு. சின்ன வாடகை வீடு தான். ஆனால் அவரது கையால் அந்தச் சிறிய வீடு கூட ஒரு மந்திர வீடு போல மாறியிருந்தது.

வீட்டின் முன்புறம் எப்போதும் சுத்தமாக இருக்கும். வாசலில் துளசி மடம் இருக்கும். ஒவ்வொரு தினத்தின் முதல் சூரிய ஒளி அந்த வீட்டை ஒளிரச் செய்வது போல இருந்தது.

அவர் வீட்டு வாசலில் எப்போதும் கோலம் இருக்கும். சாதாரண கோலம் அல்ல. கோலத்தின் நடுவில் சிறிய பூந்தொட்டி வைத்து அதில் மல்லிகை, ரோஜா, செம்பருத்தி போன்ற மலர்கள் மலர்ந்திருக்கும்.

அந்தக் காலத்தில் எங்கள் ஊரில் பெரும்பாலான வீடுகள் சீரழிந்த நிலையில சரளைக் கற்கள் நிறைந்த வாசலுடன் இருந்தாலும், சிலுக்கா அக்காவின் வீடு மட்டும் எப்போதும் ராஜகளையுடன் இருக்கும்.

வீடு முழுவதும் தெய்வீக வாசனை கமழும். அந்தச் சிறிய வீட்டுக்குள் மிகச் சிறிய சாமி அறை வைத்திருந்தார். இல்லை இல்லை ஒரு கோயிலையே மினியேச்சர் செய்தது வைத்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். எந்நேரமும் ஊதுபத்தியும் சாம்பிராணியும் பூக்களின் வாசனையோடு கலந்து வீசிக் கொண்டிருக்கும். அந்த வாசனை இன்று நினைத்தாலும் என் மனதில் ஒரு தெய்வீகத் தன்மையை கொடுக்கும். அவர் வீட்டுக்குச் சென்று வரும் ஒவ்வொரு முறையும் எனக்கு அம்மாவிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் இருக்கும். சிலுக்கா அக்கா வீட்டு வாசல்ல தெனமும் கோலம் போடுறாங்க. நம்ம வீட்டுக்கு முன்னாடி ஏம்மா கோலம் போடறது இல்லை அப்படின்னு ஒருதடவை கேட்டேன். ‘கோலமெல்லாம் தாருக்குப் போடத் தெரியும்? அப்படியே தெரிஞ்சாலும் கோலம் போடறதுற்கு நேரமேது? காடுகரைன்னு வேலை வெட்டின்னு சுத்திட்டு திரிகிறவங்களுக்கு கோலம் ஒரு கேடா? சும்மா தொண்டு சுத்தி திரியிறவளுங்க தான் கோலம் போட்டுட்டு திரியுவாளுங்க’ அப்படின்னு எங்க அம்மா சொல்லுச்சு. அந்த நேரத்துல அங்க வந்த அப்பா “எதுக்குத் தேவையில்லாம சின்னப் புள்ள கிட்ட இல்லாததையும் பொல்லாததையுச் சொல்றே’ அப்படின்னு சொன்ன உடனே எங்க அம்மாவுக்குச் சர்ருன்னு கோவம் வந்துருச்சு. ‘அவளுக்கு மேலுப்போட்டு பேசுறீங்க. இப்படித்தான் ஊருல இருக்குற ஒவ்வொரு ஆம்பளைகளையும் பேசிப்பேசி சிரிச்சுச் சிரிச்சு மயக்கி வைத்திருக்கிறா களவாணிச் சிறுக்கி’ அப்படின்னு பேசினாங்க.

‘உன்னத் திருத்தவே முடியாது’ அப்படின்னு சொல்லிட்டு அப்பா அங்க இருந்து போயிட்டாரு.

விடுமுறை தினங்களில் நான் மட்டும் இல்ல. அந்தத் தெருவில் இருக்கிற அத்தனை பேரும் அவங்க வீட்டில் தான் வெளையாடுவோம். ஓடிப் பிடித்து, ஒளிந்து, ஐஸ் நம்பர், திருடன் போலீஸ், கலர் கலர், டிங் டிங் இப்படி நாங்கள் விளையாடாத விளையாட்டே இல்லைனு சொல்லலாம். நாங்க போடுற சத்தத்தை ஊர்ல சிலுக்கா அக்காவைத் தவிர யாருமே பொறுத்துக்கிட்டது கிடையாது.

அவங்களுக்கு இரண்டு குழந்தைகள்.
முதல் குழந்தை ரேவதி.
அவளோட முகம் பார்க்க நடிகை நதியாவை நினைவுபடுத்தும். அதே சிரிப்பு அதே அழகு. சிலுக்கா அக்கா மாதிரியே செக்கச் சிவந்த நிறம். அம்மாவை அச்சில் வார்த்த மாதிரியே போல செம்மையான முகம்.

ரேவதிக்கு என்னுடைய வயதுதான். ரேவதிக்கும் அவங்க அம்மாவுக்கும் நிறைய வித்தியாசம் இருந்துச்சு. ரேவதி ஒரு நாளும் மருதாணி போட்டுக்கிட்டதில்ல. முகத்துக்கு பேரன்லவ்லி பவுடர் போட்டுக்கிட்டது இல்லை. கண்ணுக்கு மை வைத்துக் கொண்டது இல்லை. ஆனாலும் ஒரு பேரழகு தேவதையாத்தான் இருந்தா.

ரேவதி எப்பவுமே பாடப் புத்தகம் படிக்கிறதை விட கதைப் புத்தகம் அதிகமா படிப்பா. ராணி, குமுதம், கல்கண்டு, ராணி முத்து, கண்மணி, ராஜேஷ் குமார் நாவல்கள், ஆனந்த விகடன் இப்படி நிறைய படிப்பா. எல்லாத்தையும் பக்கத்துல இருக்குற நூலகத்திலிருந்து எடுத்துட்டு வந்து படிப்பா.

அவ மூலமாத் தான் நானும் புத்தக வாசிப்புக்குள்ள வந்தேன். எங்க ஊட்ல இதுக்கெல்லாம் அனுமதி கிடையாது. யாருக்கும் தெரியாம மறைச்சு வைச்சுத் தான் படிப்பேன்.

இந்தப் பழக்கம் அவங்க அம்மா கிட்ட இருந்து தான் ரேவதிக்கு வந்திருக்கணும்னு எனக்கு இப்பதான் தெரியுது. ஏன்னா அவங்க அம்மாவும் புத்தகம் படிப்பாங்க. சிலுக்கா அக்கா வயசுல எங்க ஊர்ல இருக்கிற யாருமே கதைப் புக் படிச்சு நான் பாத்ததே இல்லை ஏன்னா அந்த வயசுல இருக்கிறவங்களுக்குப் பெரும்பாலும் படிக்கவே தெரியாது. அவங்க பள்ளிக்கூடமே போனதில்லைனு கூடச் சொல்லலாம்.

“நீ ஏம்மா கதைப்புக்கு படிக்கிறது இல்ல?” அப்படின்னு அம்மாகிட்டக் கேட்டேன். ‘படிக்கத் தெரிஞ்சா தானே! பள்ளிக்கூடம் கிள்ளிக்கூடம் போயிருந்தாத் தானே! பள்ளிக்கூடம் தெக்கால இருக்குதா? வடக்கால இருக்குதானே தெரியாது’

அப்படின்னு சொன்னாங்க உடனே ‘ஏன் உங்களப் பள்ளிக்கூடம் அனுப்பல?’ அப்படின்னு கேட்டேன். ‘ஆம்பளப் புள்ளையப் படிக்க வச்சா அவன் வேலைக்குப் போயி சம்பாரிச்சுப் போடுவான். பொட்டப் புள்ள இன்னொரு இடத்துக்குக் கலியாணம் பண்ணிப் போறவ தானே? வட்டச் சொம்பு வெளக்கரவளுக்குப் பள்ளிக்கூடம் எதுக்கு? அந்த நேரத்திலேயே இங்கிருந்து நாழு ஆடு குட்டி மேச்சா அதுல காசு சம்பாதிக்கலாம் அப்படின்னு நினைச்சு எங்க அக்கா தங்கச்சி அஞ்சு பேரத்தையும் பள்ளிக்கூடமே அனுப்பல. ஆனாப் பாரு உன் மாமனைப் படிக்க வச்சு போட்டாங்க. அவங்க சொன்னது நாயம் தானே? கடைசி வரைக்கும் கஞ்சி ஊத்துறது யாரு? ஆம்பளப் பையன் தானே?’ அப்படின்னு சொன்னாங்க.

இரண்டாவது குழந்தை சித்திரன். அவனுக்கு முழு வளர்ச்சி இல்லாமல் குள்ளமாக இருந்தான். அதனால ஊர்ல இருக்கிறவங்க அவனை சித்திரக்குள்ளன்னு கூட கூப்பிடுவாங்க. அதுக்கு அவங்க அம்மா கிட்ட ஏம்மா எனக்கு இந்த பேர் வெச்ச அப்படின்னு சொல்லி அடிக்கடி அழுது இருக்கான். பல நேரங்களில் பையன் இப்படி வளராமல் ரண்டு அடியோடு கிடக்கிறான். இவளுக்குக் கொஞ்சமாவது மனசுக்குள்ள அங்கலாப்பு இருக்குதா? சிரிச்சிகிட்டு திரியுற அப்படின்னு கூட சில நேரங்கள்ல பேசுவாங்க.

சித்திரன் ரஜினியின் தீவிர ரசிகன். தியேட்டர்ல ஒரு ரஜினி படம் விடாம அம்மாகிட்ட அடம் பிடிச்சு அம்மாவோட போய் பாத்துட்டு வந்துருவான். ஒருநாள் என்னோடு விளையாடிட்டிருந்தப்போ அவன்

“நான் ரஜினிக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அவர் எனக்குப் பதில் எழுதுவார்.” அப்படின்னு சொன்னான்.

எனக்கு ஒரே ஆச்சரியம். “உனக்கு முகவரி தெரியுமா?” என்று கேட்டேன். “ரஜினிக்கு முகவரி தேவையில்லை. ரஜினிகாந்த் சென்னை என்று எழுதினால் போதும். அவர்கிட்ட கொடுத்துடுவாங்க அப்படின்னு சொன்னான். அந்த நேரத்துல அவனுக்கு எல்லாம் தெரியும்னு நான் நெனச்சிட்டு இருந்ததுனால அதை முழுசா நான் நம்பிட்டேன். நீண்ட நாட்கள் அந்த நம்பிக்கையில் நான் வாழ்ந்தேன். நானும் கூட ரஜினிக்கு கடிதம் போடனும்னு நினைச்சுகிட்டு இருந்தேன். எனக்கும் ரஜினியை ரொம்பப் பிடிக்கும்.

சிலுக்கா அக்காவின் கணவர் ஊருக்குள் சின்னச் சின்ன பொருட்களை விற்று வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று வாழ்பவர்.

சிலுக்கா அக்கா வைத்திருந்த நாய்க்கு “மணி” என்று பெயர்.

நாயை வீட்டுக்குள் வைத்துப் பராமரிப்பது எங்கள் கிராமத்தில் சிலுக்கா அக்கா மட்டும் தான்.

ஊரில் மற்றவர்கள் நாயை வெளியே கட்டிவைத்து, அரிசிக் கஞ்சி ஊற்றி வைத்திருப்பார்கள். பெரும்பாலான நேரங்களில் மீதமான சாப்பாட்டையும், கைக்குழந்தைகளின் கக்காவை ஸ்க்கா கூப்பிட்டு சாப்பிட வைப்பார்கள். ஆனால் சிலுக்கா மணியைக் குழந்தையைப் போல மடியில் வைத்துக் கொஞ்சி வளர்த்தார். அதற்கென்று அந்தச் சிறிய வீட்டில் ஒரு இடம் அதற்கென்று ஒரு தட்டு. இவர்கள் சாப்பிடும் எல்லாமும் அதற்கும் போடப்படும். அதேபோல் பூனை “மீனு. அதை அருகில் படுக்க வைத்து, சாப்பாடு கொடுத்து, அன்பாகக் கட்டிப்பிடிப்பார். ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போல அந்தப் பூனைக் குட்டியைக் கொஞ்சுவார். மீனுவும் மணியும் வீட்டுக்குள் வந்தது ஒரு பெரிய கதை..

“என்னது கதைக்குள்ள கதையா?” என்று கேட்டது தையல் மெஷின்.

“ஒரு சின்ன கதை தான் கோச்சுக்காத..”

“நான் கோவிச்சுட்டா மட்டும் விடவா போற சரி சரி சொல்லு”
என்றது தையல் மெஷின்..

ஒரு நாளு எங்க ஊர்ல இருக்குற டெண்டுக் கொட்டாய்ல சினிமா பாத்துட்டு வந்துட்டு இருந்தோம். அப்போ சந்தைக் கடைக்குப் பக்கத்துல வரும்போது ஒரு குட்டி நாயை நிறைய நாய்ங்க சேர்ந்து கடிச்சுக்கிட்டு இருந்துச்சுங்க. நாங்க எல்லாரும் சேர்ந்து அதை துரத்தி விட்டோம். அப்ப அந்த குட்டி நாய் கால் உடைஞ்சு கத்திக்கிட்டு இருந்துச்சு. உடம்பெல்லாம் காயம் பாக்கவே ஒரு பக்கம் பாவமாவும் இன்னொரு பக்கம் அருவருப்பாவும் இருந்துச்சு. ஆனா அதை அப்படியே அள்ளி எடுத்து வாரி அணைச்சு வீட்டுக்கு கொண்டு வந்து அந்தக் காயத்துக்கு எல்லாம் மருந்து போட்டு ஒருவாரத்தில் சரி பண்ணிட்டாங்க. அதுக்கப்புறம் மணி அவங்க வீட்டோட ஒருத்தனாவே மாறிட்டான். அது மட்டுமா ஊர்ல ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காரங்கள வீட்டுக்குள்ளே விட மாட்டாங்க. ஆனால் சிலுக்கு அக்கா மாசத்துக்கு ஒரு தடவை ஊட்டச் சுத்தம் பண்ணும் போது அவங்களக் கூப்பிட்டு தான் உதவிக்கு வச்சுக்குவாங்க. நான் கூட ‘அக்கா எங்க அம்மா இவங்களை எல்லாம் வீட்டுக்குள்ளே விடாது. நீங்க எப்படி விடுறீங்க’ அப்படின்னு கேட்டேன். அதுக்கு அவங்க இதுல என்னசாமி இருக்குது? அவங்களும் மனுஷங்க நாமளும் மனுசங்க. அப்படின்னு சொன்னாங்க” என்று கூறி முடித்தார் செல்வி.

“சரி சரி பதினோரு மணி ஆச்சு. இது நீ டீ குடிக்கிற நேரம். போய் டீயக் குடிச்சிட்டு ஏதாவது நொறுக்குத் தீனி சாப்பிட்டுட்டு தெம்பா வா. நானும் என்னோட காதுல வழியுற ரத்தத்தைத் தொடச்சிக்கறேன்” என்றது தையல் மெஷின் .

“என்ன சொன்ன ரத்தமா? அப்போ நான் சொல்றதக் கேட்டு உனக்கு காதுல இரத்தம் வழியுதா?” என்று கோபமாக கேட்டார்.
“அட! சும்மா சொன்னேன். ரொம்ப இன்ட்ரஸ்டிங்காப் போகுது. சீக்கிரம் குடிச்சிட்டு வா” என்றது தையல் மெஷின்.

டிவியின் சத்தத்தை அதிகப்படுத்தி விட்டு சமையல் அறைக்குள் சென்று டீயை போட்டு எடுத்து வரும்போதே முறுக்கு டப்பாவையும் எடுத்து வந்து டிவிக்கு முன்னால் வைத்தார். டிவியில் ஓடிய பாட்டைப் பார்த்தபடியே டீயைக் குடித்து முடித்துவிட்டு முறுக்கையும் சாப்பிட்டு முடித்தார் செல்வி.

“இப்பக் கொஞ்சம் தெம்பா இருக்கா?” என்று கேட்டது தையல் மெஷின்.
“ஆமா. முறுக்கைச் சாப்பிடறப்போ எனக்கு ஒன்னு ஞாபகத்துக்கு வந்துச்சு”என்றார் செல்வி.
“என்ன ஞாபகம்?” என்று கேட்டது தையல் மெஷின்.
எங்கள் ஊரில் பலருக்கும் கேசரி, மைசூர் பாகு மாதிரியான இனிப்புகளைச் செய்யத் தெரியாது. அவையெல்லாம் விசேஷங்களில் வைக்கப்படும் பலகாரங்களாக மட்டுமே பாத்துப் பழகினவங்க. எந்த வீட்டு விழாவா இருந்தாலும், “சிலுக்காவக் கூட்டிட்டு வா” அப்படின்னு சொல்லுவாங்க.

அவங்க கேசரி செஞ்சு குடுத்தா அது நாக்கில் கரைஞ்சு தொண்டையில வழுக்கிட்டுப் போகும். மைசூர் பாகு, கடலை பர்பி, தேங்காய் பர்பி, ஜிலேபி, லட்டு இப்படிச் சொல்லிக்கிட்டே போலாம். அவங்க செய்யாத இனிப்பு இல்லை. யார் கேட்டாலும் உடனே ஓடிப்போய்ச் செஞ்சு கொடுப்பாங்க.
அஎல்லோரும் சாப்பிட்டுட்டுப் பாராட்டுவாங்க. சிலுக்காவோட கைப் பக்குவோ தாருக்கு வரும் அப்படினு எல்லாம் புகழ்வாங்க.

ஆனா அவங்க அந்தப் பக்கம் போன உடனே நாம என்னத்தக் கண்டோம் காடுண்டு கரையுண்டு, ஊடுண்டுனு இருக்கறோம். ஊர் மேயர தேவி….. தான எல்லாம் தெரியும். அப்படின்னு சொல்லுவாங்க.

ஒரு பக்கம் அவங்களத் தேடி கூட்டிட்டு வந்து பலகாரம் செய்ய வச்சு சாப்பிடறாங்க. இன்னொரு பக்கம் அவர “தேவி…” அப்படீன்னு பேசினாங்க?

எங்க ஊர்ல யாருமே தாரையும் ஒசத்திப் பேசவே மாட்டாங்க. கொறை சொல்றத மட்டும் முதலா இருப்பாங்க. சிலுக்கா அக்காவைப் பத்தி கிசு கிசு அந்த ஊரோட காத்துல எப்பவுமே மிதந்துகிட்டே இருக்கும்.

இப்படி மேனாமினிக்கியாட்ட மேக்கப்பு போட்டுட்டுத் திரிஞ்சா ஆம்பளைங்க வராம என்ன செய்வானங்க. அப்படிச் சம்பாதிக்கலைன்னா இப்படி மேனாமினிக்கித்தனம் பண்ணிட்டுத் திரிய முடியுமா?
சில நேரங்கள்ல ஜாடைமடையா அவங்க கிட்டயே பேசுவாங்க.
அதுக்கு சிலுக்கா அக்கா சிரிச்சுக்கிட்டே கடந்து போயிருவாங்க.

இப்படிப் பேசினாங்க தான் அடுத்த நாளே எங்க ஊட்டில பலகாரம் பண்ணிக் குடுக்க வாங்க அப்படின்னு வெக்கமே இல்லாம கூப்பிடுவாங்க. எதையும் மனசுல வச்சுக்காம சிலுக்கா அக்கா செஞ்சு கொடுப்பாங்க. .

அவங்களோட அந்த ருசியான சமையல் கைப்பக்குவந்தா அவங்களுக்கு வருமானத்தக் குடுத்துச்சு. பலகாரம் செஞ்சு தர ஊர் ஊரா போவாங்க இவங்க கைப்பக்குவம் தெரிஞ்சு விசேஷ நேரத்துல நிறைய பேரு நிறைய ஊர்களில் இருந்து வந்து அழைச்சிட்டு போவாங்க. அதையும் ஊருல இருக்குறவங்க தப்பாப் பேசினாங்க.

“நிறுத்து நிறுத்து நிறுத்து அங்க பாரு வெளியில என்னமோ சிவப்புக் கொடி பிடிச்சிட்டு கோஷம் போட்டுக்கிட்டு ஊர்வலம் போறாங்க?” என்று சொன்னது தையல் மெஷின்.

“ஆமாம் பாரு. நாட்டுல ஆயிரம் பிரச்சனை” என்று ஜன்னல் வழியாகப் பார்த்துவிட்டு கூறினார் செல்வி.

” சரி நீ கதையச் சொல்லு!” என்றது தையல் மெஷின்.

முகத்தில் மெலிதாகத் தடவிய ஃபேரன்லவ்லியோடு கோகுல்சான்டல் பௌடர் மேக்கப். அந்தக் காலத்தில் எங்கள் ஊரில் யாருக்கும் மேக்கப் என்றால் என்னவென்றே தெரியாது. மிகக் காஸ்ட்லியான மேக்கப் பொருள் பௌடர் தான். அதையவே ஏதாவது கல்யாணம் காட்சிக்கு திருவிழாவுக்கு போறதுனா தான் போடுவாங்க. நெற்றியில் குங்குமம்,சந்தனம் வைத்துக் கொண்டு எப்போதும் புது முகத்தோடு பளிச்சென்று இருப்பாங்க.

அவங்கடைய உடையிலும் அதே நேர்த்தி. ஊரில பொம்பளைங்க மடிப்பு எடுத்துச் சீலை கட்டி நான் பார்த்ததே இல்லை. அதுவும் குறிப்பாக பின் கொசுவம் வைச்சுச் சீலை கட்டறவங்க தான் அதிகம். ஆனா சிலுக்கா அக்காவின் உடை ஒருநாளும் மடிப்புக் கலைஞ்சு பாத்ததில்ல. அவங்க பின் கொசுவம் வச்சு கட்டினதில்ல. ஒரு சினிமா நடிகையைப் போலவே இருப்பாங்க. எப்பவுமே கண்ணைப் பறிக்குற சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் மாதிரியான கலர்களில் தான் தான் சீலை கட்டியிருப்பாங்க.

அந்தக் கால கட்டத்தில் அந்த வயசுல கொலுசு போட்டிருந்த ஒரே பொம்பள அவங்கதான். அவங்களுடைய கொலுசு நிறைய முத்துக்களோட இருக்கும். அவங்க நடக்கும்போது ஜல்லு ஜல்லு சத்தம் வரும். ஒரு நாளும் கொலுசு இல்லாமல் அவங்க கால்களப் பாத்ததில்லை. அவங்க கை கால்களில் எப்பவுமே மருதாணி சிவந்து கெடக்கும். வாரத்துக்கு ஒரு தடவ மருதாணி வைக்கிறத ஒரு வேலையாகவே வச்சிருந்தாங்க. என் கைகளிலும் அக்காவின் மருதாணி பல முறை சிவந்திருக்குது. கூடவே அவர் விரல் நகங்களில் எப்போதும் பதிந்திருக்கும் சிவப்பு நெயில் பாலிஷைக் கூட எனக்கு போட்டு விட்டிருக்காங்க.

‘ஏம்மா நீயும் கண்ணுக்கு மை போட்டு ஃபேரன் லவ்லி போட்டு பவுடர் அடிச்சு சிலுக்கா அக்கா மாதிரி பின் கொசுவம் இல்லாம கட்டினேனா எத்தன அழகா இருப்ப தெரியுமா? அவங்க சீலையத் தொட்டா வலுவலுன்னு இருக்குது. அதுவும் சிவப்பு பச்சைன்னு கலர் கலரா கட்டுறாங்க. நீ ஏமா அப்படிக் கட்டறதில்லை’ அப்படின்னு கேட்ட அடுத்த நிமிஷம் கன்னத்தில பளார்னு ஒரு அறை குடுத்துட்டு “அவள மாதிரி தேவி….தனம் பண்ணறவங்கதான் அப்படிப் போட்டு மினுக்கிட்டுத் திரிவாங்க” அப்படின்னு சொல்லுச்சு. எனக்கு அப்ப அது புரியல. என் மனசுக்குள்ள அந்த வார்த்தை மட்டும் விழுந்துடுச்சு. அப்படின்னா என்ன அப்படின்னு நான் யோசிக்க ஆரம்பிச்சேன். யார்ட்டயாவது கேக்கலான்னு தோணுச்சு. ஆனா அது ஒரு கெட்ட வார்த்தையா இருக்குமோ யார்கிட்டயாவது கேட்டா தப்பா நினைச்சுக்குவாங்களே? அப்படின்னு நெனச்சு யார்கிட்டயும் கேக்கல. ஆனா அது என்னன்னு தெரியுமயே நான் ரொம்ப நாளு மனசுக்குள்ள போட்டுக் குழப்பிக்கிட்டு இருந்தேன். ரொம்ப வருஷத்துக்குப் பொறவு தான் அந்த வார்த்தைக்கு அர்த்தம் எனக்குப் புரிஞ்சது.

“எனக்கே அவங்களப் பார்க்கனும்னு தோணுது” என்றது தையல் மெஷின்.

“சரி சரி இன்னும் நிறைய இருக்கு. பாத்ரூம் போயிட்டு வந்து மீதி கதையைச் சொல்றேன் சரியா” என்று கூறிவிட்டு எழுந்து பாத்ரூம் சென்று விட்டு முகத்தைக் கழுவி விட்டு வந்து அமர்ந்தார் செல்வி. அப்போது டிவியில் புதுப்பட விளம்பரம் ஒன்று வந்தது.
“தியேட்டர்ல போய் படம் பாக்குறதெல்லாம் ஒரு சுகம் தெரியுமா? அந்தக் காலத்துல டெண்டுக் கொட்டாயில எத்தனை படம் பார்த்திருப்போம் தெரியுமா?
அதெல்லாம் ஒரு சுகமான அனுபவம்” என்றார் ஒரு பெருமூச்சோடு செல்வி.

“என்ன அடுத்து ஏதாவது நீங்க டெண்டுக் கொட்டாய் போன கதையச் சொல்லப் போறியா?” என்று கேட்டது தையல் மெஷின்.

“எப்படிக் கண்டுபிடிச்சே?”

அதுதான் அந்தப் புதுப்பட விளம்பரத்தப் பாத்துப் பெருமூச்சு விட்டையே” என்றது தையல் மெஷின்.

“எங்க ஊருல அந்தக் காலத்தில் சினிமாவுக்குப் போறதே ஆடம்பரச் செலவு. நோம்பி நொடிக்கு இல்லைனா ஆடிக்கு ஒரு தடவ அமாவாசைக்கு ஒரு தடவ பாக்குறதே பெரிய விசியம். அதுலயும் பொம்பளைங்க சினிமாவுக்குப் போக மாட்டாங்க. எம்.ஜி.ஆர் படம்னா சில நேரங்களில் போவாங்க. மத்தபடி ஆம்பளைங்க தான் போவாங்க.

ஆனால் அதிலும் விதிவிலக்காக இருந்த ஒரே ஒருவர் சிலுக்கா அக்காதான். வாரத்திற்கு மூனு நாளு கூட அவங்க சினிமா பாக்கப் போவாங்க. அது எங்கள் ஊருக்கே ஆச்சரியமா இருந்துச்சு.

சிலுக்கா அக்காவுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டும் கெடையாது. அவங்களோட உசுரு அவங்களோட உடம்புல ரத்தத்தில் கலந்தது என்று கூட சொல்லலாம். எந்த நடிகர் படமா இருந்தா என்ன அவங்களுக்கு தியேட்டர்ல போய் படம் பாக்கணும் அவ்வளவுதான்.

அதிலேயும் குறிப்பா சாமி படம்னா சொல்லவே வேணாம். சில படங்கள ரெண்டு மூணு தடவை கூடப் போய்ப் பாத்துடுவாங்க. நானும் என்ற தம்பியும் அவங்களோட அடிக்கடி சினிமாவுக்கு போயிருக்கோம்.

அவங்களப் பத்தி என்ன தான் தப்பாப் பேசினாலும் குழந்தைகளை அவங்க வீட்டுக்கு அனுப்பறதுலையோ அவங்களோட வெளியில அனுப்புறதுலையோ யாருக்குமே பயம் இருந்ததில்லை.

அவங்களோட கையப் புடிச்சுக்கிட்டு தியேட்டருக்குள்ள போனது. அவங்க எங்க ரெண்டு பேரையும் தனக்கு முன்னாடி தன் கண் பார்வையிலேயே இருக்கிற மாதிரி எங்களப் பாதுகாப்பா உட்கார வச்சது. கூடவே அவங்க தன் கையால் செஞ்சு எடுத்து வந்திருந்த மணந்து கிடந்த பலகாரங்களையும் எங்களுக்கு குடுத்தது. இவை எல்லாம் என் நினைவு இலைகள்ல படங்களாப் பதிவாகியிருக்கு.

எந்தப் படம்னு எனக்குத் நினைவுல இல்ல. ஆனா நிச்சயம் கே.ஆர். விஜயா படம். அந்தப் படத்தில் அவங்க சாமியா நடிச்சிருந்தாங்க.

திரையரங்கில் அந்தக் காட்சி வந்ததும், அங்கே இருந்த நிறைய பொம்பளைங்க

“சாமி ஆத்தா மகமாயி!” அப்படின்னு கத்த ஆரம்பிச்சாங்க. நிறைய பொம்பளைங்க சாமி வந்து ஆட ஆரம்பிச்சாங்க. சிலுக்கா அக்காவுக்கு எப்பவுமே சாமி படம் பாக்கும்போது சின்ன உடுக்கைச் சத்தம் கேட்டாலே ஆட்டம் வந்துடும். சாமி வந்து தலையை விரிச்சுப் போட்டுக்கிட்டு ஒரு ருத்ர தாண்டவம் ஆடின சிலுக்கா அக்காவை முதல்த் தடவையா அன்னைக்குத் தான் பாத்தோம். மிரண்டு போயிட்டோம். நானும் என்ற தம்பியும் ஒருத்தர ஒருத்தர கட்டிபிடிச்சுட்டு செவுத்தோரத்துல ஒரு மூலையில நின்னுகிட்டு இருந்தோம்.

அந்த நேரத்தில் எங்கள் ஊரிலிருந்த டேவிட் மாமா குடும்பத்தோடு அங்கே வந்திருந்தார். அவர் எங்களைப் பாத்து சிரித்தபடி,

“பயந்துட்டீங்களா? சரி, நான் உங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். பயப்படாதீங்க அப்படின்னு சொல்லி எங்களை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் விட்டுட்டாரு.

“அவங்களப் பத்திக் கேக்கக் கேக்க ரொம்ப சுவாரஸ்யமாத் தான் இருக்குது” என்றது தையல் மெஷின்.
ஒரு தடவை நாங்க குடும்பமா திருப்பதி போலாம்னு ரயில்ல டிக்கெட் புக் பண்ணி இருந்தோம். அந்த நேரத்துல எனக்குக் காய்ச்சல் வந்துருச்சு.

என்னோட தாத்தா படுத்த படுக்கையா இருந்தாரு. அவங்களையும் பாத்துக்கணும். என்னையும் பாத்துக்கணும். அம்மா அப்பத்தான் முதல் தடவையாத் திருப்பதி போகுது. அதுவும் ஒரு வேண்டுதலுக்காக. அந்த நேரத்துல சிலுக்கா அக்கா தான் என்னையும் தாத்தாவையும் பார்த்துக்கிட்டாங்க. காய்ச்சல்ல வாந்தி எடுத்தேன். அந்த வாந்தியை அவங்க தான் சுத்தம் பண்ணாங்க. எனக்கு காரம் இல்லாம ரச சாதம் வச்சுக் குடுத்தாங்க. மாத்திரைய வேளா வேளைக்குங் குடுத்தாங்க. சுடுதண்ணி வச்சு உடம்பு முழுவதும் தொடச்சி விட்டாங்க. அதே நேரத்துல என்னோட தாத்தாவுக்கும் தினமும் சாப்பாடு கொண்டு போய் கொடுத்து உடம்ப துடச்சு விட்டுட்டுத் துணி மாத்தி விட்டாங்க”

“எவ்வளவு அன்பானவங்களா இருக்காங்க வாழ்க்கையில இவங்களுக்கு ஒரு குறையும் வரக்கூடாது” என்றது தையல் மெஷின்

“அவங்களுக்கு ஒரு பெரிய கஷ்டம் வந்துச்சு. வெளி ஊரிலிருந்து வந்திருந்த ஒரு விருந்தினர் சிலுக்கா அக்காவோட வீட்டில் தங்கியிருந்தார். திடீர்னு செத்து போயிட்டாரு.
ஊருக்குள் புயல் போல செய்தி பரவியது.
“அவளுக்கு அந்தாளுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு.”
“அந்த ஆளு கிட்ட காசு நிறைய இருந்திருக்கும். கொன்னுட்டு காசை எடுத்து இருப்பா” இப்படி ஊருக்குள் பேசிக் கொண்டார்கள்.

போலீஸ் வந்துச்சு. இறந்தவங்களோட உடலை போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பிட்டு விசாரணையை ஆரம்பிச்சாங்க. சிலுக்கா அக்காவைக் குற்றம் சாட்டி சிறையில் அடைத்தார்கள். அவங்களுக்கு அந்த நேரத்துல சப்போர்ட்டா பேசலனா கூட பரவால்ல அவ தான் குற்றம் செஞ்சி இருப்பா. ஊருக்குள்ள இவள வச்சிருக்கிறதே பாவம் அப்படின்னு பேசினாங்க.

அந்த மனிதர் சிலுக்கா அக்காவோட சித்தப்பா தான் என்றும், வீட்டிற்கு வந்த நேரத்தில் திடீரென ஹார்ட் அட்டாக் வந்ததால் அவர் இறந்துவிட்டார் என்றும் நிரூபிக்கப்பட்டது. அவர் அந்தக் கேஸ்ல இருந்து இரண்டே நாட்களில் விடுவிக்கப்பட்டார்.
கணவர் வியாபாரத்தில் கவனம் செலுத்த முடியாமபோச்சு .
ரேவதி பள்ளிக்குச் செல்லும் போதும், சித்திரன் தெருவில் நடக்கும் போதும்

“பாருங்க தேவி…. பிள்ளைங்க போகுதுங்க! காசுக்காக ஒருத்தனைக் கொன்ன கொலைகாரி புள்ளைங்க போகுதுங்க” அப்படின்னு அவங்களப் பேசினாங்க.

சில மாதங்களு்குப் பிறகு

மீண்டும் சிலுக்கா அக்காவினால் கிராமத்து வீடுகள் பலகார மணத்தில் மூழ்கியது. கிராமத்து மக்களை அதே அன்போடு அதே சிரித்த முகத்தோடு ஏற்றுக்கொண்டார் சிலுக்கா அக்கா. திரும்ப அவங்க வீட்ல நாங்க எல்லாரும் போய் விளையாட ஆரம்பிச்சோம். அவங்களோட சேர்ந்து சினிமாவுக்குப் போனோம்.

செல்வியின் பார்வை ஜன்னலில் இருந்தது. அந்த நேரம் மழை தூறிக் கொண்டிருந்தது.

“எவ்ளோ நல்லவங்களா இருக்காங்க இல்லையா? சரி இப்போ ஏன் உனக்கு அவங்க ஞாபகம் வந்துச்சு. எங்கிட்ட ஏன் அவங்க கதையச் சொல்லணும்னு நீ நெனச்ச?” என்று கேட்டது தையல் மெஷின்.

“ரொம்ப வருஷம் கழிச்சு நான் இன்னிக்கு நான் சிலுக்கா அக்காவப் பாக்க போறேன்”

“என்ன காரணம்?” என்று கேட்டது தையல் மெஷின்.

“ரெண்டு காரணம் இருக்கு ஒன்னு நான் ஆரம்பத்திலேயே சொன்ன மாதிரி அவங்க செருப்புன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்களோட அந்தச் சிவப்பு நிற வெல்வெட் செருப்பபை என்னால மறக்கவே முடியாது.

அந்தக் காலத்தில் எங்கள் ஊரில் பொம்பளைங்க ரப்பர் செருப்பு இல்லைனா வார் செருப்பு அதுவும் கட்ட மாதிரி இருக்கிற செருப்பு தான் போட்டு இருந்தாங்க. ஆனா அவங்க மட்டும்தான் வெல்வெட் செருப்பு போட்டிருந்தாங்க. .

அந்தச் செருப்பு மேல எனக்கு எப்பவுமே ஒரு கண்ணு அவங்க வீட்டுக்குப் போறப்ப எல்லாம் அதப் போட்டு பாக்கணும்னு நினைப்பேன்.

“அக்கா இந்தச் செருப்ப நீங்க எங்கிருந்து வாங்கினீங்க? அப்படின்னு கேட்டேன்.

“அதுவா இது கடையில எல்லாம் கிடைக்காதுடா தங்கம்” என்றார்

“அப்புறம் நீங்களே தச்சுக்குவீங்களா?” அப்படின்னு கேட்டேன்.

“எனக்கு ஒரு தேவதை கொண்டு வந்து கொடுத்தாஙாக” என்றார்.

” என்னது தேவதையா றெக்கைகள் வச்சுக்கிட்டு பறப்பாங்களே அவங்களா?” அப்படின்னு நான் கேட்டேன்.

“ஆமா வானத்திலிருந்து பறந்து வந்து எனக்குக் குடுத்துட்டுப் போனாங்க” அப்படின்னு அவங்க சொன்ன உடனே, எனக்கு நம்பவே முடியல அவங்களையே பாத்துகிட்டு இருந்தேன். “தேவதை உங்களுக்கு ஏன் செருப்பைக் குடுத்தாங்க?” அப்படின்னு நான் கேட்டேன்.

“நானும் இதையே தான் தேவதை கிட்டக் கேட்டேன்”

” அப்படியா! அதுக்குத் தேவதை என்ன சொன்னாங்க?”

“இந்த உலகத்திலேயே யாரு, யார் மேலயும் கோபப்படாம எப்பவுமே சிரிச்சுக்கிட்டே இருக்காங்களோ அவங்களுக்குக் கொடுக்கணும்னு உலகத்தில் எல்லா பக்கமும் தேடுனேன். யாருமே கிடைக்கல கடைசில உன்னப் பாத்தேன். நீ நான் நினைச்ச மாதிரி இருந்தே. அதனால நான் உனக்குக் குடுத்துட்டேன் அப்படின்னு சொன்னாங்க”

“அக்கா நெஜமாவே அக்கா”அப்படின்னு ஆச்சரியம் தாளாம கேட்டேன்.

“ஆமாண்டா அப்படித்தான் அந்த தேவதை சொல்லுச்சு” அப்படின்னாங்க.

“அக்கா அந்த தேவதையை அடுத்த தடவை பாத்தீங்கன்னா எனக்கு ஒன்னு கேட்டு வாங்கிக் குடுக்கறீங்களா?”

“நீயும் யார்கிட்டயும் கோபப்படாம எப்பவுமே சிரிச்சுக்கிட்டே இரு. உனக்கு தேவதை அந்தச் செருப்பைக் குடுக்கும்” அப்படின்னு சொன்னாங்க.

இந்த கதையை ஒரு நாள் நான் அம்மாட்டச் சொன்னேன்.
அவதான் லூசு மாதிரி சொன்னான்னு நீயும் கேட்டுகிட்டு அதை நம்பறியா அப்படின்னு அம்மா என் மேல கோபப்பட்டாங்க. ஆனா அந்தக் கதையை நான் இப்ப வரைக்கும் நம்புறேன். இன்னக்கும் அந்தச் செருப்பு இருக்கா அப்படின்னு பாக்கணும்.

பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. என் திருமணத்திற்கு பிறகு ஊருக்குச் செல்லும் வாய்ப்புகள் அரிதாகிவிட்டன. போனாலும், அவரைக் பார்க்க முடியவில்லை.
இன்னொரு காரணம்
இன்னிக்குக் காலைல எதிர்பாராத செய்தி என் காதுகளில் விழுந்தது.

“சிலுக்கா… இறந்துவிட்டாங்க.”

கடைசியாக அவங்களப் பாக்கனும்” என்று கூறி முடித்த செல்வியின் கண்களில் நீர் ததும்பி நின்றது.

ஜன்னல் வழியாக வீசும் காற்று செல்வியின் கண்ணீரை உலர்த்தியது.

“அழாதே” என்று தையல் மெஷின் கூறியது.

*********

ஊருக்குள் நடந்து சென்றார் செல்வி.அந்த வழியெல்லாம் அவங்க நினைவுகள் அடுக்கடுக்காக ஓடின.

“எப்படி இருப்பார் இப்போது?

நான் பார்த்த அதே செக்கச் சிவந்த ரோஜா முகத்தோட

இல்லை…

“வயதாகி தோல் சுருங்கி நிறம் மங்கி இருக்குமா? செல்வியின் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள்.

இதோ வீடு வந்துருச்சு…

அங்கு விரல்விட்டு என்னும் அளவிற்கான ஆட்கள் மட்டும் தான் இருந்தாங்க. செல்வி எதிர்பார்த்ததுதான்.

சிலுக்கா அக்காவின் தலைமேட்டில் அழுது வீங்கிய கண்களோடு அமர்ந்து இருந்தார்
ரேவதி. அருகில் இரண்டு வளர்ந்த குழந்தைகள். அனேகமாக அவங்க ரேவதியுடைய குழந்தைகளாக இருக்க வேண்டும். அருகில் சென்று ரேவதியின் கைகளைப் பற்றிக் கொண்டார் செல்வி. செல்வியை அடையாளம் கண்டு கொண்ட ரேவதி பெரும் குரல் எடுத்து அழுதாள். சித்ரன் செல்வியின் அருகில் வந்து கண்களின் வழியாகத் துக்கத்தை வெளிப்படுத்தினான். உனக்கு அக்கா அக்காவின் கணவர் சிலுக்கா அக்காவின் முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். அவர் மட்டும் வயதாகிப் போய் இருந்தார்.

ஒரு பெரிய கண்ணாடி பெட்டிக்குள் முகம் மட்டும் தெரிய மலர்களால் சூழப்பட்ட உடல்.
செக்கச் சிவந்த முகம்.

அதே மையிட்ட கண்கள். அகன்ற நெற்றியில் சந்தனமும் குங்குமமும். தலை முழுவதும் மல்லிகைப் பூ சூடியிருந்தார்.

உடலில் மீது சிவப்புப் பட்டுப் புடவை போர்த்தப்பட்டிருந்தது.

அவர் உயிரோடு இருந்தபோது இருந்த அதே அழகு, அதே பளிச்.

செல்வியின் கண்களில் கண்ணீர் பொங்கியது.
சிலுக்கா அக்காவின் இறப்புப் பற்றி ரேவதியோடும் சித்திரனோடும் சற்று நேரம் பேசிவிட்டு. விடைபெற்று வெளியே வந்தார் செல்வி.

எங்கு தேடியும் கிடைக்காத அந்தச் சிவப்பு நிற வெல்வெட் செருப்பு சிறிதும் நிறம் மங்காமல் புத்தம் புதுச் செருப்பாக அங்கு தனியாகக் கிடந்தது. அந்தச் செருப்பை அணிந்து கொண்டு வெண்ணிற இறக்கைகளோடு பறப்பதைப் போல் ஒரு காட்சி கண் முன் தோன்றும் மறைந்தது.

யாரும் பார்க்கவில்லை என்பதே உறுதி செய்து கொண்டு கையிலிருந்த பைக்குள் அந்தச் செருப்பை எடுத்து வேக வேகமாக உள்ளே திணித்தபடி திரும்பிப் பார்க்காமல் நடந்து சென்றார் செல்வி. கூடவே சிலுக்கா என்ற தேவதையும் வந்து கொண்டிருந்தார்.

எழுதியவர் : 

✍🏻 சரிதா ஜோ
ஈரோடு

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 3 Comments

3 Comments

  1. Anand

    Nice story

    Kinipalayam my live location

  2. விஜயலட்சுமி

    கதையின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *