வாசிரெட்டி சீதாதேவி - சாம்பைய்யா நாவல் | Vasireddy Seethadevi - Sambaiah Novel

சாம்பைய்யா தெலுங்கில் சாகித்திய அகடாமி விருது பெற்ற நூல். தெலுங்கில் நூலை எழுதிய எழுத்தாளர் டாக்டர் வாசி ரெட்டி சீதாதேவி அவர்கள் பல்வேறு மாநில மக்களின் வாழ்க்கை போராட்டங்களை தன் எழுத்தில் பிரதிபலித்தார். அப்படி ஒரு விவசாயின் முழு வாழ்க்கை வரலாறை இந்த நூலில் எழுதியுள்ளார்.

இந்த நூலை மிக அழகாக மொழிபெயர்ப்பு செய்தவர் ராஜேஸ்வரி கோதண்டம் அவர்கள் ( குறிஞ்சி செல்வர் கொ.மா.கோதண்டம் அவர்களின் துணைவியார்) .
ஒரு நிலக்கிலாரிடம் கூலி வேலைக்காரனாய் இருந்தவரின் மகன் சாம்பைய்யா. தன்னுடைய கடின உழைப்பால் கொஞ்சம் கொஞ்சம் முன்னேறி, நிறைய நில புலங்களை அந்த ஊரில் வாங்குகிறார். அவர் கிராமத்து மண்ணில் பிறந்து மண்ணோடு மண்ணாய் வளர்ந்தவர். இயற்கை கற்றுத் தந்த பாடத்தில் பூமி எழுதும் பலகை வயலும் வயல் சார்ந்த இடமும் பாடசாலை. பூமி கற்றுத் தந்ததை மனதில் உள்வாங்கி பூமியிலேயே செயல் ஆக்கிக் காட்டினார்.

தன்னுடைய வியர்வையால் பூமித்தாயை குளிர வைத்ததால் , அவருடைய நிலங்களில் ஏராளமான விளைச்சல். திருமணம் நடக்கிறது. பிரசவத்தின் போது ஜன்னி மனைவி இறந்து விட, கைக்குழந்தையான தன் மகனை , ஒரு வயதான பெண்மணியின் உதவியுடன் சிரமப்பட்டு வளர்க்கிறார்.

வயதிற்குரிய சலனங்கள் சில நேரம் எட்டிப் பார்த்தாலும், தன்னைக் கூலிக்காரன் என்று அவமானப்படுத்திய நிலக்கிலார் முன்பு நல்ல அந்தஸ்துடன் தன் மகனை வளர்க்க வேண்டும் என்று தன் மனதை அடக்கி கொள்கிறார்.

மகன் வெங்கடபதிக்கு படிப்பில் நாட்டம் இல்லை; ஒன்பது வயதில் தந்தையோடு சேர்ந்து நிலத்தில் ஏர் பிடித்து உழுகிறான்.. இருவரும் அரும்பாடு பட்டு உழைக்க உழைக்க செல்வம் அவர்களுக்கு சேர்ந்து நிலக்கிழார் பலராமையாவை விட வசதியான குடும்பமாய் வளர்ந்து நிற்கின்றனர்.

அவர் குடும்பத்தில் பெண்ணெடுத்து தான் பட்ட அவமானங்களை துடைக்க நினைக்கிறார். அந்த குடும்பத்து பெண்ணை மருமகளாக்கிக் கொண்டதன் விளைவு என்ன ஆனது என்பது தான் கதை.

கனகையா போன்ற ஏமாற்றி பிழைக்கும் நம்பிக்கை துரோகிகள், ராமனாதபாபுவை போன்ற காமுகர்கள், நவநாகரிகத்தின் பிடியில் சிக்கிக் கொண்ட மருமகள் வரூதினி , மனைவி என்ன சொன்னாலும் நம்பும் வெங்கடபதியைப் போன்ற அப்பாவி மகன் போன்றோரால் அவரின் வாழ்வில் வீழ்ச்சி ஏற்படுகிறது. தாத்தாவின் வீழ்ச்சியை துடைக்க பேரன் ரவி வீறு கொண்டு விரைவில் வருவான் என்பதாக நாவல் முடிவடையும்.

மண்ணில் பிறந்து மண்ணோடு மண்ணாய் வளர்ந்து மண்ணிடம் கற்று மண்ணோடு வாழ்ந்து மண் உயர்த்த மகிழ்ச்சியுடன் தலைநிமிர்ந்து நின்றவன் கடைசியில் மண்ணோடு மண்ணாய் கலந்து விடும் கதை தான் சாம்பைய்யா.

நூலின் தகவல்கள்:

பதிப்பகம் :
பாரதி புத்தகாலயம்


பக்கங்கள் :
600.00


விலை :
₹.500.00 
குறிப்பு: இப்புத்தகத்தை  தற்போது பாரதி புத்தகாலயத்தின் thamizhbooks.com இணையதளத்தில் 25% சலுகை வாங்கிக்கொள்ளலாம்.
நூலறிமுகம் ஏழுதியவர்: 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *