சிறுகதை: *வாசிப்பு* – சத்யா சம்பத்மனோன்மணி பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியை, மதிய உணவு இடைவேளை முடிந்து தமிழ் வகுப்பு என்றாலும், அவர் வகுப்பில் ஒரு மாணவர் கூட தூங்க மாட்டார் .
வகுப்பில் ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு அவ்வளவு நிசப்தமாக இருக்கும் வகுப்பு. வகுப்பை மிகுந்த சுவாரசியமாக நகர்த்துவார். செய்யுள், உரைநடை என எதுவாக இருந்தாலும்.

உதாரணமாக சங்க இலக்கியங்களை பயன்படுத்துவார். சங்க இலக்கியத்தில் தானும் ஒன்றி சக மாணவர்களையும் அதனுள் அமிழ்த்தி விடுவார்.
தமிழ் பரீட்சைக்காக மாணவர்கள் தனியாக நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும் என்பதில்லை, அவர்கள் ஒருமுறை திருப்பி பார்த்தாலே போதும். அனைத்தும் படமாகவே கண்முன் விரியும், அவர் கூறிய உதாரணங்களே ஒவ்வொரு கேள்விக்கும் பதிலாக வந்து நிற்பதை மாணவர்கள் உணர்வார்கள்.

வெண்கலக் குரல் அவருக்கு, பள்ளியின் அமைப்பு  ” ப” வடிவத்தில் இருக்கும், அதில் எந்த ஒரு மூலையில் அவர் வகுப்பு எடுத்தாலும் பள்ளி முழுவதும் அவரது குரல் நிறைந்திருக்கும். ஆனால் ஒருவர் கூட தங்களுக்கு தொந்தரவாக இருப்பதாக கூற மாட்டார்கள். ஒருநாள் அவர் விடுப்பு எடுத்து மறுநாள் அவர் பள்ளிக்கு வரும் பொழுது மாணவர்கள் முதல் பள்ளி தலைமை ஆசிரியர் வரை அனைவரும், நேற்று பள்ளி களை இழந்து இருந்தது என்று அவரிடம் கூறி சிரிப்பார்கள்.

பள்ளியில் பேச்சுப் போட்டி என்றாலோ அல்லது வேறு பள்ளிகளுக்கு சென்று பேச்சுப்போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்றாலோ ஆசிரியர் அறையில் இவரது இருக்கைக்கு பின் நீண்ட வரிசையில் மாணவர்கள் நிற்பார்கள். வயதில் சிறிய மாணவர்களுக்கு இவரே எழுதிக் கொடுப்பார். ஏழாம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களை அழைத்து சென்று நூலகத்தில் விட்டு தலைப்புக்கு ஏற்ற புத்தகங்கள் எங்கே உள்ளன என்பதை தெரிவித்து, இதிலிருந்து குறிப்புகள் எடுத்து வாருங்கள் நான் அதனை முழுமையாக்கி தருகிறேன் என்பவர் மேலும் ஒரு கண்டிஷனும் வைப்பார், இதை நான் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் ஒவ்வொருவரும் நூலகத்திலிருந்து ஏதாவது ஒரு புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும் என வற்புறுத்துவார்.

இவர் தலைமையில் வேறு பள்ளிக்கு பேச்சுப் போட்டிக்கு செல்லும் மாணவர்கள் கட்டாயம் பரிசுடன் தான் திரும்புவார்கள். அவரது வகுப்பில் நூலகத்திலிருந்து எடுத்து வந்த ஒரு புத்தகத்தைக் காட்டி அதைப் பற்றி சுருக்கமாக விளக்கங்களை கூறுவார். அவர் கூறும் விளக்கங்களே புத்தகத்தை படிக்கும் ஆர்வத்தை உண்டாக்கும்.

வாசிப்பு மாதம் அக்டோபர் 2019 கரவெட்டி | தமிழர் மனை

தன்னால் இயன்றவரை மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் வாசிப்பைப் பற்றி கூறிக் கொண்டே இருப்பார். வாசிப்பு என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அது எவ்வாறு மனிதனை செம்மைப்படுத்தும், நல்வழிப்படுத்தும், நமக்கு ஏற்படும் குழப்பங்களில் இருந்து நமக்கு விடுதலை அளிக்கும் என்று வாசிப்பின் நன்மைகளை கூறிக் கொண்டே இருப்பார்.

தினமும் மனிதன் வாசிப்புக்காக ஒரு அரை மணி நேரமாவது ஒதுக்க வேண்டும் என்று மாணவர்களிடம் கூறிக்கொண்டேஇருப்பார். இப்படியே இவர் காலமும் நகர்ந்து ஓய்வுபெறும் நாளும் வந்து வீட்டில் அடைந்தார். ஆனாலும் இவரது வாசிப்பு மட்டும் அடைபடவில்லை அந்த தெருவில் இருக்கும் பிள்ளைகள் என்றும் தன்னை தேடி வருபவர்களுக்கு என்றும் தேவையான அனைத்து கட்டுரைகளையும் எழுதிக் கொடுப்பார். ஆனாலும் தன்னுள் ஏதோ ஒன்று நிறைவு பெறாமல் இருப்பதாகவே உணர்ந்து கொண்டிருந்தார்.

ஒருநாள் அவர் மார்க்கெட் சென்று காய்கறிகள் வாங்கிக் கொண்டு நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது அவரது அருகே ஒரு விலை உயர்ந்த கார் வந்து நின்றது அதிலிருந்து ஒரு இளைஞன் இறங்கி வந்தான். மனோன்மணியின் அருகில் சென்று என்னை அடையாளம் தெரிகிறதா அம்மா என்று கேட்டான். அவர் சிறிது புருவத்தை சுருக்கி யோசித்து நீ பில்லா பாளையம் சந்தோஷ் தானே என்று சரியாக கூறினார். இதுதான் அம்மா நீங்கள் என்று சிரித்த சந்தோஷ் நான் இப்பொழுது ஒரு பத்திரிக்கை நடத்தி வருவதாகவும் நம் பள்ளியில் படித்த இன்னும் ஐந்து ஆறு மாணவர்கள் தான் உடன் இருப்பதாகவும் கூறினான். நாங்கள் பத்திரிகையில் ஒவ்வொரு கட்டுரைகளையும் எழுதும் பொழுதும் எங்களுக்கு கண் முன்னர் விரிவது உங்களது பாடமும் உங்களது சிரித்த முகமும் தானம்மா.
சங்க இலக்கியங்கள் பற்றி நீங்கள் கூறியதை அதை படிக்கும் பொழுது அப்படியே உணர்கிறோம் “இலக்கிய சோலை” என்ற பெயரில் வாரம் ஒருமுறை இலக்கிய கட்டுரை ஒன்றை எழுதி வருகிறோம். அதற்கு மக்களிடையே சிறந்த வரவேற்பு உள்ளது. நாங்கள் எழுதும் ஒவ்வொரு எழுத்தின் பின்னும் இருந்து எங்களை வழிநடத்துவது நீங்கள்தான் என்று கூறி காலில் விழ சென்றான் மனோன்மணி தன்னுள் ஏதோ ஒன்று நிறைவடைந்த மகிழ்ச்சியில் அவனை காலில் விழாமல் தாங்கி பிடித்து

“விண்ணும் மண்ணும் போற்ற
சூரியனும் சந்திரனும் வாழ்த்த” உலகம் இயங்கும் வரை உன்னுடைய எழுத்துக்கள் பேசப்பட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று ஆசி வழங்கினார்.

நீங்கள் அன்று எங்களுள் ஏற்றிய வாசிப்பு என்ற விளக்குதான் இன்று சுடர் விட்டு எரிகின்றது. எங்களால் முடிந்த அளவு வாசிப்பு வட்டத்தை பெரிதாக்கி கொண்டுள்ளோம். எங்களது பத்திரிக்கை மூலமாக மக்களுக்கு கதை ,கவிதை, கட்டுரை, இலக்கியம் ஆகியவற்றில் ஆர்வத்தை ஏற்படுத்தி வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறோம். நீங்களும் எங்கள் பத்திரிக்கையில் வாரம் ஒருமுறை” வாசிப்பு “என்ற தலைப்பில் சிறப்புக் கட்டுரை எழுதி தரவேண்டும் என்று கேட்டான். எனது இரண்டு வார கட்டுரையிலேயே அனைவரையும் வாசிக்க வைக்கும் வாசிப்பாக எனது “வாசிப்பு “என்ற கட்டுரை இருக்கும் என்றார் மிக்க மகிழ்ச்சியுடன் மனோன்மணி.