வாசிப்பு திறக்கும் கதவு – வே.சங்கர்

Vasippu Thirakkum Kathavu Article By V. Shankar வாசிப்பு திறக்கும் கதவு - வே.சங்கர்

எப்போதுமே எழுத்தை நேசிக்காத புத்தகத்தை வாசிக்காத ஒருகூட்டம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.  அவர்களை நாம் இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ளப்போவதில்லை.

சினிமாவிலும், டி.வியிலும் மூழ்கிக்கிடக்கும் பலர் புத்தகங்களைத் திரும்பிக்கூட பார்ப்பதில்லை.  ஆனால் அதில் தோன்றும் பிரபலங்கள் ஏராளமான புத்தகங்களை வாசிக்கிறார்கள் என்பதை சமீபத்தில் ஒரு புத்தகத்தில் வாசித்துத் தெரிந்துகொண்டேன்.

வெளிநாடுகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை குறைவு.  ஆனால், வாசிப்பவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம்.  மற்ற நாடுகளைவிட இங்கே வசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.  ஆனால், வாசிப்பவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு என்ற நிலை வருத்தப்படக்கூடியதாக இருக்கிறது. 

ஒவ்வொரு வீட்டிலும், டிவி., கம்ப்யூட்டர், செல்போன் என்று குழந்தைகளின் கவனைத்தை ஈர்க்க ஏராளமான கருவிகள் வந்த பிறகு எதிலும் முழுக் கவனத்தைச் செலுத்தி நீண்ட நேரம் செய்வது குறைந்திருக்கிறது. அவர்களிடம், புத்தக வாசிப்பு என்பதே அபூர்வமாகியிருக்கிறது.

இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, வார, மாத இதழ்கள் வாசிக்காத குடும்பங்கள் மிகக்குறைவு. கீழ்த்தட்டு மக்கள், நடுத்தரத்தட்டு மக்கள் என்ற எவ்வித பாகுபாடும் இல்லாமல் ஏதேனும் ஒரு புத்தகத்தை வாசித்தார்கள். 

அட்டைகிழிந்த பழைய புத்தகமாக இருந்தால்கூட போதும் அதை முழுவதும் வாசித்தார்கள். பசைகொண்டு கிழிந்த பக்கங்களை ஒட்டி பாதுகாத்தார்கள். அவர்களுக்கு நிறைய நேரம் இருந்தது என்று சொல்லமுடியாது.  அவர்களுக்கும் ஆயிரத்தெட்டு வேலைகள் தலைக்கு மேல் இருந்தன. 

விவசாய வேலை, தினக்கூலி வேலை, அரசாங்க வேலை, வீட்டுவேலை, ஆடுமாடுகளை பராமரிக்கும் வேலை, பலசரக்கு வியாபாரம், தெருத்தெருவாய் சென்று எண்ணெய் வியாபாரம், என்று அத்தனையையும் தாண்டி நேரம் கிடைக்கும்போதெல்லாம் புத்தகங்களை வாசித்தார்கள். 

அவர்களுக்குள், வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது.  நூலகத்திற்குச் சென்றார்கள். படிப்பறிவு இல்லாதவர்கள் தங்கள் குழந்தைகளை நூலகத்திற்கு அழைத்துச் சென்று உறுப்பினராக்கினார்கள். எப்படியாவது நாலு எழுத்து படிக்க எழுதத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார்கள்.

வாசிப்பு என்பது பசிக்கு உணவு உண்பதைப்போல, தாகத்திற்கு தண்ணீர் குடிப்பது போல, அறிவுத் தேடலுக்கு புத்தகவாசிப்பை மதித்தார்கள். 

குக்கிராமங்களில்கூட,  அதிகாலைநேர டீக்கடையில் ஒருவர் தினசரிப்பேப்பரை உரக்க வாசிக்க மற்றவர்கள் கூர்ந்து கேட்டார்கள். நிறைய விவாதித்தார்கள்.  நாட்டுநடப்பை வாசிப்பின் மூலம் அறிந்துகொள்ளத் தலைப்பட்டார்கள்.

பள்ளிக்கூட மாணவர்கள், காலை வழிபாட்டுக் கூட்டத்தில் அன்றைய தலைப்புச்செய்தியை வாசித்துக்காட்ட எங்கேனும் தினசரிப் பத்திரிக்கைகள் கிடைக்கிறதா என்று தேடித்தெரிந்து கொண்டார்கள். அங்கே சென்று அதிலிருந்து குறிப்பெடுக்கப் பழகியிருந்தார்கள். கூடவே அந்த இதழ்களில் வெளிவந்திருக்கும் படக்கதைகளைப் படித்துவிட்டு சகமாணவர்களோடு தன் வாசிப்பைப் பகிர்ந்துகொண்டார்கள். 

வாசிப்பு எப்போதும் மாணவர்களோடும் சாமானிய மக்களோடும் நேரடித் தொடர்பில் இருந்தன.  படித்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒருசிலர் தங்களுக்கான நட்புவட்டத்தை உருவாக்கிக்கொண்டு இலக்கியம் பேசினார்கள். 

வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி இளைய சமூகத்திற்கு வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தினார்கள். வாசிப்பு வளர்ந்துகொண்டே இருந்தது.  புத்தகங்களின் அறிமுகங்கள் கிடைத்துக்கொண்டே இருந்தன.  

அன்றைய இளைய தலைமுறையின் பெரும்பாலோர் அவர்களை அப்படியே காப்பியடித்து பேச்சுத் திறனை வளர்த்துக்கொண்டார்கள்.  எழுத்தாளர்கள் ஆனார்கள். தங்களுக்குத் தேவையான புத்தகங்களை தேடி அடைந்தார்கள். அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டார்கள். பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பு வேண்டுமானால் முடிந்துபோயிருக்கலாம்.  ஆனால், புத்தகம் வாசித்தது போதும் என்று அவர்கள் ஒருபோதும் யாரும் நினைக்கவில்லை. 

அந்தக்காலத்தில் நாவல்களை குழந்தைகள் வாசித்தால் கெட்டுப்போய்விடுவார்கள் என்ற பொதுப்புத்தி இருந்தது என்னவோ உண்மைதான். அப்படிப்பட்ட வீடுகளில், புத்தகங்களை ஒளிந்து மறைத்து வைத்திருந்தேனும் புத்தகம் வாசித்தார்கள். அவர்கள்தான் இன்னும் புத்தகவாசிப்பிலிருந்து விலகாமல் இருக்கிறார்கள்.

கொஞ்சம் வசதிபடைத்த, குடும்பப்பெண்கள், வார இதழ்களில் வரும் தொடர்கதைகளை கவனமாகப் பிரித்துப் பத்திரப்படுத்தி முழுக்கதையும் கிடைத்தவுடன் யாரிடமாவது உதவியை நாடி பத்திரப்படுத்தி வைத்திருந்த தாள்களை அச்சகத்தில் கொடுத்து பைண்ட் செய்து வாசித்து வாசித்து மகிழ்ந்தார்கள். 

பிறருக்கும் புத்தகத்தை இரவல் கொடுத்தும் இரவல் வாங்கியும் வாசித்தார்கள்.  அவற்றின் மூலம் ஏராளமான காதல் வளர்ந்தது வேறு கதை. ஆனால், யாரும் புத்தக வாசிப்பை தரம்தாழ்ந்ததாக எண்ணவில்லை.

நான்கு புத்தகங்கள் இருந்தால்கூட அவற்றை அலமாரியில் அடுக்கி வைத்து நூலகத்திற்கு இணையான மதிப்பைத் தந்தார்கள். வீட்டில் புத்தகங்கள் வைத்திருப்பதைப் பெருமையாகக் கருதினார்கள்.  சரஸ்வதி பூஜை நாட்களில் பாடப்புத்தகங்களுக்கு பொட்டிட்டு வழிபடும்போது அவற்றிற்கு இடையில் தாங்கள் பத்திரப்படுத்தியிருந்த புத்தகத்தையும் செருகி அவற்றிற்கும் பூஜை போட்டார்கள்.

அன்றைய எழுத்தாளர்களைக் கொண்டாடினார்கள். கல்கி, சாண்டில்யன், அகிலன், தமிழ்வாணன்,  ஜெயகாந்தன், சுஜாதா, சுந்தரராமசாமி, அசோகமித்ரன், என்று ஆண் எழுத்தாளர்களையும், லட்சுமி, சிவசங்கரி, இந்துமதி, அனுராதாரமணன் என்று பெண் எழுத்தாளர்களையும் எப்படியாவது தெரிந்துவைத்திருந்தார்கள். அவர்களின் எழுத்துக்கு ஒரு வாசகர் கூட்டம் இருந்தது.

அதன்பிறகு ராஜேஸ்குமார், ராஜேந்திரகுமார், பட்டுக்கோட்டை பிரபாகர், புஷ்பா தங்கதுரை, பாலகுமாரன், ஆர்னிகா நாசர், எஸ்.பாலசுப்பிரமணியம், வாஸந்தி போன்றோர்களின் புத்தகங்களை பரவலாக வாசித்தார்கள். எக்கச்சக்கமான பாக்கெட் நாவல்கள் கொடிகட்டிப் பறந்தன.

அப்போதெல்லாம், கவனச்சிதறடிக்கும் இத்தனை தொழில்நுட்பக் கருவிகள் கிடையாது.. டிவி, கிடையாது செல்ஃபோன் கிடையாது.  இன்னும் ஏனைய இத்தியாதிகள் கிடையாது என்பவர்களுக்கு ஒன்றே ஒன்றுதான் கேட்கத்தோன்றுகிறது. 

அப்படியென்றால் ஏன் நான்கு வரிக்குமேல் எழுதப்பட்டதை தொடர்ந்து வாசிக்காமல் கடந்து செல்கிறார்கள். வாட்ஸ் அப்பில்கூட ரீட் மோர் என்று வந்தவுடன் கண்ணைமூடிக்கொண்டு க்ளியர் சேட் கொடுப்பது ஏன்? 

ஒளிரும் படங்களே வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை அறிவையும் தந்துவிடும் என்று நம்பிக்கை எங்கிருந்து தொடங்கியது? முக்கியமாக, படைப்பாற்றலுக்குத் தேவையான அடிப்படை தகவல்கள் போதுமானது என்று முடிவு எப்போதிருந்து எடுக்கப்பட்டது?

கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் மின்நூல்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன.  அல்லது கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், இதுவரை எத்தனை மின்நூல்கள் அதிகளவில் வாசிக்கப்பட்டிருக்கிறது? அவை எந்தளவுக்கு மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது?  

அறிவை விரிவடையச் செய்யும் ஆற்றல் இன்றைய சாதனங்களுக்கு இருப்பதாக கருதும் மனநிலை இன்னும் பலருக்கு இருப்பதென்னவோ உண்மையாக இருக்கலாம்.  ஆனால் பொழுதுபோக்கவும் பேசவும் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் செல்போனைப் பயன்படுத்தும் பலரால் அவற்றைப் புத்தகமாக பார்க்க முடியவில்லை.

அதைவிட, ஆண்ட்ராய்ட் மொபைல் போன் அதீத புழக்கத்தில் உள்ள இந்தக் காலகட்டத்தில், எல்லோருமே எழுத்தாளர்கள் ஆகிவிட்டார்களோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. அதை வரவேற்பதா அல்லது நிராகரிப்பதா என்ற குழப்பம் இன்றளவும் நீடித்துக்கொண்டே இருக்கிறது.

எங்கு பார்த்தாலும், இன்ஸ்டண்ட் கவிஞர்களும், இன்ஸ்டண்ட் தத்துவ ஞானிகளும், இலவச அறிவுரைகள்தரும் மருத்துவர்களும் போகிற போக்கில் எதையெதையோ கிறுக்கிக் கொண்டிருக்கிறார்கள். கண்ணை மூடிக்கொண்டு பலர் அதை ஃபார்வட் செய்துகொண்டும் இருக்கிறார்கள். 

எழுத்துப் பிழையைப் பற்றியோ அல்லது இலக்கணப் பிழையைப் பற்றியோ யாரும் பெரிதளவில் கண்டுகொள்வதில்லை என்பதால் தைரியமாக எழுதுகிறார்கள். நான்குவரியை சமூக வலைதளத்தில் எழுதிய மறுநிமிடத்திலிருந்து எத்தனைபேர் அதை வாசித்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.

அதை வாசிக்கும் ஒரு சிலரைத் தவிர எவரும் ஒற்றை வார்த்தைகளுக்குமேல் விமர்சனம் செய்வதில்லை. பாராட்டைக்கூட ‘ஒற்றைக் கைத்தட்டும்’ அடையாளக் குறியீட்டைப் பதிலாக அனுப்புகிறார்கள். ஒரு விசயத்தை அக்குவேறு ஆணிவேறாக விமர்சனமோ பாராட்டவோ செய்வதில்லை என்பது என் போன்றோர்க்கு வருத்தம்தான்.. 

பரந்துபட்ட வாசிப்பு, அவற்றிற்குத் தரமான விமர்சனம் என்பதெல்லாம் அரிதிலும் அரிதாகிவிட்டது என்றே தோன்றுகிறது.  பல கிராமத்து நூலகங்கள் மூடப்பட்டுவிட்டன.  பல புத்தகங்கள் மனிதர்களின் கைவிரல்கள் படாமல் பழுப்பேறிப் போய்விட்டன.

அரிதான புத்தகங்களுக்கான மதிப்பே தெரியாமல் ஒரு தலைமுறை வளர்ந்துகொண்டிருப்பதைக் காணும்போது மனதிற்கு வேதனையாக இருக்கிறது. 

இப்படிச் சொன்னால் பலர் எதிர்வினையாக, இன்றைய தலைமுறையினர், நூலகங்களிலும் பொது இடங்களிலும் புத்தகமும் கையுமாக இருப்பதில்லையே தவிர, செல்ஃபோனில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என்று தங்களது தளத்தை விரிவுபடுத்தி இருக்கிறார்கள். இ-புக்கில் மோகம் காட்டுகிறார்கள்.  போட்டித்தேர்வுக்கு நிறையவே மெனக்கெடுகிறார்கள் என்கிறார்கள்.

பழைமையை விட்டு வெளிவரமுடியாத படைப்பாளிகள், தொழில்நுட்பக்கருவிகளைக் கையாளத்தெரியாதவர்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.  ஆனால், அச்சிடப்பட்ட புத்தகத்திற்கான மகத்துவம் என்பது தனிதானே! 

வாசிப்பு ஒருபோதும் மரணிக்காது. மொழி உள்ளவரை வாசிப்பு என்பது உயிர்ப்பித்துக் கொண்டேதான் இருக்கும்.  வாசிப்பு என்பது ஒரு புத்தகவடிவில்தான் இருக்கவேண்டும் என்பதில்லை.  ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப வாசிப்பும் பரிணமித்துக்கொண்டே இருக்கிறது என்கிறார்கள்.

இதுவெல்லாம் ஒருபுறம் இருக்க, ஒவ்வொரு புத்தகக்கண்காட்சியிலும் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனையாகின்றன என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. மற்றொருபுறம் புத்தகவாசிப்பு என்பதே அருகிவிட்டது என்கிறார்கள். இதில் எது சரி, எது தவறு என்று இனம்காண முடியவில்லை. 

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், மன அழுத்தத்தைக் குறைக்கவும் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் மருத்துவமனையை நாடிச்செல்லவேண்டியதில்லை.  ஒரு புத்தகத்தைத் தேடிச்சென்றாலே போதும்.  புத்தகவாசிப்பிற்கு இணையான இனிமையான பொழுதுபோக்கு அனுபவத்தை உலகில் வேறு எந்த பொழுதுபோக்கு அம்சங்களும் இவ்வளவு நன்மை தருவதில்லை.

புத்தகங்கள் வாசிப்பவர்களுக்கு நன்கு எழுதவும் வருகிறது.  எந்தச் சூழலுக்கும் ஏற்றபடி பேசுவதற்கான கற்பனைத் திறனும் அவர்களுக்கே கைகூடுகிறது. வாசிப்பு திறக்கும் கதவு பிரம்மாண்டத்தை நேரடியாகக் காட்டாவிட்டாலும், எல்லையற்ற கற்பனைகளுக்கும், கவிதைகளுக்கும், கட்டுரைகளுக்கும், கதைகளுக்கும் இடைவிடாமல் கைப்பிடித்து இட்டுச்செல்லும் என்பதைமட்டும் உறுதியாகச் சொல்லமுடியும். 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.