வாசிப்புப் பழக்கம் குறைந்து போனதன் தரவீழ்ச்சியையும், அதனால் சமுதாயத்திற்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளையும் பற்றி ஒரு தெளிவான பார்வையுடன் அலசுகிறது இப்புத்தகம்.
நாம் சமூக இழிவென கருதும் தீண்டாமை, பாலியல் வன்கொடுமை, சாதிவெறி, இயற்கை வளங்களை சுரண்டுதல் என எல்லாவற்றிற்கும் காரணமாக இருப்பது வாசிப்பின்மையே எனவும் இவற்றை எல்லாம் விட மிகப்பெரிய சமூக இழிவென்பது வாசிப்பின்மையே என உரக்கச் சொல்கிறது இப்புத்தகம்.
ஏன் வாசிக்க வேண்டுமெனவும், வாசிப்பதனால் ஏற்படும் மாற்றங்கள்
மற்றும் நன்மைகள், அனுகூலங்கள் பற்றியும் இனிமையாக விளக்குகிறார் ஆசிரியர். வாசிப்பை புறக்கணிக்கும் ஒரு சமூகம் பெரிதாய் வளரமுடியாது என்பதையும் தெளிவாய் கூறுகிறார்.
எல்லா விஷயங்களிலும் டிரெண்டியாக இருக்க விரும்புவர்கள், அறிவிலும் சமகாலத்தில் தம்மைச் சுற்றி நடப்பவற்றை அறிந்து வைத்துள்ளோமா, அறிவில் டிரெண்டியாக இருப்பதை ஏன் இக்கால இளைஞர்கள் விரும்புவதில்லை என்பன போன்ற சில கேள்விகளைகளையும், வாசிப்பின்மையின் விளைவாக அவர் எதிர்கொண்ட சில இளைஞர்களின் நிலையையும் நேரடி அனுபவங்களின் மூலம் கூறியுள்ளார்.
தொழில்நுட்பங்கள் நம் வாழ்வில் நுழைந்த பின் வாசிப்பு பழக்கம் குறைந்து விட்டதையும், நாம் தொழில்நுட்பங்களை ஆள்வதற்கு பதிலாக, தொழில்நுட்பங்கள் நம்மை ஆண்டு கொண்டிருப்பததையும் எடுத்துக்காட்டி வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் போன்ற தொழில்நுட்பங்களால் நம் நேரம் நம்மையறியாமலே களவாடப்பட்டுக் கொண்டிருப்பதையும் நாம் வாசிப்பை விட்டு எவ்வளவு விலகி வந்துவிட்டோம் என்பதையும், வாசிப்பை மேம்படுத்த சில வழிகளையும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
தினசரி நாளிதழ் வாசிப்பது தொடங்கி வாசிப்பின் வகைகள், வாசிப்பதனால் ஏற்படும் பொருளாதார முன்னேற்றங்கள் வரை அனைத்தையும் மிகச் சிறப்பாக கூறியுள்ளார்.
மிகுந்த சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட புத்தகமாகவே இதைக் கருதுகிறேன். வாசிப்பை வெறுக்கும் ஒருவரிடத்திலாவது இப்புத்தகத்தை வாசிக்கச் சொல்லி நாமும் சிறிது சமூகப் பணியாற்றலாம்.
நூல் : வாசிப்பது எப்படி?
ஆசிரியர்: செல்வேந்திரன்
ஆசிரியை.ஜானகி ராமராஜ்