வாசிப்பு சவாலுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?
2021ல் நீங்கள் எத்தனை தமிழ் புத்தகங்கள் வாசிக்கப் போகிறீர்கள் என்ற உங்களது இலக்கை முதலில் படிவத்தின் மூலம் தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு புத்தகம் படித்ததும், பேஸ்புக் புக்டே பக்கத்தில் தங்களுக்குத் தரப்பட்ட வ.எண்ணைக் குறிப்பிட்டு, வாசிப்பு சவால் 2021 1/ உங்கள் இலக்கு 25, 50, 100 என்று குறிப்பிட்டு. புத்தகத்தின் பெயர், ஆசிரியர், பதிப்பகம், விலை, பக்க எண்ணிக்கை ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் பதியவும். புத்தகத்தைப் பற்றிய அறிமுகம் எழுதினால் மிக நன்று.
எனது இலக்கை எப்படி தீர்மானிப்பது?
உங்கள் படிப்பு அல்லது வேலைக்கான நேரம், உங்களுக்கு ஓய்வு கிடைக்கக் கூடிய நேரத்தை வைத்து முடிவு செய்யுங்கள். ஒரு வாரத்திற்கு ஒரு புத்தகம், அல்லது பத்து நாட்களில் ஒரு புத்தகம், இரு வாரத்திற்கு ஒரு புத்தகம் என்பது போல் உங்கள் நேரத்தை அனுசரித்து முடிவு செய்து கொள்ளுங்கள். கூடிய மட்டும், அந்த இலக்கை நிறைவேற்றப் பாருங்கள். இலக்கை உங்களால் அடையக் கூடியதாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களால் மாதம் ஒரு புத்தகம் தான் படிக்க முடியும் என்றால், இலக்கை 12 என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், வருட இறுதியில் எப்படியும் 12 புத்தகங்களைப் படித்து முடித்து விடுங்கள்.
தீர்மானித்த இலக்கை எப்படி அடைவது?
சவால் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஆரம்பம். இந்த மாத இறுதிக்குள் நீங்கள் பல காலமாக படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட புத்தகங்களின் பட்டியலை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அவற்றை ஒவ்வொன்றாக வாங்கியோ, நூலகத்திலிருந்து எடுத்தோ படியுங்கள். இது வரை நூலகத்தில் உறுப்பினராக இல்லை என்றால் அருகில் உள்ள நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்து கொள்ளுங்கள்.
ஆரம்ப கட்ட வாசகர் என்றால் கவிதைத் தொகுப்புகளைப் படியுங்கள்.அவற்றை எளிதில் படித்து விடலாம். இலக்கை எளிதில் அடைந்த மகிழ்ச்சியும் கிடைக்கும்.
தீவிர வாசகர் எனில் உங்கள் இலக்கில் ஏதேனும் ஒரு சதவிகிதம் புனைவல்லாத புத்தகங்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு புனைவு நூல், ஒரு புனைவல்லாத நூல் என்று படிப்பது மிகச் சிறந்தது. அது வெளியில் சொல்லாத இலக்காக இருக்கட்டும்.
வாசிப்பை அதிகரிக்க என்ன செய்வது?
வாசிப்பை அதிகரிக்க குறுக்கு வழி ஒன்றும் இல்லை. வாசிக்கும் நேரத்தை அதிகரிப்பது மட்டுமே வழி.
தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை வாசிப்பதற்கு ஒதுக்குங்கள். அல்லது தினமும் இத்தனை பக்கங்கள் வாசிப்பது என்ற இலக்கை வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் நம்மால் தீர்மானித்தபடி வாசிக்க முடியவில்லை என்றால், மறுநாள் அந்த குறையை ஈடு செய்ய சற்று அதிக நேரம், அதிக பக்கங்கள் வாசியுங்கள்.
இலக்கை மீறி வாசிப்பதில் தான் நமது மகிழ்ச்சியும், வெற்றியும் இருக்கிறது.
இந்த சவாலில் நான் வேறு என்ன செய்ய வேண்டும்?
தினமும் ஒரு பத்து நிமிடங்கள் ஒதுக்கி, சவாலில் இணைந்திருக்கும் மற்ற நண்பர்களின் பதிவுகளைப் படியுங்கள். அவற்றிற்கு கமெண்ட் செய்யுங்கள். அதில் உங்கள் ரசனைக்கு ஒத்துப் போகும் புத்தகம் பற்றி வந்தால், அதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் புத்தகத்தைத் தேடிச் செல்லுங்கள்.
வாசிப்பை அதிகரிப்பதும், வாசிப்பிற்கான புத்தகத் தேடலை அதிகரிப்பதும் தான் நாம் செய்ய வேண்டியவை. இந்த சவாலில் அந்த நோக்கம் நிறைவேற வேண்டும். அடுத்த ஆண்டில் உங்கள் இலக்கு இந்த ஆண்டின் இலக்கை விட சற்று அதிகமாக இருக்க வேண்டும்.
அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்…
வாழ்த்துகள்.
வாசிப்பு சவால் – பங்கேற்பு படிவம் Google Form: https://docs.google.com/…/1FAIpQLSdXTCKCzKk…/viewform…
வாசிப்பு சவால் – பங்கேற்பவரின் விவரங்கள் குறித்து தெரிவிக்க படிவம் Google Form
https://docs.google.com/forms/d/1W1Qg6CLDspm2h2t_5uar0btCmOVmcV9AjxyE4U_yjr0/edit